MM-3

Rajeshwari Karuppaiya

✍️
Writer
MM-3


சங்கீத சாமரம் ஓயாமல் நெஞ்சுக்குள் அடித்திடுமா. எனக்குள் அடிக்கிறதே. இதோ மாலையும் கழுத்துமாய் அந்த சின்ன அறையில் விவேகானந்தனுடன் அமரவைக்கப் பட்டுள்ளேன் நான். விட்டால் அவரின் மடிமேல் அமர வைத்துவிட்டுத் தான் மறுவேலை பார்ப்பேனாக்கும் என்று கங்கணங் கட்டிக்கொண்டு திரிந்தது உறவுக் கூட்டம்.

பக்கத்தில் அமர்ந்திருந்த என் கணவராக்கப் பட்டவரைப் பார்த்தேன். இதென்ன இவரின் பக்கத்தில் நான் கோழிக்குஞ்சு போல் தெரிவேன் போலயே. இயற்கையாகவே உயரம் குறைவு. அளவுக்கு அதிகமாகவே கொட்டிக் கொண்ட பொழுதிலும் உடல் மட்டும் பஞ்சத்தில் அடிபட்டவள் போல ஒரு தோற்றம்.

அவரோ பனைமர உயரம். உயரத்திற்கு ஏற்ற உடல். 'கடவுளே இவரை தூக்கி என் இடுப்பில் வைத்தால் என் இடுப்பு என்னாவது. கொஞ்சம் கூட கூறு இல்லாத சித்தி' பொல்லாத என் மனம் அத்தனை சிந்தனையையும் என் மனதில் ஓட்டிப் பார்த்தது.

ஓரக்கண்ணால் அவர் முகத்தைப் பார்த்தேன்.'ம்ஹும் மனுஷன் ஒரு பாவத்தையும் காட்டக் காணோம்.என்ன நினைக்கறாங்கன்னு கூட பிடிபட மாட்டிங்குதே.'

உறவுசனம் பார்வை அத்தனையும் எங்கள் மேல். என் ஓரப் பார்வை கொஞ்சமாய் அவர் மேல். அவர் பார்வை மட்டும் கையில் இருந்த செண்டுப் பூவில். "ஒரு வேலை எத்தனை பூ இருக்குன்னு எண்ணிட்டே இருப்பாரோ."

நான் அந்த செண்டையும் அவர் முகத்தையும் மாறி மாறி பார்த்து வைத்தேன். சட்டென அவர் நிலையில் ஒரு மாற்றம்.

'ஆத்தே! என்ன தலை லேசா என் பக்கம் சாயுது. '

என்னவோ சொல்ல வந்திருப்பார் போல. நல்ல வேளை அதற்குள் என் அத்தை என்னிடம் பால் டம்ளரை நீட்டி விட்டார்.

"இந்தா அம்சா! தம்பிக்கு குடு "என்று சொல்லவும் நான் வாங்கிக் கொண்டேன்.

பாலும் பழமும் இடம் மாறி எங்கள் வயிற்றிக்குள்ளும் போய் விட்டது. அவர்க்கு இது ஏற்கனவே நடந்து விட்ட ஒன்னு தானே. பெரிதாய் எதும் விளைவுகள் இல்லை போல. இருந்தாலும் என்னால் கண்டுபிடிக்க முடியாது என்று தான் தோன்றியது.

ஆனால் எனக்கு!

"கடவுளே வாயிக்கும் வயிருக்கும் பட்டாம்பூச்சி பறக்கிறதே "

அன்றைய நாள் முழுதும் இந்த பட்டாம்பூச்சி தொல்லை தாங்கவே முடியவில்லை.

மலர் அருகில் இருந்தாலாவது சமாளித்து இருப்பேன். இந்த நீலா வேறு அவளை தூக்கி கொண்டே திரிந்ததில் அவர்கள் இருவரும் கூட்டு சேர்ந்து கொண்டு என்னை கழட்டி விட்டனர்.

எனக்குத் தான் என்னை நினைத்து பாவமாக இருந்தது. ஓயாமல் பேசிக் கொண்டிருக்கும் நான் பேச ஆளின்றி மவுன விரதம் கொண்டது போல் உள்ளேன்.

