அடங்காத அதிகாரா 54
Copyright ©️ 2019 - 2025 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அதிகாரம் 54
தன் மார்பில் சூடாகப்பட்ட கண்ணீரின் வலியை நீரூபன் உணர்ந்துதான் இருந்தான். ஆனால் தான் என்ன சமாதானம் சொன்னாலும் அது சரியாக இருக்காது என்ற ஒரே காரணத்திற்காக அதைப்பற்றி பேசாமல் ஆறுதலாக அவளை அணைத்து நின்றிருந்தான்.
அவனை நிமிர்ந்து பார்த்த பூமிகாவின் விழிகளில் கேள்விகள் நிறைந்திருந்தது. அது அவனுக்குப் புரிந்தாலும் தன்னுடைய பதில் அவளை மேலும் காயப்படுத்தும் என்பதால் அமைதியையே கடைப்பிடித்தான்.
அவனாக வாய் திறந்து எதையும் சொல்லப்போவதில்லை என்பதை புரிந்து கொண்ட பூமிகா தன் கண்ணீரை துடைத்துக்கொண்டு,
“அன்னைக்கு நேத்ரா அண்ணி கல்யாண விஷயமா பெரிய மாமா உங்கள பாத்து பேசினதா சொன்னாங்க. அதுக்கு அப்புறம் நீங்க என்ன பார்த்த விதமும் வித்தியாசமா இருந்தது, என்கிட்ட நீங்க சரியா பேசவும் இல்லை. அன்னைக்கு பெரிய மாமா உங்க கிட்ட என்ன சொன்னாரு? உண்மைய சொல்லுங்க மாமா.” என்று அவன் தாடை தொட்டு வினவினாள்.
அவளுடைய கையை தன் வலது கைக்குள் பொத்தி வைத்துக் கொண்டவன் பதில் பேசாமல் அங்கிருந்த அந்த சிமெண்ட் திட்டில் அமர்ந்து அவளை தன் அருகில் அமர்த்திக் கொண்டான்.
அவன் ஏதோ சொல்ல நினைப்பதும் அதை விழுங்குவதுமாக இருப்பதை கவனித்த பூமிகாவுக்கு மனதில் ரணமாய் வலி எழுந்தது.
“உங்களால சொல்ல முடியாத விஷயமா இருந்தா பரவாயில்ல மாமா.” என்று அவன் முதுகில் தடவியபடி தோளில் தன் தலையை சாய்த்து கொண்டாள்.
தன்னை இத்தனை தூரம் புரிந்து நடந்து கொள்ளும் அச்சிறு பெண்ணை தன் தந்தையின் வார்த்தைக்காக அவருக்கு தந்த வாக்குக்காக தவறவிட அவன் தயாராக இல்லை.
“மாமா மேல நம்பிக்கை இருக்காடா பாப்பா?” என்று அவள் கண்களை ஊடுருவி அவன் கேள்வி எழுப்ப,
“என்னையே நான் நம்பாமல் போவேனா?” என்று இதழ் பிரியாமல் சிரித்தாள். அவளுடைய பதில் அவனுக்கு எத்தனை ஆறுதலை தந்தது என்பதை அவனால் விவரிக்க முடியாது.
இரண்டு நாட்களாக மனதில் இருந்த சஞ்சனங்கள் யாவும் துடைத்து எடுத்ததைப் போன்ற நிம்மதி பிறந்தது.
“நம்ம கொஞ்சம் பொறுமையா இருந்து தான் சேர முடியும். நான் சொல்றது உனக்கு புரியுது தானே?” என்று அவன் கேட்க அவளோ,
“உங்களை பார்த்துக்கிட்டே கூட நான் வாழ்ந்திடுவேன் மாமா. நீங்க கிடைப்பீங்கன்னு எனக்கு முன்னாடி எல்லாம் தோணுனது இல்ல. என் மாமாவை இப்படி பார்த்துட்டே இருந்துடலாம் அப்படின்னு தான் நினைச்சு இருக்கேன். காத்திருந்தா நீங்க கிடைப்பீங்கன்னா எத்தனை ஜென்மம் வேணாலும் காத்திருப்பேன்.” என்று உணர்ச்சி மிகுதியில் கண்ணீர் வர பதில் அளித்தாள் பூமிகா.
