அடங்காத அதிகாரா 53
Copyright ©️ 2019 - 2025 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அதிகாரம் 53
கட்சி அலுவலகத்தில் இருந்து நேராக வசீகரனும் நீரூபனும் சென்று இறங்கிய இடம் வசீகரனின் பெற்றோர் வசிக்கும் வீட்டுக்கு தான்.
விழுப்புரம் மாவட்டத்தின் விளிம்பில் இருந்தது அவர்கள் இருந்த கிராமம். அங்கே அவர்கள் பல ஆண்டுகளாக மளிகை வியாபாரம் செய்து வந்தனர். இருவரும் கடையில் இருக்க வசீகரன் சென்று நின்றதும் அவனது தந்தைக்கு அளவிட முடியாத மகிழ்ச்சி.
“வா சாமி. வா வா… என்ன சொல்லாம கொள்ளாம வந்து நிக்கிற?” என்று கடையின் தடுப்பை திறந்து கொண்டு ஓடி வந்தார்.
அன்னை சற்று வாடிய தேகம் உடையவராக இருக்க, நிதானமாக நடந்து வந்தாலும் மகனைக் கண்டத்தில் அவர் கண்கள் ஒளிர்ந்தது.
வசீகரன் வீட்டுக்கு வந்து நான்கு மாதங்களுக்கு மேல் தாண்டி இருக்க, பெற்றோர் கண்களில் அத்தனை மகிழ்ச்சி.
நல விசாரிப்புகளைக்குப் பின் நீரூபனை அறிமுகம் செய்து வைத்தான் வசீகரன்.
“இந்த தம்பியை டிவில பார்த்தது போல இருக்கே!” என்று அன்னையவர் நினைவு கூற,
“ஆமா அத்தை. புதுசா பள்ளிக்கூடம், வேலை இல்லாம இருக்குற இளைஞர்கள் சுயதொழில் செய்ய ஒரு அறக்கட்டளை ஆரம்பிச்ச விஷயமா பேட்டி கொடுத்திருந்தேன்.” என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்டான்.
அவனை புகழ்ச்சியாக பெற்றோர் பேச, “உங்க பையன் மட்டும் என்ன மாமா, சைபர் செக்யூரிட்டி கம்பெனி, இப்ப கேம்பயின் மேனேஜ்மென்ட் கம்பெனினு பெரிய ஆளு தான்.” என்று வசீகரனை தட்டிக் கொண்டு கூறினான்.
பெற்றோர்க்கு பிள்ளையின் புகழ்மாலை கேட்க கசக்குமா? பெருமை நிறைந்த விழிகளுடன் மகனை ஏறிட்டனர்.
நீரூபன் மெல்ல தான் வந்த விஷயத்தைப் பேசலானான்.
ஆரம்பத்தில் இருவரும் மிகவும் பயந்து போனார்கள்.
“என்ன பேசுறீங்க? நாங்க யாரு என்னனு தெரியுமா உங்களுக்கு? எக்ஸ். சி.என். பையனா நீங்க? உங்க தங்கச்சிக்கு வந்து என் பையனை கேட்கறீங்களா?” என்று பதறினார் தந்தை வாசுதேவன்.
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
“இதுல என்ன மாமா இருக்கு. அவங்க விரும்புறாங்க. நாம சேர்த்து வைக்க போறோம். உங்களுக்கு என் தங்கை பத்தி தெரியாது இல்லையா? ரொம்ப அமைதியான பொண்ணு. நான் அவளை இங்க வர சொல்லவா?” என்று வேகமாக வினவினான்.
“ஐயோ தம்பி உங்களுக்கு புரியல. உங்க உயரம் வேற. எங்களோடது வேற. இன்னிக்கு சமத்துவம், காதல், மனசு அப்படின்னு என்ன வேணாலும் பேசலாம். ஆனா நாளைக்கு பிரச்சனைன்னு வந்தா என் பையன் தான் முதல் பலியா இருப்பான். இதெல்லாம் சரியா வராது தம்பி.” என்றார் உறுதியாக.