இவர் தான் ஒரு வார்த்தை பேசினால் என்ன முத்தா உதிர்ந்து விடும். சரியான மௌன சாமியாராக இருக்காரே.'அடி அம்சு நம்ம வாழ்க்கை ஒரு ஊமைப் படம் போல ஆகிடும் போலயே ' மனதிற்குள் புலம்பித் தவித்து, வெளியே சிரித்து தொலைத்து, வந்தவர்களிடம் கிட்ட தட்ட நடித்துக் கொண்டிருந்தேன்.

'நீயா பேசாம நான் பேசினா என்னை என்னனு கேளு விவேக்.'பன்மை மாறி ஒருமை குடிகொண்டது என்னிடம். கோவமா இருக்கேனாக்கும்.ஆடி அசைந்து அந்த நாளும் மெல்ல நழுவியது.

கருமை நிற மேகம் ஒளித்து வைத்த மழைநீர் எந்நேரமும் கொட்டி தீர்த்துவிடும் அபாயம் இருக்க என் புகுந்த வீட்டிற்கு பயணப்பட்டுக் கொண்டிருந்தேன் நான்.

என் மனம் முழுதும் நீலாவின் கண்ணீரில் தங்கி கன்னத்தில் உறைந்து விட்டுருந்தது. உள்ளுக்குள் பிறவாகமெடுக்கும் விழியூற்றை இமைக் கதவில் ஒளித்து வைத்து, இதழின் ஓரம் ஆதரங்களுக்கு அடியில் புதைந்து கொண்டு வரமாட்டேன் என்ற சிரிப்புக் குழந்தையை வம்படியாய் வெளியில் அழைத்து உதட்டில் ஓட்டவைத்துக் கொண்டேன்.

சின்னவளின் கன்னம் பிடித்து நெற்றியில் முத்தமிட்டு "நீலா குட்டி எதுக்கு அழுது கரையனும். அக்கா இல்லாம ஜாலியா இருக்கலாமே. உன்னோட வீடு, உன்னோட ரூமு,உன்னோட தீனி எல்லாமே இனி உனக்கு மட்டுன்தான். அக்காக்கு பங்கு வேண்டாம். அப்பாகிட்ட மல்லு கட்ட வேண்டாம். என்ன சரிதான.."என்று அவளின் நெற்றியில் முட்டினேன்.

"போக்கா "என்றவள் இன்னமும் அதிகமாய் அழுதவாறே என்னைக் கட்டிக்கொண்டாள்.

"அடாத மனமே! சற்று நேரம் அடை மழையை பெய்யாதிரு "மனதுக்கும் கண்ணுக்கும் கட்டளையிட்டவாறே சின்னவள் தலையை வருடிக் கொடுத்தேன்.

என்னை பின்னிருந்து பூப்பந்தாய் இரு கரம் அணைத்துக் கொண்டது. இந்த சூழ்நிலையின் கணம் தாங்காமல் குழந்தை தான் என்னை அணைத்துக் கொண்டது. நீலாவை விடுத்து மலரை தூக்கி வைத்துக் கொண்டேன்.

"இந்த அழுகாட்சி சித்திய நம்மோடு கூட்டிட்டு போய்ட்டு தீனியே குடுக்காம நாம புடிங்கி வச்சுக்கலாமா குட்டிமா."என்று மலரிடம் கேட்டேன். மலரென சிரித்த குழந்தை "சித்தி பாவம் "என்று மொழியவும், "அப்போ அம்மா "என்றேன் நான் பாவமாய்.

"இத்தூண்டு மட்டும் குடுக்கலாம். நாம நிறைய வச்சுக்கலாம்.."என்று சொல்லி என்னை சமாதானம் செய்தது குழந்தை.

"என்னடி நீலு போலாமா "என்றேன் கண்ணடித்து.

"எனக்கொன்னும் வேண்டாம் போ. எனக்கு எங்கப்பா வாங்கி தருவாரு. அங்க போய் எல்லாத்தையும் நீயும் உன் பொண்ணும் வச்சுக்குங்க."என்று என்னிடம் சிலுப்பியவள் அப்பாவை கட்டிக்கொண்டாள்.அழுகை வெகுவாய் குறைந்து விட்டிருந்தது.

