Kalayatha Mounangal _Part 3 - Episode 15

Revadyashok

✍️
Writer
ஜனனி குளித்து ரெடியாகி கீழே இறங்க, வீடே ஒருவித பரபரப்பில் தோய்ந்திருந்தது. மரகதம் சமையலறையிலும், சவீதா ஹாலில் உள்ள அலங்கார பொருட்களை சுத்தம் செய்ய ஆட்களை ஏவிக்கொண்டிருக்கவும் சிறு புன்னகையுடன் சமையலறைக்குள் நுழைந்தாள்.

மருமகளை கண்டதும் சூரியனை கண்ட மலரை போல பெரியவரின் முகம் மலர்ந்தது.

"வாம்மா ஜனனி, காஃபி குடிக்கறியா ? என்றபடி அவளுக்கு காஃபி கலக்க முற்பட அவரை தடுத்தாள்.

"நீங்க உட்காருங்க அத்தை, நான் செய்யறேன், எல்லோரும் காஃபி குடிச்சாச்சா ? என்றபடி அடுப்பிலிருந்த பாலை கிண்டி விட்டாள்.

"இன்னும் இல்லைம்மா, அண்ணி இப்போ தான் குளிச்சிட்டு வந்தாங்க. சரி காஃபி போட்டுட்டு டிஃபனை செய்ய சொல்லலாம்னு வந்தேன், உங்கப்பா வாக்கிங் போயிருக்கார். அது சரி நீங்க நேற்று நைட் எங்கேயோ வெளியே போனீங்க, ஆனால் ரொம்ப நேரமாகியும் வரலை. எப்போ வீடு திரும்பினீங்க?

மாமியாரின் கேள்விக்கு ஒரு நொடி இவரிடம் மிஷேலின் விஷயத்தை பற்றி சொல்லிவிடலாமா என்று தோன்றியது. உடனேயே கணவனின் எச்சரிக்கை ஞாபகத்தில் இடற தன்னை நிதானித்தாள்.

"ஆமாம் அத்தை ஒரு முக்கியமான வேலை, ஆபிஸ் வரைக்கும் போயிருந்தோம். திரும்பி வர லேட் ஆயிடிச்சு..." என்றாள் கோர்வையாக.

"என்னமோ போம்மா, அவன் தான் வேலை வேலைன்னு அதிலேயே தன்னை புதைச்சிக்கிறான்னு உன்னிடம் அவனை ஒப்படைச்சா, அவன் உன்னையும் அவன் புதைக்குழியிலே இழுத்துக்கிறானே. நேரம்காலமில்லாமல் மாடாய் உழைச்சா உங்க ரெண்டு பேர் உடம்பும் என்னாகிறது..."

மாமியாரின் கவலைக்கும், அக்கறைக்கும் மனது நெகிழ்ந்தாலும் தமையனின் நிலைமைக்கு அவளின் விழிகளில் வைரத்துளி பூத்தது.

அதை உள்ளிழுத்து தயாரித்த காஃபியை மாமியாரிடம் கொடுக்க வெளியே ஜெகன்நாத்தின் குரல் கேட்டது மனைவியிடம் காஃபி கொண்டு வரும்படி.

"அப்பாவுக்கும், அம்மாவுக்கு காஃபி கொடுத்துட்டு வரேன் அத்தை..."என காஃபி ட்ரேயுடன் வெளியே மரகதம் மருமகளையே வாஞ்சையுடன் நோக்கிவிட்டு அவரின் விழிகள் செரீனாவின் அறை நோக்கி மடிப்பாக்கம் உயர்ந்தது.

"குட்மார்னிங்ப்பா, காஃபி எடுத்துக்கங்க ..." என பேப்பரை படிக்க எடுத்தவர் ஜனனியின் காலை வணக்கத்திற்கு புன்னகையுடன் பதில் காலை வணக்கம் கூறி நன்றி சொல்லியயபடி காபி கப்பை எடுத்துக்கொண்டார்.

