• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே 17

Vathsala Raghavan

✍️
Writer
யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே 17

கார் அவர்களது வீட்டுக்குள் நுழைய, காருக்குள் இருந்த யாருடைய சுவாசமும் அவர்கள் வசம் இல்லை தான். எப்படியோ சமாளித்துக்கொண்டு ஒவ்வொருவராக இறங்க கடைசியாக இறங்கினாள் வேதா.

நகர மறுத்தக் கால்களையும், துடிக்க மறுத்த இதயத்தையும் தங்கையையும், அப்பாவையும் நினைத்து நினைத்து இயக்கிக்கொண்டிருந்தாள் அவள்.

அவர்கள் வீட்டு வாசல்படியை தொட்ட நிமிடம் அப்பாவின் அருகில் வந்து அவரை புன்னகையுடன் வரவேற்றார் வாசுதேவன்.

“வாங்கோ... வாங்கோ... என்ன உங்க பொண்ணு பத்திரமா ஆத்துக்கு வந்து சேர்ந்துட்டாளா? அப்படி பதறிட்டேளே கார்த்தாலே. நமக்கெல்லாம் பெருமாள் ஒரு கெடுதலும் வர விட மாட்டார்” அவர் பேச பேச ஆச்சரியத்தின் உச்சியில் பேச்சிழந்து போனார் ஸ்ரீதரன்

கோதை உள்ளே நுழைந்த மறுநொடி அவள் கண்கள் கோகுலைத் தேட அவன் கண்ணில் தட்டுப்படவில்லை. அவள் தவிப்புடன் பார்த்தபடியே நின்றிருக்க தேவகியின் கரம் அவளை அணைத்துக்கொண்டது.

“வா ... வா... மாட்டுப்பொண்ணே... உள்ளே வா” புன்னகையுடன் அவளை நகர்த்திக்கொண்டு நகர்ந்தார் அவர்.

வியப்பின் விளிம்பில் நின்றவளாக விழிகள் விரிய கேட்டே விட்டாள் கோதை

“உங்களுக்கெல்லாம் கோவம் போயிடுத்தா?"

“கோவமா... கோதை எங்காத்து பொண்ணில்லையோ? அவ மேலே நாங்க கோவப்படுவோமோ? அவ மாதிரி ஒரு அருமையான பொண்ணு எங்க கோகுலுக்கு எங்கே தேடினாலும் கிடைக்குமா?” அவள் கன்னம் வருடினார் தேவகி. 'என்ன மாயம் நிகழந்தது என்றே புரியவில்லை கோதைக்கு,

“என்னாச்சு மாமியாரும் மாட்டுப்பொண்ணும் ரகசியம் பேசிண்டிருக்கேள்?” என்றபடியே வந்தார் யசோதா..

சின்னதாக நட்பாக புன்னகைத்தவளின் கண்கள் மட்டும் கோகுலை தேடிக்கொண்டே இருக்க ..

“கோகுல் தானே? மாடியிலே இருக்கான். போய் அஞ்சு நிமிஷம் பேசிட்டு வா போ... சட்டுன்னு வந்திடு. யாரனும் பார்த்தா ஏதானும் சொல்லுவா..” என்றார் தேவகி.

“இல்லை. வேண்டாம்... நான் அப்புறமா..”

“ஒண்ணுமில்லைடா. சும்மா போயிட்டு வா.. அவனும் நீ வருவியோன்னு பார்த்திண்டு இருப்பான்” அவளை அனுப்பினார் யசோதா.

அத்தையும் அத்திம்பேரும் கூட முன்னால் போய்விட தயங்கித் தயங்கி உள்ளே நுழைந்தாள் வேதா. அவள் உயிர் அவள் வசம் இல்லை தான். முன்பு ஒரு முறை அந்த சரவணனுடன் இந்த வீட்டுக்கு வந்தது அவள் நினைவிலாடியது.

“எப்படி எல்லாம் ஏமாற்றி இருக்கிறான் என்னை?” உள்ளம் கொதித்தது அவளுக்கு.

முதலில் எதிர்ப்பட்டது யசோதைதான். அவளைப் பார்த்ததும் ஒரு நொடி நின்றே விட்டார் அவர். அவர் கண்கள் அவளை அளக்க,

‘இவள் தான் வேதாவா? இவளையும் விட ஒரு பொருத்தமான பெண்ணை நான் முரளிக்கு பார்த்துவிட முடியுமா என்ன?’ தன்னையும் அறியாமல் தோன்றியே விட்டது அவருக்கு.

