• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

வழி மாறிய பயணம் 1

Barkkavi

✍️
Writer
ஹாய் பிரெண்ட்ஸ்...😍😍😍 "வழி மாறிய பயணம்" கதையின் முதல் அத்தியாயம் போட்டாச்சு...😁😁😁 படிச்சுட்டு உங்க கருத்துக்களை பகிர்ந்துக்கோங்க...😁😁😁 இது குட்டி கதை என்பதால் எபியும் குட்டியா தான் இருக்கும்...😊😊😊


eiC42NN35591.jpg



பயணம் 1



பேருந்து நிலையம்… ஞாயிறு இரவென்பதால், வாரயிறுதி நாட்களுக்காக சொந்த ஊருக்கு வந்து, மீண்டும் வேலைக்காகவும், படிப்பிற்காகவும் ஊருக்கு செல்வோர் கூட்டமே அங்கு தென்பட்டது. அந்த கூட்டத்தின் சலசலப்புகளுக்கு மத்தியில் எரிச்சலாக ஒருவன் அலைபேசியில் யாரிடமோ பேசிக் கொண்டிருந்தான்.



“டேய் எரும, உனக்கு வேற ட்ராவல்ஸே கிடைக்கலையா டா..? இந்த பஸ்ஸ பேரிச்சம்பழத்துக்கு போட்டா கூட யாரும் வாங்க மாட்டாங்க போல. சரியான தகர டப்பாவா இருக்கு. இதுல எப்படி டா பெங்களூரு வரைக்கும் போவேன். போற வரைக்குமாவது தாங்குமா, இல்ல பாதி வழிலேயே ஒவ்வொரு பார்ட்டும் கழண்டு விழுந்துருமான்னு தெரியலையே… ப்ச் ஏசி கூட இல்ல” என்று புலம்பினான் பாலா.



“ஆமா இவரு அம்பானியோட பையன். சாதா பஸ்லயெல்லாம் போக மாட்டாரு. ஏசி பஸ்ல தான் போவாரு. ஆளப் பாரு… நீ குடுத்த ஐநூறு ரூவாக்கு இது தான் வரும். ஒழுங்கா போனோமா, வேலைய முடிச்சோமோ, வந்தோமான்னு இருக்கணும்…” என்று மேலும் ஆயிரம் பத்திரங்கள் சொல்லி அலைபேசியை துண்டித்தான் பாலாவின் நண்பன் விக்ரம்.



பாலாவோ நண்பன் கூறியவற்றைக் கேட்டு அலுத்தவன், காதிலிருந்து அலைபேசியை எடுத்துவிட்டு காதைக் குடைந்தான். அப்போது எதேச்சையாக திரும்ப அவன் இவ்வளவு நேரம் குறை கூறிக் கொண்டிருந்த பேருந்தின் நடத்துநர் அவனை முறைத்துக் கொண்டிருந்தார். அவருக்கு ஒரு அசட்டு சிரிப்பை உதிர்த்தவன், அவரருகே சென்று தன் வருகையை பதிவு செய்து கொண்டான்.



அவனின் ஆதார் அட்டையை அவரிடம் கொடுத்தவன், அவர் கையில் வைத்திருந்த பெயர் பட்டியலில் பார்வையை ஓட்டினான். அவனின் இருக்கைக்கு பக்கத்து இருக்கையின் நேரே ‘ஃப்’ என்ற ஆங்கில எழுத்து இருக்க, ‘ஐ.. நமக்கு பக்கத்துல பொண்ணு போல… அப்போ இந்த ட்ராவல் ஜாலியா தான் இருக்கும்…’ என்று மனதிற்குள் குதூகலித்தவன், அப்பெண்ணின் பெயரைக் காணும் வேளையில், அந்த நடத்துநர் அதை மறைத்து விட, ‘ச்சே ஜஸ்ட் மிஸ்ஸு…’ என்று மனதிற்குள் புலம்பியவாறே அவனின் இருக்கையில் சென்று அமர்ந்தான்.



அடுத்து ஐந்து நிமிடங்கள் சென்றிருக்க, ‘என்ன அந்த பொண்ண இன்னும் காணோம்.’ என்று கண்களை சுழற்றியவாறே முகம் தெரியாத பெண்ணிற்காக காத்திருக்கலானான். அவன் காத்திருக்கும் நேரம், அவனைப் பற்றி பார்ப்போம்.



பாலாவின் தந்தை சுந்தரேஸ்வன், அவனிற்கு பார்த்து பார்த்து வைத்த பெயர் பாலகிருஷ்ணன். ‘இந்த காலத்துக்கு ஏத்த மாதிரி பேரு வைக்க சொன்னா அவரு அப்பா காலத்து பேரா வச்சுருக்காரு. இப்படி ஒரு பேரு வச்சுட்டு உன் புருஷருக்கு பெருமை வேற…’ என்று வாரத்திற்கு ஒரு நாளாவது தாயிடம் புலம்பிவிடும் ‘அம்மா செல்லம்’ தான் பாலா.



