அடங்காத அதிகாரா 32

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அதிகாரம் 32

மளமளவென்று ஏறிவரும் மக்களின் ஆதரவை எரிச்சலுடன் கவனித்தது ஆளுகின்ற கட்சி திடீரென்று மறுமலர்ச்சி மக்கள் கழகம் எப்படி இத்தனை ஆதரவை பெற முடியும் என்று சிந்திக்க, அவர்களின் ஐடி விங் இதற்காக அந்த கட்சி ஒரு கம்பெனியை நியமித்திருப்பதை பற்றி அவர்களுக்கு கூறியது.

அதனுடைய பின்புலத்தை ஆராயச் சொன்னார் அந்த கட்சியின் தலைவரும் தற்போது ஆண்டு கொண்டிருக்கும் முதல்வராகவும் இருப்பவருமான வீரண்ணா.

எதிர்க்கட்சியின் இந்த  பரிமாணத்தை அவர் சற்றும் எண்ணியிருக்கவில்லை. ஏனெனில் திருமூர்த்தியும் அவரது மகளுமே கட்சியின் மொத்த பொறுப்புகளையும் கவனிப்பதாகவும் மற்றவர்களை அவர்கள் மதிப்பதில்லை என்பது போன்ற தகவல்களில் மிதப்பாக இருந்தவர் திருமூர்த்தி இப்படி ஒரு முடிவு எடுப்பார் என்பதை சற்றும் எதிர்பார்த்து இருக்கவில்லை

தோல்வி கண்களுக்கு முன்னே தெரிய ஆரம்பித்ததும் இதை இப்படியே விடுவது தங்களுக்கு நல்லதல்ல என்று எண்ணியவர், குட்டையை குழப்பி விட முடிவெடுத்தார்.

முதல் நாள் நடந்த மாநாட்டில் அஞ்சனா கலந்து கொள்ளாததை தெரிந்து கொண்டவர் உடனடியாக பத்திரிகையாளர் சந்திப்பை ஏற்பாடு செய்தார்.

சாதாரணமாக நலத்திட்டங்களை பற்றி பேசுவது போல அவரது பேச்சை ஆரம்பிக்க, அவர்களுக்கு சாதகமாக இருக்கும் ஒரு தொலைக்காட்சியின் நிருபர் முதல் நாள் நடந்த எதிர்க்கட்சி மாநாட்டைப் பற்றி கேள்வியை எழுப்பினார்.

“இதுல சொல்றதுக்கு என்னங்க இருக்கு? ஜெயிக்கணும்னு முடிவு பண்ணிட்டா இரத்தமாவது சொந்தமாவது?  பெத்த மகளையே நம்பாம தன் கட்சி தொண்டர்களையும் நம்பாம இத்தனை வருஷமா தோள் கொடுத்த அவருடைய சகோதரர்கள் மாதிரி இருக்கிற முக்கியமான கட்சி ஆட்களையும் நம்பாம, யாரோ ஒரு கார்ப்பரேட்க்காரனை நம்பி ஏதேதோ செஞ்சிட்டு இருக்காரு திருமூர்த்தி.

அவரு எனக்கு நல்ல நண்பர். இந்த மாதிரி ஒரு செயல செய்வார்ன்னு நான் எதிர்பார்க்கல. மக்கள் வேணா திரளா நேத்து அது வேடிக்கை பார்க்க ஓடி இருப்பாங்களே தவிர ஒரு நாளும் அவரை நம்பி ஓட்டு போட மாட்டாங்க. நாலு வருஷமா நாங்க செய்துவிட்டு வர நல்ல விஷயங்கள் மக்கள் மனசுல பதிஞ்சிருக்கும்.

கண்டிப்பா அவங்க உள்ளாட்சி தேர்தலிலும் எங்கள தான் தேர்ந்தெடுப்பாங்க.”  என்று கூறிவிட்டு பத்திரிகையாளர் சந்திப்பை முடித்துக் கொண்டார்.

இவரின் இப்படியான அரசியல் வியூகத்தை வசீகரன் எதிர்பார்த்திருக்கவில்லை.

அனைத்து தொலைக்காட்சிகளிலும் அவரது பேட்டி ஒளிப்பிரப்பானத்தில் பதட்டம் அடைந்த வசீகரன் உடனடியாக கைப்பேசியில் முருகப்பனை தொடர்பு கொண்டவன்.