தலையை குலுக்கிக்கொண்டார் அவர்.

'நடக்கவே முடியாத ஒரு விஷயத்தை நான் ஏன் யோசிக்கிறேன்?’

“வாம்மா...வேதா... நான் முரளியோட அம்மா” அவர் ஒரு சம்பிரதாய புன்னகையை உதடுகளில் ஓட விட்ட படியே சொல்ல, சின்னதாக புன்னகைத்தாள் அவள். அவர் சொல்லும் முன்னரே அவர்தான் முரளியின் அன்னை என்பதை அவரது முகச் சாயல் காட்டிக்கொடுத்திருந்தது வேதாவுக்கு.

“அப்படி உட்காருமா.. இதோ வரேன்” சம்பிரதாயமாக சொல்லிவிட்டு நகர்ந்தார் அவர். கொஞ்சம் ஒரமாக சென்று நின்றுகொண்டாள் அவள்.

இவளை நோக்கி தனிச்சையாக திரும்பும் ஒவ்வொருவர் பார்வையும் அவளை கத்தி முனையாய் கீறுவதை போலே உணர்ந்தாள் அவள். அவர்கள் அவர்களுக்குள் பேசிக்கொள்ளும் ஒவ்வொரு வார்த்தையும் இவளை பற்றியதாகவே இருக்குமென தோன்றியது அவளுக்கு.

இத்தனை வருட வாழ்கையில் இப்படி கூனிக்குறுகி எங்கேயுமே நின்றதில்லை அவள். மூச்சை இறுக பிடித்தபடி நின்றிருந்தாள் வேதா.

சில நிமிடங்கள் கழித்து அவள் அப்பா அவள் அருகில் வர.. சரியாக அதே நேரத்தில் அவர்கள் அருகில் அவனது நின்றார் முரளியின் தந்தை. அவரை பார்த்த மாத்திரத்தில்...

“நமஸ்காரம்” ஸ்ரீதரன் கைக்கூப்ப

“இவ தான் உம்ம பெரிய பொண்ணா?” அவளை ஏற இறங்க பார்த்தபடி கேட்டார் நந்தகோபால்

அப்பா மெல்ல தலை அசைக்க “இன்னைக்கு கோதைக்கு மட்டும்தான் நிச்சியதார்த்தம் தெரியுமோன்னோ?” அதிகாரமான குரலில் கேள்வி எழ

தலை அசைப்பே மறுபடியும் அப்பாவின் பதிலாக “இவ தேவை இல்லாம என்னத்தையானும் கற்பனை பண்ணிக்க கூடாதோன்னோ அதான் சொன்னேன்” அவர் சொல்லிவிட்டு நகர உடல் கூசிப்போனது வேதாவுக்கு.

அவர் நகர்ந்தவுடன் அவள் கையை பிடித்துக்கொண்டார் அப்பா “ரொம்ப கஷ்டமா இருக்காமா நோக்கு?” அவர் குரல் மெல்ல கரைய..

“அதெல்லாம் ஒண்ணுமில்லைபா... நீங்க போங்கோ... அவா மணைக்கு கூப்பிடுவா” அவரை அனுப்பி வைத்தாள் வேதா. உயிர் வரை பரவிய ஏதோ ஒரு வலி கண்களுக்குள் கண்ணீரை வரவழைக்க பார்க்க..

“மேடம்... தனியா நின்னுண்டு என்ன பண்ணிண்டிருக்கேள்?” பின்னாலிருந்து ஒலித்த வசீகர குரல் அவளை பிடித்து இழுத்தது.

விழிகள் விரிய திரும்பினாள் அவள். வேஷ்டியும் ஷர்ட்டும், உதடுகளில் தேங்கி நிற்கும் குளிர் புன்னகையுமாக நின்றிருந்தான் முரளி. அவன் விழிகள் அவளை மெல்ல மெல்ல அளந்தன.

