அடங்காத அதிகாரா 46

Copyright ©️ 2019 - 2025 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அதிகாரம் 46

கான்பரன்ஸ் அறை ஏசியின் உபயத்தில் ஊட்டியின் தங்கை போல குளுகுளுவென்று குளிர்ந்து போயிருந்தது.

கருப்பு நிற கால்சிராயும் பிஸ்கெட் வண்ண சட்டையும் அணிந்து காணும் கண்களை தன் வசம் இருக்கும் அழகுடன் எதிரில் இருந்த கான்பரன்ஸ் ரூம் ஸ்க்ரீனில் தெரிந்த முகங்களைக் கண்டு புன்னகைத்தான் நீரூபன்.

அந்த நிறுவனத்தின் தலைவர் தங்களுடன் வீடியோ கான்பரன்ஸ் முறையில் பேச விருப்பப்படுவதாக வந்த அழைப்பை ஏற்று நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் அதில் கலந்து கொண்டிருந்தனர் அவன் என்ன பேசப் போகிறான் என்று ஆவலாக அவர்கள் பார்ப்பதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருந்தன

ஒன்று இத்தனை பெரிய தொழிலதிபனும் மிகப்பெரிய அரசியல்வாதியின் மகனும் ஆன ஒரு பெரும்புள்ளி தங்களிடம் என்ன பேச போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவ இரண்டாவதாக அவர்கள் சமர்ப்பித்த தொழில் சம்பந்தமான கோப்புகள் பரிசீலிக்கப்பட்டு அவை ஒதுக்கப்பட்டு விட்டது அவர்களது தொழில் சார்ந்த பார்வை அல்லது நோக்கம் நிறுவனத்தின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப இல்லை என்ற காரணம் முன்வைக்கப்பட்டிருந்தது அப்படிப்பட்ட தங்களை ஏன் இவர் சந்தித்து பேச விரும்புகிறார் என்ற பரபரப்பும் குழப்பமும் அவர்கள் ஒவ்வொருவர் முகத்திலுமே தெள்ளத் தெளிவாக கூடிக் கொண்டிருந்தது

ஆரம்பத்தில் நீரூபன் மிகவும் தொழிற்சார்ந்த பேச்சுகளை தவிர்த்து இயல்பாக பக்கத்து வீட்டு இளைஞனின் உணர்வை கொடுத்தான்

“படிச்சு முடிச்சா எதோ ஒரு கம்பெனில மாசத்துக்கு இவ்வளவுன்னு சம்பளம் வாங்கி அதுக்குள்ள குடும்பம் நடத்துவது இல்ல,  குடும்பத்துக்கு உதவி செய்றதோ, இல்ல தன்னோட தேவைகளை தீர்த்துக்கொள்றதோ பலபேருடைய எண்ணமா இருக்கும்போது, நீங்க மட்டும் ஏன் தொழில் செய்யணும்னு நினைச்சீங்க?”என்று இயல்பாக கேட்டபடி கான்ஃபரன்ஸ் அறையில் இருந்த நீள் வட்ட மேசையில் சாய்ந்து நின்று கொண்டான்.

பலரும் தாங்கள் பதிலளிப்பதாக சமையல் செய்ய அதில் சிலரை மட்டும் குறிப்பிட்டு பேச அனுமதித்தான். மற்றவர்களுக்கு அடுத்த முறை வேறு கேள்விக்கு வாய்ப்பளிப்பதாக சிரித்தபடியே அவர்களை சமாதானமும் செய்தான்.

இயல்பாக அரை மணி நேரம் பேச்சு தொடர்ந்து பின் அவன் அவர்களிடம் பேச வந்த முக்கிய விஷயத்தை மெல்ல ஆரம்பித்தான்.

“உங்களோட அப்ளிகேஷன் எல்லாத்தையும் நான் பார்த்தேன். பல பேரு ஏற்கனவே இருக்கிற பிராண்டோட பிரான்சைசி தான் ஆரம்பிக்க ஆசைப்பட்டு இருக்கீங்க. ஏன் உங்களாலேயே ஒரு பிராண்ட் உருவாக்க முடியும் அப்படிங்கிற நம்பிக்கை உங்களுக்கே இல்லையா? இல்ல, எதுக்கு ரிஸ்க் எடுக்கணும் அப்படின்னு நினைச்சீங்களா?” என்றதும் பலரும் பதில் அளிக்க முன் வந்தனர்.

