Vizhi Moodukiren Un Ithazhodu Pesa - 19

Revadyashok

✍️
Writer
பிறந்ததிலிருந்து இயற்கையை தான் ரசிக்க முடியாமல் போனதென்றால் அவளுடைய மன ஆசைகளையும், கஷ்டங்களையும் கூட வெளியில் சொல்ல முடியாமல் தனக்குள்ளே பூட்டி வைத்துக்கொள்ள பழகிக்கொண்டிருந்தாள். தந்தையால் கைவிடப்பட்ட ஒரு அபலை தாய்க்கு பெண்ணாக பிறந்த காரணத்தினால் விருப்பும், வெறுப்பும் அவள் வாழ்க்கை அகராதியில் இருந்தே நீக்கப்பட்டிருந்த வார்த்தைகள். தனக்கு என்ன கிடைக்கிறதோ அதை வைத்து மட்டுமே திருப்தி அடைந்துக்கொண்டிருந்தாள். தாயின் மறைவிற்கு பிறகு சினிமா துறைக்கு வந்த பிறகு எல்லாமே பெஸ்ட்டாக கிடைத்ததென்னவோ நிஜம். ஆயினும் அந்த துறையில் இருக்கும் மனரீதியான துன்பங்களை பகிர்ந்துக்கொள்ள அவளுக்கு நெருக்கமானவர்கள் என்று யாருமில்லை.

அஃப்கோர்ஸ் ஆதித்யா அவளின் வாழ்க்கையில் நுழைந்த பிறகு அவளின் மன இறுக்கங்கள் சற்று தளர்ந்தன , ஆயினும் அதிலும் சில எல்லைகள் அவள் வாயை பூட்டு போட்டு வைத்திருந்தது. சில நேரங்களில் ஆதியிடம் தன் கஷ்டங்களை சொல்லி அவன் மார்பில் சாய்ந்து அழ வேண்டுமென்று நினைத்திருக்கிறாள், ஆனால் நடிகை என்ற அந்தஸ்தும், ஆதிக்கு பிடிக்காத தொழிலும் அவளின் மனதை திறக்க முடியாமல் கட்டிப்போட்டன.

ஆனால் இன்று...

ஆதினியின் விழிகளில் நீரை கண்டதும் ஆதி பதறி அவளை நெருங்கி தோளை பற்றி,"என்னாச்சு ஆதினி, ஏதாவது சொல்லணுமா என்னிடம்...? எதுவாக இருந்தாலும் சொல்லு, உனக்கு நானிருக்கிறேன்..." என அவளின் தோள்களை ஆதரவாக அழுத்தினான்.

ஆதியின் வார்த்தைககளும், அவனின் தொடுகையும் அவள் மனதை திறவுகோல் கொண்டு திறக்க,"ஆதி..."என்ற கதறலோடு அவன் மார்பில் சாய்ந்தாள்.

ஆதினியின் செயலை எதிர்பார்க்காததால் ஒரு நொடி அதிர்ந்து அடுத்த நொடி அவளை ஆறுதலாக தன்னோடு சேர்த்து அணைத்துக்கொண்டான்.

அவள் மனதில் சொல்ல முடியாத ஏதோ விஷயம் இருக்கென்பதை புரிந்துக்கொண்டவன் அவளின் முதுகை ஆதூரவாக வருடிக்கொடுக்க ஆதினியின் அழுகை கொஞ்சம் கொஞ்சமாக கட்டுக்குள் வந்தது.

ஆதித்யாவின் அணைப்பில் இருக்கிறோம் என்ற ஸ்மரணை உண்டாக, அவனிடமிருந்து விலகி,"ஐ ம் ஸாரி ஆதி..." என்றாள் முனகலாக.

"இட்ஸ் ஓகே ஆதினி, உன் அழுகைக்கான காரணத்தை சொல்லலாமே..." என அவளின் விழிகள் தழைய, அதிலிருந்து ஓர் கண்ணீர் மணி தரையில் விழுந்து தெறித்தது.

