வழி மாறிய பயணம் 5

Barkkavi

✍️
Writer
ஹாய் பிரெண்ட்ஸ்...😍😍😍 "வழி மாறிய பயணம்" கதையின் அடுத்த அத்தியாயம் இதோ... படிச்சுட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க...😁😁😁


eiK4J3P42044.jpg


பயணம் 5அந்த விடுதி வாயிலை அடைத்தவாறு நின்றிருந்த அந்த மூன்று காவலர்களைக் கண்ட தேஜுவும் பாலாவும் அதிர, அந்த காவலர் கூறியதைக் கேட்டு தேஜு பாலாவை, “இதுக்கு தான் சீக்கிரம் கிளம்புன்னு சொன்னேன்.” என்று அடிக்குரலில் திட்டினாள்.பாலாவோ அவள் கூறுவதைக் கவனிக்காமல், அந்த காவலரை குறுகுறுவென்று பார்த்துக் கொண்டிருந்தான். காதுவரை நீண்டிருந்த மீசையும் அலட்சியமான உடல்மொழியும் அவரை பயங்கரமாக காட்ட, அதற்கு நேர்மாறாக இருந்த அவரின் தொப்பையைக் கண்டவனிற்கு சிரிப்பு வர, அதுவரை அவனை பார்த்துக் கொண்டிருந்த தேஜு அவனின் தோளில் இடித்து முறைத்தாள்.அதில் சிரிப்பை கட்டுக்குள் கொண்டு வந்தவன், அவரைக் கண்டால் மீண்டும் சிரித்து விடுவானோ என்று பயந்து அவரை பார்க்காமல் கீழே குனிந்து கொண்டான்.இவர்கள் இருவரும் முணுமுணுப்பது கேட்கவில்லை என்றாலும், பாலா அவரை பார்த்து சிரித்ததைக் கண்டவர், அருகிலிருந்த ஏட்டிடம், “என்னய்யா அந்த பையன் என்னை பார்த்து கேலியா சிரிக்கிற மாதிரி இருக்கு..?” என்று கேட்க, இவருடன் கோர்த்து விட்ட விதியை சபித்துக் கொண்டிருந்த அந்த ஏட்டோ, “அதெல்லாம் இல்ல சார். நீங்க பாக்குறதுக்கு அப்படியே ‘சிங்கம்’ சூர்யா மாதிரியே இருக்கீங்க சார். அதுக்காக தான வெறும் துரைன்னு இருந்த உங்க பேர துரைசிங்கம்னு மாத்திக்கிட்டீங்க.” என்று பொய்யென்று தெரிந்தும் வேறு வழியில்லாமல் கூறினார்.ஏட்டு கூறியதைக் கேட்ட அந்த துரைசிங்கம் (!!!) மீசையை நீவிவிட்டவாறே ‘கம்பீரமாக’ அந்த விடுதிக்குள் நுழைந்தார்.பாலா மற்றும் தேஜு தோளிலும் கையிலும் பையை சுமந்து கொண்டிருப்பதை பார்த்துக் கொண்டே வரவேற்பில் நின்ற பணியாளனிடம், “இங்க தங்கிருக்கவங்க எல்லாரையும் நான் விசாரிக்கணும்.” என்றவர், பின் பணியாளர்களின் விபரங்களையும் கேட்டுக் கொண்டிருந்தார்.இங்கு தேஜுவோ புலம்பிக் கொண்டிருந்தாள். “போச்சு… இனி விசாரிக்க எவ்ளோ நேரம் ஆகுமோ..!” என்று வாய்விட்டே புலம்பியவள், இடையிடையே ‘எல்லாம் உன்னால் தான்…’ என்று பாலாவை திட்டவும் மறக்கவில்லை.அவளின் புலம்பல்களை தாங்க முடியாத பாலா, நேராக துரையிடம் சென்று, “சார், நீங்க சீக்கிரமா விசாரிச்சீங்கன்னா நாங்க எங்க சொந்த வேலையை பார்க்க கிளம்புவோம்.” என்றான்.