அடங்காத அதிகாரா 43

Copyright ©️ 2019 - 2025 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அதிகாரம் 43

ஒரு வார காலம் போனது தெரியாமல் நகர்ந்து போயிருந்தது.

அனைத்து மாவட்ட அலுவலகங்களிலும் விண்ணப்பங்கள் வந்து குவிந்து கிடக்க புதிய சிந்தனையுடைய தொழில்களுக்கு முன்னுரிமை வழங்கச் சொல்லி நீரூபன் ஏற்கனவே கூறி இருந்ததால் அதை பிரிக்கும் போதே கிளை ஆரம்பிக்கும் விதமான விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.

அன்றைய அலுவலக சந்திப்பு நேரத்திற்காக கிளை மேலாளர்கள் ஜூம் மீட்டில் காத்திருக்க அதற்கு முன்பாக இங்கே ஐவர் படை  சந்தித்தது.

“சோ ஒரு வாரமா என்ன கவனிச்சிங்க? நம்ம அடுத்த ஸ்டெப் போகலாமா?” என்று சிரித்துக் கொண்டே வினவிய நீரூபனிடம்,

“மாமா நீங்க தான் ரொம்ப எதிர் பார்த்துட்டீங்க. வந்த அப்ளிகேஷன்கள்ல பலதும் பிரான்ச்சைஸீ ஓபன் பண்றது தான். நீங்க நினைச்ச மாதிரி மூணு பகுதியா தொழில் வளத்தை பிரிக்கிற அளவுக்கு ஐடியாஸ் அதிகம் வரல.” என்று வசீகரன் வருத்தம் தெரிவித்தான்.

“அது என்ன மாமா மூணு பகுதி?” என்று கேட்ட பூமிகாவை புன்னகை முகமாக நோக்கியவன்,

“அடிப்படை தொழில்கள் முதல் பகுதி மா. விவசாயம், கட்டுமானம்,கைத்தறி, மருத்துவம், கல்வி. மருத்துவமும் கல்வியும் வியாபாரமா மாறி பல வருஷம் ஆச்சு. இதெல்லாம் மனித வாழ்க்கைக்கு மிக மிக தேவையான தொழில்கள்.

அடுத்தது வியாபாரம், ஏற்றுமதி இறக்குமதி, விற்பனை.

இந்த இரண்டும் அடிப்படை மற்றும் அத்தியாவசிய தேவைகள் அதற்கான தொழில்கள். மூணாவது பணக்கார தொழில்கள் இல்ல பணம் அதிகம் புழங்கும் தொழில்கள்.

கேளிக்கை, சுற்றுலா, மதுபானம், பொழுதுபோக்கு அம்சங்கள், தொலைகாட்சி, சினிமா, பங்கு வர்த்தகம்.

இதெல்லாம் போக ஹூயுமன் ரிசோர்ஸ் தான் இதை எல்லாத்தையும் இயங்க வைக்க தேவையான துறை.” என்று பொறுமையாக விளக்கினான்.

“நீங்க சொன்னது போல எல்லா மாவட்ட மேலாளர்களையும் மீட்டிங்கில் சேர்த்திருக்கேன் சார்.” என்று ஆனந்த் கண் காட்ட, கான்பரன்ஸ் அறையில் இருந்த பெரிய திரையில் பல முகங்கள் பளிச்சிடத் துவங்கியது.

மாவட்ட வாரியாக அவர்கள் தேர்வு செய்த விண்ணப்பங்கள் மற்றும் தொழில்களை விளக்க, அவற்றில் எந்தெந்த தொழில்கள் மற்ற மாவட்டங்களில் விடுபட்டிருந்ததோ அதற்கு சரியான விண்ணப்பதார்களை தேர்வு செய்து அதனை சமநிலைப்படுத்தினர்.

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

“இப்ப நாம வச்சிருந்த லிஸ்ட்ல இங்க மிஸ்ஸாகி இருக்கிற தொழிலுக்கு வந்த அப்ளிகென்ட்ஸ் சரி வருவாங்களான்னு கூப்பிட்டு இன்டர்வியூ பண்ணி பாருங்க. செட்டாகாத பிஸ்னஸ் எல்லாத்தையும் லாஸ்ட்டா சார்ட் அவுட் பண்ணி கொடுத்துட்டு, அங்க உள்ள எல்லாருக்கும் வேற வேற பேங்க்ல லோன் அரென்ஞ் பண்ணறத ஸ்டார்ட் பண்ணுங்க.” என்று வசீகரன் கூறியதும் அங்கிருந்தவர்கள் சரியென்று தலையசைக்க அந்த சந்திப்பு முடிவுக்கு வந்தது.

