அடங்காத அதிகாரா 18

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

நீரூபனைக் கண்டதும் வசீகரன் முகத்தில் மகிழ்ச்சியானதொரு புன்னகை மலர்ந்தது.

“மாமா” என்று ஆவலாக வந்தவனை அணைத்து விடுவித்த நீரூபன்,

“இப்படி ஹேன்ட்சம்மா இருந்தா ஏன் என் தங்கச்சி உன்னை லவ் பண்ணாம இருக்கப் போறா?” என்று கேலி செய்தான்.

“யாரு நான் ஹேன்ட்சம்மா? வெள்ளை வேட்டி சட்டையில் பார்த்தப்ப கம்பீரமா இருந்தீங்க, இப்ப பார்மல் ட்ரெஸ்ல பளிச்சுன்னு இருக்கீங்க. என்ன ட்ரெஸ் பண்ணினாலும் சூட் ஆகவும் ஒரு கொடுப்பினை வேணும் மாமா. எனக்கெல்லாம் அது இல்ல. ஆனா உங்களுக்கு.. ம்ம்ம்” என்று  கையை மேல உயர்த்தி அவனை புகழ

“போதும் நாம நிறுத்திப்போம்.”  என்று சிரித்தான் நீரூபன்.

இருவரும் பேசியபடி அவனது தனிப்பட்ட அறைக்குச் சென்றனர்.

அங்கிருந்த சோஃபாவில் அவனை அமரச் சொன்னவன் அவருகிலேயே அவனும் அமர்ந்து முக்கியமான விஷயத்தை பேசத் துவங்கினான்.

“நீ எங்க அப்பாவை இன்னிக்கு மீட் பண்ணணும் வசீ”

“ஐயோ மாமா. நான் உங்க கிட்ட வந்து பேசவே அவ்வளவு யோசிச்சேன்”a என்று பயத்தில் வசீகரன் தடுமாற,

“அவர் பொண்ணை போய் கேட்க தானே உனக்கு பயம்? அவருக்கு தேர்தல்ல ஜெயிக்க வைக்க போற கம்பெனி எம்.டியா பேசலாம்ல?” என்று நீரூபன் புருவம் உயர்த்த,

“அதான் ஏற்கனவே கம்பெனி ரெஜிஸ்டர் பண்ணி ஆபிஸ் போட்டு, நேத்ரா சொன்ன மாதிரி எல்லாமே செய்தாச்சே.” என்று விழிக்க,

“கம்பெனியை வச்சுக்கிட்டு என்ன பா பண்றது? அது அவருக்கு வேலை செய்ய அவரோட சம்மதம் வேண்டாமா? அதுக்கு கம்பெனி மேனேஜிங் டைரக்டரை அவர் பார்க்க வேண்டாமா?” என்று இலகுவாக சோஃபாவில் கையை படர விட்டு வசீகரனை வம்பிழுத்தான்.

“எக்ஸ்பீரியன்ஸ் இல்லாத நான் போய் கேட்டா தருவாரா மாமா?” என்று விழிக்க,

“அதை நீ தான் சொல்லணும். தர வைக்கிற திறமை உன்கிட்ட இருக்கணும் மாப்பிள்ளை சார்” என்று கேலி செய்தான். வசீகரன் முகம் சுருங்கி அமர்ந்துவிட

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

“அதுக்கு தான் வர சொன்னேன் வசீ”என்று அவனை சமாதானமும் செய்தான்.

“அவரை புகழ்ந்து எதுவும் பேசாத. ஏன்னா அது பொய்ன்னு அவருக்கு நல்லாவே தெரியும். அவங்க கிட்ட அவர் நம்பி எதையும் கொடுக்க மாட்டாரு.

இதை செய்ய உனக்கு என்ன தகுதி இருக்குன்னு கேட்டா, நிதானமா பதில் சொல்லு. பயமோ அவசரமோ தேவையில்ல.

உனக்கு நாலேஜ், கேப்பபிலிட்டி இருக்குன்னு அவருக்கு தெரிஞ்சா மட்டும் போதும். ஓவர் கான்பிடென்ஸ் கொடுக்காத. அவர் ஜெயிக்க 50-50 சான்ஸ் இருக்கு. அதை 80-20 க்கு கொண்டு வர நீ முயற்சி பண்ணுவ. அதுக்கான ஃபீஸ் நீ வாங்கிப்ப. இதை தெளிவா பிஸ்னஸ்மேனா அவர் கிட்ட பேசு” என்று கூறினான்.

“எதுக்கு மாமா இவ்வளவு சுத்தி வரணும்? இந்த கம்பெனி உங்களுதாவே அவர் கிட்ட காட்டி நீங்களே செய்யலாமே?” என்று மறைக்காமல் மனதில் இருந்ததை கேட்டு விட்டான் வசீகரன்.

