• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

வழி மாறிய பயணம் 10

Barkkavi

✍️
Writer
ஹாய் பிரெண்ட்ஸ்...😍😍😍 "வழி மாறிய பயணம்" கதையின் பத்தாவது அத்தியாயம் போட்டாச்சு... படிச்சுட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க...😁😁😁

ei4PZT716155.jpg



பயணம் 10



மதியமும் அல்லாத மாலையும் அல்லாத அந்த பொழுதில் இவர்களின் வண்டி அந்த குறுகலான சந்தில், வழியை அடைத்துக் கொண்டு குலுக்கலுடன் நின்றது. அந்த குலுக்கலில் முழித்த தேஜு அந்த பகுதியையே சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.



தேஜுவின் செய்கைகளைக் கண்ட பாலாவின் வாய் சும்மா இருக்காமல், “என்ன மேடம், சொகுசா தூங்கிட்டு வந்தீங்க போல…” என்று கேலி பேச, வழக்கம் போல அவனை முறைத்தவள், “என்னை எதுக்கு இங்க கூட்டிட்டு வந்துருக்க..?” என்று மெல்லிய குரலில் வினவினாள்.



“ஹான் உன்னைக் கடத்திட்டு வந்துருக்கேன்…” என்று வில்லன் குரலில் பேச, அவனை மேலிருந்து கீழ்வரை பார்த்தவள், “அவ்ளோ வொர்த் இல்ல நீ…” என்றவாறே வண்டியை விட்டு இறங்கினாள்.



‘தூங்கி எழுந்து ஃபுல் ஃபார்ம்ல இருப்பா போலயே…’ என்று மனதிற்குள் புலம்பியவாறே அவனும் வண்டியிலிருந்து வெளியேறினான்.



“அண்ணா, எவ்ளோ ஆச்சு..?” என்று பாலா கேட்க, “தம்பி, அந்த போலீஸ் ரெண்டு பேரும் காசு குடுத்துட்டாங்க…” என்றார்.



அவர் கூறியதைக் கேட்ட தேஜு பாலாவை மீண்டும் ஒரு பார்வை பார்க்க, ‘இப்போ நம்ம ஏதாவது ஹீரோயிசம் பண்ணனுமே…’ என்று யோசித்த பாலா, கைலயிலிருந்த பையை பார்த்தான். அந்த பைக்குள் நம் துரைசிங்கத்தை வெறுப்பேற்றிய அதே கிருஷ்ணர் படம் இருப்பதைக் கண்டவன், “அண்ணா, என்ன இருந்தாலும் ஓசில பயணம் பண்ண நான் விரும்பல… இந்தாங்க இதை என் பரிசா வச்சுக்கோங்க…” என்றான்.



“இல்ல தம்பி… வேணாம்.” என்று அவர் மறுக்க, “அட இது கிருஷ்ணர் படம் தான் அண்ணா. உங்க வீட்டு சுவர்ல மாட்டி வச்சுக்கோங்க…” என்று பாலா வற்புறுத்தினான். இடையிடையே தேஜுவையும் ஓரக் கண்ணில் பார்க்க தவறவில்லை.



“ஐயோ தம்பி. நான் இருக்குறதே ஒரு ஓட்டு வீடு. அதுல எப்படி இதை மாட்டி வைக்கிறது…” என்று அலுத்துக் கொண்டார் அந்த ஓட்டுநர்.



தேஜுவோ அந்த பகுதியை பார்வையிட்டுக் கொண்டிருந்தாலும், இவனின் அலும்புகளையெல்லாம் கேட்டு சிரிப்பைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தாள்.



‘ச்சே என்ன ஒரு இன்சல்ட்…அதுவும் இவ முன்னாடி வேற…’ என்று மனதிற்குள் நைந்து கொண்டவன், “அண்ணா இந்த தம்பி மேல உங்களுக்கு பாசமே இல்லயா…” என்று பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்டான்.



“அட என்ன தம்பி உன்கூட ஒரே ரோதனையா இருக்கு… இப்போ இதை வச்சு நான் என்ன செய்ய…?” என்று அந்த ஓட்டுநர் வினவ, ஓரக் கண்ணில் தேஜுவின் கவனம் இங்கிருப்பதை உறுதிபடுத்திக் கொண்டு, ‘சும்மா ஒரு பிட்டு போட்டு தான் பார்ப்போமே…’ என்று நினைத்தவனாய், “ஹ்ம்ம்… இன்னும் கொஞ்ச நாள்ல எங்க கல்யாணம் வரும். அப்போ இதையே எனக்கு கிஃப்ட்டா குடுத்துருங்க…” என்று கூறினான்.



