அடங்காத அதிகாரா 55
Copyright ©️ 2019 - 2025 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அதிகாரம் 55
“நான் தான் வேண்டாம்னு சொல்றேன்ல மாமா.” சற்று அழுத்தமாக வந்து விழுந்தன வசீகரனின் வார்த்தைகள்.
“என்ன வசி இப்படி பண்ற? நான் இந்த மாதிரி ஒன்னை உன்கிட்ட எதிர்பார்க்கல.” என்று வருத்தமான குரலில் கூறினான் நீரூபன்.
“நானும் தான் மாமா. உங்ககிட்ட இருந்து இதை எதிர்பார்க்கல. ஒரு வார்த்தை கூட சொல்லாம, கேட்காம ஏன் இப்படி செஞ்சீங்க? நீங்க என்ன சொன்னாலும் நான் கேட்பேன் என்ற எண்ணமா?” என்றவனிடம் தென்பட்டது கோபமா அல்லது வருத்தமா?
“அப்படி இல்ல வசி. நீயே யோசிச்சு பாரு. நான் செஞ்சதுல உள்ள நியாயம் புரியும். நானும் இதை சும்மா செய்யல வசி.” என்று அவன் மேலும் ஏதோ கூற முற்பட்டான்.
ஆனால் அவனை தடுத்த வசீகரன், “நீங்க என்ன காரணம் சொன்னாலும் முன்னாடி நீங்க செய்த எதுவும் எனக்கு தப்பா தெரியல. ஆனா இது… கஷ்டமா இருக்கு மாமா. என்னால முடியாதுன்னு நீங்க முடிவுக்கு வந்ததால தானே இப்படி செய்திருக்கீங்க?” என்று வருந்தினான்.

“இல்ல வசி” என்று அவனை சமாதானம் செய்வதில் சோர்ந்து போய் அமர்ந்தான் நீரூபன்.
இருவருக்குள்ளும் பேச்சு நின்று போய் மௌனம் ஆட்சி புரிந்தது. ஐந்து நிமிடத்திற்குப் பின் வசீகரன் நீரூபனின் வாடிய முகம் காணப் பொறுக்காதவனாக எழுந்து வந்தான்.
“ஏன் மாமா இப்படி செஞ்சீங்க? என்னால முடியாதுன்னு நினைச்சுட்டிங்களா?” என்று வருத்தமாக வினவினான்.
“அப்படி இல்ல. உங்க வீட்டுக்கு போனப்ப, மாமா எப்படி தயங்கிக் கேட்டாருன்னு பார்த்த தானே! அப்ப நான் அதுக்கு ஏதாவது செய்ய நினைச்சேன். நீயே எதுவும் பிளான் வச்சு இருப்பியோன்னு விசாரிச்சேன். எதுவும் இல்லன்னு தெரிஞ்ச பின்னாடி தான்… இதை..” என்று இழுத்தான்.
ஒரு நீண்ட பெருமூச்சை வெளியிட்ட வசீகரன், “வீடு நான் மட்டும் வாழப்போற இடம் இல்லையே மாமா? உங்க தங்கை வாழ வரப்போற இடம். அவளுக்கு பிடிச்சதை அவ கிட்ட கேட்டு செய்ய நினைச்சு தான் இதை தள்ளி வச்சிருந்தேன்.” என்று கூறிய வசீகரன் குரலில் இருந்தது குற்றவுணர்வு மட்டுமே!
ஆம் அன்று வாசுதேவன் மகன் திருமண விஷயம் பேச எங்கே வரவேண்டும்? திருமூர்த்தியின் கட்சி அலுவலகத்திலா? அல்லது அவரின் வீட்டுக்கா? என்று தயங்கி கேட்டதும் நீரூபன் அதனை பார்த்துக் கொள்கிறேன் என்று வாய் வார்த்தைக்கு கூறவில்லை.
இந்த ஒரு வாரத்தில் வசீகரன் திருமணத்திற்கு பின் தங்க ஏதேனும் வீடு வாங்கும் திட்டம் வைத்திருக்கிறானா? அல்லது தந்தை கேட்டதை எண்ணி இப்பொழுதே வாங்க முடிவு செய்திருக்கிறானா என்று அறிய அமைதியாக அதனைப் பற்றி விசாரித்தான் நீரூபன்.