சவீதாவும் ஒரு கப்பை எடுத்தபடி,"எப்போ வந்தே ஜனனி, நான் பார்க்கலையே ...? என்றபடி காஃபியை ஒரு சிப் பருகினார்.

"ஹ்ம்ம் ஆஸம், உன் காஃபி தான் நாள் முழுவதும் புத்துணர்ச்சி தருது ஜனனி, ம்ச்ச் யு. எஸ். போய்ட்டால் உன் காஃபியை ரொம்ப மிஸ் பண்ணுவேன்..." என ஜனனியின் இதழ்களில் சிறு புன்முறுவல்.

மரகதமும் அவர்களுடன் வந்தமர,"என்னென்ன வேலைகள் அத்தை இருக்கு, சொல்லுங்க செய்திடலாம்...."என்ற மருமகளை வாஞ்சையுடன் நோக்கினார்.

"முதலில் நீ காஃபியை நிம்மதியா, நிதானமா குடி. அப்புறமா பார்த்துக்கலாம் மற்ற வேலைகளை. ஏற்கனவே என்னென்ன செய்யணும்னு வேலைக்காரிக்கு சொல்லிட்டேன், வீட்டை சுத்தம் செய்வதை அண்ணியின் மேற்பார்வையில் நடந்திடிச்சி. அதற்கு மேல் பெரிசா செய்ய வேலைகள் எதுவும் இல்லை. நீயும், சித்தார்த்தும் எங்களுடன் இருந்தாலே எங்களுக்கு யானை பலம் போல. என்ன அண்ணி சொல்றீங்க? என்று சவீதாவை துணைக்கழைக்க ஜனனியின் இதழ்களில் மீண்டும் மெல்லிய முறுவல்.

"சரிங்க அத்தை நீங்க பேசிட்டிருங்க, நான் சித்தார்த்துக்கு காஃபி குடுத்திட்டு வர்றேன்..."என்று சமையலறையை நோக்கி எழுந்துச் செல்ல ஜெகன்நாத் அவளை நிறுத்தினார்.

"என்னப்பா ஏதாவது வேண்டுமா ? என்று விசாரித்தவளின் முகத்தை ஆராய ஜனனியின் நெஞ்சம் படபடவென்று அடித்துக்கொண்டது.

"என்னாச்சு ஜனனி, இன்று உன் முகமே சரியில்லையே ? ஏதாச்சும் பிரச்சினையா ? என்றார் சந்தேகக்கண்ணோடு.

"ந...நத்திங்ப்பா, ஏன் அப்படி கேட்கறீங்க ? என்றவளை கைபிடித்து தன் பக்கத்தில் அமர்த்தினார் மாமியார்.

"ஆமாம் ஜனனி நானும் கவனிச்சேன், உன் முகத்தில் சுரத்தே இல்லை. என்னம்மா ஆச்சு? உனக்கும் சித்தார்த்துக்கும் ..." என்று துருவ, அப்பொழுது தான் மாடி ரூமிலிருந்து வெளிப்பட்டு கீழிறிங்கி வந்த செரீனாவுக்கு தாயின் கேள்வி காதில் தேனை ஊற்றியது போலிருந்தது.

'ஆஹா உருகி உருகி காதலிச்சதுங்க இன்னைக்கு சண்டை போட்டுக்கிட்டாங்களா, கேட்கவே ஆனந்தமா இருக்கு...'

சவீதாம்மாவின் கேள்வியில் ஜனனியின் முகம் மலர்ந்தது.

"ஹய்யயோ அப்பா, அம்மா, நீங்க நினைக்கிற மாதிரி ஏதும் இல்லை..." என்று கூறி செரீனாவின் நெஞ்சில் கொள்ளிக்கட்டையை சொருகினாள்.

"பின்னே… ? என்றவர்களின் கேள்வியில் குறுக்கிட்டு,"நீங்க கேட்டதில் பாதி உண்மை தான், மனதில் ஏதோ இனம் புரியாத சங்கடம் இருக்கு, ஆனால் அது எங்க விஷயமில்லை, செரீனாவை பற்றி..." என மூன்று பெரியவர்களின் முகத்திலும் கேள்வியின் பாவனை.

