3.மனம் போல் மாங்கல்யம்

Arthi manu

✍️
Writer
3.மனம் போல் மாங்கல்யம்


அமுதா சாலையை கடக்க முற்பட்ட போது , ஒரு நாய்க்குட்டி அவளை நோக்கி வந்தது.வெள்ளையாய் குட்டை கால்கள் மற்றும் பளபளப்பான ரோமங்கள் உடன் அழகாக தான் இருந்தது; ஆனால் அவளுக்கு சின்ன வயதிலிருந்தே நாய் என்றால் கொஞ்சம் பயம்; அதுவும் அவளது ஒன்பதாம் வகுப்பில் ஒரு முறை நாய் கடித்து பல ஊசிகளை இனாமாக பெற்ற பின் அவளுக்கு நாய் என்றால் மரணபயம்.இப்போதும் பயமிகுதியில் ஓடியவள் அவன் மீது மோதி விட்டாள்.சாலையில் போக்குவரத்து குறைவாக இருந்தது இவளது நல்ல நேரம்.
இவள் மோதியதில் அவன் கைப்பேசி கீழே விழுந்ததால்' யூ இடியட்' என்ற பாராட்டை பெற்று கொண்டாள்; மேலும் திட்ட தொடங்கியவன் அவள் பயந்த முகத்தை பார்த்து நிறுத்திக்கொண்டான்.
அவன் கோபத்தை கூட கவனிக்காமல் விடாமல் வந்த நாய்க்குட்டியை பார்த்து இவள் அவன் முதுகின் பின்னே ஒளிந்து கொண்ட விதம் அவனை சிரிக்க தூண்டியது; அவளது அந்த செய்கை அவனை ஈர்த்தது.அந்த நாய்க்குட்டியும் விடாகண்டனாய் அவளுடன் ஓடிப்பிடித்து விளையாடி தான் தீருவேன் என்று அடம்பிடித்துக் கெண்டிருந்தது. செல்ல பிள்ளை போல் நிற்கும் அதனையும் விரட்ட முடியாமல் , சிறு குழந்தை போல் நடக்கும் இவளிடமும் என்ன சொல்வது என தெரியாமல் முழித்து கொண்டிருந்தான்.

நல்லவேளையாக நாய்க்குட்டியின் உரிமையாளர் வந்து அதை தூக்கி செல்ல அவள் மறைவிடத்தில் இருந்து வெளியே வந்தாள்; சிறிது நேரம் நில்லாமல் சிரித்தவன், அவள் முகம் பார்த்து உன் பெயர் என்ன என்று கேட்டான். மீன் போன்ற விழிகளை நேராக நோக்கி அவன் வினவிய விதம் அவன் கண்ணியத்தை பறைசாற்றியது; காற்றுக்கு வலிக்குமோ என்பது போல் மெல்லிய குரலில் ' அமுதா' என்றாள். " நல்ல பேர்; உனக்கு இந்த ஊர் தானா ? " என்றான் . " இல்லை. கோவையில் இருந்து வந்திருக்கிறேன்" என்றாள் மண்ணை பார்த்தப் படியே.
அவன் ஏதோ கேட்க வரும் போது " சார் நான் போகிறேன்; தோழிகள் தேடுவார்கள்" . என்ன தான் அமுதாவின் வகுப்பில் ஆண்கள் இருந்தாலும்,அவள் அவர்களுடன் நட்பாக பழகினாலும் ஏனோ அவளால் இவனிடம் இயல்பாக பேச இயலவில்லை; முதல் சந்திப்பிலே இவனால் அவள் மனது சலனம் அடைந்திருந்தது.

