அடங்காத அதிகாரா 16

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அதிகாரம் 16

“அண்ணா நிஜமாவா சொல்ற முருகப்பன் பெரியப்பா ஒத்துகிட்டாரா?” என்று விழி விரித்து ஆச்சரியமாக வினவினாள் நேத்ரா.

“ஆமா டா நானும் முதல்ல யோசிச்சேன். ஆனா அவரை விட நல்ல சாய்ஸ் யாருமில்ல. அதான் கேட்டுப் பார்ப்போம்ன்னு போனேன். சரி செய்யறேன்னு சொல்லிட்டாரு.” என்று தங்கையிடம் ஆனந்தமாகக் கூறினான்.

“ஏன் அண்ணா அப்பா கிட்ட நான் ஹெல்ப் பண்ணுவேன்னு சொல்லிட்டு தானே வந்த? அப்பறம் ஏன் என் பேர் தெரிய வேண்டாம்னு இப்ப சொல்ற?” என்று சில நாட்களாக மனதில் அரித்த சந்தேகத்தை வினவியபடி அண்ணன் அவளுக்காக கொண்டு வந்த பப்பாளி பழத்தை நறுக்கினாள்.

“அம்மா முதல்ல பயந்தாங்க, நான் பார்த்துக்கலாம்ன்னு நினைச்சேன். ஆனா இப்ப சில விஷயம் மன நினைத்ததை விட பெருசா இருக்குமோன்னு தோணுது. அதான் அப்பாக்கு நேத்து கால் பண்ணி, நேத்ராவுக்கு இப்ப பெரிய பிராஜெக்ட் இருக்குன்னு சொல்றா. நான் வேற கேம்பெயின் மேனேஜ்மென்ட் கம்பனி பார்த்து சொல்றேன்னு சொல்லிட்டேன். இப்ப பெரியப்பா அப்பா கிட்ட வசீகரன் தான் அந்த கம்பெனி எம்.டின்னு இன்ட்ரோடியூஸ் பண்ணினா, அவனும் இந்த எலக்ஷன்ல ஜெயிக்க வச்சா அப்பறம் உன் கல்யாணமும் எந்த பிரச்சனையும் இல்லாம முடியும். பெரியாப்பாவை மறுபடி அரசியலுக்குள்ள கொண்டு வந்தது மாதிரியும் இருக்கும்.” என்று அவள் நறுக்கிய பப்பாளித் துண்டை எடுத்து உண்டான்.

“ஒரே கல்லுல எவ்வளவு மாங்கா?” என்று நேத்ரா தன் கருவிழியை உருட்ட,

“தோட்டக்காரன் தங்கச்சின்னு அப்பப்ப நிரூபிக்கணுமா டா நேத்து குட்டி?” என்று தலையில் தட்ட அவளும் சிரித்துக் கொண்டாள்.

“ஏன் அண்ணா பெரியப்பா அரசியல்ல இருந்து ஒதுங்கீட்டார்? ஏன் மெய்யப்பன் ஐயா அவரோட பையனை தேர்ந்தெடுக்காம நம்ம அப்பாவை தேர்ந்தெடுத்தார்?” பலநாளாக விடைதெரியாமல் இருந்த வினாவைத் தொடுத்தாள்.

“மெய்யப்பன் ஐயா வித்தியாசமானவர் டா நேத்து. அவர் கட்சித் தலைவராக இருந்தப்ப தேர்தல்ல ஜெயிக்கலனாலும் கட்சி மேல மக்களுக்கு பெரிய அபிமானம் இருந்தது.” என்று அவன் நிறுத்த,

“அது எப்படி அண்ணா? தலைவர் மேல அபிமானம் இருக்கு. ஆனா கட்சி ஜெயிக்கலன்னா எப்படி? எனக்கு அர்த்தம் புரியலையே!”

