Vizhi Moodukiren Un Ithazhodu Pesa -6

Revadyashok

✍️
Writer
அத்தியாயம்-6

பைக்கை ஸ்டார்ட் பண்ண முயற்சித்தவன் கான்ஸ்டபிள் அழைக்கும் சத்தத்தில் திரும்பினான்.

இவர் ஏன் என்னை நிற்க சொல்கிறார் என்று யோசிக்கும் பொழுதே அவனை நெருங்கிவிட்டிருந்தார்

"முதலில் வண்டியிலிருந்து இறங்குப்பா ..." என ஆதித்யாவுக்கு விஷயம் புரியவில்லை.

"ஏன் ?

"நீ இறங்கு சொல்றேன்..."என வண்டியை விட்டிறங்க சட்டென்று வண்டியின் சாவியை எடுத்துக்கொண்டார்.

"ஹையோ சார், என்ன செய்யறீங்க ? வண்டி சாவியை கொடுங்க நான் என் அக்காவை ஆபிசிலிருந்து பிக் அப் செய்யபோகணும்..."

"அதெல்லாம் போகலாம், உன் லைசன்ஸ், ஆர். சி புக் எடுத்து காட்டு, நான் சாவியை கொடுக்கிறேன்..."

அவர் கேட்டதும் என்ன செய்வதென்று ஒரு நொடி விழித்துவிட்டு,"சார் இது என் மாமாவின் வண்டி,லைசன்ஸ் என்னிடம்இருக்கு, ஆனால் ஆர்.சி புக் வீட்டில் இருக்கு..."என்றவன் வேக வேகமாக அவனின் லைசன்ஸை எடுத்து காட்ட அதைஆராய்ந்துவிட்டு மீண்டும் ஆர்.சி புக்கை கேட்க ஆதித்யாவுக்கு பெரிய தலைவலியாக போனது.

"அதான் லைசன்ஸ் காட்டிட்டேனே, அப்புறமும் ஏன் ஆர். சி புக்கை காட்ட சொல்லி வற்புறுத்தறீங்க? இதுக்கு எவ்வளவுஅபராதம் கட்டணும் சொல்லுங்க, கட்டிடறேன். என் அக்கா வெயிட் பண்ணுவாங்க சார்.ப்ளீஸ் புரிஞ்சிக்கங்க..."


"இதோ பார் தம்பி நீ அபராதம் கட்டறதெல்லாம் இருக்கட்டும். ஆனால் இந்த வண்டி எங்க ஏஸி தீனதயாளன்சாருடையது. அவருடைய வண்டியை யாரோ நீ திருடிட்டு வந்திட்டு என்ன பேச்சு பேசறே...? என்று விசுவாசத்தில் எகிறினார்.

அதுவரை பதட்டதுடன் கெஞ்சிக்கொண்டிருந்தவன்,அவர் மாமனின் பெயரை சொல்லவும் அவனின் பதட்டம் தணிய வாயைகுவித்து ஊதினான்.

"ஓ மாமா வண்டியை அடையாளம் கண்டு தான் என்னை நிறுத்தினீங்களா ? நான் தான் சொன்னேனே என் மாமான்னு அவர்உங்க ஏஸி தீனதயாளன் சார் தான் போதுமா...? நான் பிக் அப் செய்ய போகணும்னு சொன்னது அவரின் மனைவியை தான். அவங்க தான் என் அக்கா..."

இவ்வளவு சொல்லியும் கான்ஸ்டபிள் முகத்தில் சிறு சந்தேக ரேகை ஓட, "ஒரு நிமிஷம்..."என்றவன் தன் போனிலிருந்துஅழைக்க முற்பட்டவன் என்ன நினைத்தானோ அவரையே ஏஸி தீனதயாளுக்கு அழைக்க சொன்னான்.

அவரும் அழைத்துவிட்டு காத்திருக்க, "ஹல்லோ ..."என்ற ஏசியின் குரல் கேட்டதும் கான்ஸ்டபிளின் குரலில் பணிவுகுடியேறியது.

