• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே 15

Vathsala Raghavan

✍️
Writer
யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே 15

ரிஜிஸ்டர் ஆபீசின் வாசலில் சென்று நின்றது கோகுலின் கார். அங்கே காத்திருந்தனர் முரளியும் பெற்றோரும். வழக்கமான நலம் விசாரிப்புகளைத் தாண்டி அப்பாக்கள் மூவரும் எதுவும் பேசிக்கொள்ள வில்லை. முரளியை அறிமுகம் கூட செய்யவில்லை அவர்கள்.

மனம் ஒரு நிலையிலேயே இல்லை. ஸ்ரீதரனுக்கு. ஏதோ ஒன்று சரி இல்லை என்றே தோன்றிக்கொண்டிருந்தது அவருக்கு.

கோதையின் அருகில் சென்று அவள் தோளை அணைத்துக்கொண்டார் யசோதா. அருகில் வந்து நின்றார் தேவகி.

“வாம்மா” இரண்டு அம்மாக்களும் ஒன்றாக சொல்ல அவர்களது வாஞ்சையான புன்னகை கோதையின் மனதை ஊசி முனையாய் தைத்தது. அவளது முக மாற்றம் கோகுலுக்கும், முரளிக்கும் புரியாமல் இல்லை.

யசோதைக்கு ஏனோ மனம் இன்னமும் ஆறவில்லைதான். கோதையின் முகத்தை பார்த்து கேட்டார் அவர்...

“அக்கா எங்கே மா? ஊருக்கு போயிருக்காளா?”

“ம்... ஆங்... ஆமாம் டெ... டெல்லிக்கு...” வார்த்தைகள் தட்டு தடுமாறி வெளியே வர கண்களின் ஓரத்தில் கண்ணீர் வெளியே வரட்டுமா என கேட்க, இரண்டு அம்மாக்களுக்கும் அவள் சொல்வது உண்மையில்லை என்று புரிந்தே போனது.

யசோதையின் கரம் கோதையின் தோளை மெல்ல வருடியது

“சரி சரி விடு... எங்க கோதை சொன்னா சரி... வா” உயிர் மொத்தமாக வற்றிப்போன ஒரு உணர்வு கோதைக்கு.

தேவகிக்குள் கொஞ்சம் வருத்தம் பரவத்தான் செய்தது. 'இவளுமா பொய் சொல்கிறாள்?'

“சரி சரி வாங்கோ எல்லாரும் உள்ளே போலாம். வந்த வேலையை முதல்லே முடிச்சிடுவோம்.” இது முரளி....

அவர்கள் உள்ளே நுழைய போக “ஹேய்... கோதை” கேட்டது ஒரு குரல். “என்ன நீ மட்டும் வந்திருக்கே உங்க அக்கா எங்கே?” ஒரு நொடி இதயம் நின்று துடித்தது கோகுலுக்கும், முரளிக்கும்.

அங்கே புன்னகையுடன் நின்றிருந்தாள் வேதாவுடன் வேலை பார்க்கும் ரஞ்சனி. கவிதா அளவுக்கு பழக்கம் இல்லை என்றாலும் ஓரிரு முறை வேதாவுடன் அவர்கள் வீட்டுக்கு வந்திருக்கிறாள் ரஞ்சனி.

பதிலுக்கு கோதை மெல்ல புன்னகைக்க.

“ஏன் உங்க அக்கா ரெண்டு நாளா ஆபீஸ் வரலை.” அடுத்தக் கேள்வியாக கேட்டே விட்டாள் ரஞ்சனி

“அது... அக்கா... அக்....” கோதை தடுமாற

“எக்ஸ்க்யூஸ்மீ மேடம்” இடைப் புகுந்தான் முரளி. “உள்ளே கொஞ்சம் முக்கியமான வேலை இருக்கு. முடிச்சிட்டு வந்து உங்ககிட்டே பேசறோமே”

“ஓ..ஷுயர்... ஷுயர்” என்று புன்னகையுடன் சொல்லி விட்டு விடை பெற்றாள் ரஞ்சனி.

“சரி... வாங்கோ உள்ளே போலாம்” முரளி சொல்ல எல்லாரும் நடக்க, கால்கள் பின்னவது போல் ஒரு உணர்வு கோதைக்கு. இரண்டு மூன்று அடிகள் எடுத்து வைத்தவள் நின்றே விட்டாள். சட்டென திரும்பினான் கோகுல்.