அவர்கள் பேச்சை ஒட்டுக்கேட்டுக்கொண்டிருந்த செரீனாவுக்கோ காது கூர்மையானது ஜனனியின் பேச்சை கேட்க.

"ஆமாம்ப்பா, நீங்க பாட்டுக்கு செரீனாவின் சம்மந்தமில்லாமலே பெண் பார்க்கும் படலம், நிச்சயம் என்று ஜெட் வேகத்தில் போறீங்க, என்னதான் அவள் கெட்டவளாக இருந்தாலும் திருமண செய்துக்கொள்ள போகிறவள் அவள். கல்யாணம் செய்துக்கொண்டு ஐம்பது , அறுபது வருடம் வாழ போகிறவள், அவளின் சம்மதம் முக்கியமில்லையா? அதை நினைச்சு தான் கொஞ்சம் பயமாயிருக்கு. கடைசி நேரத்தில் உங்கள் மேலுள்ள கோபத்தில் ஏடாகூடமா ஏதாவது நடந்திடுமோன்னு..."

ஜனனி தனக்காக பரிந்து பேசவும் செரீனாவுக்கே தன்னை நினைத்து சீய் என்றாகியது. பெற்ற தந்தை கூட தன் ஆசை பெரிதாக தோன்றவில்லை. ஆனால் தான் விரோதியாக நினைத்தவள் தன்னை பற்றி கவலைப்படுகிறாள் என்றதுமே செரீனாவின் மனது சற்று லேசாகியது.

ஆனால் ஜெகன்னாத்தோ பெரிதாக சிரித்தார் இது தான் உன் கவலையா என ?

"இங்கே பாரு ஜனனி, நான் ஏற்கனவே சொன்னது தான், அதில் எந்த மாற்றமும் இல்லை. அதை பற்றி பேசுவதை விடுத்து அடுத்த வேலையை பார்ப்போம் ..." என்று பிடிவாதமாக கூறிவிட செரீனா உள்பட அங்கிருந்த பெண்களின் முகம் கூம்பியது.

'ஜெகன்நாத் அப்பா ஏன் இத்தனை பிடிவாதம் பிடிக்கிறார் என்று யோசித்தபடி கணவனுக்கு பால், டிகாஷன் மற்றும் சர்க்கரை வகையாறாக்களை எடுத்து வைத்துக்கொண்டிருக்க அவளின் கைபேசி சிணுங்கியது புதிய நம்பரில்.

புதிய நம்பர் என்றதும் ஜனனி அதை எடுக்காமல் காபி ட்ரேயுடன் மாடியேறி தன் அறைக்கு வந்தவள் கணவன் ரெடியாகி கண்ணாடி முன் நின்று கேசத்தை வாரிக்கொண்டிருக்கவும் அவனுக்கு காபியை கலந்து கொடுத்தாள்.

மீண்டும் அவளின் கைபேசி அதே நம்பரிலிருந்து சிணுங்க,"எடுத்து பேசு மிஷேல் தான்..."என கணவனை ஆச்சர்யமாக நோக்கிவிட்டு வேக வேகமாக தொடர்பை இணைத்தாள்.

சில நொடிகள் தமையனிடம் பேசிவிட்டு வைத்ததும், காலையிலிருந்து அழுத்திக்கொண்டிருந்த மனபாரம் சற்று குறைந்தது போலிருக்க கணவனின் தோளில் சாய்ந்தாள்.

"மிஷேல்க்கு ஒன்றுமில்லை. சீக்கிரமே சரி ஆகிடுவார், ஆனால் அவருக்கு விபத்தை உண்டாக்கினவங்க யாருன்னு கண்டுபிடிக்கணும். சரி இந்த விஷயத்தை நீ எப்பொழுது சொன்னே மிஷேலிடம்...?

