அடங்காத அதிகாரா 08
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
மதிய நேரத்தில் வீட்டில் உணவு உண்ணுவது என்பது ஒரு அலாதி சுகம். அதிலும் தாயின் கையால் பரிமாறப்படும் சூடான உணவு கண்டிப்பாக சுவையில் பஞ்சமே இருக்காது.வாரத்தில் இரண்டு நாட்களாவது நீரூபன் மதிய உணவுக்கு வீட்டிற்கு வந்து விடுவான். அதில் கூடுதல் வசதி என்னவென்றால் அவன் மனம் போல நாகரத்தினத்திடம் உரையாட முடியும். யாரும் குறுக்கே பேசி தடுப்பதோ, தொலைவில் நின்று முறைப்பதோ இன்றி இருவரும் மனம் விட்டுக் கேலியாக பேசி நேரம் செலவு செய்ய முடியும்.அவனுக்கு இது சற்று அலைச்சல் தான் என்றாலும் அன்னைக்காக அலையாமல் வேறு யாருக்கு செய்வது என்ற எண்ணம் கொண்டவன் என்பதால் அதை பெரிது படுத்துவதில்லை.கோதண்டம் அவனைப் பார்க்க பண்ணைக்கு வந்து சென்றதில் அவனுக்கு எந்த கவலையும் இல்லை. ஆனால் அவர் பேசிய விஷயங்கள் கண்டிப்பாக இந்த வீட்டில் அவன் வந்து செல்லும் நிமிடங்களையும் இறுக்கமாக மாற்றி விடும் என்றுணர்ந்தான்.வீட்டினுள் நுழைந்தவன் விழிகள் தாயைத் தேட, அவர் கீழ்த் தளத்தில் இருப்பதற்கான அறிகுறியே இல்லை.முதல் தளம் செல்ல ஏறியவன் தந்தை அவரது ஸ்டடி ரூமில் இருப்பதைக் கண்டு அச்சரியமாக அங்கே சென்றான்அவன் கதவைத் தட்டியதும் தான் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தில் இருந்து தலையை உயர்த்தியவர் அவனை அங்கே எதிர்பார்க்கவில்லை என்பதை அப்பட்டமாக தன் கண்களில் காட்டினார்.”சாப்பிட வந்தேன் பா. நீங்க சாப்பிட்டிங்களா?” என்று இயல்பாக அவர் அருகில் வந்து மற்றொரு சோஃபாவில் அமர்ந்தான்.பதில் கூறாமல் அவனை புரியாத பார்வை பார்த்தார் திருமூர்த்தி.”என்னப்பா?” என்றவனிடம்,”அரசியலுக்கு வர்றதுல உனக்கு என்ன பிரச்சனை தம்பி?” என்றார் உரிமை நிறைந்த குரலில்.”நீங்களுமா? அப்பா நான் இதை நம்ம வீடா நினைச்சு தான் சந்தோஷமா வர்றேன், உங்களை என் அப்பாவா மட்டும் பார்க்கறதால தான் இப்போ சாப்பிட கூப்பிட்டேன். ஆனா நீங்க ஏன் எப்பவும் என் அப்பாவா இல்லாம கட்சித் தலைவர் எக்ஸ் சி.எம் திருமூர்த்தியாவே இருக்கீங்க? ஒரு பையனா என்கிட்ட தெரிஞ்சுக்க உங்களுக்கு எதுவுமே இல்லையா? கட்சி, ஆட்சி, எலெக்ஷன் இதை தவிர நாம பேச எதுவும் இல்லையா? புதுசா ஸ்கூல் வாங்கி இருக்கேன். பண்ணைக்கு எதிர்ல நிலம் வாங்கி இருக்கேன். இது இல்லாம நேத்ரா கம்பெனில இன்வெஸ்ட் பண்ணி இருக்கேன். இதை பத்தி எதுவுமே உங்களுக்கு கேட்க தோணலயா? நான் உங்க பையன் பா. எப்பவும் என் ஏன் உங்க அரசியல் வாரிசாவே பார்த்துட்டு இருக்கீங்க?”என்று சலித்தான்.”