நம் துரைசிங்கமோ, பாலாவையும் தேஜுவையும் பார்த்தவர், “யோவ் ஏட்டு, இவங்க ரெண்டு பேரையும் கடைசியா விசாரணைக்கு கூப்பிடு…” என்று கூறிவிட்டு மீண்டும் அந்த பணியாளனிடம் பேச ஆரம்பித்தார்.அவர் கூறியதைக் கேட்ட ஏட்டு பாலாவிடம் மெல்லிய குரலில், “நீ எதுவும் சொல்லாம இருந்திருந்தீன்னா அந்த ஆளே சும்மா பேருக்கு விசாரிச்சுட்டு விட்டிருப்பாரு. இப்படி தேவையில்லாம வாயக் கொடுத்து மாட்டிக்கிட்டீயே தம்பி…” என்றார்.பாலாவும் அப்போது அதை தான் சிந்தித்துக் கொண்டிருந்தான். ‘கொஞ்ச நேரம் அமைதியா இருந்துருக்கலாமோ. இப்போ அந்த ஃபயர் என்ஜின்ன எப்படி சமாளிக்க போறேன்னு தெரியலையே!’ என்று மனதிற்குள் புலம்பியவாறே தேஜுவை நோக்கித் திரும்ப, அங்கு பாலாவின் எதிர்பார்ப்பை ஏமாற்றாதவாறு கண்களில் கனலுடன் நின்றிருந்தாள் கண்ணியவள்.வழக்கம் போல அவளைக் கண்டு இளித்தவன், சற்று தள்ளியே நின்று கொண்டான். இன்னும் சிறிது நேரம் விட்டிருந்தால் கண்களாலேயே எரித்திருப்பாளோ, அவனைக் காக்கவே அவளின் அலைபேசி ஒலித்தது.பாலாவைத் திட்டிக் கொண்டே அழைப்பை ஏற்றவள்,“ஹலோ அம்மம்மா…” என்று பேச ஆரம்பித்தாள்.“இல்ல அம்மம்மா. இன்னும் கிளம்பல. இப்போ இந்த பக்கம் பஸ் வராதாம். எப்படியும் பத்து மணிக்கு மேல ஆகிடும்னு நினைக்குறேன். நீங்க எனக்காக வெயிட் பண்ணாம சாப்பிடுங்க, அம்மம்மா. நான் பஸ் ஏறிட்டு உங்களுக்கு கூப்பிடுறேன்.”மறுமுனையில் என்ன சொன்னாரோ, பாலாவை முறைத்து விட்டு, “அதெல்லாம் நான் பார்த்துக்குறேன், அம்மம்மா…” என்று கூறி அழைப்பைத் துண்டித்தாள்.தேஜு அலைபேசியில் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்ட பாலா, ‘பாட்டி வீட்டுக்கு போக தான் இவ்ளோ அவசரமா..? இன்னைக்கு ஈவ்னிங்குள்ள பொருளை சேர்க்க வேண்டிய நானே பதறாம இருக்கேன்… இவளுக்கு என்ன வந்துச்சு. பேசிட்டு இருக்குறப்போ நம்மள வேற முறைக்குறது!’ என்று பொறுமியவனிற்கு அப்போது தான் விக்ரமிற்கு இன்னும் சொல்லாமல் இருப்பது நினைவு வந்தது.உடனே நண்பனை அலைபேசியில் அழைத்தான். இரவும் பாலாவின் உபயத்தால் தூக்கம் கலைந்த விக்ரம் வெகு நேரம் கழித்தே உறங்கியிருந்தான். பாவம் அவனிற்கு அன்றைய நாள் நிம்மதியான உறக்கம் கிடையாது என்பது தான் விதி போலும்!அலைபேசியை ஓசையின்றி வைத்திருந்தாலும், பாலாவின் அழைப்பால் உண்டான அதிர்வுகளின் மூலம் முழிப்பு வர, அவனின் பெயரைக் கண்டவன், காலையிலேயே சில ‘நல்ல’ வார்த்தைகளால் அவனை அர்ச்சித்த பின், அழைப்பை ஏற்றான்.