அடங்காத அதிகாரா 22

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அதிகாரம் 22

அன்று முழுவதும் இருந்த வேலைப் பளுவால் மிகவும் சோர்ந்திருந்த நிரூபன் மாலை பண்ணைக்கு செல்ல இருந்த திட்டத்தை ரத்து செய்துவிட்டு ஏழு மணிக்கு வீடு திரும்பினான்.

பஞ்சணையில் சேர்ந்து கண்ணயர்ந்தால் போதும் என்ற மனநிலையில் இருந்தான்.

காரணம் தான் ஆரம்பத்தில் அவனுக்கு விளங்காமல் இருந்தது. இதை விட அதிக வேலை, அலைச்சல் உள்ள நாட்களை அவன் சந்தித்ததுண்டு, இன்று மட்டும் ஏனிந்த அயர்ச்சி என்று சிந்தித்துக் கொண்டே மாடிப்படிகளில் ஏறியவனை நிறுத்தியது அன்னையின் அன்பான அழைப்பு.

“நீரூ கண்ணு. வந்துட்டியா? முகம் அலம்பிட்டு சாப்பிட வா.” என்று அழைத்தார்.

தன் சோர்வை ஒதுக்கி வைத்துவிட்டு முகம் அலம்பி உடையை மாற்றிக்கொண்டு இரவு உணவுக்காக உணவு மேசையில் அமர்ந்தான் அருகில் வந்து வாஞ்சையாக தடவிக் கொடுத்தார் நாகரத்தினம்.

இன்று தன் தாய் மாமனை அணைத்த போது ஏற்பட்ட நெருக்கம் புது விதமாக உணர்ந்ததை இப்பொழுது எண்ணியவன் தன் எதிரே நிற்கும் சிற்றன்னையை கண் சிமிட்டாமல் நோக்கினான்.

“என்ன கண்ணு இப்படி பார்த்திட்டு இருக்க? சாப்பிடு” என்று  தட்டில் இன்னும் உணவை கூட்டி வைத்தார்.

“ஏன் மா உனக்கு எப்படி என் மேல இவ்வளவு பாசம்? இன்னொருத்தர் பெத்த பிள்ளைன்னு நீ ஏன் உனக்கு நேத்ரா பிறந்ததும் என்னை ஒதுக்கி வைக்கல?” என்று மனதில் இருந்ததை அவனறியாமல் கேட்டுவிட, ‘அன்னை அழுவாரோ?’ என்று கேட்ட பின் தான் மனம் பதறியது.

ஆனால் நாகரத்தினம் அவனது தோளில் அழுத்தமாக கரம் பதித்து, “நான் ஒருவேளை சோறு இல்லாம கட்டிக் கொடுக்க அப்பன் ஆத்தா இல்லாம கிடைச்ச வேலையை செய்து பொழைச்சுக்கிட்டு இருந்தவ,  என்னோட தூரத்து சொந்தம் தான்
மெய்யப்ப ஐயா. முருகப்ப அத்தான் வந்து ‘இப்படி ரெண்டு பிள்ளையோட இருக்குற திருமூர்த்தி என் தம்பி மாதிரி, அதுவும் சின்னவன் கைக்குழந்தை நீ அவனை நல்லா பார்த்துக்கணும், சரின்னா பேசி கட்டி வைக்கிறேன்’னு வந்து கேட்டப்ப மறுப்பு சொல்ல மனசு வரல. யாருமில்லாத வாழ்க்கை வாழறதுக்கு பதிலா ஒரு குடும்பத்துல வாழ்ந்தா போதும்ன்னு தோணுச்சு. ஆனா உன்னை என்கிட்ட கொடுத்தப்ப மூணு, இல்ல நாலு மாசம் இருக்கும்.

கொழுக் மொழுக் கன்னம், தலை நிறைய முடி கண்ணு கொட்டைப் பாக்கு மாதிரி இருக்கும்” என்று சிரித்தார்.