“சரி சரி விடு... எங்க கோதை சொன்னா சரி” யசோதா சொன்னதே அவள் காதுக்குள் கேட்டுகொண்டிருந்தது.

'முடியாது. என்னால் இதற்கு மேல் பொய் சொல்ல முடியாது'

அவள் மனம் அலற மெதுவாக விழி நிமிர்த்தி கோகுலின் முகம் பார்த்தாள் கோதை. கெஞ்சலும், தவிப்புமாக அவளது பார்வை அவனை ஊடுருவியது. அவனுமே நின்று விட்டான்

“வேண்டாமே... பொய் வேண்டாமே...” .இடம் வலமாக தலை அசைத்தாள் கோதை.

“என்னடா ரெண்டு பேரும் நின்னுட்டேள்... வாங்கோ” அழைத்தான் முரளி.

இவர்களின் எண்ண ஓட்டங்கள் போகும் திசை அவனுக்கு புரியாமல் இல்லை. அசையவில்லை கோதை. இமைக்காமல் கோதையின் முகம் பார்த்திருந்தான் கோகுல்.

அவனிடம் கெஞ்சின அவள் கண்கள் “எல்லாவற்றையும் சொல்லிவிடவா?”

அவள் உள்ளம் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் புரிந்தது அவனுக்கு. அதற்கு மேல் அவளை தவிக்க விட மனம் இல்லை அவனுக்கு. தலை அசைத்து விட்டான் அவன்.

“என்னாச்சுமா?” யசோதா கேட்க

கைக் கூப்பினாள் கோதை “என்னை மன்னிச்சிடுங்கோ. அக்கா டெல்லி போகலை”

மூன்று தந்தையரும் அதிர்ந்து போய் பார்க்க, இரண்டு அன்னையரும் வியப்புடன் நிற்க, தோற்றுப்போன பாவத்துடன் முரளி பார்க்க, எந்த பாவமும் இல்லாமல் கோதையையே பார்த்திருந்தான் கோகுல்.

அதே நேரத்தில் சற்றே அதிர்ச்சியுடன் தனது நெஞ்சின் மீது கை வைத்துக்கொண்ட ஸ்ரீதரனின் கையில் தட்டுப்பட்டது அந்த காகிதம். எதோ ஒரு உந்துதலில் அவர் அதை வெளியில் எடுக்க, வேதாவின் கையெழுத்தில் சிரித்தது அந்த கடிதம்

அப்பா...

என்னை மன்னிச்சிடுங்கோ. உங்களண்டை சொல்லாம நான் ஆத்தை விட்டு போறேன். நேக்கு கோகுலை பிடிச்சிருக்கு. ஜி.கே க்ரூப்ஸ் கோகுல். அவர் என்னை கல்யாணம் பண்ணிக்கப் போறார். மாம்பலம் ரயில்வே ஸ்டேஷன்னுக்கு என்னை வர சொல்லி இருக்கார். கல்யாணம் பண்ணிண்டு ரெண்டு பேரும் ஒண்ணா ஆத்துக்கு வருவோம். நான் இப்படி பண்றதுனாலே கோதையோட வாழ்கை கஷ்டபடும்தான் நான் அவளுக்கு பண்றது துரோகம் தான். ஆனா நேக்கு வேறே வழி தெரியலை.

சாரிப்பா

வேதா...

இரண்டு மூன்று முறை திரும்ப திரும்ப படித்த பிறகே அந்த கடிதத்தில் இருந்த வார்த்தைகளின் பொருள் முழுவதுமாக புரிந்தது மற்றவர்களை விட்டு சற்று தள்ளி நின்றிருந்த ஸ்ரீதரனுக்கு.

உடனே எல்லா பெற்றவர்களுக்கும் வரும் அந்த வழக்கமான எண்ணமே வந்தது வேதாவின் அப்பாவுக்கு.

‘என் பொண்ணுக்கு என்னத் தெரியும்?” பாவம் அவள் ஒரு குழந்தை. அவள் மேலே எந்த தப்பும் இருக்காது. யார் கெடுத்தார்கள் அவள் மனதை?