ஏன்னா எனக்கு அப்பறம் கட்சி என்ன ஆகும்ன்னு பயமா இருக்கு. உள்ளாட்சி தேர்தல்ல நாம ஜெயிக்க வாய்ப்பில்லன்னு தெளிவா தெரியுது. கஷ்டப்பட்டு வளர்த்த கட்சி டா” என்றார் கோபமாக.”மெய்யப்பன் ஐயாவும் கட்சியை வளர்த்தார் தானே? அதை உங்க கிட்ட தானே கொடுத்தார். அவர் மகனுக்கு கொடுக்கலல்ல? நீங்களும் உங்க கட்சியில நல்ல தலைமைப் பண்புள்ள ஆள் யாருன்னு பார்த்து அவங்க கிட்ட கட்சியை கொடுங்க பா. ஏன் என்னை இழுக்குறீங்க?””யாருக்கோ தூக்கிக் கொடுக்கவா இத்தனை வருஷம் நான் உழைச்சேன்?” என்று அவர் பாய்ந்து வர,”இப்போ என்ன உங்களுக்கு இந்த உள்ளாட்சி தேர்தல்ல ஜெய்க்கணும். அதானே! நான் வந்து தான் அதை செய்யணும்னு இல்ல. அக்கா இருக்கால்ல அவ செய்வா.” என்று நகர முற்பட்டான்.”உனக்கு புரியல நீரூபா. என்ன இருந்தாலும் அவ பொம்பள. இங்க அதிகப்படி ஆம்பளைங்க இருக்குற இடம். இவ சொன்னாலும் பொம்பள சொல்லிக் கேட்கணுமா என்ற எண்ணம் அவங்க கிட்ட வருது. அவ செய்யறது யாருக்கும் பிடிக்கல.” என்றார் தளர்வாக.”கட்சியையே சமமா நடத்த முடியாதவங்க கிட்ட ஆட்சி கிடைச்சா அதை மட்டும் நல்லாவா நடத்திடப் போறீங்க? எனக்கு இப்ப அரசியல்ல விருப்பம் இல்ல. ஆனா பையனா உங்களுக்கு உதவ வேண்டியது என் கடமை. அக்கா ரெடி பண்ணின ஐ.டி விங் ரொம்ப வன்மமா சோஷியல் மீடியால மத்த கட்சி ஆளுங்க கூட சண்டை போடுறாங்க. நான் எனக்கு தெரிஞ்ச ஐ.டி டீமை உங்களை வந்து பார்க்க சொல்றேன். அதை நேத்ரா கம்பெனிக்கு கீழ கொண்டு வந்து புது ஐடியா வச்சு இந்த உள்ளாட்சி தேர்தல்ல ஜெயிக்க பாருங்க.” என்று சொல்லிவிட்டு வெளியே கிளம்ப இருந்தவன்,”என்ன தான் அக்கா உங்க மகளா இருந்தாலும் கட்சியை வளர்த்த மத்தவங்க கிட்டயும் எப்பவும் கலந்து ஆலோசனை செய்து அறிக்கை வெளியிடுங்க. உங்க அறிக்கை உங்க பார்வைக்கு வந்து அதுவே கடைசியா இருக்கறதா பார்த்துக்கோங்க. தலைவர் எல்லா இடத்திலும் இருக்க முடியாது தான் ஆனா சில இடங்களில் இருந்தே ஆகணும். அங்க ‘நீங்க’ இருங்க. அக்காவை நிக்க வைக்காதீங்க. அதுக்கு இன்னும் நாள் இருக்கு.” என்று கூறிவிட்டு வெளியேறினான்.அவன் பேசியதைக் கேட்ட திருமூர்த்தி சிந்தனை வயப்பட்டவராக அமர்ந்தார்.மகன் தன்னிடம் இது போல பத்து நிமிடம் பேசியது எப்பொழுது கடைசியாக நடந்தது என்று சிந்திக்க, சமீபமாக.. இல்லையே சில ஆண்டுகளாக அப்படி ஒரு நிகழ்வு நடக்கவில்லை. இன்று இந்த அளவுக்கு சொல்கிறான் என்றால் கண்டிப்பாக அவன் கூறுவதில் உண்மை இருக்கும். என்று எண்ணிக் கொண்டார்.அன்னையைத் தேடி மாடிக்கு சென்றவன் அங்கே நாகரத்தினம் அவனது அறையை சுத்தம் செய்து கொண்டிருப்பதைக் கண்டு,”அம்மா. வீட்ல இவ்வளவு பேர் இருக்காங்க. நீங்க ஏன் இதை செய்யறீங்க?” என்று அவரிடம் இருந்த துணியை வாங்கி மூலையில் வீசினான்.”