• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே 18

Vathsala Raghavan

✍️
Writer
யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே 18

அதையுமே முரளி வெகு இயல்பாக தான் எதிர்க்கொள்ள முயன்றான் என்ற போதிலும், அந்த வார்த்தைகளை ஏனோ வேதாவால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை

நந்தகோபாலன் ஏதோ சொல்ல முயல திடீரென எழுந்தது வேதாவின் குரல்

"தப்பு அவர் மேலே இல்லை. என் மேலே"

கொஞ்சம் திகைத்து போனவனாக முரளி திரும்ப, அங்கே சட்டென ஒரு மௌனம் பரவ, அந்த நேரத்தில் சரியாக கோகுல் கீழே இறங்கி வர,

“நான்தான் ஒரு கிராதகனை நல்லவன்னு நம்பி... நேக்கு எங்கிருந்து அவ்வளவு தைரியம் வந்ததுன்னு தெரியலை. லெட்டர் எழுதி வெச்சிட்டு ஆத்தை விட்டு, அப்பா தங்கையை விட்டுட்டு போனேன். போறுமா? அவசரம். எதையுமே சரியா யோசிக்க தோணலை நேக்கு. ஏதோ ஒண்ணு என் கண்ணை மறைச்சிடுத்து”

“வேதா.. போறும் நீ உள்ளே வாயேன்..” என்றபடி முரளி இடையில் வர

“இல்ல முரளி நேக்கு பேசணும்” என்றவள் தொடர்ந்தாள்.

“எங்கப்பா பாவம். அவருக்கு வைதீகமும் பெருமாளும் தவிர வேறே ஒண்ணும் தெரியாது. என்னாலே இன்னைக்கு அவர் தலை குனிஞ்சு நிக்கறார். நான் பண்ணது ஒரு பாடம். பெண்கள் எல்லாரும் எப்படி ஜாக்கிரதையா இருக்கணும் அப்படிங்கறதுக்கு ஒரு பாடம். “

அப்பாவின் கண்களில் கொஞ்சம் கண்ணீர் கட்டிக்கொள்ள எல்லாரும் இமைக்க கூட மறந்திருக்க ஒரு ஆழமான மூச்செடுத்து தன்னை ஆசுவாச படுத்திக்கொண்டு சொன்னாள் அவள்.

“நல்ல வேளை. பெரியவா புண்ணியம். சரியான நேரத்திலே அந்த கண்ணன் எல்லாத்தையும் நேக்கு புரிய வெச்சான். எப்படியோ அவாகிட்டே இருந்து தப்பிச்சேன். அங்கிருந்து என்னை காப்பாத்தி கூட்டிண்டு வந்தது கோகுலும் முரளியும் தான்”

“இதோ இத்தனையும் பண்ணிட்டு உங்க எல்லார் முன்னாடியும் தைரியமா வந்து நிக்கறேன். இது வரைக்கும் இவாத்திலே யாரும் என்னை மரியாதை குறைவா கூட பேசலை. ப்ளீஸ்.. அவா யாரையும் யாரும் தப்பா நினைச்சுக்காதீங்கோ. இப்போ என் தங்கைக்கு நிச்சயதார்த்தம் அது நன்னா சந்தோஷமா நடக்கட்டுமே ப்ளீஸ்.”

அவள் கரைந்து போன குரலில் சொல்ல, யசோதையின் முகத்தில் நிறையவே நெகிழ்ச்சி ரேகைகள் ஓட, நந்தகோபாலன் கூட கொஞ்சம் இளகித்தான் போயிருந்தார்.

சில நிமிடங்கள் அங்கே இறுக்கமான மௌனம் சூழ்ந்திருக்க..

“சாரி முரளி” என்று சொல்லிவிட்டு அவனது தோழி அங்கிருந்து நகர, சுற்றி இருந்தவர்கள் மெல்ல கலைந்து நகர, ஒரு ஓரத்தில் சென்று நின்றுகொண்டவளின் கண்ணில் இப்போதுதான் கொஞ்சமாக கண்ணீர்த் துளி.

