Vizhi Moodukiren Un Ithazhodu Pesa -16

Revadyashok

✍️
Writer
அத்தியாயம் - 16

தஞ்சாவூர் ...

ஆபிசிலிருந்து திரும்பியிருந்த கணவருக்கு காஃபியை தயாரித்து கொடுத்துவிட்டு அவர் முன்னால் அமர்ந்த ராஜேஸ்வரியை கேள்வியாக நோக்கினார் சர்வேஷ்வரன்.

"இன்றைக்கு புரோக்கர் ஜெயராமன் வந்திருந்தார்..."என்று ஆரம்பித்ததுமே சர்வேஷ்வரனுக்கு புரிந்து போனது.

"ராஜி உனக்கு எத்தனை முறை சொல்றது, ஆதித்யா கத்தாரிலிருந்து திரும்பி வந்து கொஞ்ச நாள் தான் ஆகுது. அதுவுமில்லாமல் அவன் இப்பொழுது வேலையில்லாமல் இருக்கிறான். இந்த சமயத்தில் நீ எதுக்கு தேவையில்லாமல் ப்ரோக்கரை வர சொல்றே? கொஞ்சம் பொறுமையா இரு ? என்றார் அசட்டையாக.

"நான் எங்கே வர சொன்னேன்? அவராக தான் வந்தார், அதை விடுங்க . சில பொண்ணுங்க போட்டோக்களை கொடுத்திட்டு போயிருக்கார். பார்க்கவும் அழகா இருக்காங்க, நல்ல இடங்களாவும் இருக்கு. இப்போ நாம பார்த்து பேசுவோம். பையனுக்கு வேலை கிடைச்சதும் நிச்சயத்தை வைச்சிக்கலாம். என்ன சொல்றீங்க? என்றபடி கணவரின் முகத்தை ஆர்வமாக நோக்க அவருக்கோ எரிச்சல் மண்டிக்கொண்டு வந்தது.

'இவள் ஏன் ஆதியை கல்யாண வாழ்க்கையில் தள்ளி விடுவதிலேயே குறியா இருக்கிறா, அதுவும் பையனின் அபிப்ராயத்தையும், அவனின் ஆசாபாசங்களை கேட்காமல். ஏற்கனவே ஒருத்தனை காதலித்தவளை ஆதி தலையில் கட்ட பார்த்தாள். ஆதியின் நல்ல நேரமோ என்னவோ மயிரிழையில் தப்பினான் அந்த பெண்ணிடமிருந்து, இப்போ மீண்டும் வேலையை ஆரம்பிச்சிட்டா...'

"என்னங்க நான் உங்க கிட்டே தான் பேசிட்டு இருக்கேன், பதில் சொல்லுங்க பொண்ணு வீட்டில் பேசிட சொல்லவா..." என அதற்கு மேல் சர்வேஷ்வரனால் அமைதியாக கடந்து செல்ல முடியவில்லை.

"இங்கே பார் நான் சொல்றதை ..."என்று உரத்த குரலில் ஆரம்பிக்கும் பொழுதே காலிங் பெல் இனிமையாக கூவி அழைத்தது.

தன் கோபத்தை அடக்கி, "போய் யாருன்னு பார் ..."என்று எரிச்சல் மாறாமல் கூறிவிட்டு விருட்டென்று எழுந்துச் செல்ல அவரை பார்த்து நொடித்துவிட்டு வாசலை நோக்கி சென்றார் ராஜேஸ்வரி.

"இந்த நேரத்தில் யார்..."என்று சத்தமாக கேட்டுக்கொண்டே வாசற்கதவை திறந்தவரின் முகம் மகளையும், பேத்தியையும் கண்டதும் தாமரையாய் மலர்ந்தது.

ஆசை ஆசையாய் பேத்தியை வாங்கிக்கொண்டே, "என்னடி இந்த நேரத்தில் வந்திருக்கே, ஆமாம் எங்கே உன் வீட்டுக்காரர்..."என கேட்டபடி வாசற்படியை துழாவினார் விழிகளால்.

"அவர் வரலைம்மா, நான் மட்டும் தான் வந்தேன். அப்பா எங்கம்மா ...? என்றபடி தாயை தாண்டி உள்ளே சென்று சோபாவில் தொப்பென்று அமர, சத்தம் கேட்டு வெளியே வந்தார் சர்வேஷ்வரன்.

