அடங்காத அதிகாரா 25
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அதிகாரம் 25
சென்னையின் முக்கிய பகுதியில் இருக்கும் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் காரிடாரில் நடந்து கொண்டிருந்த நீரூபனின் முகம் இறுக்கத்தை தத்தெடுத்திருந்தது.
அவனைக் கண்டு மருத்துவர்கள் இருவர் வேகமாக ஓடி வந்தனர்.
“சார் உங்க மாமா நல்லா இருக்கார். கால்ல ஃபிராக்சர் உடம்புல கொஞ்சம் காயம்.” என்று படபடவென்று கூறினார்.
“ஓகே” என்று அமைதியாக கூறிய நீரூபனிடம்,
“இப்ப தான் ஐயா போன் பண்ணி ராக்கேஷ் சாரை நல்லா பார்த்துக்க சொன்னாரு. அப்பா கிட்ட ஒரு வார்த்தை சொல்லிடுங்க சார்.” என்று பவ்வியமாக கூறினார்.
அது அவர்கள் கட்சியின் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஆறுமுகத்திற்கு சொந்தமான மருத்துவமனை.
“சரி” என்று தலையசைத்தவன் நேராக ராக்கேஷ் அனுமதிக்கப்பட்டிருந்த ஸ்பெஷல் வார்டுக்குள் நுழைந்தான். நர்ஸ் ஸ்டேஷனில் இருந்த சற்றே வயதான செவிலி அவனை நோக்கி வந்து ராகேஷ் இருந்த அறையைக் காட்டிவிட்டு தன் இடத்துக்கு திரும்பினார்.
ஒரு நிமிடம் அவன் இருந்த அறைக்கு வெளியே நின்ற நீரூபன் தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு பின் உள்ளே நுழைந்தான்.
காலில் மாவுக் கட்டு போடப்பட்டு சோர்வாக கட்டில் சாய்ந்து படுத்திருந்தான் ராக்கேஷ்.
அவன் அருகில் வரும்போதே நீரூபனின் முஷ்டி இறுகியது.
அவனது அருகாமை ராக்கேஷை கன் விழிக்க வைத்திருக்க,
நீரூபனைக் கண்டதும் அவன் முகம் வலியைக் காட்டி, “என்ன ஆச்சுன்னு தெரியல யாரோ வந்து அடிச்சுப் போட்டுட்டு போயிட்டாங்க.”என்று முனகலாகக் கூறினான்.
“நான் கொடுத்த காசுக்கு ஒழுங்கா அடிக்கலன்னு தோணுது மாமா. அவனுங்களை அடுத்த பெட்ல நானே படுக்க வைக்கிறேன்.” என்று பல்லைக் கடித்துக் கூறினான்.
அவன் சொன்னதைக் கேட்டு ராக்கேஷ் திகைப்புடன்,
“என்ன டா சொன்ன? என்னை அடிக்க ஆள் அனுப்பினது நீயா? ஏன் டா நான் தான் உன் பக்கம் வரவே இல்லையே?” என்று அவன் பதறித் துடிக்க,
“என் பக்கம் வரலைன்னா என்ன? ஏன் டா என் தங்கச்சி பக்கம் போன? அவனுங்க கிட்ட உன் உயிரை மட்டும் தான் விட்டு வைக்க சொன்னேன். ஆனா காலை மட்டுமே உடைச்சு வச்சிருக்காங்க.”
“நானா.. நான்.. டேய் ஏன் உன் தங்கச்சியை பார்த்தேன்னு என்கிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டு அடிக்க சொல்ல மாட்டியா டா? அவ வீட்டுக்கு தெரியாம என்னவோ செய்யறான்னு சந்தேகப்பட்டு சும்மா அவளை கண்காணிச்சேன் டா.” என்றான் பாவமாக.
“அவளை கண்காணிக்க நீ யாரு? ஒரு பொண்ணுக்கு நம்மளை யாரோ உத்துப் பார்க்கறாங்கன்னு சொந்த வீட்டிலயே அன்ஈசியா ஃபீல் பண்ண வைக்க நீ யாரு டா?” என்று எக்கி அவன் சட்டையைப் பிடித்தான்.
