• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே 13

Vathsala Raghavan

✍️
Writer
யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே 13

வேதா யாரென்று மாயக்கண்ணனிடம் சொல்லி இருக்கவில்லையே கோகுல். கோகுலின் வீட்டு நிலவரம் தெரிந்திருந்தால் நிச்சயமாக சொல்லி இருக்க மாட்டான்தான் அவன். வேதா கோகுலின் தோழியாக இருக்க வேண்டும் என்றே நினைத்திருந்தான் மாயக்கண்ணன்.

மாயக் கண்ணன் வார்த்தைகளில் ஒரு நொடி சுவாசம் நின்றே போனது தேவகிக்கு. 'என்ன சொல்லிக்கொண்டிருக்கிறான் இவன்? சிரமப்பட்டு மூச்சை மீட்டெடுத்துக்கொண்டு மெல்லக் கேட்டார் அவர்

“பொண்ணு பேரு என்னப்பா சொன்னே?”

“வேதாமா.... உங்ககிட்டே ஒண்ணும் சொல்லைலையா அவன். சரி விடுங்க நான் அப்புறமா அவன்கிட்டேயே பேசிக்கறேன்” வைத்துவிட்டான் மாயக்கண்ணன்.

இதயம் தடதடத்தது தேவகிக்கு. ‘வேதா என்றால் நம் வேதாதானா? அவளைக் காணவில்லையா? அப்படி என்றால் இதைப் பற்றி யாரிடமும் சொல்லாமல் போலீசில் ஏன் சொல்ல வேண்டும் கோகுல்.? போனை மறுபடியும் சார்ஜரில் இணைத்து விட்டு டைனிங் டேபிள் நாற்காலியிலேயே அமர்ந்தார் தேவகி. முகத்தில் வேர்வை பூக்க ஆரம்பித்திருந்தது.

அப்போது வீட்டினுள் நுழைந்தார் நம் யசோதா. முரளியின் அம்மா.

“என்னடி இது நல்ல நாளும் அதுவுமா இப்படி பேயறஞ்ச மாதிரி உட்கார்ந்துண்டு இருக்கே? முகமெல்லாம் இப்படி வேர்த்துப் போயிருக்கு” யசோதா கேட்க, அவர் கையை பிடித்து இழுத்துக்கொண்டு சமையலறைக்குள் நுழைந்தார் தேவகி.

தனக்குத் தெரிய வந்ததை யசோதாவிடம் கொட்டிவிட்டு கேட்டார் தேவகி

“முரளி உங்களண்ட ஏதானும் சொன்னானா மன்னி.?”

யோசனையுடனே இடம் வலமாக தலை அசைத்தார் யசோதா

“முரளி என்னண்ட எதுவும் சொல்லலை. ஆனா ரெண்டு நாளா முரளி, கோகுல் ரெண்டுமே நமக்குத் தெரியாம என்னமோ ஒரு திருட்டுத்தனம் பண்றதுகள். அது மட்டும் நேக்கு நன்னா புரிஞ்சது”

“வேதான்னா நம்ம வேதாவா தான் இருக்குமா? ஒரு வேளை வேறே யாரானும் அவனுக்கு தெரிஞ்ச பொண்ணா இருக்க போறது” இது தேவகி.

“இல்ல தேவகி.... முதலேர்ந்தே நேக்கு சந்தேகம்தான். அந்த பொண்ணுக்கு இந்த கல்யாணத்திலே இஷ்டம் இல்லையோன்னு நேக்கு தோணிண்டே இருக்கு.”

“சரி... இந்த கல்யாணம் பிடிக்கலைங்கறதுனாலே?”

“பிடிக்கலைங்கறதுனாலே...' என்று ஏதோ சொல்ல வாயெடுத்த யசோதா நிறுத்திக்கொண்டார். வேண்டாம் தேவகி. விஷயம் என்னன்னு தெரிஞ்சுக்காம எந்த பொண்ணை பத்தியும் நாம தப்பா பேச வேண்டாம். சரி இப்போ நோக்கு இந்த விஷயம் தெரிஞ்சா மாதிரி காட்டிக்காதே” என்றார் யசோதா. “பார்க்கலாம். இதுகள் எத்தனை தூரம்தான் போறதுகள்ன்னு பார்க்கலாம்”

“இதுகளை விடுங்கோ மன்னி... அவாத்திலே எல்லாரும் என்ன பண்ணிண்டிருக்கா?” தேவகியின் முகத்தில் கொஞ்சம் கோப ரேகைகள்..

