அடங்காத அதிகாரா 41

Copyright ©️ 2019 - 2025 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

காலை உணவு நேரத்தில் தந்தை அருகில் அமர்ந்திருந்த அஞ்சனாவின் கண்களில் கோபத்தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது.

காலை முக்கியச் செய்திகளை எதிரில் இருந்த தொலைக்காட்சியில் கண்டு கொண்டிருந்த அவ்விருவரின் மனநிலையும் வெவ்வேறாக இருந்தாலும் காரணம் மட்டும் அதில் நடுநாயகமாக அமர்ந்து செய்தியாளர் சந்திப்பிற்கு தயாராக தாள்களை சரிப்பார்த்துக் கொண்டிருந்த நீரூபன் தான்.

“என்னப்பா இது? நாளைக்கு என் முடிவு என்னன்னு தெரிஞ்சுப்பீங்கன்னு சொன்னான். நானும் ஏதோ உளறிட்டு போறான்னு நெனச்சேன். இப்ப பார்த்தா பிரஸ்ஸ கூப்பிட்டு இருக்கான்?” என்று கோபத்தை அடக்க முடியாமல் கொந்தளித்தாள்.

“அவன் சொல்றத இப்பவாவது முழுசா கேட்க விடு அஞ்சு. நேத்து அவசரப்பட்டு அவனை வீட்டை விட்டு போக வச்சாச்சு. இப்பவும் கவனிக்கலன்னா நமக்கு தான் ஆபத்து.” என்று மகளை கண்டித்து விட்டு கவனத்தை தொலைகாட்சியில் வைத்தார் திருமூர்த்தி.

நீரூபன் பந்திரிகையாளர் சந்திப்புக்கு அழைத்திருப்பதகாவும் முக்கிய அறிவிப்பு இருக்கலாம் என்று பிரேக்கிங் நியூஸ் போட்டுக் கொண்டிருந்ததை நிறுத்தி நீரூபனைக் காட்டியது.

வணக்கம் கூறி புன்னகை புரிந்த அவனிடம்,

“என்ன சார் போன இன்டர்வியூல ஸ்கூல் பத்தி சொன்னிங்க. இப்ப என்ன காலேஜா இல்ல யுனிவர்சிட்டியா?” என்று கேலியாக ஒரு நிருபர் கேள்வி எழுப்ப,

“மக்கள் மனசு எவ்வளவு விசித்திரமானது பாருங்க ஸ்டீவன் சார். ஒரு முக்கியமான விஷயம் சொல்ல தான் கூப்பிட்டிருக்கேன், எப்படியும் சொல்ல வந்ததை சொல்லாம நான் போகப் போறது இல்ல. ஆனாலும் எனக்கு முன்ன அதை கண்டுபிடிச்சு கேள்வி கேட்க எவ்வளவு ஆர்வம் பாருங்க.”என்று விளையாட்டு போல கேள்வி கேட்டவருக்கு பொறுமையாக இரு என்று குட்டு வைத்துவிட்டு பேச்சைத் துவங்கினான்.

“நான் யார்ன்னு தனி அறிமுகம் உங்களுக்கு தேவையில்லன்னு ஸ்டீவன் சார் கேள்விய வச்சே தெரியுது. அப்ப நேரா விஷயத்துக்கு வந்திடலாம். நான் கிட்டத்தட்ட பத்து வருஷமா ஆர்கானிக் ஃபார்மிங், எஸ்டேட், ரிசார்ட், ஆடிட்டிங் அப்பறம் இப்ப ஸ்கூல்ன்னு பல தொழில்களையும் கூடவே சில சேவைகளையும் செய்திட்டு வர்றேன்.

சமீபமா எங்க கம்பெனி டேட்டாவுக்காக ஒரு சர்வே எடுக்கும் போது தமிழகத்தில ஆரம்பகட்ட தொழில் வளர்ச்சி சதவிகிதம் குறைஞ்சு போயிருக்கிறத பார்க்க முடிஞ்சது. அதே நேரத்துல சரியான ஆலோசனை, வழிநடத்துதல் சில இடங்களில் இல்லன்னு தெரியவந்தது.

