அடங்காத அதிகாரா 48
Copyright ©️ 2019 - 2025 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அதிகாரம் 48
வாழ்க்கையில் நாம் நினைப்பதெல்லாம் நடந்து விடுவதில்லை. அப்படியே நடந்தால் கூட நாம் அதிலே தன்னிறைவு அடைவதும் இல்லை.
தாகம் என்பது நீருக்கானது மட்டுமில்லையே! இந்த உலகில் எதை அடைய விரும்பினாலும் அது நமக்கு ஏற்படுத்தும் தாகத்தின் தாக்கம் தான் நமது செயல்களை நிர்ணயம் செய்கிறது. இது புரிந்த மனிதன் எந்த இடத்தில் தன்னிறைவு அடையவேண்டும் என்று புரிந்து வாழ்க்கையில் சிறக்கிறான்.
புரியாதவன், தாகத்தால் அலைந்து கானல் நீரின் பின்னே ஓடி ஓடிக் களைக்கிறான்.
இதில் அஞ்சனா இரண்டாவது ரகம். அவளுக்கு அரசியல் ஆசையும், அதிகார தாகமும் இருந்தது ஏற்றுக்கொள்ளக் கூடியதே! ஆனால் அதற்காக அவள் எதுவரை செல்லலாம் என்று நியதியை மீறி, தன் உடன்பிறந்தவனுக்கு எதிராகவே செல்ல நினைப்பது அவளுக்கு நன்மை பயக்காது என்பதை அறியாத அளவுக்கு அதில் மூழ்கிப் போயிருந்தாள்.
நீரூபன் வீட்டை விட்டுப் போய் பத்து நாட்கள் கடந்திருந்த நிலையில் அவனது செயல்களை கவனித்து அவளுக்கு தகவல் அளிக்க நம்பிக்கையான ஒருவனை பணியமர்த்தி இருந்தாள்.
அவனும் இந்த பத்து நாளில் வெளியிலிருந்தும், முடிந்தவரை அங்கங்கு கேட்டும் அஞ்சனாவுக்கு தகவல் சொல்லிக் கொண்டிருந்தான்.
அரசியல் ரீதியாக நீரூபன் எந்த காரியமும் செய்யவில்லை என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிந்ததும் சற்று ஆசுவாசம் அடைந்தவளுக்கு, நாகரத்தினத்தின் செயல் தான் எரிச்சலை வரவழைத்தது.
தந்தையிடம் சொல்லி வீட்டுப் பொறுப்பை அவள் தலையில் கட்டிவிட்டு தன் அறையே கதி என்று அவர் கிடக்க, கட்சி வேலைக்கு நடுவே மளிகை, காய்கறி வாங்க, என்ன சமைக்க வேண்டுமென்று கேட்க, வீட்டின் வேலையாட்கள் அவளை அடிக்கடி அழைக்கத் துவங்கினர்.
இதைப் பற்றிய எந்த சிந்தனையும் இல்லாமல் இத்தனை ஆண்டுகள் இருந்தவளுக்கு புது தலைவலியாக அமைந்தது.
அவள் சொல்லும் உணவு வகைகள் அவளது தந்தையின் உடல்நலத்திற்கு உகந்ததாக இல்லை. அவருக்காக சமைக்கச் சொல்லும் உணவுகள் அஞ்சனாவுக்கும் ராக்கேஷுக்கும் ருசிக்கவில்லை. இதில் வேலையாட்கள் உணவு பட்டியல் வேறு! அவளுக்கு தலை கிறுகிறுத்தது.
இதை தன் கையிலிருந்து தட்டி விட அவளுக்கு இருக்கும் ஒரே வழி நாகரத்தினம் மீண்டும் பொறுப்பை எடுத்துக் கொள்வதே.