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
“சினிமாக்காரின்னு நிரூபிக்கிற பாரு.” என்று அவளின் மனநிலையை மாற்ற சற்றே கேலியில் இறங்கினான் நீரூபன்.
“நீங்க சொன்னதும் தான் நினைவுக்கு வருது மாமா. படத்தோட பிரீ புரொடெக்ஷன் வேலை ஸ்டார்ட் ஆயிடுச்சு. ஆனந்த் என்னதான் புரொடெக்ஷன் மேனேஜரா போட்டு வச்சிருக்கான். எனக்கு இத பத்தி தெரியாதுன்னு சொன்னதுக்கு ஒருத்தர அசிஸ்டன்ட்டா கொடுத்து ‘உனக்கு தெரியாதத அவர் சொல்லித் தருவார்’ன்னு சொல்லிட்டான். நான் இதைப் பற்றி உங்க கிட்ட பேசணும்னு தான் அன்னைக்கு நேத்ரா அண்ணியோட ஆபீஸ்க்கு வந்திருந்தேன்.” என்று அவசரமாக தன் நண்பன் தன்னை இக்கட்டில் மாட்டி விட்டு விட்டான் என்று குற்றப்பத்திரிகை வாசித்தாள் பூமிகா.
“அவன் ஆபீஸ் வேலை, டிரஸ்ட் வேலைனு பிசியா இருக்கான்மா. அதான் இதை உன் தலையில கட்டிட்டான் போல இருக்கு. முடிஞ்ச வரைக்கும் செய். முடியலன்னா நீயே ஒரு நல்ல புரொடெக்ஷன் மேனேஜரா பார்த்து அப்பாயின் பண்ணிட்டு சூப்பர்வைஸ் பண்ணிக்கோ.” என்று இலகுவாக பதில் அளித்தான்.
மீண்டும் அன்று பெரிய மாமா என்ன சொன்னார் என்று கேட்க பூமிகாவின் நாவு துடித்தது ஆனால் கண்டிப்பாக அவனிடம் இருந்து பதில் வராது என்று தெரிந்ததால் அதனை கைவிட்டாள்.
தன்னிடம் இந்த அளவுக்கு அவன் சமாதானம் பேச வேண்டும் என்றால் கண்டிப்பாக தன் பெரிய மாமா எளிதான எதையும் கூறி இருக்க வாய்ப்பில்லை ஏற்கனவே அதை மனதில் வைத்து மருகிக் கொண்டிருப்பவனிடம் என்ன என்ன என்று கேட்டு மேலும் அவனை வருத்த விரும்பாதவளாக அவன் சொல் படி நடக்க முடிவு செய்தாள்.
இருவரும் சற்று நேரம் சம்பந்தமில்லாத எத்தனையோ விஷயங்களைப் பற்றி பேசி சிரித்து மெல்ல மெல்ல சகஜ நிலைக்கு திரும்பினர்.
“ஆமா நீ எங்கடா இங்க வந்த?” என்று பூமிகாவின் முகத்தில் உரசி கொண்டிருந்த தலை முடியை அவள் காது மடலுக்கு பின்னே தள்ளியபடி வினவினான்.
“உங்கள பாக்கணும் போல இருந்துச்சு மாமா. சில நேரம் நீங்க பிஸியா இருப்பீங்க நான் வந்து உங்களை டிஸ்டர்ப் பண்ண கூடாதுன்னு எங்கையாவது தூரத்தில் இருந்து உங்கள பாத்துட்டு நீங்க வந்துருவேன். இங்க வந்து மரம், செடி, இங்க இருக்கிற பெரியவங்க எல்லாருடையும் பேசும்போது ரிலாக்ஸ்டா இருக்கும். உங்களையும் டிஸ்டர்ப் பண்ணல, எனக்கும் மனசுக்கு ஆறுதலா இருந்துச்சு. அப்படி தான் இன்னிக்கும் இங்க வந்தேன்.” என்று அவனுக்கு அவள் விளக்கம் அளிக்க,
“அப்படியா? என்ன பார்த்துட்டு இங்க வந்துடுவியா? இன்னிக்கு நீ என்னை பார்த்து இருக்க மாட்டியே!” என்று கேலியாக அவள் தோளில் இடித்தான்.