இந்த அளவுக்கு அவர்களின் மறுப்பை யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை. அதனால் அங்கே சற்று நேரம் மௌனம் நிலவியது.
“மாமா எனக்கு என் தங்கை வாழ்க்கை தான் முக்கியம். நீங்க என்ன சொன்னாலும் நான் செய்யறேன். என் அப்பாவுக்கு ஏகப்பட்ட வாக்குறுதி, சத்தியம் எல்லாம் செய்து அவர்கிட்ட நான் சம்மதம் வாங்கிட்டேன். உங்களுக்கு என்ன வேணும் சொல்லுங்க. நான் செய்யறேன்.”என்று நீரூபன் வலியோடு வினவினான்.
“என்னப்பா இப்படி கேட்கற? எங்களுக்கு எங்க பையன் வாழ்க்கை பத்தி கவலை. நீ என்ன வாக்குறுதி கொடுத்து என்ன செய்யறது பா?” என்றார் அவனது அன்னை அருந்ததி.
“உங்க பையன் மேல நம்பிக்கை இருக்கா அத்தை உங்களுக்கு? அவன் முடிவு தப்பா போகாதுன்னு நினைங்க. யார் மாறினாலும் இந்த நீரூபன் மாற மாட்டான். இவன் தான் என் மாப்பிள்ளை. என் தங்கச்சி புருஷன். என்ன வந்தாலும் நான் இவனுக்கு துணையா இருப்பேன்.” என்று உறுதிபடக் கூறினான் நீரூபன்.
“ஏங்க… காதலிச்சு அதது சொல்லாம கூட ஓடிப்போகற காலத்துல நம்ம பிள்ளை காதலை ரெண்டு வீட்டிலும் பேசி சம்மதம் வாங்கறான். அதுக்கு பொண்ணுக்கு அண்ணனே துணையா வர்றாங்க. இதை விட என்னங்க வேணும்? அவன் ஆசையை நாம பார்ப்போம். கூடப் பிறந்தவங்க இல்லாததுக்கு இப்படி ஒரு மச்சான் நம்ம மகனுக்கு துணையா அமையறது நல்லது தானுங்களே!” என்று கணவரை சமாதானம் செய்தார் அருந்ததி.
மிகவும் யோசித்து தான் அவர் சம்மதம் கூறினார். திருமூர்த்தியை வெளி இடங்களில் சந்தித்துப் பேச முடியாது. கட்சி அலுவலகம் சென்று பேச திருமணப் பேச்சு ஒன்றும் அரசியல் காரியம் அல்ல. அவர்கள் வீட்டுக்கு திருமூர்த்தி வருவாரா என்று தெரியாது. அப்படியென்றால் அவரின் வீட்டில் தான் தாங்கள் சென்று திருமணப் பேச்சை பேச வேண்டுமா என்று தீவிரமாக சிந்தித்தார்.
அவர் அதனை வாய்திறந்து கேட்டதும்,
“மாமா நீங்க அதெல்லாம் யோசிக்க வேண்டாம். நீங்க சென்னை வந்தா போதும். அப்பா உங்களை வந்து பார்க்கறது போல நான் ஏற்பாடு பண்றேன் மாமா.” என்று உறுதியளித்தான் நீரூபன்.
அவனை பார்த்ததில் இருந்தே வசீகரனின் பெற்றோருக்கு மனநிறைவு ஏற்பட்டது.
அடுத்த வாரத்தில் சென்னை வருவதாக அவர்கள் உறுதி கொடுத்ததும் நீரூபனும் வசீகரனும் மதிய உணவை முடித்துக் கொண்டே சென்னை திரும்பினர்.
வசீகரன் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தான். வழி நெடுக அவன் வருங்காலத் திட்டங்களை தீட்டிக்கொண்டே அதனை நீரூபனிடமும் கூறிக்கொண்டு வந்தான்.
நீரூபனுக்கும் மகிழ்ச்சி தான் என்றாலும் மனதின் ஓரத்தில் சிறு வலி இருக்கே செய்தது. அவனை ஆசைப்பட்ட தன் மாமன் மகளை இப்படி பேசி திருமணம் முடிக்க தன்னால் இயலவில்லையே! தந்தை அதற்கு செக் வைத்து விட்டாரே!
