அடங்காத அதிகாரா 47
Copyright ©️ 2019 - 2025 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அதிகாரம் 47
அந்த அதிகாலை வேளையில் வேகமாக கிளம்பிக் கொண்டிருந்த தன் மகளை எதுவும் பேசாமல் அவளது செயல்களை வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தார் அர்ச்சனா.
தாயின் பார்வை தன்னையே தொடர்வதை அறிந்தாலும் அவசரமாக வெளியே செல்ல வேண்டும் என்பதால் தயாராகி கீழே இறங்க இருந்த பூமிகாவை கைப்பற்றி நிறுத்தினார்.
“எழுப்பினாலும் எழுந்துக்க மாட்ட, எழுந்தாலும் பாட்டு போட்டு ஆடாம வேற எதுக்கும் அசைய மாட்ட. இன்னிக்கு என்ன எலி எக்ஸ்பிரஸ் வேகத்துல ஓடுது?” என்று கேட்க,
“எனக்கு நல்ல புத்தி வந்துடுச்சு மம்மி. நான் சாமி கும்பிட கோவிலுக்கு போறேன். அதான்.” என்று உதட்டை இழுத்து வைத்து அவள் செய்த புன்னகையில் அர்ச்சனா மயக்கம் போடாதது தான் குறை.
“யாருக்கு.. உனக்கு.. நல்ல புத்தி வந்துடுச்சு.. அதை நான் நம்பணும்? ஏய் சும்மா படம் காட்டாத டி. எலி ஏதோ எக்ஸ்டிராடினரி பிளானோட இருக்குன்னு தெரியாத அளவுக்கு முட்டாளா நானு?” என்று அவள் கன்னம் கிள்ள,
“ஆவ்வ் அம்மா வலிக்குது. விடு. நான் ரத்தினம் அத்தையை பார்க்க தான் கோவிலுக்கு போறேன். போதுமா? உண்மையை சொல்லிட்டேன்ல கன்னத்தை விடு மா” என்று அவர் விரல்களில் மாட்டிக்கொண்டு சிவந்து போயிருந்த தன் பட்டுக் கன்னத்தை தேய்த்துக் கொண்டாள்.
“அண்ணியை பார்க்க போறியா?”என்ன விஷயம் என்று கேட்க,
நீரூபனும் நேத்ராவும் வீட்டை விட்டு வந்தது, இதுவரை அவர்கள் வீட்டுக்கு திரும்பாததால் கண்டிப்பாக நாகரத்தினம் வருத்தத்தில் இருப்பார் என்று கூறிய மகளை தலையில் அன்புடன் வருடினார் அர்ச்சனா.

“பெத்தா மட்டும் பிள்ளையாகாது, வளர்த்தா மட்டும் உரிமை வந்துடாது. நீ என் மருமகனை கட்டிக்கிட்டா எங்க ரத்தினத்தை பிரிச்சு பார்ப்பியோன்னு மனசோரம் லேசா தோணும். ஏன்னா அவங்க உயிரா வளர்த்தவனை பிரிச்சா அவங்க உயிரையே பிரிச்சது மாதிரி. எங்க அந்த தப்பை அன்பு, காதல்ன்ற பேர்ல செய்துடுவியோன்னு மனசு படப்படக்கும். ஆனா உன்னை நான் சரியா தான் வளர்த்திருக்கேன்னு பெருமைப்பட வச்சுட்ட. போயிட்டு வா.” என்று அவளை அனுப்பி வைத்தார்.
எப்பொழுதும் மகளிடம் சண்டைக்கு நிற்கும் அர்ச்சனா இன்று அவளை வாழ்த்தி பேசியது பூமிக்கே மகிழ்ச்சி வெள்ளம் பாய்ந்தது போல தான் இருந்தது.
அதே மகிழ்வுடன் அவள் வந்து நின்றது நீரூபனின் வீட்டிற்கு அருகில் இருக்கும் வெக்காளியம்மன் கோவிலுக்கு.
சிறு கோவிலாக இருப்பதால் நாகரத்தினத்தை யாரும் அடையாளம் கண்டு கொள்ள மாட்டார்கள் என்று நடந்தே கோவிலுக்கு வந்து செல்வார். அவருக்கென்று இருக்கும் காவலர்கள் சற்று தள்ளி இருக்கும் டீக்கடையில் நின்று விட்டு அவர் போகும்போது திரும்பிச் செல்வார்கள். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இதை வாடிக்கையாக கொண்டிருந்தார் நாகரத்தினம்.