அவள் அருகில் வந்தான் முரளி..

“ஏன்டா?” என்றான் அவன் இதமாக.

“இல்லை முரளி எல்லாருக்கும் தெரியட்டும் அது நல்லதுதான்”

“என்னடா நல்லது? இதுக்குதான் நான் உன்னை ரூம்லே இருக்க சொன்னேன்”

“இல்ல முரளி. என்ன பேசறேன்னு தெரிஞ்சுதான் பேசினேன். என்னாலே நீங்க எல்லாரும் தலை குனிஞ்சு நிக்கறது நேக்கு கஷ்டமா இருக்கு. எல்லாம் நல்லத்துக்கு தான். நாளைக்கு உங்களுக்கு வேறே பொண்ணு பாக்கறப்போ இது மாதிரி எந்த கேள்வியும் வரப்படாதோன்னோ? அதுக்குதான் சொன்னேன்”

சொல்லிவிட்டு அவள் திரும்ப, அதற்குள் அங்கே மேடையில் ஏறி நின்றுவிட்ட கோதையையும் கோகுலையும் புன்னகையுடன் ரசிக்க ஆரம்பித்த வேதாவை ரசிக்க ஆரம்பித்தான் முரளி.

“இனி எனக்கு வேறே ஒரு பெண்ணை பார்ப்பதா? அது இந்த ஜென்மத்தில் நடக்கவே முடியாத ஒரு விஷயம்.”

சில மணி நேரத்தில் கோகுல் கோதை நிச்சியதார்த்தம் நல்லபடியாக நடந்து முடிந்திருந்தது. இரண்டு மாதங்களுக்கு பிறகு திருமணம் என்று முடிவாகி இருந்தது.

அந்த இரண்டு மாத இடைவெளியில் வேதாவுக்கும் முரளிக்கும் இடையே ஒரு அழகான நட்பு உருவாகி இருந்தது என்று தான் சொல்ல வேண்டும்.

முக்கியமாக அவள் மனதில் இருக்கும் எதையும் அவனுடன் தைரியமாக பகிர்ந்து கொள்ளலாம் என்ற நம்பிக்கையை அவளிடத்தில் வளர செய்திருந்தான் முரளி. அவர்கள் பேசிக்கொள்வது இரண்டு வீட்டில் இருப்பவர்களுக்கும் தெரியாமல் இல்லைதான்.

ஆனால் அதை தடுத்து நிறுத்தி விடவேண்டும் என்ற எண்ணங்கள் நந்தகோபால் உட்பட யாருக்குமே ஏனோ வரவில்லை. அவளை ஒன்றிரண்டு முறை பார்த்ததிலேயே இவள் நமது குடும்பத்திற்கு ஏற்ற மருமகள் தான் என்ற எண்ணம் அவருக்கும் வந்து விட்டதோ என்னவோ? அவருக்கேத் தெரியவில்லை.

கோகுல் கோதை திருமண நாளும் வந்திருந்தது..

சந்தோஷ சிரிப்புடன் மனங்கள் கலகலக்க. மண்டபத்தின் வாயிலில் வந்து இறங்கினார்கள் கோகுல் குடும்பத்தினர்.

வாழையடி வாழையாக வம்சம் தழைக்க வேண்டுமென்பதற்கு அடையாளமாக வாயில் கதவில் இருந்த வாழைமரங்கள், மாவிலை தோரணங்கள், வாசலில் இருந்த கோலங்கள், பூ, பன்னீர், கல்கண்டுடனான வரவேற்பு அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்க, கையில் ஆரத்தி தட்டுடன் எதிர்ப்பட்டாள் வேதா.

அவளும், கோதையின் அத்தையுமாக ஆரத்தி எடுக்க, தவிர்த்து தவிர்த்து பார்த்து மெல்ல மெல்ல நிமர்ந்த அவள் கண்கள் முரளியைத தேட அவன் அவள் கண்ணில் தென்படவில்லை. ஆனால் அவளுடைய தவிப்பு புரிந்தது அந்த அன்னைக்கு... யசோதைக்கு...