“கொஞ்ச நாழி பொறுமையா இருன்னு சொல்றேனோல்யோ... பேசாம தளிகையை கவனி”

அதே நேரத்தில் அங்கே கோதையின் வீட்டில்...

“அப்பா... சேவிச்சுக்கறேன் பா... “ அப்பாவை நமஸ்கரிக்க அவர் முன்னால் வந்து நின்றாள் கோதை.

அப்பா வாங்கிக்கொடுத்த அந்த மெரூன் நிற புது பட்டு புடவையில்...கழுத்தை ஒட்டிய மெலிதான தங்க சங்கிலி.. கைகளில் ஒற்றை வளையல்கள் என மிக எளிமையான அலங்காரத்தில் கூந்தலில் முல்லை சரம் ஊஞ்சலாட, நின்றிருந்தாள் கோதை.

உள்ளமெங்கும் பலநூறு குழப்ப அலைகள் பொங்கிக்கொண்டிருந்தாலும், அவ்வபோது கண் முன்னே வந்து போகும் கோகுலின் முகம் சந்தோஷ சாமரம் வீசிக்கொண்டு தான் இருந்தது. கண்களில் கண்ணீர் பளபளத்துக்கொண்டிருந்த அதே நேரத்தில் இதழோரம் கொஞ்சம் புன்னகையும் தேங்கித்தான் இருந்தது.

“இரு..... பெரியவா எல்லாரையும் சேவிச்சுக்கோ” என்று அத்தை அத்திம்பேர் என அனைவரையும் அழைத்தார் அப்பா. அனைவரையும் நமஸ்கரித்தாள் கோதை. எல்லார் முகத்திலும் மனம் நிறைந்து போன பாவம்.

நேரம் எட்டரை மணியைத் தொட்டிருக்க... கோகுலின் வீட்டுக்கு வருகை தந்தான் முரளி. சரியாக அதே நேரத்தில் மாடியிலிருந்து புது வேஷ்டியும் சட்டையுமாக இறங்கி வந்தான் கோகுல்...'

“டேய்.... முரளி உன்னையும் வேஷ்டி கட்டிண்டு வர சொன்னேனோல்யோ?” பேன்ட் ஷர்டில் வந்தவனை ஏற இறங்க பார்த்தபடி கேட்டார் அவனது அன்னை யசோதா.

“ரிஜிஸ்டர் ஆபீஸ்க்கு என்னத்துக்கு மா வேஷ்டி?” என்றான் முரளி “அது மட்டும் இல்லாம...வேதா இருக்காளோன்னோ... அவ..” அவன் குரலின் ஸ்ருதி மெல்ல இறங்க...

“ஏன்... வேதாக்கு என்ன ஆச்சு?” இரண்டு அம்மாக்களின் குரலும் ஒன்றாக பாய்ந்து வந்தது.

“அவளுக்கு என்ன ஆச்சு? ஒண்ணுமில்லை நன்னா இருக்கா. அதுவும் டெல்லிக்கு போய் நன்னா இருக்கா ... தெரியுமோ?” இது முரளி

“டெல்லிக்கா? அங்கே என்னத்துக்கு போனா அவ... அதுவும் இன்னைக்கு கல்யாணத்தை வெச்சிண்டு.?” குரலில் கொஞ்சம் கோப சூடு பரவ கேட்டார் தேவகி.

“அது ஏதோ ஆபீஸ் வேலையாம். கிளம்பி போயிருக்கா .. மாட்டிண்டுட்டா வேலையிலே.” கோகுல் முரளிக்கு உதவியாக வர

'காயத்ரி மந்திரம் சொல்ற வாயாலே பொய் சொல்லதேடா கடங்காரா...' அம்மா மானசீகமாக திட்டியது புரிந்திருக்க வேண்டுமோ என்னவோ அம்மாவின் முகம் பார்க்காமல் கண்களை தாழ்த்திக்கொண்டான் கோகுல்.