"வேண்டாமாம் குட்டிமா. வா நாம போய் நம்ம அப்பா கிட்ட கேப்போம் "என்று சொல்லிவிட்டு அந்த அவரை என் சுவரை, பனைமர டவரைப் பார்த்தேன்.

அதென்னவோ கண்களில் அத்தனை லாவகத்தை கொட்டி மனுஷன் என் முகத்தை பார்க்காமலேயே தவிர்த்து வீடிருந்தார்.

'இந்த பாரா முகத்தையும் பேசா மொழியையும் வைத்துக்கொண்டு எப்படி வாழ்ந்து போவேனோ எல்லாம் முருகனுக்கு தான் வெளிச்சம்.'

அப்படியே மற்றவர்களுடமும் என்னை பெத்தவரிடமும் என் சின்னவளிடமும் மெல்ல விடை பெற்று காருக்குள் அமர்ந்து விட்டுருந்தோம்.

மலர் எனக்கும் விவேக்கிற்கும் நடுவில் அமர்ந்திருந்தாள். கார் கிளப்பிக் கொண்டு முன்னே செல்ல நான் பின்னே திரும்பி நீலாவையும் அப்பாவையும் பார்த்தேன். கண்டிப்பான என் அப்பாவின் கண்களில் கூட கண்ணீர் தடமிருந்தது. சின்னவள் அவரின் தோள் சாய்ந்து அழுத வண்ணமிருந்தாள்.

அவளுக்கு தோள் சாயா அப்பா இருந்தார். எனக்கு?. விவேக்கை திரும்பி பார்த்தேன். அவரோ வெளியே பார்த்திருந்தார். அவர் மடியில் இருந்த கைகளை பார்த்தேன். கொஞ்சம் அனுசரணையாய் பிடித்துக் கொண்டிருந்தாலாவது நன்றாக இருக்குமே "

அந்த இறுகி கிடந்த கைகளுக்குள் காற்றுக்கே இடமில்லை எனம் போது என் கைகளுக்கு மட்டும் கிடைத்திடுமா.

அன்பாய் என்னை அரவணைத்துக் கொள்ள ஒரு தோள் கூட இனிமேல் கிடைக்காதா.

ஏக்கம் ஒரு மாயநிலை. என்னை அதன் சுழலுக்குள் இழுத்துக் கொள்வதை நிறைய நேரம் உணர்ந்தும் அமிழ்ந்தும் போயிருக்கிறேன்.அப்போதெல்லாம் ஒரே ஒரே நம்பிக்கை இருந்தது. எப்படியும் கணவன் என்ற ஒன்றை கயிறு கட்டியேனும் என்னோடு கட்டி வைத்துவிடும் விதி. அவன் பாசம் நேசம் பொழிந்திடுவான்.

கண்ணீரை இமைகளுக்குள் நிறுத்திடுவான். புன்னகையில் பூக்கள் பூக்கச் செய்திடுவான். அவன் கை வளைவில் என்னை அவன் கூட்டுக்குள் பொத்தி வைத்திடுவான் என்று.

கனவு கலைந்து கலைந்து கலைத்தே போய்விடும் நிலையில் சிறை மீண்ட சிறு கண்ணீர் துளி என் கன்னத்தை கைப்பற்றியிருந்தது.

சட்டென எழுந்த அவசரத்தில் பாய்ந்து துடைத்துக் கொண்டேன்.

"ச்சே! இதென்ன துடைக்க துடைக்க துளிர்க்கும் ரத்தம் போல் வந்துகொண்டே இருக்கிறது. கண்ணுக்குள்ளேயே உறைந்து தொலையேன். அவன் பார்த்துவிடப் போகிறான்."

துடைத்து சலித்து இறுதியில் கண்ணை இறுக மூடி இருக்கையில் சாய்ந்து கொண்டேன். சிறிது நேரத்திலேயே மலர் என் மடிமீதே படுத்து உறங்கியிருந்தாள். அவள் தலையை கோதி என் மனதில் அமைதி கொண்டுவிட்டேன்.