அவனின் திருட்டு முழியிலேயே, ஏதோ வில்லங்கமாக கூறப் போகிறான் என்பதை யூகித்த தேஜு, அவன் அவ்வாறு கூறியதும் அவன் முதுகில் அடித்தவள், “நீங்க கிளம்புங்கண்ணா..” என்று அந்த ஓட்டுநரிடம் கூறினாள்.



அந்த ஓட்டுநரும் சிரித்துக் கொண்டே, “பாசக்கார பயபுள்ளையா இருக்க பா…” என்று அவரின் வாயால் நற்சான்றிதழ் வழங்கியவாறு அவ்விடத்தை விட்டு அகன்றார்.



ஒரு பெருமூச்சுடன் திரும்பியவன் எதிரில் கைகளை கட்டிக்கொண்டு கோபமாக நின்றிருந்தாள் தேஜு.



’ஐயையோ இப்போ இவள வேற சமாளிக்கணுமே…’ என்று யோசித்தவன், சட்டென்று அவளிற்கு பின்னால் பார்த்து, “டேய் விக்ரம்…” என்றான்.



தேஜுவும் யாரென்று திரும்பிப் பார்க்கும் வேளையில், அவளிற்கு போக்கு காட்டி தப்பித்து ஓடினான் பாலா.



“டேய் நில்லு டா லூசு…” என்றவாறே அவன் பின்னால் ஓடினாள் தேஜு.



இரண்டு நிமிட ஓட்டத்திற்குப் பின் ஒரு வீட்டின் முன் நின்று மூச்சு வாங்கினான் பாலா. அவன் பின்னால் வந்த தேஜு அவன் நிற்பதைக் கண்டு, அவளும் தன்னை சிறிது ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்.



பின் அவனிடம், “ஏன்டா ஓடுன..?” என்று மூச்சு வாங்க கேட்டாள். “நீ தொரத்துன, நான் ஓடுனேன்.” என்றான் பாலா.



இதோ அவர்களின் அடுத்த சண்டை ’இனிதாக’ ஆரம்பமானது.



அப்போது அவர்கள் நின்றிருந்த வீட்டின் கதவு திறக்கப்பட, உள்ளிருந்து வந்தவன், “அடடடடடா… யாருய்யா அது தூங்குற நேரத்துல டிஸ்டர்ப் பண்ணிக்கிட்டு…” என்று கண்களைத் தேய்த்தவாறே எதிரில் நின்றவனைக் கண்டு அதிர்ந்தான்.



“டேய் ரம்மு..” என்று நீண்ட நாளாக பார்க்காத நண்பனைப் பார்ப்பது போல கட்டிக்கொண்டான் பாலா.



‘நைட்டு தூங்க விடல. காலைலையும் தூங்க விடல… சரி இப்பயாச்சும் இவன் தொல்லை இல்லாம நிம்மதியா தூங்கலாம்னு பார்த்தா, அதுக்கும் ஆப்பு வைக்கிற மாதிரி நேர்லயே வந்துருக்கானே… கடவுளே உன்கிட்ட என்ன கேட்டேன். உயிர் நண்பன குடுன்னு கேட்டா, இப்படி உயிர் எடுக்குற நண்பன குடுத்து வச்சுருக்கியே…’ என்று மைண்ட் வாய்ஸில் புலம்பினான் பாலாவின் ‘உயிர் தோழன்’ விக்ரம்.



“டேய் என்ன டா பொறுப்பே இல்லாம தூங்கிட்டு இருக்க..? ஆஃபிஸ் போகல..?” என்று பொறுப்பின் பிரதிநிதியாய் பாலா கேட்க, “எப்படி டா ஆஃபிஸ் போக… உன்ன போய் அந்த பெயின்டிங்க குடுத்துட்டு வான்னு சொன்னா, இல்லாத கூத்தையெல்லாம் பண்ணி வச்சுருக்க… இதுக்கு நானே போயிருக்கலாம்… ஒரே ஒரு நாள் என் ஆளு கூட ஸ்பெண்ட் பண்ணலாம்னு பிளான் பண்ணதுக்கு, நல்லா வச்சு செஞ்ச டா… ஆமா அந்த பெயின்ட்டிங் எங்க..?” என்று விக்ரம் கேட்டதும், அசட்டு சிரிப்பை உதிர்த்த பாலா, விக்ரமின் சட்டை பொத்தானை இழுத்தவாறே, “அது தான் டெலிவரி குடுக்கலல… காசு தான் கிடைக்கல புண்ணியமாவது கிடைக்கட்டும்னு தானமா குடுத்துட்டேன்…” என்றான்.