"ஹ்ம்ம் சொல்லுங்க வெள்ளைச்சாமி, அங்கு ஏதாவது பிரச்சினையா ?

"இல்லைங்க சார், இங்கே உங்க பைக்கை ஒரு தம்பி ஓட்டிட்டு வந்தது, விசாரிச்சா அவர் உங்க மச்சான்னு சொல்றார்..."

"அப்படியா, போனை அவரிடம் கொடுங்க..."

கான்ஸ்டபிள் நீட்டிய போனை வாங்கி,"மாமா நான் ஆதித்யா, என்னை உங்க கான்ஸ்டபிள் நிறுத்தி பைக் சாவியை வாங்கிட்டுகொடுக்க மாட்டேன்கிறார்..."என்றதும் எதிர்முனை உரக்க சிரித்தது.

"அதில்லை ஆதி, என் பைக்கை யாரோ திருடிட்டாங்கன்னு நினைச்சிட்டார் போல, பீச்சுக்கு வந்தியா ?

"ஹ்ம்ம் ஆமா மாமா, ஆனால் உங்க ஆளுங்க உள்ளே விட மாட்டேங்கிறாங்க..."

ஆதித்யா பேச பேச கான்ஸ்டபிளுக்கு வியர்த்து ஊற்றியது தவறு செய்திட்டோமோ என.

"சரி சரி நீ போனை அவரிடம் கொடு ..." என்றதும் ஆதித்யா புன்னகையுடன் கைபேசியை அவரிடம் நீட்டினான்.

அடுத்த சில வினாடிகளிலேயே போனை அணைத்துவிட்டு,"சாரி தம்பி, நீங்க எங்கைய்யாவின் மச்சான் என்று தெரியாது. தப்பாநினைச்சிக்காதீங்க, உள்ளே ஷூட்டிங் தான் நடக்குது, நீங்க வேணா போய் பார்த்துட்டு போங்க..." என்றபடி அவன் பைக்சாவியை வண்டியில் போட ஆதித்யா சிரித்தான்.

"எதுக்கு சாரி, விடுங்க தெரியாம தானே செய்தீங்க..."என்றவன் மணிக்கட்டை திருப்பி நேரத்தை பார்த்தான்.

இன்னும் அரைமணி நேரம் இருக்கவும்,'உள்ளே என்ன படத்தோடு ஷூட்டிங் நடக்குது பார்க்கலாம்...'என்ற எண்ணத்தோடுபைக்கை அங்கேயே விட்டுட்டு உள்ளே செல்ல அவனுக்கு உதவியாக வழி ஏற்படுத்தி கொடுத்தார் கான்ஸ்டபிள்.

புன்னகையோடு உள்ளே சென்றவன் கூட்டம் வட்டமாக அடைத்து நின்றிருக்க விலக்கி உள்ளே செல்ல ஹீரோயின்தோழிகளோடு கடற்கரையில் ஆடி பாடும் பாடலை படமாக்கிக்கொண்டிருக்க ஆதித்யா சுவாரஸ்யமாகபார்த்துக்கொண்டிருந்தான்.

ஒரே டேக்கை பலமுறை எடுக்க அவனுக்கு சலிப்பு தட்டியது, அதே சமயம் பிரமிப்பையும் உண்டு பண்ணியது.ஒரு பாடலின்பின்னே இத்தனை பேரின் உழைப்பும், கஷ்டங்களும் இருக்குமென்று அவன் யோசிச்சதே இல்லை.

எல்லோரும் அடுத்த டேக் ரெடியாகு முன் எல்லோரும் ரெஸ்ட் எடுத்துக்கொண்டிருக்க அங்கிருந்து கிளம்பிடலாம் என்றுநினைத்து திரும்பியவனின் விழிகள் ஹீரோயினாக நடித்துக்கொண்டிருந்த பெண்ணின் மீது விழுந்தது.

இது அவள் தானோ? இல்லை என் கண்ணிற்கு அப்படி தெரிகிறதா? என்று யோசிக்கும் பொழுதே அவளின் விழிகள்ஆதித்யாவை கண்டுவிட்டது.