இவளுக்காய் தானே இந்த திருமணத்தை மனதோடு ஏற்றது. பிறகெதற்கு இந்த கண்ணீரும் கம்பலையும்.

மனதை தேற்றி முடித்திருந்த நேரம் என் வலது காலை வைக்க வேண்டிய வீடும் வந்திருந்தது.

வயல் பரப்பின் நடுவில் வண்டிப் பாதையில் நின்றுந்த காரின் மறு பக்கத்தில் இருந்தது வீடு.என் மடியில் இருந்து குழந்தையை அவன்(அவர்!) தூக்கிக் கொண்டான். 'மரியாதையாவது மண்ணாவது'

என் மடியை தொட்டு உரசி சென்ற கைகளினால் அவன் முகத்தில் யாதொரு சலனமும் இல்லை. எனக்கும் தான். அப்பிடி தான் நானும் சொல்லிக் கொண்டேன்.

மூவரும் இறங்கி நின்றோம். ஆலம் சுற்றி ஆரத்தி கரைத்து உள்ளே அழைத்துச் சென்றனர். வலது காலில் நெற்படி எட்டித் தள்ளி அவனின் வீட்டிற்குள் நுழைந்தேன் இரண்டாம் மனைவியாய் நான்.

உள்ளே சென்றதும் அவன் மலரை தூக்கிக் கொண்டு உள் அறைக்குள் நுழைந்து விட என்னையும் அழைத்து சென்று மாலைகளை கழட்டி அலங்காரத்தை பிரித்தனர். அவனும் மாலையை கழட்டி ஒரு ஆணியில் மாட்டியிருக்க அதனோடே என்னுடையதையும் மாட்டி விட்டனர்.

குழந்தை கட்டிலில் உறங்கியிருந்தாள். விவேக் அவன் துணிகளை எடுத்துக்கொண்டு நான் உள்ளே வரும்போதே வெளியே சென்றிருந்தான். நான் அறைக்குள்ளேயே இருந்த குளியலறைக்குள் நுழைந்தேன்.

மாலை மயங்கி மஞ்சள் அழகன் மறைந்திடும் வேளையில் மெல்லமாய் ஆரம்பித்தது மழை. உறவு மக்கள் எல்லாம் ஓரளவு விடை பெற்றிருக்க, மலரின் அம்மாச்சி அப்புச்சியும் அதாவது தேவியின் அம்மா அப்பாவும் மட்டுமே மேலதிகமாய் இருந்தனர்.

எங்கள் அறையில் நான் ஜன்னலோரத்தில் மழையை வேடிக்கை பார்த்திருக்க மலர் இன்னமும் தூங்கிக் கொண்டு தான் இருந்தாள்.

மின் விசிறியின் சத்தமும் மழையின் சத்தமும் ஹோவென நெஞ்சை ஒரு சேர நனைத்தது. ஜன்னல் கம்பிகளை தொட்டு பார்த்தேன் ஜில்லேன இருந்தது. கண்ணாடி ஜன்னல் கதவில் படிந்திருந்த பனிமூட்டத்தில் ஆட்காட்டி விரல் கொண்டு கிறுக்கினேன்.

விவேக் வேணி என்று தன்னைப்போல் கிறுக்கியிருந்தது விரல். யாரோ வரும் அரவம் கேட்கவும் திரும்பி பார்த்தேன்.

தேவியின் அம்மா தான் வந்தார். "ஏன்டாமா தனியா உக்காந்துருக்க. வெளிய வரலாம்ல."என்றவரே விரிந்திருந்த என் முடியில் விரல் கோர்த்து உலர வைக்க ஆரம்பித்தார்.

"வரேன் பெரியம்மா.."என்றேன் அவரை பார்த்து.

"அம்மா சொல்லுடா கண்ணு. என் பேத்தியோட அம்மா எனக்கு பொண்ணு தானே "என்றாரே அதில் இவர் மேல் நான் கொண்ட பிம்பம் உடைந்து போனது.

