Kalayatha Mounangal _Part 3- Episode 14

Revadyashok

✍️
Writer
அத்தியாயம்-14

அடுத்த நாள் நடக்க போகும் நிச்சயதார்த்தம், ஜெகன்நாத் அப்பாவின் முரட்டுத்தனமான முடிவு, செரீனாவின் சண்டித்தனம், நடுவில் மாட்டிக்கொண்டு விழிக்கும் அத்தை, ஹனி மூன் போய்விட்டு வந்த ராதிகா-விஷால் பற்றி பேசியபடியே வீட்டை நோக்கி வந்துக்கொண்டிருந்தவர்கள் ஒரு சந்தில் வண்டியை திருப்ப தூரத்தில் ஒரு வண்டி அலங்கோலமாக விழுந்து கிடப்பதும் அதிலிருந்து ஒருத்தன் பாதி வெளியேயும், பாதி உள்ளேயும் ரத்த வெள்ளத்தில் கிடப்பது காரின் ஹெட் லைட் வெளிச்சத்தில் தெரிய ஜனனியின் நெஞ்சம் பயத்தில் அதிர்ந்தது.

"ஹையோ சித்தார்த், பாவம் யார் வண்டியோ விபத்துக்குள்ளாகி இருக்கு, சீக்கிரம் போங்க..." என்று துரிதப்படுத்தினாள்.

வண்டியை விபத்து உண்டான வண்டியின் அருகில் நிறுத்திவிட்டு இருவரும் இறங்க, வண்டியின் நம்பர் பிளேட்டை கண்டதும் ஜனனிக்கு ஜெர்க்கானது. ஆயினும் ச்சே ச்சே இருக்காது என்று தன்னை தேற்றிக்கொண்டு விழுந்து கிடந்தவனின் அருகில் செல்ல எத்தனிக்க சித்தார்த் சட்டென்று அவளை பிடித்து இழுத்தான்.

"ஒரு நிமிஷம் ஜானு..." என்றவன் தன் கைபேசியை எடுத்து அதில் டார்ச்சை ஆன் செய்து விழுந்து கிடந்தவனின் முகத்தில் ஒளியை பாய்ச்ச இருவருமே ஏக காலத்தில் பதறினார்கள் மிஷேலை கண்டு.

அடுத்த நொடி, ஜனனி மின்னலென பாய்ந்து தமையனின் அருகில் சென்று அழுகையுடன் அவனை உலுக்கினாள்.

"மிஷேல் சே கியே பஸ்ஸே (உனக்கென்ன ஆச்சு) என்று வெறிப்பிடித்தவள் மாதிரி அவனை பிடித்து உலுக்கிக்கொண்டிருக்க சித்தார்த் அவளை தொட்டு நகர சொல்லிவிட்டு மூக்கின் அருகே கையை வைத்து சோதிக்க ஜனனி அலறினாள்.

"இல்லை இல்லை மிஷேலுக்கு எதுவும் ஆகியிருக்காது..." என்று கதறியவளை சமாதானப்படுத்தி, காரின் வெளியேயும், உள்ளேயும் கிடந்தவனை மெதுவாக இழுத்து வெளியே கிடத்த ஜனனியால் மிஷேலை அந்த நிலைமையில் பார்க்க முடியவில்லை.

கடகடவென்று அவனை பின்சீட்டில் படுக்க வைத்து ஜனனியை அவனை பிடித்துக்கொள்ள சொல்லிவிட்டு பக்கத்திலிருந்த ஹாஸ்பிடலுக்கு சென்று மிஷேலை அனுமதித்து, டாக்டரிடம் பேசிவிட்டு கமிஷனருக்கு போன் செய்ய நினைத்தவனின் விழிகள் அழுதுக்கொண்டிருந்த மனைவியிடம் திரும்பியது.

தன் நினைப்பை சற்று தள்ளி வைத்துவிட்டு மனைவியின் அருகில் அமர்ந்து அவளை தேற்ற முயற்சி செய்து தோற்று போனவன் அவளை அப்படியே விட்டுட்டு கைபேசியுடன் சற்று தள்ளி வந்து கமிஷ்னருடன் பேசிவிட்டு திரும்பி ஜனனியின் அருகில் அமர்ந்துக்கொண்டான்.