'என்னடி அப்படி பார்க்கறே? கோகுல் எப்பவுமே என் ஆளு தெரியுமா? நாங்க ரெண்டு பேரும் எவ்வளவு க்ளோஸ்ன்னு இந்த ஊருக்கே தெரியும். என்ன கோகுல்?’ அன்று கோகுலின் தோளில் கை போட்டுக்கொண்டு வேதா சொன்னது ஒரு முறை கண் முன்னே வந்து போனது அப்பாவுக்கு.

மனம் படபடத்து போனது அவருக்கு. 'என் பெண் பொய் சொல்ல மாட்டாள். அப்படி என்றால் இந்த கடிதத்தில் அவள் எழுதி வைத்திருப்பது உண்மை என்றால்... அவள் எங்கே சென்றிருக்கிறாள் என்று இந்த கோகுலுக்கு கண்டிப்பாக தெரிந்திருக்கும்'

“அக்கா டெல்லி போகலை” கண்களில் நீர் பளபளக்க கோதை சொல்ல...

“சரி டெல்லி போகலை. மும்பை போயிருப்பா. இப்போ அதுவா முக்கியம்? அவ வரும்போது வரட்டும். நீ வா” அவசரமாக இடையில் புகுந்தான் முரளி. முரளியை பார்த்து இடம் வலமாக தலை அசைத்தாள் கோதை

“இல்ல... ப்ளீஸ்ண்ணா. நான் எல்லாத்தையும் சொல்லிடறேன்”

பின்னர் இரண்டு அன்னையரையும் பார்த்து சொன்னாள் அவள்

“அக்கா ஆத்தை விட்டு போயிட்டா. எங்கே போயிருக்கான்னு தெரியலை” மெளனமாக இருவரும் கண்களை தாழ்த்திக்கொள்ள பாய்ந்தார் முரளியின் அப்பா

“என்னது ஆத்தை விட்டு போயிட்டாளா? அப்படின்னா ஓடிப்போயிட்டா இல்லையா?” கடுமையான குரலில் கேட்டார் அவர். “நினைச்சேன். ஆரம்பத்திலிருந்தே ஏதோ ஒண்ணு சரியில்லைன்னு தோணிண்டே இருந்தது”

அவரது கோப பார்வை அவளது அப்பாவின் பக்கம் திரும்ப

“அப்போ இத்தனை நாழி இந்த விஷயத்தை நீங்க எல்லாரும் எங்களண்டை மறைச்சிருக்கேள் இல்லையா?”என்றார்.

அவரது பார்வையிலும் குரலிலும் கொஞ்சம் நடுங்கித்தான் போனாள் கோதை. அவளது அப்பா மெல்ல விழி நிமிர்த்த அதற்குள் பதறியபடி சொன்னாள் கோதை.

“இல்லை. அப்பாக்கு எதுவும் தெரியாது. அவர் ரெண்டு நாளா அவர் ஊரிலேயே இல்லை. இதை நான் அவரண்ட கூட சொல்லலை. தப்பு எல்லாம் என்னோடது தான்”

“கோதைப் பொண்ணு” தவிப்புடன் அவள் அருகில் வந்தான் கோகுல். அவன் வாய் திறப்பதற்குள் அவர் கோபம் உச்சிக்கு போய்விட.

“உன்னை ரொம்ப அப்பாவி பொண்ணுன்னு நினைச்சோம். என்ன தைரியம் இருக்கணும் நோக்கு? எத்தனை திருட்டுத்தனம் நோக்கு? பொய் சொல்லி இந்த கல்யாணத்தை நடத்திண்டுடலாம்ன்னு பார்த்தியோ?” எகிறினார் நந்தகோபாலன். யசோதா அவசரமாக அவர் அருகில் வர,

“பெரியப்பா” கொஞ்சம் சத்தமாகவே எழுந்தது கோகுலின் குரல் “அவ பாவம் பெரியப்பா அவளுக்கு ஒண்ணும் தெரியாது” அவன் கரம் அவள் தோள் அணைத்தது.

“அப்பா” அவனுடன் இணைந்துக்கொண்டான் முரளி. “ஆமாம்பா தப்பு பண்ணது நாங்க தான். முதல்லே இந்த கல்யாணம் நடந்திடட்டும் அதுக்கு அப்புறம் நாங்க எல்லா உண்மையும் சொல்றோம்”

உள்ளுக்குள்ளே கொதிப்பேறியது ஸ்ரீதரனுக்கு 'தப்பெல்லாம் இவர்களுடையது என்றால்?