“வாங்கோ... நான் சும்மா... அப்படியே... அது.... வந்து.... ஆத்தை பார்த்திண்டிருந்தேன். நன்னா இருக்கு உங்க ஆகம்”

“தேங்க்ஸ். பட் இது எங்க ஆம் இல்லை. எங்க சித்தப்பாவாம்” மெல்ல சிரித்தான் முரளி. “ஒரு நாள் எங்காத்துக்கு உன்னை கூட்டிண்டு போறேன். சரி அது இருக்கட்டும். மத்தியானம் நன்னா சாப்பிட்டியா. ரெஸ்ட் எடுத்தியா?”

“ஆங்? ம்...” தட்டுத் தடுமாறி சொன்னவளின் பார்வை அங்கே இருந்த எல்லாரையும் ஒரு வித கலவரத்துடனே பார்த்து பார்த்து திரும்பிக்கொண்டிருக்க...

“நோக்கு இங்கே இருக்க கஷ்டமா இருக்கும் மாடியிலே என்னோட ரூம் ஒண்ணு இருக்கு. அங்கே கொஞ்ச நாழி இரேன். நிச்சியதார்த்தம் நடக்கறச்சே கூப்பிடறேன்” அவள் மனம் படித்தவனாக கேட்டான் முரளி.

“இல்லை பரவாயில்லை”

“அட வாடா... இங்கே நின்னுண்டிருந்தேனா யாரனும் ஏதானும் சொல்லிண்டே இருப்பா வா” அவன் கட்டளை இடும் தொனியில் சொல்ல... பேசாமல் அவன் பின்னால் நடந்தாள் வேதா. அவர்கள் இருவரும் ஒன்றாக மாடி ஏறுவதை பார்த்தபடியே நின்றிருந்தார் யசோதா.

“ஏதாவது ப்ரௌஸ் பண்றதுன்னா பண்ணு.. இங்கே யாரும் வர மாட்டா” தனது மடிக்கணினியை அவளிடம் கொடுத்துவிட்டு அறை கதவை சாத்திக்கொண்டு நகர்ந்தான் முரளி. உள்ளமெங்கும் வார்த்தையில் விவரிக்க முடியாத நிம்மதி பரவியது அவளுக்கு.

அங்கே கோகுலின் அறை கதவை தயங்கி தயங்கி தட்டினாள் கோதை. அவன் கதவை திறப்பதற்குள் பல நூறு எண்ண அலைகள் அவளுக்குள்ளே.

“கோபமாக இருப்பானோ? என் முகத்தை பார்க்க மாட்டானோ? என் மீது கோபம் இருக்காது. ஒரு வேளை அப்பாவின் மீது கோபமாக இருப்பானோ.?”

சட்டென 'கை யை விட்டா தானே போகமுடியும்’ அவன் காலையில் விலகி சென்ற தருணம் நினைவுக்கு வர, அதே நொடியில் அவன் கதவை திறக்க,

முகம் மலர்ந்த சிரிப்புடன்

“கோதைப் பொண்ணு” என்றான் கோகுல்.

அடுத்த நொடி சட்டென அவன் கையை இறுக்கமாக பற்றிக்கொண்டு தனது கைகளுக்குள் வைத்துக்கொண்டாள் அவள். அவள் தவிப்பு புரிந்தவனாக புன்னகைத்தான் அவன்.

“ரொம்ப பயந்துட்டியாடா கோதைப் பொண்ணு”

ம்? ம்ஹூம். அதெல்லாம் இல்லை சும்மா உங்களைப் பார்க்கத்தான் வந்தேன். நான் கீழே போறேன். அம்மா உடனே வரச்சொன்னா” அவன் முகத்தை பார்த்தால் கண்ணீர் கொட்டி விடும் என்று புரிந்தவளாக ஓடி விட நினைக்க,

“போலாம்... போலாம்” கதவை கொஞ்சம் சாத்தியவன் அவள் முகத்தை கைகளில் ஏந்திக்கொண்டான். .

“உங்களுக்கெல்லாம் கோ... கோவம் போ.... போயிடுத்தா?” கரைந்து போன குரலில் தட்டு தடுமாறி அவன் முகம் பார்த்தபடியே அவள் கேட்க

“நேக்கு எப்பவுமே கோதைப் பொண்ணு மேலே கோவம் கிடையாதே. இப்படி ஒரு தேவதை மேலே யாரானும் கோபப் பட முடியுமா? என்றபடியே அவள் கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்தான் கோகுல்

“இல்லை அப்பாக்கெல்லாம் எங்க மேலே கோவம் இல்லையா?” அவள் மெல்ல கேட்க..