ஒவ்வொரு நொடியும், ஒவ்வொரு யுகமாக நகர ஜனனிக்கு அழுதழுது கண்ணீரே ஒரு கட்டத்தில் வற்றி போனது. பிரம்மை பிடித்தவள் மாதிரி எவ்வளவு நேரம் அமர்ந்திருந்தாளோ யாரோ தன் தோளை பிடித்து பலமாக உலுக்க மலங்க மலங்க விழித்தபடி நிமிர கணவன் தான் அவளை உலுக்கிக்கொண்டிருந்தான்.

சுற்றும் முற்றும் பார்த்ததுமே சூழ்நிலையே சில மணித்துளிகள் முன் நடந்த கோரத்தை பறைசாற்ற சட்டென்று உணர்வு வந்த மாதிரி,"மிஷேல் எப்படி இருக்கிறார் சித்தார்த், அவருக்கு ஒன்றுமில்லையே. எனக்கு மிஷேலை பார்க்கணும்..."என்று கணவனின் சட்டையை பிடித்தபடி கதற மிஷேலுக்கு ஒன்றுமில்லையென கூறி அவளின் வயிற்றில் பாலை வார்த்தான்.

அதை கேட்டதும் கலகலவென வழிந்துக்கொண்டிருந்த கண்ணீர் சட்டென்று நிற்க, விழிகள் பளிச்சிட்டது.

"நான் மிஷேலை பார்க்கணும்..." என்றவளை ஐ.சி. யூனிட்டினுள் அழைத்துச் செல்ல நீல கலர் உடையில் ஒரு பொம்மை போல தலை, மற்றும் காலில் கட்டுடன் படுத்துக்கொண்டிருந்தவனை கண்டதும் நின்ற கண்ணீர் மீண்டும் ஊற்றெடுத்தது.

"ப்ளீஸ் பீ காம் ஜானு, பேஷண்டை தொல்லை செய்யக்கூடாதுன்னு டாக்டர் சொல்லியிருக்கார், மிஷேலுக்கு ஒன்றுமில்லை, சீக்கிரமே தேறிடுவார். தக்க சமயத்தில் நாம் அவரை இங்கே கொண்டு வந்து சேர்த்திட்டோம். அதனால் பயமில்லை..."

ஐசியூனிட் வெளியே அமர்ந்தபடி உலகில் உள்ள தெய்வங்களை எல்லாம் வேண்டியபடி அமர்ந்திருந்ததால் கணவன் மிஷேலுக்கு ஒன்றுமில்லை என்றதும் நெஞ்சில் கைவைத்து கடவுளுக்கு நன்றியுரைத்தாள் மனதார.

தமையனின் அருகில் சென்று அவனின் செந்நிற சிகையை கோதியபடி,"இது தானாக நடந்த விபத்து போலில்லை, யாரோ வேண்டுமென்றே ஏற்படுத்தின விபத்து மாதிரி தான் இருக்கு. மிஷேலை இந்த நிலைமைக்கு கொண்டு வந்தது யாருன்னு கண்டுபிடிச்சி அவங்களை தண்டிக்கணும் சித்தார்த்..." என்று கோபத்துடன் கூற சித்தார்த்தும் அதே யோசனையில்தானிருந்தான்.

"ஹ்ம்ம் கண்டிப்பா ஜானு, ஏற்கனவே கமிஷனருக்கு தகவல் சொல்லி அவங்களும் வந்து டாக்டரிடம் பேசிட்டிருக்காங்க..." என ஜனனியின் விழிகள் கணவனை நன்றியுடன் நோக்கியது.

சற்று நேரத்தில் கதவை திறந்துக்கொண்டு மூவர் நுழைந்தார்கள். ஒருவர் டாக்டர், மற்ற இருவரும் கணவன் சொன்ன கமிஷனர் மற்றும் அசிஸ்டன்ட் கமிஷனர் என்று புரிய கணவனின் அருகில் வந்து நின்றுக்கொண்டாள். மேற்கொண்டு விபத்து நடந்த இடத்திலிருந்து வண்டியை கைப்பற்றியாச்சு என்றதும் ஜனனியின் விழிகள் ஆவலாக கமிஷனரை நோக்கியது.

"இந்த விபத்துக்கு காரணமானவர்களை சீக்கிரமே கண்டுபிடிக்கிறோம், அண்ட் அதுக்கு பேஷண்டும் ஒத்துழைக்கணும்..." என்றவர் நோயாளிக்கு எப்பொழுது மயக்கம் தெளியும் என்று மேலும் சில விவரங்களை கேட்டுக்கொண்டு காவலுக்குக்கு ஒரு கான்ஸ்டபிளை வைத்துவிட்டு விடைபெற்றுச் செல்ல ஜனனியின் விழிகள் மீண்டும் தமையனின் முகத்தில் பாய, அழுகை மீண்டும் துருத்திக்கொண்டு வந்தது.

