அடங்காத அதிகாரா 37

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அதிகாரம் 37

நீரூபன் அன்று இரவு வீட்டிற்கு சென்றபோது வீடே கொண்டாடித் தீர்த்திருப்பது அங்கு குவிந்திருந்த மாலைகள் சால்வை மற்றும் இனிப்புகளை வைத்து நன்றாகவே விளங்கியது.

அனைத்தையும் சின்ன சிரிப்போடு கடந்து விட்டு தன்னுடைய அறையை நோக்கி நடக்க ஆரம்பித்தவனை உணவு உண்ண அழைத்தார் நாகரத்தினம்.

அவனும் மறுத்து பேசாமல் உணவு உண்ணுவதற்கு அமர்ந்ததும் முதலில் இனிப்பை வைத்தவர் தந்தை வெற்றி பெற்றதற்கு பலரும் வீட்டுக்கு வந்து வாழ்த்து சென்றதாக அவனுக்கு தகவல் கூறினார்.

“ஆமாமா நாலு வருஷத்துக்கு மேல அவங்க எதிர்பார்த்துட்டு இருந்த வெற்றி. சொல்ல போனா பெரிய வெற்றிக்கான ஆரம்பம்னும் சொல்லலாம். அப்ப கொண்டாட தானே செய்வாங்க?” என்று பதில் அளித்துவிட்டு அவர் வைத்த உணவுகளை அமைதியாக உண்டான்.

“அவர் ஜெயிச்சு இருக்கலாம் தம்பி. ஆனால் ஜெயிக்க வைத்தது நீதான். அது அவங்களுக்கு தெரியவே இல்லையே! உன்கிட்ட அவங்க வெற்றியை சொல்றதுக்கு அவரை உனக்கு கால் பண்ண சொல்லி நான் கேட்டேன். அதுக்கு ‘நான் கேட்டேன்னு உதவி செய்யாதவன் கிட்ட நான் ஜெயிச்சுட்டேன்னு போய் சொன்னா நல்லா இருக்காது. அவனுக்கே என் மேல அக்கறை இல்லாதப்போ நான் ஏன் போய் சொல்லணும்?’னு கேக்குறாரு. உங்க அப்பாவுக்கு அரசியல்ல நிறைய தெரிஞ்சிருந்தாலும் இன்னும் தன் பிள்ளையை பற்றி தெரியலையேன்னு வருத்தமா இருக்கு.” என்று நாகரத்தினம் வந்த கண்ணீரை சட்டென்று தன் சேலை தலைப்பில் துடைத்துக் கொண்டார்.

“அம்மா நாம ஒருத்தருக்கு நல்லது செய்யணும். நம்ம செய்தது, அதே நல்ல எண்ணத்தோட நல்லதாவே அவங்களுக்கு போய் முடியணும். அதனால அவங்க சந்தோஷப்படணும். இவ்வளவு தான் மா. அத செய்தது நாமதான்னு அவங்களுக்கோ மத்தவங்களுக்கோ தெரியணும்னு அவசியமே இல்லை.

அவங்களோட சந்தோஷத்துக்கு நான் தான் காரணம் அப்படிங்கிறது அவங்களுக்கு தெரியாட்டியும் எனக்கு தெரியுமில்ல! அந்த நிம்மதி தான் எனக்கான சம்பளம். இதெல்லாம் நீங்க பெருசா எடுத்துக்க வேண்டாம்” என்று அன்னையின் தோளில் லேசாக தட்டிக் கொடுத்துவிட்டு கை அலம்ப வாஷ் பேசின் நோக்கிச் சென்றான்.

“இந்த நேத்ரா பொண்ணு காலைல இருந்து போனே எடுக்கல. எப்பவும் ஆபீஸ் விஷயமா வெளியூரோ வெளிநாடோ போறதா இருந்தா தகவல் சொல்லிட்டு போகும் இன்னிக்கி எதுவுமே சொல்லல. உன்கிட்ட எதுவும் சொல்லுச்சா?” என்று விசாரிக்க

“அவளும் பூமிகாவும் டூவீலர் எடுத்துக்கிட்டு எங்கேயோ லாங் டிரைவ் போயிருக்காங்க. அவ்வளவுதான் எனக்கும் தெரியும். இந்த எலக்சன் பரபரப்புல அவளுக்கு அதிக நேரம் ஒதுக்காம விட்ட கோபத்தை மேடம் இப்படி காட்டுகிறாங்க” என்று சிரித்தபடி கையை துடைத்துக் கொண்டவன் தன் அறையை நோக்கி செல்ல,

