• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே 14

Vathsala Raghavan

✍️
Writer
யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே 14

நேற்று இரவு

ராஜகோபாலனை இவர்கள் அந்த கெஸ்ட் ஹவுஸின் ஒரு அறையில் அடைத்து வைத்திருப்பதை நடுவில் ஒரு முறை அவருக்கு விழிப்பு அவரது பாக்கெட்டில் இருந்த இன்னொரு கைப்பேசியிலிருந்து அவள் தந்தையை அவர் தொடர்பு கொள்ள முயற்சித்ததையும் வேதா அறிந்திருக்கவில்லை..

சில நிமிடங்கள் அந்தக் காரினுள்ளேயே அசைவின்றி படுத்திருந்தாள் வேதா. 'என்னை எங்கே கொண்டு செல்கிறார்கள் இவர்கள்?’

அப்போது விக்கியும் அந்த காரை செலுத்திக்கொண்டிருந்தவனும் பேசுவது இவள் காதில் விழுந்தது.

“இன்னும் எவ்வளவு தூரம்டா? அவ முழுச்சிக்க போறா?”

“இன்னும் அரை மணி நேரத்திலே போயிடலாம். அங்கே அவங்ககிட்டே இவளை ஒப்படைச்சிட்டு பணத்தை வாங்கிட்டு போயிட்டே இருக்கலாம்.”

பகீர்ன்றது அவளுக்கு “என்னை விலைப் பேசி இருக்கிறார்களா என்ன? இப்போது எப்படி தப்பிப்பது?”

படுத்துக்கொண்ட படியே கண்களை சுற்றும் முற்றும் சுழல விட்டவளுக்கு கண்ணில் பட்டது அவளது சீட்டில் அவளருகே இருந்த தண்ணீர் பாட்டில். “இதை வைத்துக்கொண்டு என்ன செய்ய?” யோசித்தபடியே அவள் சற்றே திரும்ப. சீட்டின் கீழே கிடந்தது அவளது பை.

‘இதற்குள் ஏதாவது இருக்குமா? அவள் கை மெதுவாக அதை துழாவ அவள் கையில் தட்டுப்பட்டது அது! இது உதுவுமா இது சரியாக வருமா?’ யோசித்தபடியே அதை கையில் எடுத்தாள் வேதா.

இன்று.....

அங்கே கோதையின் வீட்டில் நின்றிருந்தான் கோகுல்.

“கோதைப்பொண்ணு கிளம்புடா நாம ரிஜிஸ்டர் ஆபீஸ் போறோம்” அவன் சொல்ல கோதை மெல்ல எழுந்துக்கொள்ள

“வேண்டாம் மாப்பிள்ளை.. வேதாவும் வந்துடட்டும். அதுக்கு அப்புறமே கல்யாணம் நடக்கட்டும் அதுதான் எல்லாருக்கும் நல்லது” சொன்னார் ஸ்ரீதரன்.

“வேதா வர்றதுக்கும் எங்க கல்யாணத்துக்கும் என்ன சம்மந்தம்?” சட்டென கேட்டான் கோகுல். “அவா வந்ததும் வேதா முரளி கல்யாணம் ஜாம் ஜாம்ன்னு நடக்கும். அதை பத்தி கவலை படாதேள். . இப்போ வாங்கோ கிளம்பலாம்” அவன் நகர எத்தனிக்க

“இல்லை மாப்பிள்ளை” நகரவில்லை ஸ்ரீதரன். “நேக்கு ரெண்டு பொண்களும் ஒண்ணுதான். பெரியவோ இருக்கும் போது, சின்னவளுக்கு பண்ணப்படாது ரெண்டும் ஒண்ணாவே நடக்கட்டுமே. அக்னி சாட்சியா கல்யாணம் ஆனதுக்கு அப்புறமே ரிஜிஸ்டர் கல்யாணம் பண்ணிக்கலாமே” அவர் முடிக்கவில்லை...

“சொன்னா புரிஞ்சுக்க மாட்டேளா?” சற்று உயர்ந்தே வெளிவந்தது கோகுலின் குரல். கொஞ்சம் அதிர்ந்துதான் போனாள் கோதை. அவள் முக மாற்றத்தில் சட்டென தணிந்தான் அவன்.