*செய்யலாம். ஆனா அப்பறம் என் வீடு வீடா இருக்காது. என் அரசியல் ஆசையை அதுக்காக தான் ஓரமா வச்சிட்டு பிஸ்னஸ் பண்ணிட்டு இருக்கேன்.” என்று பெருமூச்சு விட,

“அப்படி என்ன தான் உங்க அக்காவுக்கு பிரச்சனை மாமா? நீங்க வந்தா அவங்களுக்கு என்ன? எத்தனையோ அரசியல் குடும்பங்கள்ல ரெண்டு வாரிசு அரசியலுக்கு வர்றது இல்லையா?” என்று வினவ,

“இங்க அரசியல் வாரிசு மட்டும் பிரச்சனை இல்ல. பதவி தான் பிரச்சனை. அக்காவுக்கு பதவி வேணும். விட்டுத் தர எனக்கு எந்த கஷ்டமும் இல்ல. எனக்கு பதவி வேண்டாம். ஆனா நீ கொடுத்து நான் வாங்கறதான்னு எண்ணம். நீ இல்லாம நான் அங்க ஜெயிக்கிறது தான் அவங்களுக்கு மரியாதை. நான் பின்னாடி இருக்கறதுனால அவங்க ஜெயிச்சதா இருக்க கூடாது. அப்ப அவங்க பதவியில் இருந்தாலும் மரியாதை எனக்கு வந்துடும். அதாவது அவங்க டம்மி பீஸ் மாதிரி ஃபீல் பண்ணுவாங்களாம்.” என்று பல நாள் மனதில் இருந்ததை கூறினான்.

“இதெல்லாம் எப்படி மாமா பொறுமையா கேட்டீங்க? எப்படி இன்னும் அவங்க மேல பாசம் இருக்கு உங்களுக்கு?” என்று எரிச்சலாக கேட்டபடி நீரூவை நெருங்கி அமர்ந்தான்.

“எனக்கு அவங்க சொன்னப்ப சிரிப்பு தான் வந்துச்சு. நாம யாருன்னு நாம தானே முடிவு பண்ணணும். நானே அவங்க கூட இருந்தாலும் அந்த பதவிக்குரிய மரியாதையும் , அவங்க செயல்களால் கிடைக்கிற புகழும் எப்படி எனக்கு சொந்தமாகும்?  அவங்க புத்தியும் மனசு மக்கள் பக்கம் இருந்து நல்லது செய்தா, நான் கொடை வள்ளலா பக்கத்துல இருந்து உதவி செய்தாலும் அவங்க மேல வச்ச மரியாதை மாறாதுன்னு அவங்களுக்கு புரியல.” என்று அழுத்தமாக கூறினான்.

“சரி மாமா விடுங்க. நான் போய் உங்க அப்பாவை மீட் பண்றேன். ஆனா ஒன்னு மாமா நீங்க அரசியலுக்கு வந்தா நல்லா இருக்கும். உங்க பார்வையும் அது பார்க்கற கோணமும் வேற விதமா இருக்கு. இப்படி ஒருத்தர் இங்க உள்ள ஓட்டையை சரி பண்ணினா எல்லாருக்கும் நல்லது.” என்று கூறிக்கொண்டே எழுந்தான்.

“அப்படி நினைக்காத வசீ. எப்பவும் எல்லாராலையும் எல்லாருக்கும் நல்லவங்களா இருக்க முடியாது. அப்படி முயற்சி பண்ணவும் கூடாது. எங்க கடுமை காட்டணுமோ அங்க தயங்காம கடுமை காட்டணும். ஆனா அதை ஒரு தடவை பார்த்துட்டா நம்மளை எவனும் நல்லவன்னு சொல்ல மாட்டான்.” என்று சிரித்தான்.

“புரியுது ஆனா புரியல. இட்ஸ் ஓகே. மெதுவா புரிஞ்சுக்க டிரை பண்ணுறேன்” என்று நீரூபனிடம் விடைபெற்றான் வசீகரன்.


சட்டசபையில் அன்று அனைத்து எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடந்து கொண்டிருந்தது.

அனைத்து கட்சி எம்.எல்.ஏக்களையும் அழைத்த சபாநாயகர் அடுத்த குளிர்கால கூட்டத் தொடர் பற்றி பேசிக்கொண்டிருந்தார்.  இது சட்டசபை நிகழ்வு போல இல்லாமல் ஒரு மீட்டிங் போல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதை முடித்துவிட்டு வெளியே வந்த திருமூர்த்தியை கைபேசியில் அழைத்திருந்தார் முருகப்பன்.

அவரது பெயரைக் கண்டதும் வெவ்வேறு விதமான உணர்வுகள் தாக்க, தயங்கி அழைப்பை ஏற்று காதில் பொரு திருமூர்த்தி.