“இப்படி பொம்மை மாதிரி ஒரு குழந்தையை யாருக்கு தான் பிடிக்காது? என் கல்யாணம் முடிஞ்ச கொஞ்ச நாள்ல உங்கப்பா எம்.எல்.ஏவா ஆனார். அதுவரை அவர் என்னை நிமிர்ந்து கூட பார்க்கல. வீடு வாசல் இல்லாத எனக்கு வீடும் கூடவே நீயும் கிடைக்க நீ மட்டும் தான் காரணம்.  உன்னை கெட்டியா பிடிச்சுக்கிட்டேன். உன் அன்பு என்னை எதையும் சிந்திக்க விடல.

உனக்கு பேச்சு வந்த பின்னாடி உன் அக்கா என்னை சித்தின்னு கூப்பிட சொல்லி அடிச்சப்ப கூட நீ என்னை அம்மான்னு தான் கூப்பிட்ட, இன்னும் வளர்ந்து உன்னோட அம்மா திதி அன்னிக்கு எல்லாம் ஐயர் சொன்ன மாதிரி செஞ்சிட்டு வந்து ‘அவங்க சாமியாகி உங்களை எனக்கு கிப்டா கொடுத்திருக்காங்க’ன்னு என் கன்னத்தில் முத்தம் வச்ச. அப்ப உணர்ந்தேன் கடவுள் என் வாழ்க்கையை முழுமையாக்க தான் உன்னை எனக்கு கொடுத்திருக்கார்ன்னு.

பிள்ளையே வேண்டாம்னு இருந்த எனக்கு நேத்ரா பிறக்க நீ தான் காரணம். எங்க அடுத்தடுத்து பிள்ளைங்க பிறந்திடப் போகுதுன்னு குடும்பக் கட்டுப்பாடு பண்ணிட்டு வந்தப்ப உங்க அப்பாவுக்கு வருத்தம், ‘இன்னொரு பையன் இருந்தா நல்லா இருக்குமே ஏன் அவசரப்பட்ட’ன்னு, அவருக்கு என்ன தெரியும் நேத்ராவையே உனக்காக மட்டும் தான் சுமந்தேன்னு. நான் உன்னை தான் வளர்த்தேன். நீ தான் நேத்ராவை வளர்த்த. எப்பவும் நீ தான் என் பிள்ளை. நேத்ரா உன் தங்கச்சி. இது என் மனசுல இருந்து எப்பவும் மாறாது” என்று கூறிய கடைசி நொடியில் அவர் கண்களில் இருந்து ஒரு சொட்டு நீர் மேஜையில் பட்டுத் தெறித்தது.

“சாரி மா” என்று அவரை அவன் சமாதானம் செய்ய முயல,

இத்தனை நேரமும் இவர்களை முறைத்துக் கொண்டு அறை வாயிலில் நின்றிருந்த அஞ்சனா, “இப்படி சொல்லி ,நடிச்சு தானே அவனை உங்க கைக்குள்ள வச்சிருக்கீங்க? சொந்த அக்கா நான் சொல்ற பேச்சை கேட்க மாட்டேன்னு சொல்லிட்டு நீங்க பெத்த அவளை தானே தலையில வச்சுக்கிட்டு ஆடுறான். அவ பேர்ல எவ்வளவு சொத்து வாங்கி வச்சிருக்கான் தெரியுமா? அதுக்கு தானே இவ்வளவு நாடகம் போடுறீங்க?” என்று ஆவேசமாகக் கத்த,

“அக்கா. போதும். நானும் என் அம்மாவும் பேசும்போது நீ ஏன் நடுவுல வர்ற? நீ தான் அவங்களை சித்தியா கூட பார்க்கலையே! நான் அவங்களுக்கும் என் தங்கைக்கும் என்ன செய்தா உனக்கு என்ன? ஏன் உனக்கு செய்யலையா? உனக்கு கார், ஈ.சி.ஆர்.ல கெஸ்ட் ஹவுஸ், கொடைக்கானல்ல ஹோட்டல் இதெல்லாம் யார் வாங்கி தந்தது? உன் புருஷனா?” என்று காரமாக வினவ அஞ்சனா வாயடைத்துப் போனாள்.