'யார் இவனை இந்த நிலைக்கு உள்ளாக்கியிருப்பார்கள், மிஷேலுக்கு யார் விரோதியாக இருப்பார்கள். அனாயசமாக யாரின் விஷயத்திலும் தலையிடறவன் இல்லையே, யாருக்கும் எவ்வித கெடுதல் நினைக்காதவனுக்கு எதற்கு விபத்து ஏற்படுத்தணும் என்று யோசிக்க யோசிக்க அதற்கான விடை தான் கிடைக்கவில்லை.

அழுதழுது ஓய்ந்து பக்கத்தில் போட்டிருந்த நாற்காலியில் அமர்ந்து கன்னத்தில் கையை வைத்தபடி தமையனையே பார்த்துக்கொண்டிருந்தவள் எப்பொழுது உறங்கினாளோ, மிஷேலின் முனகல் சத்தத்தில் திடுக்கிட்டு விழிகளை மலர்த்தினாள்.

மிஷேலிடம் அசைவு தெரியவும், அந்த ரூமில் தன்னை தவிர வேறு யாருமில்லை என்றதும் கணவன் எங்கேயென்று தேடி வெளியே வர, சித்தார்த் அங்கிருந்த சேரில் கால் மேல் கால் போட்டபடி அமர்ந்து யாருடனோ போனில் பேசிக்கொண்டிருந்தான்.

மனைவியை கண்டதும் பேச்சை முடித்துக்கொண்டு எழுந்து வர, மிஷேலுக்கு நினைவு திரும்பிவிட்டது என்றதும் சற்று தூரத்தில் அமர்ந்திருந்த அசிஸ்டன்ட் கமிஷனர் எழுந்து அவர்களுடன் ஐஸிக்குள் நுழைந்தார்.

மெல்ல மெல்ல விழிகளை மலர்த்திய மிஷேல் தன்னருகே கண்ணீருடன் நின்ற தங்கையை கண்டு புன்னகைக்க முயன்று தோற்று போனவனாக அவளின் கையை பிடித்தான்.

தன் கால்மாட்டில் நின்றிருந்த சித்தார்த் பக்கம் விழிகளை திருப்பி,"நீங்க எப்படி இங்கே வந்தீங்க சித்தார்த்..." என்றான் மெல்லிய குரலில்.

நடந்த விஷயங்களை கூறி,"அசிஸ்டண்ட் கமிஷனர் வந்திருக்கார், அவரிடம் என்ன நடந்ததுன்னு சொல்லுங்க மிஷேல், அப்பொழுது தான் குற்றவாளியை பிடிக்க முடியும்..."என்றவன் அவர் பக்கம் திரும்பி, "ப்ளீஸ் ப்ரொசீட் ஸார்..."என்றான்.

"சொல்லுங்க மிஸ்டர் மிஷேல், உங்களுக்கு இப்படி இந்த விபத்து நடந்தது ....? என்று விசாரிக்க மிஷேலின் விழிகள் ஆயாசமாக மூடி திறந்தது.

"சாரி சார், யாரும் எனக்கு விபத்தை ஏற்படுத்தலை, நீண்ட தூரம் பயணம் செய்ததில் மிகவும் களைப்படைந்து ஒரு நொடி என்னையும் அறியாமல் தூங்கிவிட்டேன். அதன் விளைவு தான் இந்த விபத்து. எனக்கு யாரும் எதிரிகள் இல்லை..." என மற்ற இருவரும் அதிர்ந்தனர்.

ஜனனியோ ஏன் தமையன் பொய் சொல்கிறான் என்று குழம்பி கணவனை நோக்க அவனின் விழிகளோ சிறு கோபத்துடன் இடுங்கியது. விசாரிக்க வந்த கமிஷனருக்கு இது கவன குறைவால் ஏற்பட்ட விபத்து என்றதும் சித்தார்த்திடம் கைகளை விரித்தார்.

மிஷேலை மற்றொருமுறை கவனக்குறைவாக வண்டியை கையாளவேண்டாம் என்று அறிவுறுத்திவிட்டு,"சாரி மிஸ்டர் சித்தார்த், விக்டிம் சொல்படி பார்த்தால் எந்த பிரச்சினையுமில்லைன்னு தான் தோணுது. மிஷேலை பார்த்துக்கங்க..."என்று சித்தார்த்திடம் கைகுலுக்கிவிட்டு தன் படைகளை அழைத்துக்கொண்டு வெளியே சென்றார்.