வசீகரன் தன் வேலை, நேத்ராவுடன் நேரம் செலவு செய்வது என்றே இருக்க, வாசுதேவன் இரண்டு நாட்களில் சென்னை வந்து திருமூர்த்தியை சந்திக்க நல்ல நாள் பார்த்து கூறிவிட்டதால் இனி தாமதிக்க கூடாது என்று கருதி, தன் தங்கைக்கு பரிசாக அவன் வாங்கி வைத்திருந்த அப்பார்ட்மெண்ட் சாவியை எடுத்துக் கொண்டு வசீகரனை அழைத்து வந்திருந்தான்.
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
அதோடு அந்த வீட்டை வசீகரன் பெயருக்கு மாற்றி எழுதவும் ஏற்பாடு செய்துவிட்டான்.
அந்த சாவியை நீட்டியதும் தான் முன்னே நடந்த உரையாடல்கள் அரங்கேறின.
தனக்கு தொழில் தொடங்கிக் கொடுத்தவர் இப்பொழுது வீடும் வாங்கிக் கொடுக்க வசீகரனின் தன்மானம் லேசாக சீண்டப்பட்ட உணர்வு எழுந்தது.
ஆனால் அவனது தந்தையின் வருகையை குறிப்பிட்டு அவன் எந்த ஏற்பாடும் செய்யாததால் தான்நீரூபன் இந்த முடிவை எடுத்தான் என்று தெரிந்ததும் கோபம், வருத்தம் எல்லாம் போய் அவமானமும் குற்றவுணர்வும் வந்து சேர்ந்தது.
“வசி ஏன் இப்படி பேசுற? மாமா வரும்போது உன்னோட வீட்டுக்கு வரணும். இந்த வீடு வாங்கிய பணம் ஒன்னும் என்னோட சம்பாத்தியம் இல்ல. நீ உள்ளாட்சி தேர்தலுக்கு செய்த வேலைக்கான உன்னோட சம்பளம். கம்பெனி கணக்கு தனி. ஆனா உன்னோட உழைப்புக்கு இது ஊதியம். உன் பேர்ல அப்ப வாங்க முடியல. அதான் நேத்ரா பேர்ல வாங்கி வச்சேன். உங்க ரெண்டு பேர்ல யார் பேர்ல இருந்தா என்னனு நினைச்சு செய்தேன். ஆனா நாளைக்கு உங்க அப்பா வரும்போது சம்பந்தம் பேச கூட எங்க வீட்டுக்கு தான் வரணுமான்னு சங்கடப் படக்கூடாது. அதுக்காக தான் வசி…” என்று கூறி விட்டு,
“ஒருவேளை இந்த வீடு பிடிக்கலைன்னு வச்சுக்கோ வேற வீடு வாங்கிட்டு ரெண்டு பேரும் போயிடுங்க. எனக்கு சென்டிமென்ட் எல்லாம் கிடையாது. இல்ல நான் காசு கொடுத்தேன்னு இப்பவும் உனக்கு உறுத்தலா இருந்ததா பணத்தை கொடு நான் வாங்கிக்கிறேன்.” என்று கூறினான்.
“சாரி மாமா” என்று அணைத்துக் கொண்ட வசீகரன்,
“தனியா தானே இருக்கேன்னு வீடு வாங்க நினைக்கல மாமா. ஃப்ரெண்ட் கூடவே தங்கிட்டேன். நேத்ரா கடலை ஒட்டி வீடு வாங்கணும்ன்னு சொல்லி இருந்தா. ஈ.சி.ஆர்ல ஒரு இடம் வாங்கி வச்சேன். அவளுக்கு பிடிச்சது போல அப்பறம் கட்டுக்கலாம்னு இருந்தேன். அப்பா வர்றது, பேசப் போறது பத்தி நான் யோசிக்கல மாமா. மிடில் கிளாஸ் பையன் தானே மாமா, மாமனார் வரும்போது இப்படி பந்தாவா வீடு வாங்கி வைக்கணும் என்ற எண்ணமே வரல.” என்று சோஃபாவில் தொப்பென்று அமர்ந்தான்.
