அடங்காத அதிகாரா 50

Copyright ©️ 2019 - 2025 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அதிகாரம் 50

மாலை வரையிலும் தன் அலுவல் அறையை விட்டு வெளியேறாமல் அமர்ந்திருந்தான் நீரூபன்.

அவன் மனதில் ஆயிரம் எண்ணங்கள் கூட்டம் கூட்டமாக அலை மோதியது. சிந்திக்க நினைக்கும் அந்த ஒன்றை மற்றவை வந்து தட்டி விட முயன்றன.

ஆனால் தட்டி விட்டால் மறக்கும் எண்ணமா அவனுடைய காதல்? அதனை அல்லவா தன் தங்கைக்காக அவனை விட்டுத் தரச் சொல்கிறார் தந்தை!

அவருக்கு ஒருவேளை தன் காதல் விவகாரம் தெரிந்திருக்குமோ! ஒருவேளை அதன் எதிரொலி தான் இந்த நிபந்தனைகளா?

கேள்விகளும் குழப்பங்களும்  அவனை சுற்றிச் சுழற்றியது.

எந்த முடிவையும் நொடியில் எடுத்துவிடும் நீரூபன் இன்று சற்று தடுமாறுவதில் வியப்பொன்றும் இல்லை!

கணினியின் திரையை வெறித்துக் கொண்டு இருந்தவன் முன் வந்து நின்றான் ஆனந்த்.

“சார், படத்தோட புரொடக்ஷ்ன் வேலையெல்லாம் ஆரம்பமாகிடுச்சு. பூஜை வைக்கணும். எப்ப வைக்கலாம்னு உங்க கிட்ட கேட்க வந்தேன். ஆனா… ” என்று பேசிக்கொண்டிருந்தவன் நீரூபனின் முகத்தை கவனித்து பேச்சை நிறுத்தினான்.

அவன் அமைதியாகவும் நிமிர்ந்து பார்த்த நீரூபன், “வர்ற வாரத்தில் நல்ல நாள் பார்த்து வைக்க சொல்லு ஆனந்த். இதெல்லாம் கேட்டுகிட்டு, சில முடிவுகளை அங்கங்க இருக்குறவங்க எடுத்துட்டு ஓகேவான்னு கேளுங்க. எல்லா முடிவையும் நானே எடுக்கணும்னா என்னை எத்தனை க்ளோனிங் பண்ணுறது?” என்று சலித்தான்.

அவன் பேசிய விதமே ஆனந்துக்கு புதிது என்பதால் அவன் எந்த எதிர்வாதமும் புரியாமல் அறையை விட்டு வெளியேறினான்.

சற்று நேரம் தனிமையில் இருந்த நீரூபன் ஏதோ முடிவு செய்தவனாக ஆனந்தை அழைத்தான்.

“சொல்லுங்க சார்” என்று வந்தவனிடம்,

“சாரிப்பா நான் வேற யோசனையில் இருந்தேன். உன்கிட்ட எதுவும் ஹார்ஷா பேசி இருந்தா மனசுல வச்சுக்காத.” என்றான்.

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

“அதெல்லாம் இல்ல சார். ஆனா…”என்று இழுத்தவன்,

“உங்க ஃபேமிலி மேட்டர்ல நான் தலையிட விரும்பல. இருந்தாலும் பெரிய சார் வந்துட்டு போனதா ஆபிஸ்ல சொன்னாங்க. எதுவும் பிரச்சனையா சார்?” என்று அக்கறையாக விசாரித்தான்.

அவனுக்கு நீரூபன் என்ன பதில் சொல்ல முடியும்? உன் தோழியை மறந்து விட்டு என் தந்தை காட்டும் பெண்ணை திருமணம் செய்தால் தான் என் தங்கைக்கு காதல் கைகூடும் என்றா?

ஆனந்துக்கு இந்த வேலையோ, அவன் கனவோ, ஏன் இந்த உலகத்தில் எதுவுமே பூமிகாவுக்கு முன்னால் பெரிதல்ல எனும்போது அவனிடம் இதை சொல்வதும் அவனது ராஜினாமா கடிதத்தை பெறுவதும் ஒன்று தான்.

ஒரு பெருமூச்சை வெளியிட்டு, “நேத்ரா கல்யாண விஷயமா பேச வந்தார்.” என்று கூற,

“ஒத்துகிட்டாரா சார்? வசீகரன் சார் உங்க முன்னாடி நார்மலா இருந்தாலும் வெளில அவர் கிட்ட நிறையவே பதற்றம் தெரியுது. இந்த ஒரு இஸ்யூ சால்வ் ஆனா போதும். அவர் தீயா இறங்கிடுவார்.” என்று உற்சாகமாக பேசினான்.