அதில் ஒருவரை அவன் தேர்ந்தெடுக்க அந்த இளைஞனும்,

“எல்லாருக்கும் தன்னுடைய பேர நிலை நிறுத்தி ஒரு வியாபாரமோ தொழிலோ செய்ய தான் அதிகபட்ச விருப்பப்படுவாங்க. ஆனா இங்க சமீபமா ஒரு பிராண்டுக்கு இருக்கிற வரவேற்பும் மரியாதையும் தனிப்பட்ட ஒரு மனிதனோட முயற்சியில வர்ற சிறு தொழிலுக்கு இல்ல.

நீங்களே கவனிச்சு பாத்தீங்கன்னா நிறைய பேரு ‘இந்த இடத்துக்கு போனேன்’, ‘இந்த பிராண்ட் வாங்கினேன்’,’இந்த பிராண்ட் ஹோட்டலில் சாப்பிட்டேன்’, ‘இந்த செயின் அப் ஹோட்டல்ஸ்க்கு போனேன்’ அப்படின்னு சோசியல் மீடியால பதிவு போடுவாங்க.

ஆனா தனிப்பட்ட ஒருத்தரோட உழைப்புல வந்த ஒரு இடத்துக்கு போகும்போது அதை குறிப்பிட்டு அதிகம் பேர் சொல்ல மாட்டாங்க. என்னதான் சிரமப்பட்டாலும் நம்மளோட பெயருக்காக செய்யலாம்னு நினைச்சாலும், கழுத்து நெறிக்க கூடிய கடனுக்கு இடையில, கடின உழைப்பையும் தாண்டி, நமக்கு லாபம் முக்கியமா தேவைப்படுது.

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

மீண்டும் நஷ்டப்படுவோ, மீண்டும் மீண்டும் கடன் வாங்கவோ எல்லாராலையும் முடியாது.
அப்ப.. குறிப்பிட்ட தொகைக்கு ஒரு பிராண்ட் கூட சேர்ந்து நாம தொழிலா ஆரம்பிக்கும் போது அதுக்குன்னு ஏற்கனவே வாடிக்கையாளர் கூட்டம் இருப்பாங்க.

நாம யாரையும் போய் கூப்பிடனும் வாடிக்கையா மாற்றனும் அப்படிங்கிற அவசியம் அங்க வர்றது இல்ல.

எளிய முறையில் வாடிக்கையாளர் சேரதோட லாபத்துக்கு பிள்ளையார் சுழியும் கிடைச்சிடுது. அதுக்காக நாங்க கொடுக்கிற விலை எங்களோட தனித்துவமான அடையாளம்ன்னு தெரிஞ்சாலும் இன்னிக்கு தேதிக்கு வெற்றிங்கறது லாபம்,பணம் வாழ்க்கையில் முன்னுக்கு வர்றது தானே தவிர, பெயர், அடையாளம், கலாச்சாரம் இதெல்லாம் பின்னாடி போயிடுச்சு.”என்று வருத்தமாக கூறினான்

அதற்கு இசைவாக நீரூபன் தலையசைத்த போது மற்றொரு இளைஞன் பேச முன்வந்தான்.

அவனுக்கு வாய்ப்பளித்ததும், அவன் சிரித்தபடியே கூறியது

“படிச்சு முடிக்கவே 22, 23 வயசு ஆகுது ப்ரோ. அதுக்கப்புறம் வேலைக்கு சேர்ந்து நமக்கான எக்ஸ்பீரியன்ஸ் கிடைச்சு ஒரு தொழில் தொடங்கலாம்னு தனிப்பட்டு ஒரு தொழில் ஆரம்பிக்கும் போது 27 வயசு கிட்ட ஆயிடுது. சரி 27 வயசு ஆயிடுச்சு கல்யாணம் பண்ணிக்கலாம் அப்படின்னு நினைச்சா தொழில் செய்றவனுக்கு அதுவும் தனிப்பட்ட தொழில் செய்றவனுக்கு பொண்ணு குடுக்கறதுக்கு இங்க நிறைய பேரு முன்வர்றதில்ல.