ஜனனி நடந்த விஷயங்களை கூறி, "இந்த விஷயத்தை ஒரு டிடெக்ட்டிவ் ஏஜென்ஸி மூலம் டீல் பண்றதா சொன்னார், ஆனால் ஏன் அவரே நேரிடையாக காலத்தில் இறங்கினார்ன்னு தெரியலை. எனக்கென்னவோ பயமா இருக்கு சித்தார்த். நாம அந்த வீட்டை பற்றி விசாரிக்கறோம்னு யாருக்கோ சந்தேகம் வந்திடுச்சி, அதனால் தான் இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கு. நீங்களும் நேரிடையா இதில் சம்மந்தப்படாதீங்க ப்ளீஸ்..."

மனைவியின் பயத்திற்கு புன்னகைத்து,"பயப்படாதே ஜானு, யாரும் எதுவும் செய்திட முடியாது. மிஷேல் வெளிநாட்டுகாரர் என்பதால் அவரிடம் அவங்க பாட்சா பலிச்சிருக்கலாம். ஆனால் என்னிடம் அப்படியெல்லாம் நடக்க வாய்ப்பில்லை. இதுவரை நான் நேரில் சம்மந்தப்படலை. ஆனால் யார் அந்த வீட்டை பற்றி விசாரிக்கிறாங்கன்னு சம்மந்தப்பட்ட ஆட்களுக்கு இந்நேரம் புரிஞ்சிருக்கும். ஆனாலும் இதுவரை என்னை யாரும் நெருங்கலை..."

கணவனின் பேச்சில் சற்று தைரியம் உண்டாகியது.

"ஹ்ம்ம் மிஷேலை இனி ஜாக்கிரதையாக இருக்க சொல்லணும்..."என்றவள் மீண்டும் யோசனையில் ஆழ அவளை உலுக்கினான் சித்தார்த்.

"வாட் அகைன் ... ?

"ம்ச்ச் நத்திங், பெங்களூரில் ஒரு விஷயத்தை பற்றி கேட்டேன் ஞாபகமிருக்கா ? உங்களிடம் உத்தரவாதம் கூட கேட்டேனே ..."என்று நினைவு படுத்த சித்தார்த்தின் நினைவு அன்றைய தினத்தை நோக்கி நழுவியது.

அன்று இருவரும் பேசியதும், காதல் செய்ததும் நினைவில் மின்னலடிக்க அதன் விளைவாக அவன் அதரங்களில் புன்னகை மிளிர்ந்தது.

"ஹ்ம்ம் சொல்லு, என்ன உத்தரவாதம் ... ?

"ஹித்தேஷ் பற்றி உங்க அபிப்ராயம் என்ன சித்தார்த் ?

மனைவி சம்மந்தமே இல்லாமல் சமீபத்தில் கண்ணுக்கு தெரியாத எதிரியாக இருக்கிறவர்களான குடும்ப உறுப்பினரை பற்றி விசாரிக்கவும் சித்தார்த்தின் புருவங்கள் நெரிந்தது.

"சொல்லுங்க ப்ளீஸ்..."

"ஹ்ம்ம் நல்லவன் தான், ரொம்ப புத்திசாலி, சின்ன வயசிலேயே ஒரு பெரிய இடத்தை பிடிக்கணும்னு ஓயாமல் உழைக்கிறவன், சரி இதெல்லாம் எதற்கு ?

"சோ டோட்டலி ஹீ இஸ் ஜெம் இல்லையா ?

"அஃப்கோர்ஸ்... ?

"ஹ்ம்ம் அவனுக்கு செரீனாவை பேசலாம்னு மனசுக்குள் நினைச்சேன்…" என்பதற்குள் "வாவ் ஹித்தேஷ் கிரேட் எஸ்கேப் .." என்ற கணவனை செல்லமாக அடித்தாள்.

"ப்ச் என்ன இப்படி சொல்றீங்க சித்தார்த், பல்லவி மேமும், நீங்களும் ஹித்தேஷை பற்றி சொன்ன பொழுது எனக்கு இந்த ஆசை தான் மனதினுள் எழுந்தது, இது செரீனாவின் மீதுள்ள பாசத்தினாலோ, அக்கறையினாலோ வந்ததல்ல. ஜெகன்நாத் அப்பா, சவீதா அம்மா , அப்புறம் அத்தை , அகில் இவங்களை நினைச்சி தான்...."