“அப்ப நாம அடுத்த கட்டத்துக்கு வந்துட்டோம். இனி நாம இறங்கி செய்ய வேண்டிய வேலைகள் வரிசையா இருக்கு. நம்ம பிஸ்னஸ் எல்லாமே நம்பிக்கையான ஆட்கள் மூலமா நாம கண்காணிக்க ஆரம்பிக்கணும். அப்ப தான் புது தொழில்கள் கூடவே அரசியல் கட்சி ஆரம்பிக்க தேவையான வேலைகளை படிப்படியா செய்ய முடியும்.

நேத்ரா உன்னோட டாஸ்க் லோ லெவல்ல இருக்குற ஒரு டிவி சேனலும் ஒரு தினசரி பத்திரிக்கை ஒன்னும் நம்ம சர்கிள்ல கொண்டு வரணும். வெளில தெரியாம செய்யணும்.” என்று நீரூபன் கூற,

“அது ஏற்கனவே என்னோட லிஸ்டல இருந்த பிஸ்னஸ் தான் அண்ணா. ரெண்டு நாள்ல நான் உங்களுக்கு ரிசல்ட் என்னன்னு சொல்றேன்.” என்று தன் கைப்பையை எடுத்துக் கொண்டு கிளம்பினாள் நேத்ரா.

வசீகரனை நோக்கி, “நீ சர்வர் ஃபார்ம், ஹேக்கிங், டேட்டா கலெக்ஷன் எல்லாத்தையும் தனியா அண்டர்கிரவுண்ட்டுக்கு கொண்டு போயிடு. பீ கேர்புல்.” என்று எச்சரிக்க தலையசைத்து விடைபெற்றான் வசீகரன்.

ஆனந்த் ஏதோ கோப்புகளை சரி செய்து கொண்டிருக்க, அவனையும் பூமிகாவையும் அழைத்த நீரூபன்,

“புதுசா ஒரு புரோடெக்ஷன் ஹவுஸ் ரெஜிஸ்டர் பண்ணுங்க.  நல்ல டேலென்டட் டைரக்டர், ஸ்கிரிப்ட் செலக்ட் பண்ணி லோ பட்ஜெட்ல சக்ஸஸ்ஃபுல் படமா எடுக்க ஆரம்பிங்க.

ஆனந்த் நீ உன் குடும்பத்துக்காக தான் சினிமா கனவை ஓரமா வச்சுட்டு எனக்கு செக்ரட்டரியா வந்த,  இப்ப உன்னோட டேலென்ட்ட காட்ட வேண்டிய நேரம் வந்திருக்கு.” என்று கை கொடுக்க,

“நாங்க படம் எடுக்க போயிட்டா உங்களுக்கு யார் இதெல்லாம் செய்யறது?” என்று ஒரே சேர ஆனந்தும் பூமிகாவும் வினவ,

“கஷ்டம் தான். ஆனா இப்ப நல்ல மெசேஜ் உள்ள படங்கள் இளைஞர்கள் மனசுல பதியவேண்டியது நமக்கு ரொம்பவே முக்கியம். அதே மாதிரி பணமும் இதுல சீக்கிரம் திரும்ப கிடைக்கும். சரியான இடத்துல அதை போடணும். அதுக்கு தான் உங்களை அதை கவனிக்க சொல்றேன்.” என்று  ஆனந்த் முதுகில் தட்டிக் கொடுக்க,

“ரெண்டு நாள் டைம் கொடுங்க சார். நானும் பூமியும் எல்லாத்தையும் வொர்க் அவுட் பண்ணிட்டு சொல்றோம். அதுவரை எப்பவும் போல என் வேலையும் நான் பார்த்துட்டு தான் இருப்பேன்.” என்று பிடிவாதக் குரலில் கூறிவிட்டு அகன்றான் ஆனந்த்.