“இங்கேருந்து எட்டி எட்டி எல்லாம் பார்க்க வேண்டாம். மாப்பிள்ளை வந்தாச்சு. நேர்லே போய் அவாளுக்கெல்லாம் ஒரு ஹாய் சொல்லிட்டு வா” கண்ணடித்து சொன்ன அக்காவை பார்த்து அழகாக புன்னகைத்தாள் கோதை...

“இவளுக்கும் சீக்கிரம் இது போன்றதொரு திருமணம் நடக்க வேண்டும்”

அப்போது கோதையின் கைப்பேசி ஒலித்தது

“வந்துட்டேன்டா கோதைப்பொண்ணு” மறுமுனையில் கோகுல் “இப்போ இங்கே ஓடி வா பார்க்கலாம்”

“நானா.. ம்ஹூம்... மருதாணி விரல்களை பார்த்துக்கொண்டே புன்னகைத்துக்கொண்டாள் கோதை. “வேணுமானா நீங்க வாங்கோ”

“நானா? வரவா. சரி இதோ வரேன் பாரு”

அடுத்த சில நொடிகளில் அவன் மணமகள் அறை கதவை தட்ட, வேதா கதவைத் திறக்க அறைக்குள் இருந்த பெண்களின் உற்சாக கூச்சலின் மத்தியில் உள்ளே நுழைந்தான் கோகுல்..

“நீ கூப்பிட்ட உடனே வந்துட்டேன் பார்த்தியா கோதை பொண்ணு.”அவன் கண் சிமிட்ட.. சிவந்து போனாள் கோதை.

“ஹலோ... நீங்க சைட் அடிக்க வந்துட்டு என் தங்கை மேலே பழி போடறேளா?” இது வேதா.

“அச்சோ... நான் பொய்யே சொல்ல மாட்டேன்... கோதையை கேட்டு பாருங்கோ” அவன் கோதையை பார்த்து கண் சிமிட்ட நிமிரவே இல்லை அவள்.

“இல்லை நீங்க போய் சொல்றேள்” வேதா சொல்ல

“பெருமாள் சத்தியமா இல்லை மன்னி” அந்த 'மன்னி'யில் அழுத்தம் கொடுத்து இதமான புன்னகையுடன் சொன்னான் கோகுல். அவளும் முரளியும் சீக்கிரம் இணைய வேண்டுமென்ற எண்ணம் அவன் அடி மனதிலும் வேரூன்றி கிடந்தது. கொஞ்சம் திடுக்கிட்டு நிமிர்ந்தாள் வேதா.

“நிஜமா மன்னி...” விடவில்லை அவன்.

“ச.. சரி நீங்க ரூமுக்கு போங்கோ... யாரனும் பார்த்தா ஏதானும் சொல்லப்போறா” அவள் குரலில் கொஞ்சம் தடுமாற்றம் கலந்திருந்தது

“நான் வரேன்டா” அவன் கோதையை பார்த்து சொல்லிவிட்டு நகர... அறையை விட்டு வெளியே வந்து கோகுலுக்கு மட்டும் கேட்கும் படி சொன்னாள் வேதா.

''இனிமே மன்னி வேண்டாமே ப்ளீஸ்”

“அதெல்லாம் முடியாது.. யாரென்ன சொன்னாலும், எத்தனை வருஷம் ஆனாலும் நீங்கதான் என் மன்னிங்கறதை மட்டும் யாராலையும் மாத்த முடியாது புரியறதா?”

அவன் சொல்லிவிட்டு நகர, கைக்கெட்டும் தூரத்தில், கைகளை கட்டிக்கொண்டு அவர்கள் பேசுவதை கேட்ட படியே முரளி நின்றிருக்க... அவனை பார்த்து கண்ணடித்து விட்டு நகர்ந்தான் கோகுல்.