“என்ன தலைவரே எப்படி இருக்கீங்க?” என்று மகிழ்வாய் பேச்சைத் துவங்கினார் முருகப்பன்.

“என்ன முருகண்ணே நீங்க போய் என்னை தலைவர்ன்னு”  என்று இழுத்து  வைத்தார் திருமூர்த்தி.

“நீ தானேப்பா தலைவர். அப்ப அப்படித்தான் கூப்பிடணும். என்ன பழக்கவழக்கம் இருந்தாலும் உன் பதவிக்கு ஒரு மரியாதை இருக்குல்ல?” என்று பேசியவரிடம் கிஞ்சித்தும் பொறாமை இல்லை.

“சரிண்ணே சொல்லுங்க என்ன விஷயம்? ரொம்ப நாளா வீட்டுக்கு, ஆபிசுக்கு எங்கேயும் நீங்க வரவே இல்ல. விசாரிச்ச வரை வீட்ல உள்ள ஐயா ஆபிஸ்ல தொண்டர்களுக்கு ஏதோ நலத்திட்ட உதவி எல்லாம் நீங்க தான் செய்து தர்றதா தெரிஞ்சுது” என்று கூற,

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

“ஆமாப்பா தினமும் நான் அங்க வர்றதுக்கு பதிலா தொண்டர்களை இங்க வர வச்சு பேசி அனுப்புறேன். அது இருக்கட்டும். நான் கூப்பிட்டது ஒரு முக்கிய விஷயமா.” என்று நிறுத்த,

“சொல்லுங்கண்ணே.” என்று அவரையும் அறியாமல் பணிவாக வினவினார் திருமூர்த்தி.

அதை கண்டுகொண்ட முருகப்பனுக்கு இதழில் புன்னகை மலர்ந்தது.

“சமீபமா வந்த எந்த கருத்துக்கணிப்புலயும் நம்ம கட்சிக்கு சாதகமா கொஞ்சம் கூட வரவே இல்லையே மூர்த்தி? என்னாச்சு?” என்று அக்கறையாக வினவினார்.

“அது வந்துண்ணே..” என்ற திருமூர்த்தியின் மனதில் அவரின் கேள்வி அபாய மணி போல ஒலித்தது.

அவரது தந்தை வளர்த்து விட்ட கட்சி, இன்று சரிவில் செல்லும்போது அதனை தூக்கி நிறுத்த அவர் உள்ளே வந்தால் அதை திருமூர்த்தியால் தடுக்கவும் முடியாது. அவரது தலைவர் பதவியும் சிக்கலாகும் என்று பயம் தொண்டையை அடைக்க,

“நானும் அதே வேலையா தான் அண்ணே இருக்கேன். சரி பண்ணிடுவேன். நீங்க கவலைப்பட வேண்டாம். ஐயா வளர்த்த கட்சி இத்தனை வருசமா பாதுகாப்பா கொண்டு போறேன். இப்ப விட்டுடுவேனா?” என்று பூசி மொழுகினார்.

“மூர்த்தி, உன்னைத் தெரியாதா எனக்கு? நான் அதுக்கு கேட்கல.நம்ம என்ன தான் சரி பண்ண நினைச்சாலும் முன்ன மாதிரி தொண்டர்கள் இறங்கி வேலை செய்யறது கிடையாது. அதான் எனக்கு ஒரு யோசனை தோணுச்சு உன்கிட்ட சொல்ல தான் போன் பண்ணினேன்.” என்று சொல்லலாமா வேண்டாமா என்பது போல இடைவெளி விட்டார் முருகப்பன்.

‘நீங்க வந்து கட்சி நடத்துறேன்னு சொல்லாம எதை சொன்னாலும் நான் கேட்பேன்’  என்று மனதில் நினைத்துக்கொண்ட திருமூர்த்தி,

“என்கிட்ட என்னண்ணே தயக்கம். சும்மா சொல்லுங்க” என்று கூற,

“புதுசா எலெக்ஷன் கேம்பெயின் மேனேஜ்மென்ட் கம்பெனி ஒன்னு வந்திருக்கு. எல்லாமே இளைஞர்கள் தான். சுறுசுறுப்பா வேலை செய்யறாங்க . அந்த கம்பெனி எம்.டியை உன்னை வந்து பார்க்க சொல்றேன். பேசிப் பாரு, சரின்னா இந்த உள்ளாட்சி தேர்தல் வேலையை அவங்க கிட்ட கொடு.” என்று கூறினார்.