அந்த விழிகளில் சிறு மிரட்சியும், பயமும் கலந்தடிக்க ஆதித்யாவுக்கு குழப்பமாக இருந்தது இவள் ஏன் என்னை பார்த்துபயப்படுகிறாள் என.

அப்படி யாரிவள் என்று உற்று நோக்க அப்பொழுது தான் புரிந்தது அவள் ஆதினி என.

பாடல் காட்சிக்காக முகத்தில் நீல வண்ணம் அடித்திருந்ததால் அவனுக்கு முதலில் அடையாளம் தெரியவில்லை. ஆதினிசினிமா நடிகையா? என்று குழம்பிக்கொண்டிருக்க அவளே அவனை நோக்கி வந்துக்கொண்டிருந்தாள் முகத்திலிருந்த நீலவண்ணத்தை துடைத்தபடியே.

"ஆதித்யா உங்களிடம் பேசணும், கொஞ்சம் வெயிட் பண்றீங்களா?

அவள் தன்னிடம் நெருங்கி பேசும்வரை அதிர்ச்சியில் நின்றிருந்தவன் சட்டென்று தன்னை மீட்டு செல்போனில் நேரத்தைபார்த்துவிட்டு, "ஸாரி ஆதினி, அக்காவை அவங்க ஆபிஸ்க்கு போய் பிக் பண்ணனும். நேரமாச்சு. நீங்க சினிமா நடிகையா? சொல்லவே இல்லையே...?

"சொல்றேன், நாளை சந்திக்கலாமா?

"ஷாட் ரெடி…"என்ற குரல் கேட்க, ஆதினி சிறு தவிப்புடன் திரும்பி பார்த்துவிட்டு, வேகமாக அவன் கைபேசியை பிடுங்கிஅதில் தன் நம்பரை பதிய வைத்து விட்டு அவனிடம் கொடுத்தாள்.

சட்டென்று அவள் கைபேசியை பிடுங்க, அதை எதிர்பாராததால் அதிர்ச்சியுற்று, "ஹேய்...ஹேய்...."என்றவனை கவனிக்காமல்தன் வேலையை முடித்துக்கொண்டு கொடுக்க ஆதித்யாவின் புருவங்கள் கோபத்தில் முடிச்சிட்டுக்கொண்டது.

"ஓகே ஆதித்யா நாளை பிரீயா இருக்கும்பொழுது கால் பண்ணுங்க ..."என தலையாட்டிவிட்டு ஷாட்டுக்கு செல்லும் அவளைதிரும்பி திரும்பி பார்த்தபடி பைக்கை நோக்கி நடந்தான்.

அவனுக்கு ஏன் ஷூட்டிங்கை பார்க்க வந்தோம் என்றாகியது. நேற்று அவள் சொன்னதை வைத்து அவன் மனதினுள் ஒரு பெரியபிம்பம் உருவாகியிருந்தது. ஆனால் இன்று அவள் ஒரு நடிகை என்று தெரிய வந்ததும் அந்த பிம்பம் கடற்கரை மணல் வீடுபோல கொஞ்சம் கொஞ்சமாக சரிய ஆரம்பிக்க மீண்டும் அவள் மேல் வெறுப்பு படர ஆரம்பித்தது.

வெறுப்பு என்பது எந்த நிமிடத்தில் யார் மீது வருமென வரையறுக்கப்பட்டதல்ல. சூழ்நிலைகளும், செய்யும் செயல்களுமேஅவற்றை நிர்ணயிக்கின்றன. அப்படி தான் முதன் முதலில் சந்தித்த பொழுது தன்னோடு மல்லு கட்டியவளை கண்டு கோபமும் , எரிச்சலும் உண்டானது. ஆனால் அவள் யாருமற்றவள், அநாதை குழந்தைகளுக்கு தன்னலமற்ற விதத்தில் உதவுகிறாள் என்றுதெரிய வந்ததும் கோபமும், எரிச்சலும் உருமாறி அவள் மீது மதிப்பையும், மரியாதையும் ஈட்டி தந்தது.