மகளை கண்டதும் அவரின் முகம் பூவாய் மலர,"வர்ஷா என்னம்மா நீ திடீர்னு வந்திருக்கே, நேற்று கூட நீ பேசியபொழுது வரப்போறதா சொல்லவே இல்லையே? சரி மாப்பிள்ளை எங்கே? என்றவர் மனைவியின் கையிலிருந்த பேத்தியை ஆசையுடன் வாங்கி முத்தமிட்டார்.

"அவர் வரலைப்பா..."என்று முடிப்பதற்குள் ராஜேஸ்வரி பதட்டத்துடன் இடையிட்டார்.

"ஏண்டி உங்களுக்குள்ளே சண்டையா? என வர்ஷா அவரை முறைத்தாள்.

"ம்மா புருஷன் இல்லாமல் ஒரு பொண்ணு அம்மா வீட்டுக்கு வந்தாலே உடனே அவ சண்டை போட்டுட்டு பிரிஞ்சி வர்றாள்ன்னு அர்த்தமா? முதலில் இந்த தமிழ் சீரியலை பார்க்கிறதை நிறுத்து..."என்று கேலி செய்ய சர்வேஷ்வரனின் முகத்தில் ஏளன புன்னகை மலர்ந்தது மனைவியை கண்டு.

"பெரிசா என்ன கண்டுட்டுடீங்கன்னு கேலியா சிரிச்சாகது, கல்யாணமான பொண்ணு பெட்டியை தூக்கிட்டு தனியா அம்மா வீட்டுக்கு வந்தா பெத்தவளுக்கு பயமா தான் இருக்கும், உங்களை மாதிரி ஏனோ தானோன்னு இருக்க முடியுமா? என்று ஒரு பஞ்சாயத்தை ஆரம்பித்தார்.

"ஐயோ ம்மா வந்ததும் ஆரம்பிக்காதே, தலைவலிக்குது ஒரு காஃபி கிடைக்குமா..." என ராஜேஸ்வரி முகத்தை தோள்பட்டையில் இடித்துக்கொண்டே அங்கிருந்து நகர, தந்தையும் மகளும் வாய்விட்டு சிரித்தார்கள்.

பேத்தியை தன் மடியில் இருத்தியபடி,"மாப்பிள்ளை எப்படி இருக்கார் வர்ஷா, ஆதி எப்படி இருக்கான், என்ன பண்றான், அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் வந்துச்சா இல்லையா? என்று கடகடவென்று கேள்விகளை பிரசவிக்க வர்ஷாவின் இதயம் வீணையின் கம்பி போல அதிர்ந்தது.

ஆனாலும் தந்தை கேட்ட முறையில் கேலியாக சிரித்துவிட்டு, கணவரை பற்றிய கேள்விகளுக்கு பதில் சொல்லிவிட்டு,ஆதியை பற்றி பேசும்பொழுது காஃபியோடு ராஜேஸ்வரி வர அவரிடமிருந்து காஃபியை வாங்கி ரசித்து உறிஞ்சினாள்.

பாலை பதமாக ஆற்றி கொண்டு வந்த ராஜேஸ்வரி கணவரிடம் கொடுத்து பேத்திக்கு கொடுக்க சொல்லிவிட்டு மகளின் அருகில் அமர்ந்து மகள் பேசுவதை கேட்க ஆரம்பித்தார்.

"இண்டர்வியூ விஷயமா டெல்லிக்கு போயிருக்கான், அநேகமா நாளை வருவான். அதன்பிறகு தான் தெரியும் எங்கே போஸ்டிங்ன்னு..."

"யாருடி, ஆதியை பற்றி சொல்றியா ?

"ஹ்ம்ம் ஆமாம்மா, அதுசரி நீ ஏன் ரொம்ப சூடா இருக்கே, அப்பாவோடு சண்டை போட்டுட்டிருந்தியா? நடுவில் நான் வந்து கெடுத்திட்டேனா...? என்று சிரிப்புடன் கேட்க சர்வேஷ்வரனும் மகளின் சிரிப்பில் கலந்துக்கொண்டார்.