"சரி நினைச்சே, அதை மாமாவிடம் பேச வேண்டியது தானே ? ஏன் ப்ரோக்கரின் நம்பர் கொடுத்தே....?

"எங்கே சித்தார்த், ஓவ்வொரு முறை பேசணும்னு நினைக்கும் பொழுது அந்த இடத்தில் செரீனா இருக்கிறாள், அவள் திருமண விஷயத்தில் நாம நேரடியா தலையிட்டால் அவ்வளவு தான். அவள் நம்மை பழிவாங்க எந்த எல்லைக்கும் போவாள். அதனால் தான் என்னால் சொல்ல முடியாமல் போய்டிச்சி..." என்று பெருமூச்சுவிட சித்தார்த்தும் அதை ஆமோதித்தான்.

"ஜனனி…" என்ற அத்தையின் குரல் கேட்டதும், கணவன் மனைவி இருவருமே கீழே இறங்கி வந்தார்கள்.

அனைவரும் தங்களுக்காக டைனிங் டேபிளில் காத்திருக்கவும் அவர்களுடன் பேசிக்கொண்டே சாப்பிட அடிக்கடி செரீனாவின் பார்வை ஜனனியிடம் பாய்ந்தது. ஜனனி அவள் முகத்தை பார்க்கவில்லையென்றாலும் அதை உணர முடிந்தது.

சாப்பிட்டு முடிந்ததும் மாப்பிள்ளை வீட்டார் வரவேற்க ஆயத்தங்களை செய்ய மாமியாருடன் ஜனனி ஈடுபட்டிருக்க அவளை நெருங்கி செரீனா தயங்கி தயங்கி நிற்கவும் அவளின் விழிகள் கணவனிடம் தாவியது சிறு குழப்பத்துடன்.

டைனிங் டேபிலேயே மகள் ஜனனியை பார்த்ததை அறிந்த ஜெகன்நாத் இப்பொழுது செரீனா தங்கையின் மருமகளை நெருங்கவும், 'இவள் ஏதோ டிராமா போட திட்டமிடுகிறாள், அதை எக்காலத்திலும் அனுமதிக்க கூடாது ...' என்று நினைத்தவராக மகளை விட வேகமாக ஜனனியை நெருங்கினார்.

அவளிடம் ஒரு வேலையை சொல்லி அனுப்பிவிட்டு மகளிடம் திரும்பியவர், "இன்னும் ஏன் இந்த அரைகுறை உடையிலேயே சுத்திக்கிட்டு இருக்கே, போய் பட்டுப்புடவையை கட்டி அலங்காரம் செய்துக்கோ ..."என்றவர் மனைவியை அழைத்து அவளை ரெடி செய்ய சொல்லி அனுப்பி வைக்க ஜனனியின் இதழ்கள் புன்னகையை மென்றது .

ஒரு சில நிமிடங்களிலேயே மாப்பிள்ளை வீட்டார் வந்துவிட ஜெகன்னாத்தும், சித்தார்த்தும் அவர்களை சிரமேற்கொண்டு வரவேற்று அமர வைக்க பெண்களும் கைகூப்பி வரவேற்பு கொடுத்தார்கள்.

ஜெகன்நாத் வந்தவர்களுக்கு தன் வீட்டாரை அறிமுகம் செய்து வைத்துவிட்டு,"இவர் பெயர் க்ருஷ் அலைஸ் கிரிஷாந்த். யு.எஸ்.ல ரியல் எஸ்டேட் ப்ரோக்கரா ஒரு ஏஜென்சியில் வேலை செய்கிறார். நல்ல வருமானம்..." என பெண்களுக்கு மனது நிறைந்து போனது.

"பெண்ணை வர சொல்லுங்க ..."என்ற க்ருஷின் தாய்க்கு ஜெகன்நாத்தின் விழிகள் ஜனனியிடம் பாய்ந்தது.