“ஆமா இன்னைக்கு உங்கள பாக்கல. அதான் ஒரு மாதிரி இங்க வந்து உட்கார்ந்து இருந்தேன். ஆனா அதுக்கும் சேர்த்து வச்சு நீங்களே என்னை பார்க்க வந்துட்டீங்களே!” என்று கண்கள் மின்னக் கூறினாள்.
தன்மேல் இத்தனை பிரியம் கொள்ளும் அளவுக்கு அவளுக்கு தான் என்ன செய்தோம் என்று சிந்தித்த நீரூபனுக்கு பதில் தான் கிடைக்கவில்லை.
மீண்டும் அவளை மென்மையாக அணைத்து விடுவித்தவன் அவள் கைகளை பற்றி கொண்டு அவ்விடத்தை விட்டு கிளம்பும் நோக்கத்தில் நடக்கத் துவங்கினான்.
அவளும் அவன் எண்ணம் புரிந்தவளாக அவனுடன் இணைந்து நடந்து வர தொலைவில் இருந்து அவர்களை பார்த்த பழனியின் மனதில் நிம்மதி பிறந்தது. சில நாட்களாக அவ்வப்போது பூமிகா மட்டும் இங்கு வந்து சென்று கொண்டிருக்க, எப்போதும் உற்சாகமாக வரும் அவள் இன்று முகம் வாடி வந்த போது அந்த பெரியவர் மனம் மிகவும் வருந்தியது.
நீரூபன் அவளைத் தேடி வந்ததோடு இப்போது வரும் பூமிகாவின் முகத்தில் இருக்கும் வெட்கமும் புன்னகையும் அவள் மனநிலை மாறி இருப்பதை அவருக்கு பறை சாற்ற, இந்த வயதிலும் தான் முடங்கிப் போகாமல் இருக்கவும், அடுத்தவரிடம் தான் கையேந்தாமல் இருக்கவும் கௌரவமான ஒரு வேலையை கொடுத்து தன்னையும் மரியாதையுடன் நடத்தும் தன் முதலாளி மகிழ்ச்சியுடன் இருப்பதை கண்ணிறே கண்டு மனம் நிறைய வாழ்த்தினார் அந்த முதியவர்.
இருவரும் விடை பெற்று தத்தமது வண்டியில் அங்கிருந்து கிளம்பினர். வாயிலில் நிறுத்தி இருவரது கண்களும் விடை கொடுத்துக் கொண்டது.
தன் படுக்கை அறையில் இருந்த பாதிக்கும் மேலான பொருட்களை தரையில் வீசி இருந்தாள் அஞ்சனா. காலையில் அவள் நிதானமாக யோசித்து போட்ட திட்டத்தை தன் தம்பி தவிடு பொடி ஆக்கி விட்டேனே என்ற ஆத்திரம் ஒரு பக்கம்.
அது விட இத்தனை நாட்கள் அரசியலில் தலையிடாமல் இருந்தவன் திடீரென அரசியலுக்கு வருகிறேன் என்றபோது அவனிடம் நிதானமாக பேசி சரி கட்டி இருக்க வேண்டுமோ? அன்று கோபத்தில் சண்டையிட்டு, பின் நிலவரம் களவரமாகாமல் தடுக்க தந்தையை சமாதானத்துக்கு அனுப்பி வைத்தால் அவர் அவனது அரசியல் ஆசைக்கு தலையசைத்து விட்டாரோ என்ற சஞ்சலம் வேறு மண்டையை குடைந்து கொண்டிருந்தது.