அதுக்காக சேவை மனப்பான்மையோட ஆரம்பிக்கப்பட்ட எங்க அரசு சார்பற்ற தன்னார்வ அமைப்பு பற்றிய அறிவிப்பை வெளியிட தான் உங்களை வர சொன்னேன்.” என்றதும்,

“என்னப்பா நம்ம கிட்ட கட்சில பதவி வேணும்ன்னு கேட்டான். இப்ப ஏதோ என். ஜி. ஓ ஆரம்பிச்சு இருக்கான்?” என்று அஞ்சனா புரியாமல் வினவ,

“பொறு முழுசா கேட்போம்” என்று மகளை தடுத்தார் திருமூர்த்தி.

“சார் இப்ப ஊர்ல ஆயிரம் என்.ஜி.ஓ இருக்கு. நீங்க ஏன் இதை பத்திரிகையாளர் சந்திப்பு வச்சு சொல்றீங்க?” என்று அங்கிருந்த நிருபர் அவனை கேள்வி கேட்க,

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

“ஒரு தன்னார்வ நிறுவனம் நாம இதை மக்களுக்கு உதவியா செய்வோம்ன்னு ஆரம்பிக்கிறது இயல்பு தான் சார். ஆனா மக்களுக்கு இயல்பா அரசால கிடைக்க வேண்டிய சலுகைகளை அவங்களுக்காக போராடி வாங்கித் தர கூட நிறைய அமைப்புகள் இருக்கு. ஆனா அரசு செய்ய வேண்டியதை செய்து தர இங்க தனிப்பட்ட அமைப்பு இல்ல.” என்று நிறுத்த,

“அரசு செய்யறத தனியார் எப்படி செய்ய முடியும் சார்?” என்று ஒருவர் கேட்க,

“கஷ்டம் தான். ஆனா சாத்தியமே இல்லன்னு சொல்ல முடியாது. செய்து பார்க்காம சொல்லவும் கூடாது இல்லையா? அதான். செய்து பார்க்க முடிவு செய்திருக்கேன். முதல் முயற்சி தொழில் வளர்ச்சி.

இளைஞர்கள் இளம் பெண்கள் யாருக்கு தொழில் துவங்க ஆர்வம் இருந்தாலும் உங்க பிளான் எடுத்துட்டு அந்தந்த டிஸ்ட்ரிக்ட் ஆபிஸ்ல போய் பாருங்க. அறுபது நாள்ல உங்க தொழில் சிந்தனையும், செயல்முறை மாதிரியும் சரியா இருந்தா அதை நடைமுறைப்படுத்த வேண்டிய எல்லா வேலையும் எங்க நிறுவனம் பார்த்துக்கும். அதாவது சரியான வழிகாட்டுதல் அரசு வழங்க வேண்டியதை நாங்க செய்ய தயாரா  இருக்கோம்.” என்று முடிக்க,

“சார் நிறுவனத்தோட பேரு?”

“பேரென்ட் கம்பெனி ‘தமிழ்நாடு பிரைவேட் லிமிடட்’டேட டிரஸ்ட்ல, இண்டஸ்ட்ரியல் விங்.” என்று கூறி கை கூப்பினான் நீரூபன்.

“என்னப்பா உளறல் இது?” என்று இங்கே அஞ்சனா கொதிக்க,

“அவனை அனுமானிக்கிறது கஷ்டம் அஞ்சு.” என்று மகளை நிதானிக்க சொன்னவர் மனம் மகனது ஆட்டம் செல்லும் வகையறியாது விழித்தது.

அங்கே செய்தியாளர் சந்திப்பில்,

“மக்களுக்கு நல்லது பண்ண தான் இதை ஆரம்பிக்கிறதா சொல்றீங்க? அப்ப அரசு மக்களுக்கு நல்லது பண்ணலன்னு சொல்றீங்களா?” என்று ஒருவர் கேள்வி எழுப்ப,

“மக்களுக்கு நல்லது செய்யறதுன்னா உங்க அப்பா கட்சியில சேர்ந்து ஏதாவது செய்யலாமே! ஏன் அரசியலுக்கு வராம ஏதேதோ சொல்றீங்க?”என்று ஒரு பெண் நிருபர் கேள்வி எழுப்ப, அவரை நோக்கி புன்னகைத்த நீரூபன்,

“அரசியல் பத்தி ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கும். சிலர் அதை அதிகாரத்தை கைப்பற்றும் ஆயுதம்ன்னு சொல்லுவாங்க, சிலர் சாக்கடைன்னு கூட சொல்லுவாங்க. ஆனா என் பார்வை வேற.