முரளியை பார்த்த மாத்திரத்தில் கொஞ்சம் தடுமாறித்தான் போனாள் வேதா. சட்டென உள்ளே சென்று அமர்ந்துக்கொண்டாள் அவள்.

'என்ன நடக்கிறது எனக்குள்ளே???'

கோதையை பார்த்து பார்த்து அலங்கரித்த படியே . “நீ அழகுடா கோதை...' அவள் காதுக்குள் மெல்ல கிசுகிசுத்தாள் அக்கா.

மாப்பிள்ளை அழைப்பு முடிந்து வரவேற்பில் இருவரும் நின்றிருக்க, மெரூன் நிற சேலையில் அசைந்தாடும் மாலைகளும், கலகலக்கும் வளையல்களும், அவள் அசையும் போதெல்லாம் சிணுங்கி சிணுங்கி அவனை அழைக்கும் கொலுசுகளுமாக தன்னருகே நின்றிருந்தவளின் மீதிருந்த பார்வையை விலக்கவே முடியவில்லை கோகுலால்.

மறுநாள் காலை

விரதம் முடிந்திருந்தார்கள் கோகுலும் கோதையும்.. அழகான பச்சை நிற சேலை அவள் அழகுக்கு அழகு சேர்க்க நின்றிருந்தாள் கோதை. பஞ்சகச்ச வேஷ்டியில் கம்பீரமாக நின்றிருந்தான் கோகுல்.

அடுத்ததாக காசி யாத்திரை..

“மாமா” என்றான் முரளி கோதையின் அப்பாவை பார்த்து “உங்க மாப்பிள்ளை 'குடை, விசிறி தடி எல்லாம் எடுத்துண்டு காசிக்கு போறானாம். கல்யாணம் வேண்டாமாம். சம்பிரதாய படி நீங்க போய் அழைச்சிண்டு வரணும். ஆனா அது வேண்டாம். போனா போகட்டும்னு விட்டுடுங்கோ. ரெண்டே நிமிஷம் அவனா திரும்பி ஓடி வருவான் பாருங்கோ”

சட்டென அங்கே சிரிப்பலை பரவ...

“பி...ர...தர். தோ... உங்களுக்கும் கல்யாணம் வந்துண்டே இருக்கு .. அப்போ நாங்களும் பேசுவோம் தெரியுமோன்னோ...” கோகுல் சிரித்தபடியே சொல்ல..

“ஓ.. ஷூர்” என்ற முரளியின் பார்வை அங்கே எளிமையான அலங்காரத்தில் மின்னிக்கொண்டிருந்த வேதாவை வருட தவறவில்லை. “சீக்கிரம் வரட்டும் கல்யாணம்” மெதுவாக உச்சரித்தன அவனது உதடுகள். அது வேதாவின் காதுகளை எட்டாமல் இல்லை.

ஸ்ரீதரன் கோகுலை அழைத்து வர...

காசி யாத்திரை வேண்டாமென தடியை எறிந்து விட்டு வரும் கோகுலுக்கு, தாய் மாமா அவளது கையில் எடுத்து கொடுத்த மாலையை சூட்டினாள் கோதை.

மன்மதனுக்கு மாலையிட்டாயே
மாதே மன்மதனுக்கு மாலையிட்டாயே
அடி மாதே மன்மதனுக்கு மாலையிட்டாயே
ஜன்மம் அதில் சுகித்து நீராடி - மன்மதனுக்கு


பின்னால் இருந்து பாடல் ஒலிக்க....

அவள் வெட்க சிரிப்பில் சில நொடிகள் மயங்கித்தான் போனான் கோகுல்.

