அடங்காத அதிகாரா 45

Copyright ©️ 2019 - 2025 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அதிகாரம் 45

தன்னையே  கண்ணெடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்த நேத்ராவைக் கண்டு வாய் விட்டு நகைத்துவிட்டான் வசீகரன்.

அவனது நகைப்பில் கடுப்பானவள், “நான் எவ்வளவு லவ்வோட உன்னை பார்த்துகிட்டு இருக்கேன் உனக்கென்ன டா ஹி ஹி ஹின்னு இளிப்பு வேண்டி இருக்கு?” என்று அருகில் இருந்த காலியான குளிர்பான பாட்டிலை அவன் மீது வீசினாள்.

“இல்ல ஐஸ், நீ என்னை இப்படி சைட் அடிச்சு ரொம்ப நாள் ஆச்சுன்னு நினைச்சுட்டு இருந்தேனா அப்படியே ஒரு செகண்ட் என் மாமனார் முகம் கிராஸ் ஆகவும் திக்குனு இருந்துச்சு ஆனாலும் மாமா முகம் நினைவுக்கு வரவும் நம்ம ஐஸ் நமக்கு தான்னு ஒரு சந்தோஷம் அதான் சிரிச்சேன்.” என்று சமாளிக்க,

“டேய். உன்னை எனக்கு தெரியாதா? ஏதோ ஏடாகூடமா கற்பனை பண்ணி பல்லைக் காட்டிட்டு இப்ப அப்பா அண்ணன்னு சமாளிக்கிறியா டா பாடிஸ்டோடா” என்று மீண்டும் அவன் தலையில் ஒரு அடி வைத்தாள்.

“உண்மையை சொல்லிடறேன் அடிக்காத டி” என்று கைகளைப் பிடித்துத் தடுத்தவன்,

“முன்னெல்லாம் நான் தான் உனக்காக காத்துகிட்டு இருப்பேன். நீ பிஸ்னஸ் அது இதுன்னு பேசிட்டு லாஸ்ட்ல போனா போகுதுன்னு ஒரு கிஸ் பண்ணிட்டு கிளம்பிடுவ  இப்ப பாரு நீ என்னைத் தேடி எனக்கு பிடிச்ச புட் எல்லாம் வாங்கிட்டு வந்து பிஸ்னஸ் தவிற ஏதேதோ பேசிட்டு என்னையே லவ்வா பார்த்துகிட்டு இருக்க. எனக்கு அப்படியே பறக்குற மாதிரி ஃபீல் ஆச்சு டி அதான் சிரிச்சேன்.” என்று சொல்ல அவன் மார்பில் தன் முகத்தைப் பதித்துக் கொண்டாள் நேத்ரா.

“நான் நம்மளை ரொம்ப மிஸ் பண்றேன் டா வசி. நீ சொன்னது உண்மை தான். முன்னாடி என்ன தான் லவ் பண்ணினாலும் தொழில், அப்பா அக்கான்னு ஏதாவது மண்டைக்குள்ள குடைஞ்சுக்கிட்டே இருக்கும். இப்ப ஆயிரம் யோசனை, பிரச்சனை மண்டையை உடைச்சாலும் மனசு படபடன்னு உன்னைத் தேடி தான் டா அடிச்சுக்குது.” என்று அவனை செல்லமாக முட்டினாள்.

அதற்கும் வாய்விட்டு சிரித்தவன், “அப்ப இருந்த என்னை இப்ப எடை போட்டா காதலுக்காக ஒரு தொழில் தொடங்கி அதுல ஜெயிக்க ரொம்ப கஷ்டப்பட்ட ஒருத்தனா தான் யோசிக்க முடியுது. ஆனா இப்ப அப்படி இல்ல டி. என் காதல் அப்படியே மாணிக்க கல்லு மாதிரி பளிச்சுன்னு மனசுக்குள்ள இருக்கு. அதுக்கும் என் வேலை, ஆசை, கொள்கை இதுக்கெல்லாம் சம்மந்தமே இல்லாத மாதிரியும் என்னை ஒரு வித்தியாசமான மனிதனாகவும் உணர முடியுது.” என்று பெருமூச்சு விட்டான்.

