• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே 16

Vathsala Raghavan

✍️
Writer
யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே 16

நேராக அவள் அப்பாவின் அருகில் சென்றான் முரளி “சாயங்காலம் மூணு மணிக்குள்ளே உங்கப் பொண்ணு ஆத்துக்கு வந்திடுவா... கவலைப் படாதேள்... அவ வந்து அவ வாயாலே எல்லா உண்மையும் சொல்லுவா அப்புறம் நீங்க கோகுலை பத்திப் புரிஞ்சுப்பேள்” சொல்லிவிட்டு நகரந்தான் அவன்.

அதன் பிறகு யாரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. அவரவர்கள் தங்கள் வீட்டுக்கு வந்து விட,

கோகுலின் வீட்டில்.

முகத்தில் எந்த வித சலனமும் இல்லாமல் கையில் இருக்கும் டம்பளரில் இருந்த காபியை ருசித்து பருகிக்கொண்டிருந்தான் முரளி.

“பாரு பாரு நான் இவ்வளவு கத்தறேனே கொஞ்சமானும் ஏதானும் பேசறானான்னு பாரு உன் பிள்ளை. ரசிச்சு ருசிச்சு காபி குடிச்சிண்டு இருக்கான். நமக்கு எதிரா எவ்வளவு அழகா பிளான் பண்ணி இருக்கான் இவன். சாயங்காலம் நிச்சயதார்த்தம்ன்னு சொல்லி எத்தனை பேர் வரப்போறா தெரியுமா? போயிடுத்து ஊரிலே நேக்கு இருந்த மானம் மரியாதையை எல்லாம் போயிடுத்து.. இதை கூட என்னாலே பொறுத்துக்க முடியறது. அந்த ஸ்ரீதரன்… என்ன தைரியம் இருக்கணும் அந்த மனுஷனுக்க’ கோபத்தின் உச்சியில் கொதித்துக்கொண்டிருந்தார் நந்தகோபால். முரளியின் தந்தை.

'அதான் நான் நெனெச்ச மாதிரி தான் எதுவுமே நடக்கலையே. கோதை தான் எல்லாத்தையும் மாத்தி பண்ணிட்டாளே? கோகுல் கல்யாணம் வேண்டாம்ன்னு சொல்லிட்டு வரும்போது கூட எல்லாரும் அங்கே பேசாம தானே இருந்தேள்? இங்கே வந்து என்னத்துக்கு குதிச்சிண்டிருக்கேள்..' உதடுகள் வரை வந்த வார்த்தைகளை அப்படியே விழுங்கிக்கொண்டு மெல்ல விழி நிமிர்த்தி எல்லாரையும் பார்த்தான் முரளி.

சோபாவின் பின்னால் சாய்ந்து கண்களை மூடி இருந்தான் கோகுல். புது வேஷ்டியும், ஷர்ட்டும் முகத்தில் தாண்டவமாடும் கல்யாண களையுமாக அமர்ந்திருந்தான் அவன். நடந்த எல்லாவற்றையும் தாண்டி கோதையே அவன் மனதில் நிறைந்திருந்தாள். அவள் மீதான காதல் பல மடங்கு கூடி விட்டதை போன்றே தோன்றியது

பொய், பேராசை, துரோகம்... இது போன்ற குணங்களின் சாயல்கள் கூட இல்லாத வெள்ளை மனம் அவளது. இப்படி பட்ட பெண்ணுடன் வாழ்வதற்காக எப்படி பட்ட அவமானத்தையும் சந்திக்கலாம் என்றே தோன்றியது அவனுக்கு.

அவர் மனதில் என்ன இருக்கிறது என்று கண்டு பிடிக்கவே முடியாத ஒரு பாவத்துடன் அமர்ந்திருந்தார் வாசுதேவன். நியாயமாக இப்படி ஒரு சூழ்நிலையில் இரண்டு அன்னையரின் கண்களிலும் கண்ணீரே நிறைந்திருக்க வேண்டும். ஆனால் இங்கே கண்ணீர் இல்லை. மாறாக இருவர் மனமும் ஏனோ சலனமற்றே இருந்தன.