“என்ன வசி என்னென்னவோ பேசுற? நான் இதை செய்தது என் அப்பாவுக்காக இல்ல. உன் அப்பாவுக்காக. இந்த வீடு உன்னோடதுன்னு தெரியும்போது அவரும் என் அப்பா கிட்ட கெத்தா பேசுவாரு. எனக்கு நீயும் நேத்ராவும் எப்பவும் சந்தோஷமா இருக்கணும் வசி. உன் பேர்ல நேம் போர்ட் வைக்க சொல்லி இருக்கேன். இன்னிக்கே இந்த வீட்டுக்கு வந்துடு. வீட்டோட டாகுமெண்ட்ஸ் நாளைக்கு காலைல ரெஜிஸ்டர் ஆபிஸ்ல சைன் பண்ணி வாங்கிடலாம். என்ன?” என்று தட்டிக் கொடுக்க, வசீகரன் அவனை ஆரத் தழுவிக் கொண்டான்.
அடுத்தடுத்த வேலைகள் துரிதமாக நடந்தேறியது.
வசீகரனின் பெற்றோர் வாசுதேவனும் அருந்ததியும் வசீகரன் அனுப்பி வைத்த காரில் சென்னை வந்து சேர்ந்தனர்.
“சென்னை வந்து எவ்வளவு வருஷம் ஆச்சு? எவ்வளவு மாறிப்போச்சு பாருங்க” என்று கணவரிடம் பேசிக்கொண்டு வந்த அருந்ததி கார் நின்ற இடத்தைக் கண்டு திகைத்தார்.
“டிரைவர் தம்பி, எங்க கூட்டிட்டு வந்திருக்கீங்க?” என்று அவர் பதறி விசாரிக்க,
“சார் சொன்ன இடத்துக்கு தான் மா” என்று பவ்யமாக பதில் கூறினார்.
“என்னங்க இது? வானொசரத்துக்கு இருக்கு இந்த கட்டிடம் எல்லாம். பார்த்தா ஆபிஸ் மாதிரியும் தெரியல!” என்று பால்கனிகளில் காய்ந்து கொண்டிருந்த துணிகளைக் கண்டு கூறினார்.
“பொறு பார்ப்போம்” என்று அவரை வாசுதேவன் சமாதானம் செய்ய, அந்த மிகப்பெரிய கேட்டட் கம்யூனிட்டியின் பார்க்கிங்கில் அவர்கள் கார் நின்றது.
அவர்களது பையை எடுத்துக் கொண்ட ஓட்டுநர், “வாங்க சார் பதினாலாவது மாடிக்கு போகணும்.” என்று லிஃப்ட் நோக்கி அழைத்துச் செல்ல அருந்ததிக்கு தலை சுற்றாத குறை தான்.
வீட்டின் வாயிலில் இருந்த ‘வசீகரன் வாசுதேவன்’ என்ற பெயர்ப் பலகையைக் கண்டு அவருக்கு கண்களில் நீரே வந்துவிட்டது.
மகன் ஏதோ தொழில் தொடங்கி கடுமையாக உழைக்கிறான் என்று அறிவார். ஆனால் என்ன தொழில், எவ்வளவு வருமானம் என்று கேட்டுக்கொள்ளவில்லை. எப்படியும் மகன் தவறு செய்ய மாட்டான் என்ற தாயின் நம்பிக்கை.
வாசுதேவன் விழிகள் ஆச்சரியத்தில் விரிய, உள்ளே சென்றால் வீட்டின் பிரம்மாண்டம் அவர்களை மிரட்டியது.
பென்ட் ஹவுஸ் என்று சொல்லப்படும் அடுக்குமாடிக் குடியிருப்பில் இரண்டு தளங்கள் இணைத்து வரும் டுப்லெக்ஸ் வீடு. அழகிய உள் அலங்காரம்.
அதில் நடுநாயகமாக வசீகரனின் அழகிய ஆளுயர புகைப்படம். அதன் ஒரு பக்கத்தில் தாய் தந்தையுடன் இருக்கும் படங்கள் மற்றொரு பக்கத்தில் அவனும் நேத்ராவும் இருக்கும் புகைப்படங்கள்.
“பொண்ணு லட்சணமா இருக்குல்லங்க” என்று கணவரிடம் கேட்ட அருந்ததி மகனைக் காணாது தேடினார்.
“சார் இப்ப ஒரு மணி நேரத்தில் வந்துடுவார் மா. எதுவும் வேணும்ன்னா இந்த ஸ்விட்ச் அழுத்துங்க. நான் வெளில உள்ள வெயிட்டிங் ஹால்ல தான் இருப்பேன்” என்று சொல்லி ஓட்டுநர் அங்கிருந்து நகர்ந்தார்.