தன் மகளின் இடத்தில் என்னை வைக்கும் உள்ளம் அழகானது, தன்னலமற்ற தாய்ப்பாசம் கொண்டது என்றே தோன்றியது.நான் கொடுத்து வைத்தவள் என்று நினைத்துக் கொண்டேன்.

"சரிங்கம்மா "என்று புன்னகைத்தேன்.

"உன் முடி ரொம்ப நைசா இருக்கு அம்சா. நான் பின்னி விடட்டுமா "

தொண்டையில் சின்னதாய் ஒரு வலி. உள்ளிருந்து வந்த கேவலை அடக்கியதால் இருக்கலாம்.சற்று தெளிந்து 'எனக்கு கூட தலை பின்னிவிட ஒரு உறவு 'என்ற மகிழ்ச்சியில் மனது பூ போல மென்மையாய் மலர்ந்து போனது. சரியென தலையாட்டி அவருக்கு வாகாய் அமர்ந்து கொள்ளவும் வாரி விட ஆரம்பித்தார்.

சிலர் தலை வாரி விடும் போது தான் நமக்கு வலிக்கவே செய்யாதாம். மென்மையாய் ஒரு இறகினை வருடும் லாவகத்தில் சிக்கெடுத்து பின்னலிட்டு கொத்து ஜாதி மல்லி சரத்தையும் வைத்து விட்டார்.கம்மென்ற மணம் என்னைச் சுற்றிலும்.

"எழுந்து சாப்பிட போ அம்சா. நான் பாப்பாவ எழுப்பிட்டு வரேன்."என்றவர் என்னை வெளியே அனுப்ப தயக்கமாய் வெளியே வந்தேன்.

ஹாலில் டிவியில் செய்தி ஓடிக்கொண்டிருந்தது. மாமாவும் தேவியின் அப்பாவும் இருந்தனர். அத்தை சமையல் அறையில் இருந்தார். நான் அவரிடம் சென்றேன். என்னைப் பார்த்தவர் "வெளிய காத்தாட உக்காரும்மா. எல்லா வேலையும் முடிஞ்சுது."என்று என்னிடம் சொன்னவர், "ஏங்க அந்த பந்திப் பாய எடுத்து விரிங்க " என்று என் மாமனாரிடம் வேலை வாங்கியிருந்தார்.

அவர் அதை எடுத்து விரிக்கவும் எனக்கு சும்மா இருக்க பொறுக்காமல் அவருக்கு உதவி செய்ய சென்றேன்.அவர் விரித்த பாயை நான் நேர் செய்ய முயல,

"அட பாப்பா இரு நா விரிச்சுக்கறேன். நீ மாடிக்கு போய் விவேக்க கூட்டிட்டு வா. குடை வெளிய வாசல்ல இருக்கு எடுத்துக்கோ."என்று சொல்லவும் நான் வெளியே சென்றேன்.

மழை இன்னும் பெய்து கொண்டு தான் இருந்தது. வெளியே வாசல் படியின் அருகில் இருந்த குடையை எடுத்துக்கொண்டு மேலே ஏறினேன். கைப்பிடி சுவற்றில் விழுந்த மழை நீர் கொஞ்சம் என் மேலும் பட்டது.

மாடியில் ஒரு அறையும் முன்புறம் கொஞ்சம் கலர் கூலிங் ஓடும் போட்டு இருந்தது. மாடியின் இன்னொரு மூலையில் கீழிருந்து வளர்ந்த ராம கோணம் பூச்செடி மாடி வரைக்கும் கிளை விரித்து பூத்திருந்தது.

தழைய கட்டியிருந்த புடவை நனைந்து விடாமல் இருக்க சற்று தூக்கி இருந்தேன். அப்படியே வீட்டை சுற்றி பார்க்க, மின்னல் வெளிச்சத்தில் சுற்றிலும் மஞ்சள் வயல்கள் விரிந்து கிடந்தததை பார்க்க முடிந்தது . ஆங்காங்கு சில வீடுகளில் வெளிச்சம் தெரிந்தது. மழையின் சாரல் அறையின் முன் வரை அடிக்கவும் நான் கதவிடம் சென்ற பின்னரே குடையை மடக்கினேன்.