“யாருன்னா? நான் உன் அக்கா புருஷன் டா” என்று கண்களில் கோபத்தை வைத்து ராக்கேஷ் பதிலளிக்க,
“அதுனால தான் உன்னை அடிக்க மட்டும் சொன்னேன். இல்ல இந்நேரம் உன்னை புதைக்க ஏற்பாடு நடந்துட்டு இருந்திருக்கும். இப்பவும் சொல்றேன், நீ என் அக்கா புருஷன் அப்படின்னா அதோட லிமிட் என் அக்கா வரை தான். இனிமே என் விஷயத்துலயோ என் தங்கச்சி விஷயத்துலயோ உன்னோட தலையீட்டை நான் பார்த்தேன்னா அக்காவாவது ஒண்ணாவது? கொன்னு போட்டுடுவேன். என் தங்கச்சியை கவனிக்க எனக்கு தெரியும். இன்னொரு தடவை உன் கண்ணு அவளை பார்க்க கூடாது.”என்று விரல் நீட்டி எச்சரித்தவன் வெளியேறப் போனான்.
“டேய் உன் அக்கா கிட்ட நீதான் இதை செய்தன்னு நான் சொல்லுவேன்.” என்று ஆவேசமாக கத்தத் துவங்கினான் ராக்கேஷ்.
“தாராளமா சொல்லு. நானும் நீ என்ன செய்தன்னு சொல்லுவேன். அவளை விட்டுட்டு அவளோட தங்கச்சிக்கு ரூட் விடுறன்னு நான் சொன்னா அவ என்னை நம்புவாளா இல்ல உன்னையா?” புருவம் உயர்த்திக் கேட்டவன்,
“இப்பவும் உன்னை விட்டுட்டு போக காரணம் நீ நேத்ராவை தப்பா பார்க்கலன்னு சொன்னதால் தான். உண்மை அது இல்லன்னு எனக்கு தெரிஞ்சா அடுத்த நிமிஷம் நீ மண்ணுக்குள்ள இருப்ப ராக்கேஷ். ஐம் நாட் பிளஃப்பிங்க். ஐ மீன் இட்.” என்று வெளியேறினான்.
போகும் அவனை வெறித்த ராக்கேஷ் தன் காலில் இருந்த கட்டையும் தன் காயங்களையும் பார்த்தான். அடிபட்ட ஓநாயின் வெறி அவன் கண்களில் இருந்தது.
மறுமலர்ச்சி மக்கள் கழகம் கட்சியின் மூன்றாம் தளம், நூற்றுக்கும் மேற்பட்டோர் அமர்ந்து கொள்ளும் வகையில் இருந்த சிறு அரங்கை அன்றைய புகைப்பட பிடிப்புக்காக திரைத்துறை உள்ளரங்கு போல வடிவமைக்கப்பட்டிருந்தது.
பெரிய கண்ணாடியின் முன்னே மேக்கப் ஆர்டிஸ்ட் கைவண்ணத்தில் பளபளவென்று ஜொலித்துக் கொண்டிருந்தார் திருமூர்த்தி.
“ஏன் பா இதெல்லாம் அவசியமா? நார்மலா நாங்க வெளில போகும் போது வரும்போது போட்டோகிராபர் பின்னாடி வந்து போட்டோ எடுத்துப்பார். நீங்க என்னடான்னா சினிமா ஷூட்டிங் மாதிரி பண்றீங்க?” என்றார் திருமூர்த்தி.
“ஐயா அதெல்லாம் முன்னாடிங்க. இப்ப எல்லாமே இப்படித்தான்.”என்று தொண்டன் ஒருவன் வளைந்து நின்று கூறவே அவனை உற்று நோக்கினார்.
அவன் வாயை மூடிக்கொண்டு அங்கிருந்து நகர்ந்திருந்தான்.
“ஐயா அஞ்சனா அம்மா வருவாங்கன்னு சொன்னிங்க. ஆனா இன்னும் வரலைங்க.” என்றான் மற்றொருவன்.
அவர் தன் கைபேசி எடுத்து மகளுக்கு அழைக்க, அவளோ அழைப்பை ஏற்கவே இல்ல.
“சரி விடுங்க அஞ்சு வந்தா அப்ப எடுக்கலாம். இல்லன்னா அவளை தனியா எடுக்க ஏற்பாடு பண்ணலாம்.” என்று அவரது புகைப்படங்களை எடுக்க அவர்கள் கூறியது போல நின்றார்.
வசீகரன் அவரது புகைப்படங்களை பற்றி அந்த நிகழ்வின் மேலாளரிடம் விசாரித்துக் கொண்டிருந்தான்.
“எல்லாமே ஓகே சார். ஆனா அஞ்சனா மேடம் வரல.” என்று அவன் கூற,
“சரி திருமூர்த்தி சார் இருந்தா போன் கொடுங்க” என்று கூறிய வசீகரன் அவரிடம்,
“வணக்கம் சார். உங்க பொண்ணு வரலைன்னு மேனேஜர் சொன்னாரு. மறுபடி இதே மாதிரி ரெடி பண்ண சிரமம். அதுவும் இல்லாம நாம வேலையை உடனே ஆரம்பிக்கணும்.” என்றான் அழுத்தமாக.
