அடங்காத அதிகாரா 44
Copyright ©️ 2019 - 2025 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
பல வருடங்களுக்குப் பிறகு மெய்யப்பன் ஐயா வீட்டு வாயிலில் வந்து நின்றார் திருமூர்த்தி.
கட்சியில் சேர்ந்த காலத்தில் இதே வீட்டின் வெளித்திண்ணையில் படுத்து உறங்கி இருக்கிறார். கட்சியில் வளர எந்த விதமான சிரமத்தை அனுபவிக்கவும் அவர் தயங்கியதே இல்லை. அதனாலேயே மெய்யப்பன் ஐயாவுக்கு திருமூர்த்தி மேல் தனி பாசம் பிறந்தது.
நடு இரவில் ஏதோ ஒரு பிரச்சினை எழுந்தாலும் மெய்யப்பன் ஐயா வாயிலை நோக்கி மூர்த்தி என்று குரல் கொடுத்தால் ஓடோடி வந்து நிற்பார் திருமூர்த்தி. அப்படியான தொண்டனாக இருந்ததால் தான் தனக்குப்பின் கட்சியை திருமூர்த்தியிடம் ஒப்படைத்துவிட்டு சென்றார் மெய்யப்பன்.
அந்த வீட்டின் வாயிலில் இருந்த மெய்யப்பன் ஐயாவின் புகைப்படத்தைப் பார்த்தபடி நின்றார் திருமூர்த்தி. பழைய நினைவுகள் அலையலையாக அவரை வந்து மோதியது.
தனக்குப் பின் தன் மகனை கட்சிக்கு தலைவராக ஆக்க வேண்டும் என்பது தான் ஆரம்பத்தில் திருமூர்த்திக்கு இருந்த ஆசை. ஆனால் அஞ்சனா காட்டிய ஆர்வத்தை நீரூபன் காட்டாமல் போனதும், அவனது கொள்கைகள் வேறாக இருந்ததை அவனது தொழிலின் மூலம் அறிந்து கொண்டதும் தன் அவா நிறைவேறாது என்று அஞ்சனாவை தனக்கு பின் கொண்டு வர முடிவு செய்திருந்தார்.
ஆனால் நீரூபன் கேட்டும் அவனை கட்சியில் சேர்த்துக்கொள்ளாமல் போனது தவறோ என்று அவன் வீட்டை விட்டு வெளியேறிய பின் சிந்தித்தார்.
அவன் வெளியே சென்றதோ புதிதாக கட்சி துவங்குவதோ கூட ஆரம்பத்தில் பெரிய விஷயமாக அவர் எண்ணவில்லை. ஆனால் அவன் தொழில் உதவி, வளர்ச்சி, துறை என்று அரசியல் கலந்த அரசுசார்பற்ற நிறுவனம் என்று பேசியதும் தனது தவறு அவருக்கு பளிச்சென்று உறைத்தது.
அவன் கேட்ட பதவியைக் கொடுத்து தக்க வைத்திருக்க வேண்டும். அஞ்சனாவை பேசிவிட்டு வேடிக்கை பார்த்தது இன்று அவனை வேறு விதமாக ஏதோ சிந்திக்க வைத்துவிட்டது என்பதனை உணர்ந்தார்.
தனக்கு எதிராக கட்சி துவங்கினால் அது அத்தனை எளிதாக அரசியல் வட்டங்கள் எடுத்துக் கொள்ளாது என்பதனை அறியாத சிறுவன் அல்ல நீரூபன். அதனால் தான் தலையை சுற்றி வருகிறான். அவன் வந்து சேரும்போது அது புதிய கட்சியாகவோ அல்லது வேறு கட்சியாகவோ இல்லாமல் அவரது கட்சியாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்த பின் அதற்கான வழியைக் காட்டக் கூடியவர் முருகப்பன் தான் என்று அவரைச் சந்திக்க வந்து விட்டார்.