“என்ன டா நான் உனக்கு தான் கிடைப்பேன்னு நம்பிக்கை வரவும் லொள்ளு கூடிப் போச்சா?” என்று கேலி செய்தவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டவன்,

“உங்க அப்பாவுக்கு நம்ம விஷயம் தெரியும். என்னை வேண்டாம்னு சொல்லிட்டார். என்ன தான் மாமாவுக்கு என்னை பிடிச்சிருந்தாலும் உன் அப்பா சம்மதம் இல்லாம நாம கல்யாணம் பண்ணிக்க முடியாது. இப்ப எந்த நம்பிக்கையில் எனக்கு லொள்ளு வந்திடுச்சுன்னு உனக்கு தோணுது?” என்று சற்று நிதானமாகவே வினவினான்.

“அண்ணா எல்லாரையும் சரி கட்டி நம்ம கல்யாணத்தை நடத்தி வைப்பார் டா. எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு. நீ என் அண்ணனை அதிகம் லவ் பண்ண ஆரம்பிச்சுட்டியோன்னு எனக்கு டவுட்டு.  அதான் உனக்கு பிடிச்சதெல்லாம் வாங்கிட்டு வந்து உன்னோட டைம் ஸ்பென்ட் பண்ணி மறுபடி உன்னை என் பக்கம் இழுக்க டிரை பண்ணிட்டு இருக்கேன்.” என்று சிரிப்பை ஒளித்து வைத்துக் கொண்டு பேசினாள் நேத்ரா.

“ஆமா டி நான் மாமாவை தான் லவ் பண்றேன். நான் மட்டுமில்ல டி நிறைய பேர் லவ் பண்றாங்க. நாளைக்கு தமிழ்நாடே அவரை லவ் பண்ண போகுது. உனக்கு ஏன் டி ஸ்டமக் பர்ன் ஆகுது?” என்று அவளது மடியில் படுத்துக் கொண்டு கிண்டலில் இறங்கினான்.

“நீ சொல்றது உண்மை தான் டா வசி. இந்த ஆனந்த் பையன் இருக்கான்ல அவன் முன்னாடி சினிமா சான்ஸ் கிடைக்க எப்படி அலைவான் தெரியுமா? இப்ப அண்ணன் கூப்பிட்டு அவனை நம்ம புரோடேஷன்ல படம் இயக்க சொன்னதுக்கு இப்போதைக்கு அதுக்கு நேரமில்லைன்னு அவன் ஃப்ரெண்ட்ஸ் நாலு பேரை ரெகமெண்ட் பண்ணி அவங்களை என்கிட்ட கதை சொல்ல அனுப்பி வச்சிருக்கான் டா.” என்று சலித்துக் கொண்டாள்.

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

“நீ கதை கேட்க போறியா? தூங்கிடுவியே ஐஸ்!” என்று மேலும் கேலி செய்தவனிடம்,

“டேய் நான் சொல்றதுல உள்ள சீரியஸான விஷயத்தை விட்டுட்டு காமெடி பண்ணிட்டு இருக்க! ஆனந்த் அண்ணாவுக்கு இந்த பிராசஸ்ல ஹெல்ப் பண்ண அவனுக்கு கிடைச்ச அருமையான சந்தர்ப்பத்தை வேண்டாம்னு சொல்றான் டா. கேட்டா ‘எப்ப வேணாலும் நான் யோசிச்சிருக்குற படத்தை என்னால எடுக்க முடியும். ஆனா இப்ப தான் சாருக்கு என்னால ஹெல்ப் பண்ண முடியும் இல்லன்னா என்னை என் மனசே சுயநலவாதின்னு சொல்லும் சிஸ்டர்’ன்னு சொல்றான் டா” என்று தீவிரமான குரலில் கூறினாள்.

“அவன் சொல்றது அவன் இடத்திலிருந்து பார்த்தா சரியா தான் இருக்கும் ஐஸ். ஆனா நாம அவனை அப்படியே விட முடியாது. நான் என்ன பண்றதுன்னு யோசிக்கிறேன்.” என்றவன் எழுந்து உடையை சரி செய்து கொண்டு கிளம்ப எத்தனிக்க,