அவர்கள் முகத்தில் நிறையவே தெளிவு. கோகுலின் அன்னையின் மனதின் ஓரத்தில் கோதையை பற்றி நினைக்க நினைக்க கொஞ்சம் சந்தோஷமும், பெருமையும் கூட இருந்தன என்றே சொல்ல வேண்டும்.

கிட்டதட்ட ஒரு மணி நேரம் கடந்திருக்க அங்கே கோதையின் வீட்டில்....

அப்பாவின் கையில் அந்த கடிதம். அதையே மறுபடி மறுபடி படித்துக்கொண்டிருந்தார் அவர். அவர் முகத்தில் கோப தாண்டவம். அவள் பக்கம் கூட திரும்பவில்லை அவர்.. பெண்ணை பெற்ற தந்தைக்கு எழும் நியாயமான தவிப்பும், கோபமும் அவரிடத்தில்.

அப்பா ஆசை ஆசையாக வாங்கிக்கொடுத்த அந்த புது பட்டுப்புடவையும், காதில் ஊஞ்சலாடிக்கொண்டிருந்த ஜிமிக்கிகளும், கூந்தலில் மணம் வீசிக்கொண்டிருந்த மல்லிகை சரமுமாக அப்பா அமர்ந்திருந்த நாற்காலியின் கீழே... அவர் முகத்தையே பார்த்தபடி அமர்ந்திருந்தாள் கோதை........

“அப்பா” அவள் அழைக்க திரும்பவே இல்லை அவர்.

‘நான் தப்பு செய்து விட்டேனா? என் அப்பாவை ஏமாற்றி விட்டேனா?’ தவிப்புடன் அவரையே பார்த்திருந்தாள் கோதை. தான் எல்லாவற்றையும் அவரிடம் முன்னதாகவே சொல்லி இருந்தால் இந்த நிலை வந்திருக்காதோ என்னவோ?

அந்த நேரத்தில் ஒலித்தது அவர்கள் வீட்டு தொலைப்பேசி. சில நாட்களுக்கு பிறகு அப்போதுதான் சரியாகி இருந்தது அது.

“ஹலோ” என்றார் ஸ்ரீதரன்

“நான் ராஜகோபாலன் பேசறேன்டா.... ரெண்டு நாளா நோக்கு ட்ரை பண்றேன் நான். எந்த போனும் கிடைக்கலையேடா” என்றார் அவர்.

விக்கி நேற்று அவரை அந்த கெஸ்ட் ஹௌசின் அறையில் அடித்து போட்டு விட்டு போனபிறகு இரவுதான் நினைவு திரும்பி இருந்தது அவருக்கு. அங்கிருந்து எப்படியோ சமாளித்து வெளியே வந்தவரால் இப்போதுதான் இவர்கள் வீட்டு தொலைபேசியை தொடர்பு கொள்ள முடிந்திருந்தது.

“உன் பொண்ணு வேதா பத்திரமா ஆத்துக்கு வந்துட்டாளாடா?”

“வேதாவா? இன்னும் வரலையேடா... எங்கேடா பார்த்த அவளை?”

இங்கேதான்டா. நம்ம கோவில்ல... யாரோ ஒரு கிராதகன்கிட்டே மாட்டிண்டிருக்கா அவ. என்னையும் அடிச்சு போட்டுட்டு போயிட்டான்டா அவன். நேக்கு இப்போதான் உடம்பு கொஞ்சம் தேவலாம்... அவ எங்கே இருக்களோ தெரியலையே...” அவர் சொல்ல..

“பெருமாளே...” ஸ்ரீதரனின் குரல் அலறலுடன் வெளிவந்தது.

