Vizhi Moodukiren Un Ithazhodu Pesa -11

Revadyashok

✍️
Writer
அத்தியாயம்-11

கோபத்துடன் வீட்டில் பைக்கை நிறுத்திவிட்டு உள்ளே சென்றவன் தமக்கையும், அத்தானும் ஸோபாவில் யோசனையுடன் அமர்ந்திருக்க அதுவரை அவனுள் குமிழியிட்டிருந்த கோபம் க்ஷண நேரத்தில் அவனை விட்டு குழந்தை போல ஓடிவிட வேகமாக இருவரையும் நெருங்கினான் ஆதி.

"என்னாச்சு...? என்று குழப்பத்துடன் கேட்டபடி தமக்கையின் முன் மண்டியிட்டான்

"அருண் பாடி கிடைச்சிருக்காம்..."

தீனா சொல்லி முடிப்பதற்குள் ஆதி விலுக்கென்று எழுந்தான் அதிர்ச்சியில்.

"எ....என்ன அத்தான் சொல்றீங்க? எப்போ ? எங்கே? எப்படி?

"இப்போ தான் டெல்லி கமிஷனரிடமிருந்து தகவல் வந்தது, விஷயத்தை சொல்லி அருண் பேசின கைபேசியின் முகவரியை கொடுத்து விசாரிக்க சொன்னதினால் இந்த செய்தி நமக்கு கிட்டியிருக்கு..."

"பாவம்டா ஆதினி இந்த விஷயத்தை எப்படி தான் தாங்கிப்பாளோ, நினைச்சாலே கஷ்டமா இருக்கு..." என்ற தமக்கையின் பேச்சு அவன் காதில் ஏறவில்லை.

மாறாக அருண் எப்படி , யாரால் கொலை செய்யப்பட்டான் என்ற கேள்வியே அவனுள் ஓடிக்கொண்டிருக்க ஸ்லோமோஷனில் ஸோபாவில் அமர்ந்தான்.

"டெல்லி போலீஸ் அவன் கொலையை பற்றி விசாரிச்சிட்டிருக்காங்களாம். நானும் இந்த கேஸை பாலோ பண்றேன், ஹ்ம்ம் அந்த பையனை உயிரோடு மீட்டு ஆதினியிடம் ஒப்படைக்கலாம்ன்னு நினைச்சேன், அதற்குள் அவன் கதையை முடிச்சிட்டாங்க..."என்று ஒரு பெருமூச்சோடு எழுந்து உள்ளே செல்ல வர்ஷாவும் கணவனை பின்தொடர்ந்தாள்.

இருவரும் எழுந்து சென்றது கருத்திலே பதியவில்லை, அவன் மனம் முழுவதும் ஆதினி இதை எப்படி தாங்கிக்கொள்வாள் என்பதும், அருணை எதற்காக கடத்த வேண்டும், ஏன் கொலை செய்யவேண்டும் என்ற குழப்பமும் அவனை ஆட்டிப்படைத்தது.

யோசிக்க யோசிக்க அவனுக்கு ஒரு நூலிழை கூட சிக்கவில்லை. ஆதினியிடம் இதை பற்றி சொல்லலாம் என்றால் அவளை போனில் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை, நேரில் சந்திக்கவும் முடியவில்லை என்றதுமே ஆதித்யாவின் உள்ளம் உலைகலமாக கொதித்தது.

எவ்வளவு நேரம் சிந்தனையில் ஆழ்ந்திருந்தானோ,"ஆதி எழுந்து சாப்பிட வா..."என்ற அத்தானின் குரலில் கலைந்து நிமிர தீனா குழந்தையுடன் டைனிங் டேபிளில் அமர்ந்திருந்தான்.

"இல்லை அத்தான் எனக்கு பசியில்லை, எனக்கு கொஞ்சம் வேலையிருக்கு, நீங்க சாப்பிடுங்க..."என்று மீண்டும் வேக நடையுடன் வெளியே செல்ல "ஆதி …ஆதி ..."என்ற தமக்கையின் குரல் காற்றில் கரைந்தது.

"என்ன தீனா இது, எங்கே போறான் இவ்வளவு அவசரமா ?