ஆனால் அவரிடம் சென்று பேசுவதற்கு அவளது ஈகோ இடம் கொடுக்கவில்லை. எனினும் நினைப்பதை முடிக்க ஒரு வழி இருக்கிறது என்றால் அது தனது தம்பியும் நாகரத்தினத்தின் மகளும் இந்த வீட்டிற்கு திரும்பி வந்தால் மட்டுமே சாத்தியம் என்று எண்ணியவள் தம்பியின் நடவடிக்கையிலும் அரசியல் சார்ந்த எதுவும் தென்படாததால் அவனை மீண்டும் வீட்டிற்கு அழைக்க முடிவு செய்தாள்.
அவள் மட்டும் முடிவு செய்துவிட்டால் அவர்கள் இருவரையும் வீட்டுக்கு திருப்பி அழைத்து வந்து விட முடியுமா அன்று பேசிய பேச்சுக்கள் அனைத்தும் அவள் மட்டும் பேசிவிடவில்லையே அவளது தந்தையும் தானே அவளுக்காக சாதகமாக பேசினார் அதனால் நிரூபனை மறுபடி வீட்டிற்கு அழைக்க அவளது தந்தையின் உதவியும் தேவை என்பதையும் உணர்ந்து கொண்டவள் முதலில் அவரை சமாதானம் செய்யும் வழி என்ன என்று யோசிக்கலானாள்.
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
காலை உணவுக்காக திருமூர்த்தி உணவு மேசைக்கு வந்தபோது உணவு பண்டங்கள் அதிலிருந்தும் அருகில் மனைவி இல்லாததால் தனது மனைவியை தேடினார்.
அவரது செயலை கவனித்துக் கொண்டே உள்ளே நுழைந்த அஞ்சனா “யார தேடுறீங்க? அவங்களுக்கு உங்களை கவனிக்கிறத விட அவங்க பொண்ணு வீட்டை விட்டு வெளியில் போனது தான் கஷ்டமா இருக்கு. நீரூபனும் நம்ம கிட்ட ஏதோ சவால் விட்டுட்டு போயிட்டான். ஆனால் அது மாதிரி எதுவும் நடந்துக்கல. இவங்களும் முன்னாடி மாதிரி இல்ல. பேசாம அவங்களுக்காகவாது நீரூபன் கிட்ட பேசி அவனையும் நேத்ராவையும் வீட்டுக்கு கூட்டிட்டு வாங்கப்பா” என்று தந்தையிடம் தம்பிக்கும் சாதகமாக பேசுவது போல பேசினாள்.
முருகப்பன் அண்ணனிடம் பேசியதிலிருந்து தன்னைச் சுற்றி நடக்கும் அனைத்தையும் மிகவும் கவனத்துடன் கூர்ந்து கண்காணித்துக் கொண்டிருந்த திருமூர்த்திக்கு மகள் பேச்சில் உண்மையும் தாண்டி அவளுக்கு தேவையான ஏதோ ஒன்று இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிந்தது.
“நானா அவனை போகச் சொன்னேன், இப்போ நான் எப்படி அவனை கூப்பிட முடியும்? கூப்பிட்டா அவன் நேத்ரா கல்யாணத்தை பகடைக்காயா பயன்படுத்துவான். எனக்கு அதுல விருப்பம் இல்ல” என்று எங்கோ பார்த்தபடி கூறிவிட்டு, தட்டில் இரண்டு இட்லிகளை வைத்து சாம்பார் எடுத்து ஊற்றலானார்.
“அப்பா அவளுக்கு பிடிச்சிருக்குன்னு சொல்றா. அந்த பையனும் நம்ம உள்ளாட்சி தேர்தல்ல ஜெயிக்கிறதுக்கு பெரிய அளவுல உதவியா இருந்த கம்பெனிய நடத்திக்கிட்டு இருக்கான். நீங்க வேண்டாம்னு சொல்ல எந்த காரணமுமே இல்லப்பா” என்று அவர் மீது எழுந்த எரிச்சலை மறைக்காமல் குரலில் காட்டிவிட்டாள் அஞ்சனா.