“நோக்கு யாருடா சொன்னா இதை?” முரளியை பார்த்து கேட்டார் அவன் அம்மா.

“அவளேமா ... அவளேதான் நேக்கு போன் பண்ணி சொன்னா.... நேத்து.......எல்லார்கிட்டேயும் ரொம்ப சாரி கேட்டுண்டா மா”

'உன்னை வக்கீலுக்கு படிக்க வெச்சதுக்கு நன்னா பொய் சொல்றேடா' உதடுகள் வரை வந்த வார்த்தைகளை விழுங்கிக்கொண்டார் யசோதா

“அதனாலே இன்னைக்கு கோகுல் கோதைக்குத்தான் கல்யாணம்.” முரளி சொல்ல

பதில் பேசாமல் மகன் முகத்தையே சில நொடிகள் பார்த்திருந்தார் யசோதா.

“அப்போ நோக்கு எப்போடா கண்ணா கல்யாணம்?” ஏக்கத்தில் குளித்து கிடந்தது சற்று நேரம் கழித்து எழுந்த அந்த அன்னையின் குரல்.

“இத்தனை நாள் தள்ளி தள்ளி போயிண்டிருந்தது இன்னைக்கு நடந்திடும்னு ரொம்ப சந்தோஷமா இருந்தேனேடா அம்மா” அம்மாவின் குரல் கரைய கொஞ்சம் தடுமாறி பின்னர் சட்டென சுதாரித்தான் முரளி

“மா.. இப்போ என்ன ரெண்டு நாள் கழிச்சு என் கல்யாணம் நடந்தா தலையா போயிடும்... இன்னைக்கு இவா கல்யாணம் நடக்கட்டும்மா”

“அதெல்லாம் வேண்டாம்” என்றார் தேவகி சட்டென “ரெண்டு கல்யாணமும் ஒண்ணா நடக்கணும்னு தானே பிளான் அப்படியே நடக்கட்டும். இவா கல்யாணமும் வேதா வந்ததுமே நடக்கட்டும்.. அதுதான் சரி”

சரியாக அந்த நொடியில் ஒலித்தது வாசுதேவனின் கைப்பேசி. கோதையின் தந்தையிடமிருந்து அழைப்பு.

“சொல்லுங்கோ” வாசுதேவனின் குரல் கம்பீரமாக ஒலிக்க.. கொஞ்சம் தடுமாறித்தான் போனது மறுமுனை.

“பெரியவா மன்னிக்கணும்.... ஒரு சின்ன தப்பு நடந்திடுத்து... என் பெரிய பொண்ணு டெல்லிக்கு போயிருக்கா...வர ரெண்டு நாள் ஆகுமாம்”

“டெல்லிக்கா?” எதிர்முனை முழுவதுமாக சொல்லி முடிப்பதற்குள் சுறுசுறுவென ஏறியது அவர் கோபம். “ஸ்ரீதரன் என்ன விளையாடறேளா? இது வரைக்கும் நாங்க உங்க பெரிய பொண்ணை நேர்லே பாக்கவே இல்லை. இன்னைக்கு கல்யாணத்தை வெச்சிண்டு டெல்லிலே போய் என்ன பண்ணிண்டிருக்கா உங்க பொண்ணு ?”

“இல்லை வேலை விஷயமா..”

“அப்படி என்ன வேலை? அவ என்ன பெரிய ப்ரைம் மினிஸ்டரா?”

“தப்புதான்.. பெரிய தப்புதான்... இப்போ என்ன பண்றதுன்னு பெரியவா நீங்களே சொல்லுங்கோ...”

ஒரு நொடி யோசித்தவர் “இப்போ ஒண்ணும் பண்றா மாதிரி இல்லை. உங்க பெரிய பொண்ணும் வந்துடட்டும் அதுக்கு அப்புறமா நிச்சயதார்த்தம் கல்யாணம் எல்லாம் வெச்சுப்போம்...” துண்டித்தார் அழைப்பை. சரேலென நிமிர்ந்தான் கோகுல்.

சுற்றி நின்ற எல்லரிடமுமே கனத்த மௌனம். எல்லார் பார்வையும் இப்போது ஏனோ கோகுலின் பக்கமே திரும்பியது. அவன் தனது அப்பாவை இதுவரை எதிர்த்து பேசியது இல்லை தான். ஆனால் இப்போது?