"ம்ச் விடு அவனுக்கு ஆதினியை நினைச்சி கவலை, அதான் அவளை பார்க்க போறான்னு நினைக்கிறேன், நீ எதுவும் தடுக்காதே, அவனே வந்து சொல்வான். நீ சாப்பாட்டை போடு ..."

கணவன் தட்டில் பிரியாணியை எடுத்து போட்டபடி,"ஆதி கவலைப்படறது, அவளுக்காக துடிக்கிறது எல்லாம் சரி, ஆனால் இந்த கவலை எங்கே போய் முடியும்னு தெரியலையே. இவன் வேகத்தை நினைச்சாலே எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு தீனா..."

மனைவியின் கைபிடித்து தன் பக்கத்தில் அமர்த்தி பிரியாணியை எடுத்து அவளுக்கு ஊட்டிவிட்டு, "நீ பயப்படற மாதிரி ஒன்றும் நடக்காது, ஆதி ஸெல்ப் கண்ட்ரோல் உள்ள ஆளு. ஆமாம் என்ன திடீர்னு பயப்படறே, இன்பாக்ட் நீ தானே ஆதினியை லவ் பண்றான்னு சொன்னே, அப்புறம் ஏன் திடீர்னு தேவையில்லாத பயம் ப்ளஸ் குழப்பம்...? ஐ டோன்ட் கெட் இட் வர்ஷா...?

"உண்மை தான் ஆதியை லவ் பண்ணுடான்னு சொன்னது நான் தான். ஆனால் நேற்று அம்மா போன் செய்திருந்தாங்க..."என்றவள் சற்று நிறுத்த தீனா கேள்வியாக புருவத்தை உயர்த்தினான்.

"எனக்கு எப்படி சொல்றதுன்னு தெரியலை, சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்துட்டேன் போல..."என்றவளின் குரலில் சிறு பயம் தொனித்தது.

"வாட் யூ மீன் வர்ஷா, அத்தை ஏதாவது சொன்னார்களா ? ஆனால் ஆதியே இன்னும் அவன் காதலிக்கிறானா இல்லையான்னு கன்பார்ம் செய்யலை, அதற்குள் அத்தைக்கு யார் சொன்னது ..."என்று கேட்டுக்கொண்டிருந்தவன் மனைவியை கேள்வியோடு நோக்கினான்.

"ஹேய் நீ ஏதாவது ஆதினியை பற்றி அத்தையிடம் சொன்னாயா ?

"ம்ஹீம், ஆனால் ஊரில் வேறு ஒரு பிரச்சினை நடந்திருக்கு, அதான் அம்மா பயங்கர கோபத்தில் இருக்காங்க. எனக்கென்னவோ ஆதியின் காதலுக்கு முதல் தடையே அம்மாவாக தான் இருப்பாங்க போல. அவ்வளவு ஏன் அவங்க பார்த்து வைக்கிற பெண்ணை தவிர வேற யாரையும் ஆதியின் வாழ்க்கையில் வர விடமாட்டாங்க. ஐ ம் ஷியூர் தீனா, நானே ஆதியின் வாழ்க்கையில் சிக்கலை உண்டு பண்ணிட்டேனோன்னு கில்ட்டியா இருக்கு..." என்னும் பொழுதே அவளின் விழிகளிலிருந்து இரண்டு கண்ணீர் மணிகள் திரண்டு கன்னங்களில் பயணம் செய்தது.

மனைவி அழவும் சட்டென்று பதறி அவளை தன்னருகே இழுத்து ஒற்றை கையால் அணைத்து,"ஷ்ஷ்ஷ், அழாதே, குழந்தை உன்னையே பார்க்கிறாள் பார், அப்புறம் அவ அழ ஆரம்பிச்சிட போறாள்..."என்று சிறு குரலில் கூற நிலைமையை உணர்ந்து வர்ஷா வேகமாக விழிகளை துடைத்துக் கொண்டாள்.