“சீக்கிரம் போலிசுக்கு போய் கம்பளைன்ட் குடுப்பா..” ராஜகோபாலன் சொல்ல, தொலைபேசியை வைத்துவிட்டு அப்படியே அமர்ந்தார் ஸ்ரீதரன்.

“அப்பா... என்னாச்சுப்பா?” கோதை பதற

“அக்கா யார்கிட்டேயோ மாட்டிண்டு இருக்கா மா..நேக்கு ரொம்ப பயமா இருக்கு கோதை..” கலவரம் மிகுந்து இருந்தது ஸ்ரீதரனின் குரலில்.

“அதான் முரளிண்ணா சொன்னரோன்னோ.. இப்போ கூட்டிண்டு வந்திடுவார்பா... நீங்க தைரியமா இருங்கோ” சொன்னாள் அவள்.

சரியாக அந்த நேரத்தில், உள்ளே நுழைந்தாள் வேதா. அவளுடன் நின்றிருந்தான் முரளி...

“மாமா... உங்கப் பொண்ணு...” சொன்னான் முரளி. அவன் பார்வையில் ஓராயிரம் கேள்விகள். பல ஆயிரம் பதில்கள்.

சில நொடிகள் பேச வார்த்தைகளின்றி மற்றவர்கள் நிற்க “தேங்க்ஸ்ண்ணா” என்றாள் கோதை..

“பரவாயில்லைமா... நான் கிளம்பறேன்..” அவன் நகரப்போக...

“அதுக்குள்ளே கிளம்பறேளே?” என்றார் ஸ்ரீதரன் தயக்கமான குரலில் “காபி... ஏதானும் சாப்பிட்டு போங்கோ”

“இல்ல மாமா இருக்கட்டும்... இன்னொரு வாட்டி வரேன்... வேதா ரெண்டு நாளா சரியா சாப்பிட்டிருக்க மாட்டா ஏதாவது சாப்பிட சொல்லுங்கோ” சொல்லிவிட்டு திரும்பியவன் ஒரு முறை வேதாவின் பக்கம் திரும்பி..

“வரேன்மா” என்று சொல்லிவிட்டு நகரந்தான்.

அவன் சென்ற பிறகும் அதே இடத்தில் நின்றிருந்தாள் வேதா. உடலின் ஒவ்வொரு அணுவிலும் ஊசி குத்துவதை போன்றதொரு உணர்வு. சொந்த வீடு கூட திடிரென அந்நியமாகி விட்டதை போன்றதொரு உணர்வு. இறுக மூடிய கண்களை தாண்டி கண்ணீர் வழிந்துக்கொண்டிருந்தது நடந்தவை எல்லாம் அவள் மனத்திரையில் ஓடி ஓடி மறைந்துக்கொண்டிருந்தன

நேற்றிரவு அந்த கைப்பேசி அவள் கையில் கிடைத்தபோது சந்தோஷத்தில் திக்கு முக்காடிப்போனாள் அவள்.

யாரை அழைப்பது என்று புரியவில்லை அவளுக்கு. அப்பாவையோ, கோதையையோ இந்த நேரத்தில் அழைப்பது சரி இல்லை என்று தோன்ற, சட்டென மனதில் வந்தது அந்த எண், முரளியின் எண்.

உடல் சோர்வு அவளை அழுத்த, மறுபடியும் தலை சுற்ற ஆரம்பித்திருந்தது அவளுக்கு. மறுபடியும் மயங்கி விடுவேனோ? மடமடவென அழுத்தினாள் முரளியின் எண்ணை.

போன் ஒலித்துக்கொண்டே இருக்க அழைப்பை ஏற்கவில்லை முரளி அந்த நேரத்தில் நல்ல உறக்கத்தில் இருந்தனர் முரளியும், கோகுலும்.

இரண்டு மூன்று முறை முயல, கண்கள் இருட்டிக்கொண்டு வந்தது வேதாவுக்கு. அந்த நொடியில் ஏற்கப்பட்டது அழைப்பு.