கோபம் கூட ஒருவிதத்தில் தணிய கூடியது. சிறு குழந்தை போன்றது. ஆனால் வெறுப்போ அவ்வளவு சீக்கிரம் மாற கூடியதல்ல. அதுமருமகளை பிடிக்காத மாமியார் போன்றது. அதை மாற்றும் வல்லமை பேசும் ஆட்களை பொறுத்தே அமைகிறது. ஆதினியின்மேல் உண்டான வெறுப்பு மாறுமா? அல்லது அப்படியே நிலைக்குமா என்பதை காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

அக்காவின் ஆபிஸை அடைந்து வழக்கம் போல குழந்தையை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு வருவதற்குள் தன்னைசுதாரித்துக்கொண்டு விட்டிருந்தான்.

அவனுக்கு வீட்டில் சகஜமாக நடந்துக்கொள்ள முடியவில்லை. மனது முழுவதும் ஆதினியின் மீது வெறுப்பு ஊறிக்கொண்டேஇருந்தது. அவளை பற்றி நினைத்தாலே நிலவேம்புவை போல கசந்தது. அவளை பற்றி யோசிக்க கூடாதென்று நினைத்துதமக்கைக்கு வாங்கி கொடுத்த சுஜாதா நாவலில் தன்னை தொலைக்க முற்பட, அவனின் கைபேசி சிணுங்கியது.

அசுவாரஸ்யமாக எடுத்தவனின் விழிகள் சந்தோஷத்தில் விரிந்தது. கத்தாரில் அவன் வேலை செய்த பொழுது அங்குகுடும்பத்தோடு தங்கியிருந்த நாராயணன் ஸார் தான் அழைத்தார். ஆசையாக எடுக்க முற்பட்டவனுக்கு அப்பொழுது தான் ஒருவிஷயம் உரைத்தது. அவரிடம் ஊருக்கு வரும் பொழுது சொல்லாமல் வந்தது?

'ஹையோ சார் அதை பற்றி தான் கேட்க போகிறாரோ ? கோபித்துக்கொள்வாரோ என்ற பயம் எழ தொடர்பை இணைக்காமல்நகத்தை கடித்தபடி அதையே பார்த்துக்கொண்டிருந்தான். எடுக்கலாமா? வேண்டாமா? யோசித்துக்கொண்டிருக்க கைபேசிவிடாமல் சிணுங்கிக்கொண்டிருந்தது. எதுவாக இருந்தாலும் சமாளித்துக்கொள்ளலாம் என்று முடிவெடுத்து அவரைஎதிர்க்கொள்ள ஆயத்தமானான்.

வேகமாக தொடர்பை இணைத்து,"ஹாய் சார் எப்படி இருக்கீங்க? உங்க வேலையெல்லாம் எப்படி இருக்கு ? வீட்டில்எல்லோரும் நலமா இருக்காங்களா? என்று படபடவென்று விசாரிக்க எதிர்முனை நிதானமாக சிரித்தது.

"எல்லோரும் நலமா இருக்கோம், எங்களை விடு, நீ என்ன எங்களிடம் கூட சொல்லாமல் கொள்ளாமல் இந்தியா போயிட்டே. எனக்கு உன் ப்ரெண்ட் இஸ்மாயில் சொல்லி தான் தெரிய வந்தது? என்னாச்சு ஆதி...?

விசாரிக்கும் பொழுதே அவரின் குரலில் சிறு கவலை குடிகொள்வதை அவனால் புரிந்துக்கொள்ள முடிந்தது. திட்டுவார், கத்துவார் என்று எதிர்பார்த்திருந்தவனுக்கு அவர் கவலை தொனிக்க கேட்கவும் முகம் கனிந்தது.

"இஸ்மாயில் எதுவும் சொல்லலையா சார் உங்களிடம்... ?