“நம்ம கிட்ட சொல்லல, சரி. அந்த பையன் கிட்ட கூட சொல்லாம போறது நல்லாவே இல்லையே! என்னால நேரடியா அவள கண்டிக்க முடியாது. வளர்ந்து தன் கால்ல நிக்கிற பொண்ண உலகம் தெரியாத நான் அறிவுரை சொன்னா அது சிரிப்பா இருக்கும். அதனால நீயே உன் தங்கச்சிக்கு நல்ல புத்தி சொல்லு. அந்த பையன் பதறி வீடு வரை வந்து தேடிட்டு போறாரு.” என்று கூறியபடி வேலை ஆட்களிடம் மீதி இருந்த உணவுகளை கொடுத்து விட்டுக் கொண்டிருந்தார்.

“அம்மா உங்களுக்கு நேத்ரா காதலிக்கிற விஷயம் தெரியுமா? வசீகரன் வீட்டுக்கு வந்தானா? அவன உங்களுக்கு எப்படி தெரியும்?” என்று லேசான பதட்டத்துடன் நிரூபன் வினவ,

“எனக்கு இந்த உலக அறிவு தான் இல்ல தம்பி. ஆனா என் பிள்ளைகளை எனக்கு நல்லாவே தெரியும். நீ பூமிகாவ விரும்புறதா இருக்கட்டும் இல்ல உன் தங்கச்சி காலேஜ் படிக்கும் போது அந்தப் பையன விரும்ப ஆரம்பித்ததா இருக்கட்டும் அப்பவே எனக்கு தெரியும். பிள்ளைங்களோட மாற்றத்தை கவனிக்க முடியாத அளவுக்கு நான் இங்க எந்த வேலையும் வெட்டி முறிக்கலையே!சும்மா தானே இருக்கேன்!” என்று விரக்தியாக சிரித்தார்.

“ஏம்மா இப்படி பேசுறீங்க?” என்று அன்னையை அணைத்துக் கொண்டவன்,

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

“நானே உங்ககிட்ட அவங்களை பத்தி சொல்லலாம்னு இருந்தேன். இந்த வருஷம் முடியும்போது சொல்லி தைல கல்யாணம் வைக்க கேட்கலாம்னு நெனச்சிட்டு இருந்தேன்.” என்று நீரூபன் கூற

“நீ பார்த்து அந்த பையன ஒத்துக்கிட்டு இருந்தேனா கண்டிப்பா அந்த பையன் தங்கமானவனா தான் இருப்பான். நேத்ராவும் சாதாரண பிள்ளை இல்லையே! அவளும் நல்ல பையனா இல்லாத ஒருத்தன் மேல அன்பு வைக்கிற அளவுக்கு முட்டாள் இல்ல. எனக்கு தெரியும்.

அந்த பையன் நேரடியா நேத்ராவ தேடி வீட்டுக்கு வரல உங்க அப்பாவுக்கு சால்வ போர்த்த வந்துட்டு மேம்போக்கா நேத்ராவை தேடிட்டு போனாரு. உங்க அப்பாவுக்கு அந்தப் பையன தெரியும்னா அவர்கிட்ட அந்த பையன் நல்ல பேர் எடுத்திருந்தா இந்த கல்யாணம் சுலபம். இல்லனா நீங்க ரெண்டு பேரும் அதுக்காக அவர்கிட்ட போராட வேண்டி இருக்கும்.” என்று அழுத்தமாக நாகரத்தினம் உரைத்தது நீரூபனுக்கு ஏனோ வித்தியாசமாக தோன்றியது.

“அக்கா காலேஜ் முடிச்சு அரசியலுக்கு வந்ததும் திடீர்னு காலேஜ்ல இவன் என் கூட படிச்சான் நான் காதலிக்கிறேன் எனக்கு கல்யாணம் பண்ணி வைங்கன்னு கேட்டதும் அப்பா அவர அக்காக்கு கல்யாணம் பண்ணிட்டாரே! அப்படி இருக்கும்போது நேத்ரா தேர்ந்தெடுத்து இருக்கற வசீகரனை குறை சொல்ல எதுவுமே இல்ல! அப்பா எப்படி வேண்டான்னு சொல்லுவாரு?” என்று தன் அன்னையை எதிரே நிறுத்தி அவர் விழிகளை ஊடுருவி கேள்வி எழுப்பினான்.