நான் அரசியலை போதையா பார்க்கறேன். அதுனால வர்ற பதவியை மாயையா பார்க்கறேன். யோசிச்சு பாருங்க, நல்ல போதைல உள்ள ஒருத்தனோட மாயை, அதாவது அந்த மிதப்பு நிலையை தவற விட அவன் எப்பவும் விரும்ப மாட்டான். ஆனா போதைல உள்ளவன் பார்வை தீர்க்கமா இருக்காது. நேரா, சரியா நடக்காது. தன்னோட மாயை நிலையை தக்க வச்சுக்க மறுபடி மறுபடி போதையை ஏத்திக்க தான் அவன் விரும்புவான். எதிர்ல உள்ளவங்க நிலை புரியாது, தெளிவா செயல்பட அந்த போதை விடாது. அப்ப மக்கள், அவங்க பிரச்சனை, அதுக்கான தீர்வுக்கு யோசிக்க அங்க எங்க நேரம் இருக்கும் சொல்லுங்க?

அவங்க அரசியல் ஆட்டத்தை காப்பாத்திக்கவும், தன்னோட பதவி பறிபோகாம இருக்கவும் போராட தான் அவங்களுக்கு நேரம் இருக்கும். மக்கள் இங்க வெறும் பார்வையாளர்கள் மட்டும் தானே!” என்று அவன் நிறுத்த அங்கே கேள்வி யாரும் எழுப்பவில்லை.

சற்று நேரம் சென்றதும், “அப்ப உங்க அப்பா ஆட்சி செய்தப்பவும் தன்னோட பதவிக்காக தான் எல்லாம் செய்தாரா? மக்களுக்கு நல்லது செய்யல, அவரும் அரசியல் போதைல தான் இருந்தார்ன்னு சொல்ல வர்றீங்களா?” என்று ஒருவர் எழுந்த கேட்க,

“நான் பொதுவா ஒரு உவமைக்கு சொன்னேன்ங்க. தனிப்பட்ட நபரை சொல்ல எனக்கு உரிமை இல்ல. என்னோட பேச்சு சுதந்திரம் உங்க முன்னாடி விரல் நீட்டி பேசுறது வரைதான். யாரையும் விரல் நீட்டி விமர்சிக்க கிடையாது.

எப்பவும் அரசு இயந்திரம் செயல்பட அரசியல் பின்புலமா இருக்கணும். ஆனா இப்ப அரசியல் தான் முன்னிலைக்கு வந்து அரசு இயந்திரம் அதுக்காக செயல்படத் துவங்கிடிச்சு. அரசியல்ல இறங்கி அதை சரி செய்யறது ஒரு விதன்னா, நான் வித்தியாசமா வெளில நின்னு அதை ஏதாவது செய்ய முடியுமான்னு முயற்சி செய்ய போறேன். முயலாமை என்பது மூடத்தனம் இல்லையா?” என்று சிரித்துவிட்டு கை கூப்பி விடை பெற்றான் நீரூபன்.

“இவன் என்ன தான்ப்பா சொல்ல வர்றான்?” என்று எரிச்சலோடு கேட்ட மகளிடம்,

“நம்மளை நேரடியா சண்டைக்கு கூப்பிடுறான். என்ன இது அரசியல் இல்ல. அதுக்கும் மேல. அவ்வளவு தான்.” என்று எழுந்து சென்றார் திருமூர்த்தி.

புரியாமல் நின்றார் அஞ்சனா தேவி.

பத்திரிகையாளர் சந்திப்பு பிரஸ் கிளப்பில் முடிவுற்றதும் நீரூபன் வசீகரனை கைபேசியில் அழைத்து பேசியபடி தன்னுடைய அலுவலகத்துக்கு விரைந்தான்.

இரண்டு நாட்கள் இடைவிடாமல் போட்ட திட்டத்தின் பலனாக  ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு அலுவலக திறப்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தொழில் விரிவாக்கம் காரணமாக மாவட்ட வாரியான கிளைத் துவக்கப் பணிகள் ஏற்கனவே முன்னெடுக்கப் பட்டிருந்ததால் ஒரு இரவில் அதனை செயல்படுத்த ஆனந்துக்கு அது அத்தனை சிரமமாக இருக்கவில்லை.