“கல்யாணமா? நன்னா இருக்கு. ஆரம்பமே பொய், பித்தலாட்டம், பூடகம், திருட்டுத்தனம். இவாளோட சம்மந்தம் பண்ணிக்க சொல்றியாடா? நம்மாத்துக்குன்னு ஒரு கௌரவம் இருக்கு. நான் கிளம்பறேன்” என்றபடி வாசுதேவன் நகரப்போக

“நேக்கு திருட்டுத்தனமெல்லாம் தெரியாது” மெல்ல எழுந்தது கோதையின் குரல். “உங்க எல்லார்கிட்டேயும் பொய் சொல்லவும் தோணலை. அதனாலே தான் கல்யாணத்துக்கு முன்னாடியே உண்மையை சொல்லிட்டேன்” கரைந்து நடுங்கி கிடந்த அவளது குரலில் எல்லாருமே கொஞ்சம் அடங்கி போக, அனைவரது பார்வையும் அவள் மீதிருக்க.

“ஆனா.... நேக்கு கோ... கோகுல்ன்னா ரொம்.... ரொம்ப பிடிக்கும்.. எங்க...எங்க.... ரெண்டு பேரையும் பிரிச்சிடுவேளா?” அவன் மீதிருந்த நேசமும் தவிப்பும் குரலில் சேர்ந்திருக்க கேட்டாள் கோதை. சடக்கென அவள் பக்கம் திரும்பியவனின் அணைப்பு இன்னமும் இறுக, அவன் கண்களிலேயே கூட கொஞ்சம் நீர் கோடுகள் தோன்ற,

கோதையின் அப்பாவைத் தவிர மற்ற எல்லாருமே கொஞ்சம் நெகிழ்ந்துதான் போயிருந்தனர். அவளது கெஞ்சலில் இரண்டு தந்தையரிடமிருந்த கோபமும் கூட கொஞ்சம் கரைந்திருந்தது. தேவகிக்கும், யசோதைக்கும் உள்ளம் நிரம்பித்தான் போயிருந்தது.

“ப்ளீஸ்... சித்தப்பா..இந்த கல்யாணம் நடக்கட்டுமே” என்றான் முரளி.

'உண்மையை சொன்ன இந்த அப்பாவி பெண்ணுக்கு தண்டனை கொடுப்பது எந்த வகையில் நியாயம்?' என்ற எண்ணம் தோன்ற கொஞ்சம் கோபம் தணிந்த பார்வையுடன் நிமிர்ந்தார் வாசுதேவன்.

“நேக்கு கோகுல்ன்னா ரொம்ப பிடிக்கும்” கோதை சொன்ன விதத்தில் ரொம்பவுமே மகிழ்ந்து போயிருந்தார் தேவகி.

“மாட்டோம்” கோதையின் அருகில் வந்து அவள் கன்னம் வருடினார் அவர். “உங்க ரெண்டு பேரையும் நாங்க எப்பவும் பிரிக்க மாட்டோம் வா முதல்லே இந்த கல்யாணம் நடக்கட்டும் அதுக்கு அப்புறம் மத்த விஷயமெல்லாம் பார்த்துக்கலாம்.” தேவகி சொல்ல எல்லாருக்குமே அதில் உடன்பாடு வந்து விட்டதை போலே தோன்றியது.

திருமணத்திற்கென ஆசை ஆசையாய் தயாராகி வந்து காத்திருக்கும் அந்த இரண்டு மனங்களையும் உடைத்து எறியும் எண்ண யாருக்கும் இல்லை தான். தேவகி சொல்வதை ஆமோதிப்பதை போல் எல்லாரும் பேசாமல் உள்நோக்கி நடக்க ஆரம்பிக்க.

அங்கே கோதையின் தந்தையின் மனம் மட்டும் தனது மூத்த மகளை எண்ணி தவித்து, பதறி குழம்பிக்கிடந்தது. மகள் மீதிருந்த நமபிக்கையில் வேறு விதமாக எதையுமே யோசிக்கத் தோன்றவில்லை அவருக்கு. ஆரம்பத்திலிருந்தே இந்த பதிவு திருமணத்தில் அவருக்கு விருப்பம் இல்லை தான்.