ஒன்று மகனை தன் கட்சிக்கு கொண்டு வர வேண்டும். அல்லது அவன் அரசியலுக்கே வரக் கூடாது. இதற்கான உபாயம் ஒன்றை அறியாமல் முருகப்பன் வீட்டில் இருந்து செல்லக் கூடாது என்று எண்ணியபடி மெல்ல வீட்டை நோக்கி நடந்து சென்றார்.
வாயிலிலேயே வந்து வரவேற்றார் முருகப்பன்.
“வா திரு. பார்த்து நாளாகுது. கூப்பிட்டு விட்டுருந்தா நானே கட்சி ஆபிசுக்கு வந்திருப்பேனே பா.”என்று பாசம் பொங்கக் கூறினார் முருகப்பன்.
“எனக்கு ஒரு உதவி வேணும்ன்னா நான் வர்றது தானே அண்ணா முறை. அதான் உங்களை தேடி நானே வந்தேன்.” என்று அவர் காட்டிய இருக்கையில் அமர்ந்தபடி கூறிய திருமூர்த்தியிடம்,
“உதவின்னு பெரிய வார்த்தையெல்லாம் சொல்லாத திரு. உனக்கு என்ன வேண்டுமோ சொல்லு என்னால முடிஞ்சத நான் செய்யறேன்.” என்று அவரருகில் வந்து உரிமையாக அமர்ந்து கொண்டார் முருகப்பன்.
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
போன வாரத்தில் வீட்டில் நடந்தவற்றை பொறுமையாகக் கூறிய திருமூர்த்தி, “எதிர்கட்சியா இருந்தும் உள்ளாட்சி தேர்தல்ல நல்ல சீட்டோட ஜெயிக்கவும், எப்படியும் வர்ற சட்டமன்றத் தேர்தல்ல ஜெயிச்சு கோட்டைக்கு போயிடலாம்ன்னு நம்பிக்கையோட இருந்தேன் அண்ணா. ஆனா இப்ப நீரூபன் பண்றத பார்த்தா பயமா இருக்கு. எங்க அவன் ஜெயிக்கலன்னாலும் பரவாயில்லன்னு நம்ம கட்சியை தோற்கடிச்சிடுவானோன்னு பயமா இருக்கு.” என்று மனதில் இருந்ததை மறைக்காமல் கூறினார்.
“முன்னெல்லாம் ஒருத்தரை பார்த்தாலே அவங்க என்ன எண்ணத்துல இருக்காங்க, மனசுல என்ன வச்சு பேசுறாங்க, பொடி வச்சு காரியம் சாதிக்க வந்திருக்காங்களான்னு கண்ணாலேயே அளவெடுத்து சொல்லுவ. ஆனா இப்ப உன் சொந்த மகனைப் பத்தி தப்பா புரிஞ்சு வச்சுட்டு வந்து பேசுற! கட்சித் தலைவரா ஆகறதுக்கு முன்னாடி உன்கிட்ட இருந்த தைரியமும் துடிப்பும் இப்ப இல்லையே திரு!” என்று வருத்தமாகக் கூறினார் முருகப்பன்.
“என்னண்ணே சொல்றீங்க?” என்று சங்கடத்துடன் வினவிய திருமூர்த்தியை நோக்கி,
“ஆரம்பத்துல உனக்கு ஆதரவா இருந்த எம்.எல்.ஏக்களுக்காக சிலதை விட்டுக் கொடுத்த, அப்பறம் பதவி போகக் கூடாதுன்னு எதிர்கட்சி செய்த சிலதை கண்டுக்காம விட்ட, உன் மக வந்து எல்லாத்தையும் அடக்கி ஆள நினைச்சப்ப அவளுக்காக இத்தனை வருஷம் கட்சிக்கு விசுவாசமா இருந்தவங்களை கூட நீ பகைச்சுக்க தயாரா இருந்த, இப்ப மகளுக்காகவும் ஆட்சிக்காகவும் சொந்த மகனையே எதிரியா பார்க்க ஆரம்பிச்சுட்டியா திரு?” என்று வருத்தம் பொங்க வினவினார்.