அவரைப் பற்றி நன்கு அறிந்து வைத்திருந்த பூமிகா கோவில் வாயிலில் வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தாள்.
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
அந்த கோவில் வெளியில் இருந்து பார்க்க சிறியதாக இருந்தாலும் உள்ளே விசாலமாக இருந்தது. அன்று விசேஷ நாள் எதுவும் இல்லை என்பதால் கூட்டம் அதிகம் இருக்கவில்லை.
உள்ளே வந்தவள் நேராக கடவுளை தரிசனம் செய்து தன் மனதில் உள்ள கவலைகளையும் வருத்தங்களையும் கொட்டி தீர்த்தாள் கூடவே இன்று தான் செய்ய வந்திருக்கும் காரியம் நல்லபடியாக நிகழ்ந்து விட வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்தவள் அன்னையின் அருள் முகத்தை ஆழ்ந்த நோக்கினாள்.
குங்குமத்தை எடுத்து நெற்றியில் வைத்துக் கொண்டவள் நல்ல பிரகாரத்திற்கு வந்து தன் கண்களை கோவில் முழுவதுமாக சுழல விட்டாள் சற்று தொலைவில் இருந்த ஒரு தூணில் சாய்ந்து அமர்ந்திருந்தார் நாகரத்தினம் ஒரு வாரத்தில் ஒருவர் இத்தனை தூரம் துவண்டு இளைத்து விட முடியும் என்று சொன்னால் நம்புவதற்கு சிரமமாக இருக்கும் ஆனால் நாகரத்தினம் ஒரே வாரத்தில் பத்து வயது மூப்பேரியவராக காட்சியளித்தார்.
அவருக்கு அருகில் சென்று அமைதியாக அமர்ந்து கொண்டாள் பூமிகா தன் அருகே யாரோ வந்து அமர்வதை கூட அறியாதவராக எங்கோ வெறித்தபடி இருந்தார் நாகரத்தினம் அவர் முகத்தில் விரக்தியும் வெறுமையும் தாண்டவம் ஆடிக்கொண்டிருந்தது.
அதை கண்ணுற்ற பூமிகாவுக்கு நெஞ்சை யாரும் அறுப்பது போன்ற வலி ஏற்பட்டது தாயின் மூலம் ஓரளவே அவரைப் பற்றி அறிந்திருந்தாலும் இந்த குறுகிய காலத்தில் நீரூபன் பேசிய விஷயங்களில் பாதிக்கும் மேல் நாகரத்தினத்தை பற்றி தான் பேசி இருக்கிறான்
தன்னைப் பெற்ற தாய் இல்லையே என்று ஒருநாளும் அவன் மனதில் ஓரம் கூட தோன்றிடாத அளவுக்கு தன்னை கண்ணுக்குள் வைத்து வளர்த்ததாக பெருமை பேசிக் கொண்டிருப்பான். நேத்ராவை கூட தனக்குப் பிறகுதான் கவனிப்பார் அன்னை என்று சொல்லும் போது அவன் முகத்தில் தவழும் பெருமிதம் சொல்லில் அடங்காதது.
அப்பொழுது இருந்து நாகரத்தினம் என்றால் பூமி காவுக்கு தனி மரியாதை தான் பெற்ற பிள்ளை மேல் உயிரை வைத்து வளர்ப்பது இயல்புதான் ஆனால் இன்னொருவர் பெற்ற குழந்தையை தன் குழந்தைக்கு மேலாக வளர்ப்பது என்பது அத்தனை எளிதான விஷயம் இல்லை எந்தவித பாரபட்சமும் இல்லாமல் பொறாமை உணர்வும் இல்லாமல் கள்ளம் கவனமற்ற வெள்ளை மனம் கொண்ட ஒருவரால் மட்டுமே அது சாத்தியம் என்று அவரை பிரமிப்புடன் எண்ணியிருக்கிறாள்.
அப்படிப்பட்ட ஒரு பெண்மணியை இப்படி துவண்டு போய் பார்க்க அவளுக்கு மனதில் ரண வேதனை எழுந்தது.