சின்ன மான்குட்டி போல் நடந்து சென்று கொண்டிருந்த அவளை ரசித்தான். அவள் கால் பகுதியை பார்த்தவன்
" ஏ பொண்ணு கொஞ்சம் நில்லு ; உன் கால்ல சிராய்த்திருக்கிறது பார்" என்று குரல் கொடுத்தான்.
அப்போது தான் தன் பாதத்தை கவனித்தாள்; கொஞ்ச தொலைவு மட்டுமே மெதுவாக தான் ஓடியிருந்தாள்.ஆனால் இசகு பிசகாய் ஓடியதில் பாத ஓரம் தேய்ந்திருந்தது.மிக லேசாக இரத்தம் கூட வந்திருந்தது‌. அசையாமல் பதுமை போல் உதட்டை எழிலாக கடித்த வண்ணம் நின்று கொண்டிருந்தவளை நோக்கி புன்னகைத்து விட்டு தன் காரின் முன்பக்க கதவை திறந்தான்.
அங்கே இருந்த பெட்டியிலிருந்து டெட்டால் , பஞ்சு , பேன்ட் எய்டு முதலியவற்றை எடுத்து வந்தான். " சின்ன காயம்; இதற்கு போய் ஏன் இதெல்லாம்" என்று மறுத்தாள். " காயம் சிறிது தான் ; ஆனால் இதன் வழியே கிருமிகள் , மண், தூசு புகுந்தால் பரவாயில்லையா? " என வினவியவன் , அவள் முக பாவத்தை நோக்கிய பின் " நீங்கள் இப்படியெல்லாம் சொன்னால் ஒரு மருத்துவனான எனக்கு எப்படி வேலை இருக்கும் " என்று நகைச்சுவையாய் பேச்சை மாற்றி அவள் காயத்தை சுத்தம் செய்து பேன்ட் எய்ட் போட்டான்.
அவன் பாதத்தை பிடித்த போது திருமண வைபவத்தின் போது அவன் தன் காலில் இதே போஸில் மெட்டி இடுவது போல் கற்பனை விரிய தன் முட்டாள் தனத்தை நொந்து கொண்டு தலையை சிலுப்பிக் கொண்டாள். " என்ன மந்திரித்த கோழி போல் தலையை ஆட்டுகிறாய்; சரி விரைவாக உன் தோழிகளிடம் சேர்ந்து கொள்.எனக்கு வேலை இருக்கிறது.வருகிறேன்" என அவன் விடைபெற்று நகரும் முன் திடீரென நான்கைந்து பேர்கள் அவர்களை சூழ்ந்து
கொண்டனர்.


வைகை எக்ஸ்பிரஸ் போல் ஓடி கொண்டிருந்த அமுதாவின் நினைவோட்டத்தை அக்கா என்ற அனுவின் குரல் ப்ரேக் போட்டு நிறுத்தியது. " அக்கா எத்தனை முறை கூப்பிடுறேன்.ஹான் அதுக்குள்ள கற்பனையில் மாமா வோட ரொமான்ஸ் ஆ நடத்து நடத்து " என்று கேலி செய்தாள், அனு. " அய்யோ அப்படி இல்லை அனு" என்ற அமுதாவின் வார்த்தைகளை அவள் நம்புவதாக இல்லை. " ஆனாலும் மாமா கிரேட் அக்கா.பெண் பார்க்க வரும் போது எல்லாரும் வழக்கமாக வீட்டிற்கு போய் தகவல் சொல்கிறோம் என்பார்கள் .மாமா என்னடா ன்னா எல்லார் முன்னிலையிலும் அமுதாவை எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது.அவளை மணப்பதில் பரிபூரண சம்மதம். இந்த பதிலுக்காக உங்களை காக்க வைக்க விரும்பவில்லை என சொன்னாரே. செம அக்கா" என அனு வாயளக்க அமுதாவிற்கு சலிப்பாய் வந்தது; ஏற்கனவே அவன் தன்னை பிடித்திருக்கு என சொன்னதற்கு காரணம் புரியாமல் குழம்பி கொண்டிருந்தாள்; ஏனெனில் கார்த்திகேயன் உடனான கடைசி சந்திப்பில் இருவர் மனதிலும் எஞ்சியது மனக்கசப்பு மட்டும் தான்.விசயம் புரியாமல் அனு வேறு
" அன்றைக்கு நான் மட்டும் நீயா இருந்திருந்தால் மாமா அப்படி சொன்னப்ப அவர் கண்ணை பார்த்து எனக்கும் உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு ன்னு சொல்லியிருப்பேன்" என்று அமுதாவை எரிச்சல் படுத்தினாள் அனு.
" நிறுத்து அனு. வரவர வாய் நீளுது உனக்கு" என அமுதா அதட்டியவுடன் " சரியான சாம்பார் சாதம் அக்கா நீ " என கன்னத்தில் கிள்ளி விட்டு ஓடிய தங்கையை பார்த்து செய்வதறியாது நின்றாள், அமுதா