“ஹலோ” என்றது மறுமுனை. அவனுக்கு கோதையின் இந்த எண் தெரிந்திருக்க நியாயம் இல்லையே.

“மு... முரளி...”

“எஸ்”

'நா ... நான் வேதா பேசறேன்... நான்... நான் எங்கே இருக்கேன்னு தெரியலை முரளி... நான் இங்கே இருட்டிலே... கார்லே... தனியா... ' அதோடு மயங்கிவிட்டிருந்தாள் அவள். அதன் பிறகு நடந்தவை எல்லாம் இப்போது முரளி சொல்லும்போதே தெரிய வந்தது அவளுக்கு.

அதன் பிறகு இரண்டு மூன்று முறை அவன் முயல . அவள் அழைப்பை ஏற்காமல் போக, அவனது நான்காவது முயற்சியில் அழைப்பை ஏற்றது மாயக்கண்ணன்.

“ஹலோ..”

“ஹலோ... திஸ் இஸ் முரளி...”

“முரளி..... நீங்க கோகுல் பிரதர்தானே? நான் இன்ஸ்பெக்டர் மாயக்கண்ணன்.”

'கண்ணன்... நீங்க எப்படி அங்கே... வேதா?”

“யா.. வேதா என் பக்கத்திலே தான் இருக்காங்க. பார்த்துட்டோம் முரளி. மயக்கமா இருக்காங்க. இந்த கார் கொஞ்ச நேரம் முன்னாடி இங்கே இருந்த ஒரு டோல் கேட் கிராஸ் பண்ணி இருக்குன்னு எனக்கு மெசேஜ் வந்தது. அதான் ட்ரேஸ் பண்ணி இங்கே வந்தேன். ரெண்டு பேர் இவங்களை கடத்த முயற்சி பண்ணி இருக்காங்க முரளி. இவங்க எப்படியோ சமயோசிதமா தப்பிச்சு இருக்காங்கன்னு தோணுது. ஒகே நான் இவங்களை ஹாஸ்பிடல் கொண்டு போயிட்டு உங்களுக்கு கால் பண்றேன்”

“அவனுங்க ரெண்டு பேர்?”

“அவனுங்களை பத்தி நீங்க ஏன் கவலை படறீங்க? அவனுங்க இனிமே ஜெயிலிலே இருந்து வெளியே வராத மாதிரி நான் பார்த்துக்கறேன்” என்றான் மாயக்கண்ணன்.

அதன் பிறகு கோகுலிடம் கூட எதுவும் சொல்லவில்லை முரளி. வேதா கிடைத்துவிட்டதை அறிந்தால் இந்த திருமண திட்டத்தை அவன் தள்ளி வைக்க கூடும் என்று ஒரு எண்ணம் முரளிக்கு.

அதன் பிறகு வேதாவுக்கு நினைவு திரும்பவே மணி எட்டு ஆகி இருந்தது. மயங்கி இருந்த வேதாவை பற்றி சில தகவல்கள் தெரிந்துக்கொள்ளவும் , சரவணனை பற்றிய தகவல்கள் சொல்லவும் தான் மாயக்கண்ணன் காலையில் கோகுலை அழைத்ததே.

சில நிமிடங்கள் நடந்த எல்லாவற்றையும் நினைத்தபடியே அப்படியே நின்றிருந்தாள் வேதா

‘எத்தனை பெரிய முட்டாள்தனம் செய்திருக்கிறேன் நான்?’ கண்களைத் திறந்து அப்பாவை பார்க்க கூட இயலவில்லை அவளால்.'

கோகுல் - கோதை திருமணம் நடக்காமல் போனது வரை எல்லாவற்றையும் அவளிடம் சொல்லிவிட்டிருந்தான் முரளி.