மெல்ல அவரது வலது கையின் மேல் தன் கையை பதித்து அழுத்தம் கொடுத்து அத்தை என்று அழைத்தாள்.
இலக்கின்றி வெறித்துக் கொண்டிருந்த நாகரத்தினம் சுயவுணர்வு அடைந்தார்.
அருகில் அமர்ந்திருந்த தன் மருமகளைக் கண்டவர் கண்களில் ஒரு ஒளி பிறந்தது
“பூமிம்மா.. பாப்பா.. நீ எங்க டா இங்க?” என்று அவள் கன்னம் தொட்டு அன்புடன் வினவினார்.
“நான் வர்றது இருக்கட்டும் நீங்க என்ன ஒரே வாரத்துல ஆள் பாதியா போயிட்டீங்க?” என்று உரிமையுடன் கடிந்து கொண்டாள்.

“எனக்கு என்னடா நான் நல்லா தான் இருக்கேன். என் கவலையெல்லாம் என் பிள்ளைகளை பத்தி தான். அவங்க அப்பா கிட்டையும் அக்கா கிட்டயும் கோவத்துல பேசிட்டு கிளம்பி போயிட்டான். ஆனா அவன் மனசு அங்க இருக்குற என்னைத்தான் சுத்தி சுத்தி வரும். என்னால அவரை விட்டு வர முடியாதுன்னு அவனுக்கு தெரியும். அதே நேரம் அங்க நிம்மதியா இருக்க முடியாதுன்னு புரியும். என்ன விட மனசுல ரொம்ப வலியோட இருக்கிறது அவனா தான் இருக்கும்.” என்று கண்களுக்குள் தன் மகனை நினைத்துக் கொண்டு அவனையே பார்த்திருப்பவர் போல பேசிக் கொண்டிருந்தார் நாகரத்தினம்.
“இதே வார்த்தை தான் உங்க பையனும் சொன்னாரு. ரெண்டு பேரும் ஒரே மாதிரி தான் யோசிக்கிறீங்க. அப்படின்னா நீங்க ரெண்டு பேரும் விலகியெல்லாம் இல்ல.
உடல் ரெண்டும் தூரமா இருந்துட்டா விலகி இருக்கிறதா அர்த்தமா அத்தை? அவர் மனசும் எண்ணமும் உங்களையே தான் சுத்திக்கிட்டு இருக்கு. நீங்களும் நேத்ரா அண்ணிய விட அவர்தான் தேடிக்கிட்டே இருக்கீங்க. அவரு.. தான் மட்டும் ஜெயிக்கணும்னு ஆசைப்பட்டு அந்த வீட்டை விட்டு வரல. அவருடைய எண்ணம் ரொம்பவே பெருசானது. எந்த அளவுக்குனா, அவரால முடிஞ்சா ஒரு சொடுக்குல இந்த உலகத்தையே மாற்ற முடியும்னா அதுக்காக தன் உயிரை கொடுத்து கூட அதை செய்ய தயங்காதவரு” என்று பெருமை பொங்க கூறினாள் பூமிகா.
“அவன இந்த அளவுக்கு புரிஞ்சுகிட்ட நீ நாளைக்கு நான் இல்லனாலும் அவனை நல்லா பாத்துக்குவ அப்படின்ற நம்பிக்கை எனக்கு இருக்கு இனிமே நான் கவலைப்பட மாட்டேன்.” என்று கண்களில் விழுந்த நீரை அழுத்தமாக துடைத்துக் கொண்டு உதட்டில் புன்னகை ஒன்றை மலரச் செய்தார்.
“அத்தை உங்க பையனுக்கு இந்த உலகமே புரிஞ்சுகிட்டு கூட நின்னாலும் அவர் பக்கத்துல நீங்க இல்லனா எதுக்குமே அர்த்தம் இல்லை. அதனால இந்த மாதிரியெல்லாம் பேசாம தினமும் போன் பண்ணி உங்க பையன் கூட பேசுங்க. அவரும் பெரிய மாமாவும் தான் சண்டை போட்டு இருக்காங்க. நீங்களும் அவரும் இல்ல. நீங்க ஏன் அவருக்கு போன் பண்ணலன்னு எனக்கு தெரியல.