@@@
ஆதித்யா ஷூட்டிங் ஸ்பாட்டை அடைந்த பொழுது ஷூட்டிங் பேக் அப் ஆகியிருக்க எல்லோரும் கிளம்பிக்கொண்டிருந்தனர். ஆதினி தன் உடையில் மாறி காரில் ஏறும் சமயம் ஆதியின் பைக் வந்து நிற்கவும் அனிச்சையாக அவள் முகம் மலர்ந்தது.

"ஹாய் ஆதி என்ன திடீர் விசிட் ? என்று கேட்டபடி அவனை நெருங்கினாள்.

ஆனால் அவளின் கேள்வியோ, தன்னை கண்டு அவள் சந்தோஷித்ததோ எதுவும் ஆதித்யாவின் கருத்தில் பதியவில்லை, மாறாக அருண் விஷயத்தை எப்படி சொல்வதென்ற குழப்பம் தான் மேலோங்கி இருந்தது.

"என்னாச்சு ஆதி, உங்க முகம் ஏன் இவ்வளவு இறுக்கமா இருக்கு ? ஏதாவது பிரச்சினையா?

அவளின் கேள்வியில் சட்டென்று தன் முக பாவனையை மாற்றி, இதழில் கட்டாய புன்னகையை தருவித்து, "கொஞ்சம் தனியா பேசணும் ஆதினி..."

அவன் பேச்சில் என்ன புரிந்துக்கொண்டாளோ, மய்யமாக தலையை உருட்டி, டிரைவரிடம் எதையோ கட்டளையிட்டுவிட்டு கழுத்தில் கட்டியிருந்த ஸ்கார்ப் மூலம் தலையையும், முகத்தையும் மறைத்து கட்டிக்கொண்டு ஆதியின் பைக்கில் அமர்ந்தாள்.

ஆதிக்கு இருந்த பரபரப்பில் பின்னால் ஒரு பெண் அமர்ந்திருக்கிறாள் என்று கவனத்தில் கொள்ளாமல் பைக்கை ஸ்பின் ட்ரைவ் செய்து திருப்ப, ஆதினி பயந்து அவன் இடுப்பை கட்டிக்கொண்டு அவன் முதுகோடு ஒட்டிக்கொண்டாள்.

ஆதினி அவனை தொட்டது கூட அவன் மனதில் படவில்லை, மாறாக வண்டியை பெசன்ட் நகர் பீச் நோக்கி பிசாசு வேகத்தில் விரட்டிக்கொண்டிருந்தான். ஆனால் ஆதினிக்கு ஆதியின் ஸ்பரிஸமும், அவனின் சென்ட் மணமும் மயக்க விழிகளை மூடி அந்த உல்லாச தருணத்தை அனுபவித்துக்கொண்டிருந்தாள். அவன் பீச்சை அடைவதற்குள் அவளின் மனம் வெளிநாட்டில் ஒரு டூயட்டையே பாடி முடித்திருந்தது.

வண்டி நின்றதும் ஆதினியின் கனவுகள் மேகங்களாய் கலைந்துவிட, வண்டியிலிருந்து இறங்கி சுற்றும் முற்றும் விழிகளை அலையவிட்டாள். அது மதியமும் இல்லாமல் மாலை நேரமும் இல்லாமல் இரண்டுகெட்டான் வேளை என்பதால் கூட்டம் மிகவும் குறைவாகவே இருக்க, ஆதி யாருமற்ற இடத்தை நோக்கி கால்கள் மணலில் புதைய நடந்தான்.

ஆதினிக்கு அவன் தனியாக பேசவேண்டும் என்றதே வானத்தில் பறக்கிற மாதிரி இருந்தது, போதத்திற்கு அவனோடு ஒட்டிக்கொண்டு வந்ததையும் ஆதி ஆட்சேபிக்கவில்லை, இப்பொழுதோ பேசுவதற்கு தனி இடம் செல்கிறான் என்பது வேறு அவளுக்கு உள்ளுக்குள் கிளர்ச்சியை உண்டு செய்ய கால்கள் வெட்கத்தில் பின்னியது.

அதன் விளைவாக அவள் தடுமாற, முன்னால் நடந்துக்கொண்டிருந்தவன் எதேச்சையாக திரும்பி அவளின் புஜத்தை பிடிக்க ஆதினியின் முகம் குப்பென்று சிவந்தது. அவனை நிமிர்ந்து பார்க்க நாணம் அவளுக்கு தடை போட பிடித்த ஆதியின் கையை விடாமல் அவனுடன் நடக்க ஆரம்பித்தாள்.