“இருந்தது. இப்போ கொஞ்சம் சரியாயிடுத்து” என்று சற்று முன் நடந்ததை சொல்ல துவங்கினான் கோகுல்.

முரளி வேதாவை அழைத்து வர சென்றிருந்த நேரத்தில் தான் அந்த விவாதங்கள் நடந்தன.

“என்ன தைரியம் அந்த ஸ்ரீதரனுக்கு?” குதித்துக்கொண்டிருந்தார் நந்தகோபாலன். “நம்ம கோகுலையே சந்தேகப் பட்டுட்டார்”

“என்னாலையும் அதை தான் தாங்கிக்க முடியலை” என்றார் வாசுதேவன். “கோகுலுக்குமே ரொம்ப மனசு கஷ்டபட்டு போயிடுத்து அதான் கல்யாணம் வேண்டாம்னு வந்துட்டான்.. போறும் இதோட நிறுத்திப்போம்”

“அப்பா” சட்டென எழுந்தான் சோபாவின் கண் மூடி சாய்ந்திருந்த கோகுல்

“நேக்கு யார் மேலையும் எந்த கோவமும் இல்லப்பா. ஒரு பொண்ணை காணோம்னு அவ அப்பா பதறிண்டிருக்கறச்சே நான் கல்யாணம் பண்ணிக்கறது நியாயமில்லைன்னு தோணித்து.. அதான் கிளம்பி வந்துட்டேன்”

இடம் வலமாக தலை அசைத்தார் வாசுதேவன் “பதட்டம் வந்தா யாரை வேணுமானாலும் தப்பா பேசிடறதா? நன்னா இருக்கே. போறும். கோகுல்... இந்த சம்மந்தம் வேண்டாம்”

“அப்பா... காணாம போனது அவர் பெத்த பொண்ணு பா...யாரா இருந்தாலும் இப்படித்தான் பா பேசுவா” கோகுல் சொல்ல..

“நான் கேக்கற ஒரு கேள்விக்கு நீங்க பதில் சொல்றேளா?” இடையில் புகுந்து ஒலித்தது யசோதையின் குரல்.

“பொண்ணு என்ன.... கார் காணாம போனாலே இப்படி பேசறவாள நான்... பார்த்திருக்கேன்'” அவர் சற்று சூடாகவே சொல்ல எல்லாரும் புரியாமல் நிமிர தொடர்ந்தார் அவர்.

“ரெண்டு மாசம் முன்னாடி உங்க அண்ணாவோட ஆடி கார் காணாம போயிடுத்துன்னு சொல்லி எப்படி தவிச்சேள் ரெண்டு பேரும்... இவன் எடுத்திருப்பானோ அவன் எடுத்திருப்பானோன்னு எப்படி எல்லாம் யோசிச்சேள்.. யார் மேலேயெல்லாம் போலீஸ் கம்பளைன்ட் குடுக்கலாம்ன்னு ராத்திரி பூரா தூங்காமா யோசிச்சிண்டிருந்தேள்.. கடைசியிலே கார்த்தாலே பார்த்தா கார் ஆபீஸ்லே இருந்தது. உங்க அண்ணா அதை அங்கேயே மறந்திட்டு யாரோ ஃப்ரெண்ட்டோட வந்துட்டுடிருந்திருக்கார்... அது வெறும் அறுபது லட்ச ரூபா கார்... அதுக்கே நாம அப்படி பதறினா ஒரு பொண்ணை பெத்தவர் பதற மாட்டாரா நன்னா யோசனைப் பண்ணி பாருங்கோ”

யாரிடமும் பேச்சில்லை. அவர் கேட்ட கேள்வியில் இருந்த உண்மையை மறுத்து பேச முடியவில்லை யாராலும்.

“எது எப்படின்னாலும் கோதை பாவம் அவளை ஏமாத்திடாதீங்கோ.. ப்ளீஸ்” தேவகியும் இணைந்துக்கொள்ள, கொஞ்சம் இளகியவராக அமர்ந்தார் வாசுதேவன்.

சில நிமிடங்கள் மெளனமாக கரைய, எல்லார் மனமும் அலை பாய்ந்து ஒரு நிலைக்கு வர, தனது அண்ணனை மெல்ல நிமிர்ந்து பார்த்தார் வாசுதேவன்.