“ஆமா இவரு கர்ணன் தானமா குடுத்தாராம்… ஏற்கனவே அந்த ரவுடி ரங்கம்மா போன் மேல போன் போட்டு பெயின்ட்டிங் குடுத்தாச்சான்னு கேட்டுட்டு இருக்கா… இதுல இந்த விஷயம் தெரிஞ்சா எப்படியெல்லாம் ஆடப்போறாளோ… அநேகமா நாளைக்கு எங்களுக்கு பிரேக்-அப்பா தான் இருக்கும்…” என்று புலம்பிக் கொண்டிருந்தான் விக்ரம்.



அவனின் புலம்பல்களைக் கேட்க சகியாதவானாக, “ஹே விடு மச்சி இதுக்கெல்லாம் ஃபீல் பண்ணிட்டு… நாளைக்கே உன் ஆளை வேற பெயின்ட்டிங் வரைஞ்சு தர சொல்லு… அத எப்படி டெலிவரி பண்றேன்னு மட்டும் பாரு…” என்றான் பாலா.



“ஐயா சாமி, இதுவரைக்கும் நீ பண்ணதும் அதை நான் பார்த்ததும் போதும்..” என்று கைகளை தலை மேல் குவித்து கெஞ்சினான் விக்ரம்.



அப்போது அங்கு கேட்ட சிரிப்பொலியில் தான் விக்ரமின் கவனம் தேஜுவிடம் சென்றது. தேஜுவையும் பாலாவையும் மாறி மாறி பார்த்தவன், “டேய் மச்சி சொன்ன மாதிரியே லவ்வு சொல்லி பொண்ண கூட்டிட்டு வந்துட்டியா..?” என்று ஆரம்பித்தவன், “ஹே உண்மையை சொல்லு.. உங்களை எத்தனை பேரு தொரத்திட்டு வராங்க… எதுக்கு டா இங்க வந்தீங்க… என் லவ்வுக்கு தான் சங்கூதுவான்னு பார்த்தா உசுருக்கே ஆபத்து வந்துடும் போலயே…” என்று மேலும் புலம்பியவனைத் தள்ளிக்கொண்டு உள்ளே சென்றான் பாலா. இதழ் விரிந்த சிரிப்புடன் அவர்களைப் பின்தொடர்ந்தாள் தேஜு.



அடுத்த அரை மணி நேரத்தில், அவர்களின் பயணத்தை ஒரு திரில்லர் படக்கதை போல, சில பல காட்சிகளை வெட்டியும் ஒட்டியும் சொல்லி முடித்தான் பாலா.



“அப்போ உண்மையாவே உங்களைத் தொரத்திட்டு தான் வராங்களா… அடப்பாவி இப்போ எதுக்கு டா இங்க வந்து டேரா போட்டுருக்க…” என்று அழும் குரலில் கேட்டான் விக்ரம்.



“டேய் மச்சி உன்னை விட்டா எனக்கு யாரு இருக்கா…” என்று பாவம் போலக் கூறிய பாலாவின் பேச்சை தடுத்தவன், “என்ன வேணா பண்ணு… ஆனா மூஞ்சிய மட்டும் இப்படி வைக்காத…” என்றான் விக்ரம்.



பின் தேஜுவைப் பார்த்தவன், “இப்போ என்ன பண்ணலாம்னு பிளான் பண்ணிருக்க மா…” என்று வினவினான் விக்ரம்.



“அதான் டா…” என்று ஆரம்பித்த பாலாவை தடுத்தவன், ”நீ ரொம்ப பேசிட்ட. சோ…” என்றவன் ‘வாயை மூடு’ என்று சைகையில் சொல்லிவிட்டு தேஜுவிடம் திரும்பினான்.



பாலாவைப் பார்த்து நமுட்டுச் சிரிப்பு சிரித்த தேஜு, விக்ரமிடம் அவளின் திட்டத்தை கூற ஆரம்பித்தாள். இப்படி பேசியே சிறிது நேரத்தை ஓட்டியவர்கள், மாலையானதும் ரவிசங்கரை சந்திக்க ஆயத்தமாயினர்.



அவர்கள் கிளம்பும்போது, “பார்த்து பத்திரமா போயிட்டு வாங்க…” என்று வழியனுப்பினான் விக்ரம்.



அவனிடம் தலையசைப்பை கொடுத்த இருவரும் ஆட்டோ ஒற்றை பிடித்து, ரவிசங்கரின் இடத்திற்கு சென்றனர்.