அவன் தேடிய இடம் வந்ததும் அவளை அங்கிருந்த சிமெண்ட் பெஞ்சில் அமரச்சொல்ல, பல கனவுகளுடனும், இதழில் வழிந்த புன்னகையை தடுக்க முடியாதவளுமாகவும், வெட்கத்துடனும் அமர்ந்து அவன் முகத்தை எதிர்பார்ப்புடன் நோக்கினாள்.

ஆதித்யாவுக்கோ அவளின் முகத்தை நேருக்கு நேர் பார்க்க திராயணியாற்று கடலை நோக்கி நின்று விழிகளை இறுக மூடிக்கொண்டான்.

"ஆதித்யா ..."

ஆதினியின் குரல் மிக அருகில் கேட்கவும் திடுக்கிட்டு விழிகளை மலர்த்தியவன் தன் முக இறுக்கத்தை உணர்ந்து சகஜ பாவனைக்கு தாவ முயற்சித்து முடியாமல் தோற்று போனவனாய் அவளின் பக்கம் திரும்பினான்.

"எ ..." என்று தொடங்கியவளை ஒரு வேகத்துடன் கையமர்த்தி, "அருண் இறந்துட்டான் ஆதினி, கமிஷனரிடமிருந்து தகவல் வந்திருக்கு..."

ஆசையுடன் பேச முற்பட்டவளை தடுத்து ஆதி சொன்ன விஷயம் அவள் மூளைக்குள் பதிய ஒரு சில நொடிகள் எடுத்துக்கொண்டது. புரிந்த விஷயம் அவளை ஊமையாக்கிவிட்டு செல்ல கண்ணீருடன் தொப்பென்று அங்கிருந்த பெஞ்சில் தளர்ந்து அமர்ந்து முகத்தை இருகைகளாலும் மூடிக்கொண்டாள்.

அவளின் முதுகு அழுகையில் குலுங்க ஆதிக்கு எப்படி சமாதானம் சொல்வதென்று தெரியாமல் கையை பிசைந்துக்கொண்டிருந்தான். மெல்ல அவளருகில் அமர்ந்து தோளின் மீது கையை வைத்து ஆறுதலாக அழுத்தினான்.

துக்கம் தாளாமல் அழுதுக்கொண்டிருந்தவள் ஆதித்யாவின் தொடுகையில் அவனிடம் ஆறுதல் தேடி மார்பில் தஞ்சம் புகுந்தாள். ஆதினியின் செய்கையில் சற்றே சங்கடப்பட்டாலும் அவனும் அவளை தன்னோடு அணைத்து அவளின் முதுகை வருடிக்கொடுக்க ஆதினியின் அழுகை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து விசும்பலாக வெளிப்பட்டது.

சில வினாடிகள் கழித்து அவளே தன்னை தேற்றிக்கொண்டு அவனிடமிருந்து சிறு சாரியுடன் விலகி நின்றாள்.

"அருணுக்கு என்னாச்சு, எப்படி இறந்தான் ஆதி...? இப்போ அவன் உடலை எங்கே வைச்சிருக்காங்க, நான் உடனே பார்க்கணும் ..." என்று பரபரத்தவளை கையமர்த்தி சமாதானித்தான்.

விழிகள் கோவை பழமாக சிவந்திருக்க, அழுததில் குரல் ஙை, ஙை என்றிருந்தது.

"சரியா தெரியலை, ஆனால் கொலை என்று மட்டும் தெரியும்..."என்றதுமே ஆதினியின் அழுகை மீண்டும் புதுப்பித்தது.

"ப்ளீஸ் ஆதினி கண்ட்ரோல் யூர்செலஃப், இது அழுது கரையற நேரமில்லை, அருண் சொன்ன மாதிரி உங்களை சுற்றியும், உங்கள் இல்லத்தில் இருக்கிற குழந்தைகளையும் சுற்றி ஆபத்து இருக்கு. அதிலிருந்து உங்களை காப்பாற்றிக்கொள்ள வேண்டிய சூழ்நிலையில் இருக்கீங்க, அண்டர்ஸ்டாண்ட் இட்..."

