• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

வழி மாறிய பயணம் 3

Barkkavi

✍️
Writer
ஹாய் பிரெண்ட்ஸ்...😍😍😍 "வழி மாறிய பயணம்" கதையின் மூன்றாம் அத்தியாயம் இதோ... படிச்சுட்டு உங்க கருத்துக்களை பகிர்ந்துக்கோங்க...😁😁😁


eiOI2EA86243.jpg


பயணம் 3



சுற்றிலும் புதர் மண்டிக் கிடக்க, அதற்கு நடுவில் அழகாக அமைந்திருந்தது அந்த விடுதி. சிறிதாகவோ பெரிதாகவோ அல்லாமல் மத்திம அளவில், அவ்விடத்தில் மட்டும் இருளைப் போக்கியவாறு பல வண்ண ஒளிக்கற்றைகளை வெளியிடும் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு அழகாகவே இருந்தது அந்த விடுதி.



“ஹ்ம்ம் நாட் பேட்.” என்றவாறே உள்ளே நுழைந்தான் பாலா. அவனைப் பின் தொடர்ந்த தேஜுவிற்கும் அதே எண்ணமே. நடு வழியில் இருக்கும் விடுதி எப்படி இருக்குமோ என்று பயந்து கொண்டே வந்தவள், அந்த விடுதியின் முகப்பைக் கண்டதும் சிறிது ஆசுவாசம் அடைந்தாள்.



“இது தான் நான் சொன்ன ஹோட்டல். நீங்க ரெண்டு பேரும் உள்ள போங்க. நாங்க ஒரு தடவ பஸ்ஸோட நிலைமைய பார்த்துட்டு எங்க ஆபிஸுக்கு சொல்லிட்டு வரோம். ஹான் அப்பறம் நாளைக்கு காலைல ஆறரைக்கு ஒரு வண்டி இந்த பக்கம் போகும்.” என்று அவர்களுக்கான தகவலை கூறிவிட்டு சென்றனர் அந்த பேருந்தின் நடத்துநரும் ஓட்டுநரும்.



பாலாவும் தேஜுவும் வரவேற்பிற்கு சென்றனர். வரவேற்பில் இருந்த பணியாளனிடம் அறை பற்றி வினவினான் பாலா.



அவனோ இருவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு, “சிங்கிள் ரூமா சார்..?” என்றான்.



அதில் பதறிய பாலா, தேஜுவைப் பார்க்க, அவன் எதிர்பார்த்தது போலவே பாலாவை கண்களால் எரித்துக் கொண்டிருந்தாள்.



“என்னை இன்னைக்கு அடி வாங்க வைக்காம விட மாட்டீங்களா டா…” என்று மெல்லிய குரலில் புலம்பிய பாலா அவனிடம், “ரெண்டு ரூம் வேணும்…” என்றான்.



மீண்டும் அவர்களிருவரின் முகத்தைக் கண்டவன், “அஞ்சு நிமிஷம் வெய்ட் பண்ணுங்க சார். ரூம் இப்போ தான் காலி ஆச்சு. அத சுத்தம் செஞ்சுட்டு இருக்காங்க.” என்றான் அவன்.



“ம்ம்ம் சரி…” என்று கூறியவன் சற்று தள்ளி போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்தான்.



அப்போதும் அவனை முறைத்து பார்த்துக் கொண்டே வந்த தேஜு அவன் அருகில் அமராமல், ஒரு இருக்கை விட்டு அமர்ந்தாள்.



“ஹூம் சொன்னது அவன், முறைக்குறது மட்டும் என்னையா… என்ன கொடுமை இது கடவுளே…” என்று பாலா முணுமுணுக்க, “லூசு மாதிரி ரூம்னு மொட்டையா சொன்னா, அவன் ஒரு ரூம்னு தான நினைப்பான்.” என்று அவளும் அடிக்குரலில் பேசினாள்.