“ஐயா இப்படி பேசி வச்சிருக்காரே, இதுக்கு எந்த மாதிரி பதில் கொடுக்கணும்? நாமளும் பத்திரிகையாளர் சந்திப்பு வைக்கலாமா? இல்ல அவர் சொன்னது பொய்ன்னு நிரூபிக்கிற மாதிரி வேற ஒரு மாநாடோ கூட்டமோ நடத்தலாமா? இல்ல நம்மளோட கூட்டணி கட்சி தலைவர்களை வச்சு பேச வைக்கலாமா?” என்று படபடப்புடன் வினவினான்

“ஏன் தம்பி படபடக்குறீங்க?இதெல்லாம் அரசியலில் இருக்கிறது தான். அவரோட எண்ணம் அஞ்சனாவையும் கட்சி ஆளுங்களையும் திருமூர்த்திக்கு எதிரா திருப்புறது தான். உங்கள நம்புற அளவுக்கு அவங்க நம்பலைன்னு அவங்க மனசுல பதிய வைக்க முயற்சி பண்றாரு அத நீங்க சரி பண்ணா போதும்” என்று சொன்னவர், *நான் யோசிச்சு ஏதாவது சொல்றேன் நீங்களும் யோசிங்க” என்றபடி கைப்பேசியை வைத்துவிட்டார்

என்ன செய்வது என்று குழப்பத்துடன் யோசித்துக் கொண்டிருந்த வசீகரனின் தோளில் அழுத்தமாக கையொன்று வந்து விழுந்தது. யார் என்று திரும்பிப் பார்த்தவன் அங்கே சிரித்த முகமாக நின்ற நீரூபனைக் கண்டு நொடியும் தாமதிக்காமல் “மாமா” என்று அணைத்து கொண்டான். அந்த அமைப்பில் திடீரென்று திசை தெரியாமல் தவித்த குழந்தை தந்தையை கண்டதும் அடையும் நிம்மதியும் ஆறுதலும் தெரிந்தது.

நீரூபன் வசீகரனிடம் “என்னப்பா ரொம்ப பெரிய பொறுப்பை தூக்கி உன் தலையில் வச்சுட்டேனா?” என்று மென்மையாக புன்னகைத்து அவன் முதுகைத் தடவிக் கொடுத்தான்.

நீரூபனை விட்டு பிரிந்த வசீகரன் அவனை அழைத்து சோபாவில் அமர வைத்து அருகே அமர்ந்தபடி “திடீர்ன்னு இப்படி எல்லாம் பேசுவாங்கன்னு நான் நினைக்கல மாமா. ஏதோ மனசுல தோன்றதெல்லாம் சரியாதான் இருக்கும்ன்ற நம்பிக்கையில் செஞ்சுட்டு இருந்தேன். நேத்து மாநாட்டுக்கு அண்ணி ஏன் வரலன்னு
தெரியல. அத வச்சு இப்படி குழப்புவாங்கன்னு நான் கொஞ்சமும் யோசிக்கவே இல்ல.” என்று பதற்றத்தை வெளிப்படையாகவே காட்டினான்.

“அவங்க ஒரு ஸ்டாண்ட் பண்ணுனா நாம ஒன்னு பண்ணுவோம். அவங்க நமக்கு எதிராக யாரையாவது திருப்பி விட பாத்தா, நாம அவங்களுக்கு எதிரா ஏதாவது திருப்பி விடுவோம். அவ்வளவுதான்.” என்று இலகுவாக நீரூபன் கூறியதும் புரியாமல் விழித்தான் வசீகரன்.

“அஞ்சு ஏன் வரலன்னு காரணத்த சொன்னாலே பிரச்சனை முடிஞ்சிரும். அஞ்சு அந்த ஆள் கூட ஹாஸ்பிடல்ல இருக்கா. அதனால அவளால மாநாட்டில் கலந்துக்க முடியல. இத மட்டும் சொன்னா பெருசா ஒன்னும் நடக்காது. ஆனா… இரு” என்றவன் கைபேசி எடுத்து ஆனந்துக்கு அழைத்தான்.