அழைப்பை ஏற்றதும் பாலா கூறுவதைக் கூட கேளாமல், “ஏன் டா போன் பண்ணி தூக்கத்தை கெடுக்கிற… நேத்து தான் தூங்க விடாம பேசிட்டு இருந்தன்னா, இப்போ காலங்கார்த்தாலேயே போன் பண்ணிருக்க.” என்று புலம்ப, பாலாவோ, “நீ உன் ஆளைப் பார்க்க போறேன்னு சொன்னதுனால தான டா இந்த வேலைக்கே ஒத்துகிட்டேன். உனக்காக தான டா, அந்த டப்பா பஸ்ல வர சம்மதிச்சேன். அந்த பஸ்ல வந்ததுனால தான் நேத்து நடு ரோட்டுல நின்னேன். இப்போ கூட என்னை ஊருக்கு போக விடாம இந்த போலீஸ் விசாரணைக்கு கூப்பிட்டு தொல்லை பண்றாங்க… இதெல்லாம் யாரால… எல்லாம் உன்னால தான் டா பரதேசி…” என்று முதலில் பாவமாக பேசியவன், முடிக்கும் போது கோபத்துடன் முடித்திருந்தான்.பாலாவின் குரல் வேறு யாருக்கும் கேட்கவில்லை என்றாலும், அருகிலிருந்த தேஜுவிற்கு நன்றாக கேட்டது. இதுவரை அவனின் கோமாளித்தனத்தையும் பாவ முகத்தையும் மட்டுமே கண்டவளிற்கு, அவனின் கோபம் சற்று அதிர்வை உண்டாக்கியிருந்தது.விக்ரமோ வாயில் கொசு போனால் கூட தெரியாதவனாக வாயைப் பிளந்து கொண்டு நண்பனின் கோபத்தை உள்வாங்கிக் கொள்ள முயற்சித்தான்.“டேய் மச்சான்…” – அதிர்ச்சியில் விக்ரமின் குரல் நடுங்க, “என்னடா மச்சான்.. நொச்சான்னுட்டு… நல்லா கேட்டுக்கோ, இங்க ஒரு பிரச்சனை ஆகிடுச்சு. நான் கிளம்புறதுக்கு மதியம் ஆகிடும். ஈவினிங் தான் டெலிவரி பண்ண முடியும்னு பார்ட்டிக்கு போன் பண்ணி சொல்லிடு.” என்று எரிச்சலான குரலில் கூறியவன், ஓரக் கண்ணில் தேஜுவைக் கண்டான். அவள் இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீளாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.‘ஷப்பா இவளோட திட்டுலயிருந்து தப்பிக்க என்ன ஆக்டிங் விட வேண்டியதா இருக்கு… முட்ட கண்ண வச்சுக்கிட்டு எப்படி முழுச்சுக்கிட்டு இருக்கா… ஹ்ம்ம்... இவ்ளோ நேரம் காமெடியன் மாதிரி பார்த்தேல, இப்போ கொஞ்ச நேரத்துக்கு டெரர் ஹீரோ மாதிரி பாரு…’ என்று மனதிற்குள் கூறிக் கொண்டவன், தேஜுவைப் பார்த்து புருவம் உயர்த்தி ‘என்ன’ என்று கேட்க, அவளோ மறுபக்கம் திரும்பிக் கொண்டாள்.இப்படியே ஒருவரை ஒருவர் வெறுப்பேற்றி நேரத்தைக் கழிக்க, மணியும் யாருக்காகவும் காத்திருக்காமல் பத்தை தொட்டது. நம் துரைசிங்கமோ விசாரணைக்கு அவ்விடுதியிலேயே ஒரு அறையை குத்தகைக்கு எடுத்ததைப் போல, அமர்ந்து கொண்டு அவ்விடுதியில் தங்கியிருந்தவர்கள், பணியாளர்கள் அனைவரையும் விசாரித்துக் கொண்டிருந்தார்.அவர் சொன்னதைப் போல எல்லாரையும் விசாரித்து முடித்த பின்னர் தான் இவர்கள் இருவரையும் அழைத்தார்.