'என்னுடையதெல்லாம் இவளுக்கும் இவளுடையது எல்லாம் எனக்கும் சொந்தம்' என்பதாக

மூன்று முறை இருவரும் மாலை மாற்றிக்கொள்ள முதலில் அவள் அணிந்திருந்த மாலை இவனுக்கும் இவன் அணிந்திருந்த மாலை அவளுக்கும் சேர்ந்திருந்தது

'இனி நீயும் நானும் இருவரல்ல ஒருவர் என்பதை ஒப்புகொள்வதாக குவிந்த தனது கரத்தை அவள் அவனிடம் கொடுக்க அதை அப்படியே பற்றிக்கொண்டான் கோகுல். இருவர் முகத்திலும் சந்தோஷ அலைகள். 'இனி விடுவதில்லை. என் வாழ்நாள் முழுவதும் இந்த கரத்தை நான் விடுவதில்லை'

இதை பார்த்திருந்த பெற்றவர்களின் கண்களில் நிறையவே நிறைவு.

நேராக சென்று அலங்கரிக்க பட்ட ஊஞ்சலில் சென்று அமர்ந்தனர் இருவரும். அவன் கைக்குள் அவளது மருதாணி விரல்கள்.

கன்னூஞ்சல் ஆடி இருந்தாள்
மனமகிழ்ந்தாள்
கன்னூஞ்சல் ஆடி இருந்தாள்
காஞ்சன மாலை மனமகிழ்ந்தாள்


அருகிலிருந்த சின்ன பெண்கள் ஊஞ்சல் பாடல்களை பாடிக்கொண்டிருக்க...

'ஊஞ்சலாக முன்னும் பின்னும் ஆடும் வாழ்கையில் என்றும் உன்னுடனே என் பயணம்' என்பதாக இருவரும் ஊஞ்சலாட,

அவளது காதில் ஆடும் ஜிமிக்கியையும், அதனோடு சேர்ந்து அவ்வப்போது கொஞ்சமாக நிமிர்ந்து நிமிர்ந்து தாழ்ந்துக்கொள்ளும் அவளது இமை குடைகளையும், ஒவ்வொரு முறை அவன் ஊஞ்சலை ஆட்டும் போதும் அவள் தோள் அவனுடன் உரசி சிலிர்க்கும் அழகையும் ரசித்தபடியே ஊஞ்சலாடிக்கொண்டிருந்தான் கோகுல்.

அடுத்ததாக மேடைக்கு சென்று அவளது அப்பாவின் மடியில் அமர்ந்துக்கொண்டாள் கோதை.

'அவரை பொறுத்தவரை கோதை இன்னமும் சிறு குழந்தை. என் குழந்தைக்கு திருமணமா??? இன்னமும் நம்பவே முடியவில்லை தந்தையால். மகள் மடியில் அமர வார்த்தையில் சொல்ல முடியாத நெகிழ்ச்சி அவரிடத்தில்.

அவள் கையை பிடித்து நீரை தாரை வார்த்து கோகுலுக்கு கொடுத்தார் அவளை.

'உனக்கு தாரை வார்க்கிறேன் என் குழந்தையை. பார்த்துக்கொள். உன் உயிராக அவளை பார்த்துக்கொள்..'

'மந்திரங்கள் மூலம் நான் என்றும் அவளுக்கு துணையாக இருப்பேன் என மூன்று முறை அவன் உறுதி அளிக்க

அடுத்ததாக கோதைக்கு மடிசார் புடவை கொடுக்கப்பட. அவள் அதை வாங்கிக்கொண்டு அவள் உள்ளே செல்ல., மடிசார் புடவையில் அவளை காண காத்திருந்தன அவன் கண்கள்.

ஐந்து நிமிடங்களில் அழகு தேவதையாக வெளிய வந்தாள் அவனது தேவதை. முதல் முதலாக அணிந்திருக்கும் மடிசார் புடவையில், அடி மேல் அடி வைத்து அவள் நடந்து வர.. விழிகள் விரிய பார்த்திருந்தான் கோகுல்.

'மாப்பிள்ளை சித்த இந்த லோகத்துக்கு வறேளா???" திருமணம் செய்து வைக்கும் வாத்தியாரின் குரல் கேட்கும் வரை வேறேதோ ஒரு உலகத்தில் இருந்தான் அவன்.