“சித்த புரிஞ்சுக்கோங்கோ... எல்லா ஏற்பாடும் பண்ணியாச்சு ஆத்திலே எல்லாரும் அங்கே வந்து காத்துண்டிருப்பா... கிளம்புங்கோ ப்ளீஸ்...”

மனமில்லை. சத்தியமாக மனமில்லை ஸ்ரீதரனுக்கு. வேறே வழியே இல்லாமல் கிளம்பினார் அவர்.

சில நிமிடங்களில்.....

அவனருகில் முன் சீட்டில் கோதை அமர்ந்திருக்க, பின் சீட்டில் அவளது தந்தை அமர்ந்திருக்க, காருக்குள்ளே மௌனம் அரசாட்சி செய்துக்கொண்டிருக்க காரை செலுத்திக்கொண்டிருந்தான் கோகுல். அது ரிஜிஸ்டர் ஆபீஸ் நோக்கி பறந்துகொண்டிருந்தது.

அதே நேரத்தில், கோகுலின் வீட்டில்,

இரண்டு பெற்றோர்களும், முரளியும் வீட்டை விட்டு படி இறங்க, அந்த நொடியில் முரளியின் எண்ணுக்கு வந்தது அந்த அழைப்பு...

“ஹலோ” என்றான் அவன்.

மறுமுனை ஏதோ சொல்லிக்கொண்டிருக்க, பதில் பேசாமல் கேட்டுக்கொண்டிருந்தவனின் முகத்தில் சில மாறுதல்கள், அங்கே இருந்த பெற்றவர்கள் இவன் முகத்தையே படிக்க முயல, அடுத்த நொடியில் மிக இயல்பான புன்னகை தொற்றிக்கொண்டது அவனது இதழ்களில்.

“திருடன்..... திருடன்.... என்னமா நடிக்கறான் பார்..” தனக்குள்ளே சொல்லிக்கொண்டார் யசோதா. எதிர் முனையில் ஏதோ ஒரு பிரச்சனை என்பதை மட்டும் அவரால் நன்றாக உணர முடிந்தது.

சில நொடிகள் கழித்து 'குட்... வெரி குட்...' என்றான் அவன்.

'..................................................'

“ம்”

................................................

“ம்” அவனுடைய அப்பாவின் முகத்தில் கொஞ்சம் சந்தேக ரேகைகள்.

மறுமுனை எதையோ சொல்ல சில நோடி யோசனை அவனுக்குள்ளே. அதன் பிறகு.....

“நேக்கு டூ ஆர் த்ரீ ஹவர்ஸ் டைம் குடுக்க முடியுமா?” என்றான் முரளி. “ஏன்னா இன்னைக்கு என் தம்பியோட கல்யாணம்”

...............................................................................

“ம்.. ஆமாம்... அதனாலே அது முடிஞ்சதுக்கு அப்புறமா நான் போன் பண்றேன் சரியா? புரிஞ்சதா? டேக் கேர்.” அழைப்பை துண்டித்தான் முரளி. அவனை சுற்றி இருந்த எந்த கண்களும் இமைக்க வில்லை.

“என்னத்துக்கு எல்லாரும் என்னை இப்படி பாக்கறேள். கிளம்புங்கோ... டைம் ஆச்சு...”

“யாருடா போன்லே?” யோசனையான குரலில் கேட்டார் அப்பா.

“ஃப்ரெண்ட்பா... நாம கிளம்பலாம்....” டிரைவரிடமிருந்தது சாவியை வாங்கிக்கொண்டு அவன் காரை கிளப்ப அனைவரும் பதில் பேசாமல் ஏறிக்கொண்டனர்.

இங்கே கோகுலின் பக்கம் திரும்பவே இல்லை கோதை. ஜன்னலுக்கு வெளியிலேயே கிடந்தன அவள் கண்கள்.

“நிச்சியமாக அவளால் முழு மனதுடன் இந்த நிகழ்வில் ஈடு பட முடியாது தான்” அவள் மனநிலை புரிந்திருந்த போதிலும் சமாதானம் அடைய மறுத்தது அவனுள்ளம்..