கணவரை விழிகளாலே எரித்துவிட்டு,"உனக்கு என் கவலை கேலியா போச்சா? என்று தீர்ப்பு கிடைக்காத பஞ்சாயத்தை மீண்டும் ஆரம்பிக்க சர்வேஷ்வரனின் விழிகள் மகளை எச்சரிக்கை செய்தது.

அதை வர்ஷா கவனிக்காமல் தாயிடம் பேசிக்கொண்டிருக்கவும்,"சரிம்மா, செல்ல குட்டி தூங்கிட்டா, நான் போய் அவளை கட்டிலில் படுக்க வைக்கிறேன்..."என்று எழுந்துச் செல்ல மகளின் கவனம் தாயிடம் திரும்பியது.

"என்னம்மா பிரச்சினை, ஏன் அப்பாவிடம் கோபப்படறீங்க ?

"பின்னே என்னடி, ஒரு விஷயத்தை சொன்னால் காது கொடுத்து கேட்கிறது இல்லை, எப்போ பார்த்தாலும் நொட்டை சொல்லிட்டு இருந்தா ஒரு மனுஷி என்ன தான் பண்ணுவா..."என்று மீண்டும் குறை சொல்ல ஆரம்பிக்க வர்ஷா இடைவெட்டி விஷயத்தை கறக்க அவளின் அடி வயிற்றில் புளியை கரைத்தது.

ஒரு பக்கம் ஆதியின் மனதில் ஆதினியின் மேலிருக்கும் காதலும், இன்னொரு பக்கம் அவன் இன்னும் டெல்லியிலிருந்து திரும்பி வரவில்லை, ஏதோ பிரச்சினையில் சிக்கியிருக்கான் என்று கணவன் சொன்னதும் ஏற்கனவே அவள் மனதை அறுத்துக்கொண்டிருந்தது. இதில் தாய் வேறு அவனுக்கு விடாமல் பொண்ணு பார்த்துக்கொண்டிருக்கவும் அவளின் இயலாமை கோபமாக உருவெடுத்தது.

"ம்மா உனக்கு வேற வேலையே இல்லையா? அவனே இருந்த வேலையை தொலைச்சிட்டு வேறு வேலை தேடிட்டு அலைஞ்சிட்டு இருக்கான். இதில் நீ வேறு நிலைமை புரியாம பொண்ணு பார்த்திட்டு இருக்கே? இப்போ இது ரொம்ப முக்கியமா? என்று கடுகடுத்தாள்.

"ஹேய் நீ என்னடி உன் அப்பன் மாதிரியே பேசறே ? அவனுக்கும் வயசாயிட்டே போகுது, அதது காலாகாலத்தில் நடந்தால் தானே நல்லது, எங்க கடமையும் முடியும்..." என வர்ஷாவின் பொறுமை அவளை கைவிட்டது.

"அதாவது உன் கடமை முடியணும்னு உன் பையனின் சந்தோஷத்தை நிம்மதியை அழிக்க பார்க்கிறே, அப்படி தானே. அது மட்டுமா கல்யாணம் பண்ணிக்க போற அவனிடம் ஒரு வார்த்தை கூட கலக்காமல் உன்னிஷ்டத்திற்கு பெண் பார்க்கிறே? ஒரு நாளாவது அவன் மனதில் என்ன இருக்கு, அட்லீஸ்ட் அவனுக்கு எப்படிப்பட்ட பெண் வேண்டும்ன்னு கேட்டிருக்கியா? உன்னிஷ்டத்திற்கு ஒரு பெண்ணை பார்த்து அவன் தலையில் கட்ட துடியாய் துடிக்கிறே? என்ன அம்மா நீ ? என்று பில்லு பிலுவென்று பிடித்துக்கொள்ள ராஜேஸ்வரிக்கோ பேச நா எழவில்லை.

சத்தம் கேட்டு வெளியே வந்த சர்வேஷ்வரன் மகள் மனைவியை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்குவதை புன்னகையுடன் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார்.

சென்னை ...