இனி தாமதிக்க இயலாது. கோதை தந்தையின் மடியில் அமர, நாதஸ்வரமும் கெட்டி மேளமும், மந்திரங்களும் ஒலிக்க, அட்சதையும், மலர்களும் மழையாய் பொழிய அவள் கண்களுக்குள்ளேயே பார்த்திருக்க இருவர் முகத்திலும் சந்தோஷ சிரிப்பு மிளிர அக்னி சாட்சியாக கோதையின் கழுத்தில் திருமாங்கல்யத்தை அணிவித்தான் கோகுல். அனைவரது கண்களும் உள்ளமும் நிறைந்து போயிருந்தன.

மாப்பிள்ளை வந்தாச்சா??? மட்டுப்பொண்ணு வந்தாளா??? ஒருவரை ஒருவர் கேட்டுகொண்டிருக்க வேதாவின் பார்வை முரளியை தேடி அடைய தவறவில்லை.

'ஒரு வேளை அவன் திருமணத்தை நடத்தி வைக்க அப்பாவை அழைப்பர்களோ என்னவோ? அப்போது வருவேனோ? இப்போதே கவனிக்காதவன் அப்போதா கவனிக்க போகிறான்?' கிருஷ்ண ஜெயந்தி அன்று இவனை பார்க்க வந்த போது இப்படித்தானே நினைத்தாள் கோதை?

இரண்டு மாதங்கள் முன்னால் வரை அவனை தன்னவனாக நினைத்து கூட பார்ததில்லைதான் கோதை பெண். இத்தனை தடைகளை தாண்டி இதோ அவளவனாக ஆகி விட்டிருக்கிறான் கோகுல். அவனை பார்த்தபடியே அவள் நடக்க அவள் விரல்களை தனது கைக்குள் வைத்துக்கொண்டு அக்னியை வலம் வந்தான் கோகுல்.

திருமண சம்பிரதாயங்கள் ஒவ்வொன்றிக்கும் அர்த்தங்கள் தெரியும் கோதைக்கு. கற்று கொடுத்திருந்தார் அவள் அப்பா. அவள் கால் விரல் பிடித்து ஏழு அடி வைத்து அம்மி மிதித்து அவன் மெட்டி அணிவிக்க ஒவ்வொன்றையும் உணர்ந்து ரசித்து சிலாகித்திருந்தாள் கோதை.

இதனிடையே அவள் வெட்கத்தில் மூழ்கி திளைக்கும் ஒரு சந்தர்ப்பமும் வந்தது. அவள் கோகுலின் மடியில் அமர வேண்டிய அந்த சம்பிரதாயம்.

அவள் அவன் மடியில் அமர அவளை குறும்பு பார்வை பார்த்தபடியே அவன் மந்திரங்கள் சொல்லிக்கொண்டிருக்க... அதே நேரத்தில் அவனது இடது கரம் அவளை மென்மையாக அணைத்திருக்க.... சுற்றி நின்றவர்களின் கேலி சிரிப்பில் அவள் இன்னமும் சிவந்து போக....

“மாப்பிள்ளை போறும். இப்போதைக்கு இறக்கி விடுங்கோ உங்க அகமுடையாளை.... உங்களுக்கு மனசே வரலை போலிருக்கே” என்று யாருடைய குரலோ ஒலிக்கும் வரை... மேகத்தில் சஞ்சரித்துக்கொண்டிருந்தனர் இருவரும்.

விரல் ஸ்பரிசங்களின் அறிமுகமும், வெட்க சிரிப்பின் தூறல்களும், கேலி கிண்டல்களின் சாரல்களும் நிறைந்திருந்த நலங்கு முடிந்து வந்திருந்தது இரவு.

அத்தையும், வேதாவும், சேர்ந்துதான் கோதையை அலங்கரித்துக் கொண்டிருந்தனர். அங்கே கோதைக்கு தாயாக மாறி இருந்தாள் வேதா.

'என்ன தெரியும் என் தங்கைக்கு? அவள் ஒரு குழந்தை ஆயிற்றே?' படபடத்தது வேதாவுக்கு.