“என்னம்மா அவ காதலுக்கு ரொம்ப சப்போர்ட் பண்ற? விட்டா நீயே உன் கல்யாணம் நடக்க என்ன செய்தியோ அதையே செய்ய சொல்லி அவளுக்கு ஐடியா கொடுப்ப போல இருக்கு” என்று எரிச்சலை அவரும் அப்பட்டமாகவே காட்டினார்.
“காதலிச்சா என்னப்பா தப்பு? ராகேஷை நான் காதலிச்சேன். ஆமா உங்களை கட்டாயப்படுத்தி, கையை அறுத்துப்பேன்னு பயமுறுத்தி தான் கல்யாணத்துக்கு ஒத்துக்க வச்சேன். இதோ கல்யாணம் இத்தனை வருஷம் ஆகுது. நாங்க நல்லா தானே இருக்கோம். அவரும் உங்களுக்கு அரசியல்ல உதவியா தான இருக்காரு? அதே மாதிரி நேத்ராவும் அந்த பையன் வசீகரனும் இருந்துட்டு போகட்டுமே! நீங்க ஏன் தடுக்குறீங்க?” என்று எங்கே அவர் விருப்பப்படி சந்திரனை மருமகனாக கொண்டு வந்து இந்த வீட்டில் இன்னொரு அரசியல் போட்டியாளரை உருவாக்கி விடுவாரோ என்ற கோபத்தில் வேகத்துடன் பேசினாள்.
“எல்லாம் அவங்க அவங்களுக்கு தகுந்த மாதிரி பேசுறீங்க. உனக்கு உன் காதல் முக்கியம், உன் வாழ்க்கை முக்கியம், உன் விருப்பப்படி நீ முடிவு எடுத்துக்கிட்ட. அவளுக்கு அவ காதல் முக்கியம், அவங்க அண்ணன் சப்போர்ட் பண்றான். அப்போ அவளுக்கு பிடித்தது தான் அவளுக்கும் நடக்கும். பெத்தவன் நான் என் பிள்ளைகளுக்கு எனக்கு புடிச்ச மாதிரி ஒரு கல்யாணம் பண்ணி பாக்கணும்னு நினைக்கிறது அவ்வளவு பெரிய தப்பா?” என்று தன் பிள்ளைகளின் திருமணத்தை தன் விருப்பப்படி நடத்த முடியவில்லை என்ற இயலாமையை குரலில் தேக்கி கோபத்துடன் கேட்டபோது அவர் கண்களில் கண்ணீர் துளிர்த்து விட்டது.
“ஏன் நாங்க ரெண்டு பேரும் மட்டும் தான் உங்களுக்கு பிள்ளை? உங்க பையன் இல்ல? அவனுக்கு உங்களுக்கு புடிச்ச மாதிரி கல்யாணம் பண்ணி அழகு பாருங்க. யார் வேண்டானா? அவன் தான் யாரையும் காதலிக்கலையே! நேத்ராவுக்கு அவளுக்கு புடிச்ச பையனையே கல்யாணம் பண்ணி வைங்க.
நம்ம வீட்ல இந்த நேரம் கல்யாணம் பண்ணா நல்லது. இன்னும் நாலு மாசத்துல எலக்சன் வேற வருது. எல்லா கட்சி ஆளுங்களையும் மத்திய அரசில் இருக்கிற அமைச்சர்களையும் கூப்பிட்டு நம்மளோட பலத்தை காட்டுறதுக்கு இந்த கல்யாணம் ஒரு விதத்துல உதவியா கூட இருக்கும். அதுவும் இல்லாம அந்த பையன் கேம்பெயின் மேனேஜ்மென்ட் கம்பெனி வச்சிருக்கான்னு தெரிஞ்சா மத்த கட்சிக்காரன் நம்மகிட்ட வம்பு இழுக்க கொஞ்சம் யோசிப்பான்.” என்றாள் அழுத்தமாக.