என் பையனுக்கு செய்ய வலிக்குமா என்ன? இதெல்லாம் நான் பார்த்துப்பேன். நீ ஏன் இவ்வளவு லேட்டா வர்ற? வா சாப்பிடலாம்.” என்று அவன் கையைப் பற்றி அவனுடன் நடந்தார்.”நான் சீக்கிரமே வந்துட்டேன். உங்க புருஷன் கூட பேசிட்டு வர தான் நேரமாகி போச்சு.” என்று கண் சிமிட்டினான்.”என்ன நீ உங்க அப்பா கூட பேசிட்டு இருந்தியா? அதை பார்க்காம போயிட்டேனே! என்ன பேசின கண்ணு?” என்று அவர் ஆர்வமாக அவனிடம் திரும்ப,”ஓ புருஷன் பேச்சு வந்தா பையன் பசி பின்னாடி போயிடும்ல?” என்று அவரை அவன் வம்பு செய்ய,”கேலி பண்ணாத கண்ணு. வா அம்மா சாப்பாடு போடுறேன். சாப்பிட்டுட்டே நீ எனக்கு விஷயத்தை சொல்லு.” என்று உணவு மேசையில் அவனை அமர்த்தி உணவைப் பரிமாறத் துவங்கினார்.”தேர்தல்ல ஜெயிக்கறது கஷ்டம்னு சொன்னாரு. அதான் நம்ம நேத்து குட்டி கம்பெனி ஆளுங்களை வச்சு எப்படி அதை செய்யலாம்ன்னு சொல்லிட்டு வந்தேன்.” என்றான் இயல்பாக.”கண்ணு வேண்டாம் பா. அப்பா கிட்ட வேற யாரையும் வச்சு செஞ்சுக்க சொல்லி நீயே மாத்தி விட்டுடு.” என்றார் லேசான நடுக்கத்துடன்.”அம்மா. ஏன் மா? நம்ம நேத்ரா அப்பாவுக்கு உதவி செய்தா என்ன?” என்று அவன் சாதாரணமாக கேட்டுவிட்டு ஒரு நொடி சிந்தனைக்குப் பின்,”அக்காவைப் பார்த்து பயப்படுறீங்களா?” என்றான் அழுத்தமாக.ஆமென்று தலையசைத்த நாகரத்தினம், “எனக்கு பயமா இருக்கு பா, சின்னவ அவ வேலையை செய்யட்டும், நல்ல இடமா பார்த்து நீ கட்டிக் கொடு. அதுவே போதும். அவளுக்கு இந்த அரசியல் எதுவும் வேண்டாம் பா.” என்றார் கண்ணீருடன்.”அம்மா எனக்கும் நேத்து குட்டிக்கும் பிடிக்குதோ இல்லையோ எங்க மேல அரசியல் நிழல் விழ தான் செய்யும். ஏன்னா எங்க அப்பா அரசியல்வாதி. நாங்க ஒதுங்கிப் போனாலும் நீ திருமூர்த்தி மகன் தானேன்னு எங்களை விலக்கி நிறுத்த தான் செய்வாங்க. சில இடங்களில் நாங்களே அப்படி நிற்போம். ஆனா இது வீடு மா. எல்லாரும் சமம் தான். அப்பாவுக்கு உதவி வேணும்ன்னு கேட்டார். நான் ஐடியா சொல்லறேன். நேத்ரா கம்பெனி ஆள்களை வச்சு அதை செய்து தரப் போறா. நாங்க அரசியலுக்கு போகல மா. உதவிக்கு தான் போறோம். இது புரியாம யாரும் உங்க கிட்ட எதுவும் பேசினா..” என்ற இடத்தில் மெல்லிய கோபத்துடன் கூடிய அழுத்தம் கொடுத்தான் நீரூபன்.”என்கிட்ட வந்து பேசச் சொல்லுங்க. அந்த தைரியம் உள்ளவங்க உங்க கிட்ட வர மாட்டாங்கன்னு நினைக்கிறேன்.” என்று உணவை அளந்தான்.”ஐயோ சாப்பிடும்போது பேசி உன்னை கஷ்டப்படுத்திட்டேன். நீ சாப்பிடு சாமி. ” என்று மேலும் காயை அள்ளித் தட்டில் வைத்தார்.”விடுங்க மா. வேற எதுவும் முக்கியமான விசேஷம் இருக்கா இந்த வாரம். யாருக்கும் எதுவும் வாழ்த்து சொல்லி பரிசு அனுப்பணுமா?” என்று கேட்டுக்கொண்டே உணவை விழுங்கினான்.”