"நா...நான்..."என்று திக்கினான்.

"சொல்லு ஆதினி, உன்னுடன் நடிக்கிற ஹீரோ ஏதேனும் தொல்லை கொடுக்கிறானா? என்று விசாரிக்கும் பொழுதே ஆதியின் குரலில் கடினமேற கைகள் முறுக்கேறியது.

"ஹீரோ இல்லை ப்ரொட்யூஸர்..." என்றாள் அழுகையுடன்.

"ஆதினி..."

"ஆமாம் ஆதி, ஆரம்பத்தில் என் நடிப்பை பார்த்து தான் என்னை புக் செய்ததாக சொன்ன ப்ரொட்யூஸர் பாதி படம் முடிந்ததும் அவரின் விளையாட்டை ஆரம்பிச்சுட்டார். முதலில் ஷூட்டிங் ஸ்பாட் வந்து என்னுடன் வழிஞ்சி வழிஞ்சி பேசினார், அதன் பிறகு என் வீட்டுக்கே வர ஆரம்பித்தார். மறைமுகமா அவரின் ஆசையை சொல்லிட்டிருந்தவர் ஒரு நாள் நைட் குடிச்சிட்டு என் வீட்டுக்கு வந்துட்டு ..." என்றவளுக்கு அதற்கு மேல் பேச முடியாமல் தொண்டை அடைக்க விழிகளில் மீண்டும் கரகரவென கண்ணீர் வழிந்தது.

அவளின் நிலைமை புரிந்து ஆதி அவளை தோளோடு அணைத்து கைகளை அழுத்தி கொடுக்க, அழுகையை அடக்கி விழிகளை துடைத்துக்கொண்டாள்.

"அவன் கன்னத்தில் பழுக்க கொடுக்க வேண்டியது தானே ஆதினி, அவனை சும்மாவா விட்டே? ஹவ் டேர் ஹிம், தனியாக இருக்கிற பெண்ணிடம் வீரத்தை காட்டியிருக்கான் ரோக் ..." என்று உறுமினான்.

"அவனை சும்மா விடலை, நீங்க சொன்னபடி நாலு அறை கொடுத்து பிடிச்சி மூலையில் தள்ளிவிட்டு தான் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தேன். இரவு முழுவதும் பீச்சில் யாருக்கும் தெரியாம ஓர் இருட்டில் பதுங்கியிருந்தேன். விடியற்காலையில் பீச்சில் உங்களை பார்த்ததும் ஓடி வந்து உங்களிடம் சொல்லி அழணும்னு நினைச்சி கூப்பிட்டேன்..." என ஆதித்யா அவளை ஆச்சர்யமாக நோக்கினான்.

"ஓ ! அன்றைக்கு என் பேர் சொல்லி அழைச்சது நீ தானா? வீட்டுக்கு வந்த பொழுது கூட உன் முகம் சோர்வாக இருந்ததோ, அதையேன் நீ அன்றைக்கு சொல்லலை, நான் திரும்ப திரும்ப கேட்டேனே?

"எப்படி சொல்ல முடியும்? அருண் விஷயத்திற்கு உதவி கேட்கவே எனக்குள் அத்தனை தயக்கம், உங்களை தொல்லை செய்யறேனொன்னு. அதுமட்டுமில்லாமல் உங்களுக்கு நான் நடிகையாக இருப்பதே பிடிக்காதுன்னு எனக்கு தெரியும்..." என ஆதித்யாவின் விழிகள் அந்த இரவின் ஒளியில் ஆச்சர்யத்தில் பளபளத்தது.

"ஆதினி ...! என்றான் உணர்ச்சிவசப்பட்டவனாக.