மாமனாரின் சொத்துக்களை நிர்வகிக்கும் ராக்கேஷ். அவசர வேலையாக இரண்டு வாரங்களாக வெளியூர் சென்றிருந்தவன் அப்போது தான் வீடு வந்து சேர்ந்தான்
ஏற்கனவே போன காரியம் சொதப்பிய கோபத்தில் வந்தவன் தங்கள் அறை இருக்கும் அழகைக் கண்டு எரிச்சல் அடைந்தான்.
எத்தனை ஆண்டுகள் தான் மனைவியை கெஞ்சியும் கொஞ்சியும் வாழ்க்கையை வாழ்வது. அவனுக்கென்று எதுவும் செய்து கொள்ள இயலவில்லை. செய்தாலும் அது வெளியே தெரிந்து விடுகிறது. பின் அது மாமனார் கணக்கில் இணைந்து கொள்கிறது. மனைவி பதவிக்கு வருவாள், அவளது பதவியைக் காட்டி தான் சம்பாதித்துக் கொள்ளலாம் என்று நினைத்தால் ஐந்து ஆண்டுகளாக எதிர்க்கட்சி தான். அவள் சிட்டிங் எம்.எல்.ஏ கூட இல்லை.
இம்முறை எப்படியாவது மாமனாரை சமாளித்து எம்.எல்.ஏ சீட் வாங்கி விட்டால் இதுநாள் வரை இந்த வீட்டில் சுரண்டி சேர்த்த பணத்தை தண்ணீராக செலவழித்து எப்படியும் அந்த பதவியை அடைந்து விடலாம் என்று எண்ணிக்கொண்டே வீடு திரும்பி இருந்தான்.
ஏனெனில் அவன் போன இடத்தில் அவனைக்கு சரி வர மரியதை கிடைக்கவில்லை. முதல்வர் மருமகனாக இருந்த போது கிடைத்த மரியாதையில் பாதியாவது முன்னாள் முதல்வர் மருமகனுக்கு கிடைத்திருக்க வேண்டும். ஆனால் அதுவும் பஞ்சமாகிப் போனதால் கடுப்புடன் வந்தவன் இப்போது அறை இருக்கும் நிலவரப்படி தன் மனைவியை தான் இப்பொழுது சமாதானம் செய்தாக வேண்டும். அப்போது தான் அவள் காரண காரியத்தையே சொல்லுவாள்.
அதற்கு அவனுக்கு வலு இருக்க வேண்டுமே!
வந்த வழியில் திரும்பி மாடியில் இருக்கும் பொதுவான அறை சோஃபாவில் அமர்ந்தான்.
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
அலைச்சல், மன அழுத்தம் ,எரிச்சல் எல்லாம் சேர்ந்து அவனை மிகவும் சோர்வுற வைத்திருந்தது.
அஞ்சனா தன் சினமெல்லாம் அறையிலிருந்த பொருட்கள் மீது காட்டியும் தீராமல் வெளியே வந்தவள் கணவனது வருகை கண்டு மகிழ்ச்சி அடையாமல் அறையின் பொருட்களைப் போலவே அவனையும் பாவித்தாள்.
“ரெண்டு வாரமா நல்லா ஊரைச் சுத்திட்டு இங்க நடக்குறது எதையும் தெரிஞ்சுக்க கூட இல்லாம எப்படி இப்படி உன்னால நிம்மதியா கண்ணை மூடி தூங்க முடியுது? நீரூபன் அரசியலுக்கு வந்துட்டான். சும்மாவே அப்பா உன்னை மதிக்க மாட்டேன்றாரு. இனி நீ வேலைக்காரனுக்கும் கீழ தான்.” என்று கத்தியவள்,
“உன்கிட்ட போய் இதை சொல்றேன் பாரு. நீ என்ன இதை நெனச்சு கவலைப்படப் போறியா? நீ நேரா போய் அவனுக்கும் கூழை கும்பிடு போட்டு நீ பொழச்சுக்குவ. இப்ப வரை அதை செஞ்சு தானே வெக்கமில்லாம பொழைச்சுட்டு இருக்க!” என்று அமிலமாக வார்த்தைகளை வீசினாள்.
