அடங்காத அதிகாரா 51
Copyright ©️ 2019 - 2025 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அதிகாரம் 51
அதிகாலை எழுந்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தான் நீரூபன். அவனுக்கு பின்னால் வந்து நின்றாள் அஞ்சனா.
தன் தமக்கையை அந்த நேரத்தில் அங்கே எதிர்ப்பாராதவன் அவள் பக்கமாக திரும்பி அமர்ந்தான்.
“அப்பா எப்ப கூப்பிடுவாருன்னு காத்துகிட்டு இருந்தியோ?” என்று நக்கல் வழியும் குரலில் அவள் கேட்க,
அமைதியாக சிரித்து விட்டு தன் உடற்பயிற்சியைத் தொடர்ந்தான்
“பத்து நாள் ஆகியும் நீ அரசியல் விஷயமா எதுவும் செய்யாமல் இருக்கும்போதே உன்னோட எண்ணம் எனக்கு புரிஞ்சிருச்சு. பரவால்ல இதே போலவே எப்பயும் இருந்துட்டேனா அக்கா தம்பியா நம்மளோட உறவு நல்லபடியாவே இருக்கும்.” என்று கூறியவளை ஏறஇறங்கப் பார்த்தான்.
“அப்பாவுக்கு மகனை நிரூபிக்கிறியா?” என்று அவன் சிரித்தபோது அதன் அர்த்தம் புரியாமல் அஞ்சனா விழித்துக் கொண்டு நின்றாள்.
அமைதியாக எழுந்து தன் உடலில் இருந்த வியர்வையை பூந்துவலை கொண்டு துடைத்துக் கொண்டவன் டி-ஷர்ட் ஒன்றை அணிந்து தன் செல் போன் ஏற்பாடு சகிதம் உடற்பயிற்சி அறையை விட்டு வெளியேறினான்.
தான் நின்று அவனோடு பேசிக் கொண்டிருக்கும்போதே மரியாதை இல்லாமல் அவன் வெளியே சென்றது அஞ்சனாவுக்கு அதீத கோபத்தை கொடுத்தது அதே கோபத்துடன் அங்கிருந்து வெளியே வந்தவள் நேத்ராவின் அறையில் விளக்கு எரிவதைக் கண்டு அங்கு சென்றாள்
செல்போனில் யாருடனோ பேசியபடி அன்று உடுத்த வேண்டிய ஆடையை அலமாரியில் இருந்து தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்தாள் நேத்ரா.
நாசுக்காக ஒரு விரல் கொண்டு கதவைத் தட்டினாள் அஞ்சனா. நேத்ரா திரும்பி வாயிலை பார்த்துவிட்டு கைபேசியில் பேசிக் கொண்டிருந்தவரிடம் ஏதோ கூறி அணைத்து தன் மெத்தை மீது அதை வைத்தாள்.
“வாங்க” என்று அவள் அழைக்க கதவை விரித்து திறந்து உள்ளேன் நுழைந்தாள் அஞ்சனா.
“என்ன காதல் கை கூடிருச்சுன்னு கால் தரையில நிக்க மாட்டேங்குதா?” என்று ஏதோ உடன் பிறந்த சகோதரியிடம் அன்புடன் பேசும் சாதாரண தமக்கை போல விசாரித்தாள் அவள்.
நேத்ரா அது எதையும் கண்டு கொண்டது போலத் தெரியவில்லை. “என் அண்ணா இருக்கும்போது என் காதல் ஏன் கை கூடாமல் போகப்போகுது? அதை பத்தி கவலைப்பட்டு இருந்தா தானே இப்போ அதுக்காக கொண்டாட முடியும்?” என்று முதல் நாள் நடந்த விஷயம் ஒன்றும் பெரிதல்ல என்பது போல தோளைக் குலுக்கினாள்.