“உன் ஆபிஸ் தான் டா இது. நீ எங்க கிளம்பிட்ட?” என்று கேட்க,

“மாமா எல்லா பிஸ்னஸ்க்கும் மார்கெட்டிங், ஆன்லைன் சப்போர்ட் கொடுக்க சொல்லி இருக்கார் ஐஸ். நம்ம ஐடி விங் பசங்க ஆல்ரெடி நிறைய வர்க் பண்ணிட்டு இருக்காங்க. அதான் புதுசா ஒரு பேட்ச் ரெக்ரூட் பண்ண சொல்லி இருக்கேன். அதுக்கு  இடம் லீஸ் பேச போறேன். எல்லாத்தையும் நம்ம பேர்ல செய்ய முடியாதுல்ல, அதே நேரம் நம்பிக்கையான ஆளும் வேணும். எல்லாரையும் எடை போட கூடவே இருந்தா தான் சரியா இருக்கும். நாம காதலிக்க இன்னும் நிறைய நேரம் இருக்கு ஐஸ். ஆனா இந்த சில வருஷங்கள் மாமாவுக்கு முக்கியமானது. நாம நம்ம ஆசைகளை கொஞ்சம் தள்ளி வச்சுட்டு ஹெல்ப் பண்ணினா நாம மட்டும் இல்ல எல்லாரும் நல்லா இருக்க மாமா பெருசா ஏதாவது செய்வாருன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு.” என்று பேசியவன் விழிகளில் கனவுகள் மிதந்தது.


நன்றாக படுத்துறங்கி பல நாட்கள் ஆனது கண்களில் பளிச்சென்று தெரிந்தாலும் முடிக்க வேண்டிய முக்கியமான சில விஷயங்களை அவசரமாக, அடுத்தவர் கண்களை உறுத்தாத வகையில் முடித்து வைக்க தன்னுடைய கண்களை சிரமப்படுத்திக் கொண்டு தான் ஆக வேண்டும் என்று தன்னை தானே உற்சாகப்படுத்திக் கொண்டு வேலையில் கவனம் வைத்தான் நீரூபன்.

தள்ளுபடி செய்திருந்த தொழில் முனைவோர் இளைஞர்களின் கோப்புகளையும் அவர்களை நேர்காணல் எடுத்த வீடியோக்களையும் பார்த்துக் கொண்டிருந்தான்.

அதில் திறமையான இளைஞர்களை கண்டறிந்து தனியாக பிரித்துக் கொண்டிருந்தான். அதன் முடிவுப் பகுதியில் இருந்தவன் கண்கள் தூக்கத்தில் சொக்கியது.

ஏற்கனவே அவனை தூங்கச் சொல்லி பூமிகா பல முறை குறுஞ்செய்தி அனுப்பி விட்டாள். இந்த பட்டியலை தயார் செய்து விட்டால் அவர்களை தனியே ஒரு வீடியோ காலில் இணைத்து  பேசி விட வேண்டும் என்று எண்ணி இருந்தான்.

கடைசி பைலைப் பார்த்து முடித்தபோது அடைந்த நிம்மதி அவன் சொல்லில் அடங்காது. உடனே அவர்களை அழைத்து பேசிவிடத் துடித்த மனதை அடக்கி ஆனந்துக்கு அழைத்தான்.

“ஆனந்த் நான் ஒரு லிஸ்ட் அனுப்புறேன். அவங்க பிரபோசல் எல்லா டிஸ்டிரிக்ட்லயும் கேன்சல் ஆனது. அவங்களை காண்டாக்ட் பண்ணி நான் பேசணும்னு சொன்னேன்னு கூகிள் ஆர் ஜூம் மீட் அரேஞ்ச் பண்ணு. எல்லா முடிச்சிட்டு ஷெடியூல் எனக்கு சொல்லிடு” என்று கூறி முடிக்க,

“நம்ம கால் சென்டருக்கு சொல்லி எல்லாரையும் ஒரு மணி நேரத்துல கான்டாக்ட் பண்ண வைக்கிறேன் சார். உங்க கன்வீனியன்ட் டைம் சொல்லுங்க. மீட்டிங்கை அப்ப செட் பண்ணி தர்றேன். அப்பறம் முக்கியமான விஷயம் சொல்லணும் சார்.நீங்க தப்பா நினைக்க கூடாது.” என்று இழுத்தான்.

“சொல்லு ஆனந்த்” என்று சிரித்தவனிடம்,

“நாம ரெண்டு வருஷத்துக்கு என்ன செய்யணும்னு முன்னாடியே யோசிச்சுட்டோம். அதை செயல்படுத்த தான் தீவிரமா முயற்சி பண்ணிட்டு இருக்கோம். அதே நேரம் நம்மளையும் கொஞ்சம் கவனிக்கணும்ல சார்? நீங்க சரியா தூங்குறதே இல்ல. நேத்து நைட்டு ஒரு மணிக்கு ஏதோ பைலை எனக்கு அனுப்பி இருந்தீங்க. நான் மதியம் அனுப்பின மெயிலுக்கு மூணு மணிக்கு ரிப்ளை பண்ணி இருக்கீங்க. இப்படி தூங்காம இருந்தா சரியா வராது சார்.”என்று தயக்கமாக சொல்லி முடித்தான்.