‘எதற்காம் இந்த அவசரம் என்ற ஒரு கேள்வி அவர் மனதை குடைந்துக்கொண்டே தான் இருக்கிறது’ இப்போது இருந்த மனநிலையில் அவர் மனம் என்னனவோ கணக்குகள் போட ஆரம்பித்திருந்தது.

“சித்த இருங்கோ” கணீரென ஒலித்தது ஸ்ரீதரனின் குரல். “இந்த லெட்டரை கொஞ்சம் படிச்சு பாக்கறேளா? இது என் பொண்ணு வேதா கைப்பட எழுதின லெட்டர். இதுக்கு பதில் சொல்லிட்டு அப்புறம் என் பொண்ணை கூட்டிண்டு போங்கோ”

“லெட்டரா?” அத்தனை பேரும் அதிர்ச்சியுடன் திரும்ப, சட்டென அவர் அருகில் வந்து ஸ்ரீதரனை ஊடுருவும் பார்வை பார்த்தபடியே கையில் இருந்த லெட்டரை வாங்கினார் வாசுதேவன். அதை படிக்க படிக்க அவர் முகத்தில் பல மாற்றங்கள். முகத்தில் கோப ரேகைகள் ஓடத்துவங்க...

எல்லாரும் அவரையே பார்த்திருக்க, ஒரு முறை அவர் கோகுலை திரும்பி பார்த்துவிட்டு ஸ்ரீதரனை பார்த்து அழுத்தமான குரலில் சொன்னார்

“உம்ம பொண்ணு எதையானும் கிறுக்கி வெச்சிட்டு போவோ. அதுக்கெல்லாம் நாங்க பதில் சொல்லிண்டிருக்க முடியாது ஸ்ரீதரன்”

“பதில் சொல்ல மாட்டேளா? இந்த லெட்டர்லே இருக்கிறது விளையாட்டு இல்லை. என் பொண்ணோட வாழ்கை” என்றார்.

“இப்போ என்ன சொல்ல வரேள்.?”

“நான் எதுவும் சொல்ல வரலை. எந்த விவாதமும் பண்ண வரலை. என் குழந்தை எங்கே சொல்லிடுங்கோ. உங்க பையனுக்கு கட்டாயம் தெரிஞ்சிருக்கும்” பெண்ணை தொலைத்துவிட்ட ஒரு சாதாரண தந்தையின் ஆதங்கத்துடன் வெளி வந்தன வார்த்தைகள்.

திகைப்புடனே எல்லாரும் அவர் அருகில் வர, கடிதத்தை வாங்கி ஒவ்வொருவராக படிக்க ஆரம்பித்தனர்.

கோகுல் கடிதத்தை படித்து நிமிர “தயவு செய்து சொல்லுங்கோ. என் பொண்ணு எங்கே?” அவனைப் பார்த்து கெஞ்சினார் ஸ்ரீதரன்.

“மாமா. நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளுங்கோ. என் ஃப்ரெண்ட் ஒருத்தன் என் பேரை சொல்லி வேதாவை ஏமாத்தி இருக்கான்..இப்போ அவ எங்கே இருக்கான்னு தான் நாங்க தேடிண்டு இருக்கோம்”

“மாட்டேன். நம்ப மாட்டேன்... நீங்க பொய் சொல்றேள்... வேதா எங்கே தயவுசெய்து சொல்லிடுங்கோ...” யோசிக்கும் சக்தியை இழந்தவராக திரும்ப திரும்ப அதையே சொல்ல... தந்தையர் இருவரும் கோபத்தின் உச்சியை நெருங்கிக்கொண்டிருக்க யசோதைக்கும், தேவகிக்கும் அவரது மனநிலை புரியத்தான் செய்தது.

“அப்பா. நான் சொல்றதை சித்த கேளுங்கோ. .கோகுல் மேலே எந்த தப்பும் இல்லை நேக்கு நன்னா தெரியும்” சொன்னாள் கோதை.