அமைதியாக தலையசைத்த நீரூபன், “அவர் சில கண்டிஷன் போடுறார் ஆனந்த். அதெல்லாம் செய்தால் தான் சம்மதிப்பாராம்.” உள் விஷயங்களை மறைத்து மேலோட்டமாகக் கூறினான் நீரூபன்.

“சார்… தங்கச்சி வாழ்க்கை சார். தலையை கேட்டா கூட கொடுக்கலாம். யார் கேட்கறது அப்பா தானே! கண்டிப்பா உங்களுக்கு பாதகமா எதுவும் கேட்டு இருக்க மாட்டார். அவர் கேட்டதை செய்ய நம்ம பிளான்ல சில மாற்றங்கள்… சில என்ன? பல மாற்றங்கள் வந்தாலும் பரவாயில்ல சார்.” என்று மனதில் தோன்றியதைக் கூறினான்.

“ஹ்ம்ம்… பார்ப்போம் ஆனந்த். சில நேரம் நம்ம அப்பாவே ஆனாலும் அவர் சாதாரணமா நினைத்து கேட்பது நமக்கு உயிர் வேதனையா இருக்கலாம் இல்லையா?” என்று தாடையை கையால் நீவியபடி சிந்தனையுடன் பேசினான் நீரூபன்.

“ஆனா தங்கச்சி வாழ்க்கை, வசீகரன் சார் மாதிரி ஒரு மாப்பிள்ளை. இதெல்லாம் முன்னாடி வரும் போது அந்த வேதனை குறையாதா சார்? அத்தனை பெரிய விஷயமா கேட்டுட்டார்?” என்று வருத்தமாக வினவினான்.

“விடு. யோசிச்சா முடிவுக்கு வர முடியாது. நீ சொல்றது தான் சரி. தங்கை வாழ்க்கை, வசி மாதிரி மாப்பிள்ளை. எதை வேணாலும் தியாகம் பண்ணலாம். நீ போய் உன் வர்க் பாரு.” என்று கூறி கைபேசியுடன் வெளியே கிளம்பிச் சென்றான்.

அவன் சென்ற பின்னும் கூட நகராமல் அதே இடத்தில் நின்றிருந்த ஆனந்த் மனதில் முதல் முறையாக அபாய மணி அடித்தது.

‘கடைசியா என்ன சொல்லிட்டு போனார்? எதை வேணாலும் தியாகம் பண்ணலாமா? அப்படி அவங்க அப்பா எதை தியாகம் பண்ண சொல்லி கேட்டிருப்பார்? தொழிலா? அரசியல் கனவா? புதுசா ஆரம்பிச்ச என்.ஜி. ஓ வா? இல்ல வேறயா? கடவுளே என்னவோ இருந்தாலும் இவருக்கும் பூமிக்கும் இடையில் எந்த குழப்பமும் வராம இருக்கணும்.’ என்று மனதில் வேண்டிக்கொண்டவனுக்கு தெரியாது நீரூபன் எடுத்த முடிவுக்கு தன் வார்த்தைகளே அடித்தளமாக அமைந்து தன் தோழியின் மன வேதனைக்கு வழி வகுக்கும் என.

தன் தங்கையின் அலுவலகம் நோக்கி சென்று கொண்டிருந்த நீரூபனின் மனம் தெளிவாக இருந்தது.

காலை முதலே அவனை வாட்டி எடுத்த சஞ்சலங்கள் நீங்கப் பெற்றவனாக தங்கையை சந்திக்கச் சென்று கொண்டிருந்தான்.

வசீகரனை நேத்ராவின் அலுவலகம் வந்துவிட பணித்திருந்தான். நீரூபனின் வருகைக்காக கார் பார்க்கிங்கில் காத்திருந்தான் வசீகரன்.

“உள்ள போகாம இங்க என்ன பண்ற?” என்று உரிமையாக கடிந்து கொண்ட நீரூபனிடம்,

“அவ இப்பல்லாம் லவ்வாவே பேசுறது இல்ல மாமா. இந்த வேலையை முடிச்சியா? அந்த மீட்டிங் என்ன ஆச்சுன்னு ரொம்ப படுத்துறா. அதான் உங்க கூடவே உள்ள வந்தா எந்த கேள்வியும் கேட்க மாட்டா.” என்று சிரித்துக் கொண்டே கூறியவனிடம்,

“இதை நம்ப நான் பைத்தியமா? அண்ணா வந்தா கூட்டிட்டு வான்னு அவ உன்னை செக்யூரிட்டி வேலை பார்க்க வச்சிட்டா, அதை மறைக்க என்னென்ன கதை சொல்ற பாரு நீ!” என்று அவன் தோளில் கை போட்டு அழைத்துச் சென்றான் நீரூபன்.