மகளின் பேச்சில் இருக்கும் சாதகமான விஷயங்கள் புரிந்தாலும் ஏனோ தான் பார்த்து, பேசி, நிச்சயம் செய்து, தான் முன் நின்று நடத்துவது போன்ற, ஆளுமையான, அதே நேரம் அன்புடன் பார்த்து பார்த்து செய்யும் எதையும் செய்ய முடியாமல் போகுமே! என்ற வருத்தம் அவரை ஆட்கொண்டது.
“இங்க பாருங்கப்பா அரசியல்ல நீங்க பாக்காதது எதுவும் இல்ல. அவன் ஏதோ அன்னைக்கு கோவத்துல பேசிட்டு போயிட்டான். இப்பயே அவன் பத்து நாளா வெளில தங்கி இருக்கிறது மீடியாவுக்கு தெரியாது. தெரிஞ்சது அப்படின்னா இத வச்சு நம்ம வீட்டுக்குள்ள அவங்க அரசியல் பண்ண ஆரம்பிச்சிடுவாங்க. இந்த நேரத்துல அதெல்லாம் தேவையில்லாத தலைவலி.
அதே நேரம் நேத்ராவும் அந்த பையனும் எங்கேயாவது வெளியே சுத்தி அதுவும் மீடியா கண்ணுல பார்த்தா கேட்கவே வேண்டாம். அதுக்கப்புறம் நீங்க இந்த கல்யாணத்தை நடத்தினாலும் உங்களுக்கு மரியாதை இருக்காது. நான் உங்களோட நல்லதுக்காகவும் கட்சியோட நல்லதுக்காகவும் சேர்த்து யோசித்து தான் சொல்றேன்.
அந்த பையனை கூப்பிட்டு பேசுங்க. அவங்க கல்யாணத்துக்கு நீங்க பச்சைக்கொடி காட்டினாலே தம்பி இறங்கி வந்துருவான். அவன் அப்புறம் வீட்டுக்கு கூப்பிடுவதும் ஈசி தான். இவங்களும் கொஞ்சம் சமாதானம் ஆவாங்க.” என்று எரிச்சலாக முகத்தை வைத்துக் கொண்டே கடைசி வரியை கூறி முடித்தாள்.
இதில் தன் மகளுக்கு என்ன லாபம் என்று புரியவில்லை என்றாலும் அவள் சொல்வதில் இருக்கும் நிதர்சனங்கள் புரியாமல் இருக்க அவர் ஒன்றும் சிறு குழந்தை அல்லவே!
மகள் குறிப்பிட்டது போல வசீகரனை அழைத்து பேசுவதற்கு முன்னால் தன் மகனிடம் பேச வேண்டும் என்று விரும்பினார். அவனை அவனுடைய அலுவலகத்திலேயே சென்று சந்திக்கலாமா? அல்லது தன் அலுவலகத்திற்கு வரச் சொல்லலாமா? என்று யோசனையுடன் கடைசி விள்ளல் இட்லியை அவர் வாயில் வைத்த போது,
“என்னப்பா பேசிடுவீங்க தானே?” என்று மீண்டும் ஒருமுறை அழுத்தம் கொடுத்த மகளை சற்று எரிச்சலுடன் நோக்கியவர்,
“என்னை யோசிக்க விடும்மா. நீ சொல்லிட்டா அத அப்படியே நான் செஞ்சிட முடியுமா? நீ என்னதான் யோசிச்சு சொல்ற, என் நல்லதுக்கு சொல்ற, கட்சிக்கு நல்லதுக்கு சொல்றன்னு ஆயிரம் சொன்னாலும் கட்சிக்கு தலைவரும் நான் தான். இந்த வீட்டுக்கு தலைவரும் நான் தான். நான்தான் முடிவு எடுக்கணும். நான் யோசிச்சு முடிவெடுக்கறதுக்கு நேரம் எடுத்துக்க தான் செய்வேன். என்னை நீ அவசரபடுத்துற வேலையெல்லாம் வச்சுக்காத. சாப்டியா? உன் புருஷன் சாப்பிட்டாரா? அடுத்து உங்க வேலைய போய் பாருங்க.” என்று முகத்தில் அடித்தார் போல சொல்லி எழுந்து கையலம்பி விட்டு வீட்டிலிருந்து வெளியேறினார்.