"ஆமாம் ஆதி, உங்களை புக் ஷாப்பில் சந்தித்த பொழுது நீங்க என்னுடன் சாதாரணமாக தான் பேசினீங்க, ஆனால் என்னை ஷூட்டிங் ஸ்பாட்டில் பார்த்த பிறகு நீங்க என்னுடன் முகம் கொடுத்தே பேசலை. அப்பொழுதே எனக்கு புரிந்துவிட்டது. உங்களுக்கு என் நிலைமையை புரியவைத்துவிடும் நோக்கோடு பலமுறை பேச முயற்சித்தும் இருக்கேன், ஆனால் ஏதோ ஒரு காரணத்தினால் அது முடியாமல் போய்டுச்சி. ஆனால் இப்போ..." என்று நிறுத்தியவள் ஆதியின் கைகளை பிடித்துக்கொண்டு அவனை நேருக்கு நேர் நோக்கினாள்.

"எனக்கு உங்களை தவிர சினிமா வாழ்க்கை முக்கியமில்லை ஆதி, உங்களுடன் ஒரு சாதாரண பெண்ணாக , உங்களின் மனைவியாக காலம் முழுவதும் உங்க அன்பில் கரையணும்னு ஆசையாயிருக்கு, எஸ் ஐ லவ் யூ ஆதி...." என்று ஒரு வேகத்தில் தன் மனதில் இருந்தவைகளை கொட்டி முடிக்க ஆதித்யா வாயடைத்து போயிருந்தான்.

சில நொடிகள் இருவரின் விழிகளும் மௌன மொழியில் பேசிக்கொண்டது, 'என் காதலை ஏற்பாயா ஆதி...' என்று ஆதினியும், 'உன் மனதிலும் நான் தான் இருக்கேனா ஆதினி...' என்று ஆதியின் விழிகளும் தத்தம் மனதை உரக்க பரிமாறிக்கொண்டது.

"சொல்லுங்க ஆதி, உங்க வாழ்க்கை துணையாக நான் வரலாமா? என அடுத்த நொடி ஆதினி, ஆத்தியாவின் அணைப்பில் கட்டுண்டாள்.

"மீ டூ லவ் யூ ஆதினி, உன்னை பார்த்த அன்று உன்னை திமிர் பிடித்தவள் என்று திட்டினேன், ஆனால் உன் கதையை கேட்ட பிறகு என்னை அறியாமலே என் மனதில் நுழைந்து உனக்கென்ன ஓர் இடத்தை பிடிச்சிட்டே. ஆனால் உன் தொழில் தான் என் மனதை திறக்க தடையாக இருந்தது..."

ஆதி பேச பேச ஆதினியின் நெஞ்சம் குளிர்ந்து போக, அவனிடமிருந்து விலகி காதலனின் விழிகளை ஊடுருவினாள்.

"உங்க மனசு எனக்கு புரியுது ஆதி, என்றைக்கு அந்த ப்ரொட்யூஸர் படுக்கைக்கு வராட்டி என்னை படத்திலிருந்து தூக்கிடுவேன் என்று மிரட்டினானோ அன்றே நான் முடிவு செய்துட்டேன். என் மானத்தை விற்று எனக்கொரு அடையாளத்தை தேடிக்கிறதை விட மானத்தோடு பத்தோடு பதினொன்றாக இருந்துவிட்டு போவதே மேல்னு முடிவு செய்து சினிமா தொழிலை விட்டு வந்துட்டேன்..."

"ஹேய் என்ன சொல்றே? ரியலி !

"எஸ் ஆதி, அன்று அருணோட மறைவு செய்தி சொல்ல வந்தீங்களே அன்று கடைசியா நான் நடிக்க வேண்டிய போர்ஷனை முடிச்சி கொடுக்க தான் போயிருந்தேன். நான் படத்திலிருந்து விலகறேன்னு சொன்னதும், டைரக்டர்ஸ், சக நடிகர்கள் அவரை அடஜஸ்ட் செய்து போக சொன்னார்கள். ஆனால் எனக்கு அப்படியொரு வாழ்க்கை தேவையில்லை. நாய்களுக்கு எச்சில் இலையாக இருக்க இஷ்டமில்லை.
அதனால் தான் நீங்க டெல்லி போறேன்னு சொன்னதும் நானும் உங்களுடன் வரேன்னு சொன்னேன்..." என்று முடிக்க ஆதியின் உள்ளம் சந்தோஷத்தில் குதூகலிக்க அவளை இழுத்து அணைத்து அவள் உச்சந்தலையில் முத்தமிட்டான் "லவ் யூ டா ..." என.