“ஓய்… உங்க அப்… சாரி அவரு சென்னைல தான் இருக்காருன்னு உனக்கு தெரியுமா..?” என்றான் பாலா.



அவனை முறைத்தவள், “ம்ம்ம் தெரியும்… அவரு கேங்ல ஒரு ஸ்பை வச்சுருக்கேன்… அவரு மூலமா அந்த ஆளு எங்க இருக்காருன்னு தெரிஞ்சுப்பேன்…” என்றாள்.



‘ஸ்பை வச்சு கண்காணிக்கிற அளவுக்கு மேடமுக்கு இன்ஃப்ளூயன்ஸ் இருக்கும் போலயே…’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.



ரவிசங்கரின் இல்லத்தை சென்றடைந்ததும், அவர்கள் கண்டது வாசலில் நின்றிருந்த கும்பலைத் தான். இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு உள்ளே சென்றனர்.



சட்டென்று நின்றவன் அவளின் கையை பிடித்து இழுத்து, “உன் துப்பட்டாவ வச்சு முகத்தை மறைச்சுக்கோ…” என்றான்.



அவள் கண்களாலேயே ‘ஏன்’ என்று கேட்க, “ஒரு சேஃப்டிக்கு தான்…” என்றவனின் மனதில் ஏதோ உறுத்தல் தோன்றிய வண்ணம் இருந்தது.



அவளும் துப்பட்டாவை சுற்றிக்கொள்ள, இருவரும் உள்ளே நுழைந்தனர். வாசலில் நின்றவர் அவர்களை நிறுத்தி விசாரிக்க, ஏதோ பிரச்சனை காரணமாக ரவிசங்கரை சந்திக்க வேண்டும் என்று கூறினர்.



அவர் இருவரையும் சந்தேகமாக பார்த்தபடி, “இப்போ இங்க ஒரு மீட்டிங் நடக்கப் போகுது… அது முடிஞ்சதும் தான் உங்க பிரச்சனைய பார்க்க முடியும். அந்த ஓரமா நில்லுங்க…” என்று கூறிவிட்டு சென்றார்.



கூட்டம் கூடியவண்ணமே இருக்க, சற்று நேரத்திலேயே இருவரும் தோட்டத்தின் பக்கம் நகர்த்தப்பட்டனர்.



நேரம் செல்ல செல்ல இருவரும் சலிப்பின் உச்சத்தை அடைந்தனர். தேஜுவின் பொறுமை குறைய, “பாலா வா போலாம்… இப்போதைக்கு இவங்க கூட்டம் ஓயாது போல… இங்க நின்னு தலை தான் வலிக்குது.” என்றாள்.



அவன் ஏதோ கூறும் சமயம் அவர்களுக்கு வெகு அருகில் ஒரு குரல் கேட்டது. அவர்கள் இருவரும் சுற்றிலும் பார்க்க, அந்த குரலுக்கு சொந்தக்காரர் அவர்களின் கண்களுக்கு தென்படவில்லை.



“அவளைப் போட்டுட்டு அந்த ஆதாரத்தை எடுத்துட்டு வர சொன்னா, அவ ரூமுக்கு பதிலா வேற ரூமுக்கு போயிட்டேன்னு கதை விட்ட. அது தான் சொதப்பிட்டன்னு, அவளை ஃபாலோ பண்ண சொன்னா, அதையும் கோட்ட விட்டுட்டேன்னு சொல்ற… நீயெல்லாம் எதுக்கு தான் லாயக்கு…” என்று மேலும் சில பல கெட்ட வார்த்தைகளால் எதிரிலிருப்போருக்கு அர்ச்சனை செய்யப்பட்டது அந்த குரலையுடைய நபரினால்.



பாலாவிற்கு அந்த குரல் யாருடையது என்று விளங்கவில்லை என்றாலும், தேஜுவிற்கு விளங்கியது. அவளிற்கு தான் நன்கு பரிச்சயமான குரலாகிற்றே...


தொடர்ந்து பயணிப்போம்...
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் கதை 50வது எபி வரை போட்டாச்சு.

இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 20 போஸ்டட் டியர்ஸ்
காரிருள் சூழா காதலே... கதை லிங்க் பிப்ரவரி 23 அன்று இரவு 10 மணி வரை மட்டுமே தளத்தில் இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீடிக்கப்பட மாட்டாது‌‌ நண்பர்களே... அதனால் விரைவில் படித்துவிடுங்கள்.

WhatsApp Channel

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-காரிருள்-சூழா-காதலே.376/

New Episodes Thread

Top Bottom