"சொன்னான், அதற்காக நீ இப்படியா நல்ல வேலையை உதறிட்டு போவே. சரி உனக்கு அந்த வேலை பிடிக்கலைன்னாஎன்னிடம் சொல்லியிருக்கலாமே, நான் எனக்கு தெரிந்த காண்டாக்ட்ஸ் மூலம் வேறு ஏதாவது வேலைக்கு சிபாரிசுசெய்திருப்பேனே ஆதி. உனக்கு ஒரு பிரச்சினைன்னு வரும் பொழுது என் ஞாபகம் உனக்கு வரலையா? இது தான் நாமபழகின பழக்கத்திற்கு அழகா? உன் சிஸ்டர் உன் மீது செம கோபத்தில் இருக்காள், என்னால் அவளை சமாதானப்படுத்தமுடியலை. இந்த நீயே பேசு..."

"சார்...சார் நான் சொல்றதை கே…"என்பதற்குள் கைபேசி நாராயணனின் மனைவி கமலியின் கைக்கு போயிருந்தது.

"சொல்லுப்பா பெரிய மனுஷா, எங்களையெல்லாம் விட்டுட்டு அதுவும் சொல்லாமல் விட்டுட்டு போற அளவுக்கு நீ பெரியமனுஷாயிட்டே. எங்க ஞாபகம் இருக்கா? இல்லை நாங்க ஏதும் உன்னை தொல்லை செய்திட்டுமோ ..."

படபடவென்று பொரிந்தவரின் கோபத்தில் புதைந்திருந்த அதீத அன்பு அவனை நெகிழ வைத்தது. தான் செய்தது தவறுஎன்றும் புரிந்தது. ஆனால் அச்சமயத்தில் எல்லாமே அவனை மீறி நடந்த விஷயங்கள் தான்.

"என்னப்பா பதிலே சொல்லாமல் இருக்கிறே ? ஒரு வேளை நாங்க போன் செய்தது உனக்கு பிடிக்கலையோ...?

இனியும் அமைதியாக இருந்தால் அக்கா நிச்சயம் வேறு ஏதேதோ கற்பனை செய்துக்கொள்வார்கள் என்ற முடிவுக்குவந்தவனாய் அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கினான்.

"ஹையோ அக்கா எனக்கு உங்க கோபம் புரியுது, ஆனால் நான் சொல்றதையும் கொஞ்சம் பொறுமையா கேளுங்க, அப்படியேபோனை ஸ்பீக்கரில் போடுங்க, சாருக்கும் நான் பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்..."

அவன் சொற்படியே ஸ்பீக்கரில் போட்டதும், "ஹ்ம்ம் அப்படி என்ன நியாயத்தை சொல்ல போறே, இரண்டு பேரும் தான்கேட்கிறோம்..." என ஆதியின் முகம் மலர்ந்தது.

கம்பெனியில் நடந்த கலாட்டாக்களை சொல்லி, "அவனுங்க எங்களை நடத்தின விதம் ரொம்ப கேவலமாக இருந்தது, அதைநாங்க தட்டிகேட்டோம். அதற்கு இஷ்டமிருந்தால் இங்கு வேலை செய், இல்லையென்றால் இப்போவே உன் மூட்டை முடிச்சைகட்டிக்கிட்டு ஊரை பார்க்க போன்னு ரொம்ப கேவலமா சொல்லிட்டானுங்க. நீங்களே சொல்லுங்க சார், அதற்கு மேல் நாங்கஎப்படி அங்கே நிற்க முடியும். அதான் அன்று ஈவினிங்கே டிக்கெட் புக் செய்து அடுத்த நாள் பிளைட்டில் இந்தியாவந்திறங்கிட்டேன்.

நடுவில் ஓர் இரவு தான் டைம் என் வீட்டை காலி செய்ய. அதான் யாரிடமும் சொல்லிக்கொள்ள கூட நேரமில்லை. பாதிஉடமைகளை இஸ்மாயில் கிட்டே கொடுத்திட்டு தான் வந்தேன். அவற்றை பேக் செய்து கார்கோ போட கூட நேரமில்லை. இது தான் என் அப்போதைய சூழ்நிலை.வேண்டுமென்றே சொல்லாமல் வரவில்லை. புரிஞ்சிக்கங்க ..." என்றான் மன்றாடலாக.