“நீ சும்மா இரு நோக்கு ஒண்ணும் தெரியாது. அன்னைக்கு நீங்க எங்காத்துக்கு வந்தப்போ நீங்களும் வேதாவும் ரொம்ப க்ளோஸ்ன்னு அவளே சொன்னாளே தெரியும் நேக்கு, என் பொண்ணு எங்கே சொல்லிடுங்கோ. கோதை, சொல்ல சொல்லுமா. வேதாவை கூட்டிண்டு வர சொல்லும்மா. அவளையும் கூட்டிண்டு நாம இங்கிருந்து போயிடுவோம். அதுக்கு அப்புறம் இவா சங்காப்தமே வேண்டாம்.” அவர்களை கடந்து சென்றவர்கள் இவர்களை ஒரு மாதிரியாக பார்த்து செல்ல...

“என்னடா? என்னடா இதெல்லாம்? எங்களுக்கு தெரியாம எப்போடா அவாத்துக்கு போனே.? பெரியப்பா கேட்க கூசியது கோகுலின் உடல்.

“அப்பா. அது சும்மா விளையட்டுக்கு பா. அக்காவை பத்தி இவா யாருக்குமே எதுவும் தெரியாது பா” கோதை சொல்ல., அதை நம்பாமல் ஸ்ரீதரன் பேசிக்கொண்டே போக...

அங்கே நடக்கும் எல்லாவற்றையும் பார்த்தபடியே நின்றிருந்தான் முரளி. எல்லாரிடமும் நிறையவே பரபரப்பும் தவிப்பும் நிறைந்திருந்த நேரத்திலும் அவன் அமைதியாக கோதையையும், கோகுலையுமே பார்த்திருந்தான். அந்த நேரத்திலும் இருவர் கைகளும் இணைந்தே இருந்தன.

“எந்த நிலையிலும் உன்னை விட்டு விட மாட்டேன் என்று சொல்வதை போல் அவள் கையை இறுக்கமாக பற்றி இருந்தான் கோகுல்” தன்னையும் அறியாமல் ஒரு புன்னகை எழுந்தது முரளியிடம்.

'எந்த நிலையிலும் இவர்கள் இருவரும் பிரிந்து விடவே கூடாது’

அடுத்த சில நொடிகளில்

“நேக்குத் தெரியும்” ஒலித்தது முரளியின் குரல். “நேக்கு வேதா எங்கே இருக்கான்னு தெரியும்” அவன் அழுத்தம் திருத்தமாக சொல்ல வியப்பும், திகைப்புமாக அனைவரும் திரும்பினர்.

“நீங்கதான் முரளியா? சொல்லுங்கோ என் பொண்ணு எங்கே இருக்கா சொல்லுங்கோ? எங்கே இருக்கா. சொல்லுங்கோ?” படபடக்கும் குரலில் கேட்டார் ஸ்ரீதரன்.

“உங்க பொண்ணு பத்திரமா இருக்கா. போறுமா? கவலைப் படாதேள்.” நிதானமான குரலில் சொன்னான் முரளி. “அதே மாதிரி உங்க பொண்ணு காணாம போனதுக்கும் கோகுலுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை சரியா?” அவன் சொல்ல சொல்ல எல்லாரிடத்திலும் வியப்புடன் கலந்த மௌனம்.

“வேதா எங்கே இருக்கா. அதை முதல்லே சொல்லுங்கோ.” கேட்டார் அவள் அப்பா.

சொல்றேன். சொல்றேன் ஆனா அதுக்கு முன்னாலே கோதை கோகுல் கல்யாணம் நடக்கட்டும்...'

“முரளி விளையாடாதே. நோக்கு ஏதானும் தெரிஞ்சா சொல்லிடு.” இது யசோதா

“சொல்றேன்மா. சொல்றேன்மா. சொல்லாம எங்கே போறேன்.” என்றவன் கோதையின் பக்கம் திரும்பினான்.

“கோதை” என்றான் அவன். “நோக்கு. கோகுல் தப்பு பண்ணி இருக்க மாட்டானன்னு நோக்கு நம்பிக்கை இருக்கோன்னோ?”