'என்னால் எத்தனை பேருக்கு எத்தனை வலிகள்? எனது தங்கையின் வாழ்க்கையும் இப்போது கேள்விக்குறியா?’ உடலும் உள்ளமும் நொறுங்கி போனது போன்றதொரு உணர்வுடன் அவள் நின்றிருக்க...

“அக்கா... “அவள் அருகில் கேட்டது கோதையின் குரல். சடக்கென கண்களை திறந்தாள் அவள்.

“கோதை செல்லம்” உடைந்தது அக்காவின் குரல்.

“அழாதேகா... அதான் நீ வந்துட்டியோன்னோ அது போறும்... நடந்ததை எல்லாம் மறந்திடு...”

அடுத்து அருகில் வந்தார் அத்தை “ஏண்டிமா... ஏண்டி மா நோக்கு இப்படி எல்லாம் புத்தி போறது... என் தங்கம்.. சரி பத்திரமா வந்துட்டியோன்னோ விடு...”

அடுத்து அப்பா!

இருந்த இடத்தை விட்டு அசையாமல் அவர் அவளையே பார்த்திருக்க... அவர் கன்னங்களை கண்ணீர் தொட்டிருக்க... மெல்ல நிமிர்ந்தவள் அப்படியே ஓடி சென்று அவர் காலில் விழுந்து குலுங்க துவங்கினாள். அப்படியே அவர் காலடியில் நடந்தவை எல்லாவற்றையும் கொட்டி விட்டிருந்தாள் அவள்.

அதே நேரத்தில்... தனது சொந்த ஊரின் அருகே இருந்த அந்த மருத்துவமனையில் படுக்கையில் கிடந்தான் சரவணன்.

அவனுடைய உறவினர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தார் அந்த மருத்துவர்

“இவர் வந்த கார் மேலே லாரி மோதி இருக்கு. கார் மொத்தமா நொறுங்கி போச்சு. இவருக்கு முதுகு தண்டுல பல இடங்கள்லே அடி பட்டிருக்கு. இவ்வளவு தூரம் முயற்சி பண்ணி அவருக்கு நினைவு திரும்பி இருக்கு. ஆனா காலம் முழுக்க இவர் படுக்கையிலேயே தான் இருக்க வேண்டி இருக்கும்”

அங்கே உள்ளே ஐ.சி.யூவில் அரை மயக்கத்தில் வலியில் முனங்கிகொண்டிருந்த சரவணனின் கண்களுக்குள் வேதா வந்து வந்து போய்க்கொண்டிருந்தாள். அவன் செய்த பாவங்கள் அவன் அருகில் நின்று சிரித்துக்கொண்டிருந்தன.

நேரம் மாலை நான்கை தொட்டிருந்தது. கோதையின் வீட்டில் அவரவர்கள் ஒவ்வொரு ஓரத்தில் அமர்ந்திருந்தனர். நியாயமாக இன்று மாலை நிச்சியதார்த்தம் நடக்க வேண்டும். இப்போது இவர்கள் கிளம்பி இருக்க வேண்டும்.

கோகுல் குடும்பத்தினரும், ஏன் கோகுலுமே கூட இதனால் எத்தனை காயப்பட்டு போயிருக்கிறான் என்பது இவர்களுக்கெல்லாம் புரியாமல் இல்லை. பல்வேறு எண்ண அலைகள் மனதிற்குள் அடிக்க செய்வதறியாது அமர்ந்திருந்தனர் அனைவரும்,

'கையை விட்டா தானே கிளம்ப முடியும்...' கொஞ்ச நேரம் முன்னால் கோகுல் சொன்னது நினைவுக்கு வந்தது கோதைக்கு.

'அவர்தான் சொன்னார்ன்னா நீ ஏண்டி விட்ட கையை. இன்னும் சித்த நாழி பிடிச்சிண்டிருந்திருக்கலாமோன்னோ? போகதேள்ன்னு சொல்லி இருக்கலாமோன்னோ? கிளம்பி போயிட்டார் பார்.? போச்சு எல்லாம் முடிஞ்சு போயிடுத்து.’ தனக்குள்ளேயே சொல்லிகொண்டிருந்தாள் கோதை.