கண்களை இறுக மூடிக்கொண்டு நின்றான் அவன். மூடிய கண்களுக்குள் வந்து சிரித்தாள் கோதைப்பெண்.

தெரியும் அவனுக்கு. மனதில் ஆயிரம் குழப்பம் இருந்தாலும் அவன் மீது இருக்கும் நம்பிக்கையில் அவள் தயாராகி காத்திருப்பாள் என்று தெரியும் அவனுக்கு.

நேற்று மாலை வரை நம்பிக்கை கொடுத்தேனே அவளுக்கு.? எப்படி உடைந்திருப்பாள் என் கோதைப்பெண். ஒரு ஆழமான மூச்செடுத்துக்கொண்டு கண் திறந்தான் அவன். அப்பாவின் முன்னால் சென்று நின்றான் அவன்.

'அப்பா... நேக்கு இன்னைக்கு கல்யாணம் நடக்கணும்..' என்றான் உறுதியான குரலில்.

“டேய்... புரிஞ்சுதான் பேசறியா? அந்த பொண்ணு வேதா... அவ சரியில்லைடா...”

“நான் கல்யாணம் பண்ணிக்கப் போறது கோதைய. அவ எந்த தப்பும் பண்ணலை....”

“கோகுல்... நடந்தா ரெண்டு கல்யாணமும் ஒண்ணா நடக்கணும்.... புரியறதா...” அப்பாவின் குரலில் வெப்பம் ஏற, அவன் ஏதோ சொல்ல வாய் திறப்பதற்குள்...

“கண்ணா “ சற்றே உயர்ந்து வந்தது தேவகியின் குரல்.. “நீ கொஞ்ச நாழி உன் ரூமிலே போய் இரு. மத்ததை அப்புறமா யோசனை பண்ணுவோம்”

அதற்குள் “அம்மா” என்றபடி தனதருகில் நின்றிருந்த யசோதையின் கையை பற்றிக்கொண்டான் முரளி.

“நீ பேசுமா... அவன் ஆசைப் படறான். இந்த கல்யாணம் நடக்கட்டும். நீ சொன்னா அப்பா சித்தப்பா, சித்தி எல்லாரும் கேட்டுப்பா.. ப்ளீஸ் மா.” என்றான் மெலிதான குரலில்.

“அப்போ.. உன் கல்யாணம்.?” அம்மாவின் கண்களின் ஓரத்தில் நீர் கோடுகள் “உண்மையை சொல்லு வேதா எங்கேடா.?”

“அவ டெல்லிதான் போயிருக்கா.... நீ முதல்லே பேசு”

அசைவில்லை யசோதையினிடத்தில். மகன் பொய் சொல்கிறான் என புரியாமல் இல்லை அந்த அன்னைக்கு.

“மா... அவனும் நீ சாதம் ஊட்டி வளர்ந்த பையன் தானே மா.... . பாவம் மா”

................................................................

“ப்ளீஸ்... மா.. என் செல்லம் தானே நீ... நான் சொன்னா கேட்பியோன்னோ ப்ளீஸ் மா” முரளியின் குரல் கொஞ்சம் கரைய, கோகுலின் மீது அவருக்கு இருந்த பாசமும் அவரை செலுத்த, ஒரு பெருமூச்சுடன் வாசுதேவனை நோக்கி நடந்தார் யசோதா.

சந்தோஷ சிரிப்புடன் அவரையே பார்த்திருந்தான் முரளி.. “அம்மாவின் பேச்சுக்கு அங்கே மரியாதை இருக்குமென தெரியும் அவனுக்கு”

சில பல நிமிடங்கள் கடந்தன.

ன்னங்களில் ஈரம் படர்ந்திருக்க ஒற்றை வார்த்தை கூட பேசாமல் அசையா சிலையாக அமர்ந்திருந்தாள் கோதை.

“நம்ம அந்தஸ்துக்கு ஏத்த இடமா பார்க்கணும்டா..ஸ்ரீதரா” இது அத்தை..