“கட்சித் தலைவர் மட்டுமே அந்த கட்சி தேர்தல்ல ஜெயிக்க காரணமா ஆகாது நேத்து. அந்தந்த தொகுதில அந்த கட்சி சார்ப்பா யாரு நிக்கிறது? அவங்க பின்னணி என்ன? எதிர்க்கட்சி யாரை நிறுத்துது? அவருக்கு அங்க செல்வாக்கு என்ன? இதுக்கு முன்ன அங்க யார் பொறுப்புல இருந்தது? அவங்க மக்கள் குறையை எவ்வளவு சரி செய்தாங்க? இதெல்லாத்தையும் விட இங்க ஜாதி, அது முக்கியமான இடத்தை வகிக்குது.”என்று அவள் மூக்கை பிடித்து ஆட்டிக் கூறினான்.

“அண்ணா இன்னும் எந்த காலத்துல வாழ்ந்துட்டு இருக்கோம்? இப்பவுமா ஜாதி எல்லாம் பாக்கறாங்க?” என்று வியப்பாய் கேட்டவளை ஆதுரமாக நோக்கி,

“அவங்க பாக்கறாங்களோ இல்லயோ அரசியல்வாதிகள் பாக்க வச்சிடுவாங்க நேத்ரா. ஏன்னா எனக்கு பின்னாடி ஒரு கூட்டம் வேணும், ஆதரவு தரணுன்னு தான் அவங்க நினைக்கிறாங்க. எனக்கு பின்னாடி நிக்கிறவன் என்னை நம்பணும்னு என் கொள்கையை நம்பணும்னு நினைக்கல டா.  ஜாதின்னு பிரிச்சு நிக்க வச்சு தனக்கு சாதகமா ஓட்டு வாங்குவாங்க. அதே வேற பிரச்சனை வரும்போது நாமெல்லாம் ஒரே இனம், தமிழ், அது இதுன்னு மக்களை அவங்க பக்கம் நிற்க வைக்க அவங்களுக்கு தெரியும். ஆனா இப்ப காசுக்கு ஆள் வர ஆரம்பிச்சாச்சு. அதுனால இவன் என் பின்னாடி வருவான்னு அரசியல்வாதிகளுக்கே நம்பிக்கை இல்ல” என்று சிரித்தான்.

“சரி மெய்யப்பன் ஐயா விஷயத்துக்கு வா அண்ணா” என்று ஆர்வம் காட்ட,

“அவருக்கு அவரோட கட்சி கொள்கை மேல கொள்ளை பிரியம். அதை அப்படியே பின்பற்றி வந்தது நம்ம அப்பா திருமூர்த்தி. ஆனா மனுஷனும், அவனோட தேவைகளும் தான் முதல்ல, கொள்ளையெல்லாம் இரண்டாம் பட்சம் தான்னு பெரியப்பா சொல்லுவாரு. அதான் ஐயாவுக்கு தன் பையன் தன்னைப் போல கொள்கை பிடிப்பு இல்லாம எல்லாரும் சமம்ன்னு பேசுறான், ஆனா திருமூர்த்தி கொள்கையை விட்டுக் கொடுக்காம இருக்கான். அவன் தான் என் அரசியல் வாரிசுன்னு அறிவிச்சுட்டார்.”

“பாவம்ல பெரியப்பா?” என்று வருத்தம் கொண்டவளிடம்,

“அதான் இல்ல. அவர் ஆட்சிக்கு வராம இருக்கலாம். ஆனா அவர் சம்பாதிச்சு வச்சிருக்கிற நல்ல பேர் நம்ம அப்பாவுக்கு இல்ல டா. எந்த கட்சி ஆளுங்க கஷ்டம்னு வந்தாலும் பெரியப்பா உதவி செய்வார். அதுக்காக நம்ம கட்சில சேர்ந்துக்கறேன்னு சொன்னா கூட உனக்கு கட்சியோட கொள்கை பிடிச்சா சேரு பான்னு சொல்லிட்டு போயிடுவார். நல்லா மனுஷன். அவர் தீவிர அரசியலை விட்டு விலக அப்பாவும், அஞ்சனா அக்காவும் ஒரு காரணம். அதுக்கு பரிகாரம் மாதிரி தான் அவரை இப்ப நாம உள்ள கொண்டு வரப் போறோம்.” என்று சிந்தனையுடன் கூறினான்.