“எனக்கு அவன் எதிரியெல்லாம் இல்லண்ணே. அவன் சின்னப்பய. அவனை எனக்கு சரிசமமாக யோசிச்சு எதிரியா எல்லாம் பார்ப்பேனா?” என்று சமாளிக்க நினைத்த அவரை மேலும் கீழும் பார்த்த முருகப்பன்,
“உண்மையா சொல்லணும்னா உன் மகனுக்கு தகுந்த எதிரி நீ இல்ல. அவன் தான் உன்னையெல்லாம் எதிரியா பார்த்து இறங்கி நடக்கக் கூடாது.” என்று எரிச்சலோடு கூறினார்.
“என்னண்ணே இப்படி சொல்லிட்டீங்க?” என்று புரியாமல் விழித்தவரை நோக்கி,
“இந்த உள்ளாட்சி தேர்தல்ல நீயும் உன் கட்சியும் உங்க அருமை பெருமையெல்லாம் சொல்லி ஜெய்ச்சீங்களா? இல்ல உன் மக அப்படியே மாநாடுல பேசின விதத்துல மயங்கி எல்லாரும் ஓட்டு போட்டு உங்களை ஜெயிக்க வச்சாங்களா? எல்லாத்தையும் என் மகன் செய்தான் திரு.
நேரடியா செய்தா எங்க உன் மக அவனை முன்னைப் போல ஏதாவது சொல்லுவாளோன்னு, தனக்காகவும் தன்னோட அம்மா தங்கச்சிக்காகவும் யோசிச்சு, நேத்ராவையும் வசீகரனையும் இதுக்காகவே ஒரு கேம்பையின் கம்பெனி ஆரம்பிக்க வச்சு அது மூலமா கட்சிக்கு எல்லா பாசிட்டிவ் வைப்ரேஷனையும் கொண்டு வந்தான் டா அவன்.
அரசியல் ஞானம் எவ்வளவு துல்லியமா ஒரு தேர்தல் களத்துக்கு தேவைன்னு முன்னாடியே யோசிச்சு என்னை அதுக்குள்ள கொண்டு வந்து உனக்கு எதிரா எந்த கேள்வியும் வர விடாம பார்த்து பார்த்து பிரச்சாரம் பண்ண வச்சான் டா.
அந்த ரெட்டை கொலை வழக்கை கொண்டு வந்தா நம்ம கட்சி கண்டிப்பா தேர்தல்ல தோத்து போகும்ன்னு யோசிச்சு அவங்க அதை கொண்டு வர்றதுக்கு முன்னாடியே ரெண்டு பேரை அந்த கேஸ்ல சரண்டர் ஆக வச்சு உன்னை காப்பாத்தினான் டா அவன்.
இத்தனையையும் செய்துட்டு அவன் உன்கிட்ட எதையுமே எதிர்பார்க்காம தான் இருந்தான். உன் மகளும் மருமகனும் அவனுக்கு கொடுத்த குடைச்சல் கொஞ்சமா நஞ்சமா? அதையெல்லாம் கண்டுக்காம உனக்காக தான் எல்லாரையும் தன் கைக்குள்ள வச்சு காரியம் பார்த்தான். ஆனா அவனுக்கு நீ என்ன செய்திருக்க? எதுவும் இல்ல. அவன் ஸ்கூல் பீஸ் வரை தான் உன் காசுல படிச்சான். அப்பறம் எல்லாமே ஸ்காலர்ஷிப்பும் அவனோட சுயமான சம்பாத்தியமும் தான்.
நீ அவன் பேர்ல ஒரு இடம் வாங்கி வச்சிருக்கியா? ஆனா அவன் உன் வீட்ல உள்ள எல்லார் பேர்லையும் இடம் மட்டுமில்ல ஆளுக்கு ஒரு தொழில் தொடங்கி அதுல வர்ற லாபத்தை அவங்க கணக்குல போட்டுட்டு வர்றான்.
உன் சின்ன மகளுக்கு நீ என்ன செய்த சொல்லு? அவளுக்கு வாங்குற ஹேர்பின்ல இருந்து அவ வெளிநாட்டுக்கு போய் படிச்ச வரைக்கும் அவளுக்கு எல்லா செலவும் அவன் தான் செய்தான். இது அவளுக்கே தெரியாது.