இரண்டு நாட்கள் கழித்து அமுதாவின் அத்தை விஜயா வந்திருந்தாள்; விஜயா சிவக்குமாரின் ஒன்று விட்ட தங்கை; கோவை உக்கடத்தில் வசிக்கிறார். " என்ன அண்ணி, அமுதாவிற்கு கல்யாணம் பேசியிருக்கீங்க போல‌" என ஜெயந்தி யிடம் வினவ ,
" பெண் பார்த்து விட்டு போய் இருக்கிறார்கள், ஆனால் அவர்கள் அனைவருக்கும் அமுதாவை மிகவும் பிடித்து இருக்கிறது.அதனால் வரும் ஞாயிறன்று ஊட்டியில் அவர்கள் வீட்டில் நிச்சயம் வைத்து கொள்ளலாம் என்று கூறியிருக்கிறார்கள்" என பதிலளித்தார்.
" ஞாயிறு ன்னா இன்னும் நாலு நாள் தான அண்ணி இருக்கு.ரொம்ப அவசரமாக பண்ற மாதிரி இருக்கு அண்ணி. நன்றாக விசாரித்தீர்களா அண்ணி " - விஜயா
" அதெல்லாம் ஒன்னும் இல்லை விஜி ரொம்ப நல்லவங்களா தெரிகிறது விஜி.வரதட்சணை வாங்க கூடாதுன்னு கொள்கை வைத்து இருக்கிறார்கள் அண்ணி"
" அப்படி என்றால் ரொம்ப சந்தோஷம் அண்ணி" - விஜயா
" அப்புறம் விஜி .பையன், அண்ணா வை கூட்டிட்டு சரியாக வந்திரு என்ன" - ஜெயந்தி

இவர்கள் உரையாடலை கேட்ட பின்பே அமுதாவுக்கு தன் நிலையின் தீவிரம் உரைத்தது.அய்யோ எப்படியாவது திருமணத்தை நிறுத்த வேண்டுமே.முதலில்
அவனிடம் பேசி தன் மறுப்பை தெரிவிப்போம் என முடிவுக்கு வந்தாள். அவனது நம்பர் தன் கைப்பேசியில் இல்லையே என தவித்தவள், தந்தை போனிலிருந்து அவனை அழைத்தாள்.
நீதானே நீதானே என்ற காலர் ட்யூன் நீளமாய் சென்று அவள் பொறுமையை சோதித்தது.
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
‌ - தொடரும்​
 

Latest profile posts

ஹாய் ஃப்ரெண்ட்ஸ் 😍
அலாதி தேடலாய் நீ அத்தியாயம் 9😎👇
ஹாய் பிரெண்ட்ஸ்... "வழி மாறிய பயணம்" கதையின் ஒன்பதாவது அத்தியாயம்👇👇👇
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் 😍
அலாதி தேடலாய் நீ அத்தியாயம் 8 😎👇
%B8%8F.1253/
ஹாய் பிரெண்ட்ஸ்... "வழி மாறிய பயணம்" கதையின் எட்டாதவது அத்தியாயம்👇👇👇
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் 🤩
அலாதி தேடலாய் நீ அத்தியாயம் 7 😎👇

New Episodes Thread

Top Bottom