பெயரை மாற்ற அவனின் தந்தை ஒப்புக்கொள்ளாத காரணத்தினால், பெயரை சுருக்கிக் கொண்டான் நமது நாயகன். ஆனால் அதுவுமே அவனின் தந்தைக்கு பிடிக்கவில்லை. இதனால் வீட்டில் அவர்கள் இருவருக்கிடையேயான உரையாடல் குறைய, பாலாவின் அன்னை ஜெயந்தியே அவர்களுக்கிடையே பாலமாக மாறினார். இவ்வாறு ‘அக்மார்க்’ மத்திய தர வாழ்க்கை தான் பாலாவினுடையது.



வழக்கம் போல ஆட்டு மந்தையாக இளைஞர்கள் அனைவரும் தேர்ந்தெடுக்கும் இயந்திர பொறியியல் படிப்பை தேர்தெடுத்தவன், நான்கு வருட படிப்பை முடித்துவிட்டு படித்ததற்கு சற்றும் சம்பந்தமே இல்லாமல் தகவல் தொழில்நுட்பத்துறையில் இரண்டு ஆண்டுகளாக வேலை செய்கிறான்.



ஆறடி உயரம், சிக்ஸ் பேக் உடம்பு, பெண்களை பார்த்தவுடன் கவர்ந்துவிடும் கவர்ச்சிகரமான முகம் என்றில்லாமல், சாதாரண தோற்றத்தில் பெண்களை ரசித்துப் பார்க்கும், பார்க்க மட்டுமே செய்யும், 90ஸ் கிட்ஸின் பிரதிநிதி தான் நமது நாயகன், பாலா.



பேருந்தை இயக்கிய ஓட்டுநரைக் கண்ட பாலா, ‘அப்போ அந்த பொண்ணு வராதா. ஹ்ம்ம் நம்ம நேரம்.’ என்று அவன் புலம்பியது கடவுளின் செவிகளுக்கு கேட்டதோ, அவனின் முகத்தை துணி ஒன்று மறைத்தது.



அதன் வாசனையை முகர்ந்தவன் பரவசமாகி துணியை முகத்திலிருந்து விலக்கி, காரிகையின் முகம் பார்க்க, பார்த்தவனின் கண்கள் அதிர்ச்சியில் விரிய, அவனின் கைகளோ அனிச்சையாக கன்னத்தில் பதிந்தது.



அப்பெண்ணிற்கும் அவனை அங்கு கண்டது அதிர்ச்சி தான் என்றாலும், அவள் பேருந்தில் ஏறும்போதே அவனைக் கண்டிருந்ததால், அவளின் அதிர்ச்சியை அவனின் முன்பு வெளிப்படுத்தவில்லை.



அப்பெண்ணின் இருக்கை ஜன்னலோரத்தில் இருக்க, பாலாவைக் கடந்து தான் அவள் உள்ளே செல்ல வேண்டும். பேருந்தும் கிளம்பத் தயாராக இருந்தது. அவள் பாலாவைப் பார்க்க, அவனோ இன்னமும் அதிர்ச்சியிலிருந்தது மீளவில்லை.



‘ப்ச் இவன் இப்போதைக்கு ஷாக்லயிருந்து வெளிய வரமாட்டான் போலயே…’ என்று மனதிற்குள் நினைத்தவள், ‘க்கும்’ என்று செருமினாள்.



அவளின் செருமலில் நிகழ்விற்கு வந்தவன், பேயைக் கண்டது போல முழிக்க, அவளோ சைகையாலேயே அவளின் இருக்கைக்கு செல்ல வேண்டும் என்றாள். பாலாவோ அடுத்த நொடியே இருக்கையிலிருந்து எழுந்து அவளிற்கு வழி விட்டான்.



“எதுக்கு டா வம்பு. எதேச்சையா கைய பிடிச்சதுக்கே கன்னம் சிவக்குற அளவுக்கு அடிச்சா. இன்னைக்கு பஸ் குலுங்குறதுல என்மேல விழுந்து, நீ தான் பிடிச்சு இழுத்தன்னு சொல்லி அறைஞ்சாலும் அறைவா.” என்று முணுமுணுத்துக் கொண்டே அவன் நகர, அது அவளிற்கு தெளிவாகவே கேட்டது.



அதில் அவனை முறைத்து விட்டே உள்ளே சென்று அமர்ந்தாள். இருவருக்குமே அவர்களின் முதல் சந்திப்பு நினைவிற்கு வந்தது.