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
“நானும் ராக்கேஷ லவ் பண்ணி தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். அப்பா ஓகேன்னு சொன்னப்ப அது ஒரு மாதிரி நல்லா இருந்தது. நீயும் அப்படி ஃபீல் பண்ணி இருப்பன்னு நெனச்சேன்.” என்று விட்டு அங்கிருந்து கிளம்புபவள் போல ஒரு அடி எடுத்து வைத்தவள் பின்னால் திரும்பி,
“நீயும் உன்னோட லவ்வரும் அப்பா ஓகே சொன்னதை நினைச்சு ரொம்ப சந்தோஷப்பட்டுக்க வேண்டாம். கண்டிப்பா அரசியலுக்குள்ளலாம் உங்கள அவர் கொண்டு வர மாட்டார்.” என்று தன் தந்தையை தனக்குத்தான் நன்றாக தெரியும் என்ற ரீதியில் பேசினாள் அஞ்சனா.
தன் உடன்பிறவாத தமக்கையை மேலும் கீழும் பார்த்த நேத்ரா அமைதியான குரலில் “அப்பா என்ன நினைக்கிறார் என்பதை பற்றி ஐ டோன்ட் கேர். எனக்கு என் அண்ணன் என்ன சொல்றாருன்னு தான் முக்கியம். என் அண்ணன் என்னை சாக சொன்னா கூட நான் செத்துப் போவேன். உங்களுக்கு அப்படி யாராவது இருக்காங்களா? உங்களை யாராவது அப்படி நினைக்கிறாங்களான்னு கொஞ்சம் யோசிச்சு பாருங்க.
இந்த அரசியல் ஒன்னு தான் வாழ்க்கை என்று நினைச்சீங்கன்னா உங்கள சுத்தி ஒரு மனுஷங்க கூட அன்பாகவோ பாசமாவோ இருக்க மாட்டாங்க. சாதாரணமாவே இந்த உலகம் சுயநலமா தான் இருக்கும். இதுல நீங்க முழு அரசியல்வாதியா வீட்ல இருக்க மனுஷங்க கிட்ட கூட அரசியல் பண்ணிக்கிட்டு இருந்தீங்கன்னா நாளைக்கு ரொம்ப கஷ்டம்.” என்று அழுத்தமாகக் கூறிவிட்டு நீ நின்றாலும், இங்கிருந்து சென்றாலும் எனக்கு ஒன்றும் இல்லை என்பது போல தன்னுடைய அலமாரியின் பக்கம் திரும்பி உடைகளின் மீது கவனம் வைத்தாள் நேத்ரா.
‘இந்த பொடிசுக்கு வாய் எவ்வளவு நீளமா இருக்கு? அண்ணன் தான் எல்லாமாமே! அந்த அண்ணன் என் கூடப் பிறந்த தம்பி. என்னை விட இவ அவனுக்கு பெருசா போயிடுவாளா? போனா போகுதுன்னு விட்டா எவ்வளவு பேசுறா பாரு!’ என்று எண்ணியபடி அங்கிருந்து விலகிச் சென்றாள் அஞ்சனா.
அவள் போனதை உறுதி செய்து கொண்டு தன் கைபேசியை எடுத்து மீண்டும் அழைப்பை மேற்கொண்டவள்
“உன் பெரிய நாத்தனார் தான். சும்மா இல்லாம என்னை வம்பு இழுக்க வந்துருக்காங்க. என் அப்பா ஏதோ நாரதர் வேலை பார்த்து இருக்காருன்னு நேத்து அண்ணன் முகத்தை பார்க்கும் போதே எனக்கு தெரிஞ்சுச்சு. நீயும் அதை கவனிச்சதுனால தான் விலகிப் போய் இருப்பியோன்னு ஒரு சந்தேகம். ராத்திரி எல்லாம் யோசிச்சிட்டு மனசு கேட்காம தான் காலையில எழுந்ததும் உனக்கு போன் பண்ணினேன்.” என்று அவள் பேசிக் கொண்டிருந்தது சாட்சாத் பூமிகாவிடம் தான்.
“இங்க பாருங்க நேத்ரா அண்ணி, பெரிய மாமா என்ன பேசி இருந்தாலும் அதுக்கு மாமா என்ன சொல்லி இருந்தாலும், இப்ப நமக்கு முக்கியம் உன்னோட கல்யாணம் மட்டும் தான். எங்க விஷயமா ஏதாவது இருந்தா கூட இப்ப நீ அதை பெருசு படுத்தாத. உன் கல்யாணம் முடியட்டும் நாம இதெல்லாம் சரி பண்ணிக்கலாம்.” என்று நீரூபனுக்கு ஏற்ற பெண் தான் என்பதை நிரூபித்தாள் பூமிகா.