அந்த அறையே அலையடித்து ஓய்ந்தது போல அமைதியாக இருந்தது.

தன் மடிக்கணினியில் இணைக்கப்பட்டிருந்த பைல்களை பெரிய திரையில் பார்த்துக் கொண்டு நின்றிருந்தான் நீரூபன்.

அவனுக்கு அருகே வந்து அவனது இடது கரத்தை தன் கரங்களுக்குள் பொத்தி வைத்துக் கொண்ட பூமிகா,

“கட்சி ஆரம்பிக்க  டெல்லில ஒரு லெட்டர் கொடுத்துட்டு இங்க ஓட்டுக்கு பணம் கொடுத்தா ஏதோ ஒரு சீட்லயாவது ஜெயிச்சு அரசியலுக்கு வந்துடலாம்ன்னு பல பேர் இங்க கனவு கண்டுட்டு இருக்கும்போது நீங்க மட்டும் ஏன் மாமா வித்தியாசமா ஏதோ பண்ணிட்டு இருக்கீங்க?” என்று அவன் தோளில் முகம் பதித்துக் கொண்டாள்.

“பதவி ஆசையும் பணத்தாசை யும் இருந்தா நீ சொல்ற மாதிரி நான் செய்திருக்கலாம். நான் வளர்க்கற செடி லேசா வாடினாலே என்ன காரணம் என்னன்னு பார்த்து அதை சரி பண்ணாம விட மாட்டேன். அப்படி இருக்கும் போது ஒரு மாநிலத்தையே வாடான பார்த்துக்க நான் எவ்வளவு மெனக்கெடுவேன்னு தனியா வேற சொல்லணுமா டா” என்று அவளை வாஞ்சையாக நோக்கினான்.

“அது சரிதான் மாமா. எப்படியாவது பெரிய மாமாவை சமாதானம் பண்ணி கட்சியில சேர்ந்திருந்தா சீக்கிரமே பதவி கிடைச்சிருக்கும். நீங்க செய்ய நினைச்சதை அங்க இருந்து செய்திருக்கலாமே?” என்று புரியாமல் அவனையே பார்த்தாள்.

“சரி நீ சொல்றபடி நான் அப்பா கட்சியில சேர்ந்து அடுத்த தேர்தல்ல நிண்ணு ஏதோ ஒரு பதவிக்கு வர்றேன்னு வை. நான் இதே தொழில் வளர்ச்சி ஸ்கீமை கொண்டு வர்றேன். அது நடக்கும்ன்னு நீ நினைக்கிறியா டா? நல்ல தொழில்முனைப்பு உள்ள ஆட்களை இப்ப நான் தேர்வு செய்த மாதிரி பதவியில் இருந்து செய்ய முடியும்னு தோணுதா? வாய்ப்பே இல்ல டா. ஒரு சாராருக்கு சாதகமா பண்ணிட்டேன்னு பேசுவாங்க.

தொழில் தொடங்க வர்றவங்களை பயமுறுத்தி விலக வைப்பாங்க. தேவையில்லாம அவங்களுக்கு எதிரிகள் உருவாவாங்க. ஆனா இப்ப போட்டித் தொழில்கள் மட்டும் தான் அவங்களுக்கு தடை. அதை சரி செய்து வளர்ச்சியடைய நாம உதவி செய்வோம். சீக்கிரமே இவங்க வளர்ச்சி அடைவாங்க. இது பதவியில் இருந்தா சாத்தியம் ஆகறதுக்கு பல வருஷங்கள் ஆகும்.

ஒரு நோய் பரவி இருக்குன்னு நமக்கு தெரியும். நேரடியா அந்த நோயோட மூல காரணத்துக்கு மருந்து கொடுத்தா அது இப்ப சரியா வராது. ஏன்னா நோய் முத்தி பல பக்க விளைவுகள் வந்திருக்கு. முதல்ல அதையெல்லாம் கட்டுக்குள்ள கொண்டு வந்து தான் நோய்க்கான காரணியை நாம நீக்க முடியும். அந்த அணுகுமுறை தான் சரி. அதை தான் இப்ப நான் செய்ய ஆரம்பிச்சு இருக்கேன்.”

என்று அவளது உச்சியில் தன் தாடையை பதித்தான் நீரூபன்.