“உன் அக்கா கல்யாணத்துக்கு உன் அப்பா அவ்வளவு சீக்கிரம் சம்மதிக்கல. உன் அக்கா என்னவோ சொல்லி கடைசில அவரை பயமுறுத்தி தான் கல்யாணத்துக்கு ஒத்துக்க வச்சா. நீயும் சின்னவன் அவருக்கு அரசியல்ல அப்ப துணையாக இருந்தது அவ மட்டும் தான். அதனால அவள பகைச்சிக்க விரும்பாம அவ விருப்பப்படி அவரு அவளை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொன்னாரு. அதுவும் இல்லாம அவளும் நேத்ராவும் ஒன்னு இல்ல. என்னதான் நேத்ரா நல்லா படிச்சு அவளுக்கான பேர அவளே சம்பாதிச்சுக்கிட்டாலும் தன்னோட பேர அவ பயன்படுத்தல அப்படிங்கற கோபம் உன் அப்பாகிட்ட நிறையவே இருக்கு. அதனாலேயே அவரு இதை எதிர்க்கலாம்” என்றார்.

“என்ன நடந்தாலும் என் தங்கச்சி விரும்புனவன தான் அவ கல்யாணம் பண்ணுவா. அவளுக்கு நான் வாக்கு கொடுத்திருக்கேன். என் உயிரை கொடுத்தாச்சும் என் தங்கச்சியோட ஆசையை நிறைவேற்றுவேன்.” என்று மெல்லிய கோபத்துடன் கூடியவனின் முதுகில் மெதுவாக தடவி கொடுத்தவர்.

“இவ்வளவு கோபம் தேவையில்ல. அவர ஒத்துக்க வைக்க சரியான காரணத்தை மட்டும் கண்டுபிடி. அப்புறம் எல்லாம் சுலபமாயிடும். இதுன்னு இல்ல எப்பவும் ஒருத்தர சம்மதிக்க வைக்க சண்டை போடுறத விட சரியான காரணத்தை தேடுறது தான் புத்திசாலித்தனம். இதையும் நீ தான் எனக்கு சொல்லிக் கொடுத்த சின்ன பையனா இருக்கும்போது.” என்று மகனை தட்டிக் கொடுத்து உறங்கும்படி சொல்லிவிட்டு நகர்ந்து சென்றார் நாகரத்தினம்.

போகும் அவரை வெறித்துப் பார்த்தவன் இவர் என்ன மாதிரியான பெண்மணி உலகம் என்பது இந்த காம்பவுண்ட் சுவற்றுக்குள் இருக்கும் வீடு தான் என்பது போல வீட்டுக்குள்ளே வலம் வரும் இவருக்கு உலகத்தில் உள்ள அத்தனை விஷயங்களும் சாதாரணமாகவே தெரிந்திருக்கிறது. நாம் போராடி புரிந்து கொள்ளும் சில விஷயங்களை அவர் போகிற போக்கில் சொல்லிவிட்டு அதையும் தான் தான் சொல்லிக் கொடுத்ததாக சொல்வதெல்லாம் என்ன மாதிரியான மேன்மைத்தனம் என்பதை எண்ணியபடி தன் அறைக்கு சென்றான்.

மறுநாள் விடிந்து அலுவலகத்திற்கு கிளம்பி கொண்டிருந்த நீரூபனின் கைப்பேசி விடாமல் அடித்துக் கொண்டே இருந்தது.

அதில் தெரிந்த வசீகரனின் எண்ணை கண்டு சிரிப்புடன் தன்னுடைய தாயை முழுமையாக கட்டிக்கொண்டு அதன் பின் அழைப்பை ஏற்றான்.

“எதுக்கு இத்தனை தடவை போன் பண்ற? நேத்ராவும் பூமிகாவும் பெங்களூர் ரீச் ஆயிட்டாங்க. ஹோட்டல்ல நைட்டு செக் இன் பண்ணி இருந்தாங்க. அத நீ அவளோட கார்டை வச்சு கண்டுபிடிச்சிருக்க. இத சொல்ல தானே கூப்பிட்ட?” என்று சிரிப்பை அடக்கிக் கொண்டு வினவினான்.

“நாயேன் மாமா அத உங்க கிட்ட சொல்லணும். உங்க தங்கச்சி எங்க போனாலும் கண்காணிக்க பின்னாடியே ஆள் போட்டு இருக்கிற உங்களுக்கு அவ எங்க இருக்கான்னு அந்த நிமிஷமே தெரிஞ்சுரும்னு தெரியாத அளவுக்கு நான் ஒன்னும் முட்டாள் இல்லையே!” என்று சிரித்தான் வசீகரன்.