நாளைக்கு உன் தாய்மாமாவுக்கு கல்யாண நாள் தம்பி. வருஷா வருஷம் நானும் அவங்களுக்கு பரிசு அனுப்புறேன். ஆனா அவங்க அதை அப்படியே திருப்பி அனுப்பி விடுறாங்க. என்ன செய்யன்னு தெரியல” என்று வருத்தம் கொண்டார் உண்டு முடித்தவன் அம்மாவுக்கு தட்டு வைத்து உணவை பரிமாற ஆரம்பித்தான்.”நான் அப்பறம் சாப்பிடுறேன் பா” என்று அவர் தடுத்தும் உண்ணச் சொன்னவன்,”இந்த வருஷம் நான் நேர்ல போய் கொடுத்துட்டு வரவா மா?” என்றான் எங்கோ பார்த்தபடி.”நீ போனா எனக்கும் சந்தோஷம் தான். உன் அத்தையும் சந்தோஷப்படுவா. ஆனா உன் மாமா? அவர் உன்னைப் பார்த்தாலே பேசாம போறாருல்ல. இத்தனை வருஷம் கடந்தும் அவர் மனசுல அவங்க அக்கா சாக நீ தான் காரணம்ன்னு தோணுதே!” என்றார் வருத்தமாக.”என்ன செய்ய முடியும்? பெத்தவுடனே அம்மா இறந்து போனா பிள்ளை முழுங்கிட்டதா தான் தோணும். ஆனா ஜன்னி வந்து அம்மா சாக நான் எப்படி காரணம்னு தான் புரியல.” என்றவன்,”அந்த பொண்ணு பூமிகா வேற எப்பவும் என் பண்ணை பக்கம் அவ பிரெண்ட் ஒரு பையன் கூட சுத்திக்கிட்டு இருக்கா.” என்றான் சாவகாசமாக.”ஒருவேளை அந்த பையனை விரும்புதோ? வேற எங்கேயும் போகாம ஏன் உன் பண்ணை பக்கம் வருது? ஏற்கனவே உன் மாமா உன்கிட்ட பேசுறது இல்ல. இதுல இந்த பொண்ணு எதுவும் செய்தா அதுவும் உன் மேல தான் வரும். நான் வேணா அந்த பாப்பா கிட்ட பேசவா?” என்றார் வெள்ளந்தியாக.வாய் விட்டு நகைத்த நீரூபன், “அவ என்னைப் பார்க்க தான் மா அவளோட பிரெண்டை கூட்டிட்டு வர்றா. அவ கண்ணுல என் மேல அவ்வளவு காதல் தெரியுது.” என்று சிரித்தான்.அவன் கூறியதைக் கெட்டு மகிழ்ச்சியில் திக்குமுக்காடி, “அப்ப நாளைக்கு அப்பாவையும் கூட்டிட்டு போய் அவங்க வீட்ல சம்பந்தம் பேசவா?” என்று ஆர்வமும் மகிழ்ச்சியும் பொங்க நாகரத்தினம் வினவினார். அதுவரை சிரித்துக் கொண்டிருந்த நீரூபன் அமைதியாகி, ” நீங்க நான் சொன்னதை மனசோட வச்சுக்கோங்க. பூமிகாவுக்கு அவங்க அப்பா நல்ல இடமா பார்த்து கல்யாணம் பண்ணி வைப்பார். அப்ப போய் நாம ஆசிர்வாதம் பண்ணிட்டு வரலாம். அவ்வளவு தான். அந்த பொண்ணு ஆசைப்படுறது நடக்காது.”என்று கூறிவிட்டு,”நீங்க சாப்பிட்டு ரெஸ்ட் எடுங்க. நான் நேத்ரா ஆபிஸ் வரைக்கும் போயிட்டு வர்றேன்.” என்று கிளம்பினான்.போகும் அவனையே பார்த்த நாகரத்தினம், ‘இந்த பையன் எத்தனை இடத்தில தான் அவன் ஆசையை விட்டுக் கொடுப்பான்? எப்ப தான் இவன் ஆசைப்பட்டு எதையும் என்கிட்ட கேட்பான்? அம்மான்னு வாய் நிறைய கூப்பிடுற என் பிள்ளைக்கு எந்த நல்லதும் செய்து பார்க்க முடியாம இருக்கேனே!’ என்று நொந்து போனார்.