“உங்களுக்கு உங்க தங்கை பத்தி இந்த அளவு துல்லியமா தெரிஞ்சிருக்கும்ன்னு எனக்கு மண்டையில் மணி அடிக்காம போயிடுச்சு மாமா. இல்லன்னா இன்னும் கொஞ்சம் பெட்டரா டிரை பண்ணி இருப்பேன்.” என்றான் வசீகரன்.

மகிழ்ச்சியாக அவனுடன் சிரித்துக் கொண்டே வந்த நீரூபனின் முகம் சடுதியில் மாறியது.

துணி கொண்டு துடைத்தார் போல அவன் முகத்தில் இருந்த உணர்ச்சிகள் மறைந்து கடுமையும் கோபமும் குடி கொண்டது.

பேசிக்கொண்டே வந்தவர் அமைதியானது கண்டு அவர் முகம் பார்த்த வசீகரனுக்கு பேரும் அதிர்ச்சி.

இப்படி நீரூபனை அவன் பார்த்ததே இல்லை எனலாம்.

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

“மாமா என்னாச்சு?” என்று நடையை நிறுத்தி அவனை விசாரித்தான்.

“ஒன்னும் இல்ல நீங்க வாங்க மாப்பிள்ளை.” என்று மரியாதையோடு அவன் அழைக்க வசீகரனின் மனம் மேலும் குழப்பம் கொண்டது.

நகர மறுத்த கால்களை கட்டி இழுக்காத குறையாக தங்கையின் அலுவலக அறைக்குள் நுழைந்த நீரூபன், அங்கிருந்த பூமிகாவை கண்டுகொள்ளாமல் நேராக தங்கையை அணைத்துக் கொண்டான்.

திடீரென அண்ணன் வந்து அணைத்ததும் நேத்ரா புரியாமல் விழிக்க,

“என்ன கல்யாணப் பொண்ணு, பார்த்து… பார்த்து… கண்ணு வெளில வந்துடப் போகுது. அப்பறம் மாப்பிள்ளை உன்னை வேண்டாம்னு சொல்லிடப் போறாரு” என்று கேலி செய்தான்.

அவன் சொன்ன வாக்கியத்தில் இருந்து அவர்கள் திருமண உறுதி, வசீகரன் தான் மாப்பிள்ளை என்பது அங்கிருந்த மூவருக்கும் புரிய, நேத்ராவும் வசீகரனும் சிறகில்லாமல் வானில் பறந்தனர்.

பூமிகா உற்சாகமாக அவ்விருவரையும் வாழ்த்தி விட்டு, “மாமா எப்படி மாமா திடீர்னு? பெரிய மாமா ஓகே சொல்லிட்டாரா?” என்று நீரூபனின் கையைப் பற்றிக் கொண்டு வினவினாள்.

அவன் அவளது கை தன் கையுடன் இணைத்திருப்பதை ஒருவித வெறுமையான பார்வை பார்த்தான். பின் அவளை அங்கிருந்த சோஃபாவில் அமருமாறு கை காட்டிவிட்டு தங்கையிடம் வந்தான்.

“இன்னிக்கு நீயும் நானும் வீட்டுக்கு போய் அப்பாவை பார்க்கணும் நேத்ரா. அவர் கல்யாணத்துக்கு சம்மதம்னு உன்னை பார்த்து சொன்னா தான் எனக்கு நிம்மதி. சொல்லப் போனால் இன்னொரு மாதத்திலேயே கல்யாணம் நடக்கவும் வாய்ப்பு இருக்கு.” என்று கூற,

வசீகரன், “எங்க வீட்டில் பேசணுமே மாமா.” என்றான் யோசனையாக.

“அதெல்லாம் என்னோட வேலை. நான் எல்லாரையும் பார்த்துக்கறேன்.” என்று நீரூபன் கூற,

“ஆமா அண்ணா. மாமா எல்லாரையும் சரி பண்ணிடுவார். பெரிய மாமாவையே சம்மதிக்க வச்சுட்டார். நேத்ரா அண்ணிக்காக உலகத்தையே கூட தன் தோள்ல தூக்குவார்.” என்று அவன் தோளில் சாய்ந்தாள்.

தன் தோள் சாய்ந்தவளை கையாலாகாத பார்வை பார்த்தவன் ஏதும் பேசாமல் அமைதியானான். அவனது இந்த அமைதியை நேத்ராவோ வசீகரனோ கவனிக்காமல் இருக்க அவனது தோளில் இருந்த அந்த பைங்கிளி மட்டும் அவன் மாற்றம் உணர்ந்து விலகி நின்றாள்.