“இப்படி எல்லாத்தையும் கண்டுபிடிச்சு என் குட்ட உடைச்சா நானும் என்னதான் பண்றது?” என்று சிரித்தவனிடம்

“உங்க ஆபீஸ் போறதுக்கு முன்னாடி என்னோட சைபர் செக்யூரிட்டி ஆபீஸ் வரைக்கும் வர முடியுமா? நாம கொஞ்சம் பேச வேண்டி இருக்கு”என்றான்.

அந்தக் குரலில் இருந்த தீவிரத்தன்மை முக்கியமான ஏதோ ஒன்றை அவரிடம் பேசுவதற்கு வசீகரன் விரும்புகிறான் என்பதை தெளிவாகஉரைத்தது.

“ஒரு முக்கியமான பிசினஸ் மீட்டிங் இருக்கு வசி. இன்னிக்கு ஸ்கூலோட பிரின்ஸ்பால் செலக்சன் வேற வச்சிருக்கேன். காலையிலேயே வர முடியுமான்னு தெரியலையே!” என்று டையை கண்ணாடியில் சரி செய்தபடி கூறிக் கொண்டிருந்தவனை அப்படியே நிற்க வைத்தது அடுத்து வசீகரன் சொன்ன தகவல்.

“மாமா எல்லா வீடியோவையும் டிகிரிப்ட் பண்ணியாச்சு. வந்தீங்கன்னா நல்லா இருக்கும். முக்கியமான சில முடிவுகளை நானும் அதே நேரம் வேறு விதமான முக்கிய முடிவுகளை நீங்களும் எடுக்கிற மோசமான நிலைமைக்கு அந்த வீடியோ நம்மள தள்ளி இருக்கு. இது போக நிறைய விஷயம் முக்கியமானதா அதுல இருக்கு. அதை என்னால போன்ல சொல்ல முடியாது. எந்த வேலை இருந்தாலும் அரை மணி நேரம் வந்துட்டு போங்க.” என்று சற்று அழுத்தமாகவே கூறினான்.

சரி என்று அழைப்பை துண்டித்தவன் முகத்தில் தீவிர பாவம் வெளிப்பட்டது.

அவனும் அரசியலில் அரங்கேறும் பல நாடகங்கள் பொய்கள் புரட்டுகள் ஏமாற்று வேலைகள் லஞ்சலாவண்யங்கள் சதிகள் என்று எத்தனையோ பார்த்திருக்கிறான்.

அவர்கள் முடிவுக்கு எதிராக இருக்கும் பல அதிகாரிகளை இடமாற்றம் செய்வது மிரட்டுவது அல்லது யாரையும் கடத்தி வைத்து தன் சொல்பேச்சு கேட்க வைப்பது என்று சற்று அதிகப்படியான வன்முறையான அரசியலை கூட அவன் பார்த்திருக்கிறான்.

ஆனால் சமீபமாக கொலை செய்வது என்பது சாதாரணமாக மாறிக்கொண்டு வருவதையும் அவர்களுக்கு எதிராக யாரும் தலை நிமிர்ந்து பார்ப்பதை கூட விரும்பாமல் உடனடியாக அவர்கள் நசுக்கப்படுவதையும் கவனித்து வரும் நீரூபனுக்கு இப்போது வசி குறிப்பிட்டுச் சொல்லும் விஷயம் அப்படியானதாக இருக்குமோ என்ற ஐயம் எழுந்தது.

அமைதியாக கிளம்பி நேராக வசீகரன் அலுவலகத்திற்கு சென்றான் எந்த பணியாளரும் வந்திருக்காது நிலையில் தூய்மை பணியாளர்கள் மட்டும் ஆங்காங்கே தங்கள் பணிகளை செய்து கொண்டிருந்தனர்.

நீரூபனை கண்ட வசீகரன் வேகமாக எழுந்து அவனை நோக்கி வந்து கைப்பற்றி அங்கிருந்த அறைக்கு அழைத்துச் சென்றான்.