அவர்கள் சென்றதை உறுதிப்படுத்திக்கொண்டவன்,"என்னாச்சு மிஷேல், எதற்கு பொய் சொல்றீங்க? உங்களை யாரோ வேண்டுமென்றே விபத்துக்குள்ளாகி இருக்காங்கன்னு தெளிவா தெரியுதே? அப்புறமும் ஏன் இப்படியொரு வாக்குமூலம்...?

தங்கையின் கணவனின் கேள்விக்கு புன்னகைக்க முயன்று தோற்று போனவன்,தங்கையின் கையை மெலிதாக அழுத்திக்கொடுத்தான்.

"காரணமாகத்தான் சித்தார்த் ..." என்னும் பொழுதே அவனுக்கு மூச்சு வாங்கியது.

"அப்புறம் பேசலாம் மிஷேல், நீ முதலில் ரெஸ்ட் எடு..." என்று எழ எத்தனித்தவளின் கைப்பிடித்தான்.

"இல்லை இப்போ சொல்லியாகணும், உட்கார், சித்தார்த் ..."என்றவன் சைகையால் பக்கத்திலிருந்த நாற்காலியில் அமர சொல்ல என்ன பூதம் வர போகிறதோ என்ற குழப்பத்தினூடே மிஷேல் சொன்னபடி செய்தான்.

"நீங்க சொன்னது சரி தான் சித்தார்த், என்னை கொலை செய்யும் நோக்கோடு தான் விபத்து ஏற்படுத்தினாங்க..."என்று முடிப்பதற்குள் ஜனனி ஹையோ ..."என்றாள் பதறி.

மிஷேல் அவளின் கையை பிடித்திருந்ததால் மென்மையாக அவளின் கையை அழுத்த, சித்தார்த் மனைவியின் மற்றொரு கரத்தை பற்றி அமைதியாக இருக்கும்படி அறிவுறுத்தினான்.

"சொல்லுங்க மிஷேல், யாரவங்க ? விபத்திற்கான காரணம் ?

நீண்ட பெருமூச்சை மிகுந்த சிரமத்திற்கிடையில் விடுத்து,"இன்று காலையில் நான் பெங்களூர் போயிருந்தேன்..." என ஜனனியின் விழிகள் அவசரத்துடன் கணவனை நோக்கியது.

"ஏன் ?

"ஜனனிக்கு ஒரு நெருடல், அந்த குழப்பத்தை தீர்த்து வைக்க தான்..." என சித்தார்த்துக்கு விஷயம் இன்னதென்று புரிந்துவிட அவனுள் ஆர்வம் பற்றிக்கொண்டது.

"ஜனனி சொன்ன அந்த வீட்டை போய் பார்த்தேன், அக்கம் பக்கத்தில் இருக்கிறவர்களிடம் விசாரித்தேன். ஆனால் யாருக்குமே அந்த வீட்டை பற்றிய விஷயங்கள் தெரியவில்லை. அதாவது அதை யார் கட்டியது? எப்பொழுது கட்டியது என. அப்பொழுது தான் அந்த இடத்தின் கிரயதாரர் யாரென்று தெரிஞ்சிக்க சார்பதிவாளர் அலுவலகத்திற்கு போனேன்..."

மிஷேல் சொன்னதை கேட்டதும் கணவனும், மனைவியும் ஆச்சரிய பார்வை பரிமாற்றம் செய்துக்கொண்டார்கள்.

"ஆனால் போன பிறகு தான் புரிந்தது எனக்கு அந்த இடத்தின் சர்வே நம்பர், மனையின் அளவு இது எதுவும் தெரியாது, எப்படி இதை பற்றி தெரிந்துக்கொள்வதென்று யோசிக்கும் பொழுது தான் அந்த அலுவக பியூன் வந்து என்னவென்று விசாரித்தான்.

நானும் அவனிடம் ஆயிரம் ரூபாயை எடுத்து காட்டி, அந்த வீட்டு முகவரி மற்றும் அவர்களின் பெயரை சொல்லி விசாரிக்க அவனின் முகம் ஒரு மாதிரி மாறியது. என்னை ஒரு மாதிரி ஏற இறங்க நோக்கினான். அவன் என்னை அப்படி பார்த்தத்திற்கான அர்த்தம் அப்பொழுது விளங்கவில்லை.