பள்ளிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் கட்ட பட்டியலில் இருந்தவர்களை பணிக்கு அமர்த்தி அவர்கள் மூலமாக சரியான நிதி மற்றும் தொழில் ஆலோசகர்கள் தேர்வு செய்யபட்டு உடனடியாக பணியில் சேர்க்கும் வேலையில் கவனமாக இருந்தான் வசீகரன்.

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

தொலைகாட்சியில் நீரூபனின் பேட்டியைக் கண்ட பூமிகாவுக்கு ஒன்றும் புரியவில்லை. தன்னிடம் கட்சி துவங்குவதாகக் கூறியவன் இப்பொழுது தொழிலில் இறங்கத் தயாராக இருப்பது அவளுக்கு புதிராக இருந்தாலும் நீரூபன் செய்யும் எந்த செயலுக்குப் பின்னாலும் சரியான காரணம் இருக்கும் என்று நம்பிய அவளது காதல் மனம் அவனை பார்க்கத் துடித்தது.

நேத்ராவின் நிலையோ வேறு விதமாக இருந்தது. தந்தை மற்றும் அக்காவோடு நேருக்கு நேர் போர்களத்தில் நிற்க வேண்டிய சூழல் எழாமல் அதே நேரம் அந்த அரசியல் என்னும் அதிகார அமைப்புக்குள் செல்லாமலும் மக்களுக்கு நல்லது செய்யும் கொள்கை மட்டும் எடுத்துக் கொண்டு தன் அண்ணன் அறிவிப்பு விடுத்திருப்பது நிம்மதியைக் கொடுத்தது.

வசீகரனும் அரசியல் கூர்மை உடையவன் என்பதை இடைத்தேர்தல் பணியில் கண்டுவிட்டதால் எங்கே இருவரும் புதிய கட்சி துவங்கி அதற்கான வேலைகளில் இறங்கினால் இது வாழ்நாள் முழுவதுமான யுத்தகளமாக மாறிவிடுமோ என்ற பயம் இரண்டு நாட்களாக அவளை கொத்தித் தின்று கொண்டிருந்தது. நல்ல வேளையாக அதற்கும் விடிவு வந்ததில் அலாதியான அமைதி நிலவியது அவள் மனதில்.

தனது அலுவலகம் நோக்கி சென்று கொண்டிருந்த நீரூபனின் கைபேசியில் அவனை அழைத்த அஞ்சனா,

“என்ன டா ஏதோ பெரிய சவால் எல்லாம் விட்டுட்டு நேத்து வீட்டை விட்டு போன? இப்போ பார்த்தா ஏதோ என்.ஜி. ஓ ஸ்டார்ட் பண்ணி இருக்க? என்ன ஒருநாள் ராத்திரி கூட உன் சவால் தாக்குப் பிடிக்கலையா?” என்று நக்கலடித்தாள்.

அவளுக்கு பதிலடி தர வேண்டும் என்று நுனி நாக்கு வரை வந்த வார்த்தைகளை சிரமப்பட்டு விழுங்கிக் கொண்ட நீரூபன்,

“கண்ணை மூடிட்டு கடல்ல குதிக்க நான் என்ன அஞ்சனாவா? நான் நீரூபன். சவாலை விட லட்சியம் தான் முக்கியம்.” என்று அழைப்பை துண்டித்து விட்டான்.

அவன் கூறியதன் பொருளை முழுமையாக உணராத அஞ்சனா, “கண்ணை மூடிட்டு கடல்ல குதிக்க தனி தைரியம் வேணும் டா. எதிர்நீச்சலும் தெரிஞ்சு இருக்கணும். எப்படியோ என்னை எதிர்க்கணும்ன்ற எண்ணத்தை விட்டுட்டு ஒழுங்கா தொழிலை பார்க்க போனது உனக்கு நல்லது.” என்று தனது கைபேசியை தம்பியாக எண்ணிக் கொண்டு கூறினாள்.

அங்கே சாலையில் வாகனத்தை செலுத்திய நீரூபன் தன் அரசியல் பயணத்திற்கான முதல் விதையை விதைத்துவிட்ட நிம்மதியில் அடுத்தடுத்த அடிகளுக்கு எண்ணத்தில் வண்ணமிடத் துவங்கினான்.