அதுவரை அவன் மேலிருந்த கோபம் கணிசமாக குறைந்துவிட, "சாரி ஆதி, உன் பிரச்சினை புரியாமல் நாங்க வேறுகோபப்பட்டுட்டோம். சரி வேலைக்கு என்ன செய்ய போறே ..?

"அங்கு பிரச்சினை ஆரம்பிச்சதும் நான் வேலை தேட ஆரம்பிச்சிட்டேன். ஊருக்கு வந்ததும் முதலில் அப்ளை செய்துட்டேன். இன்டர்வியூ கூட அட்டென்ட் செய்துட்டேன். கால் லெட்டர்க்கு காத்திட்டிருக்கேன்..."

"ஓ சூப்பர், ஆல் த பெஸ்ட் ..."

"தேங்க்ஸ் அங்கிள், சரி ஆத்மீகா எப்படி இருக்காங்க ...?

"அவ நல்லா இருக்கா, அப்புறம் உனக்கு ஒரு குட் நியூஸ், நாங்க இந்தியா வரலாம்னு முடிவு பண்ணியிருக்கோம்...."

"வாவ் உண்மையிலே இது குட் நியூஸ் தான், எத்தனை நாள் ஹாலிடேஸ் ....?

"ஹாலிடேஸ்க்கு இல்லை ஆதி, நான் வேலையை விட்டுட்டு வரலாம்னு இருக்கேன். ஆத்மீகா ஐ ஐ டியில் சேரணும்னு ஆசைப்படறா, உனக்கு தான் தெரியுமே இங்கே மேல் படிப்பு படிக்க வைச்சால் நம்மால் செலவை கட்டுப்படுத்த முடியாது. உன் அக்காவை தனியே அனுப்பலாம் தான் ஆத்மீகவுடன். ஆனால் அது சரிவராதுன்னு தான் நான் வேலையை ரிஸைன்பண்ண முடிவு செய்துட்டேன். நீ தஞ்சாவூரில் தானே இருக்கே?

"இல்லை அங்கிள், இப்போதைக்கு சென்னையில் அக்கா வீட்டில் இருக்கேன்..."

"அப்படியா சரி ஆதி, உன் வீட்டில் எல்லோரையும் கேட்டதா சொல், நான் பிளைட் ஏறினதும் கால் பண்றேன். டேக் கேர் ..."

"சரி ஆதி உன் அக்காவை கேட்டதா சொல், உன் மீது கோப்பட்டதற்கு ஸாரி..."

"இட்ஸ் ஓகே அக்கா, நீங்க நல்லபடியா இந்தியா வந்து சேருங்க. பை..."

போனை வைத்துவிட்டு, தலைக்கு மேல் இரண்டு கைகளை கோர்த்துக்கொண்டு அப்படியே மல்லாந்து கட்டிலில் படுத்தவனின்விழிகள் சுகமாக மூடியது.

"என்னடா ரொம்ப சுவாரசியமா யாருடனோ பேசிட்டிருந்தே? பெண் குரல் கூட கேட்டுதே, உன் ஆபிசில் வேலை செய்யறவளா...?

தமக்கையின் குரலிலிருந்த கேலிக்கு சன்னமாக சிரித்து,"அட நீ வேறக்கா, இவங்க உங்களை விட பெரியவங்க. கத்தாரில்எனக்கு அறிமுகமானவங்க. நாராயணன் ஸார். அவர் அங்கித்திய பேங்கில் மேனஜர். அவங்க மனைவி கமலி, அவங்களுக்குஒரு பொண்ணு ஆத்மீகா எல்லோரும் அங்கே தான் இருக்காங்க. நான் வீட்டை மிஸ் பண்ணாமல் இத்தனை வருஷம்இருந்ததற்கு காரணம் நாராயணன் அங்கிளும், கமலி அக்காவும் தான். ஏதாவது பண்டிகை என்றால் எனக்கு கண்டிப்பாஅழைப்பு இருக்கும். போக முடியாத நேரங்களில் சாப்பாடு என் ரூம் தேடி வரும்..."