அப்பொழுது தான் அவனுக்கு இரண்டு நாட்களாக தான் பூமிகாவிடம் பேசாதது நினைவுக்கு வந்தது. வசீகரனை அவனது அலுவலகத்தில் இறக்கி விட்டவன் மனம் தன் மனதிற்கு இனியவளைத் தேடியது.
நேராக அவளது டான்ஸ் ஸ்டுடியோ முன் சென்று நிறுத்தியவன் கைபேசியில் அவளை அழைக்க, அணைத்து வைக்கப்பட்டிருப்பதாக பதில் கிடைத்தது.
பொறுக்க முடியாமல் வாகனத்தில் இருந்து இறங்கி உள்ளே செல்ல முயலும்போது அவனது கைபேசி அழைக்க, பூமிகா என்று எண்ணி ஆவலாக பார்த்தவன் தன் தங்கையின் அழைப்பு என்றதும் சற்றே சோர்ந்து அதனை ஏற்றான்.
“அண்ணா தேங்க்ஸ் அண்ணா. இப்ப தான் வசி போன் பண்ணினான். அவங்க அம்மா அப்பாவை ரொம்ப கன்வின்ஸ் பண்ணினியாமே! லவ் யூ அண்ணா” என்று தன் மன மகிழ்வை மடை திறந்த வெள்ளமாக வெளியிட்டாள்.
அவனும் அவளை மகிழ்வாக இருக்கச் சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.
அலுவலகம் சென்று விசாரிக்க இரண்டு நாட்களாக பூமிகா வரவில்லை என்ற பதில் கிடைக்க அவன் மனம் பதறியது.
சற்றும் தாமதிக்காமல் தன் தாய் மாமனுக்கு அழைப்பை மேற்கொண்டான்.
அவரோ இயல்பாக அவனுடன் உரையாடி அவனது தொழில், நேத்ராவின் திருமணப் பேச்சு கைகூடியது பற்றி பேசிக்கொண்டிருந்தார். ஆக அன்று வீட்டிற்கு சென்று விஷயத்தை கூறியிருக்கிறாள். ஆனால் இரு நாட்களாக தான் பேசாதது பற்றி ஏதும் கூறவில்லை. வீட்டில் அவள் இருந்திருந்தால் மாமா பாலரமணி இந்நேரம் அவளை அழைத்து கைபேசியை கொடுத்து பேசச் சொல்லி இருப்பார். அவள் வீட்டில் இல்லை. இங்கும் வரவில்லை. எங்கே சென்றாள் என்று சிந்திக்கலானான்.
மாமா ஏதேதோ பேசிக்கொண்டிருக்க அவனுக்கு தான் கவனம் அங்கில்லையே!
“மாமா இன்னொரு கால் வருது. நான் அப்பறம் பேசவா?” என்று கேட்டு அழைப்பைத் துண்டித்துக் கொண்டான்.
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
மீண்டும் ஜீப்பில் ஏறியவனுக்கு இருப்பு கொள்ளவில்லை. ஆனந்துக்கு பொன் செய்து கேட்டால் அவள் எங்கே என்று கூறிவிடுவான். ஆனால் அவனிடம் கேட்கும் அளவுக்கு இப்போது நீரூபன் இல்லை.
நம் மனதிற்கு இனியவர் மேல் நம்மை விட ஒரு சிலருக்கு உரிமையும் அன்பும் மிகுந்திருக்கும். நம் மீது சிறு தவறு என்றாலும் அவர்கள் சண்டைக்கு வந்து விடுவார்கள். அப்படித்தான் ஆனந்த் பூமிகாவுக்கு நெருக்கமானவன். உயிர்த்தோழன். அவள் மனம் வருந்த நீரூபன் காரணம் என்றால் தயங்காமல் வேலையை விட்டு செல்வதோடு சண்டைக்கு வரவும் தயங்க மாட்டான்.
என்ன செய்வதென்று அமர்திருந்தவன் மனம் தவிக்க, மனதை சமன் செய்வதற்காக பல நாட்கள் செல்லாமல் இருந்த பண்ணை நோக்கி புறப்பட்டான்.