“கோதை - கோகுல் நிச்சியத்தை இன்னைக்கே பண்ணிடுவோமா?” என்றார் சட்டென ஒரு பெருமூச்சுடன் கலந்த தலை அசைப்பு எழுந்தது நந்தகோபாலிடம்.

நடந்ததை எல்லாம் அவளிடம் விளக்கி விட்டு மிச்சமிருந்த அவள் கண்ணீரை துடைத்தான் கோகுல்.

“எல்லாமே நாம நினைக்கற மாதிரியே நடந்துடுத்துன்னா அப்புறம் லைஃப்லே ஸ்வாரஸ்யமே இருக்காதுடா கண்ணா. இது மாதிரி சின்ன சின்ன ப்ராப்ளம்ஸ் வரணும் அதை நாம தாண்டி ஜெயிக்கணும் சரியா?” என்றான் இதமாக...

முரளியின் அறையில் சென்று அமர்ந்தவளால் சில நிமிடங்களுக்கு மேல் நிம்மதியாக இருக்க முடியவில்லை.

அப்பாவை எல்லாரும் என்னென்ன கேள்விகள் கேட்டுக் கொண்டிருப்பர்களோ என்ற எண்ணமே அவளை வதைத்துக்கொண்டிருந்தது. அவள் நினைத்த படியே தான் நடந்துக்கொண்டிருந்தது கீழே.

முரளியின் நண்பர்களும், அவனது தந்தையின் நண்பர்களும் வர ஆரம்பித்து இருந்தனர். அவர்களிடம் இவர்கள் எதையும் சொல்லி இருக்கவில்லை. வருபவர்களிடம் அப்போதைக்கு எதையாவது சொல்லி சமாளித்து விடலாம் என்ற எண்ணத்தில் இருந்தவர்களுக்கு இப்போது கொஞ்சம் தர்ம சங்கடம் தொற்றிக்கொண்டிருந்தது .

வாசுதேவன் கோதையின் அப்பாவை தனது உறவினர்களிடமெல்லாம் அறிமுக படுத்தத் துவங்கினார். ஒவ்வொருவரிடமிருந்து ஒவ்வொரு விதமான கேள்விகள்..

“பெரியப் பொண்”ணை விட்டுட்டு சின்ன பொண்ணுக்கு முதல்ல பண்றேளே?

“அது... வந்து..” ஸ்ரீதரன் தடுமாற

“பெரிய பொண்ணுக்கு தான் முரளியை பேசி இருந்தது இல்லையோ?”

“ஆமாம் பேசி இருந்தது. ஆனா அவா ரெண்டு பேரும் கொஞ்ச நாள் போகட்டும்ங்கறா. சரி முதல்லே இவா கல்யாணத்தை முடிச்சிடுவோம்னு பண்ணின்டிருக்கோம்” உதவிக்கு வந்தார் வாசுதேவன்.

“ரெண்டு பேருக்கும் ஒண்ணா நடக்க போறதுன்னுன்னா சொல்லிண்டிருந்தேள்? இப்போ ஏன் திடீர்ன்னு மாத்திட்டேள்? ஒரு வேளை பெரியப் பொண்ணு லவ் கிவ்ன்னு ஏதானும்... “

அந்தக் கேள்வியில் அப்பா உடலும் மனமும் கூசிப்போய் நிற்க, சுற்றி இருந்தவர்கள் அவரை ஒரு மாதிரியாக பார்க்க, சரியாக அதே நேரத்தில் மாடியிலிருந்து இறங்கி அங்கே வந்து நின்றனர் கோதையும், வேதாவும்.

மனம் கேட்காமல் கீழே வந்தே விட்டிருந்தாள் வேதா.

“நீ தான் சின்ன பொண்ணாடிமா? நன்னா லட்சணமா இருக்கே. நீயானும் பெரியவா சொல்ற பேச்சை கேட்டுண்டு நல்லப்படியா கல்யாணம் பண்ணிண்டு குடித்தனம் பண்ணு” கோதையைப் பார்த்து சொன்னார் ஒரு பெண்மணி.