“அண்ணே நாம நம்ம கட்சிக்கு பண்ணறத விடவா ஒரு கார்பரேட் கம்பெனிக்காரன் பண்ணிடப் போறான்?” என்று தனது அதிருப்தியை திருமூர்த்தி வெளியிட,

“நீ பேசிப் பாரு மூர்த்தி. கண்டிப்பா கொடுன்னு சொல்லல. ஆனா முயற்சி பண்ணலாம்னு தோணுச்சு. சொன்னேன்.” என்றவர், “நான் அப்பறம் பேசுறேன் மூர்த்தி” என்று அழைப்பைத் துண்டித்துவிட,

எங்கே அவர் சொன்னதை கேட்காமல் போனால் பழைய படி தீவிர அரசியலுக்கு வந்து விடுவாரோ என்ற பயம் வந்தது திருமூர்த்திக்கு.

இப்படி ஒரு நல்லவரை ஒதுக்கி தன்னை மெய்யப்பன் ஐயா தேர்வு செய்ய திருமூர்த்தி செய்த தகிடுதத்தங்கள் ஏராளம். அதனால் இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு அவருக்கு அந்த வாய்ப்பை வழங்க விருப்பம் இல்லாமல் அவர் சொல்வதை கேட்பது போல நடந்தால் அவரும் அதே தூரத்தில் நின்று கொள்வார் என்ற எண்ணத்திற்கு வந்து அந்த கம்பெனி எம்.டியை சந்திக்க தயாரானார் திருமூர்த்தி.

அவரது கட்சி அலுவலகத்துக்கு வந்து சேர்ந்தவர், தன் ஓய்வறையில் சென்று அமர்ந்து கொண்டார்.

சற்று நேரத்தில் அவரை சந்திக்க ஒருவர் வந்திருப்பதாக தகவல் வர, சம்மதித்தவரின் அறைக் கதவை தட்டி விட்டு உள்ளே நுழைந்தான் வசீகரன்.

பெயருக்கு ஏற்றார் போல வசீகரமான முகம் அவனுக்கு. அதனால் முதல் பார்வையிலேயே நன்மதிப்பை பெற்றான் அவன்.

“வணக்கம் சார். நான் வசீகரன். ‘பாதை பிரைவேட் லிமிடெட்’ எம்.டி” என்று அறிமுகம் செய்து கொண்டான்.

“ரொம்ப வயசு கம்மியா தெரியுதே தம்பி. உங்க அரசியல் ஞானத்தை நம்பி எங்க கட்சி பெயரை அடமானம் வைக்க முடியுமா?” என்று தாடையை தேய்த்தார் திருமூர்த்தி.

“வயசுக்கும் வேலைக்கும் சம்பந்தம் இல்ல சார். மக்கள் கிட்ட உங்களை நல்ல விதமா கொண்டு சேர்க்க தேவையான தகவல் தொழில்நுட்ப அறிவு எனக்கு இருக்கு, மத்தபடி அரசியல் நுணுக்கம் பத்தி எல்லாம் எனக்கு தெரிய வேண்டியது இல்ல. நான் பிஸ்னஸ் பண்றேன் அதுல எப்படி ஜெய்க்கணுமோ ஜெயிக்க தெரியும். இந்த வேலைக்கு தேவையான எக்ஸ்பர்ட் டீம் என்கிட்ட இருக்கு. இதை கோ ஆர்டினேட் பண்ணி உங்களுக்கு ரிசல்ட் கொண்டு வர வேண்டிய பொறுப்பு மட்டும் தான் என்னோடது. அதை பர்ஃபெக்டா செய்வேன்.” என்று நம்பிக்கையாக பதில் கூறினான் வசீகரன்.

அவன் பேச்சு திருமூர்த்திக்கு பிடித்திருந்தது. லேசாக அவன் நீரூபனை நினைவு படுத்துவதாக அவருக்குத் தோன்ற,

“சரிப்பா, என்ன பேமென்ட் வேணுமோ வாங்கிக்கோ.”

“ஆனா இந்த உள்ளாட்சி தேர்தல் சமயத்துல சில நேரம் நீங்க நாங்க சொல்ற முடிவுகளை அப்படியே ஏத்துக்கணும். மறுப்பு சொல்ல கூடாது. நீங்க தோல்வியை தழுவினா எங்க பேமென்ட் பர்சென்டேஜ் கம்மி பண்ணிப்போம். ஆனா வின் பண்ணிட்டா காண்ட்ராக்ட் படி பே பண்ணணும். நாளைக்கு ஆபிஸ்ல இருந்து காண்ட்ராக்ட் கொடுத்து விடுகிறேன். நல்லா படிச்சு, உங்க லீகல் டீம் கிட்ட டிஸ்கஸ் பண்ணி சைன் போட்டு அனுப்புங்க. அப்பறம் அபிஷியலி நாங்க தான் உங்க வாய்ஸ் இன் பப்ளிக்.” என்று கூறி கைகூப்பி விடை பெற்றான் வசீகரன்.

போகும் அவனை பார்க்க உள்ளுக்குள் ஏதோ ஒரு உணர்வு எழுவதை புரியாமல் கவனித்தார் திருமூர்த்தி.