தொழில்ல லாப நஷ்டம் அதிகமா இருக்கும் நாளைக்கு வரப்போற பொண்ணு கஷ்டப்படும். அப்படின்னு காரணம் சொல்றாங்க. இதுவே ஒரு பிராண்ட் நாங்க எடுத்து நடத்தும்போது குறிப்பிட்ட லாபம் கண்டிப்பா மாசம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஒரு சிலராவது கல்யாணத்துக்கு முன் வராங்க.” என்று வாழ்வின் நிதர்சனத்தை முன்வைத்தான்.

“வேலீட் பாயிண்ட். நான் ஒத்துக்குறேன். இது எல்லாம் இப்ப இருக்கு. ஆனா நாம கஷ்டப்பட்டு எல்லாம் செஞ்சு சம்பாதிச்சு நம்ம குடும்பத்தை முன்னேற்றதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் இதோட மூலப்பணம் எல்லாமே அந்த குறிப்பிட்ட ஒரு இடத்துக்கு தான் போகுது. ஒரே ஒரு மிகப்பெரிய நிறுவனம் பல விதமான தொழில் தொடங்குவது ஒரு வகைனா, ஒரு தாய் நிறுவனம் பல பெயர்கள் ஒரே பொருளை பிராண்ட் பெயர் மட்டும் மாற்றி வியாபாரம் பண்ணும் போது யார் எதை விட்டாலும் லாபம் அந்த தாய் நிறுவனத்துக்கு தான் போய் சேரும். இத நீங்க யாரும் யோசிக்கலையா?

இது இப்படியே போனா ஒரு மோனோபாலி இல்ல ரெண்டு நிறுவனங்கள் இருக்கும் போது டையபாலி உருவாகும் அப்படின்னு உங்களுக்கு தோணுனது இல்லையா? நாம ஒவ்வொருத்தரும் இன்னொருத்தருக்கு போட்டியா நிக்கும் போது தான் இங்க ஒரு சமத்துவம் கிடைக்குது. அதை இப்படி உடைச்சு ஒரு குடைக்கு கீழே பல பெயர்களில் வியாபாரம் நடத்தும் போது யாருக்கு அதிக நஷ்டம்?மக்களுக்கும் உங்களுக்கும் தானே? லாபம் மொத்தமா ஓரிடத்தில் போய் சேருதே!!” என்று தன் தாடையை மெல்ல நீவியபடி பேசினான்.

“சார் நீங்க பேசறது எல்லாம் பெரிய பெரிய விஷயம். இங்கே எங்களுக்கு அடுத்த நாளை எப்படி ஓட்டுறதுன்றதே  பிரச்சினையா இருக்கும்போது, இங்க மொத்தத்தையும் யாரு ஆள்றாங்கறத பத்தி எல்லாம் கவலைப்படறதுக்கு எங்களுக்கு நேரம் இல்ல சார்.” என்று ஒருவன் வேகமாக பதிலளித்தான்.

“உங்களுடைய இடத்துல இருந்து பார்க்கும்போது நீங்க சொல்றது சரிதான். ஒவ்வொருத்தருமே அடுத்த நாளுக்காக இந்த நாள்ல வேகமாக ஓடிக்கொண்டு தான் இருக்கோம். இப்படியே இந்த குறுகிய வட்டத்துக்குள்ளயே நாம யோசனைகளையும் நம்மளோட முழு பலத்தையும் உபயோகப்படுத்திக்கிட்டே இருந்தோம்னா, அந்த மிகப்பெரிய விஷயங்கள் எல்லாம் எப்ப நம்ம பார்க்கிறது? மாத்துறது? சாதிக்கிறது?” என்று புருவத்தை தூக்கி அவன் கேட்ட விதத்தில் இதற்கு என்ன பதில் அளிப்பது என்று தெரியாமல் அனைவருமே அமைதியுடன் இருந்தனர்.