பாலாவோ அவளின் பேச்சைக் கேட்டதும் அவனிற்கு பின் பக்கம் எதையோ தேட, புருவம் சுருக்கி பார்த்தாள் தேஜு. பின் அவனே, “ஓ என்கிட்ட தான் பேசுனியா..?” என்று கிண்டல் செய்ய, வாய்க்குள் ஏதோ முணுமுணுத்தவாறு திரும்பி விட்டாள் தேஜு.



ஒரு பெருமூச்சுடன் கண்களை சுழற்றியவனின் பார்வையில் பட்டாள் அந்த பச்சைக்கிளி. கிளி பச்சை நிற சேலையும் தூக்கிப் போட்ட கொண்டையுமே, அவள் இந்த விடுதியில் வேலை செய்யும் பெண் என்பதைக் கூற, அவள் அணிந்திருந்த பெயர் வில்லையில் அவளின் பெயரைப் பார்க்க முயன்றான் பாலா.



‘மீ..னா.. ட்..சி… அட பச்சகிளி பேரு மீனாட்சியா. பாலா – மீனாட்சி அட அட பேரு பொருத்தம் கூட நல்லா இருக்கு…’ என்று மனதிற்குள் சந்தோஷித்தவன், அப்பெண்ணின் பார்வையும் தன் மேல் படிவதைக் கண்டான். ‘ஹே பாலா சிங்கிளா வந்த நீ, மிங்கில் ஆகிட்டு தான் போவ போல…’ என்று குதூகலித்தான்.



இப்போது ஓரக்கண்ணில் அப்பெண்ணைப் பார்க்க, அவளோ அருகில் வருமாறு சைகை செய்தாள்.



“அதுக்குள்ளவா… பாத்தவொடனே இப்படி மயங்குற அளவுக்கா நம்ம பெர்ஸ்னாலிட்டி இருக்கு…” என்று வாய்விட்டு கூற, அது அவனருகில் இருந்த தேஜுவிற்கும் கேட்டது.



அவளும் அவர்களின் ‘சைகை’களை கவனித்துக் கொண்டு தான் இருந்தாள். இப்போது பாலாவின் பேச்சைக் கேட்டதும், ‘சரியான லூசா இருப்பான் போல.’ என்று மனதிற்குள் கூறிக் கொண்டாள்.



அந்த மீனாட்சி மறுபடியும் அழைக்க, “இந்தா வந்துட்டேன் பச்சகிளி…” என்றவாறே பாலா எழவும், அவனைத் தாண்டி ஒருவன் கையில் குழந்தையுடன் செல்லவும் சரியாக இருந்தது.



‘என்ன இவன் நம்மள ஓவர்டேக் பண்ணிட்டு போறான்..’ என்று யோசித்தவனை அதிர்ச்சிக்குள்ளாகியது அந்த சம்பவம். அவன் சற்று முன்னர் ‘பச்சைக்கிளி’ என்று வர்ணித்த பெண், அந்த குழந்தையை வாங்கிக் கொள்ள, அக்குழந்தையும் “ம்மா..” என்று அழைத்து கட்டிக்கொண்டது.



அதைக் கண்டவனின் முகம் போன போக்கை பார்த்து சிரிப்பை கட்டுப்படுத்திக் கொண்டு அமர்ந்திருந்தாள் தேஜு.



‘ச்சே என்ன டா இது பாலாக்கு வந்த சோதனை… அச்சோ இப்படி எழுந்து நின்னுட்டு இருக்கேனே.. யாராவது பார்த்துருப்பாங்களோ…’ என்று நினைத்து சுற்றிலும் பார்த்தான்.



‘உஃப் யாரும் பாக்கல… அப்படியே போய் உட்காருவோம்…’ என்று மனதிற்குள் அவனிற்கு அவனே ஆறுதல் கூறியவன், நாற்காலியில் அமர, அப்போது தான் குனிந்திருந்த தேஜுவின் இதழ்கடையோரம் புன்னகையில் துடிப்பதைக் கண்டு, ‘ஐயோ இவ பார்த்துருப்பாளோ…’ என்று யோசித்தவன், பின் சமாளிக்கும் விதமாக, “பஸ்ல ரொம்ப நேரம் உட்கார்ந்துட்டே வந்தது கால் வலிக்குது. அதான் ஸ்ட்ரெட்ச் பண்ணிட்டு வந்தேன்…” என்றான்.