ஆதி அழுத்தம் திருத்தமாக சொன்னதை கேட்டு ஆதினிக்குள் பய ஊற்று தான் உருவானது, கண்ணீர் ஸ்விட்ச் போட்ட மாதிரி நின்று போனது. அருண் அன்று பேசிய பொழுது ஏதோ ஆபத்தில் இருந்தான் என்பது புரிந்தது. ஆனால் தன் பிரச்சினைகளையும் மீறி அவன் சொன்ன விஷயத்தை நான் ஏன் சரியாக அலசி ஆராயவில்லை. அப்படியே அலட்சியத்துடன் விட்டுவிட்டேனே, ஹையோ அப்போ ஆசிரமத்தில் இருக்கிற மற்ற பிள்ளைகளுக்கும் இந்த அருணுக்கு வந்த ஆபத்து வருமா...? கடவுளே...!

முகத்தை அழுந்த துடைத்துக்கொண்டு,"எனக்கு என்ன செய்யறதுன்னு தெரியலை, அருண் இறந்த துக்கத்தை கூட முழுசா என்னால் அனுபவிக்க முடியவில்லை நீங்க சொல்றதை கேட்டால். சொல்லுங்க ஆதி இப்போ நான் என்ன செய்யணும்? என் மூளையே ஸ்தம்பிச்சு போய் இருக்கு. எப்படியாவது இல்லத்தில் இருக்கிற அப்பாவி குழந்தைகளை காப்பாற்றியே ஆகணும். ப்ளீஸ் ஹெல்ப் மீ ஆதித்யா ..."என்றவள் அவனின் கையை பிடித்துக்கொண்டாள்.

சூழ்நிலையை புரிந்துக்கொண்டவன்,"நிச்சயம் ஏதாவது செய்யலாம், ஒரு நிமிஷம் ..."என்றவன் தனது கைபேசியை எடுத்து அக்கா கணவனை அழைத்து அவனிடம் ஏதோ பேசி வைத்தான்.

"உங்க ஆசிரமத்தில் மொத்தம் எத்தனை பேர் இருக்காங்க ஆதினி ?

"மொத்தம் என்றால் நாற்பத்தியைந்து, அதில் பதிமூன்று வயதிற்குள் இருக்கும் பிள்ளைகள் மொத்தம் இருபத்தியைந்து, மீதி பதினைந்திலிருந்து பதினெட்டுக்குள் இருப்பாங்க, ஏன் ஆதி கேட்கறீங்க?

"எனக்குள் சிறு சந்தேகம் ஆதினி, அதை நீ நம்பறியா இல்லையான்னு தெரியாது, அதனால் தான் சொல்றேன். அநேகமா அருணின் நிலைமை இன்னொரு பிள்ளைக்கும் வரலாம், ஆனால் அது எப்போயென்று தான் தெரியலை...?

"என்ன சொல்றீங்க ஆதி, எனக்கு பயமா இருக்கு நீங்க சொல்றதை கேட்க. எதை வைச்சி சொல்றீங்க, உங்களுக்குள் என்ன சந்தேகம்? ப்ளீஸ் சொல்லுங்க ..."

"நீங்க வீட்டுக்கு வந்துட்டு போன பிறகு நானும் அத்தானும் கண்ட்ரோல் ரூம்க்கு போயிருந்தோம், நீங்க கொடுத்த நம்பர் யாருடையதுன்னு கண்டுபிடிக்க. அது டெல்லி நம்பர்ன்னு அப்பொழுது தான் தெரிந்தது, அதை விட இன்னொரு முக்கியமான விஷயமும் தெரிந்தது. அருண் கடத்தப்பட்ட அன்று ஸ்கூலிலிருந்து யாரையோ பார்த்திட்டு சந்தோஷமா ஓடிவர்றான். அதன் பிறகு தான் அவன் காணாமல் போயிருக்கிறான்..."

"அய்யோ என்ன சொல்றீங்க, அவன் யாரை பார்த்து ஓடிவந்தான்னு பார்த்தீங்களா?