“இப்ப நான் ஒரு ஐடியா சொல்றேன் உங்களுக்கு ஒத்து வருது அப்படின்னா இதப்பத்தி நம்ம டிஸ்கஸ் பண்ணலாம். ‘இல்லங்க எனக்கு இந்த ஐடியா பிடிக்கல. எனக்கு இதெல்லாம் சரி வராது’ அப்படின்னு நினைச்சீங்கன்னா அப்படியே இந்த மீட்டிங்ல இருந்து நீங்க வெளிய போயிடலாம் ஓகேவா?” என்று சிரித்தக்கொண்டே அவன் கேட்டபோது பலரது முகத்திலும் கேள்விக்குறியே தொக்கி நின்றது.

“உங்களுக்கு மாசம் ஒரு குறிப்பிட்ட தொகை வருமானமா வரல அப்படிங்கறது, நாளையும் உங்களோட குடும்பத்துக்கு உங்களால சரியானபடி எதுவும் செய்ய முடியாமல் போயிடுமோ அப்படிங்கற குழப்பத்துனாலயும், நாளைக்கு காதல் திருமணம் இதில் எல்லாம் பிரச்சனை வரும் அப்படிங்கிற சந்தேகத்துனாலயும்தான் நீங்க தனிப்பட்டு எந்த தொழிலையும் செய்ய முன்வராமல் இருந்தீங்க அப்படின்னா…”

அதுக்கான ஒரு நல்ல முடிவை நான் இப்ப சொல்றேன். சிறு இடைவெளி விட்டு நிறுத்த பலர் முகத்திலும் ஆர்வம் கூடியது.

“நான் எல்லா மாவட்டங்களையும் சில தொழில்கள் அதிகம் பேர் தொடங்காம  இருக்கிறத கவனிச்சு பட்டியல் போட்டு வச்சிருக்கேன். இந்த தொழில்களை எடுத்து நடத்தி அதை லாபமா மாற்றி காட்ட உங்கள்ல எத்தனை பேருக்கு விருப்பம் இருக்கோ அவங்க மட்டும் இதை தொடரலாம். அவங்களுக்கு மாசம் மாசம் ஆரம்பத்துல ஊதியமா நான் ஒரு தொகையை கொடுத்துடறேன். நீங்க அதுல ஒர்க்கிங் பார்ட்னர் மாதிரின்னு வச்சுக்கோங்க. நிறுவனம் உங்க பெயரில் தான் இருக்கும் ஆனா நீங்க அதுல ஒர்க்கிங் பார்ட்னரா இருப்பீங்க. குறிப்பிட்ட காலகட்டம் வரைக்கும் நீங்க அந்த தொழிலை நடத்தி சரியானபடி லாபத்தையும் கொண்டு வந்துட்டீங்கன்னா அந்த நிறுவனத்தை நான் முழுக்க முழுக்க உங்களுக்கே மாற்றி கொடுத்தர்றேன்.

உங்களுக்கும் தனிப்பட்ட ஒரு தொழில் கிடைக்கும். அதே நேரம் ஆரம்ப கட்டத்துல உங்களுக்கு பணத்தேவையோ இல்ல கஷ்டமோ இல்லாம இருக்க என்னால முடிஞ்ச ஒரு சின்ன உதவி.

இதுல உங்களுக்கு விருப்பம் இருந்தா இந்த இணைப்புல அப்படியே இருங்க. ‘இல்லங்க இதெல்லாம் சரிவராது’ அப்படின்னு நினைச்சீங்கன்னா தாராளமா நீங்க இந்த இணைப்பில் இருந்து விலகிக்கலாம். இவ்வளவு நேரம் நான் பேசினதை கேட்டதுக்கும் என் கேள்விகளுக்கு பதில் சொன்னது உங்களுக்கு ரொம்பவே நன்றி.” என்று கை கூப்பி விடை கொடுத்தான்.

அதில் மிகச் சிலரே விலகிச் சென்றிருக்க பலரும் யோசனையோடு அந்த சந்திப்பை தொடர்ந்தனர்.