“நான் சொல்ற விஷயத்தை யார் மூலமாவது பிரஸ்ஸுக்கு லீக் பண்ணு. சோர்ஸ் நாம தான்னு தெரியக்கூடாது” என்று தெளிவாக கூறிவிட்டு என்ன சொல்ல வேண்டும் என்பதை அவன் நிதானமாக கூற விழிவிரிய அவனையே பார்த்துக் கொண்டிருந்தான் வசீகரன்.

அடுத்த பதினைந்தாவது நிமிடத்தில் அனைத்து செய்தி தொலைக்காட்சிகளிலும் பரபரப்பு செய்தியாக அந்த செய்தி ஒளிபரப்பப்பட்டது.

“மறுமலர்ச்சி மக்கள் கழகத்தின் மகளிர் அணி தலைவியும் கட்சித் தலைவரின் மகளுமான அஞ்சனாதேவியின் கணவர் ராக்கேஷ் குமார் கட்சியின் பணிக்காக வெளியே சென்றிருந்த பொழுது அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டு பத்து நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருடைய கால் எலும்பில் முறிவு ஏற்பட்டு இருப்பதோடு வயிற்றில் அடிபட்டதன் காரணமாக ஏற்பட்ட பாதிப்பினால் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து கண்காணிக்கப்பட்டு கொண்டிருக்கிறார். கணவரின் உடல் நலக்குறைவால் மிகவும் மன உளைச்சலில் இருக்கும் அஞ்சனா தேவியை அரசியல் காரணத்தைக் காட்டி மாநாட்டில் பங்கு கொள்ள வைக்க விரும்பாத கட்சியின் தலைவர் திருமூர்த்தி, அதற்காக அவசர அவசரமாக ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தை ஏற்பாடு செய்து உள்ளாட்சித் தேர்தல் பணிகளை முடுக்கி விட்டிருக்கிறார்.

திரு.ராக்கேஷ் குமார் அவர்களை தாக்கியது யார் என்ற கேள்வி பூதாகாரமாக எழுந்திருப்பதோடு இத்தனை நாட்கள் இல்லாமல் முதல்வர் ஏன் அஞ்சனாதேவியை குறிப்பிட்டு கேட்கிறார் என்ற கேள்வியும் மக்களிடையே நிலவி வருகிறது.” என்று அடுத்தடுத்த ஸ்லைடுகளில் பரபரப்பு செய்திகளாக நிறுத்தாமல் ஒளிபரப்பப்பட்டு கொண்டே இருந்தது. அதை கவனித்த வசீகரன்,

“மாமா என்னது இது? அவரை அன்னைக்கு அடிச்சீங்க, இன்னுமா ஆஸ்பத்திரியில இருக்காரு?” என்று புரியாமல் வினவ,

“வயித்துல உதைச்சிட்டானுங்க போல. ஏதோ காயமாகி இருக்கு. அந்த காயத்துல அடிபட்ட இடத்திலிருந்து மண்ணு பட்டதுல இன்பெக்சன் ஆயிடுச்சு. இன்ஃபெக்ஷன் சரியாகற வர வரைக்கும் ஹாஸ்பிடல்ல இருக்கட்டும்னு நான் தான் சொன்னேன். அதே மாதிரி அக்காவை கூட இருந்து பார்த்துக்கன்னு நான்தான் சொன்னேன். ஏன்னா மாநாட்டில் அப்பா நிதானமா எல்லாரோடையும் பேசணும். அக்கா இருந்தான்னா அவரு அவளை சேட்டிஸ்ஃபை பண்றத தான் யோசிப்பாரு. அதுக்காக தான் அஞ்சனாவை நிறுத்தி வச்சேன். ஆனா பரவாயில்லை. இந்த கட்சித் தலைவர் பண்ணினதுக்கு அந்த சூழ்நிலையை நமக்கு சாதகமா பயன்படுத்திக்க முடிஞ்சுச்சு .” என்று கூறிவிட்டு

“எந்த நேரம் வேணாலும் உன்னால இதை ஹேண்டில் பண்ண முடியலைன்னா என்ன கூப்பிடு. இந்த கம்பெனி உன்னோடது. நீயே பார்த்துக்கோன்னு சொன்னேனே தவிர எல்லாத்தையுமே நீ தான் பாத்துக்கணும், என்கிட்ட எதுக்குமே வரக்கூடாதுன்னு நான் சொல்லவே இல்ல. தயங்காத அதே மாதிரி எதுக்கும் பதட்டமாகாத. நான் இருக்கேன்.” என்று தட்டிக் கொடுத்துவிட்டு கிளம்ப எத்தனித்தான்.