சில நிமிடங்கள் புதிய காதலர்கள் இனிமையான சஞ்சாரத்தில் நீந்திவிட்டு நிகழ்காலத்துக்கு வர ஆதினிக்கு மனதை விட்டு பெரிய பாரம் இறங்கியது போலிருந்தது.

"சரி ஆதினி ரொம்ப நேரம் ஆயிடிச்சு, இந்நேரத்தில் இருவரும் தனியாக இருப்பது சரியில்லை. வா கீழே போகலாம்..." என்று எழுந்து அவள் எழ கைகொடுத்தான்.

ஆதினி எழுந்ததும் கீழே செல்ல எத்தனிக்க அவனின் கையை பிடித்து நிறுத்தினாள்.

வெண்ணை சிலை போலிருந்தவள் நிலவின் பால் ஒளியில் மேலும் கவர்ச்சியாக தெரிய ஆதியின் மனம் கட்டுப்பாடற்று அலைந்தது. அவளின் ஈர் இதழ்கள் இரவின் ஒளியில் பளபளத்து அவனை கவர்ந்து இழுக்க அவளை நோக்கி ஓரடி எடுத்து வைத்தான். அடுத்த நொடி என்ன நினைத்தானோ தலையை குலுக்கி இதழை கடித்து தன்னை சமன் படுத்திக்கொண்டவன் இரு புருவங்களை உயர்த்தி கேள்வியை தொடுத்தான்.

"உங்க வீட்டில் நம் காதலை ஏத்துக்குவாங்களா ஆதி...? அதை கேட்கும் பொழுதே அவள் குரலில் இனம் புரியாத நடுக்கம்.

ஆதினியின் கேள்வியில் அவனின் காதல் மயக்கங்கள் அறுபட,"ஏன் இப்படி கேட்கிறே?

"உங்களுக்கே தெரியுமே நான் ஒரு நடிகைன்னு, அஃப்கோர்ஸ் இப்போ அதை விட்டு வெளியே வந்துட்டேன். ஆனால் தஞ்சாவூரில் இருக்கிற உங்க பெற்றோர் என்னை அவங்க மருமகளா ஏத்துக்குவாங்களா?

ஆதினியின் நியாயமான பயம் அவனுக்கும் புரிய, அவளின் கைகளோடு தன் கைகளை பிணைத்து அதில் தன் இதழ்களை பதித்தான்.

"அந்த கவலை உனக்கு தேவையற்றது, இந்த ஆதி உன்னுடன் இருக்கிறவரை உனக்கு எந்த கவலையும் வரக்கூடாது. நானிருக்கிறேன் உனக்கு, இது நான் உனக்கு கொடுக்கிற வாக்கு. பீலீவ் மீ..." என உணர்ச்சி மிகுதியில் ஆதினியின் விழிகளில் கரகரவென கண்ணீர் வழிந்தது.

அதை துடைத்து,"போகலாமா? என புன்னகையுடன் தலையை உருட்டினாள்.

தஞ்சாவூர் ...

இரவின் நிசப்தத்தில் வீடே உறங்கிக்கொண்டிருக்க, ராஜேஸ்வரிக்கு மட்டும் உறக்கம் வரவில்லை, அவர் மனம் முழுவதும் மகளும், கணவரும் பேசியது தான் ஓடிக்கொண்டிருந்தது. மகள் சந்தோஷமாக இருக்க வேண்டுமென்றால் நன்றாக படித்த, அழகான, நல்ல குணமுள்ள மாப்பிள்ளையை தேடி திருமணம் செய்துவைக்க முடியும். அதுவே மகன் என்றால் மகனை விட குறைவாக படித்தவளாக, நன்றாக சமைக்க தெரிந்தவளாக, வீட்டு பெரியவர்களுக்கு அடங்கியவளாக, கணவனின் சொல்பேச்சு கேட்டு நடக்கிறவளாக இருந்தால் தானே மகன் நிறைவாகவும் சந்தோஷமாகவும் இருப்பான். குடும்பமும் நன்றாக நடக்கும், இது ஏன் நான் பெத்து வைச்சிருக்கிறவளுக்கு புரியலை. அவ தான் சின்ன பெண் புரியாமல் பேசுகிறாள் என்றால் எனக்கு வாய்ச்சதும் அவளுக்கு ஒத்து ஊதுது. இதுங்களையெல்லாம் என்ன செய்யறது?