“சரி இங்க இருக்கிறவங்களுக்கு இதுல விருப்பம் இருக்குன்னு எனக்கு தெரிஞ்சிருச்சு. அப்போ மேற்கொண்டு பேசுவோம். மாவட்ட வாரியா என்னென்ன தொழில்கள் அதிகம் செய்யாமலே இருக்குன்னு நாங்க எடுத்த லிஸ்ட்ல நிறையவே தொழில்கள் நின்னு போயிருக்கு. அதெல்லாம் எடுத்து செய்யவும் சில புதிய தொழில்கள தொடங்கி அதை நடத்தவும் எனக்கு உங்களோட உதவி தேவை. அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் கிட்ட நான் இத பத்தி தகவல் கொடுத்துடுறேன்.

உங்களுக்கு உங்களுடைய படிப்பு சம்பந்தமாகவும் நீங்க ஏற்கனவே வேலை பார்த்த அந்த எக்ஸ்பீரியன்ஸ வச்சு உங்களுக்கு எந்த தொழில் சரியா வரும்ங்கறத அவங்களுடையே சேர்ந்து நீங்க டிஸ்கஸ் பண்ணி முடிவு பண்ணிக்கோங்க. நீங்க அதுல தொடரலாம். இதுக்கு உங்களுக்கு ஆறு மாசம் டைம் இருக்கு. அந்த ஆறு மாசத்துக்குள்ள இது சரி வரும்ன்னு உங்களுக்கு தோணலனா நீங்க விலகிக்கலாம்.

இதுல எந்த பிரச்சினையும் இல்ல. ஆனா ஒரு முறை முடிவு பண்ணி உள்ள வந்துட்டீங்கன்னா உங்களோட நூறு சதவீத உழைப்ப நீங்க கொடுத்து தான் ஆகணும். என்னடா இப்படி சொல்றாருன்னு நினைக்காதீங்க.

எப்பயுமே நம்ம எந்த விஷயத்தை அர்ப்பணிப்போடு செய்கிறோமோ அது நம்மளுக்கு நல்லது மட்டுமே தான் திருப்பிக் கொடுக்கும். அந்த நம்பிக்கையோடு செய்யுங்க. நான் உங்களை ஏமாத்தவோ, இல்ல உங்க கூட உழைப்பை சொரண்டி திங்கவோ கூப்பிடல.

என்னோட நோக்கமே இளைஞர்கள் தொழில் ஆரம்பிக்கணும். அதுல சாதிக்கணும். இதன் மூலமா உள்நாட்டு தொழில் வளர்ச்சி அடையணும். இதுக்காக தான் நான் இவ்வளவு தூரம் செய்யறேன். என்மேல நம்பிக்கை உள்ளவங்க இதை தொடருங்க. இத பத்தி மேல விவரங்களை உங்களுடைய மாவட்டத்தோட நிர்வாகிகள் கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கோங்க.” என்று  அவன் விடை பெற பலரும் நன்றி சொல்லி விடை பெற்றனர்.

அவன் பேச எண்ணியதை பேசிவிட்டு சந்திப்பை முடித்துக் கொண்ட போது அவனுக்கு ஒரு பெருமூச்சு வெளிவந்தது.

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

இதெல்லாம் இவ்வளவு விரைவாக நடக்கும் என்று அவன் எண்ணவில்லை. இத்தனை பேர் அந்த சந்திப்பை தொடர்வார்கள் என்றோ, தன் மேல் நம்பிக்கை வைத்து தன்னுடைய வார்த்தைகளை கேட்பார்கள் என்றோ அவன் எண்ணி இருக்கவில்லை.

இப்பொழுது சிலர் விலகியது போல பின் நாட்களில் தங்களுக்கு ஒவ்வாத தொழிலை தேர்ந்தெடுத்தவர்கள் விலகவும் வாய்ப்பு இருக்கிறது. ஆனாலும் எவ்வளவுக்கு எவ்வளவு இளைஞர்களை தொழிலுக்குள் இழுத்து வர முடியுமோ அதை செவ்வனே செய்து முடித்து விட்ட திருப்தியுடன் அன்றைய தன்னுடைய பணிகளை தொடர தன் அலுவல் அறைக்குச் சென்றான் நீரூபன்.