“கோதை கோகுல் சொன்னபடி கேட்டுக்கோ” மெதுவாக கிசுகிசுத்தாள் கோதையின் காதில். கோதை சின்ன புன்னகையுடன் தலை அசைக்க, நெற்றியில் வியர்வை பூக்கள் நிரம்பிக்கிடந்தது வேதாவுக்கு.

இருவரையும் உள்ளே அனுப்பிய வேளையில் வேதாவின் கண்களின் ஓரத்தில் கண்ணீர்த் துளிகள்

“பத்திரம்டா செல்லம்.” அவள் உதடுகள் தன்னையும் அறியாமல் உச்சரித்தன.

“அதெல்லாம் எங்க கோகுல் அவளை பத்திரமா பார்த்துப்பான்” என்றபடியே வேதாவின் அருகில் வந்தனர் யசோதாவும், தேவகியும்.

யசோதாவின் கரம் அவள் கண்ணீரை துடைத்தது. வேதா தங்கையின் மீது கொண்டிருக்கும் பாசம் இருவரையும் நிறையவே நெகிழ்த்தி இருந்தது.

மெல்ல அவள் கன்னம் வருடினார் யசோதா “பேசாம நீ எங்காத்துக்கே மாட்டுப்பொண்ணா வந்துடுடிமா. உன் தங்கையை பக்கத்திலேயே இருந்து பார்த்துக்கலாமோன்னோ?” தேவகியின் உதடுகளிலும் இதமான புன்னகை.

விழிகள் விரிய நிமிர்ந்தாள் வேதா..

“அது வந்து”

“அதெல்லாம் ஒண்ணும் வரலை. உனக்கு இன்னும் கொஞ்சமே கொஞ்ச நாள் டைம். அதுக்குள்ளே உன் மனசை நீ ரெடி பண்ணிக்கணும் சரியா.?” சொல்லிவிட்டு அவர்கள் நகர, கைக்கெட்டும் தூரத்திலிருந்து மெது மெதுவாக புன்னகை மலரும் அவள் முகத்தை ரசித்திருந்தான் முரளி.

பின்னர் மெதுவாக அவள் அருகில் வந்து நின்றான். அவன் வந்ததை அறிந்தும் நிமிரவில்லை இவள்.

மெல்ல மெல்ல அவள் முகம் நிமிர்த்தி சற்றே நகர்ந்திருந்த அவளது நெற்றி பொட்டை சரியான இடத்தில் இருத்தி, கலைந்திருந்த அவள் கூந்தல் கோதி, அவன் ஏதோ சொல்ல வாயெடுக்க, அவள் கண்களிலும் கொஞ்சம் ஆர்வம் எட்டிப்பார்க்க தவறவில்லை.

“வேதா” என்றான் முரளி மெதுவாக.

“ம்?”

“எப்படி கேக்கறதுன்னு தெரியலை. ஆனா கேக்காமலும் இருக்க முடியலை... தப்பா நினைச்சுக்காதே”

“இல்லை சொல்லுங்கோ.” அவள் கண்களில் கொஞ்சம் தவிப்பு.

“நாளைக்கு கட்டு சாதம் கட்டறச்சே புளியோதரை தருவேளோன்னோ.... நேக்கு எக்ஸ்ட்ரா ரெண்டு பாக்கெட் தர சொல்லு.. நேக்கு புளியோதரை ரொம்பப் பிடிக்கும்”

நிஜமாகவே கொஞ்சம் நொந்தே போனாள் வேதா.

“ராமா... உங்களுக்கு சாப்பாடு தவிர வேறே ஒண்ணுமே தெரியாதா?” அவள் பட்டென கேட்டுவிட.... அவன் இதழ்களில் குறும்பு புன்னகை.

சில நொடிகள் அவளையே இமைக்காமல் பார்த்தவன் அவளை சற்றே நெருங்கி மென் குரலில் சொன்னான்.