வெளிச்சம் கசிந்த அறையை எட்டிப் பார்த்தேன் . வெறும் கயிற்றுக் கட்டிலில் தூங்கிப் போயிருந்தான் விவேக். முன்பிருந்த மர ஸ்டூலில் லேப்டாப் மூடிக் கிடந்தது. குடையை வெளியே ஓரமாய் வைத்து விட்டு கதவை தட்டினேன்.

நல்ல தூக்கம் போல். எழவே இல்லை. வேறு வழியின்று உள்ளே சென்றேன்.

"இப்போ என்ன செய்யறது. கூப்பிட்டு பார்க்கணுமா. என்னனு கூப்பிட. அச்சோ இவன் பேசாம நாம பேச கூடாதுங்கற என்னோட கொள்கை என்னாகறது.எப்பயும் போல படத்தில் வர மாதிரி இருமி வைப்போம் "

"ம்க்கும் ம்க்கும் "கொஞ்சம் சத்தமாகவே இருமினேன்.

திகைத்து விழித்தவன் என்னை பார்த்ததும் சட்டென எழுந்து கொண்டான். அவன் எழுந்த வேகத்தில் நான் சற்று பின்னடைந்து போனேன்.

"ஒருவேளை மேக்கப் அதிகமா இருக்கோ. பேய்னு நினைச்சுட்டானோ?"என் மனம் எனக்கே கவுண்டர் குடுத்தது.

"என்ன வேணும்?"நேராய் கேட்டான் எனைப் பார்த்து.

"அத்தை சாப்பிட வர சொன்னாங்க."என்றேன் அவன் சட்டையின் இரண்டாவது பட்டனை பார்த்து. என் வளர்த்திக்கு அது தான் தெரிந்தது. அதோடு அவன் கண்ணை பார்த்துலாம் பேச முடியாது. முறைக்குறான். ப்லெடி ஃபெல்லோ. மனதுக்குள் நினைத்தப்படியே உதட்டை சுழித்துக் கொண்டேன்.

"நீ போ வரேன் "என்றவன் மேலறையில் இருந்த அட்டாச்சுடு பாத்ரூமில் நுழைந்து கொண்டான்.

நான் அந்த அறையை சுற்றும் முற்றும் பார்த்தேன். வேறு குடை இல்லை. வெளியே இன்னும் மழை பெய்து கொண்டு தான் இருந்தது.நான் முன்னே சென்றுவிட்டால் இவன் நனைய வேண்டி வருமே என்று நினைத்து இவனுக்காய் காத்திருந்தேன் வெளியில் வேடிக்கை பார்த்தவாறே. கையில் குடையை விரித்து ஆட்டிக்கொண்டு நின்றேன்.

"நீ இன்னும் போகலையா "என்ற அவனின் கேள்வியில் திரும்பி விவேக்கை பார்த்தேன்.

"இன்னொரு குடை இல்ல. அதான் வெயிட் பண்ணேன். வாங்க போலாம் "என்று அழைக்கவும்,

"இல்ல பரவாயில்ல போ. நான் வேகமா இறங்கி வந்துருவேன்."

"இல்ல வாங்க இதுலயே போலாம் "நான் ஒற்றைக் காலில் நிற்பது போல எனக்கு தோன்றியது.அவன் இன்னும் தயங்கியே நிற்க,

அவனை முறைத்து 'ரொம்பத் தான் பண்றான்'என்று எனக்குள் நொடித்து நான் திரும்பி நடக்க ஆரம்பிக்கவும் என்ன நினைத்தனோ "இரு நானும் வரேன் "என்று வந்து என்னுடன் இணைந்து கொண்டான்.

அவன் உயரத்திற்கு நான் குடை பிடிக்க தடுமாறவும் என் கையில் இருந்த குடையை வாங்கிக் கொண்டான். அப்படி அவன் செய்யும் போது திரும்பி அவன் முகத்தை ஏதேச்சயாய் பார்த்தேன்.

இருட்டில் விரிந்திருந்த கருவிழிகளுள் விழுந்த அவன் பிம்பம் ஏனோ என்னை ஈர்த்தது. பளிச்சிடும் மின்னல்களில் அவன் கண்கள் மின்னியது. இருவருக்கும் இடையில் ஏற்பட்ட இந்த நெருக்கம் ஏகாந்த இரவின் இருதயத்தின் லயத்தை கூட்டியது.