அவரின் விழியசைவை சவீதாம்மாவிடம் சொல்லி, செரீனாவை அழைத்து வர சிரித்து பேசிக்கொண்டிருந்தவர்களின் விழிகள் அலங்கார பூஷிதையாக வந்த பெண்ணிடம் தாவியது.

க்ருஷின் முகத்தில் திருப்தி உண்டாக, அவளை தன் பக்கத்தில் அமர்த்திக்கொண்டார் மரகதம்.

மாப்பிள்ளை வீட்டாரும், பெண் வீட்டாரும் என்னென்னவோ பேசினார்கள், சிரித்தார்கள். ஆனால் ஜனனிக்கு எதுவும் கருத்தில் பதிய மறுத்தது, அவள் மனம் முழுவதும் தமையனை பற்றியும், பெங்களுர் வீட்டை பற்றியும் தான் சுற்றிக்கொண்டிருந்தது.

நடு நடுவில் அவளிடம் ஏதோ கேட்க எல்லாவற்றிக்கும் புன்னகையாலே சமாளித்துக்கொண்டிருக்க சித்தார்த் மனைவியின் கையை யாருக்கும் தெரியாமல் அழுத்தினான்.

திடீரென்று மாமியார் எல்லோரையும் சாப்பிட அழைத்து செல்ல சொல்ல ஒரு நொடி ஜனனி விழித்து கணவனின் முகத்தை நோக்க அவன் விழி மூடி திறந்து எதையோ அறிவுறுத்தினான்.

மாமியாரின் சொல்படி அவளும், சவீதாம்மாவும் வந்தவர்களை அழைத்து சென்று உபசரிக்க ஜனனியின் பார்வை வட்டத்தில் செரீனா விழுந்தாள்.

அவள் முகத்தில் நேற்று இருந்த கடுகடுப்போ, எரிச்சலோ எதுவுமின்றி புன்னகை மன்னியாய் காட்சியளிக்க எட்டாவது உலக அதிசயமாக இருந்தது. ஆயினும் அதை பற்றி ஆராயவோ யோசிக்கவோ மனதில்லாமல் மாமியாரின் உந்துதலின் பேரில் மதிய உணவை பரிமாறி முடித்து தானும் கணவன் மாமியார், சவீதாம்மாவோடு சாப்பிட்டு முடிக்க, அவளை ஜவுளி எடுக்க அழைத்தார் ஜெகன்நாத்.

அப்பொழுது தான் சவீதாம்மாவும் ரெடியாக இருப்பதை கண்டதும் அவளின் விழிகள் கணவனிடம் பாய "சித்தார்த்தும் உங்களுடன் தான் வர்றான் ஜனனி..." என்றார் மாமியார்.

அவளின் விழிகள் ஒரு மூலையில் நின்று நிச்சயம் செய்ய போகிறவனுடன் சிரித்து சிரித்து பேசிக்கொண்டிருந்த செரீனாவிடம் பாய்ந்தது.

'ஓ, சோ இவளின் முழு ஒப்புதல் கிடைத்துவிட்டது போலிருக்கு 'என்று எண்ணியவளாக அவர்களுடன் ஜவுளி எடுக்க கிளம்பினாள்.

ஜனனிக்கு ஏனோ மனது ஷாப்பிங் செய்வதில் பதியவில்லை. மனம் முழுவதும் மிஷேல், பெங்களுர் வீடு என்று சுற்றியலைய அதன் ஊடாக ஹித்தேஷும் அடிக்கடி வந்துவிட்டு சென்றான்.

சவீதாம்மாவும், மாப்பிள்ளையின் தாயும், சகோதரியும் ஜவுளி கடையையே தலைகீழாக புரட்டிக்கொண்டிருக்க சிறு புன்னகையுடன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவளிடம் புடவைகளை காட்டி அபிப்ராயம் கேட்டுக்கொண்டிருந்தார் சவீதா.