ஒரு வேளை வெள்ளைக்காரன் ஏன் வந்து விசாரிக்கறான் என்று நினைத்திருப்பானோ என்று தான் நினைத்தேன். அப்புறம் என்னிடமிருந்து பணத்தை வாங்கிக்கொண்டு, என்னை காத்திருக்க சொல்லிவிட்டு உள்ளே சென்றவன், திரும்பி வந்து, தொரை நீ இரண்டு நாள் கழிச்சி வா, உனக்கு தேவையான விவரங்களை தர்றேன்னு சொன்னான். நானும் சென்னை வந்துவிட்டு இரண்டு நாள் கழிச்சி வரலாம்னு கிளம்பிட்டேன். பெங்களூரை தாண்டி சென்னையை தொடும் வரை எவ்வித பிரச்சினையுமில்லை. ஆனால் சென்னைக்குள் நுழைந்ததும் திடீரென்று இரண்டு கார் என்னை தொடர்ந்தது. ஆரம்பத்தில் நான் அதை பெரிதாக எடுத்துக்கலை.

நான் ஓரிடத்தில் ரெஸ்ட் எடுக்க வண்டியை நிறுத்தியபொழுது அந்த வண்டிகளும் ஓரமாக நின்றது. நான் வண்டியை எடுத்த பொழுது அந்த வண்டிகளும் என்னை தொடர அப்பொழுது தான் நிலைமையின் தீவிரம் எனக்கு உரைத்தது. என் பிளாட்க்கு போவதற்கு பதில் பக்கத்தில் இருக்கிற உங்க வீட்டுக்கு வந்திடலாம்னு வண்டியை திருப்பி வேகமாக விரட்டினேன். அவங்களுக்கு என் நோக்கம் புரிந்துவிட அதுவரை ஒருவித இடைவெளியோடு தொடர்ந்தவர்கள் இப்பொழுது பகிரங்கமாகவே என்னை தொடர்ந்தார்கள்.

அதில் ஒருத்தன் என் காரை ஓவர்டேக் செய்து மடக்க, இன்னொருத்தன் நான் சுதாரித்து இறங்குமுன் அசுர வேகத்தில் மோதினான்..."என்று பாதி ஆங்கிலத்திலும் பாதி பிரெஞ்சிலும் சொல்லி முடிக்க ஜனனியின் விழிகளில் நீர் திவலைகள்.

மிஷேல் சொன்னதை கேட்டு சித்தார்த்தே சற்று அதிர்ந்திருந்தான். அதன் விளைவாக தனக்குள் யாராக இருக்கும் என்று யோசித்துக்கொண்டிருக்க மனைவியின் விம்மல் சத்தம் கேட்டு தன்னிலைக்கு வந்தான்.

"ஹேய் ஜானு, பீ பிரேவ்டா, மிஷேலுக்கு எதுவும் ஆகாது..." என பலமாக தலையை உருட்டி மறுத்தாள்.

"இல்லை சித்தார்த், இவனின் இந்த நிலைமைக்கு நான் தான் காரணம்..."என்று மீண்டும் முகத்தை மூடிக்கொண்டு அழ மிஷேல் இம்முறை அவளை தேற்றினான்.

"நோ ஷெரி, உன் நெருடல் சரியானதே, உனக்கு அந்த வீட்டில் ஏற்பட்ட உணர்வுகளுக்கும், இப்போ எனக்கு ஏற்பட்ட விபத்திற்கும் ஏதோ தொடர்பு இருக்கு. அதை நாம கண்டுபிடிச்சே ஆகணும்..." என ஜனனியின் விழிகள் தமையனை நோக்கி திடுக்கிட்டு மலர்ந்தது

"ஆமாம் ஜானு, ஹீ இஸ் கரெக்ட். அந்த வீட்டை பற்றி நாம தெரிஞ்சிக்க கூடாதென்று யாரோ நினைக்கிறாங்க, அந்த யாரோ யாரென்று நாம கண்டுபிடிக்கணும். நீ எல்லாவற்றிக்கும் பயந்து அழுதால், இந்த விஷயத்திலிருக்கிற மர்மத்தை எப்படி கண்டுபிடிக்கிறது. ரிலாக்ஸ் பேபி..." என ஜனனி தன் விழிகளை துடைத்துக்கொண்டாள்.