"என்ன அத்தான் சொல்றீங்க ? இனி தான் பிரச்சினை ஆரம்பிக்க போகுதா? என்று ஆதியும்,

"சார் நீங்க சொல்றதை கேட்கவே பயமா இருக்கு, ஆனால் அவங்களுக்கு தான் அருண் பாடியை பார்த்த எங்களை பற்றிய தகவல் தெரியலையே ..." என்று ஆதினியும் கேள்விகளை தீனா முன் வைத்தனர்.

சிறியவர்களின் அறியாமையை கண்டு சின்னதாக புன்னகைத்தான்.

"ஆமாம் ஆதி வெசேர்ஸ் ஆதி..." என மற்ற இருவரும் ஆச்சர்ய பார்வை பரிமாற்றம் செய்துக்கொண்டார்கள். இதுவரை தங்கள் இருவரின் பெயரிலும் ஒரே பெயர் இருப்பதை அவர்கள் யோசித்ததே இல்லை. இன்று தீனா அவர்களை அப்படி அழைக்கவும் ஆதினியின் மனதில் இன்ப சிலிர்ப்பு. ஆதித்யாவோ சின்னதாக புன்னகைத்துவிட்டு தன் கேள்விகளை தொடர்ந்தான்.

"சரி அத்தான் எங்களை கண்டுபிடிச்சிட்டாங்கன்னு வைச்சிக்கிட்டாலும் அவன்களிடமிருந்து எப்படி தப்பிப்பது? நான் கூட எப்படியோ சமாளிச்சிடுவேன், ஆனால் ஆதினி அவங்க கையில் மாட்டினால் பெரிய பிரச்சினை ஆயிடுமே...? என்றான் பதட்டத்துடன்.

"எஸ் பிரச்சினை தான், கொஞ்ச நாளைக்கு நீயும், ஆதினியும் வெளியில் தலைகாட்டாமல் இருந்தால் போதும், அதற்குள் நான் கமிஷனரிடம் பேசி பாதுகாப்பு ஏற்பாடு செய்கிறேன். ஆதினி நான் சொல்றது புரியுதாம்மா...? என அவள் மய்யமாக தலையாட்டிவைத்தாள்.

ஆதியின் விழிகள் அவளை புரியாமல் வருடிவிட்டு,"ஆனால் அத்தான் அப்படியே அவங்க வெளியில் போகாமல் ஒளிஞ்சிருந்தாலும் ஆதினியின் படத்தின் விளம்பரம், படத்தின் ட்ரைலர் இதெல்லாம் அவங்களை காட்டி கொடுத்துவிடுமே...? அது இன்னும் ஈஸியாகிவிடுமே ஆதினியை நெருங்க..." என்றவனின் பயம் ஆதினியின் நெஞ்சில் ஐஸை வைத்தது போலிருக்க தீனாவோ எதிர்மறையாக புன்னகைத்தான்.

"என்ன அத்தான் சிரிக்கறீங்க ? என்று மச்சான் குறைப்பட தீனாவுக்கு ஆதித்யாவின் தவிப்பு அவன் ஆதினியின் மேல் வைத்திருக்கும் அன்பை பறைசாற்றியது. அதன் விளைவால் தான் அவன் முகத்தில் புன்னகை உண்டானது.

"டோன்ட் ஒர்ரி ஆதி, நான் பார்த்துக்கிறேன். கேர்புல் ரெண்டு பேரும் வெளியில் போகாதீங்க, அது முக்கியம். சரி நான் வர்ஷாவுக்கு போன் செய்துட்டு வர்றேன்..." என்று எழுந்துச் செல்ல ஆதினி யோசனையுடன் அமர்ந்திருந்தாள்.

"என்ன ஆதினி, எப்படி ஷூட்டிங் போறதுன்னு யோசிக்கிறாயா? உடம்பு சரியில்லைன்னு ஒரு வாரத்திற்கு லீவ் எடுக்க முடியாதா? கால்ஷீட்டில் பிரச்சினை வரும்னு பயப்படறியா? என்று கேள்விகளை அடுக்கிக்கொண்டு செல்ல அவளோ எல்லாவற்றிக்கும் மறுதலிப்பாக தலையை உருட்டினாள்.

"அதெல்லாம் ஒரு பிரச்சினையுமில்லை ஆதி, என் போர்ஷன் முழுவதும் நான் நடிச்சி கொடுத்துட்டேன். டப்பிங் கொஞ்சம் பாக்கி இருக்கு. அப்புறமா ஆடியோ ரிலீஸ்க்கு கூப்பிடுவாங்க..."