அவனை நிமிர்ந்து பார்த்தவள், ஒன்றும் கூறாமல் தன் அலைபேசியில் மூழ்கிப் போனாள்.



பாலாவையும் தேஜுவையும் அழைத்த அந்த பணியாளன், அவர்களின் பெயர் முகவரியை எழுதித் தருமாறு கேட்டான். அப்போது அந்த விடுதியினுள் இருவர் நுழைந்தனர்.



வெள்ளை வேட்டி வெள்ளை சட்டையை அணிந்திருந்தவர்கள், அந்த பிரபல கட்சியின் அடையாள சின்னத்தை சட்டைப்பையில் குத்தியிருந்தனர். கையில் அந்த கட்சியின் கொடியைப் பிடித்திருந்தனர். அவர்களின் உரையாடல்களின் மூலம், மாநாட்டில் ஓடியாடி வேலை பார்த்து அதற்கு சரியான அங்கீகாரம் கூட கிடைக்காத அடிமட்ட தொண்டர்கள் என்பது தெரிந்தது.



“கடைசி வரைக்கும் நாம இப்படியே தான் இருப்போம்னு நினைக்கிறேன், ராமசாமி.”



“அட நீ வேற ஏன்யா அதை ஞாபகப் படுத்துற. வீட்டுல பொண்டாட்டி கேவலமா பேசுற அளவுக்கு இருக்கு நம்ம பொழப்பு.”



“இந்த தடவையாச்சும் தலைவரை பார்த்து ஏதாவது பேசிடலாம்னு இருந்தா, நந்தி மாதிரி அவன் குறுக்க வந்து நிக்குறான். ஹ்ம்ம்… நேத்து வந்த பொடியன் இப்போ நம்மள ஆட்டுவிக்குறான்…”



“யோவ் வாய வச்சுக்கிட்டு சும்மா இருய்யா… எவனாவது அவன் விசுவாசி அவன்கிட்ட வத்தி வச்சுட போறான்.”



அவர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த பாலா, ‘ம்ம்ம் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பிரெச்சனை…’ என்று நினைத்தவன், ‘இராமன் ஆண்டாலும் இராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்ல’ என்ற பாடலை சீழ்க்கை அடித்துக் கொண்டிருந்தான்.



இவனின் நிலைக்கு அப்படியே எதிர்மறையாக நின்றிருந்தாள் தேஜு. அவளின் தகவல்களை எழுதிக் கொண்டிருக்கும் போது தான் அந்த புதியவர்கள் உள்ளே நுழைத்திருந்தனர். அவர்களின் வரவை உணர்ந்ததும், ஒருவித பதட்டம் அவளிற்கு தொற்றிக் கொள்ள, கைகள் லேசாக நடுங்கியது. அதற்குள் அவர்கள் இருவரும் வரவேற்பை நெருங்கி விட்டனர்.



அப்போது தான் பாலா தேஜுவைக் கண்டான். அவளின் நடுக்கத்தில் ஏதோ உணர்ந்தவன், “ஹே தேஜு ஆர் யூ ஓகே..?” என்று வினவினான்.



அவனின் பரபரப்பான குரலில், அந்த புதியவர்களும் இவர்களை நோக்கித் திரும்ப, தேஜுவோ குனிந்த தலை நிமிராமல், “ஐ’ம் ஓகே.” என்றாள்.



அவளின் இந்த மாறுபட்ட எதிர்வினையில் பாலா புருவம் சுருக்கி யோசிக்க, அந்த இருவரில் ஒருவர், “பாப்பா உங்களை நான் எங்கயோ பார்த்துருக்கேன்னு நினைக்குறேன். உங்க முகம் நல்லா பரிச்சயமா இருக்கே…” என்று தேஜுவைப் பார்த்து கூற, அதில் ஒருநொடி அதிர்ந்தவள், “இ..இல்ல நா.. நான் ஊருக்கு புதுசு…” என்று வாயில் வந்ததை உளறிவிட்டு, அந்த பணியாளனிடம் சாவியை கிட்டத்தட்ட பறித்துக் கொண்டு வேகவேகமாக சென்றாள்.