அதே எண்ணத்தில் தான் முதலில் நீரூபனும் தன் தந்தைக்கு சம்மதம் தெரிவித்து இருந்தான். ஆனால் இரவெல்லாம் அவனுடைய சிந்தனை வேறு விதமாக சென்று கொண்டிருந்தது. ஒருவருக்கு வாக்கு கொடுத்துவிட்டு மீறுவது தவறு. அதேபோல ஒருவருக்கு பொய்யான வாக்குறுதி கொடுப்பதும் தவறு. பூமிகாவுக்கும் தன் தந்தைக்கும் இம்மாதிரியான ஒன்றை செய்யக்கூடாது என்று தன் மனதில் திடமாக முடிவெடுத்திருந்த நீரூபன் காலை ஓட்டத்திற்கு வெளியே சென்ற போது முதல் வேலையாக தன் மனதில் எழுந்த திட்டத்தின் ஆரம்ப புள்ளியை தொடங்கி வைத்தான்.
அவன் ஒரு நபரை சந்தித்து பேசிவிட்டு சற்று தாமதமாகவே வீடு வந்து சேர்ந்தான்.
பத்து நாட்களுக்கும் மேலாக மகன் இல்லாததால் வீட்டின் உணவு தேவைகள் எதையும் கவனித்துக் கொள்ளாமல் தன் அறையிலேயே முடங்கி கிடந்த நாகரத்தினம் இன்று மகன் திரும்பி வந்ததும் மகிழ்ச்சியில் அதிகாலையே வீட்டு வேலைக்காரர்களிடம் அன்பான குரலில் வேலை ஏவிக் கொண்டிருந்தார்.
அதோடு நிறுத்தாமல் தன் மகன் தன் கையால் உணவு உண்டு நாட்களாகி விட்டதை மனதில் கொண்டு தன் கையாலேயே அவனுக்கு காலை உணவை தயார் செய்து கொண்டிருந்தார்.
வீட்டின் வாயிலில் நுழைந்தவனுக்கு அன்னையின் மென்மையான குரலில் கட்டளைகள் காதில் வந்து விழ இதழ் தானாக புன்னகையை பூசிக் கொண்டது.
நேராக சமையலறைக்குச் சென்றவன் அன்னை சமைத்துக் கொண்டிருப்பதை கண்டு அவருக்கு பின்னால் சென்று தோளோடு கட்டி அணைத்துக் கொண்டான்.
அந்த நேரத்தில் மகனை எதிர்பார்த்து இருக்காத நாகரத்தினம் ஒரு நொடி துள்ளி பயந்து நகர்ந்தார். பின் அது தன் மகன் என்று அறிந்ததும் அவர் முகத்தில் வாஞ்சையான புன்னகை வந்து மலர்ந்தது.
“ஜாக்கிங் போய் இருந்தியா?” என்று கேட்டுவிட்டு மகன் காலையில அருந்தும் கிரீன் டீயை சுட சுட தயார் செய்து அவனிடம் நீட்டினார்.
அவனும் சமையல் மேடையில் ஏறி அமர்ந்தபடி அதை குடித்துக்கொண்டே அவர் பேசுவதை கவனித்துக் கொண்டிருந்தான்.
பத்து நாட்களாக தன் மகனிடம் பேசாதது எல்லாம் இன்னது என்று வரையறுக்க முடியாதபடி அனைத்து விஷயங்களையும் கதம்பமாக கலந்து நிறுத்தாமல் பேசிக் கொண்டிருந்தார் நாகரத்தினம்.
அவர் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி. அதை கண்ணுற்ற நீரூபன் இந்த மகிழ்ச்சிக்காக தன் எதையும் செய்யலாம் என்று எண்ணிக் கொண்டான்.