நான் வேறு எனக்கு அடங்கி நடக்கிறவளா , குடும்பத்துக்கு ஏத்தவளா ஒரு பெண்ணை பார்த்து வைச்சிருக்கேன், வர்ஷா வேறு கண்டமேனிக்கு பேசி அந்த சம்மந்தத்தை கெடுத்து விட்ருவா போலிருக்கே. இருக்கட்டும் இந்த மனுஷன் இல்லாத பொழுது வர்ஷாவிடம் பேசி அவளுக்கு நிதர்சனத்தை புரிய வைக்கணும்..." என்று யோசித்துக்கொண்டிருக்க விழிகள் செருகியது உறக்கத்தில்.

சென்னை ...

அலாரம் கீ கீன்னு அடிக்க நிம்மதியான உறக்கத்தில் ஆழ்ந்திருந்த ஆதினியின் உறக்கம் தீடிரென்ற எழுப்பப்பட்ட அலாரத்தின் சத்தத்தில் திடிக்கிட்டு எழுந்தாள். அந்த அறையின் அமைப்பும், சூழ்நிலையும் ஒரு நொடி அவளை குழப்பத்தில் ஆழ்த்தி பின் ஆதியின் வீட்டில் இருக்கிறோம் என்று புரிந்தது. அதுவும் நேற்றிரவு தன் மனதில் இருந்த பாரங்களையும், காதலையும் ஆதியிடம் இறக்கி வைத்துவிட்டதால் மனது கோழி இறகை போல லேசாகிவிட பல நாட்களுக்கு பிறகு நிம்மதியான உறக்கத்தை தழுவியிருந்தாள்.

கதவு நாசூக்காக தட்டபட, 'ஆதியாக தான் இருக்கும் ...' என்று நினைத்த மாத்திரத்தில் அவளையும் அறியாமல் இதழ்களில் ஓர் வெட்க புன்னகை ஜனிக்க கட்டிலை விட்டிறங்கி, உடையையும், சிகையையும் சரி செய்துக்கொண்டு கதவை திறந்தாள்.

"குட் மார்னிங் டியர்..." என்ற ஆதியின் கிசு கிசுப்பான காலை வணக்கம் ஆதினிக்கு இன்ப சிலிர்ப்பை உண்டு பண்ண, பதிலுக்கு வெட்க சிரிப்புடன் காலை வணக்கத்தை உதிர்த்தாள்.

அவன் ஜாகிங் உடையில் இருப்பதை அப்பொழுது தான் கவனித்து,"ஜாகிங் கிளம்பிட்டீங்களா ஆதி...?

"ஆமாம் ஹனி, அத்தான் அக்காவை அழைச்சிட்டு வர ஊருக்கு கிளம்பிட்டார். நீ எழுந்து வீட்டில் யாருமில்லையென்றால் பயப்படுவேன்னு தான் சொல்லிட்டு போக உன்னை எழுப்பினேன். சரி நான் கிளம்பறேன், நீ போய் உன் தூக்கத்தை கண்டினியூ செய்..." என்று அவள் கன்னத்தை வருடினான்.

அவனின் அன்பில் நெக்குருகி, "பலவருஷத்திற்கு பிறகு இன்று தான் நிம்மதியா தூங்கினேன், எல்லாம் உங்களால் தான் ஆதி, தேங்க்ஸ். ஒரு நிமிஷம் இருங்க இதோ வர்றேன்..." என்று சமையலறையை நோக்கி செல்ல ஆதி புன்னகையுடன் ஹால் சோபாவில் அமர்ந்து ஷூ லேஸை சரியாக கட்டினான்.