ஆறு மாதங்களுக்கு முன், புகழ்பெற்ற பேரங்காடியில் தன் நண்பன் விக்ரமுடன் சுற்றிக் கொண்டிருந்தான் பாலா. அங்கிருந்த பிராண்டட் துணி கடைக்குள் நுழைந்தனர் இருவரும்.



பாலா அங்கிருந்த கொசுவு சட்டைகளை (டி-ஷர்ட்) பார்த்தவன், அதிலிருந்து இரண்டை எடுத்து விக்ரமிடம், “டேய் மச்சி இதுல எது நல்லா இருக்கு..?” என்று வினவினான்.



விக்ரமோ, ஏற்கனவே அலைய வைத்த கடுப்பில் இருந்தவன், “டேய் உன் தொல்ல தாங்கல டா. என்னமோ காசு குடுத்து வாங்கப் போறவன் மாதிரி கேக்குற. ட்ரையல் ரூம்ல அதை போட்டு செல்ஃபி எடுத்து ஸ்டேட்டஸ் போட்டுட்டு பிடிக்கலன்னு வரப்போற… இதுக்கு எதுக்கு டா இவ்ளோ சீன்னு.” என்று புலம்பினான்.



“ப்ச் போடா லூசு…” என்று விக்ரமை திட்டிய பாலா, மேலும் சில சட்டைகளை எடுத்துப் பார்த்தான். அதற்குள் விக்ரமிற்கு அலைபேசியில் அழைப்பு வர, அவன் அங்கிருந்து நகர்ந்திருந்தான். அதை அறியாத பாலாவோ, பின்னால் திரும்பிப் பார்க்காமலேயே, “மச்சி நீயும் ட்ரையல் ரூமுக்கு வா டா. எந்த சட்டை நல்லா இருக்குன்னு பார்த்து சொல்லு, போட்டோ எடுக்க…” என்று பேசிக் கொண்டே கைபிடித்து அழைத்து சென்றான்.



“மச்சி, என்ன டா என்னைக்கும் இல்லாம இன்னைக்கு உன் கை இவ்ளோ சாஃப்டா இருக்கு… அப்படியே பொண்ணுங்க கை மாதிரியே இருக்கு…” என்று பாலா ஆச்சரியமாகக் கேட்டான்.



“டேய் லூசு, கைய விடுடா எரும…” என்ற குரல் கேட்க, “மச்சி, மிமிக்ரி எல்லாம் பண்றடா. இந்த எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிட்டிஸெல்லாம் எப்ப டா கத்துகிட்ட…” என்று கேட்டான் பாலா.



“அடேய் டப்ஸா கண்ணா… பின்னாடி திரும்பிப் பாரு டா.” என்று மீண்டும் அதே பெண்குரல் இப்போது சற்று எரிச்சலுடன் கேட்க, “எவ அவ” என்றவாறே திரும்பினான்.



அங்கு ஐந்தடிக்கும் குறைவாக புகைவண்டிக்கு கரி அள்ளி போட்டது போல, ‘புசுபுசு’வென மூச்சுக் காற்றிலேயே அனலடிக்க நின்றிருந்தாள் அவள்.



அந்த சூழ்நிலையிலும், “குட்டையா இருந்தாலும் கும்முன்னு இருக்கா…” என்று மனதிற்குள் சொல்வதாக நினைத்து வாய் விட்டு சொல்லிவிட, ஏற்கனவே அவளிற்கு இருந்த கோபம் அதிகரித்தது.



அதே கோபத்துடன் அவன் கன்னம் சிவக்குமளவிற்கு சப்பென்று அறைந்திருந்தாள் அவள். அந்த சத்தத்தில் அங்கு இருந்த ஒன்றிரண்டு பேரும் இவர்களின் புறம் திரும்பினர்.



அவளின் தோழியும், அவனின் நண்பனும் ஓடி வர, அதற்குள் அவள் அடித்த அதிர்ச்சியிலிருந்து வெளிவந்தவன், “ஹே லூசு எதுக்கு டி என்ன அடிச்ச..?” என்று அவளிடம் எகிறினான் பாலா.



“பின்ன நீ செஞ்சதுக்கு அடிக்காம கொஞ்சுவாங்களா..? யார கைபிடிச்சு இழுத்துட்டு போறன்னு பார்க்க மாட்டியா… உனக்கு கண்ணு என்ன குருடா…” என்று அவளும் அவள் பங்கிற்கு எகிற, இவர்களை சமாதானப்படுத்த அவர்களின் நண்பர்கள் தான் திண்டாடினர்.



“இவ்ளோ தூரம் வர வரைக்கும் மேடம் வாயில என்ன வச்சுருந்தீங்க..? கைய பிடிச்சப்போவே சொல்ல வேண்டியதானா..?”