“அவளை முதன் முதலில் பார்த்த போது நாய் குட்டிக்கு பயந்து ஓடிச்சென்று அப்பாவின் பின்னால் அமர்ந்துக்கொண்ட போது அவனை கொஞ்சமாக எட்டிப்பார்த்து சிரித்தனவே அவள் கண்கள், அதே போன்றதொரு ஒற்றை பார்வை போதுமே” அவனுக்குள்ளே சின்னதாக ஒரு ஏக்கம் பிறக்க....

சட்டென தன்னை தானே கடிந்துக்கொள்ளவும் செய்தான் அவன் “ச்சே எத்தனை சுயநலமாக யோசிக்கிறேன் நான்?”

கார் ஒரு சிக்னலில் சென்று நின்றது. மெல்ல அவள் பக்கம் திரும்பினான் கோகுல்.

“ஒரு வாட்டி திரும்பி தான் பாரேன்” உதடுகள் சொல்ல தவித்த நேரத்தில்,,,,

அவர்கள் காருக்கு அருகில் வந்து நின்றது இன்னொரு கார். அந்த காரின் ஜன்னலிலிருந்து சட்டென வெளியே எட்டிப்பார்த்தது ஒரு பெரிய நாய். அவளை நோக்கி அது ஒரு காலை நீட்ட, திடுக்கிட்டு அவள் சற்று பின்னால் தள்ளிக்கொண்ட நிலையில் இருவரது மனமும் அதே பழைய புள்ளியைத் தொட

இறுக்கம் தளர்ந்த இள நகையுடன் அவள் அவன் பக்கம் திரும்ப., குளிர் சாரல் அவனிடம்.

“போதும்... இப்போதைக்கு இது போதும்” அவன் காரை கிளப்பிய வேகத்திலேயே அவனது சந்தோஷம் புரிந்தது கோதைக்கு.

நேற்று இரவு....

காரில் படுத்திருந்த வேதாவின் கையில் இருந்தது அந்த சின்ன கண்ணாடி பாட்டில். அதனுள்ளே இருந்தன தூக்க மாத்திரைகள். இரண்டு நாட்களுக்கு முன் அவளது அப்பா வாங்கி வர சொன்ன மாத்திரைகள் அவை. அவரிடம் அவற்றை கொடுக்க மறந்திருந்தாள் அவள்.

‘இத்தனை மாத்திரைகளையும் அருகில் இருக்கும் அந்த தண்ணீர் பாட்டிலில் கலந்து விட்டால்? அதை அவர்கள் இருவரும் அருந்தினால்?’

‘இது சாத்தியமா? நடப்பது சாத்தியமா? அதுவும் ஒரே நேரத்தில் இருவரும் அந்த தண்ணீரை அருந்த வேண்டுமே? சரி ஒருவன் மயங்கினால் கூட சமாளித்து விடலாம். பார்ப்போம்’.

சத்தம் இல்லாமல் அந்த தண்ணீர் பாட்டிலை திறந்து அதில் அந்த மாத்திரைகளை போட்டிருந்தாள் வேதா. சில நிமிடங்கள் கடக்க அப்படியே படுத்திருந்தாள் அவள். மாத்திரைகள் நீருக்குள் கரைய ஆரம்பித்திருந்தன. அவர்கள் இதை அருந்த வேண்டுமே?

“கண்ணா” மெல்ல உச்சரித்தன அவளது உதடுகள். சரியாக அந்த நொடியில் அருகில் இருந்தவனை பார்த்து கேட்டான் விக்கி.

“தண்ணி பாட்டில் எங்கேடா?”

"எந்த தண்ணி?"

“ஆங்... இப்போ குடி தண்ணி மட்டும் தான். மத்தது எல்லாம் காரியம் முடிஞ்சதும் பார்த்துப்போம்” என்றபடியே அவன் திரும்ப கண்களை மூடிக்கொண்டு அசையமால் படுத்திருந்தாள் வேதா.