இப்படியெல்லாம் தன் குடும்பத்தை ஆலமரம் மாதிரி கண்ணுக்கு தெரியாம தாங்கி நின்னவன் தான் இன்னிக்கு உதறிட்டு போயிருக்கான். கண்டிப்பா அதுக்கு பின்னாடி பெரிய காரணம் இருக்கும். உன்னை ஜெயிக்க அவன் கட்சியெல்லாம் ஆரம்பிச்சு கஷ்டப்பட தேவையில்லை திரு. உன் மக செய்த செயலை உனக்கு காட்டினாலே போதும்.” என்று கோபத்துடன் எழுந்து நடந்தார்.
அவர் பேசிய பேச்சுக்களை ஜீரணிக்க இயலாமல் தடுமாறினார் திருமூர்த்தி.
“என்கிட்ட அவன் தேர்தலுக்கு உதவி செய்யறேன்னு சொல்லவே இல்லண்ணே. அது மட்டுமில்ல அவன் முடிவு வந்த அன்னைக்கு வீட்டுக்கு கூட வரல. அதான் நான் தப்பா நினைச்சுட்டேன். ஆனா அஞ்சனா பத்தி.. எனக்கு புரியல அண்ணே. அவ என்னைக் கேட்காம எதுவுமே செய்ய மாட்டா.” என்று இழுக்க,
“உன்னோட ஆட்சியில போட்ட ரோடெல்லாம் ரெண்டு மாசத்துல பல்லைக் காட்டிச்சே அதெல்லாம் யாரால? உன் அருமை மருமகன் செய்த வேலை தான் அது. கமிஷனுக்கு காசை வாங்கிட்டு உருப்படாத ஒருத்தனுக்கு உன் பேரை சொல்லி பி. டபிள்யு. டில காண்ட்ராக்ட் கொடுக்க கட்டாயப்படுத்தினான்.
லாரி வச்சு தரமில்லாத பொருளை கொண்டு போகும்போது ஒத்து வராத ஆர்.டி.ஓ ரெண்டு பேரை என்ன செய்தான்னு இன்னிக்கு வரையிலும் போலீசுக்கு கூட தெரியாது. இதெல்லாம் உன் மகளுக்கு தெரியாம தான் நடக்குதா?”
அவர் பேசப் பேச திருமூர்த்திக்கு நெஞ்சை அடைப்பது போல இருந்தது.
“அது கூட போகுது சமீபமா எதிர்கட்சில ரெண்டு எம்.எல்.ஏ ஆக்சிடென்ட் ஆகி இறந்தாங்க. ஆனா அதோட சி.சி.டி.வி புட்டேஜ் எப்படி கட்சி ஆபிஸ்ல உன் கண்காணிப்புல இருக்குற கம்ப்யூட்டருக்கு வந்தது. அதுவும் ஹிடன் ஃபைலா?” கண்களில் கனல் மின்னக் கேள்விகளை அடுக்கினார் முருகப்பன்.
“என்னண்ணே என்னல்லாமோ சொல்றீங்க? எனக்கு இதைப் பத்தி எதுவும் தெரியாதுண்ணே!” என்று உண்மையில் விதிர்த்துப் போய் பதிலளித்தார் திருமூர்த்தி.
“இதெல்லாம் என்னன்னு தெரிஞ்சு உன்னை அதுல இருந்து காப்பாத்த தான் நீரூபன் கட்சிக்குள்ள வரவே முடிவு செய்திருப்பான். அவனுக்கு பதவி மேல எல்லாம் ஆசை இல்ல. ஆனா பதவியை வச்சோ, இல்ல பதவில இருக்கறவங்க பெயரை வச்சோ மத்தவங்க செய்யுற தப்பு நாளைக்கு கட்சிக்கு தான் களங்கமா வரும்ன்னு அதை சரி பண்ண நினைச்சிருப்பான் என் மகன்.