“என்ன அண்ணா சொல்ற? அப்பாவா? அப்படிப்பட்ட அப்பா எப்படி பெரியப்பா சொன்னா கேட்பாரு?” என்று புரியாமல் விழிக்க,

“டேய் இங்க சில நேரம் சில விஷயங்களை யார் சொல்றாங்கன்னு பார்க்காம கட்சிக்கு நல்லதான்னு மட்டும் பார்த்து முடிவெடுக்க வேண்டிய சூழ்நிலை வரும். இப்ப அப்பாவுக்கு அந்த சூழல் வந்திருக்கு.”என்று மர்மமாக புன்னகைத்தான்.

“ஏய் அண்ணா. ஏதோ கோல்மால் வேலை பார்த்து வச்சிருக்க!” என்று அவனை பேசத் தூண்டினாள்.

“ம்ம் ஆமா. அந்த கேம்பெயின் மேனேஜ்மென்ட் கம்பெனி பத்தி அங்கங்க பத்த வச்சிருக்கேன். அப்பா காதுபட பேச சொல்லி இருக்கேன். அவருக்கு கருத்து சொன்னா தான் பிடிக்காது. ஆனா அடுத்தவங்க பேசுக்கிறது நல்லாவே காதுல விழும். அப்ப பெரியப்பா போய் அதே கம்பெனி பத்தி சொன்னா அவர் ஒத்துப்பார். இல்லன்னா நானே அந்த கம்பெனியை அவருக்கு ரெஃபர் பண்ணுவேன். இந்த அஞ்சு அக்காவுக்காக தான் தள்ளி நிக்கிறோம்.” என்றவன் குரலில் சலிப்பிருந்தது.

“ஏன் அண்ணா அவங்க மட்டும் தான் அப்பாவுக்கு பொண்ணா? நீயும் நானும் இல்லையா? அவங்களை அவருக்கு அரசியல் வாரிசா இருக்கட்டும். சும்மா கூட நம்மளை அப்பா கிட்ட நெருங்க விட மாட்டேன் ஏன் இப்படி இருக்காங்க. அவங்க நடுவுல நிக்கும்போது அப்பா எப்படி அடுத்தவங்க பேசுறதை கவனிக்கிறது, பெரியப்பா சொல்லும்போது கேட்கறது?” என்று கோபமாக வினவினாள்.

“நேத்து குட்டிக்கு எதுக்கு கோபம்? அக்காவை பத்து நாள் தென் மாவட்டங்களுக்கு சுற்றுப் பயணம் போக ஏற்பாடு பண்ணி இருக்கேன். அதுனால அப்பா இப்ப எல்லாம் கேட்பார்.”என்றவன் கண்கள் பளபளத்தது.

“அண்ணா நீ என்னவோ பண்ற! அக்கா போக நீ எப்படி ஏற்பாடு பண்ண முடியும்?” என்று அவள் திகைக்க,

“என் அக்கா டா அவ, எப்பவும் அவளுக்கு ஆபத்து வராம இருக்க என் கண்காணிப்பில் தான் வச்சிருப்பேன். அவளோட பி.ஏ, அவளோட ஹெல்பர் எல்லாமே நான் ஸ்கிரீன் பண்ணி அவகிட்ட வேலைக்கு அனுப்பிய ஆட்கள் தான்.” என்று கூறி வாய் பிளந்து பார்த்தவளுக்கு ஒரு பப்பாளித் துண்டை திணித்து விட்டு எழுந்து கொள்ள,

“அப்ப என் ஆபிஸ்ல? வசீ விஷயமெல்லாம் முன்னாடியே தெரியுமா?” என்று பழத்தை வாயில் அதக்கி குழறியபடி வினவ,

“எல்லாம் யாமறிவோம் பராபரமே!” என்று சிரித்து தன் அறை நோக்கி நடந்தான்.

பேத்த விழித்தபடி அமர்ந்திருந்தாள் நேத்ரா.

“இது தெரியாம இவர் கிட்ட என் காதல் விஷயத்தை சொல்ல எவ்வளவு பயந்தேன்!!” என்று வாய்விட்டு புலம்பியது அவன் காதில் விழ சத்தமாக சிரித்துக் கொண்டு சென்றான் நீரூபன்.