"ஓ !

"ஹ்ம்ம் அதெல்லாம் பார்த்துக்கலாம், இப்போதைய பிரச்சினை ஆசிரம தலைவன்ற பேரில் இருக்கிற அந்த கொலைகாரனை நினைச்சால் தான் பயமா இருக்கு ..." என ஆதித்யாவின் விழிகள் அவளை கேள்வியாக வருடியது.

"நீ யாரை சொல்றே, உங்க ஆசிரம தலைவர் நீலன் பற்றியா? அவரையா கொலைகாரன்னு சொல்றே? எதை வைச்சி சொல்றே ? நீ தானே அவர் நல்லவர் வல்லவர்ன்னு வானளாவ புகழ்ந்தே? அதுக்குள்ளே என்னாச்சு?

"உண்மை தான் ஆதி, நீங்க அவரின் மீது சந்தேக படும்பொழுதெல்லாம் நான் மறுதலிச்சி பேசினேன். காரணம் அந்தளவு மரியாதை, நம்பிக்கை. ஆனால் இன்று நீங்க சொன்னது தான் சரின்னு எனக்கு தோணுது, நான் தான் முட்டாள்தனமா இருந்துட்டேன்..." என்னும் பொழுதே அவளின் விழிகள் கோபத்தில் சிவந்தது.

"எனக்கு இன்னும் காரணம் புரியலை, தெளிவா சொல்லு ஆதினி ..."

"இதோ இதை வைச்சி தான்..."என்று பேகை துழாவி சிறு துண்டு பேப்பரை நீட்ட ஆதித்யா புரியாமலே அதை வாங்கி பார்த்தான்.

அதில் ப்ளூ என்று சிறிய எழுத்தில் கிறுக்கியிருக்க ஆதியின் விழிகள் அவளை நோக்கி நிமிர்ந்தது.

"இதென்ன? எங்கே கிடைச்சது ?

"அருணின் மடக்கிய கைகளின் இடுக்கில் இது கிடைச்சது, இதில் இருக்கிற ப்ளூ நீலன் என்ற பெயரை குறிக்குது. இதை பார்த்ததுமே நான் ரொம்ப நிலைகுலைஞ்சி போய்ட்டேன், அதனால் தான் என்னால் பேச முடியலை. உங்க கிட்டே சொல்ல நினைச்சப்ப சோப்ரா சார் வந்துட்டார். சரி தனியா டாக்சியில் வரும் பொழுது சொல்ல வரும் பொழுது தான் என்னன்னவோ நடந்து போச்சு. அந்த அனர்த்தத்தில் இதை பற்றி சுத்தமா மறந்துட்டேன்..." என்று விளக்க ஆதியின் விழிகள் அந்த பேப்பரிலேயே நிலைத்திருந்தது.

"எனக்கு ரொம்ப அதிர்ச்சியா இருக்கு, அருண் காணாமல் போனதிலிருந்து எனக்குல் சிறு சந்தேகம் இருந்துக்கொண்டே இருந்தது அவர் மேல், ஆனால் அந்த உண்மை நிர்வாணமாகும் பொழுது சகிச்சிக்க முடியலை..."என்று முகத்தை சுளித்தான்.

"உங்களுக்கே அதிர்ச்சி என்றால் என் நிலைமையை கொஞ்சம் யோசிச்சி பாருங்க, நாங்க கடவுளா பார்த்த ஒரு மனுஷன் ஒரு கொலை குற்றவாளின்னு தெரிய வரும் பொழுது என்னுள் நடக்கிற மனபோராட்டங்களை சொல்லி மாளாது. எனக்கு இன்னொரு பயமும் இருக்கு அந்தாள் பற்றிய உண்மை தெரிந்த பிறகு என்னால் எப்படி மற்ற குழந்தைகளை அங்கே விட முடியும். மற்ற குழந்தைகளுக்கும் அருண் நிலைமை தானே உண்டாகும்..." என்று படபடக்க ஆதி அவளை கையமர்த்தி அமைதிப்படுத்தினான்.