கொஞ்சம் எட்டி அந்தத் தண்ணீர் பாட்டிலை எடுத்துக்கொண்டவன் சொன்னான்

“இன்னும் மயக்கமா தான் கிடக்கா... சீக்கிரம் போடா... இவளை அவனுங்க கிட்டே தூக்கி போட்டுடணும். ஒரு காலத்திலே நான் இவளை லவ் பண்ணேன்டா. என்னை வேண்டாம்னு சொல்லிட்டா. நான் நல்லவன் இல்லைன்னு என்னை தூக்கி போட்டுட்டா. அப்போ முடிவு பண்ணேன்... எனக்கு இவ வேண்டாம் ஆனா, இவ வாழ்கை சீரழியணும்ன்னு முடிவு பண்ணேன்... ' தண்ணீர் பாட்டிலை திறந்து வாயில் கவிழ்த்துக்கொண்டான் விக்கி.

அவன் பேசுவதை கேட்க கேட்க ரத்தம் கொதித்தது வேதாவுக்கு. கொஞ்சம் தண்ணீரை அருந்திவிட்டு தொடர்ந்தான் விக்கி.

“அந்த சரவணனை வெச்சு ஏதாவது செய்யலாம்னு பார்த்தேன், அவன் குறிக்கோள் பணம் வேறே ஒரு பணக்கார பொண்ணு கிடைச்சதும் பாதியிலேயே கழண்டுகிட்டான். அதான் இவளை விலை பேசிட்டேன். முடிஞ்சது. இன்னையோட இவள் வாழ்கை முடிஞ்சது” சொல்லியபடியே விக்கி சிரிக்க அவனுடனே இணைந்துக்கொண்டே அந்த தண்ணீர் பாட்டிலை வாங்கி நீரை அருந்தினான் அருகில் இருந்தவன்.

கிட்டதட்ட பாட்டிலில் இருந்த மொத்த நீரையும் இருவரும் சேர்ந்து அருந்திவிட எல்லாவற்றையும் கவனித்த படியே மூச்சை அடக்கிக்கொண்டு படுத்திருந்தாள் வேதா.

“தண்ணி ஏன்டா ஒரு மாதிரி இருக்கு? ஒரு வேளை பழைய தண்ணியா இருக்குமோ?”' இருவரும் பேசிக்கொள்ள தடதடத்தது வேதாவின் இதயம்.

சில நிமிடங்கள் கடக்க 'தலை சுத்துறா மாதிரி இருக்குடா. நீ கொஞ்சம் கார் ஒட்டறியா என்றான் அவன். விக்கியின் நிலையம் கிட்டதட்ட அதே என்பதால், கொஞ்சம் தடுமாற்றத்துடன் காரை ஓரமாக நிறுத்திவிட்டு கீழே இறங்கினர் இருவரும்.

மெல்ல எழுந்து அமர்ந்தாள் வேதா. தடுமாறியபடியே திரும்பிய விக்கியின் கண்ணில் வேதா. பட...

“டேய்... அவ முழுச்சிட்டாடா” என்றான் அவன். இருவரும் வேகமாக காரின் பின் சீட்டில் ஏற, இருவரையும் தனது பையால் மாறி மாறி அடிக்க துவங்கினாள் வேதா. மாத்திரையின் தாக்கத்தில் அரை மயக்க நிலையில் இருந்தவர்களால் அவளை தடுக்க முடியவில்லை. சில நொடிகளில் இருவரும் கார் சீட்டிலேயே மயங்கி விழுந்திருந்தனர்.

ஒரு ஆழமான மூச்சை எடுத்துக்கொண்டு காரை விட்டு கீழே இறங்கினாள் அவள். இருள் மண்டிக்கிடந்த அந்த சாலையின் இருபுறம் அடர் மரங்கள். ஒரு காட்டுக்குள் இருப்பது போன்றதொரு உணர்வு. எந்த ஊரில் இருக்கிறோம் என்று கூட தெரியவில்லை.