அப்படி செல்லும்போது எதிர்புறத்திலிருந்து வந்தவன் மீது மோதி விட்டாள். பதட்டத்தில், “சாரி…” என்று முணுமுணுத்துவிட்டு அவளின் அறைக்கு விரைந்தாள்.



அவளின் செய்கைகளையே பார்த்துக் கொண்டிருந்த பாலாவைக் கலைத்தது மற்ற இருவரின் பேச்சு.



“ஏன்யா சும்மா இருக்க மாட்டீயா..? யாரப் பார்த்தாலும் ‘உன்ன பார்த்த மாதிரி இருக்கு’ன்னு ஆரம்பிச்சுட வேண்டியது…” என்று சற்று முன் தேஜுவிடம் கேள்வி கேட்டவரை மற்றவர் திட்ட, “இல்லய்யா நெசமாத் தான் சொல்றேன். அந்த பாப்பாவ எங்கயோ பார்த்துருக்கேன்…” என்று யோசித்தவர், “ஹான்... ஞாபகம் வந்துடுச்சு… உனக்கு நம்ம ரவிசங்கர் தெரியும்ல… கொஞ்ச நாளைக்கு முன்னாடி வரைக்கும் நம்ம தலைவரோட வலது கையா இருந்தாரே… அவரோட ஜாடை தெரியுதுய்யா அந்த பாப்பா கிட்ட…” என்றார்.



“உனக்கு என்ன புத்தி மழுங்கிடுச்சா… அந்த மனுஷன் தான் கல்யாணமே பண்ணிக்கலையே… எப்பவும் கட்சி தலைவருன்னு சுத்திட்டு இருந்தாரு. கடைசில அவருக்கே ஆப்பு வச்சு கட்சிலயிருந்து தூக்கிட்டாங்க… ஹ்ம்ம் இது தான் நல்லதுக்கே காலம் இல்லன்னு சொல்றது… இப்போ எதுக்கு அந்த மனுஷனை இழுக்குற…”



“யோவ் எனக்கு நல்லா தெரியும்யா…” என்று அவர் ஏதோ கூறப் போக, அவரை இழுத்துக் கொண்டு போனார் மற்றொருவர்.



அவர்களின் பேச்சினைக் கவனித்த பாலா, ‘ஆத்தி இந்த தேஜு பிள்ள பெரிய இடமா இருக்குமோ..? எதுக்கும் கொஞ்சம் தள்ளியே இருப்போம்…’ என்று எண்ணிக் கொண்டான். ஆனால் விதியோ தேஜுவை பாலாவுடன் கோர்த்து விடுவதற்கான வேலைகளை ஆரம்பித்து விட்டது என்று பாலாவிற்கு தெரியாமல் போனது, அவனின் துரதிர்ஷ்டமோ!



முதல் தளத்தில் அவனுடைய அறையெண்ணை தேடிக் கொண்டிருந்தவனின் கண்கள் 32ஆம் அறையில் நின்றன. அது தான் தேஜுவின் அறை. அவள் சாவியை பிடுங்கும்போதே அதை கவனித்திருந்தான், பாலா.



‘அவ ரொம்ப பதட்டமா இருந்தாளே… கதவைத் தட்டி என்னாச்சுன்னு கேப்போமா…’ என்று யோசித்தவன், ‘அச்சோ சும்மாவே முறைப்பா… இப்போ கதவைத் தட்டுன்னா, பட்டுன்னு மூஞ்சிலேயே கதவை சாத்துனாலும் சாத்துவா…’ என்று அவளின் அறையைக் கடந்து செல்ல முயன்றான்.



ஆனாலும் ஏதோவொன்று அவனைத் தடுக்க, அவனின் கரமோ கதவைத் தட்டியிருந்தது. சில நொடிகள் கழித்தே கதவைத் திறந்தவள் முகம் சோர்ந்திருக்க, முகத்தை துடைத்திருந்தாலும், அவளின் இமைப்பீலியின் ஈரம் அவள் அழுததைக் கட்டியம் கூற, மறுபடியும் அதே கேள்வியைக் கேட்டிருந்தான் பாலா.