“நோக்கு அவசரம்... எங்களண்ட கூட ஒரு வார்த்தை கேட்காம நிச்சியதார்த்ததுக்கு ஏற்பாடு பண்ணிட்டே.... வேதா கிட்டேயானும் ஒரு வார்த்தை கேட்டியா? அவ டெல்லிலே போய் உட்கார்ந்திண்டு இருக்கறதை பார்த்தா நேக்கு என்னமோ சந்தேகமாத் தான் இருக்கு. என்ன இருந்தாலும் அவா பணக்காராடா. இனிமே வேதா வந்தாலும் அவா ஆயிரத்தெட்டு கேள்வி கேட்பா. இதெல்லாம் சரியா வரும்னு நேக்கு தோணலை. சரி விடுமா கோதை... நோக்கு அந்த கோகுல் இல்லை” அத்தை சொல்லி முடிக்க

“அது எப்படி அப்படி சொல்வேள்?” திடீரென அங்கே ஒலித்தது கோகுலின் குரல். “நேக்கு எப்பவும் கோதைதான். நேக்கு கோதையைதான் பிடிக்கும். கோதையை மட்டும்தான் பிடிக்கும். என்னடா கோதைப்பொண்ணு?”

அங்கே இருந்த அத்தனை பேரும் ஒரு சேர நிமிர, அங்கே புன்னகையுடன் கோகுல் நின்றிருக்க, சட்டென எழுந்து நின்றார் ஸ்ரீதரன். அவர் முகத்தில் நிறையவே வியப்பு.

“வாங்கோ மாப்பிள்ளை” அவர் கோகுலை வரவேற்றார்.

அதே நேரத்தில், பத்திரமாக இருந்தது அது. அவர் அணிந்திருந்த அந்த சட்டையின் பையில் வேதா எழுதிய அந்த கடிதம் பத்திரமாக அமர்ந்திருந்தது. அதை அவர் பார்க்கும் நேரமும் நெருங்கிக்கொண்டிருந்தது.

நேற்று இரவு....

இங்கே கோகுலும் முரளியும் வேதாவை பற்றி, சரவணனை பற்றி ஏதாவது தகவல்கள் கிடைக்குமா என்று தேடிக்கொண்டிருந்த நேரத்தில்...

திடுக்கென்று விழித்துக்கொணடாள் வேதா.... அப்போது அந்த காரில் பயணித்துக்கொண்டிருந்தாள் அவள். பின் சீட்டில் கிடத்தப் பட்டிருந்தாள் அவள்.

காருக்கு உள்ளேயும் வெளியேயும் இருட்டு. எங்கே போய்க்கொண்டிருக்கிறோம் என்றே புரியவில்லை அவளுக்கு. அந்த சூழ்நிலை அவளை அவளை உலுக்கிய போதும் அடி மனதில் இருந்த தைரியம் இன்னுமும் கரைந்து விடவில்லை.

படுத்திருந்த படியே மெல்ல எட்டிப்பார்த்தவளுக்கு முன் சீட்டில் அமர்ந்திருந்தவர்கள் கண்ணில் பட்டார்கள் அரை குறை இருட்டில் அதில் இருவர் தெரிந்தனர். சில நொடிகள் கழித்து அது விக்கியும் டிரைவரும் என புரிந்தது அவளுக்கு..

அவன் எங்கே? என்னிடம் கோகுலாக நடித்தவன் எங்கே? தெரியவில்லை அவளுக்கு.

அந்த இருட்டில் கைக்கடிகாரத்தில் நேரம் கூட தெரியவில்லை. எத்தனை மணி நேரமாக மயங்கி கிடக்கிறேன்? தெரியவில்லை அவளுக்கு. நிச்சயம் ஒரு பத்து மணி நேரமாவது கடந்திருக்க வேண்டும்.

தான் அவர்களால் எத்தனை தூரம் ஏமாற்ற பட்டிருக்கிறோம் என்று நினைக்க நினைக்க இதயம் பற்றி எரிந்தது வேதாவுக்கு..

காலையில் அந்தக் கோவிலை விட்டு சில அடிகள் விக்கியுடன் நடந்தவளுக்கு மனதுக்குள் நிறையவே யோசனைகள். அப்பாவின் நண்பர் ராஜகோபாலன். இவர் ஒருவரே இப்போது அவள் தப்பிக்க வழி என்று தோன்றியது. ஆனால் அதே நேரத்தில் அவளை ஏமாற்றிய இந்த கயவர்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டாமா?