"ஓ ! ஹ்ம்ம் நல்ல விஷயம்தாண்டா..."

"ஆமாம்க்கா நான் ஊருக்கு வர்ற அவசரத்தில் சொல்லாமல் வந்துட்டேன்னு கோபம், அதான் போன் செய்து ரெண்டு பேரும்பரேடு விட்டாங்க..."என்று சிரிக்க வர்ஷாவும் அவன் சிரிப்பில் கலந்துக்கொண்டாள்.

"அங்கேயும் அப்படி தானா ? சரி சமாதானம் சொன்னியா இல்லையா?

"அதெல்லாம் சரி பண்ணிட்டேன், அவங்க இந்தியாவுக்கே வந்திடறாங்களாம் என்னை மாதிரி..."

"என்னடா சொல்றா ?

"ஆமாம்க்கா அவங்க பொண்ணை கல்லூரியில் சேர்க்க தான் இங்கே வராங்க. கத்தாரில் படிக்க வைக்க ரொம்ப பணம்செலவாகும். அதான்..."

"அவங்க சொந்த ஊர் எதுடா ?

"நம் ஊர் தஞ்சாவூர் தான்..."

"அப்படியா சூப்பர்டா, சரி அவங்க ஊருக்கு வந்த பிறகு இங்கே இன்வைட் செய். சரி நேரமாச்சு சாப்பிட வா. உன் மாமாஉனக்காக காத்திட்டிருக்காரு..." என்று சாப்பிட அழைத்தாள்.

@@@
ஷூட்டிங் முடிச்சிட்டு வீட்டுக்கு வந்த ஒவ்வொரு நொடியும் ஆதித்யா அழைப்பார் என்று காத்திருந்து காத்திருந்து நாட்கள்பறந்தோடியதே தவிர அவனிடமிருந்து அழைப்பு ஏதும் வராதது ஆதினிக்கு வருத்தமாக இருந்தது. விழிகள் அவன் அழைக்கும்நொடிக்கு காத்திருக்க, செவிகளோ அவன் குரலை கேட்க ஏங்கியது.

தான் அழைக்கலாம் என்றால் அவன் நம்பர் அவளுக்கு தெரிந்திருக்கவில்லை. தன் நம்பரை அவன் கைபேசியில் பதியவைத்தாளே தவிர அவன் நம்பரை மனதில் ஏற்றிக்கொள்ள தவறிவிட்டாள். சரி நேரில் சென்று சந்திக்கலாம் என்றால் அதற்கும்வழியில்லை. அவனுடைய முகவரியை கூட கேட்டு வைத்துக்கொள்ளவில்லை. எங்கு அவனை சந்திப்பது என்ற ஒருயோசனையும் உதிக்கவில்லை.

அவனிடம் பேச அவளிடம் நிறைய விஷயங்கள் இருந்தது. அப்படி ஒன்றும் ஆதித்யா அவளிடம் மனது ஒன்றி பேசிவிடவில்லைதான். முதல் சந்திப்பிலேயே முறைத்துக்கொண்டான். இரண்டாம் சந்திப்பில் பட்டும்படாமல் இருந்தாலும் அவளை பற்றிதெரிந்ததும் அவனின் கோபம் நீர் குமிழி போல உடைந்ததை அவளே உணர்ந்தாள் அவன் செய்கையிலும், பார்வையிலும்.

அன்று அவனிடம் மனம் விட்டு பேசிவிட்டு வந்த பிறகு தான் நீண்ட நாளைக்கு பிறகு அவள் மனத இலவம்பஞ்சு போல லேசாகிஇருந்தது. நிம்மதியான உறக்கத்தை கூட தழுவியிருந்தாள். தாயின் இறப்பிற்கு பிறகு அவளுள் ஏதோ ஒரு மன சஞ்சலம். மனது விட்டு பேச கூட அவளுக்கு தோழிகள் என்று யாருமில்லை. நடிகையாக இருந்தாலும் அப்படி ஒன்றும் பிரபலமில்லை.