“மாமா” என்று கைநீட்டி தடுத்தவன் “உட்காருங்களேன்” என்று மறுபடியும் அவனை அமர்த்தினான்.

“நேத்ரா சமீபமா ரொம்ப ரெஸ்ட்லெஸ்ஸா இருக்கா
இந்த தேர்தல் முடிந்ததும் நான் அவளை எங்கயாச்சும் வெளியில கூட்டிட்டு போயிட்டு வரவா?” என்று தயக்கமாக வினவினான்.

“தாராளமா போயிட்டு வாங்க. நோ பிராப்ளம். நான் தான் அன்னைக்கு சொல்லிட்டேனே எனக்கு உங்க மேல நம்பிக்கை இருக்கு. யூ நோ யுவர் லிமிட்ஸ். ஆனா கிளம்பறதுக்கு முன்னாடி அப்பா கிட்ட உங்க கல்யாணத்தை பத்தி நான் பேசிடறேன். எனக்குமே இந்த கல்யாணம் நடந்துட்டா நேத்ரா கொஞ்சம் ரிலீஃபா பீல் பண்ணுவான்னு தோணுது.” என்று வசீகரனின் தோளில் தட்டிக் கொடுத்துவிட்டு கிளம்பினான்.


தன்னுடைய அறையில் சத்தமாக பாடலை ஒலிக்க விட்டு நடனமாடிக் கொண்டிருந்தாள் பூமிகா.

அவளையே கண்ணிமைக்காமல் பார்த்தபடி கட்டிலில் அமர்ந்திருந்தால் நேத்ரா.

அறைக் கதவை திறந்து கொண்டு கையில் ட்ரேயுடன் நுழைந்த அர்ச்சனா மகளின் ஆட்டத்தையும் அறையில் ஒலிக்கும் சத்தத்தின் அளவையும் கண்டு முகத்தை சுளித்தபடி காதுகளை ஒரு கரத்தால் மூடிக்கொண்டு “அத கொஞ்சம் அணைச்சு தொலடி” என்று கத்தினார்.

அவரைக் கண்டு புன்னகைத்த நேத்ரா அவர் கையில் இருந்த ட்ரேவை எட்டி வந்து வாங்கிக் கொண்டு கட்டிலின் மேல் வைத்தாள். அவரும் அவளுக்கு அருகில் அமர்ந்தபடி “என்னெல்லாம் பண்றா பாருமா” என்று மகளை அவளிடம் புகார் அளித்தார்.

நேத்ராவோ “ஏன் ஆன்ட்டி நல்லா தானே டான்ஸ் ஆடுறா, பாட்டும் நல்லா தான் இருக்கு.”என்று சிரித்தபடி அவர் கொண்டு வந்திருந்த பழச்சாறினை எடுத்து அவர் கையில் கொடுத்து சாய்ந்து அமர்ந்து பொறுமையாக பூமிகாவை ரசிக்கும் படி சொன்னவளை உற்று நோக்கினார் அர்ச்சனா.

“நீயும் உன் அண்ணன் மாதிரி தான். இவ என்ன செஞ்சாலும் சரின்னு சொல்ற. ரசிக்க வேற சொல்ற. இங்க பாரு தையா தக்கான்னு ஆடிக்கிட்டு இருக்கா.” என்று மகளை ஒரு பார்வையும் நேத்ராவே ஒரு பார்வையும் பார்த்தார் அர்ச்சனா.