“புரியுது ஆனந்த். இந்த லிஸ்டில் உள்ளவங்க எல்லாருக்கும் நல்ல திறமை இருக்கு. அவங்களை சரியா டியுன் பண்ணிட்டா நம்ம பிஸ்னஸ் பிளான் முக்கால்வாசி முடிஞ்சது போல தான். அதான் கொஞ்சம் ஸ்ட்ரெஸ் எடுத்து இது செய்தேன். அவங்களை கன்வின்ஸ் பண்ணி சரியான பிஸ்னஸ்ல இறக்கிட்டா இனிமே இதை சம்மந்தப்பட்டவங்க மெயின்டெய்ன் பண்ணிப்பாங்க. அதான். நீ சொல்றதும் புரியுது. இதோ பெட்ல உட்கார்ந்து தான் வேலை பாத்துட்டு இருந்தேன். அப்படியே படுத்து தூங்கிடுவேன்.” என்று சிரித்தான்.

“ஓகே சார். நான் உங்களுக்கு அப்டேட் பண்றேன்.” என்று அழைப்பை துண்டிக்க இருந்தவனை தடுத்த நீரூபன்,

“உன்னை படம் எடுக்க சொன்னேன். அதை விட்டுட்டு நீ என் பின்னாடி சுத்திட்டு இருக்க? எனக்கு மட்டும் தான் அட்வைஸா?” என்று கிண்டல் செய்தான்.

“என் பிரெண்ட்ஸ் நாலு பேரை செலக்ட் பண்ணி இருக்கேன் சார். யாருக்கு முதல்ல சான்ஸ் கொடுக்கறதுன்னு கதையை வச்சு முடிவு பண்ண நேத்ரா மேடமை கான்டாக்ட் பண்ணியிருக்கேன். சீக்கிரமே புரடெக்ஷன் வேலை ஸ்டார்ட் ஆகிடும் சார்” என்று பதிலளித்தான்.

“நான் கேட்ட கேள்விக்கு இது பதில் இல்லையே கண்ணா!” என்று நகைத்தான்.

“ரெண்டு படமாவது நம்ம கம்பெனில எடுக்கட்டும் சார். அப்பறம் நான் போய் ஒரு பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் கொடுக்கறேன். முதல் படமே ஹிட் ஆனா எல்லார் கவனமும் நம்ம பக்கம் திரும்பிடும்ல!!” என்று சிரித்துக் கொண்டே கூறிய ஆனந்தை,

“இதே மாதிரி யோசிச்சு நல்ல படமா எடுக்கணும். சரியா. என்னோட திட்டத்துல உங்களை எல்லாம் சேர்த்து உங்க கனவை காணாம போக்கிட்டேன்னு என்னை வருத்தப்பட வச்சிடாதீங்க.” என்று அழுத்தமாகக் கூறினான்.

“என்ன சார் இப்படி சொல்லிட்டீங்க. ஆரம்ப கட்டத்துல உங்களுக்கு நிறைய வேலை இருக்கும். நானும் பூமியும் கூட இருந்தா உங்களுக்கு உதவியாக இருக்கும்ன்னு நினைச்சோம். கொஞ்சம் நம்ம பிளான் மோஷனுக்கு வந்த பின்னாடி தனித் தனியா என்ன செய்யணுமா அதை செய்ய தான் போறோம். என்னோட முதல் பட பூஜையும் வெற்றி விழாவும் காணாம போகல சார். கொஞ்சம் தள்ளி தான் போயிருக்கு. பூமியும் நம்ம ஆபிஸ் வேலையெல்லாம் செய்யறா தான். அதே நேரம் அவளோட மாஸ்டர் கிட்ட அவ போக வேண்டிய நேரத்துக்கு சரியா கொண்டு போய் விட்டுகிட்டு தான் இருக்கேன். சோ நீங்க கவலைப்படாம கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க. இந்த மீட்டிங் செட் பண்ணிட்டு உங்களுக்கு கால் பண்றேன்.” என்று அவன் மனதில் இருந்த கேள்விகளுக்கு பதில் கூறிவிட்டு கைபேசியை அணைத்தான் ஆனந்த்.

தான் நினைத்ததை செய்ய தான் துடிப்புடன் இருப்பது பெரிய விஷயமல்ல. தன்னுடன் இருப்பவர்கள் துடிப்புடன் இருப்பது கடவுள் தனக்களித்த வரம் என்று எண்ணிக் கொண்டு தன் உறக்கத்தை தேடி தலையணையிடம் சரண் புகுந்தான் நீரூபன்.