அவளின் தோழியை, ‘எல்லாம் உன்னால தான்’ என்பது போல் ஒரு பார்வை பார்த்துவிட்டு, பாலாவையும் முறைத்துவிட்டு சென்று விட, அவளின் தோழியோ, “சாரி அவ இன்னைக்கு மௌன விரதம். நான் தான் அவளை கம்பல் பண்ணி கூட்டிட்டு வந்தேன்.” என்று விளக்க, “இட்ஸ் ஓகேங்க. நீங்க போய் அவங்களை பாருங்க.” என்று கிடைத்த இடைவெளியில் ‘ஸ்கோர்’ செய்தான் விக்ரம்.



ஒரு நன்றியுடன் அப்பெண் அந்த இடத்தை விட்டு நகர, விக்ரமோ அப்போது தான் பாலாவைப் பார்த்தான்.



‘நீயெல்லாம் ஒரு நண்பனா’ என்று பாலா பார்க்க, அவனின் பார்வையை சரியாக உணர்ந்த நண்பனாய், “ஹிஹி அந்த பொண்ணு பாவம்ல டா… அதான்…” என்று சமாளித்தான்.



“ரொம்ப வழியுது தொடச்சுக்கோ… அது எப்படி டா என்னை திட்டும் போதெல்லாம் சும்மா வேடிக்க பார்த்துட்டு, அந்த பொண்ணுக்குனா மட்டும் பாஞ்சு வர… “ என்று சரமாரியாக திட்டினான் பாலா.



“சரி சரி விடு மச்சி. பொண்ணுங்க கிட்ட திட்டு வாங்குறதெல்லாம் உனக்கு புதுசா…” என்று பாலாவை சமாதானப்படுத்தினான் விக்ரம்.



“ஆனா மச்சி, எப்பவும் பசங்களால பொண்ணுங்களுக்கு தான் கன்னம் சிவக்கும். உன் விஷயத்துல தான் டா அப்படியே உல்டாவா நடந்துருக்கு…” என்று விக்ரம் பாலாவை கலாய்க்க, “அடேய் அந்த ஃபயர் என்ஜின் என்னை அடிக்குறப்போ சும்மா இருந்துட்டு இப்போ என்னை கலாய்க்குறீயா…” என்று பாலா அவனைத் துரத்த… அப்போது இருவரையும் அவரவர்களின் நினைவுகளிலிருந்து வெளிவரச் செய்தது ஓட்டுநர் அடித்த ‘பிரேக்’.



இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ள, அவளிற்கு பாலா அன்று கூறியது இப்போதும் காதில் ஒலிக்க, வேறு இடத்திற்கு மாறலாமா என்று மற்ற இருக்கைகளை ஆராய்ந்தாள்.



ஆனால் அவளின் நேரம், அன்று பேருந்தில் பெண்களின் எண்ணிக்கை குறைவு. மேலும் அப்படி அமர்ந்திருந்த பெண்களின் அருகிலும் பெண்களே அமர்ந்திருக்க, இடம் மாற முடியாத சூழலை சபித்துக் கொண்டே அவளின் இருக்கையில் அமர்ந்தாள்.



அவளின் செய்கையைப் பார்த்தவன், ‘உலக அழகின்னு நெனப்பு… எங்க பக்கத்துல உக்காந்தா அப்படியே பாஞ்சுடுவோம்…’ என்று இம்முறை கவனமாக மனதிற்குள் மட்டுமே நினைத்துக் கொண்டு வேறு பக்கம் திரும்பினான்.



பெங்களூருவை நோக்கிய இவர்களின் பயணம் ‘இனிதே’ ஆரம்பித்திருக்க, இவர்களின் பயணம் எப்படி வழி மாறப்போகிறது என்பதை இவர்களுடனே பயணித்து தெரிந்து கொள்வோம்.


தொடர்ந்து பயணிப்போம்...
 

Apsareezbeena loganathan

Well-known member
Member
பாலாவுடன் ஒரு பயணம்....
பஸ்சை கிண்டல் செய்து விட்டு
பக்கத்தில் பெண்ணுடன் பயணம்
பல கனவுடன் காத்திருக்க
பஸ் கிளம்பிய நேரம்
பதறி விட்டான் _ அந்த
பெண்ணை பார்த்து....
பல நாட்கள் முன் _ தான் ஒரு
பெண்ணிடம் கன்னத்தில் வாங்கிய அடி
பழைய எண்ணம் ஓட....
பயணம் தொடர்கிறது.....
 

Latest profile posts

மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு
முள்ளில்லா முல்லைப்பூ இன்னும் இரண்டு எபியில் முடிந்துவிடும். கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணிவரை மட்டுமே இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீட்டிக்கப்படமாட்டாது. படிக்க நினைப்பவர்கள் விரைவில் படித்துவிடுங்கள். லைக்கோ கமெண்டோ சொல்லிட்டும் போங்க.

New Episodes Thread

Top Bottom