காலை அலுவலகம் சென்று இருக்கையில் அமர்ந்தான் அங்கிருந்த ஒரு காகிதத்தில் எழுதப்பட்டிருப்பதைக் கண்டு மணீஷை அழைத்தான்.

“என்ன மணீஷ் இது? இதை ஏன் இங்க வச்சிருக்க?” என்று அந்த ரெஸ்யூமைக் காட்டிக் கேட்க,

“அந்த பையன் நேத்து நேர்ல பார்த்து இதை கொடுத்து வேலை கேட்டான் அண்ணா. மத்த கேண்டிடேட்ன்னா நானே பார்த்து ஷார்ட்லிஸ்ட் பண்ணுவேன். ஆனா இவன்..” என்று இழுத்தான்.

“சரி அவனை நேர்ல வர சொல்லு. நான் பேசுறேன்.” என்று வேலையில் மூழ்கினான்.

ஒரு மணி நேரம் சென்று தான் முன்னே வந்து நின்றவனைக் கண்டு,

“என்னப்பா வேலைக்கு அப்ளை பண்ணியாம்? என்ன திடீர்னு?” என்று வினவியது சாட்சாத் ஆனந்த்திடம் தான்.

“அது வந்து சார் ..”என்று அவன் திணற,

“உட்காரு” என்று எதிர் இருக்கையை கை காட்டினான்.

“நீ சினிமால ஏதோ சான்ஸ் தேடுறதா தான் பூமிகா சொன்னா. இப்போ நீ என் கம்பெனில வேலை கேட்கற? அதுவும் செக்ரெட்டரி போஸ்ட்?’ என்று புருவம் உயர்த்திக் கேட்க,

“நான் பேச்சிலர்ஸ்ல பி.பி.எம் பண்ணிட்டு கரஸ்பாண்டன்ஸ்ல கார்பரேட் செக்ரெட்டரி கோர்ஸ் முடிச்சிருக்கேன் சார்.” என்று தயங்கிக் கூறினான்.

“இவ்வளவு படிச்சிட்டு ஏன் பா நீ சினிமா எடுக்க ஆசைப்பட்ட.” என்ற கேள்வியை வைத்து விட்டு, “ஜஸ்ட் கியூரியாசிட்டில தான் கேட்டேன் ஆனந்த்.” என்று விளக்கினான்.

“சின்ன வயசுல இருந்தே டைரக்ஷன் மேல இன்ட்ரஸ்ட் சார். முத்ல்ல ஃபிலிம் டெக்னாலஜி படிக்க தான் இருந்தேன். என் அப்பா தான் படிச்சு வேலைக்கு போகணும் அது இதுன்னு கோர்ஸ் மாத்தி விட்டாரு. அப்பறம் நானே தான் சி.எஸ் ல சேர்ந்தேன். ஆனாலும் மனசு சினிமா பக்கம் தான் போச்சு.” என்று வருந்தினான்.

“சரி இப்ப மட்டும் ஏன் வேலை தேடி வந்திருக்க?” என்று கைகளை கட்டிக்கொண்டு அவன் அமர்ந்து கொள்ள,

“குடும்ப சூழ்நிலை சார். அப்பாவுக்கு வயசாகுது. தங்கைக்கு கல்யாணத்துக்கு பார்த்திட்டு இருக்காங்க. ஆனா என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லல. கேட்டா ‘நீ என்ன வேலைக்கா போற அவளுக்கு உன்னால ஏதாவது செய்ய முடியுமா? இல்ல எனக்கு உதவ முடியுமா? உன்கிட்ட நான் ஏன் சொல்லணும்?’னு அப்பா பேசிட்டார் சார். அவரை சொல்லி தப்பில்லை. 22 வயசுல வேலைக்கு போவேன்னு நம்பி இருந்தார். நானும் மூணு வருஷமா அவர் கிட்ட காசு வாங்கிட்டு சுத்திட்டு இருக்கேன். அப்ப கோபம் வரும்ல?” என்று விரக்தியாக பேசினான்.