"இல்லை அதில் முகம் தெரியலை, ஆனால் அருணுக்கு தெரிந்தவங்க தானே ஸ்கூலுக்கு வந்திருக்காங்க, அன்று அவனை பார்க்க யார் சென்றது, அல்லது அவனை அழைச்சிட்டு வர யார் சென்றதுன்னு தெரிந்தால் மட்டுமே குற்றவாளி யாருன்னு கண்டுபிடிக்கணும்..."

ஆதித்யா சொன்னதை கேட்டு அன்று நடந்ததை மனதில் ரிவைண்ட் செய்து பார்க்க ஒரு ஐடியாவும் கிடைக்கவில்லை.

"யாரும் அழைத்து வரப்போவதாக சொல்லவே இல்லை ஆதி, நான் தான் ஈவ்னிங் வர்றேன் என்று சொல்லிவிட்டு வந்தேன் அருணிடம். இதற்கு நடுவில் வேறு யார் போயிருக்கிறார்கள்?அதுவும் ஏன்? அப்படி ஆசிரமத்தில் இருந்து போகணும் என்றால் நீலன் அய்யா தவிர வேறு யாரும் போக மாட்டார்கள். என் அம்மா இருந்தவரை ஏதாவது அவசரம் என்றால் நீலன் அய்யா சார்பாக பள்ளிக்கு போவாங்க, இப்போ இருக்கிற கற்பகம் அம்மாவுக்கு பள்ளியில் போய் பேச தெரியாது என்பதால் அவங்க போக மாட்டாங்க. சாரி ஆதி என்னால் கெஸ் பண்ண முடியவில்லை..." என்று தன் தோல்வியை ஒப்புக்கொண்டாள்.

"சரி இதையெல்லாம் அப்புறம் யோசிக்கலாம், நாம முக்கியமா செய்ய வேண்டிய வேலை ஒன்று இருக்கு, அதை செய்யலாம்..."என்றவனை வேகமாக தடுத்து நிறுத்தினாள்.

"எனக்கு அருணின் முகத்தை பார்க்கணும், எந்த மார்ச்சுவரியில் வைச்சிருக்காங்க...? என்னை அங்கு அழைச்சிட்டு போங்க ஆதி ப்ளீஸ் ..." என்று கெஞ்ச ஆதி அவளை யோசனையுடன் நோக்கினான்.
 

Latest profile posts

மக்களே!!!
"நான் தொலைத்த நாட்களெல்லாம் மறுபடியும் மலருமா..!!!"
இருபத்தேழாவது அத்தியாயம் பதிவிட்டிருக்கேன்... படிச்சிட்டு உங்க கருத்த சொல்லுங்க..☺️☺️☺️

மக்களே!!!
"உன் இதயச்சிறையில் ஆயுள் கைதியாய் மாறிடவே..."
பதினேழாவது அத்தியாயம் பதிவிட்டிருக்கேன்... படிச்சிட்டு உங்க கருத்த சொல்லுங்க..☺️☺️☺️

அன்பு நெஞ்சங்களே,

எல்லாரும் எப்பிடி இருகீங்க. மனதோடு வீசும் தென்றல் பகுதி 5 இதோ உங்களுக்காக. படிச்சிட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க. ஆவலா காத்திட்டு இருக்கேன்.


அன்புடன்
உமா நாதன்
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் 😍
வெய்யோனின் தண்மதி அவள் அத்தியாயம் 7😎👇
ஓம் சாயிராம்.
திட்டமிட்டபடி எதுவும் நடக்கவில்லை என்று வருந்தும் தன்னவள் ஒரு புறம்;
திருமண பந்தத்தில் இணையும் தருணத்தை எண்ணி நெகிழும் நண்பன் மறுபுறம்;
இவர்கள் உணர்வுகளை அறிந்த ஹரி, யார் மனமும் கோணாமல் எப்படி நிலமையை கையாண்டான்.

எபிசோடை படித்து மகிழுங்கள்; பிடித்திருந்தால் கதையை தொடர்ந்து படியுங்கள்; பிரியமுடன் உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிருங்கள்.

New Episodes Thread

Top Bottom