"இந்தாங்க ஆதி, இதை குடிச்சிட்டு கிளம்புங்க..." என அவளின் அழைப்பில் நிமிர்ந்தவன் ஆதினியின் கையில் இருந்த லெமன் ஜூஸை கண்டு ஆச்சர்யத்தில் விழி விரித்தான்.

"உங்க ஆச்சர்யத்திற்கான காரணம் புரியுது, நீங்க ஜாகிங் கிளம்பும் பொழுது வர்ஷா அக்கா உங்களுக்கு இதை கொடுப்பாங்க, அதானே ..."என ஆதியின் ஆச்சர்யம் பலமடங்காகியது.

"ஹேய் உனக்கெப்படி தெரியும்? அக்கா சொன்னாங்களா?

அவனின் கேள்விக்கு மெலிதாக புன்னகைக்க அதிலேயே அவனுக்கு தேவையான பதில் கிடைத்துவிட,"உனக்கு ஜாகிங் போகிற பழக்கம் இருந்தால் வாயேன் இருவரும் சேர்ந்தே போகலாம்..."

அவசரமாக மறுத்து, "இல்லை வேண்டாம் ஆதி, தீனா சார் சொன்னபடி நான் வீட்டிலேயே இருப்பது தான் நல்லது, அது மட்டுமில்லை அந்த கொலைகாரன் நீலன் பீச்சில் வாக்கிங் போகிற நேரமிது. என்னை உங்களோடு சேர்த்து பார்த்தால் நம்ம எல்லோருக்குமே பிரச்சினை..."

அவள் பேச்சில் பயம் வெளிப்படையாக தெரிய ஆதிக்கு தன் முட்டாள்தனத்தை நினைத்து தன்னை கொட்டிக்கொண்டான்.

"ஓ ஸாரி ஆதினி, இதில் இப்படியொரு பிரச்சினை இருக்குன்னு தெரியாம போச்சு, ஓகே நான் போயிட்டு வந்துடறேன், யார் பெல் அடிச்சாலும் கதவை திறக்காதே. கேர்புல்..." என சம்மதமாக தலையை உருட்டினான்.

ஆதி சென்றதும் குளித்துவிட்டு சமையலறைக்கு சென்றவள் தனக்கென்று காஃபியை தயாரித்து டிவி முன் அமர்ந்து ஆற அமர்ந்து டிவியை பார்த்துக்கொண்டே குடித்து முடித்து, சப்பாத்தியும், குருமாவும் செய்துக்கொண்டிருக்க அவளின் கைபேசி அழைத்தது.

'ஆதியாக இருக்குமோ...' என்று யோசித்தபடி பரபரப்பாக டேபிள் மேலிருந்த கைபேசியை எடுத்தவளின் விழிகள் அதில் டிஸ்பிளே ஆன நம்பரை கண்டு அதிர்ச்சியில் விரிந்தது.
 

Latest profile posts

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்😍

வெய்யோனின் தண்மதி அவள் 25😎👇

ஓம் சாயிராம்
எபிசோடை படித்து மகிழுங்கள்; பிடித்திருந்தால் கதையை தொடர்ந்து படியுங்கள்; பிரியமுடன் உங்கள் கருத்துக்களை அன்புடன் பகிருங்கள்.
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்😍

வெய்யோனின் தண்மதி அவள் 24😎👇

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்😍

வெய்யோனின் தண்மதி அவள் 23😎👇

மக்களே!!!
"நான் தொலைத்த நாட்களெல்லாம் மறுபடியும் மலருமா..!!!"
முப்பத்திரண்டாவது அத்தியாயம் பதிவிட்டிருக்கேன்... படிச்சிட்டு உங்க கருத்த சொல்லுங்க..☺️☺️☺️

New Episodes Thread

Top Bottom