“என்ன அமைதியா இருக்க? பதில் சொல்லு. அப்பா உன் பேர்ல நிலமெல்லாம் வாங்கினது உண்மை தான். ஆனா எதையும் இப்ப வரை உனக்கு தரல. ஆனா நான் எல்லாத்தையும் வாங்கினதும் உன்கிட்ட கொடுத்தேன். ஏன்? என் அக்கா அவளுக்கு தொழில், வீடு, போக்குவரத்து எல்லாமே இருக்கணும்னு செய்தேன். ஆனா நீ என்ன செய்த? கெஸ்ட் ஹவுஸ வாடகைக்கு விட்டிருக்க, அதுல மூணு முறை ட்ரக் பார்ட்டி நடந்து போலீஸ் கேஸ் ஆகி, வீட்டு பேரோட உன் பேரும் ரிப்பேர் ஆகாம காப்பாத்தவும் நான் தான் போனேன்.

ஹோட்டல் பக்கம் என்னனு கூட பாக்குறது இல்ல. போன மாசம் போலீஸ் ரேயிடுல ரெண்டு பிராத்தல் கேஸ் புக் ஆகி இப்ப ஹோட்டல் புக்கிங் குறைந்து போயிருக்கு. இது எதுவும் உனக்கு தெரியாது. ஏன்னா உன் மனசு அரசியல்லையும், கண்ணு அப்பா சீட் மேலையும் தான் இருக்கு. அதையாவது ஒழுங்கா செய்தா பரவாயில்ல. அங்கேயும் உன் புருஷனை அனுப்பி.. ச்ச” என்று மேசையில் குத்தியவன்,

“இங்க பாரு, அந்த ஆள் வர வர சரி இல்ல.அவரை நம்பாத. அவ்வளவு தான் சொல்லுவேன். எல்லாத்தையும் அவன் கிட்ட கொடுத்துட்டு நீ என்ன பண்றன்னு எனக்கு புரியல. இதுல என்னை குறை சொல்லவும் என் அம்மாவை அசிங்கப்படுத்தவும் வந்துட்ட? கல்யாணமாகி இத்தனை வருஷமாச்சு, உன் புருஷன் என்ன பண்ணினான்னு யோசி. எங்களை சீண்டிட்டு இருக்காத. இனியும் அக்கான்னு பொறுமையா இருக்க மாட்டேன். போன தடவையே என்னை இப்படி பேச வைக்காதன்னு சொன்னேன்.” என்று காய்ந்தான்.

அப்பொழுது தான் கன்னியாகுமரியில் இருந்து வீட்டிற்கு வந்தவள் இவர்கள் பேச்சை கேட்டு நின்று, நாகரத்தினத்தை சாடுவதாக எண்ணி தன் தலையில் தானே மண்ணை வாரி இறைத்துக் கொண்டாள்.

அமைதியாக தன் கைப்பையை எடுத்துக்கொண்டு அறைக்கு சென்றாள்.

“எதுக்கு பா அவளை இப்படி பேசுற? என்ன இருந்தாலும் உன் அக்கா இல்லையா?” என்று வருத்தமாக பேசிய அன்னையை முறைத்தவன்,

“இப்படி பேசி பேசி தான் தனியா நிக்கிறாங்க மா. அவங்களை விடுங்க. உங்க கிட்ட ஒரு முக்கிய விஷயம் சொல்லணுமே!” என்று குறும்புடன் அவன் கூற,

“என்ன செஞ்சு வச்ச?” என்று ஆர்வமாக அவனருகில் வந்தார்.