“என்னாச்சுன்னு தெரியல தம்பி, அஞ்சு போன் எடுக்கல.” என்ன பண்றது? என்றார் சிந்தனையோடு.
“சரி சார். அப்ப வேற யாரையாவது வர சொல்ல முடியுமா? உங்க அரசியல் வாரிசு? இல்ல உங்க குடும்ப உறுப்பினர்? உங்க மனைவி?” என்று வசீகரன் எடுத்துக் கொடுக்க,
“இல்ல மனைவிக்கு இதெல்லாம் தெரியாது. அதுவும் இல்லாம நான் அஞ்சுவை தான் வாரிசுன்னு சொல்லி இருக்கேன் தம்பி.” என்றார் சங்கடமாக.
“சரி சார். ஆனா உங்களையும் உங்க கட்சி ஆட்களை மட்டுமே காட்டினா நாளைக்கு அஞ்சனா மேடமே ஆனாலும் தனியா தெரிவங்க. இதுல சேர்த்து ஷூட் பண்ணும்போது இப்ப அவங்க இல்லைன்னாலும் குடும்ப உறுப்பினர்கள் இருப்பது நல்லா இருக்கும். அவங்க கேன்வாஸ் பண்ண போனாலும் ஸ்ட்ரேஞ்ஜா தெரியாது.” என்றதும்,
“புரியுது, ஆறுமுகம் , மலைச்சாமி, கோதண்டம் எல்லாரும் வந்தாச்சு. நான் வெயிட் பண்ணி பார்க்கறேன் தம்பி அஞ்சு வரல்லன்னா சொல்றேன்.” என்றார் சிந்தனையோடு அமர்ந்து விட்டார்.
அழைப்பை துண்டித்த வசீகரனின் முகத்தில் மர்மமான சிரிப்பு ஒன்று உதித்தது.
“எந்தன் நெஞ்சில்… ஹோ ம்ம் ம்ம்…
எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா…
எண்ணம் எங்கும் நீ பாடும் திருதிரு தில்லானா…
இசையின் ஸ்வரங்கள் தேனா…
இசைக்கும் குயில் நீதானா வா…”
பூமிகா மென்மையாக பாடிக்கொண்டே வாகனத்தை ஓட்டிக் கொண்டிருக்க,
அவளது கைபேசி கானம் பாடி அழைத்தது.
வாகனத்தை ஓரமாக நிறுத்தி விட்டு அதனை ஏற்றவள், “சொல்லு மச்சி” என்று ஆர்வமாக கேட்டாள்.
“எங்க டி இருக்க? சார் காலைல இருந்து ரொம்ப டென்ஷனா இருக்கார் டி. கிட்ட போகவே பயமா இருக்கு. என்ன ஆச்சுன்னு தெரியல. வெளில போயிட்டு வந்து கொஞ்சம் நிதானமா இருந்தார் இப்ப மறுபடி கோபமா இருக்கார்.” என்றான் கவலையாக
“டேய் அவர் பனிமலையும் எரிமலையும் கலந்த கலவை டா. உனக்கு பயிற்சி வேண்டும் நண்பா.” என்று சிரித்தாள்.
“ஏய் எனக்கு ஆயிரம் வேலை இருக்கு டி. அவர் கிட்ட நிறைய சைன் வாங்கணும், ஸ்கூல் விஷயமா நாங்க வெளில போகணும். ஆனா கிட்டயே போக முடியல டி. அதுக்கு வழி சொல்லு.”
“நோ டென்ஷன் மச்சி. இன்னிக்கு குரூப் டான்ஸ் பிராக்டிஸ் தான். நான் மாமாவை வந்து பார்த்துட்டு அப்பறம் போறேன்.” என்றவள் வாகனத்தை நீரூபனின் அலுவலகத்தை நோக்கி செலுத்தினாள்
அவள் தனது ஸ்கூட்டரை நிறுத்தும்போது நீரூபன் வேகமாக தனது காரை நோக்கி சென்று கொண்டிருந்தான்.
“மாமா மாமா..” என்று அவன் பின்னால் பூமிகா ஓட,
திரும்பியவன் முகத்தில் இருந்த கோபம் கட்டுக்குள் வந்தது. சட்டென்று முகத்தில் புன்னகை மலர்ந்தது.
“ஓய் பாப்பா, என்ன திடீர் விசிட்?” என்று புன்னகை படர வினவினான்.