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
“நல்லா சம்பாதிக்கிறான் போலங்க. கஷ்டம் இல்லாம நிம்மதியா இருந்தா எனக்கு அதுவே போதும்.” என்று அன்னையாய் அவர் மனம் மகனுக்காக வேண்டிக் கொண்டது.
“அந்த தம்பி நீரூபன் போன் பண்ணி இருந்தார் மா. சாயங்காலம் அவங்க அப்பாவை இங்க கூட்டிட்டு வர்றேன்னு சொன்னார். அதுக்கு முன்னாடி அந்த பொண்ணு இங்க வந்து நம்மை பார்க்க கேட்டாளாம். நான் தான் பெரியவங்க பேசி முடிக்கிறோம் அப்பறம் பார்க்கலாம்னு சொல்லிட்டேன்.” என்று யோசனையோடு பேசிக்கொண்டே பால்கனிக்கு சென்று நின்றார்.
அவர் பின்னால் வந்த அருந்ததி உயரத்தைக் கண்டு பயந்தவராக,
“இந்த பக்கம் வாங்க” என்று கணவரை அழைத்து,
“ஏன் இப்படி பேசுறீங்க? நானும் அந்த பொண்ணு கூட பேச பழக ஆசையா இருந்தேன் தெரியுமா?” என்று வருத்தம் காட்டினார்.
“இங்க பாரு அருந்ததி, அவரு பணக்கார இடம்,நம்ம பையன் இப்ப தான் ஏதோ தொழில், பணம் எல்லாம் கண்ணுல பார்த்திருக்கான். அவர் அவரோட மகன் கிட்ட கல்யாணத்துக்கு சரின்னு சொல்றதும் நம்மை பார்த்த பின்னாடி சரின்னு சொல்றதும் வேற. எதுக்கு தேவையில்லாம மனசை வலிக்க வச்சுக்கணும் நீயே சொல்லு”$என்று கேட்டு சோஃபாவில் சாய்ந்து அமர,
“அது எப்படி எங்க அப்பா மாட்டேன்னு சொல்லுவார் மாமா?” என்று கையில் பெரிய பையுடன் வந்தாள் நேத்ரா.
அவளை எதிர்பார்க்காத இருவரும் திகைக்க,”வழில நீங்க சாப்பிடலன்னு டிரைவர் அண்ணா சொன்னார். அதான் சாப்பாடு வாங்கிட்டு வந்தேன்
” என்று விளக்கம் கொடுத்துவிட்டு, உணவை டைனிங் டேபிளில் வைத்து விட்டு பெரியவர்கள் பாதம் தொட்டு வணங்கினாள்.
“நல்லா இரும்மா.” என்று இருவரும் பதறி வாழ்த்த,
“மாமா அத்தை என்னை ஒரு அரசியல்வாதி மகளா, முன்னாள் முதல்வர் மகளா பார்க்காம, உங்க வீட்டு மருமகளா மட்டும் பாருங்க. ஏன்னா எனக்கு அதான் பிடிக்கும். என் அண்ணனுக்கு தங்கச்சின்னு வெளில சொல்லுவேன். ஆனா அப்பாவுக்கு மகள்ன்னு எங்கையும் சொல்ல மாட்டேன். அவர் மேல மரியாதை இல்லாம இல்ல. ஆனா அவர் நிழல்ல வளர நானும் அண்ணனும் விரும்பல. நிழல்ல உள்ள செடி வளராதுன்னு அண்ணா சொல்லுவார்.” என்று பேசினாள் நேத்ரா.
இருவருக்கும் அவரது பட்டாசுப் பேச்சு பிடிக்கவே சிறிது நேரத்தில் அவர்கள் மூவரும் சகஜமாக பேசி உணவை ஒன்றாக அமர்ந்து உண்டு முடித்தனர்.
ஏதோ அழைப்பு வர நேத்ரா பால்கனி பக்கம் சென்றதும், “ஏன் அருந்ததி, நமக்கு எப்பவும் நாமளே தான் சோறு போட்டு சாப்பிடுவோம். இன்னிக்கு இந்த பொண்ணு பரிமாறியதும் மனசுக்கு ஏதோ நிறைவா இருக்கு. இதுவும் பெரிய கம்பியூட்டர் கம்பெனி வச்சு நடத்துதாம். கோடி கோடியா சம்பாதிக்குதாம். அந்த பந்தா துளி கூட இல்ல பாரேன். அண்ணா அண்ணான்னு அந்த தம்பியை பத்தியே பேசுது. உன் மகனை பத்தி பேசினாலே முகம் சிவந்து போகுது. அந்த அரசியல்வாதி என்ன பேசினாலும் எப்படியாவது என் மகனுக்கு இந்த பொண்ணோட கல்யாணத்தை முடிக்கணும். ஏன்னா எனக்கும் இப்படி ஒரு பொண்ணு வேணும்ல!” என்று சிரித்தார்.