மனைவி தேமேன்னு நின்றிருக்கவும் சித்தார்த்துக்கு அவள் மனது புரிய, அவனுக்கு பிடித்த புடவையை தேர்ந்தெடுத்து அவள் தோளில் வைத்து அழகு பார்த்தபடி,"கமான் ஜானு, செரீனாவுக்கு இந்த மாப்பிள்ளையை பிடிச்சி போச்சு, அதனால் தான் அத்தை சந்தோஷத்துடன் புடவை எடுத்துக்கிட்டு இருக்காங்க. விடு அவள் திருமணமாகி வீட்டை விட்டு போய்ட்டால் மிகவும் நல்லது. இல்லையென்றால் கடைசி வரை நம் உயிரை வாங்கிக்கிட்டு இருப்பா. நீ கண்டதையும் போட்டு மனசை குழப்பிக்காமல் ஜாலியா கல்யாண கலாட்டாக்களை என்ஜாய் பண்ணு..." என மௌனியாக தலையை உருட்டினாள்.

அவளிடம் தான் எடுத்த புடவை பிடித்திருக்கிறதா என்று கேட்டு அதை பில் போட சொல்லி அனுப்ப, அவளின் விழிகள் பெண் பார்க்க வந்தவனிடம் தாவியது.

அவனோ கைபேசியில் விடாமல் புதையல் எடுத்துக் கொண்டிருக்கவும்,'செரீனாவிடம் கடலை போடுகிறான் போல என்று எண்ணியவளாக சவீதாம்மாவுக்கு புடவை எடுக்க உதவ ஆரம்பித்தாள்.

ஒரு வழியாக புடவை எடுத்து முடித்து, நகை கடைக்கு செல்ல ஜனனிக்கு அலுப்பாக இருந்தது. ஆயினும் பெரியவர்களுக்காக முகத்தில் புன்னகையை காத்து அங்கேயும் பொறுமையாக காத்திருந்து மோதிரத்தை செலெக்ட் செய்து வாங்கிக்கொண்டு வீட்டுக்கு செல்ல, நிச்சயத்திற்குண்டான ஏற்பாடுகள் கிட்டத்தட்ட முடிந்திருந்தது.

வாங்கின நிச்சய புடவையை செரீனாவிடம் கொடுத்து அவளை அணிந்துவர சொல்லி பெண்ணும்,மாப்பிள்ளையும் மோதிரத்தை மாற்றிக்கொள்ள நிச்சயம் இனிதே முடிந்தது. அதுவரை ஒரு இயந்திரத்தன்மையோடு வேலை செய்துகொண்டிருந்த மனைவியையே பார்வையால் தொடர்ந்துக் கொண்டிருந்த சித்தார்த்துக்கு அதற்கு மேல் தாக்கு பிடிக்க முடியவில்லை.

சந்தோஷத்தில் பெரும் நிம்மதி பெருமூச்செடுத்த தாய்மாமனிடம் மிஷேலின் விஷயத்தை கூறிவிட்டு, மனைவியை அழைத்துக்கொண்டு ஹாஸ்பிடல் கிளம்பிவிட்டான்.
 

kothaisuresh

Well-known member
Member
அப்பாடி செரீனா கல்யாணம் நிச்சயமாயிடுச்சு
 

Latest profile posts

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்😍

வெய்யோனின் தண்மதி அவள் 25😎👇

ஓம் சாயிராம்
எபிசோடை படித்து மகிழுங்கள்; பிடித்திருந்தால் கதையை தொடர்ந்து படியுங்கள்; பிரியமுடன் உங்கள் கருத்துக்களை அன்புடன் பகிருங்கள்.
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்😍

வெய்யோனின் தண்மதி அவள் 24😎👇

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்😍

வெய்யோனின் தண்மதி அவள் 23😎👇

மக்களே!!!
"நான் தொலைத்த நாட்களெல்லாம் மறுபடியும் மலருமா..!!!"
முப்பத்திரண்டாவது அத்தியாயம் பதிவிட்டிருக்கேன்... படிச்சிட்டு உங்க கருத்த சொல்லுங்க..☺️☺️☺️

New Episodes Thread

Top Bottom