“அப்ப உன் சினிமா ஆசை? ” என்று அவன் முகத்தை கூர்ந்து கவனித்தான் நீரூபன்.

“சினிமா எங்க சார் போகுது? நாலு வருஷம் கழிச்சு கூட போய் படம் பண்ணலாம். ஆனா தங்கச்சிக்கு நாலு வருஷம் கழிச்சு கல்யாணம் பண்ண முடியாதுல்ல. அண்ணனா பொறுப்பா இருக்க முடிவு பண்ணிட்டேன். அதான் மணீஷ் சார் ஜாப் போஸ்ட் பண்ணவும் நேர்ல அவரை மீட் பண்ணி ரெஸ்யூம் கொடுத்தேன்.” என்று விளக்கினான்.

சில நிமிடங்கள் அங்கே அமைதி நீண்டது.

“வெல். நாளைக்கு வந்து ஜாயின் பண்ணிக்கோ. மணீஷ் சொல்லித் தர்றதை சரியா கத்துக்கோ, நான் சில இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்திருப்பேன். அதை நான் இருந்தாலும் இல்லைனாலும் ஸ்ட்ரிக்ட்டா ஃபாலோ பண்ணிக்கோ. தினமும் நைட் ஈ. ஓ.டி ரிப்போர்ட் அண்ட் நெக்ஸ்ட் டே பிளான் கொடுத்துட்டு வீட்டுக்கு போகலாம். உன் சம்பளம், அலவன்ஸ் எல்லாம் எச்.ஆர் டிபார்ட்மெண்ட்ல சொல்லுவாங்க. எந்த காரணம் கொண்டும் லீவ் எடுக்கக் கூடாது. முக்கியமா பிரெண்ட்ஸ் கூட சுத்திட்டு வேலைக்கு சாக்கு சொல்லக் கூடாது.” என்று கடைசி வரியில் அழுத்தம் கொடுத்தான்.

அது எதற்காக என்று புரிந்த ஆனந்த். “கண்டிப்பா எல்லாத்துலயும் பக்காவா இருப்பேன் சார். இட்ஸ் அ பிராமிஸ்.” என்று கூறி எழுந்து கொண்டான்

“ஆல் தி பெஸ்ட் ஆனந்த்” என்று கை குலுக்கி அவன் விடை கொடுக்க, மகிழ்ச்சி முகத்தில் மின்ன அங்கிருந்து கிளம்பினான் ஆனந்த்.

வெளியே பார்க்கிங் வந்து நின்று வாகனத்தை கிளப்ப இருந்த நேரம் கைபேசி அழைக்க அதில் பூமிகாவின் அழைப்பை கண்டு,

“சக்சஸ் டி. நாளைக்கு ஜாயின் பண்ண போறேன்.” என்று மகிழ்வுடன் கூற,

“ஐ.. அப்ப நாளைல இருந்து என் மாமாவை நான் ஆபிஸ்ல வந்து பார்ப்பேன்” என்று குதித்தாள் பூமிகா

“நீ காபிஷாப் வா.” என்று அழைத்தவன், அவள் வந்ததும் தலையில் குட்டி,

“ஏன் டி வேலை கிடைச்ச சந்தோஷத்தை உன்கிட்ட சொன்னா, நீ மாமாவை பார்க்க போறேன்னு சொல்ற? அப்ப மணீஷ் போட்ட ரெக்குயர்மெண்ட் போஸ்டை எனக்கு அனுப்பினது நான் வேலைக்கு போக இல்ல. நீ உன் மாமாவை பார்க்கவா?” என்று காதைப் பற்றி திருகினான்.

“டேய் நீ தானே அப்பா மதிக்கல கொஞ்ச நாள் வேலைக்கு போகலாமான்னு தோனுதுன்னு சொன்ன? அதான் ஒரே கல்லுல ரெண்டு மாங்கான்னு..” என்று இழுத்தாள்.

“போடி” என்று விளையாட்டாக சொன்னவன் அப்பொழுது தான் கவனித்தான் அவள் ஏற்கனவே கனவுலகிற்கு சென்று விட்டாள் என்பதை.