மாலை தன் தாய் மாமனை  சந்தித்ததையும் தான் தன் காதலை அவரிடம் உரைத்ததையும் கூற,

“அவர் ஒத்துக்கிட்டா நல்லா இருக்கும் தம்பி. அவருக்கு தான் உன் மேல என்ன வருத்தமோ!” என்று பெருமூச்சு விட்டார்.

“அம்மா மாமாவுக்கு என் மேல தான் வருத்தம்ன்னு உங்களுக்கு யார் சொன்னது?” என்று சிந்தனையோடு அவன் வினவ,

“வேற யார் சொல்லுவாங்க? உன் அப்பா தான். உனக்கு மொட்டை போட்டு காது குத்த அவரை கூப்பிட்டு பேசணும்னு நான் சொன்னப்ப, ‘அவனோட தங்கச்சி சாக என் மகன் தான் காரணம்னு பேசினான். நான் சண்டை போட்டேன். உறவு விட்டுப் போச்சுன்னு’ அவர் சொல்லவும் தான் எனக்கு தெரியும்.”என்று வெள்ளந்தியாக கூறிய நாகரத்தினத்தை நோக்கி,

“நீங்க ஏன் இப்படி பச்சை பிள்ளை மாதிரி இருக்கீங்க? ஆனா அது தான் மா உங்க அழகே!! நீங்களும் சாப்பிட்டு படுங்க.” என்று கொஞ்சிவிட்டு அறைக்குச் சென்றான்.


குளியலறையில் இருந்து வெளியே வந்து அன்றைய நாளின் கசகசப்புகள் போக குளித்திருந்த புத்துணர்வை அனுபவித்து கண்ணாடியில் தன் முகப்பொலிவை உன்னிப்பாக பார்த்துக் கொண்டிருந்தாள் பூமிகா.

வெயிலில் நடந்த படப்பிடிப்பின் காரணமாக முகத்தில் ஆங்காங்கே கருமை படந்திருந்த்து.

‘சன்ஸ்கிரீன் போட்டும் வெயில் இந்த பாடு படுத்துத்தே!’ என்று மாய்சரைசர் போட்டுக் கொண்டிருந்த போது காலையில் நீரூபன் அவளை ‘பாப்பா’ என்று அழைத்தது நினைவுக்கு வந்து வெட்கம் கொள்ளச் செய்தது.

உடனே முகத்தில் மெல்லிய செம்மை படர , முகம் கொள்ளை அழகாய் ஜொலித்தது.

‘இதென்ன டா அதிசயம்!’ என்று நோக்கியவள் மனக் கண்ணில் காலையில் வண்டியில் இலகுவாக தன்னை அணைத்துப் பிடித்தபடி வந்த நீரூபனின் வாசம் நினைவுக்கு வர மேலும் முகத்தை செம்மையுறச் செய்தது.

அவன் அருகே வந்து தன்னை பின்னாலிருந்து அணைப்பது போல காட்சிகள் ஆசை மேகமாய் தோன்ற, உள்ளே சிறுபெண்ணினின் குறுகுறுப்புகள் எழுந்து அவளை உணர்வுகளின் பிடியில் தள்ளியது.

மெல்ல எழுந்து இரவு உடைக்கு மாறியவள் பால்கனியில் அவள் ஆசையாய் வாங்கி வைத்த ரோஜா செடிக்கு நீர் ஊற்ற வந்தாள்.

அதில் அழகாய் விரிந்திருந்த சிறு மலரை கொய்தவள் அதனை தன் காதருகில் உள்ள முடியுடன் சொருகிக் கொண்டு பால் வண்ணத்தில் காயும் வெண்ணிலவை கண்களில் நிறைத்துக் கொண்டாள்.

அப்பொழுது அவள் தந்தை அவளை அழைக்கும் சத்தம் கேட்க கீழே இறங்கி சென்றாள்.