நம் மனதிற்கு ஏற்படும் வலி சற்றே குறைந்து ஆறுதல் அடைவது அன்னையிடம் அல்லது இயற்கையிடம்.
அன்னையிடம் காரணம் சொல்ல வேண்டும். அவருக்குத் தெரிந்தால் தன் மகளின் காதலை விட மகன் காதல் பெரிது என்பார். அவருக்கு பதில் சொல்லி முடியாது. அதனால் இயற்க்கை அன்னையை தேடி புறப்பட்டு விட்டான்.
வாகன நெரிசலைகளை கடக்கையில் அவன் விழிகள் எங்கேனும் அவள் தென்படுகிறாளா என்று தேடத் தவறவில்லை.
நவயுக உழவின் அளவு நீண்டு கிடந்தது. வாயில் கதவின் காவலர் அவனைக் கண்டதும் மரியாதையாக வணக்கம் வைக்க, தலையசைத்து அதனை ஏற்றான்.
அவன் அலுவலக கட்டிடம் நோக்கி வர வர அவன் கண்கள் விரிந்தது. அங்கே பூமிகாவின் வண்டி நின்று கொண்டிருக்க ஓட்டமும் நடையுமாக உள்ளே சென்றால் பழனி ஐயா தான் இருந்தார்.
அவரிடம் பூமிகா பற்றி அவன் விசாரிக்க,
“அவங்க அப்பப்ப வருவாங்க தம்பி, உள்ள யார் கிட்டயாவது பேசிட்டு இருப்பாங்க.” என்று கூறியதும் அவசரமாக வெளியேறி தோட்டத்தினுள் சென்றான்.
போகும் வழி எங்கிலும் பலர் அவனுக்கு வணக்கம் சொல்ல, இனிய புன்னகையுடன் ஏற்று தலையசைத்து அவர்கள் நலன் விசாரித்து நடந்தாலும் கண்கள் என்னவோ தன்னவளைத் தான் தேடியது.
மாந்தோப்பில் உள்ளே ஓய்வெடுக்க அமைக்கப்பட்ட சிறு சிமெண்ட் திட்டில் அமர்ந்திருந்தாள் பூமிகா.
இரண்டு நாட்களில் ஒருத்தி இத்தனை வாடிப்போக முடியுமா? வெளிப்படையாக அவளின் மனம் வருத்தம் புலப்பட்டதும், தன் மீதே ஆத்திரம் பிறந்தது நீரூபனுக்கு.
“பாப்பா” என்று அவன் வேக எட்டுக்கள் வைத்து அவளை அடைய, அவனது விளிப்பில் நடப்புக்கு வந்த பூமிகாவும் தயக்கமின்றி “மாமா” என்றழைத்து அவன் தோள் சாய்ந்தாள்.
இருவருக்குள்ளும் எந்த பேச்சுக்களும் இல்லை.
அவன் அவளை அணைத்த இறுக்கத்தில் அவனது தவிப்பு வெளிப்பட, அவள் அவன் மார்பில் முகம் புதைத்த வேகத்தில் அவளது பயம் புலப்பட்டது.
எல்லாம் சில நொடி தான். பூமிகா அவனை விட்டு சட்டென்று நகர்ந்து கொள்ள முயன்றாள்.
ஆனால் அவளை விடாமல் இறுக்கமாக அணைத்த நீரூபன், “நான் உன் மாமா பாப்பா. உன்னை விட்டு எங்கேயும் போக மாட்டேன்.” என்று அழுத்தமாகக் கூறினான்.
நொடியில் அவள் மனதில் இருந்த சஞ்சலங்கள் எல்லாம் அகன்று விட, அவளது சூடான கண்ணீர் அவன் மார்பை நனைத்தது. அது மகிழ்ச்சியின் வெளிப்பாடு என்று தெரியாமல் போக நீரூபன் ஒன்றும் அறியாதவன் இல்லையே!
அவளை ஆதரவாக தலையில் வருடிக் கொடுத்தான். அந்த மோனமான நிலை அப்படியே தொடர்ந்தது.