“சும்மா தான் மாமா. என்ன அவசரமா கிளம்பறது போல இருக்கு.” என்று அவள் கண்களை காரின் மீது பதித்து வினவ,
“அப்பா போன் பண்ணி வர சொன்னார்.” என்றவன் முகம் கடினப்பட்டது.
“பெரிய மாமாவா? என்னவாம்?” என்று அவன் அருகே வந்து நின்றாள்.
அவன் அவள் கையை எடுத்து தன் கைகளுக்குள் பொத்திக் கொண்டு,
“அதை விடு, இந்த ட்ரெஸ் உனக்கு அழகா இருக்கே” என்று அவள் கன்னத்தில் ஒரு விரலால் தட்டிக் கூற,
“உங்களுக்கு இப்படி எல்லாம் பேச வருமா மாமா?” என்று கேட்டவள் முகம் வெட்கத்தில் சிவந்திருந்தது.
காலை நேர இடைவேளையாக ஊழியர்கள் அங்கும் இங்கும் நடமாடுவதைக் கண்ட நீரூபன்,
“வா ஆபிஸ் ரூம் போவோம்” என்று அவள் கைகளை பிடித்து அவனுக்கென்று இருக்கும் தனி லிஃப்ட்டில் ஏறினான்.
அவள் அவனுக்கு எதிரே நிற்க, அவன் முகம் மிகவும் இளகியது.
அவளை மெல்ல தன்னை நோக்கி இழுத்தான். ஆனால் அவளோ உதடுகளை மடித்து வைத்துக் கொண்டு,
“இது சரியில்லையே மாமா. முன்ன நிமிர்ந்து கூட பார்க்க மாட்டிங்க. எவ்வளவு அழகா மேக்கப் பண்ணி, ட்ரெஸ் பண்ணி வந்தாலும் கண்டுக்க மாட்டிங்க. இப்ப என்னடான்னா பார்வை ரோமியோ மாதிரி இருக்கு.” என்று சிரித்தாள்.
“ஏய் பாப்பா என்ன டா மாமாவை இப்படி ஓட்டுற?” என்று அருகே இழுக்க,
“இப்போ நீங்க ஓகே வா?” என்று அவனை அணைத்து மார்பில் முகம் புதைத்துக் கொண்டாள்.
ஒரு நிமிட அமைதிக்குப் பின்,” மனசு கொதிச்சு போய் இருந்தேன் பாப்பா. நீ வரலைன்னா கண்டிப்பா அப்பாவை பார்த்து கத்தி இருப்பேன்.” என்றான் எரிச்சலுடன்.
“மாமா, ராக்கி அண்ணா செய்ததுக்கு பெரிய மாமாவை கத்தினா சரியா போகுமா?” என்றாள் மார்பில் முட்டி.
“ஏய் ராக்கி.. அவனைப் பத்தி உனக்கு எப்படி தெரியும்?” என்று அவளை தன் முன்னே நிறுத்தி வினவ,
“இங்க வர்றதுக்கு முன்னாடி நேத்ரா அண்ணிக்கு போன் பண்ணி பேசினேன். உங்க மனநிலை எப்படி இருக்குன்னு தெரிய. அப்ப தான் சொன்னாங்க. அதான் அடிச்சு காலை உடைச்சு போட்டாச்சு. இன்னும் ஏன் கோபம்?” என்றவள் அப்போது தான் லிஃப்ட் நகராது இருப்பதைக் கண்டாள்.
“மாமா வாங்க ஆபிஸ் ரூமுக்கு போவோம்.” என்று இழுக்க,
“இரு பாப்பா, அங்க பாரு எல்லா பக்கமும் நீ தெரியுற. ரூம்ல ஒரு இடத்தில் தான் தெரிவ” என்று விஷமமாக சிரித்தான்.
“சரி கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க.” என்றதும்,
“அவனை அக்கா காதலிச்சா, கல்யாணம் பண்ணிக்கிட்டா, தனியா அனுப்பாமா வீட்டுக்குள்ள வச்சாரு, வேலைக்கு அனுப்பாம வீட்டுல உள்ளதை கவனிக்க சொன்னாரு, இப்ப அரசியலுக்கு வர பாக்கறான். நேத்ராவை கண்காணிக்கிறான். எல்லாமே அவரால தான். இப்போ என்னை போன் பண்ணி வர சொல்லி இருக்கார். இதைப் பத்தி பேச தான் இருக்கும். அவனை வீட்டை விட்டு அனுப்ப சொல்லி கேட்க போறேன். இல்லன்னா நானும் அம்மா, நேத்ரா எல்லாம் வெளில வரப்போறோம்.” என்று கடுப்புடன் கூறினான்.