அவள் அவனை ஆழமாக நோக்க, அவளது பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தலையை திருப்பிக் கொண்டான் நீரூபன்.

“சரி நான் ஆபிஸ் போயிட்டு முக்கியமான வேலையெல்லாம் சீக்கிரமா முடிக்க கேலண்டரில் அப்டேட் பண்ணுறேன். நீங்க ரெண்டு பேரும் வீட்டுக்கு போய் கன்பார்ம் பண்ணிட்டு சொல்லுங்க.” என்று வசீகரன் விடை பெற்றான்.

கிளம்பும் முன் தன் காதல் நிறைவேற காரணமாக இருந்த நீரூபனிடன் நன்றியுரைக்க அவன் மறக்கவில்லை.

நேத்ரா பூமிகாவிடம்,

“நீயும் எங்க கூட வீட்டுக்கு வர்றியா பூமி, கையோட உங்க விஷயத்தையும் பேசி முடிச்சிடலாம்.” என்று கேலியாக கூற, நீரூபன் முகத்தில் கலவரம் பிறந்தது.

அதனை தங்கை தவற விட, அவனையே பார்த்திருந்த நங்கையவள் கண்டுகொண்டாள்.

நீரூபன் அமைதியாக நின்றிருக்க, “நீங்க கிளம்புங்க அண்ணி. வீட்டுக்கு போய் பெரிய மாமாவை பாருங்க. நானும் அம்மா கிட்ட இந்த சந்தோஷமான விஷயத்தை சொல்றேன்.” என்று தன் கைப்பையை எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.

“என்ன அண்ணா இவ சட்டுன்னு கிளம்பி போறா. நீங்களும் நிறுத்தாம வேடிக்கை பார்த்துட்டே இருக்கீங்க.” என்று அண்ணனிடம் கேட்டுவிட்டு அவன் பதில் பேசாமல் பூமிகாவையே பார்த்திருப்பதைக் கண்டு,

“அண்ணா எதுவும் பிரச்சனையா?” என்று கேட்டாள்.

‘இவளிடம் உண்மையைக் கூறினால், ‘என் காதலுக்காக உங்க காதலை தியாகம் செய்ய வேண்டாம். நானே வசீகரனுக்கு சொல்லி புரிய வைக்கிறேன்’னு எதையாவது செய்வாள். வாயே திறக்கக் கூடாது’ என்ற முடிவுக்கு வந்தவன்,

“அவ தான் சொல்லிட்டு போறாளே! நாம வீட்டுக்கு போக வேண்டாமா? அவளை நிறுத்தி வச்சு என்ன பண்ணப் போறோம்?” என்று இலகுவாக அதனை தவிர்க்க எண்ணினான்.

“இல்லையே! உங்க காதல் விஷயத்தை வீட்டுல சொல்லலாம்னு சொன்னேன். அவ நிற்காம ஓடுறா. நீங்க தடுக்காம அவளையே பார்த்துட்டு இருக்கீங்க! என்னவோ சரி இல்ல.” என்று அவன் முன்னே கையைக் கட்டிக் கொண்டு வினவினாள்.

“உன் குட்டி மூளையில் உன் கல்யாண விஷயம் மட்டும் வச்சு சந்தோஷமா இரு. எங்க காதல், கல்யாணம் எல்லாம் என்னோட விஷயம். நானே பார்த்துக்கறேன்.” என்று அவளது தலையில் அழுத்தி தன்னுடன் அணைத்துக் கொண்டான்.

“என் காதலுக்கு நீங்க ஹெல்ப் பண்ணினா மாதிரி நானும் பண்ணுவேன். அதெல்லாம் நீங்க தடுக்க முடியாது. இப்போதைக்கு உங்க விஷயத்தை நான் எடுக்கல. ஆனா கண்டிப்பா அப்பா கிட்ட பேசி நான் ஓகே வாங்கித் தருவேன்.” என்று சலுகையாக அவள் கூற வெறுமையாக அவன் உதடு வளைந்தது.

தங்கையுடன் வீட்டிற்கு சென்றவனுக்கு வாயிலேயே அன்னையின் அணைப்பும் கண்ணீரும் பரிசாக கிடைத்துவிட, அன்னையைக் கண்டதும் அவரை பூமிகா சமாதானம் செய்ததெல்லாம் நினைவுக்கு வந்து அவனை இம்சித்தது.

மகனையும் மகளையும் கண்ட திருமூர்த்தி மகனை கேள்வியாக நோக்க, அவன் விழி மூடித் திறந்து தன் சம்மதத்தை தெரிவிக்க விரிந்த புன்னகையுடன் தன் மகளின் காதலுக்கு பச்சைக் கொடி காட்டினார் அந்த கட்சித் தலைவர்.