அவளும் சளைக்காமல் அதே பதிலைக் கூறியவள், “காலைல நான் எழ நேரமாகிடுச்சுன்னா கதவ தட்டுறீயா…” என்று சிறிது தயக்கத்துடனே கேட்டாள்.



அவனும் அவளின் அப்போதைய நிலையைக் கருத்தில் கொண்டு வேறெதுவும் கேட்காமல் தலையை மட்டும் அசைத்துவிட்டு அவனிற்கு கொடுக்கப்பட்ட அறைக்குள் நுழைந்து கொண்டான்.



ஆனால் காலையில் அவள் தான் அவனின் அறைக்கதவைத் தட்டப் போகிறாள் என்றோ, அதில் சிறிதும் பாதிக்கப்படாமல் தூக்கமே பிரதானமாகக் கொண்டு அவன் தூங்குவான் என்றோ இருவருமே அறியவில்லை!



தேஜுவின் அறைக்கு, ஒரு அறை தள்ளிய அறை தான் பாலாவினுடையது. அவன் அறைக்குள் தேஜுவைப் பற்றிய சிந்தனையுடனே நுழைந்தான். ‘எதுக்காக அவங்களை பார்த்து அவ இவ்ளோ நர்வஸ் ஆகணும்..?’ என்று யோசித்துக் கொண்டே அங்கிருந்த கட்டிலில் காலை நீட்டிப் படுத்தான். அப்போது தான் விக்ரமிற்கு இங்கு நடந்ததைப் பற்றிக் கூறவில்லை என்ற நினைவு எழுந்தது.



தன் அலைபேசியை எடுத்துக் கொண்டவன், அங்கிருந்த சிறிய பால்கனியில் நின்று கொண்டான். ஜில்லென்ற காற்று அவன் மேனியைத் தழுவ, அதை ரசித்து கொண்டே, விக்ரமிற்கு அழைத்தான்.



விக்ரமோ, அப்போது தான் கனவில் அவனின் கனவுக் கண்ணியுடன் ‘டூயட்’ ஆடத் துவங்கியிருந்தான். ‘எப்போ மாமா ட்ரீட்டு…’ என்று ஹை டெசிபலில் ஒலித்த பாடலில், கனவு கலைந்ததோடு மட்டுமல்லாமல், அவன் கட்டிலிலிருந்து கீழே விழுந்திருந்தான்.



ஒலித்த பாடலிலேயே யாரென்று அறிந்து கொண்டவன், “அட லூசுப் பயலே, ஒழுங்கா சாப்பிட தான் விடலன்னு பாத்தா, நிம்மதியா தூங்கக் கூட விட மாட்டிங்குறானே…” என்று வாய்விட்டு புலம்பியவன், அழைப்பை ஏற்று, “இப்போ யார டா பார்த்து தொலைஞ்ச… ஆவ்…” என்று கொட்டவியுடனே பேசினான்.



“என்ன டா மச்சி, நல்ல தூக்கம் போல..?” என்று பாலா கேட்டவுடன், அதுவரையிலும் தூக்கக் கலக்கத்தில் பேசிய விக்ரம், “டேய் பக்கி, இப்போ எதுக்கு டா என்ன டிஸ்டர்ப் பண்ண..? நானே ரொம்ப நாள் கழிச்சு இன்னிக்கு தான் என் டார்லிங் கூட டூயட் ஆடிட்டு இருந்தேன். அது பொறுக்கலையா டா உனக்கு..?” என்று திட்டினான்.



“ஹே நிப்பாட்டு டா. எனக்கென்ன தலையெழுத்தா, நீ போக வேண்டிய வேலைக்கு நான் போயிட்டு இருக்கேன். என் நேரம், இன்னிக்குன்னு பார்த்து அந்த பஸ் பிரேக் டவுன் ஆகிடுச்சு. அப்போவே நெனச்சேன் கால் பைசாக்கு போகாத தகர டப்பால போறோமேன்னு…” என்று பாலா புலம்ப ஆரம்பிக்க, இறுதியில் விக்ரம் தான் அவனைக் கெஞ்சி கொஞ்சி (!!!) சமாதானப் படுத்தினான்.