எதேச்சையாக எவ்விதத்திலும் சம்மந்தமில்லாத ஆதித்யா அவளுக்கு பழக்கமாக அவனிடம் எல்லாவற்றையும் கொட்டதோன்றியது. அப்படியும் மனதில் தேங்கியிருந்த பாரத்தில் பாதியை அவனிடம் இறக்கி வைத்துவிட்டாள். ஆனால்மிச்சமிருக்கிற பாரங்களை இறக்க அவளுள்ளும் சிறு தெளிவு தேவைப்பட்டது. ஆனால் தெளிவு ஏற்பட்டதும் அதைஉடனேயே ஆதியிடம் தான் பகிர்ந்துக்கொள்ள தோன்றியது.

ஆனால் பரிதாபம் அவனின் நம்பர் அவளிடம் இல்லை. அந்த சமயத்தில் தான் ஷூட்டிங் ஸ்பாட்டில் அவனை பார்த்ததுமே ஒருநடிகையாக அவன் முன் சென்று நிற்க சற்று மிரட்சியாக தான் இருந்தது. ஆனால் பேச துடித்துக்கொண்டிருந்த விஷயம்அவளை அவன் முன் கொண்டு நிறுத்தியது. பேச அதிக நேரமில்லாததால் அவனின் கைபேசியில் நம்பரை பதிய வைத்துவிட்டுஅங்கிருந்து வேகமாக விலகி சென்றாள்.

பார்வையாளர்களின் பார்வை உறுத்தும் வண்ணம் அவனிடம் பேசிக்கொண்டிருந்தால் அது அவளின் எதிர்கால சினிமாவாழ்க்கைக்கு நன்றாகயிராது என்பது அவளுக்கு தெரியும். வளர்ந்து வரும் நடிகை ரகசிய திருமணம் என்று கிசு கிசு போட்டுஅவளின் மொத்த வாழ்க்கைக்கும் வேட்டு வைத்துவிடுவார்கள். மற்றவர்களின் மனதை பற்றி பத்திரிகையாளர்களுக்கோ, வேடிக்கை பார்க்கிற மக்களுக்கோ என்ன கவலை. அவர்களின் வாய்க்கு மிக சுலபமாக அவல் கிடைக்கிறது என்றால் அதைவிடவா போகிறார்கள்.

இரண்டு மூன்று நாள் காத்திருந்துவிட்டு அவனை சந்தித்த புக் ஷாப் அருகே சென்று ஓர் ஓரமாக நின்று அவன் வருகிறானாஎன்று கவனித்து பார்த்தாள். காத்திருந்தது தான் மிச்சம் அவன் வந்தபாடில்லை. சரி மாலில் சுற்றுகிறானோ என்றசந்தேகத்தில் அங்கேயும் சென்று அவனை தேடி பார்த்தாள். அவளுக்கு தெரிந்து இரண்டு இடங்கள் தான். அவனை எங்கும்காணாததால் மனது சோர்ந்து போக அன்றைய ஷூட்டிங்கை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தவளுக்கு புது நம்பரிலிருந்துஅழைப்பு வந்தது.
 

Latest profile posts

ஹாய் பிரெண்ட்ஸ்... "வழி மாறிய பயணம்" கதையின் பத்தாவது அத்தியாயம்👇👇👇
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் 😍
அலாதி தேடலாய் நீ அத்தியாயம் 9😎👇
ஹாய் பிரெண்ட்ஸ்... "வழி மாறிய பயணம்" கதையின் ஒன்பதாவது அத்தியாயம்👇👇👇
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் 😍
அலாதி தேடலாய் நீ அத்தியாயம் 8 😎👇
%B8%8F.1253/
ஹாய் பிரெண்ட்ஸ்... "வழி மாறிய பயணம்" கதையின் எட்டாதவது அத்தியாயம்👇👇👇

New Episodes Thread

Top Bottom