“நீ முதல்லே கல்யாணத்துக்கு ஒகே சொல்லு அதுக்கு அப்புறம் நேக்கு என்னவெல்லாம் தெரியும்னு சொல்றேன்” அவள் கொஞ்சம் திகைத்து பின்வாங்க கண் சிமிட்டி விட்டு சிரித்தபடியே நகர்ந்தான் அவன்.

உள்ளே அந்த தனி அறையில்..

“கோதை கோகுல் சொன்னபடி கேட்டுக்கோ” வேதா சொன்ன வார்த்தைகள் அவள் காதில் ஒலித்துக்கொண்டே இருக்க அவன் முகத்தையே பார்த்தபடியே நின்றிருந்தாள் கோதை. சில நிமடங்கள் அவளையே அவன் ரசித்திருக்க...

“நீங்க சொல்றபடி கேட்டுக்க சொன்னா அக்கா” என்றாள் மென் குரலில்.

அவன் புருவங்கள் ஒரு முறை ஏறி இறங்க “என்ன சொன்னாலும் கேட்டுப்பியா? வெரி குட். இது போறும் நேக்கு பாரு இப்போ “ அவன் முகத்தை தீவிரமாக வைத்துக்கொண்டு அவன் சொல்ல, கொஞ்சம் திகைத்தே போனாள் கோதை.

அவள் முக மாற்றத்தை ரசித்தபடியே மலர்ந்து சிரித்தான் கோகுல். சில நொடிகளில் அவளை நோக்கி இரு கைகளையும் நீட்டினான் அவன்.....

“வாடா... என்கிட்டே வாடா கோதைப்பொண்ணு” அடுத்த நொடி ஓடி வந்து அவன் கைகளில் தஞ்சமடைந்தாள் அவன் கோதை பெண்.

இரண்டு மூன்று மாதங்கள் கடந்திருக்க.. அந்த காலைபோழுதில்...

வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து
நாரணன் நம்பி நடக்கின்றான் என்றெதிர்
பூரண பொற்குடம் வைத்து புறமெங்கும்
தோரணம் நாட்ட கனாக் கண்டேன் தோழி நான்


கோகுல் வீட்டு பூஜை அறையில் கோதையின் குரல் ஒலித்துக்கொண்டிருக்க.... மாடியிலிருந்து இறங்கி ஓடி வந்தான் கோகுல்.

“கோதைப்பொண்ணு... உங்க அக்கா முரளியை கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சுட்டா...”

நிறைந்தது
 

Rajam

Well-known member
Member
என்ன ஒரு மென்மையான கதை.
குழைவும்,
நெகிழ்வுமா
கோதைகோகுல் காதல்.
வேதா வேதனைப்பட்டு
தப்பித்து,
தவறை உணர்ந்து
முரளி மனம் கவர்கிறாள்.
அற்புதமான எழுத்து.
 

kothaisuresh

Well-known member
Member
அருமையான கதை. எத்தனை முறை படித்தாலும் அலுக்காது. கண்ணியமான காதல். கோதை, வேதா இரண்டு பேருமே கொடுத்து வைத்தவா.உத்தமமான கணவன்கள்.👌👌👌👌
 

PADMAJA SANKAR

New member
Member
தலைப்பை போலவே கதையும் காதை மென்மையாக வருடுகிறது. விக்கி என்ன ஆனான்னு
தெரியலை. எனக்கு நெட் problem. So கேட்டேன். ஆனாலும் விட்டு விட்டு போக மனம் வரவில்லை. மொத்தத்தில் பாடல் சிறிது என்றாலும் இனிமை அதிகம்.👌👏👍
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் கதை 50வது எபி வரை போட்டாச்சு.

இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 20 போஸ்டட் டியர்ஸ்
காரிருள் சூழா காதலே... கதை லிங்க் பிப்ரவரி 23 அன்று இரவு 10 மணி வரை மட்டுமே தளத்தில் இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீடிக்கப்பட மாட்டாது‌‌ நண்பர்களே... அதனால் விரைவில் படித்துவிடுங்கள்.

WhatsApp Channel

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-காரிருள்-சூழா-காதலே.376/

New Episodes Thread

Top Bottom