பின் விக்ரம், “ஹே மச்சி, நீ கொண்டு போறது சேஃப் தான..?” என்று கேட்க, “இந்த பாலாவ நம்பி ஒரு பொறுப்பை ஒப்படைச்சுட்டு எதுக்கு டா ஃபீல் பண்ற..?” என்றான் பாலா.



‘அதுக்கு தான ஃபீல் பண்றேன்…’ என்று மனதிற்குள் மட்டுமே நினைக்க முடிந்தது விக்ரமினால். இதை வாய்விட்டு சொல்லிவிட்டு, பின் யார் அவனின் புலம்பல்களை கேட்டுக் கொண்டிருப்பது!



“ஹே எதுக்கும் கேர்ஃபுல்லா இரு டா.” என்று மீண்டுமொரு முறை விக்ரம் கூற, “ப்ச் அதெல்லாம் நான் பார்த்துக்குறேன். அந்த பார்ட்டி கிட்ட நாளைக்கு மதியம் தான் டெலிவரி பண்ண முடியும்னு சொல்லிடு டா.” என்று கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.



கைகளைத் தலைக்கு மேல் தூக்கி நெட்டி முறித்தவாறே, இடப்புறம் திரும்ப, அங்கு அவளின் பால்கனியில் நின்று விட்டத்தை வெறித்துக் கொண்டிருந்தாள் தேஜு.



‘இந்த நேரத்துல இங்க என்ன பார்த்துட்டு இருக்கா..?’ என்று எண்ணியவாறே அவளின் பார்வையைத் தொடர்ந்தவனிற்கு எல்லையற்று பரந்து விரிந்த நட்சத்திரங்களற்ற ஆகாயம் தான் தெரிந்தது.



அவளின் பார்வையில் ரசனையோ வேறெந்த உணர்வோ இல்லையென்று உணர்ந்ததும், மெல்ல ‘ஸ்ஸ்..’ என்று சத்தம் எழுப்பினான். முதலில் அதைக் கண்டுகொள்ளாதவள், அவனின் இடைவிடாத முயற்சியில் திரும்பிப் பார்த்தாள். இன்னமும் அவளின் முகம் வாட்டமாக இருக்க, என்னவென்று சைகையாலே வினவினான். அவளும் தலையை இடவலமாக அசைத்து, ‘ஒன்றுமில்லை’ என்று கூறினாள்.



பாலாவும் விடாமல், ‘அப்போ போய் தூங்கு’ என்க, அவளும் பெருமூச்சை வெளியிட்டு, மீண்டும் ஒரு தலையசைப்புடன் அவளின் அறைக்குள் சென்றாள்.



அவள் சென்ற பின்னும் அவளின் பால்கனியையே நோட்டமிட்டவன், பின் பின்னந்தலையைக் கோதிக் கொண்டு, கட்டிலில் சென்று விழுந்தான்.



கட்டிலில் விழுந்தது மட்டும் தான் அவனிற்கு தெரியும். அவனை எழுப்பியதென்னவோ, வெளியே கேட்ட அவசர ஊர்தியின் சைரன் சத்தம் தான்.


தொடர்ந்து பயணிப்போம்...
 

Apsareezbeena loganathan

Well-known member
Member
பச்சக் கிளி என்று
பக்கத்தில போன
பாலாவுக்கு பல்ப்.....
பால்கனியில் தேஜு
பார்வையில் ஒரு தவிப்பு....
 

Latest profile posts

மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு
முள்ளில்லா முல்லைப்பூ இன்னும் இரண்டு எபியில் முடிந்துவிடும். கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணிவரை மட்டுமே இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீட்டிக்கப்படமாட்டாது. படிக்க நினைப்பவர்கள் விரைவில் படித்துவிடுங்கள். லைக்கோ கமெண்டோ சொல்லிட்டும் போங்க.

New Episodes Thread

Top Bottom