"என்ன ஆதி இருவரும் ரொம்ப தீவிரமா பேசிட்டு இருக்கீங்க?

"சொல்றேன் அத்தான், அக்காவிடம் பேசிட்டீங்களா? வீடு போய் சேர்ந்துட்டாங்களா...? அம்மா என்ன சொன்னார்களாம், என்னை பற்றி கேட்டார்களா...? அக்கா என்ன சொன்னார்களாம் ...? என்று சரவெடி மாதிரி ஒரு வித டென்க்ஷனுடன் கேட்க அவனை அமைதிப்படுத்தினான்.

"நீ பயப்படற மாதிரி ஒன்றும் நடக்கலை, உன் அக்கா அதெல்லாம் சமாளிச்சிடுவா..."என்றவனின் விழிகள் ஆதியின் கையிலிருந்த துண்டு சீட்டில் பதிந்தது.

"என்ன சீட்டு அது? என்று கேட்டபடி அவன் கையிலிருந்து வாங்கி பார்த்தான்.

"ப்ளூ...? என்ன ப்ளூ ? யார் எழுதியது ? ப்ளூன்னா கலர் தானே ?

"ம்ச் இல்லை அத்தான், இதை பற்றி கேட்டீங்கன்னா நீங்களே அதிர்ந்து போயிடுவீங்க, இதில் இருக்கிற ப்ளூ ஆதினியின் ஆசிரம தலைவர் நீலனை குறிக்குது. இந்த சீட்டு அருணின் கையிலிருந்து ஆதினி எடுத்திருக்கா ..." என்று விளக்கமளிக்க தீனா இருவரையும் தீர்க்கமாக நோக்கினான்.

"ஆமாம் சார், நான் உங்களிடம் முதன் முதலில் இந்த பிரச்சினை பற்றி சொல்ல வந்த பொழுது ஆதித்யா கூட நீலன் அய்யாவின் மேல் சந்தேகப்பட்டார், அப்பொழுது நான் அடித்து பேசினேன் எங்க அய்யா அப்படிப்பட்டவர் இல்லைன்னு. ஆனால் இன்று அவர் அப்படி தான்னு அருண் மூலம் தெரிஞ்சிடிச்சி. எனக்கு அவரை நினைச்சா ஈரக்கொலையே நடுங்குது...."என்று பேசிக்கொண்டிருந்தவள் சட்டென்று உடைந்து அழ ஆரம்பித்தாள்.

ஆதினி பேச பேச உன்னிப்பாக கேட்டுக்கொண்டிருந்தவன் அவள் அழ ஆரம்பிக்கவும் ஆதித்யாவை சமாதானப்படுத்த சொல்லி ஜாடை செய்ய, ஆதி அவளை ஆறுதல் வார்த்தைகளால் தேற்றினான்.

விழிகளை துடைத்துக்கொண்டு நிமிர்ந்தவளிடம்,"எனக்கென்னவோ நீ இதை தவறா நினைச்சிருக்கியோன்னு இருக்கு, இதை அருண் எதற்கு எழுதினானோ? அல்லது நீலனிடம் ஏதாவது சொல்வதற்காக கூட இருக்கலாம். தீர விசாரிக்காமலே நாமாக ஒரு முடிவுக்கு வர கூடாது..." என்ற ஆதியை வெறித்து நோக்கினாள்.
 

Latest profile posts

மக்களே!!!
"நான் தொலைத்த நாட்களெல்லாம் மறுபடியும் மலருமா..!!!"
முப்பத்தி மூன்றாவது அத்தியாயம் பதிவிட்டிருக்கேன்... படிச்சிட்டு உங்க கருத்த சொல்லுங்க..☺️☺️☺️

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்😍

வெய்யோனின் தண்மதி அவள் 25😎👇

ஓம் சாயிராம்
எபிசோடை படித்து மகிழுங்கள்; பிடித்திருந்தால் கதையை தொடர்ந்து படியுங்கள்; பிரியமுடன் உங்கள் கருத்துக்களை அன்புடன் பகிருங்கள்.
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்😍

வெய்யோனின் தண்மதி அவள் 24😎👇

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்😍

வெய்யோனின் தண்மதி அவள் 23😎👇

New Episodes Thread

Top Bottom