என்ன தான் அவன் சுயநலவாதி என்றாலும், அண்டிப் பிழைப்பவன் என்றாலும் முகத்துக்கு நேராக யாரும் இப்படி அவமதிப்பாக நடத்த மாட்டார்கள். அஞ்சனா மீது காதல் என்று மிகுந்து விடவில்லை என்றாலும் கூட அவளைத் தவிர வேறு பெண்ணை ராக்கேஷ் மனதால் கூட நெருங்கியதில்லை.
அவளின் புறக்கணிப்பை கூட குழந்தை இல்லாத கோபம் என்று நினைத்தே ஒதுக்குவான். காரியம் சாதிக்க தழைந்து போவான். ஆனாலும் மனதின் ஓரத்தில் இவள் என் மனைவி என்ற எண்ணம் இருக்கும்.
ஆனால் அஞ்சனாவுக்கு இந்த நொடி அப்படி எதுவும் தோன்றியிருக்கவில்லை போல.
முகத்தில் அடித்தது போல பேசிவிட்டு அவள் கைகளைக் கட்டிக் கொண்டு நின்றாள்.
ராக்கேஷுக்கு அவமானமாக இருந்தது. ஆனால் இதையெல்லாம் அவமானமாக நினைத்தால் தான் நினைத்ததை அடைய முடியாது. ஆயிரம் இருந்தாலும் அவள் முன்னாள் முதல்வர் மகள். அந்த திமிர் இருக்க தான் செய்யும் என்று எண்ணிக்கொண்டு அவளை சமாதானம் செய்ய முடிவு செய்தான்.
அவளருகில் சென்று அவளை பின்புறமாக அப்படியே அணைத்து நின்றான்.
அவள் அவனிடம் திரும்பவும் இல்லை அவனை விலக்கவும் இல்லை. அப்படியே நின்றிருந்தாள்.
“உனக்கு இப்ப என்ன அஞ்சு வேணும்? உன் தம்பி அரசியல் பக்கம் வரக்கூடாது அதானே? உன் அப்பா அவனை இழுக்காம, உன்னை முடிவு எடுக்குற இடத்தில் வைக்கணும். அவ்வளவு தானே!” என்றான் நிதானமாக.
ஆமென்று தலையசைத்தாள்.
“உன் தங்கச்சி கல்யாணம் முடிவாகி இருக்குன்னு சொன்ன தானே! பேசாம உன் தம்பிக்கும் பொண்ணு பாரு. இந்த வீட்டுக்கு பிடிக்காத, சரிவராத இடத்தில் பொண்ணு எடுக்க வை. உன் அப்பாவுக்கு வீட்டை பார்க்கவே சரியா இருக்கும். சம்பந்தி சண்டை வர்ற இடமா இருந்தா இன்னும் சூப்பர்.மீடியாவை அப்பப்ப உள்ள இழுத்தா நீ நினைச்சது நடந்திடும்.” என்று கூறினான்.
அவன் பேசி முடிக்கும்போது அவன் பக்கம் திரும்பியவள், “வாவ் சூப்பர் ராக்கி. எனக்கு இது தோணல பாரு. நீரூக்கு கல்யாணம் பண்ணினா அவனும் பொண்டாட்டி பின்னாடி கொஞ்சநாள் சுத்துவான். அதுக்குள்ள நானும் எல்லாத்தையும் என் கண்ட்ரோலுக்கு கொண்டு வந்துடுவேன்.” என்றவள் சற்று நேரம் முன் அவனை அவமதிப்பாக பேசியதெல்லாம் மறந்தவளாக அவனை அணைத்து நின்றாள்.
மனைவி தன் யோசனையை கேட்டதில் ராக்கேஷ் மகிழ்ந்தான். ஏனெனில் இதில் அஞ்சனாவுக்கே தெரியாத அவனுக்கு சாதகமான விஷயங்கள் இருக்கிறதே!
அவன் முகத்தில் விகல்பமான சிரிப்பு மின்னி மறைந்தது.