போகும் தன் தந்தையை இயலாமையுடன் நோக்கியவள்,
‘ஏற்கனவே தம்பிக்காரன் எனக்கு போட்டிக்கு வந்து நிக்கிறேன்னு ஆடிட்டு இருக்கான். சொன்னானே தவிர இந்த நிமிஷம் வரைக்கும் வரலன்னு நான் நிம்மதி பட்டுட்டு இருக்கேன். எங்க இவர் பொண்ணு வந்துருவாளோ அப்படின்னு அவள் மேலயும் ஒரு கண்ணை வைத்து நான் சுத்திகிட்டு இருக்கேன். இவர் என்னடானா கட்சியில இவருக்கு அடுத்து இருக்கிற மூத்த தலைவரோட மகனை பொண்ணுக்கு கட்டி வைப்பாராம். அடுத்து அவன் வந்து நான் தான் இந்த வீட்ல அரசியல் வாரிசு நிக்கவா? எல்லாருக்கும் விட்டு குடுத்துட்டு நான் என்ன விரல் சூப்பவா?’ என்று எரிச்சலுடன் எண்ணியபடி ஹாட் பாக்ஸில் இருந்த பூரியையும் கிழங்கையும் எடுத்து வைத்து உண்ணத் துவங்கினாள்.
இவள் என்ன நினைத்து அவர் மனதில் இந்த விஷயத்தை விதைத்தாளோ, அது அவளது உடன்பிறப்புகளில் ஒருவர் வாழ்வில் நல்ல திருப்பத்தையும் இன்னொருவர் வாழ்வில் எதிர்பாரா மாற்றத்தையும் கொண்டுவரக்கூடிய ஒரு முடிவை அவர் எடுக்க காரணமான விருட்சமாக அமையும் என்று அவளுக்கு தெரிந்திருக்கவில்லை.
தெரிந்திருந்தாலும் அவள் அதை பற்றி பெரிதாக கண்டு கொண்டிருக்கவும் மாட்டாள். அவளுடைய எண்ணம் என்றுமே அவளைப் பற்றியது தானே தவிர, தன் குடும்பம், தன் வீடு என்ற எண்ணமெல்லாம் அவளுக்கு ஏற்பட்டதே இல்லையே! ராகேஷையும் அவள் அப்படித்தானே வைத்திருக்கிறாள்.
மகளது பேச்சை அசை போட்டபடி காரில் பயணித்துக் கொண்டிருந்த திருமூர்த்தி ஓட்டுனரிடம் நீரூபனின் அலுவலகத்திற்கு வாகனத்தை செலுத்தும் படி ஆணையிட்டார்.
“தம்பி இப்ப சிட்டிக்குள்ள இருக்கிற ஆபீஸ்ல தாங்க இருப்பார். முன்ன மாதிரி பண்ணை ஆபீஸ்க்கு போறது இல்லைங்க ஐயா. நம்ம வர்றத கூப்பிட்டு சொல்லிறட்டுங்களா?” என்று பணிவுடன் கேட்டவரிடம்
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
“என் பையன பாக்குறதுக்கு நான் அப்பாயிண்ட்மெண்ட் வாங்க வேண்டிய தேவை இல்லை. நீ வண்டியை ஆபீஸ்க்கு ஓட்டு.” என்று யார் மீதோ இருந்த கோபத்தை தனக்கு விசுவாசமான தொழிலாளிடம் காட்டினார் திருமூர்த்தி.