நேத்ரா குளித்து தான் விரும்பிய ஆடை அணிந்து மாடிப்படிகளில் இறங்கி வந்து கொண்டிருந்தாள் அண்ணன் சமையலறையில் கால் ஆட்டி அமர்ந்து கொண்டிருப்பதை கவனித்து சிரித்துக்கொண்டே அவனுக்கு அருகில் வந்து அவள் அமர,
“வீட்டில இடமா இல்ல? ரெண்டு பேரும் இப்படி சமையல் கட்டுல உக்காந்து இருக்கீங்களே? போய் ஹால்ல சோபால சௌகரியமா உட்காருங்க.” என்று கூறிய நாகரத்தினத்தின் பேச்சை இருவரும் கேட்கவில்லை.
ஏதேதோ கதைகள் பேசி அன்னை குடுத்த காலை பானத்தை குடித்துவிட்டு இறுதியாக இருவரும் அவரின் இருபுறமும் நின்று கைகளை பற்றி வீட்டை விட்டு வெளியே சென்றதற்கும் அது பற்றி அவரிடம் ஏதும் பேசாமல் இத்தனை நாட்கள் தவிர்த்ததற்கும் மன்னிப்பு வேண்டினர்.
“இதெல்லாம் நீங்க சொல்லணுமா? எனக்கு தெரியும். என் பிள்ளைங்க தப்பு செய்ய மாட்டாங்க.அவங்க ஒரு விஷயம் செஞ்சா அதுக்கு பின்னாடி வலுவான காரணம் இருக்கும்ன்னு புரியாத அளவுக்கு உன் அம்மா ஒன்னும் முட்டாள் இல்லை.” என்று மகனின் கன்னத்தில் ஆசையாக தட்டிக் கொடுத்தார்.
நேத்ரா வேகமாக தன்னுடைய கன்னத்தை நீட்ட வலிக்காமல் அவள் கன்னத்தில் ஒரு அடி அடித்தவர், “என் பையன் கூட போட்டிக்கு வராத” என்று செல்லமாக கண்டித்தார்.
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
காலை உணவை முடித்துக் கொண்டு அவரவர் தங்கள் அலுவலகம் நோக்கி பயணிக்க நிருபன் மட்டும் வீட்டிலேயே இருந்தான்.
11 மணிக்கு தந்தை கட்சி அலுவலகம் செல்ல தயாராகி இருக்கும்போது தன்னை அழைக்கும் படி அண்ணனிடம் கூறிவிட்டு மாடியரைக்குச் சென்றவன் தன் அறை கதவை சாத்திக் கொண்டான்.
திருமூர்த்தி காலை உணவை முடித்துக் கொண்டு தான் கட்சி அலுவலகத்திற்கு செல்வதாக மனைவியிடம் தெரிவித்ததும்
“கொஞ்சம் இருங்க நீங்க கிளம்பும்போது கூப்பிடச் சொல்லி தம்பி சொல்லி இருந்துச்சு” என்று மாடி அறை நோக்கி குரல் கொடுத்தார் நாகரத்தினம்.
“நீரூபன் வீட்டிலையா இருக்கான்? ஆபீஸ் போயிருப்பானு நினைச்சேன்.” என்று கூறிக்கொண்டே தன் மகனின் வருகைக்காக மாடியை பார்த்தபடி நின்றிருந்தார் திருமூர்த்தி.
அறைக் கதவை திறந்த சத்தம் கேட்டதும் இருவரது பார்வையும் மாடியை நோக்கியே நிலைத்திருக்க வெள்ளை நிற வேட்டியும் சட்டையும் அணிந்து கம்பீரமான நடையோடு மாடிப்படிகளில் இறங்கி வந்தான் நீரூபன்.
மகனது அந்த தோற்றத்தைக் காண பல நாள் ஆவல் கொண்டிருந்த தந்தைக்கு அது கண்களுக்கு விருந்தாக அமைந்தது. தன் மகன் அலுவலகம் செல்ல துவங்கியது முதலே அவர் கேட்டுக்கொண்டபடி அலுவலக உடைக்கும் மாறி இருக்க, இன்று ஏன் வேட்டி சட்டையில் வருகிறான் என்று புரியாமல் விழித்துக் கொண்டு நின்றிருந்தார் நாகரத்தினம்.
“போகலாமாப்பா” என்று தன் தந்தையிடம் அவன் வந்து நின்றதும் அவர் அவனை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்தார்.