கண்களில் நீர் கட்டி இருக்க அவசரமாக தலை அசைத்தாள் கோதை 'கோகுல் பத்தி நேக்கு நன்னாத் தெரியும். அவர் எந்த தப்பும் பண்ணலை .பண்ணவும் மாட்டார்” அவள் உறுதியான குரலில் சொல்ல கோகுலின் இதழ்களில் இதமான புன்னகை,

“குட்... வெரி குட்...... இந்த உலகத்திலே யார் அவனை நம்பினாலும் சரி நம்பலைனாலும் சரி நீ அவனை நம்பறையோன்னோ அது போறும். மத்தவா பத்தி கவலை இல்லை. வா வந்து கையெழுத்து போடு. அதுக்கு அப்புறம் நான் எல்லாம் சொல்றேன்.” அவன் சொல்லிக்கொண்டே போக யாரிடத்திலும் அசைவில்லை. பேச்சில்லை.

கோதை மெதுவாக திரும்பி அப்பாவைப் பார்க்க, அவர் முகத்தில் உணர்வுகளை துடைத்து விட்ட பாவம்.

“இது நம்ம கோகுலோட கௌரவப் பிரச்சனை கோதைமா. இப்போ இந்த கல்யாணம் நடக்கறது தான், நீ போடற கையெழுத்து தான் எல்லாத்துக்கும் பதில். பெரியவா யாருக்கு இந்த முடிவிலே சம்மதமோ அவா நம்ம கூட வரட்டும் “ என்றபடி எல்லாரையும் அவன் முறை பார்க்க,

“நான் வரேன் வாடா” அவனுக்கு ஆதரவாக தேவகி அவர்கள் அருகே வர,

“நானும் வரேன்” யசோதையும் இணைந்து கொள்ள, தந்தையர் மூவருமே அந்த இடத்திலேயே சிலையாக நின்றிருந்தனர்.

இவர்கள் எல்லாரும் சில அடிகள் நடக்க, சட்டென

“முரளி... வேண்டாம்டா...கல்யாணம் இப்போ வேண்டாம் வேதா வரட்டும்” நின்றுவிட்டான் கோகுல்....

“டேய்... என்னடா விளையாடிண்டிருக்கே பேசாம வா” முரளி சொல்ல

“வேதா எங்கே இருக்கான்னு உனக்கு நிஜமா தெரியுமா?” அவன் கண்களை பார்த்தபடியே கேட்டான் கோகுல்.

“தெரியும் டா... நீ வா...நான் அப்புறம் எல்லாம் சொல்றேன்”

“இல்லடா அவ வரட்டும். அப்புறம் தான் மத்த விஷயமெல்லாம்.இப்போ நாம இங்கிருந்து கிளம்புவோம் முரளி” சொல்லிவிட்டு...

“டேய்... கோகுல்” முரளி ஏதோ சொல்ல வர, அதை ஒப்புக்கொள்ள விரும்பாமல் இடம் வலமாக தலை அசைத்து விட்டு, திரும்பி நடக்க எத்தனிதவனின் கை இன்னமும் கோதையின் கைக்குள்ளே இருக்க, மெல்ல திரும்பி அவள் முகம் பார்த்தான் அவன்.

“தேங்க்ஸ்டா கோதைப் பொண்ணு” அவள் கன்னம் தட்டினான் அவன்.

“எதற்காம்? அவன் மீது அவள் கொண்டிருக்கும் நம்பிக்கைக்கா?” இமைக்காமல் அவனையே பார்த்திருந்தாள் பெண்.

“நான் இப்போ கிளம்பறேன். அப்புறம் பார்க்கலாம். என் மனசு நோக்கு புரியறதோன்னோ?”

“ம்” மெதுவாக ஒரு தலை அசைப்பு கோதை பெண்ணிடம்.

“தேங்க்ஸ்டா..... உங்க அக்கா சீக்கிரம் வந்திடுவா... தைரியமா இரு...எல்லாம் சரியா நடக்கும். இப்போ கிளம்பறேன்”

“சரி”

“கையை விட்டாத் தானே கிளம்ப முடியும்!”

சின்ன புன்னகையுடன் அவன் சொல்ல மெல்ல விடுவித்தாள் அவன் விரல்களை. ஒரு விறு விறு வென அங்கிருந்து நகரந்தவன் யாரிடமும் எதுவும் பேசாமல் காரை கிளப்பிக்கொண்டு பறந்து விட்டிருந்தான். இனம் புரியாத ஒரு அழுத்தமான உணர்வுடன் நின்றிருந்தாள் கோதை.

தொடரும்
 

Latest profile posts

மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு

New Episodes Thread

Top Bottom