தான் இப்படி எல்லாம் இருந்ததே இல்லை என்று தோன்றியது அவளுக்கு. நான் ஏன் இப்படி ஆகிப்போனேன்?

மனம் நிலைக்கொள்ள மறுத்தது. முன்பொரு நாள் நான் கோகுலை பற்றி நினைத்துக்கொண்டிருக்கும் போதே சரியாக தொலைபேசியில் அழைத்தானே அதே போல் இன்றும் அழைப்பானோ?

அவள் நினைத்துக்கொண்டிருந்த போதே ஒலித்தது தொலைப்பேசி. ‘கோகுல்தான். கோகுலாகத்தான் இருக்கும்’. ஓடினாள் தொலைபேசியை நோக்கி.

“ஹலோ...'

மறுமுனையில் ஏதோ ஒரு வேறே குரல்.

“ராங் நம்பர்” தோற்றுப்போன பாவத்துடன் வந்து அமர்ந்தாள் கோதை.

முரளி!

முரளியை பற்றிய எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தன வேதாவின் மனதில். சில மணி நேரங்கள் முன்புதானே அவள் அவனை நேரில் பார்த்தாள். அப்போது மாயக்கண்ணனுடைய காவல் நிலையத்தில் அமர்ந்திருந்தாள் அவள்.

நியாயமாக அவன் நிலையில் இருக்கும் யாரும் இப்படி நடந்துக்கொண்டிருந்திருக்க மாட்டார்கள். அவளை பார்த்த மாத்திரத்தில் பளீரென புன்னகைதான் அவன்.

“ஹாய்... வேதா” வியந்து திகைத்துத்தான் போனாள் அவள். மாயக்கண்ணனுடன் பேசி விட்டு அவளை அழைத்துக்கொண்டு காரில் கிளம்பினான் அவன்.

அருகில் அமர்ந்து காரை செலுத்திக்கொண்டிருந்தவனின் முகத்தை பார்க்கக் கூட கூசியது தான் அவளுக்கு. தலை குனிந்தே அவள் அமர்ந்திருக்க...

“ரெண்டு நாளா ஏதாவது சாப்பிட்டியாமா நீ? ரொம்ப டல்லா இருக்கியே?” அவன் குரல் மிக இதமாக அவள் மனம் வருட சடக்கென திரும்பியவளின் கண்களில் நீர்க் கட்டிக்கொண்டது.

“ஏதானும் சாப்பிடறியா மா””

“இ... இல்லை... நான் ஆத்துக்கு போறேன்.. அப்... அப்பாவை பார்க்கணும்”

சின்ன தலை அசைப்புடன் அவன் காரை செலுத்திக்கொண்டிருக்க “சாரி” என்றாள் மெல்ல. “உங்க எல்லாரையும் ரொம்ப கஷ்டப் படுத்திட்டேன்”

இதமாக புன்னகைத்தான் அவன் “நேக்கு ஒண்ணுமில்லை மா. கோகுலும் கோதையும் தான் பாவம்” என்றவன் நடந்த எல்லாவற்றையும் சொன்னான் அவளிடம். கண்ணீர் நிற்க மறுத்தது அவளுக்கு.

“சரி விடுமா... இனிமே நடக்கவேண்டியதை பார்ப்போம்” அவன் சொல்ல இன்னும் அதிமாக வந்தது கண்ணீர்.

சில நொடிகள் யோசித்தவன் மெல்ல கேட்டான் “தப்பெல்லாம் இந்த கோகுல் மேலே தான் இதுக்குதான் நான் கோகுல் கிட்டே படிச்சு படிச்சு சொன்னேன். அவன் தான் கேக்கலை”

“என்னது?”