“சரி எல்லாருக்கும் வேலை சொல்லி அனுப்பிட்டிங்க. நீங்க என்ன பண்ணப் போறீங்க?” என்று ஆர்வமாக அவனை கண்டவளிடம்,

“நம்ம ஸ்கூலை எல்லா ஊர்லை யும் ஆரம்பிக்கிற வேலையை பார்க்க போறேன். இனி வர்ற ஜெனெரேஷன் ஓட்டுக்கு பணமும் சாராய பாட்டிலும் எதிர்பார்க்காத, சீரிய சிந்தனை உடையவங்களா இருக்கணும்னா நாம நம்ம கல்வி முறையை மாத்தியே ஆகணும். நான் ஒரு தனியாரா நின்னு அதை செய்து காட்டினா, அதை மாடலா எடுக்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்படும். அந்த நிர்பந்தத்திற்கு அவங்களை கொண்டு வர என்னால எவ்வளவு செய்ய முடியுமோ அதை நான் செய்யணும்.”

வேகமாக பேசிய அவனது நெஞ்சை நீவிய பூமிகா,

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

“எல்லாமே சரி தான். ஆனா அத்தையை மறந்துட்டீங்களே! ஒரு வாரம் ஆச்சு நீங்களும் நேத்ரா அண்ணியும் வீட்டுக்கு போகல. அத்தை மனசு எவ்வளவு வருத்தபடும்ன்னு நினைச்சீங்களா?” என்று அவன் தாடையில் கை கூப்பிப் பிடித்து சிறுபிள்ளையிடம் கேட்பது போல கேட்டாள்.

“என் அம்மா மனசு ரொம்ப கஷ்டப்படும் தான் ஆனா சரியான காரணம் இல்லாம நான் இதை செய்ய மாட்டேன்னு அம்மாவுக்கு தெரியும். அவங்க ஆசீர்வாதம் இல்லாம வசீ, நேத்ரா கல்யாணம் நடக்காது. இங்க ஆரம்பகட்ட வேலையெல்லாம் முடிஞ்சதும் மறுபடி வீட்டுக்கு போய் அவங்க கல்யாண விஷயம் பேசி முடிப்பேன். அம்மா என்னை நம்பி காத்திருப்பாங்க. என்ன அதுக்குள்ள அவங்க உடம்பை கெடுத்துக்காம இருக்கணும்.” என்று தன் வருத்தத்தை வெளியிட்டான்.

“சரி அதுக்கு நான் பொறுப்பு.” என்று அவன் கன்னம் உரசி கண்ணடித்து விடைபெற இருந்தவளை நுனி விரல் பிடித்து சுண்டி தன் மேல் விழ வைத்தான் நீரூபன்.

“என்ன உன்னை கவனிக்கிறது இல்லன்னு என்னை சீண்டி பாரத்துட்டு போறியா?” என்று மோகனமான அவன் புன்னகையுடன் வினவ,

மந்தகாச புன்னகையில் அவனை துவம்சம் செய்துவிட்டு சிட்டுக் குருவியாக அங்கிருந்து பறந்து சென்றாள் பூமிகா.

அவள் போன பின்பும் அவளது கூந்தலில் வீசிய நறுமணத்தை அவன் நாசியில் உணர்ந்து சிரித்துக் கொண்டான் நீரூபன்.

இங்கே இவர்கள் தங்களுக்கான ஆரம்பகட்ட வேலையில் கவனமாக இருக்க,

இவர்களை கண்காணிக்க ஏற்பாடு செய்திருந்தார் திருமூர்த்தி. அது சம்பந்தமாக அவருக்கு சரியான ஆலோசனை வேண்டுமென்று முருகப்பன் ஐயாவை சந்திக்க முடிவெடுத்திருந்தார்.

இதனால் தான் மகனுக்கும் தனக்கும் பிளவு வருமென்று எண்ணி இருந்தவர் எண்ணத்தை பொய்யாக்கி அவருக்கும் அவரது மகளுக்குமான உறவில் மிகப்பெரிய விரிசலை வர வைக்கப் போவதை அறியாமல் அன்றைய மாலை சந்திப்பில் என்னென்ன பேச வேண்டுமென்று குறிப்பெடுத்துக் கொண்டிருந்தார்.