அவன் செல்லவும் அவனோடு உரசிக் கொண்டு நடக்க உள் எழுந்த விதிர்ப்பில் நான் இருக்கைகளையும் இறுக்கிக் கொண்டேன்.

படிகளில் அவனை இன்னுமாய் நெருங்கி நடக்கவும் தவித்துப் போனேன் நான்.

'அவன் சொல்லும் போதே போயிருக்க வேண்டும். இதற்குமேல் முடியாது 'என்று நினைத்து அவனை விட்டு விலகி வேகமாய் கீழிறங்கி வந்துவிட்டேன்.பெரிதாய் தப்பித்து விட்ட எண்ணம்.

விவேக் கீழே வந்ததும் அனைவரும் சாப்பிட்டு முடித்து படுக்க தயாராகினர். மலரும் அவள் அம்மாச்சியும் ஒரு அறைக்குள் சென்றுவிட, என் அத்தை அவருக்கும் மாமாவிற்கும் வாசலில் கட்டில் விரித்து விட்டு என்னிடம் வந்தார்.

"சாமி கும்புட்டு தின்னூறு வஞ்சுட்டு போ ம்மா.அப்பிடியே வெளிய லைட்டு எல்லாத்தையும் அணைச்சுடு "என்று விட்டு படுக்க சென்று விட்டார்.

நான் எல்லா விளக்கையும் அணைத்து விட்டு அப்பிடியே ஹாலில் நின்றிருந்தேன்.

மூச்சு தடுமாறும் வேளைகளில் எண்ணங்களும் தடுமாறுமோ!

இணக்கங்கள் ஏதுமின்றி இணைவுகள் சாத்தியமா? மனம் ஏற்குமா? கூசிப்போகுமே மனமும் உடலும்.

செல்ஃபில் இருந்த கடவுளை கும்பிட்டு அத்தை சொன்னது போலேயே திருநீறு பூசிக்கொண்டு எங்கள் அறைக்குச் சென்றேன்.

கட்டிலில் அவனைக் காணவில்லை. எட்டிப் பார்த்தேன். மறுபுறம் வெறும் தரையில் தலையணை மட்டும் வைத்து படுத்திருந்தான்.

நெஞ்சுக்குள் சட்டென ஒரு ஆசுவாசம். ஆனாலும்!!! ம்ம்ம் எங்கோ மூலையில் கொஞ்சமாய் வலிக்கிறதே. கொஞ்சமாய் தானா????

கூடல் தான் அதிகப்படி. சிறு எண்ணப் பகிர்தல் அத்தியாவசியம் ஆயிர்றே.

கதவை தாழிட்டு விளக்கை அமர்த்திவிட்டு ஜன்னல் ஓர சாய்வு நாற்காலியில் என்னை சுருட்டி அமர்ந்து கொண்டேன்.

ஜன்னலின் நீர் திவலைகள் சொட்டு சொட்டாய் கீழிறங்க நான் எழுதி வைத்திருந்த பெயர்கள் மறைந்து போயிருந்தது.

பெயரளவு கல்யாணத்தின்
மிச்ச மீதி
தோற்றுப் போன என் ஆசைகள்.
 

Latest profile posts

ஹாய் பிரெண்ட்ஸ்... "வழி மாறிய பயணம்" கதையின் பத்தாவது அத்தியாயம்👇👇👇
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் 😍
அலாதி தேடலாய் நீ அத்தியாயம் 9😎👇
ஹாய் பிரெண்ட்ஸ்... "வழி மாறிய பயணம்" கதையின் ஒன்பதாவது அத்தியாயம்👇👇👇
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் 😍
அலாதி தேடலாய் நீ அத்தியாயம் 8 😎👇
%B8%8F.1253/
ஹாய் பிரெண்ட்ஸ்... "வழி மாறிய பயணம்" கதையின் எட்டாதவது அத்தியாயம்👇👇👇

New Episodes Thread

Top Bottom