பாலாவும் தேஜுவும் எரிச்சலை முகத்தில் காண்பித்தவாறே அறைக்குள் நுழைய, இவர்களைக் கண்டதும், “யோவ் ஏட்டு, இப்போ சாப்பிட்ட பொங்கல் டேஸ்ட் நல்லா இருந்துச்சுலய்யா… இதுவரைக்கும் இப்படி ஒரு பொங்கலை சாப்பிட்டதே இல்ல…” என்று ரசனையுடன் கூறினார் துரைசிங்கம்.அவரின் ரசனையைக் கேட்டு பாலாவிற்கும் தேஜுவிற்கும் எரிச்சல் இன்னும் கூடியது. அவர்கள் இருவரும் இன்னும் எதுவும் சாப்பிட வில்லை. சாப்பிட போகும் நேரத்தில் விசாரணை என்று கூப்பிட்டு விடுவார்களோ என்று எண்ணியே பசியையும் அடக்கியிருந்தனர். இப்போது மட்டும் வேறு சூழ்நிலையாய் இருந்திருந்தால், அந்த துரையை வாயில் நுரை வருமளவிற்கு அடித்திருப்பான் பாலா. ஆனால் சூழ்நிலை அவனின் கைகளை கட்டிப்போட்டு விட்டது!அதுவரை ஏட்டிடம் நக்கல் பேசிய துரை அப்போது தான் இவர்கள் வந்ததை கவனிப்பது போல, “அடடா ரொம்ப லேட்டாகிடுச்சோ… உங்களுக்கு சொந்த வேலை இருக்குன்னு வேற சொன்னீங்களே…” என்று கிண்டல் செய்ய, மிகவும் முயன்றே வாயை அடக்கியிருந்தான் பாலா.இவர்களை பேசவிட்டால் பிரச்சனை தான் ஆகும் என்பதை உணர்ந்த தேஜு, “சார் வெளிய நடந்ததுக்கு சாரி. அவன் ஒரு லூசு அதான் அப்படி பிஹேவ் பண்ணிட்டான். நாங்க நேத்தே ஊருக்கு போயிருக்கணும்… சோ ப்ளீஸ் சார்…” என்று கெஞ்சலில் இறங்கினாள்.‘எதே லூசா…’ என்று பார்த்த பாலாவை கைபிடித்து அடக்கியவள், பாவமாக துரையை நோக்க, அவளின் பாவனையில் மலை இறங்கிய துரையும் அவரருகே நின்றிருந்த ஏட்டிடம், “அவங்க பையை செக் பண்ணுய்யா…” என்றார்.அதுவரை தன் கைபிடித்திருந்த அவளின் ஸ்பரிசத்தை மோன நிலையில் ரசித்துக் கொண்டிருந்த பாலா, “என்னது பையை செக் பண்ணனுமா..? அதெல்லாம் முடியாது.” என்று கத்தினான்.அங்கிருந்த அனைவரும் அவனையே நோக்க, துரையோ இவன் தான் கொலை முயற்சி செய்தவன் என்று முடிவே செய்து விட்டார்.“அப்போ நீ தான அவரை கொலை செய்ய முயற்சி பண்ண… ஒழுங்கா உண்மையை ஒத்துக்கோ.” என்றார் துரை.“நான் எதுக்கு சார் கொலை பண்ணனும்..? எனக்கு அந்த ஆளை தெரியவே தெரியாது.” என்று மறுத்தான் பாலா.“அப்போ எதுக்கு உன் பையை செக் பண்ண வேணாம்னு சொல்ற. கொலை முயற்சி நடந்த ரூமுக்கு பக்கத்து ரூம்ல வேற இருந்துருக்க. சோ அவரை நீ கொலை பண்ண நெறைய சான்ஸ் இருக்கு…”“சார், இப்படி தான் விசாரிப்பீங்களா… பக்கத்து ரூம்ல இருந்தா கொலை பண்ணுவாங்களா… இதென்ன அநியாயமாக இருக்கு! போய் ஹோட்டல் சிசிடிவிய பாருங்க சார். விட்டா எனக்கு ‘கத்திகுத்து’ பாலான்னு பேரே வச்சுடுவீங்க போல…”“ஹோட்டல்ல சிசிடிவி இல்லன்னு தெரிஞ்சு தான தைரியமா செக் பண்ண சொல்ற…” என்று அவர் கேட்டதும், ‘இது வேறயா…’ என்று தலையிலடித்துக் கொண்டான்.