அவன் எனக்கு மகனா பிறந்திருக்க வேண்டியவன் திரு. கட்சிக்கு நீதான் சரியா இருப்பன்னு நம்பி என் அப்பா அவர் வளர்த்த கட்சியை உன்கிட்ட கொடுத்தப்ப நான் தடுத்து நிறுத்தாம அதை சந்தோஷமா பார்த்து ரசிச்சவன். என்னை பெரியப்பான்னு வாய் நிறைய கூப்பிடுற நீரூபனுக்கும் அதே குணம் தான்.
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
உனக்கு தான் பதவிக்கு ஆசைப்படுற மகளுக்கும், காசுக்கு ஆலாய் பறக்கற மருமகனுக்கும் எதையுமே பெருசா நினைக்காத என் நீரூபனுக்கும் அண்ணன் சொன்னா என்ன வேணாலும் செய்வேன்னு சொல்ற நேத்ராவுக்கும் வித்தியாசம் தெரியாம இருக்க. அவனை நீ எதிரியா பார்த்தா உனக்கு தான் அழிவு ஆரம்பம். அதுவும் அவனால இல்ல. உன்னாலயும் உன் மகளாலையும் தான்.” என்று கூறிவிட்டு வேகமாக விலகி அடுத்த அறைக்குள் நடந்தார்.
புயலில் சிக்கிய மரம் போல தளர்ந்து போய் அமர்ந்திருந்தார் திருமூர்த்தி.
மகள் கட்சியில் பதவிக்கு வரத் துடிப்பது அவர் அறிந்த ஒன்றுதான் என்றாலும், மருமகன் ஏதோ காண்ட்ராக்ட்கள் ஒன்றிரண்டு வாங்கிக் கொடுத்திருக்கிறார் என்று அறிந்திருந்தாலும் அதன் பின்னணி இத்தனை பெரியதாக இருக்குமென்று அவர் எண்ணியிருக்கவில்லை.
அவரொன்றும் சுட்டுப் போட்ட தங்கமாக நேர்மையின் சிகரமாக நடந்து கொள்ளவில்லை என்றாலும் பதவி, ஒப்பந்தம் இதற்காகவெல்லாம் இறங்கி நடப்பவர் அல்ல. கொலை என்பது அவருக்கு புதியதல்ல என்றாலும் அது எதற்காக எத்தகைய சூழ்நிலையில் அது அவசியம் என்று உணர்ந்த அரசியல்வாதி அவர்.
முருகப்பன் அண்ணன் சொல்வதைப் பார்த்தால் மகளும் மருமகனும் பல்வேறு வேலைகளை தன் நிழலில் நின்று தன் கண்ணுக்கே தெரியாமல் செய்திருப்பது புரிகிறது.
முருகப்பன் அண்ணனை சமாதானம் செய்ய வேண்டுமென்று அவருக்கு நன்றாகப் புரிந்தது. ஆனால் தொண்டையிலிருந்து வார்த்தையே வராத அளவுக்கு அடைபட்டு கிடக்கும் அவரால் இப்பொழுது அது சாத்தியம் அல்ல என்றுணர்ந்து,
அங்கிருந்த லெட்டர் பேடில்
‘கேட்டவைகளை ஜீரணிக்க எனக்கு கால அவகாசம் தேவை அண்ணா. உங்களிடம் கேட்டு வந்த உதவி அப்படியே தான் இருக்கிறது. அதைப் பற்றிப் பேச மறுபடி விரைவில் உங்களை சந்திக்கிறேன். நேரில் விடைபெறும் அளவுக்கு எனக்கு மனதில் தெம்பில்லை. மன்னிக்கவும். விரைவில் சந்திப்போம்.
அன்புத்தம்பி’
என்று கையொப்பம் இட்டுவிட்டு அங்கிருந்து விறுவிறுவென்று தன் காரை நோக்கி நடந்தார்.
அவர் இதைத்தான் செய்வார் என்று எதிர்பார்த்திருந்த முருகப்பனும் அவருக்கு சங்கடம் தரும் வகையில் வெளியே வராமல் அடுத்த அறையிலேயே இருந்து கொண்டார்.