பயம் அழுத்திய போதும், கண்ணீர் வரவில்லை அவளுக்கு. மறுபடியும் காருக்குள் ஏறி முன் சீட்டில் அமர்ந்துக்கொண்டாள் அவள். பின் சீட்டில் இருவரும் ஒருவர் மீது ஒருவர் விழுந்து கிடந்தனர். அவர்கள் விழிப்பதற்குள் பாதுகாப்பான ஒரு இடத்துக்கு சென்றாக வேண்டுமே?

ஒரு வருடம் முன்பு கவிதாவுடன் சேர்ந்து அவள் கார் ஓட்டப் பழகியது உண்டு. ஆனால் உரிமம் பெற்ற பிறகு காரை தொட்டதே இல்லையே? ஆனால் வேறு வழியே இல்லை. இப்போது காரை செலுத்தியே ஆக வேண்டும்.

சாவி அதிலேயே இருக்க இயக்கினாள் அதை. சாலையில் வாகனங்கள் அதிகம் இல்லை. படபடக்கும் இதயத்துடன் காரை கிளப்ப நகர்ந்தது அது. பயந்து பயந்து அதை திருப்பி அவர்கள் முன்பு சென்றுக்கொண்டிருந்த திசைக்கு எதிர் திசையில் காரை செலுத்த ஆரம்பித்தாள் வேதா.

சீரான வேகத்தில் நகர்ந்துக்கொண்டிருந்தது கார். பயத்தில் சுவாசம் அழுந்துவது போல் ஒரு உணர்வு.

காலையில் இருந்து எதுவுமே சாப்பிட வில்லையே. சோர்வும் பயமும் ஒன்றாக சேர்ந்து அழுத்த,.உடலில் நடுக்கம் பிறக்க, எல்லாவற்றையும் தாண்டி ஜெயித்து விட வேண்டும் என்ற வேகத்திலேயே செயல் பட்டுக்கொண்டிருந்தாள் அவள். எப்போதோ கற்றுக்கொண்ட கார் டிரைவிங் இப்போது கை கொடுத்துக்கொண்டிருந்தது அவளுக்கு.

'எங்கே இருக்கிறேன்? எங்கே போய்க்கொண்டிருக்கிறேன்? புரியவில்லை அவளுக்கு. இந்த உலகத்தில் அவள் மட்டுமே தனியாக இருப்பது போன்றதொரு உணர்வு.

'கண்ணா... ஏதாவது ஒரு வழி காட்டு..'

கார் நகர்ந்துக்கொண்டே இருக்க, திடீரென அவள் சீட்டின் பக்கத்து சீட்டில் கிடந்த அவளது பையில் இருந்து ஏதோ சத்தம். திடுக்கென்றது அவளுக்கு. கைப்பேசியின் சத்தமா அது? ஆம். எங்கிருந்தோ அந்த கைப்பேசிக்கு வந்த குறுஞ்செய்தி எழுப்பிய சத்தம்.

“கைப்பேசியா. என் பைக்குள் கைப்பேசி இருக்கிறதா?எப்படி வந்தது. நான் தேடும் போது இல்லையே?”

அப்போதுதான் நினைவுக்கு வந்தது அவளுக்கு. வீட்டை விட்டு அவள் கிளம்புவதற்கு முன்னால் நடந்த அந்த சம்பவம் நினைவுக்கு வந்தது அவளுக்கு.

“எனக்காக இந்த ஹெல்ப்பையானும் பண்ணு நீ'”கோதை சொல்ல

“என்ன பண்ணனும் சொல்லுடா?" இவள் கேட்க

“அது... என் போனை நீ உன் பேக்லே வெச்சுக்கோ.. நான் ஒரு நிமஷம் வழியிலே கோவில்லே இறங்கி பெருமாளை கை கூப்பிட்டு வந்திடறேன். உள்ளே எடுத்துண்டு போனேன்னா பெருமாள் சேவிச்சுண்டு இருக்கறச்சே கரெக்டா அடிக்கும்”

கோதை சொல்ல இவள் அதை வாங்கி தனது பையில் போட்டுக்கொள்ள, அதன் பிறகு அதை அவள் வாங்கிக்கொள்ளவே இல்லையே?