“டேய்... வேண்டாம்டா. பொண்ணுக் கிட்டே என் போட்டோ காட்டதே, அது ஓடிப் போயிடும்ன்னு திரும்பத் திரும்ப சொன்னேன். அவன் கேக்கலை. கொண்டு வந்து உன்னன்ண்ட காமிச்சிருக்கான். நீ ஓடிப் போயிட்டே” அவன் முகத்தை படு தீவிரமாக வைத்துக்கொண்டு சொல்ல அந்த சூழ்நிலையின் அழுத்தத்தையும் மீறி கலகலவென சிரித்தே விட்டிருந்தாள் வேதா.

அவளுடன் சிரிப்பில் இணைந்துக்கொண்டவன் மெல்ல சொன்னான் “வேதா எப்பவும் இதே மாதிரி சிரிச்சுண்டே இருக்கணும்”

நினைக்க நினைக்க உள்ளம் குமறியது அவளுக்கு ‘எத்தனைப் பெரிய முட்டாள்தனம் செய்து விட்டேன் நான்?’

கோதை இன்னமும் கோகுலின் நினைவிலேயே அமர்ந்திருந்தாள்.

'அடியேய்... ஆத்து மாப்பிள்ளை முதல் முதலா ஆத்து வாசலிலே வந்து நிக்கறேன். ஆரத்தி எடுக்காம அச்சச்சோங்கறே? என்று முன்பு ஒரு முறை எதிர்பாராத நேரத்தில் வந்து நின்றானே அது போல் இப்போது வந்து நிற்பானோ?

அவள் நினைத்து முடிக்க ஒலித்தது அழைப்பு மணி. வாசலை நோக்கி ஓடினாள் கோதை. ஆனால் அங்கே நின்றிருந்தது கோகுல் இல்லை.

அங்கே நின்றிருந்தார் கோகுல் வீட்டு டிரைவர். கோதை அவர் யாரென புரியாமல் பார்க்க..

“வணக்கம்மா” என்றார் அவர் மாரியாதையாக. “நான் வாசுதேவன் சார் வீட்டிலே இருந்து வரேன். கார் கொண்டு வந்து இருக்கேன். உங்களையெல்லாம் வரச் சொன்னங்க. ஆறரை மணிக்கு நிச்சியதார்த்தம்ன்னு சொல்லச் சொன்னாங்க”

வியப்பும் சந்தோஷமும் மேலோங்க சில நொடிகள் தடுமாறித்தான் போனாள் கோதை

“நீங்.... நீங்க உள்ளே வந்து உட்காருங்கோ”

“இருக்கட்டும்மா நான் கார்லே இருக்கேன்” அவர் போய்விட உள்ளே ஓடினாள் கோதை.

“நிச்சயதார்த்தமா?” மகிழ்ச்சியுடனே திகைப்பும் மேலோங்கியது அப்பாவுக்கு. அவர்கள் வீட்டிலிருந்து இப்படி ஒரு அழைப்பை எதிர்ப்பார்க்கவே இல்லைதான் அவர். சில நிமிடங்கள் செய்வதறியாது நின்றிருந்தார் அவர்.

மெல்ல நிமிர்ந்தாள் தரையில் அமர்ந்திருந்த வேதா. அவளுக்குள்ளும் சந்தோஷ ஊற்றுகள்.

'எப்படியோ தங்கையின் வாழ்கை சரியாக அமைந்தால் போதும் என்று தோன்றியது அவளுக்கு. அதற்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம்'

நம்பவே முடியவில்லை கோதையால். எல்லாம் சரியாகி விட்டதா? கோகுலை நான் மறுபடியும் பார்க்க போகிறேனா?

அதே நேரத்தில் கோதையின் அப்பாவி மனதிற்குள்ளே சின்னதாக இன்னமொரு ஆசை. நிச்சியம் என்று தானே சொல்லி இருக்கிறார்கள்? எனக்கு மட்டும் என்று சொல்லவில்லையே. ஒரு வேளை அக்காவுக்கும் நடந்து விடுமோ?