ஆனா அவரு உங்களுக்கு கூப்பிடாததுக்கு காரணம் அவரு தன்னோட வேலையை ஆரம்பிச்சதிலிருந்து சாப்பாடு தூக்கம் எதுவுமே இல்லாம அதுலயே முழுகி இருக்காரு. தப்பா நினைக்காம நீங்களே தினமும் அவரை கூப்பிட்டு பேசுங்க அத்தை” என்று அவனுக்காக அவனது தாயிடமே வேண்டுகோள் வைத்தாள்.
“அவன் கிட்ட பேச கூடாதுன்னுல்லாம் நான் நினைக்கல டா. என்ன பேசறதுன்னு தெரியல. அவன் அன்னிக்கு ஒன்னும் தப்பா கேட்டுடல நியாயமா தான் கேட்டான். அந்த அஞ்சனா பொண்ணுக்கு எங்க அவன் போட்டிக்கு வந்துருவானோன்னு பயம். அன்னைக்கே விட்டுக் கொடுத்தவன் இன்னைக்கு மட்டும் போட்டிக்கு வந்துருவானாங்கற எண்ணம் கூட அந்த பொண்ணுக்கு வரவே இல்ல. அவன் திடீர்னு இப்படி வந்து கேக்குறான்னா உள்ள ஏதோ பிரச்சனை நடக்குது அதை சரி பண்ண வரான்றது கூட அவளுக்கு புரியல. அவ தான் சின்ன பொண்ணு புரியலன்ன பரவால்ல.
ஆனா அவருக்கு புரிஞ்சு இருக்கணும்ல்ல. இந்த கட்சியை இத்தனை வருஷமா வச்சு பார்த்துக்கறாரு கட்சிக்கு முன்னாடி,அவரோட பதவிக்கு முன்னாடி,எதுவுமே ஒரு பொருட்டில்லன்னு இருந்தவரு, இன்னிக்கி மகளுக்காக எல்லாத்தையும் தூக்கி போடுறாருனு ரொம்ப வருத்தமா இருந்துச்சு. இதெல்லாம் நான் அவன் கிட்ட சொல்லவும் முடியாது. வேற என்ன பேசுவேன்? எப்படி ஆறுதல் சொல்லுவேன்? இல்ல நான் அங்க நல்லா தான் இருக்கேன்னு எப்படி பொய் சொல்றது? சொல்லு” என்று அவளிடமே கேள்வி எழுப்பிய அவருக்கு என்ன பதில் சொல்வது என்று அவளுக்கும் தெரியவில்லை.
“அதெல்லாம் தான் பேசணும்னு அவசியம் இல்ல அத்தை. இப்ப அவர் என்ன செய்யறார்ன்னு பேசலாம் அவர் சாப்பிட்டாரான்னு கேட்கலாம். ஆயிரம் தான் நாங்க இத்தனை பேர் சுத்தி இருந்தாலும் அம்மா நீங்க சாப்பிட்டியானு கேட்கிறப்ப மூணு நேரத்துல ஒரு நேரமாவது ஒழுங்கா சாப்பிடணும்னு உங்க மகனுக்கு தோனும்ல்ல?” என்று அவரது தாடையை பிடித்து ஆட்டி,
“அவருக்கு போன் பண்ணி பேசணும் சரியா? அதே போல நான் போன் பண்ணுவேன். எடுத்து நான் எவ்வளவு மொக்கை போட்டாலும் பொறுமையா கேட்கணும்.” என்று விளையாட்டாக அவள் சொன்ன விதத்தில் சிரித்துவிட்டார் நாகரத்தினம்
“உத்தரவு மகாராணி” என்று தாடையின் கீழ் கைவைத்து தலையை லேசாக தாழ்த்தி அவர் பதில் சொன்ன விதத்தில் பூமிகாவுமே கடகடவென சிரித்து விட்டாள்.
கோவிலில் உள்ளே நுழையும் போது நாகரத்தினத்தின் மனது எந்த அளவுக்கு வலியையும் வேதனையும் சுமந்து கொண்டு இருந்ததோ அது அத்தனையும் துணி கொண்டு துடைத்தார் போல இருந்த இடம் தெரியாமல் போக்கிவிட்டாள் பூமிகா.
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!