“சார் இப்போ என்ன என் பையை செக் பண்ணனும் அதான… நானே எடுத்து காட்டுறேன்…” என்றவன், தன் பையைத் திறந்தான்.அந்த மூன்று காவலரும் சற்று எச்சரிக்கையுடனே பாலாவைப் பார்த்திருக்க, அவனோ உள்ளிருந்து செவ்வக வடிவிலிருந்த அட்டைப்பெட்டியை வெளியில் எடுத்தான்.“சார் உள்ளுக்குள்ள பாம் மாதிரி ஏதாவது வச்சுருப்பானோ..?” என்று ஏட்டு துரையின் காதில் கேட்க, “சும்மா இருய்யா. இருக்குற டென்ஷன் பத்தாதுன்னு நீ வேற.” என்று கூறிவிட்டு அந்த அட்டைப்பெட்டியில் கவனமானார் துரை.பாலாவும் அந்த அட்டைப்பெட்டியை பிரிக்க, உள்ளுக்குள் பல அடுக்குகளாக தாள்கள் சுற்றியிருக்க, மெதுவாக அனைத்தையும் பிரித்தான். அவன் ஒவ்வொரு தாளையும் பிரிக்க பிரிக்க, மற்றவர்களுக்கு பதட்டம் எகிறியது.அனைத்தையும் பிரித்தவன், அதை அவர்களிடம் காட்டி, “இது தான் என் பைகுள்ள இருந்துச்சு.” என்றான்.அவன் காட்டியது, வெண்ணெய்யை வாயில் வைத்து, கண்களில் குறும்புடன் இதழ்களில் சிரிப்புடனும் இருந்த குட்டி கிருஷ்ணனின் ஓவியம் தான். கண்ணாடியில் வரையப்பட்டிருந்த ஓவியத்தைக் காட்டியவனை, காவலர்கள் மூவரும் முறைத்தனர்.“இதை காட்டவா இவ்ளோ பில்ட்-அப்பு…” என்று எரிச்சலுடன் கேட்டார் துரைசிங்கம்.இவ்வளவு நேரம் தன்னை எரிச்சல் படுத்தியவரை பழி வாங்கிவிட்ட திருப்தியில், “ஆமா சார். இதை சேஃபா டெலிவரி பண்ணனும்னு இத்தனை மெனக்கெட்டு பேக்கிங் பண்ணிருக்கோம். இப்போ பாருங்க எல்லாத்தையும் திரும்ப நான் பேக் பண்ணனும்…” என்று அலுத்துக் கொண்டான்.இங்கு இவ்வளவு அலப்பறைகள் நடக்க, அந்த அறையிலிருந்த ஒரு ஜீவனோ இதிலெல்லாம் கலந்து கொள்ளாமல் பயத்துடன் நின்றிருந்தாள். மற்ற நால்வரும் அவளைக் கவனிக்கவே இல்லை.இவ்வளவு நேரம் தைரியமாக இருந்த தேஜுவின் திடீர் பயத்திற்கான காரணம் என்னவாக இருக்கும்…


தொடர்ந்து பயணிப்போம்...
 

Latest profile posts

ஹாய் பிரெண்ட்ஸ்... "வழி மாறிய பயணம்" கதையின் பத்தாவது அத்தியாயம்👇👇👇
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் 😍
அலாதி தேடலாய் நீ அத்தியாயம் 9😎👇
ஹாய் பிரெண்ட்ஸ்... "வழி மாறிய பயணம்" கதையின் ஒன்பதாவது அத்தியாயம்👇👇👇
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் 😍
அலாதி தேடலாய் நீ அத்தியாயம் 8 😎👇
%B8%8F.1253/
ஹாய் பிரெண்ட்ஸ்... "வழி மாறிய பயணம்" கதையின் எட்டாதவது அத்தியாயம்👇👇👇

New Episodes Thread

Top Bottom