“நீ இவ்வளவு வேகமா வர அளவுக்கு அதுல என்ன இருக்கு? கண்டிப்பா என் வேலையெல்லாம் சொன்னதுக்கு அப்புறமும் நீ வர சொல்லி இன்சிஸ்ட் பண்ணும் போதே ஏதோ பெரிய விஷயம்னு என்னால புரிஞ்சுக்க முடிஞ்சுது.” என்று அவனை ஆதரவாக பற்றி கொண்டு விட்டு அங்கிருந்த மேசையின் மேல் சாய்ந்த அமர்ந்தான். பக்கத்தில் இருந்த நாற்காலியை இழுத்து போட்டு அமர்ந்து கொண்ட வசீகரன்.

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

“ஆமா மாமா நீங்க சொல்றது சரிதான் அதுல இன்னும் பெரிய விஷயம் இருக்கு. அது மட்டும் இல்ல இன்னும் நாலு எம்எல்ஏவை கொலை செய்ய பிளான் போட்டு இருக்காங்க. அதை பத்தி ரெண்டு பேரு பேசுற ஆடியோ பைலும் அதுல இருக்கு.” என்று கூறியவன் விழிகளில் லேசான மிரட்சி.

சாதாரண உயர் மத்திய தர குடும்பத்திலிருந்து நேத்ராவிற்காக கடினமாக படித்து முன்னேறி தொழில் செய்து இந்த இடத்திற்கு வந்திருந்தாலும் அரசியலில் இது போன்ற கொடூரங்கள் நடக்கும் என்பதை அத்தனை எளிதில் நம்பக்கூடியவனாக வசீகரன் இத்தனை காலம் இருந்திருக்கவில்லை.

ஆனால் உண்மை கண் முன்னே செந்தணலாக தகிக்கும் பொழுது அதனை தவிர்க்கவும் அவனால் இயலவில்லை.

அந்த வீடியோக்களுக்கான காபி ஒன்றை எடுத்து கடவுச்சொல்லிட்டு நீரூபனின் கையில் கொடுத்தவன்

“அவசரம் இல்லை நிதானமா இதெல்லாம் பாருங்க. எனக்கு இதெல்லாம் ரொம்ப புதுசு. என்னால ஹேண்டில் பண்ண முடியும்னு எனக்கு தோணல. உங்க அப்பா நாளைக்கு எனக்கு ஆபீஸ்ல வந்து பேலன்ஸ் பேமெண்ட் வாங்கிக்க சொல்லி இருக்காரு. அதை வாங்கிக்கிட்டு மொத்தமா இந்த அரசியலுக்கு ஒரு கும்பிடு போடுறது தான் எனக்கு நல்லதுன்னு தோணுது.” என்று சற்று பதட்டத்துடன் வசீகரன் குறிப்பிட்டான்.

“உனக்கே நீ யாருன்னு இன்னும் புரியல. என் அப்பா கண்டிப்பா உன்ன வந்து பாக்க மட்டும் தான் சொல்லி இருப்பாரு பணம் தரேன்னு சொல்லி இருக்க மாட்டாரு. அவரோட சட்டமன்ற தேர்தலையும் ஜெயிக்க உன்னோட உதவி அவருக்கு தேவை. இப்ப உன்ன கண்டிப்பா அவரு விடப் போறதில்ல. அதனால இந்த அரசியலும் உன்ன விடாது.

அரசியல் வாழ்க்கை மட்டுமில்லை அது சம்பந்தமான வேலைகளும் ஒருதரம் நம்ம தொட்டுட்டா நம்மளை விடாது தொடரத்தான் செய்யும் நீ பயப்படுற அளவுக்கு இதுல எதுவும் இல்ல. உன்னால கையாள முடியாத பிரச்சனைகளும் இங்கே இல்ல. எதுனாலும் நான் உன்னோடு இருக்கேன்றத நீ மறக்கறது கூடாது.” என்று வசீகரனின் கையை அழுத்தமாக பற்றி கொண்டு அவன் கன்னத்தில் அன்போடு தட்டிக் கொடுத்தான்.

“நீங்க சொல்ல வர்றது எனக்கு புரிஞ்சாலும் அட் தி என்ட் ஆப் தி டே எனக்கு வேண்டியது எல்லாம் நானும் நேத்ராவும் சேர்ந்து வாழப்போற அந்த நிம்மதியான வாழ்க்கை தான். அதை இந்த அரசியல் கொடுக்கும்ன்ற எனக்கு நம்பிக்கை இல்ல. நான் இதிலிருந்து விலகிக்க நினைக்கிறேன் மாமா. என்னை தப்பா நினைக்காதீங்க.” என்று வசீகரன் முடிவோடு கூறினான்.