மாலை துவங்கும் முன் வசீகரனும் வந்து சேர நேத்ரா அவனிடம் சொல்லிக்கொண்டு புறப்பட்டுச் சென்றாள். நான்கு மணிக்கு திருமூர்த்தி வருவார் என்று ஏற்கனவே நீ ரூபன் செய்தி அனுப்பி விட்டான்.
பயணக் களைப்பில் அருந்ததி சற்று நேரம் கண்ணயர்ந்து விட பால்கனியில் நின்று உயரத்திலிருந்து எறும்புகள் போல ஊர்ந்து செல்லும் மக்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த வாசுதேவனிடம் வந்து நின்றான் அவரது புதல்வன் வசீகரன்.
அவன் ஏதோ பேச வந்துவிட்டு தயங்கி அமைதியாக நிற்க அவனது தயக்கம் புரிந்தவராக “என்னப்பா என்கிட்ட எதுவும் சொல்லனுமா?” என்று கேட்டது தான் தாமதம் வசீகரன் மடைதிறந்த வெள்ளமாக தனக்கும் நிரூபனுக்கும் நடந்த பேச்சை குறிப்பிட்டு இந்த வீட்டை பற்றியும் அவருக்காக நீரூபன் யோசித்து செய்ததையும் பெருமையாக கூறிவிட்டு தான் அப்படி நடந்து கொள்ளாததை எண்ணி வருந்துவதாக மன்னிப்பும் வேண்டினான்.
“நான் இந்த வீட்டுக்குள்ள நுழையும் போதே நெனச்சேன் இது அந்த தம்பி வேலையா தான் இருக்கும்னு. ஏன்னா ‘நீங்க வாங்க மாமா நான் பாத்துக்குறேன்’னு சொன்னாரு. இதுதான் ஒரு பண்பாளனோட செயல்பாடு. நீ இப்பதானே வாழ்க்கையில கொஞ்சம் கொஞ்சமா முன்னேறி வர! இன்னும் நாலு அஞ்சு வருஷத்துல உனக்கே எத எப்போ எப்படி செய்யணும் அப்படின்னு நல்லாவே தெரிஞ்சிடும். தெரியலனாலும் உன்னோட மச்சான பார்த்து கத்துக்குவ.” என்று மகனது தோளில் தட்டிக் கொடுத்தார்.
4:00 மணிக்கு அனைவரும் திருமூர்த்தியின் வரவுக்காக தயாராக காத்திருக்க மகனது ஜிபி திருமூர்த்தியும் நாகரத்தினமும் வந்து இறங்கி இவர்களை சந்திக்க வந்தனர்
நீரூபன் பெரியவர்கள் பேசி முடிவெடுக்கட்டும் என்று கூறிவிட்டு வசீகரனை தோளில் கை போட்டு அழைத்துக்கொண்டு மாடியில் இருக்கும் அறைக்கு சென்று விட்டான் வீட்டைச் சுற்றி பார்வையை ஓட்டிய திருமூர்த்தி,
“உள்ளாட்சி தேர்தலிலேயே உங்க மகனோட புத்திசாலித்தனமும் திறமையும் எனக்கு நல்லாவே புரிஞ்சிடுச்சு என் பொண்ணு விரும்புற விஷயம் தெரிஞ்சதும் கொஞ்சம் கோபம் வந்துச்சு ஆனா உங்க மகன் தான் பையன் என்று தெரிந்ததும் பொறுமையா இருந்தேன் என் மகன் உங்க மகனுக்காக நிறையவே சப்போர்ட் பண்ணி பேசினான் நேத்ரா கூட பிறக்கலன்னாலும் நீரூபனுக்கு நேத்ரான்னா உயிர்.” என்று அவர் கூறியதும் அதை கேட்ட வாசுதேவன் அருந்ததியும் அதிர்ந்தனர்.