“என்ன உன் ரூம்ல இன்னிக்கு பாட்டு சத்தம் கேட்கல?” என்று மென்மையாக வினவினார்.

“ஹெவி வொர்க் பா. டயர்டா இருந்தது. குளிச்சிட்டு பால்கனில நின்னு நிலாவை வேடிக்கை பார்த்துகிட்டு இருந்தேன்” என்று கூறியதும்,

“வந்து உட்காரு உன் கிட்ட பேசணும்.” என்று தன் அருகே அவர் கை காட்ட, அவளோ பக்கத்தில் இருந்த உயர மேசையில் மேல் ஏறி அமர்ந்து கொண்டு காலாட்டியபடி,

“சொல்லுங்க பா’ என்றதும்,

“நீ நீரூபனை பார்த்திருக்க தானே!” என்றார் யோசனையாக,

“ம் தெரியும் பா” என்றவள் மனமோ ‘தினமும் அவரை சைட் அடிக்காம என் நாள் நகராதே பார்க்கிறது என்ன விட்ட முழுங்கிடுவேன்’ என்று அவருக்குக் கேட்காமல் பதில் சொல்லிக் கொண்டிருந்தது.

“அவங்க அப்பா செஞ்ச ஒரு காரியத்தால நான் அந்த குடும்பமே வேண்டாம்னு ஒதுங்கி வந்துட்டேன். என் தங்கை பிள்ளைங்க அங்க இருந்தும் நான் போகல. ஆனா இன்னிக்கு நீரூபன் என்னைப் பார்க்க வந்தான்.” என்று நிறுத்த,

‘என்னது நேர்ல வந்தாரா? அதுக்குள்ளையா?’ என்று மனம் அலறியது.

ஆனால் வெளிக்காட்டிக் கொள்ளாமல், “என்னவாம் பா?” என்று இயல்பாக வினவ,

“அவனுக்கு உன்னை பிடிச்சு இருக்காம். இரண்டு வருஷத்துக்கு பிறகு கல்யாணம் வச்சுக்கலாம். உங்க முடிவை மட்டும் இப்ப சொல்லுங்கனு கேட்டான்.” என்றதும் பூமிகாவின் இதயம் தண்டவாளத்தில் ஓடும் ரயில் போல தடதடத்தது.

“நீங்க.. நீங்க என்னப்பா சொன்னிங்க? “என்று படபடப்பை மறைக்க முடியாமல் வினவினாள்.

“உன்னை கேட்காம எப்படி டா பதில் சொல்வேன்? இது அவன் போட்டோ, இது போன் நம்பர். நீயே பார்த்து பேசு. உனக்கு பிடிச்சிருந்தா அவன் சொல்றது போல செய்யலாம்.” என்று நிறுத்திக் கொண்டார்.

“உங்களுக்கு அவங்க அப்பாவை பிடிக்காதே!” என்று பூமிகா திகைக்க,

“ஆனா என் மருமகன் எனக்கு கிடைப்பான். அவன் ரொம்பவே நல்ல குணம். பிடிச்சா சொல்லு டா. அப்பாவுக்காக யோசிக்காத. உனக்கு பிடிச்சா தான். இல்லன்னா அவனை நான் சமாதானம் செய்துப்பேன்.” என்று கூறிவிட்டு எழுந்து கொள்ள,

அவர் அவளிடம் கொடுத்த இரண்டு வருட பழைய புகைப்படத்தைப் பார்த்துவிட்டு, பக்கென்று சிரித்துவிட்டாள்.

நல்லா வேளையாக அவர் அறைக்கு சென்றிருக்க, அவனது படத்தை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு ஒரு சுற்று சுற்றினாள் பூமிகா.

தன் அறைக்குள் வந்ததும் தன் மனதுக்கு இனிய பாட்டை இசைக்க விட்டு நடனமாடத் துவங்கினாள்.