“ஆன்ட்டி தனியா ஒரு படத்துக்கு கோரியோகிராபி பண்ற அளவுக்கு உங்க பொண்ணு திறமையான டான்ஸர். நீங்க என்னடான்னா ஏதோ எல்கேஜி குழந்தை கைய கால ஆட்டுறது மாதிரி பேசுறீங்க?” என்று அவர் தோளில் சாய்ந்து கொண்டு வினவ,

“எனக்கு என்னவோ இவளை பார்த்தா அப்படித்தான் இருக்கு. நம்ம பிள்ளைங்க எவ்வளவு வளர்ந்தாலும் இன்னும் சின்னதா சிறு பிள்ளைத்தனமா நம்ம காலையே சுத்தி வந்து சேட்டை செய்வாங்க இல்ல அந்த நினைவு மறுபடி மறுபடி வர்ற மாதிரி, இவ எவ்வளவோ வளர்ந்திருந்தாலும் பெரிய இடத்தை அடைந்திருந்தாலும் எனக்கு இன்னும் என்ன பாட்டுன்னு தெரியாம கை கால ஆட்டிகிட்டு என்னை பாருமா என்ன பாருமா ன்னு என்னையே சுத்தி சுத்தி வந்த ஆடுற அந்த குட்டி பூமி பாப்பா தான்.” என்று கண்களில் பழைய நினைவுகள் மிதந்தபடி கூறினார் அர்ச்சனா.

“என்னை பாப்பான்னு கூப்பிடாத மா” என்றபடி இன்னொரு பழச்சாறினை எடுத்து பருகுவதற்காக அருகே அமர்ந்து கொண்டாள் பூமிகா.

“ஆமா ஆமா ஆன்ட்டி அவளை பாப்பான்னு கூப்பிடாதீங்க . அதுக்கெல்லாம் ஃபுல் ரைட் ரிசர்வ் பண்ணி வைத்திருக்கிறது. எங்க அண்ணன் தான் நீங்களும் நானும் அப்படி எல்லாம் கூப்பிடக்கூடாது.” என்று நமுட்டு சிரிப்பு சிரித்தபடி கூறிய நேத்ராவை சட்டென்று கைகளில் தட்டிய பூமிகா,

“அண்ணி நீங்களும் என் அம்மாவோட சேர்ந்துட்டு கேலி பண்றீங்களா? மாமா தான் என்ன மொத மொத பாப்பான்னு கூப்பிட்டார். இன்னைக்கு வந்து எங்க அம்மா காப்பி அடிக்கிறாங்க அதான் சொல்லாதன்னு சொன்னேன். அது கூட சொல்ல கூடாதா?” என்று சலுகையாக நேத்ராவின் தோளில் தன் முதுகை சரித்து தலையை அவள் காதுகளில் லேசாக முட்டினாள்.

“நாம எப்படி உட்கார்ந்து இருக்கோம் அந்த குரங்கு எப்படி உட்கார்ந்து இருக்கு பார்” என்று அர்ச்சனா தன் மகளின் இடுப்பில் கிள்ளிவிட லேசாக பழச்சாற்றினை நேத்ராவின் குறுத்தியில் சிந்திவிட்டாள் பூமிகா.

“அச்சச்சோ” என்று அவள் பதற

“உன்கிட்ட இருக்க புது டிரஸ்ஸ நேத்ராக்கு கொடு. டிரஸ் மாத்திக்கடா நேத்ரா. நான் போய் உங்களுக்கு சாப்பிட ஏதாச்சும் எடுத்துட்டு வரேன்.” என்று எழுந்தவர் அங்கே அலறிக் கொண்டிருந்த சவுண்ட் சிஸ்டத்தினை அணைத்துவிட்டு தொலைக்காட்சியினை ஆன் செய்தார்.

டிடிஹெச் நிறுவனத்தின் முதல் பக்க விளம்பரங்கள் ஒளிபரப்பானதும் ரிமோட் எங்கே என்றவர் தேட அதன் அருகில் அமர்ந்திருந்த பூமிகா அவளும் தேடுவதற்காக நகர சேனல்கள் அதன் போக்கில் மாற ஆரம்பித்தது.

“அதுலயா உட்கார்ந்திருக்க?” என்று மகளை அதட்டியவர் தான் எப்பொழுதும் பார்க்கும் ஒரு சமையல் நிகழ்ச்சியின் சேனலை குறிப்பிட்டு அதனை போடுமாறு கூறிவிட்டு அறையை விட்டு வெளியே செல்ல நினைத்தார்.

ரிமோட்டிலிருந்து எழுந்து கொண்ட பூமிகா அதை எடுத்த போது செய்தி சேனல் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. அதில் அஞ்சனாவை பற்றிய செய்தியை கண்டு அர்ச்சனா புரியாமல் மகளை நோக்க செய்திகளைக் கண்ட நேத்ராவின் முகமோ வெளிறி இருந்தது.