மனைவி முன்னே எதையும் காட்டிக் கொள்ளாமல் “வா போகலாம்” என்று மகனுடன் நடந்தவர் தன்னுடைய காரில் ஏறச் சென்றார்.
“என்னோட ஜிப்ல வாங்க” என்று தந்தையை தன்னுடன் அழைத்தான் நீரூபன்.
அவருடைய காரியதரிசியும் பாதுகாவலர்களும் முன்னே ஒரு வண்டியில் செல்ல பின்னால் ஒரு வண்டி பின் தொடர தந்தையும் மகனும் மட்டும் நீரூபனின் ஜீப்பில் பயணித்தனர்.
“என்னப்பா இன்னிக்கு என்னோட கிளம்பி வந்துட்ட?” என்று வாகனத்தை செலுத்திக் கொண்டிருந்த தன் மகனை நோக்கி கேள்வி எழுப்பினார் திருமூர்த்தி.
“எனக்கு எதையும் தள்ளி போட்டு பழக்கம் இல்ல. வசீகரனை ஆபீஸ்க்கு வர சொல்லி இருக்கேன். முதல்ல அவனை பார்த்து பேசுங்க. அதுக்கப்புறம் தான் நான் அவன் வீட்ல போய் பேச முடியும்.” என்று கூறிவிட்டு சாலையில் கவனம் வைத்தான்.
“ஓ இன்னும் அவங்க வீட்டுக்கே தெரியாதா?” என்றவர் ஆச்சரியமாக வினவ,
“சுத்தமா தெரியாதுன்னு சொல்ல முடியாது அந்த பையன் விரும்புறான்னு தெரியும் யாரு என்னன்னு தெரியாது. இப்ப கல்யாண விஷயமா அவங்க கிட்ட சம்மதம் வாங்க நானே நேர்ல போலாம்னு இருக்கேன்.” என்று தீவிரமான குரலில் பேசினான் நீரூபன்.
“நீ நான் போட்ட கண்டிஷனுக்கு எல்லாம் ஒதுக்குவேன்னு நான் நினைக்கவே இல்ல. நேத்ரா மேல அவ்வளவு பாசமா?” என்று கேட்டபோது அவர் குரல் நெகிழ்ந்திருந்தது.
“நீங்க நேத்ராவ எப்படி பாக்குறீங்கன்னு எனக்கு தெரியாது. ஆனால் முதல் முதலில் அம்மா அவளை என் கைல கொடுத்தப்ப என் தங்கை என்பதை தாண்டி அவ என்னோட பொறுப்புன்னு நான் நினைச்சேன். அவளோட பாதுகாப்பு, அவளோட சந்தோசம், அவ ஆசை இதுதான் என்னோட முதல் லட்சியம் என்று நான் நினைச்சேன். என் தங்கச்சியை விட எனக்கு எதுவுமே பெருசு இல்ல. ஆனா இதை வைத்தே என்னை மடக்கனும்னு நீங்க நினைச்சது இப்ப வரைக்கும் என்னால ஏத்துக்க முடியல. இதே மாதிரி ஒவ்வொரு தடவையும் காரியம் சாதிக்கலாம்னு கணக்கு போடாதீங்க. ஏன்னா இப்ப நானும் அரசியல்வாதி. நான் வேற மாதிரி கணக்கு போட்டா எல்லாமே வேற வேற மாதிரி ஆகிடும். அதை மட்டும் மனசோட ஓரத்துல போட்டு வச்சுக்கோங்க.” என்று யாரோ மூன்றாவது மனிதரிடம் பேசுவது போலக் கூறினான்.
மகனின் குரலில் இருந்த ஆளுமை கலந்த எச்சரிக்கை திருமூர்த்திக்கு பிடித்து இருந்தாலும் ‘தன்னிடமே இப்படி பேசுகிறானே!’ என்ற ஆச்சரியம் அவருக்கு எழுந்தது.
‘அவனை சரியாக எடை போட்டோமா?’ என்று அவர் சிந்திக்க வேண்டிய இடத்தில் இருப்பதை மறந்து மகனின் ஆளுமையை ரசித்துக் கொண்டிருந்தார்.