விக்கியின் எதிரில் அவரிடம் எதுவும் பேசவும் முடியாது. பேசாமல் அவனுடன் நடந்தாள் வேதா.

அப்போது மெதுவாக எழுந்தது அவள் குரல்...

“கோகுல் எங்கே விக்கி?’

“அவன் கொஞ்சம் வெளியிலே போயிருக்கான்னு சொன்னேனே. நாம இப்போ கொஞ்ச நேரத்திலே இங்கிருந்து கிளம்பி நேரே ரிஜிஸ்டர் ஆபீஸ் போறோம். அவன் அங்கே வந்திடுவான்” சொல்லிக்கொண்டே அவன் கோவிலை தாண்டி நடக்க..

“விக்கி... நான் கோவில் பிரகாரம் சுத்த மறந்திட்டேன். நீ போயிண்டே இரு நான் சுத்திட்டு வந்திடறேன்... ஒரே நிமிஷம்...”

“சரி சீக்கிரம் வா” என்றபடி அவன் முன்னோக்கி நடக்க... மறுபடியும் கோவிலை நோக்கி ஓடினாள் வேதா.

ஒரு முறை திரும்பி பார்த்து அவன் பின்னால் வர வில்லை என்பதை உறுதி செய்துக்கொண்டு ராஜகோபாலனிடம் சென்றாள். அந்த கோவிலில் அவர்களைத் தவிர வேறு யாருமில்லை.

“மாமா சித்த இப்படி வரேளா?” என்றாள் வேதா. அவரை ஒரு ஓரமாக அழைத்து சென்று

“நான் ஒரு ஆபத்திலே மாட்டிண்டு இருக்கேன் மாமா. என் போனையும் திருண்டிட்டுட்டான் இவன். எப்படியானும் போலீஸ் இங்கே வந்தாகணும். ஏதானும் பண்ணுங்கோ மாமா”

“நினைச்சேன். அவனை பார்த்தவுடனேயே நினைச்சேன். நீ ஒண்ணும் பயப்படாதே. இங்கேயே இரு நான் பார்த்துக்கறேன்” சொன்னவர் தனது கைப்பேசியை தேடி எடுத்து போலீஸ் எண்ணை முயன்ற அந்த நொடியில்... அந்த கைப்பேசியை ஒரு கை பிடுங்கிக்கொண்டது..

பின்னாலிருந்து ஒரு கரம் அவள் முகத்தில் எதையோ வைத்து அழுத்துவதை அவளால் உணர முடிந்தது. சட்டென தலை சுற்றி கண்கள் இருட்டிய அதே நேரத்தில் கண் முன்னே ராஜகோபாலன் சரிந்து விழுவது தெரிந்தது.

'அப்பா...' அவள் உதடுகள் உச்சரிக்க.... ஏனோ அவர் முகம் அவள் கண் முன்னே வந்து போக அப்படியே மயங்கி சரிந்தாள் வேதா. அதன் பிறகு இப்போதுதான் கண் விழிக்கிறாள். அங்கே ராஜகோபாலனின் நிலை என்ன ஆனது என்றும் அவளுக்கு தெரியவில்லை.

தொடரும்
 

Rajam

Well-known member
Member
சரவணனை விட மோசமா இருக்கானே.
வேதா எப்படி மீளுவாள் இவனிடமிருந்து.
ராஜகோபால் மயக்கம் தெளிந்து
போலீஸுக்கு தகவல் சொல்லி இருப்பாரா.
 

kothaisuresh

Well-known member
Member
இந்த சரவணன் நம்ப வைச்சி கழுத்தறுத்திட்டான். வேதா எப்படி தப்பிக்க போறா?
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் கதை 50வது எபி வரை போட்டாச்சு.

இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 20 போஸ்டட் டியர்ஸ்
காரிருள் சூழா காதலே... கதை லிங்க் பிப்ரவரி 23 அன்று இரவு 10 மணி வரை மட்டுமே தளத்தில் இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீடிக்கப்பட மாட்டாது‌‌ நண்பர்களே... அதனால் விரைவில் படித்துவிடுங்கள்.

WhatsApp Channel

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-காரிருள்-சூழா-காதலே.376/

New Episodes Thread

Top Bottom