சுற்றி நின்றவர்களின் பார்வையில் தான் செத்து பிழைத்துக்கொண்டிருந்த போதிலும் அப்பாவின் முக வாட்டமும் தர்ம சங்கடமுமே அவளை கூறுப்போட்டுக்கொண்டிருந்தது. மனம் குற்ற உணர்ச்சியில் துடித்துக்கொண்டிருந்தது வேதாவுக்கு .

‘ச்சே... எத்தனை பெரிய முட்டாள்த்தனம்.. செய்திருக்கிறேன் நான்... அதுவும் ஒரு கிராதகனை நம்பி... என்னால் எத்தனை பேருக்கு எத்தனை தர்ம சங்கடங்கள்... நான் இங்கே கூனி குறுகி நிற்கிறேன்... அவன் எங்கே நிம்மதியாக கும்மாளம் அடித்துக்கொண்டிருக்கிறானோ?’ நினைத்துக்கொண்டாள் வேதா. அங்கே மருத்துவமனையில் சரவணன் வலியில் துடித்துக்கொண்டிருப்பதை அறியாமல்...

அதற்குள் அவள் அருகே வந்து விட்டிருந்தான் முரளி.

'அதற்குள் உன்னை யார் கீழே வர சொன்னார்கள்?’ என்பதாக ஒரு பார்வை அவனிடமிருந்து.

அதற்குள் அங்கே வந்து சேர்ந்தனர் முரளியின் நண்பர்கள்.

“என்னடா உனக்கு இன்னைக்கு எங்கேஜ்மென்ட் இல்லையா?” கேட்டான் ஒரு நண்பன்

“இல்லடா கொஞ்ச நாள் போகட்டுமேன்னு பார்க்கறேன்..'

'டேய்... இப்பவே உனக்கு முப்பத்தி ஓரு வயசாச்சு... இதுக்கு மேலே தள்ளி போட்டேனா ஸ்ட்ரைட்டா அறுபதாம் கல்யாணம்தான்” நண்பர்கள் கொல்லென சிரிக்க கொஞ்சம் சங்கடத்தில் நெளிந்தான் முரளி. பார்த்துக்கொண்டே இருந்தாள் வேதா.

“நாலு நாள் முன்னாடி அவ்வளவு ஹாப்பியா இன்வைட் பண்ணே இப்போ என்னடா ஆச்சு?” இது அவனுடைய தோழி.

“இல்லமா எங்க ரெண்டு பேருக்கும் ஒரு பேசிக் அண்டர்ஸ்டான்டிங் வரட்டும்னு பார்க்கறேன்... இப்போ கோகுல் என்கேஜ்மென்ட் இருக்கு வாங்க எல்லாரும்... உட்காருங்க” அவன் பேச்சை மாற்றப் பார்க்க... விடவில்லை அவன் தோழி..

“அப்போ இது வேண்டாம்னு சொன்னது நீ தானா? நான் உன்னை பத்தி என்னமோன்னு நினைச்சிருந்தேன். நீ நினைச்சா வேணும்னு சொல்லுவே.. நினைச்சா வேண்டாம்னு சொல்லுவே பாவம்டா அந்த பொண்ணு அவ எப்படி ஃபீல் பண்ணுவான்னு கொஞ்சமாவது நினைச்சுப் பார்த்தியா?” என்ற ரீதியில் அவள் பொரிந்து தள்ள, அதைப் பார்த்துக்கொண்டிருந்த யசோதாவும் நந்தகோபாலும் கொதித்து தான் போனார்கள்.

கொதிக்கும் கோபத்துடன் சட்டென முன்னால் வந்தார் நந்தகோபாலன்.

அடுத்த அத்தியாயத்துடன் நிறைவு பெரும்.
 

Rajam

Well-known member
Member
காதலி எனற போதையில் தடுமாறிவழி மாறிப் போய்
உண்மை உணரந்து திரும்பி வந்தாலும்
குடும்பத்தினர் படும் அவஸ்தை, அவமானம்
பற்றி அழுத்தமா சொன்னது அருமை.
எல்லோரும் நல்லவர்கள் ஆனதால் சுபமாக முடியப் போறது.
 

kothaisuresh

Well-known member
Member
பாவம் வேதா தப்பானவனை நம்பிக்கை தப்பு பண்ண இருந்தா.
பகவான் புண்ணியத்தில் தப்பிச்சிட்டா. இனிமேல் நல்லதே
நடக்கட்டும்
 

Latest profile posts

மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு

New Episodes Thread

Top Bottom