"தட்ஸ் குட் ஷெரி..." என்றான் தமையன் பாராட்டுதலாக.

"ஓகே மிஷேல், நீங்க விசாரித்த அந்த பியூன் பெயர் தெரியுமா ?

"ஜெகபதி கொண்டருல்லா..." என்றவன், "மணி என்னாச்சு ? என்றான் விசாரிப்பாக.

நேரத்தை சொன்னதும், "ஓகே சித்தார்த் நீங்க ஷெரியை அழைச்சுக்கிட்டு வீட்டுக்கு கிளம்புங்க. இன்று மதியம் செரினாவோட நிச்சயம்ன்னு ஜனனி சொன்னாள். நீங்க போங்க..."

"உன்னை விட்டுட்டு எப்படி மிஷேல் நான் போவேன் ?

"ஷெரி எனக்கு ஒன்றுமில்லை. எனக்கும் களைப்பா இருக்கு. இன்னும் கொஞ்ச நேரத்தில் தூங்கிடுவேன். நீ இங்கே இருந்து ஆகப்போவது ஒன்றுமில்லை. முதலில் நீ வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடு. மதியம் விழா முடிஞ்சதும் வா. சொன்னா கேளுடா ஜனனி..." என்றான் தங்கையின் முகத்தை வருடி.

"ஜானு அவர் சொல்றதும் சரி தான், நாம வீட்டில் இல்லைன்னு அம்மாவுக்கு தெரிஞ்சா பதட்டமாயிடுவாங்க. நானும் அவங்களுக்கு விஷயத்தை சொல்லலை. மிஷேல் ரெஸ்ட் எடுக்கட்டும். நாம இங்கிருந்தால் அவர் ரெஸ்ட் எடுக்காமல் பேச தான் நினைப்பார்..." என ஜனனி அரைகுறை மனதோடு தலையை உருட்டினாள்.

இருவரும் அவனை ரெஸ்ட் எடுக்க சொல்லிவிட்டு நர்ஸிடமும் பார்த்துக்க அறிவுறுத்திவிட்டு இருவரும் வீட்டை அடைய எல்லோரும் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தார்கள்.

தங்கள் அறைக்கு சென்ற தம்பதிகளுக்கு குழப்பத்திலும், நெஞ்சில் விளைந்திருந்த கேள்விகளுக்கும் பதில் தெரியாததால் சற்று நேரம் அதனுடன் போராடி ஒரு வழியாக கண்ணயர்ந்தார்கள்.

அடுத்த நாள் வழக்கம் போல எழுந்து கவலை தோய்ந்த முகத்துடன் குளிக்க சென்றவளை கைபிடித்து நிறுத்தினான்.

"இப்போதைக்கு மிஷேல் விஷயம் வீட்டுக்கு தெரிய வேண்டாம் ஜானு, விபத்து பற்றி தெரிந்தால் எல்லோரும் பதறி ஹாஸ்பிடலுக்கு கிளம்பிடுவாங்க. அப்புறம் செரீனாவின் நிச்சயம் நின்னுடும். நோ அப்படி நடந்திடவே கூடாது. முதலில் எல்லாம் நல்லபடியா நடக்கட்டும். அப்புறம் சொல்லிக்கலாம்..." என சம்மதமாக தலையை உருட்டிவிட்டு செல்ல சித்தார்த் ஒரு பெருமூச்சை விடுத்தான்.
 

kothaisuresh

Well-known member
Member
அப்போ அந்த வீட்டுக்கும் மிஷேல் ஜனனிக்கும் ஏதோ தொடர்பு இருக்கு ,
 

Latest profile posts

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்😍

வெய்யோனின் தண்மதி அவள் 25😎👇

ஓம் சாயிராம்
எபிசோடை படித்து மகிழுங்கள்; பிடித்திருந்தால் கதையை தொடர்ந்து படியுங்கள்; பிரியமுடன் உங்கள் கருத்துக்களை அன்புடன் பகிருங்கள்.
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்😍

வெய்யோனின் தண்மதி அவள் 24😎👇

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்😍

வெய்யோனின் தண்மதி அவள் 23😎👇

மக்களே!!!
"நான் தொலைத்த நாட்களெல்லாம் மறுபடியும் மலருமா..!!!"
முப்பத்திரண்டாவது அத்தியாயம் பதிவிட்டிருக்கேன்... படிச்சிட்டு உங்க கருத்த சொல்லுங்க..☺️☺️☺️

New Episodes Thread

Top Bottom