‘அப்படி என்றால் என் பையினுள் போன் இருக்கிறதா?’ எப்படியோ சமாளித்து அவசரமாக தனது காரை சாலை ஒரமாக நிறுத்தி விட்டு பையை அவள் துழாவ இப்போது கண்ணில் பட்டது அந்த கைப்பேசி. கோதையின் கைப்பேசி.

மனமெங்கும் சந்தோஷ அருவி.

'ஜெயித்துவிட்டேன். நான் ஜெயித்துவிட்டேன்.’ இதுவரை எட்டிப்பார்க்காத கண்ணீர் சந்தோஷத்தில் இப்போது கொஞ்சம் எட்டிப்பார்த்தது.

‘யாரை அழைப்பது? இப்போது யாரை அழைப்பது?’

அதே நேரத்தில்...

தனது ஊரை நோக்கி பயணித்துக்கொண்டிருந்தான் சரவணன். விடிந்தால் அவனுக்கு திருமணம். அவசர திருமணம். அந்த பெண்ணின் தந்தை அவனது ஊரிலேயே பெரிய பணக்காரர்.

“பொண்ணு நிறத்திலே, உயரத்திலே கொஞ்சம் கம்மிடா. உனக்கு பரவாயில்லையா?” அப்பா கேட்க...

“அதெல்லாம் எனக்கு ஒரு மேட்டரே இல்லைப்பா..' பெருந்தன்மையாக சொல்வதை போல் சொன்னான் சரவணன். 'ஆம் இவனது குறி வசதியும் பணமும் தானே”

இவனது அப்பா அந்தத் திருமணத்தை நிச்சயிக்க, வேதாவை விட்டு விடுவது என நான்கு நாட்கள் முன்னாலேயே முடிவெடுத்து விட்டிருந்தான் சரவணன். ஆனால் விக்கி கொடுத்த தொந்தரவின் காரணமாகவே அவளை அவனிடம் அழைத்து வந்து விட்டிருந்தான் அவன். கடைசியாக அவள் வீட்டை விட்டு கிளம்பும் போது அவளுடன் பேசியது கூட விக்கியே.

பெருமை சரவணனுக்கு. எல்லோரையும்... எல்லாவற்றையும் ஜெயித்து விட்டதை போன்றதொரு பெருமை சரவணனுக்கு.

அசுர வேகத்தில் அவனது ஊரை நோக்கி சென்றுக்கொண்டிருந்தது அவன் பயணித்துக்கொண்டிருந்த டாக்சி. அதே வேகத்தில் எதிர்ப்பக்கத்தில் வந்துக்கொண்டிருந்தது அந்த லாரி. அவன் அருகில் அமர்ந்து அவனை பார்த்து சிரித்துக்கொண்டிருந்தன அவன் செய்த பாவங்கள். அதற்கான தண்டனைகளை அவன் அனுபவிக்க வேண்டாமா என்ன?

தொடரும்
 

kothaisuresh

Well-known member
Member
அப்பாடி வேதா தப்பிச்சிட்டா. யாருக்கு போன் பண்ணப் போறா?
சரவணா செஞ்ச பாவம் சும்மா விடுமா?
 

Rajam

Well-known member
Member
சரவணன் செய்த. பாவத்துககு
கடுமையான தண்டனை கிடைக்கனும்.
வேதா போன் சேய்தது முரளிக்கா.
கண்ணன் வேதாவ காப்பாத்திட்டான்.
 

Vathsala Raghavan

✍️
Writer
சரவணன் செய்த. பாவத்துககு
கடுமையான தண்டனை கிடைக்கனும்.
வேதா போன் சேய்தது முரளிக்கா.
கண்ணன் வேதாவ காப்பாத்திட்டான்.
Thanks for your comments ma
 

Latest profile posts

மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு
முள்ளில்லா முல்லைப்பூ இன்னும் இரண்டு எபியில் முடிந்துவிடும். கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணிவரை மட்டுமே இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீட்டிக்கப்படமாட்டாது. படிக்க நினைப்பவர்கள் விரைவில் படித்துவிடுங்கள். லைக்கோ கமெண்டோ சொல்லிட்டும் போங்க.

New Episodes Thread

Top Bottom