யோசித்தபடியே சட்டென அவளருகில் வந்தாள் கோதை.

“அக்கா. நீயும் கிளம்புக்கா”

அடுத்தக் கட்ட யோசனை வேதாவின் மனதில்

'நான் அங்கே போவதா வேண்டாமா? என்னதான் அவர்கள் இந்த நிச்சியதார்த்தம் நடக்க வேண்டுமென்று முடிவு செய்திருந்தாலும் தன்னால் அவர்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சலை மறக்கும் அளவுக்கு அங்கே இருப்பவர்கள் பெரிய ஞானிகள் இல்லையே?’

போகாமலே இருந்துவிடலாம் என்று தான் தோன்றியது. போனால் அங்கே இருப்பவர்கள் பார்வையும் வார்த்தைகளும் அவளை கூறு போட்டு விடாதா?

'சரி. நான் போகவில்லை என்றால்? இதே பார்வைகளும், வார்த்தைகளும் அப்பாவை தைக்காதா? எப்படி தாங்கிக்கொள்வார் அதை?' நினைக்கும் போதே அவள் உடல் கொஞ்சம் நடுங்கத்தான் செய்தது.

அடுத்த நொடி முடிவு செய்துக்கொண்டவளாக சொன்னாள் வேதா “இதோ கிளம்பறேண்டா”

“நீயுமா வேதா?” கொஞ்சம் அதிர்ச்சிக் கலந்த குரலில் கேட்டார் அப்பா “அங்கே எல்லாரும் உன் பேர்லே கோவமா இருப்பாமா. உன்னை யாரனும் ஏதானும் சொல்லப்போறா?”

'இல்லப்பா நான் வரேன். கோதை நிச்சியத்தை நான் பார்க்கணும்” உறுதியான சொன்னாள் வேதா.

“எல்லாம் நல்லபடியா நடக்கும் ஸ்ரீதரா.. கோதைக்கானும் நல்ல வாழ்கை கிடைக்கறதோன்னோ சந்தோஷமாக் கிளம்பு” சொன்னார் அத்தை.

என்ன நடக்கக் போகிறதோ என்று நினைக்கும் போதே அவரை பயம் உலுக்கிய போதும், தனது இளைய மகளின் நல் வாழ்க்கைக்காகவே எதையும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் கிளம்பினார் அவர்.

அவசரம் அவசரமாக எளிமையான அலங்காரத்தில் கோதைத் தயாராகி வர, பூ-பழ தட்டுக்களுடனும், கிளம்பினர் அனைவரும். நிறையவே யோசனைகளுடனும் மனக்குழப்பங்களுடனும். இருந்தவர்களை சுமந்துக்கொண்டு கோகுல் வீட்டை நோக்கி பறந்துக்கொண்டிருந்தது கார்.
தொடரும்
 

kothaisuresh

Well-known member
Member
கோகுலாத்தவாளுக்கு என்ன பெரிய மனசு இல்ல. இரண்டு பொண்ணுங்களுக்கும் நல்லபடியா நித்சயம் ஆகட்டும்
 

Rajam

Well-known member
Member
கோகுல்,முரளி பெற்றோர்கள்
மிகவும் நல்லவர்கள்.
இதோ ,இருவரின் நிச்சயதார்த்தம்
கோதை ,வேதா வோடு நடக்கப்போகிறதே.
எல்லோரும் நல்லவர்களே.
 

Latest profile posts

மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு
முள்ளில்லா முல்லைப்பூ இன்னும் இரண்டு எபியில் முடிந்துவிடும். கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணிவரை மட்டுமே இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீட்டிக்கப்படமாட்டாது. படிக்க நினைப்பவர்கள் விரைவில் படித்துவிடுங்கள். லைக்கோ கமெண்டோ சொல்லிட்டும் போங்க.

New Episodes Thread

Top Bottom