• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே 10

Vathsala Raghavan

✍️
Writer
யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே 10
“ஹலோ” என்றான் கோகுல்.

...........................................

“ஹலோ” என்றான் மறுபடியும்,

மறுமுனையில் இருந்து சத்தமே இல்லை. ஆனால் மெலிதாக கேட்ட சுவாசம் யாரோ மறுமுனையில் இருப்பதை மட்டும் உறுதி செய்தது.

'ஹலோ .... நான் கோகுல் பேசறேன்....'

மறுமுனையில் இன்னமும் மௌனம்.

ஆனால் இவன் குரல் கேட்டதும் ஒரு நொடி அந்த மூச்சு சத்தம் நின்று தொடர்ந்ததை போல தோன்றியது அவனுக்கு. தவிப்பில் குளித்து கிடந்தாள் கோதை.

சில நொடிகள் கடக்க மறுமுனையில் இருந்து ஒரு குரல் கேட்டது

“நான் வேதா பேசறேன்”

“ஹலோ... வேதா..... என்னதிது? நீங்க இப்போ எங்கே இருக்கேள்? முதல்லே கிளம்பி ஆத்துக்கு வாங்கோ. உங்களுக்கு பிடிக்காதது எதுவும் இங்கே நடக்காது. அதுக்கு நான் பொறுப்பு.” .

மறுமுனையில் பேச்சில்லை. அவன் வேதா என்ற பெயரை சொல்வதை கேட்டவுடனேயே அவனருகில் ஓடி வந்தாள் கோதை

“இப்படி பேசாம இருந்தா எப்படி? நீங்க இப்போ எங்கே இருக்கேள்.?”

“நான் ம... ம... ம... மதுரையிலே இருக்கேன்....”

“மதுரையா?”.

“ஆமாம்....கோதை ரொம்ப அழறாளா? நேக்கு அவ கிட்டே ஒரு வாட்டி பேசணும்”

'வேதா நீங்க முதல்லே ஆத்துக்கு கிளம்பி வாங்கோ

“இல்லை நீங்க கோதைட்ட குடுங்கோ ப்ளீஸ்”

அவன் வேறு வழி இல்லமல் கோதையிடம் தொலைபேசியை கொடுக்க பதற்றத்துடன்

“அக்கா” என்றாள் அவள்.

“செல்லம் என்னை மன்னிச்சிடுடா..... நாளைக்கு நேக்கு கல்யாணம்”

“அக்கா... என்னக்கா நீ முதல்லே ஆத்துக்கு வாக்கா. அப்பாக்கு தெரியாம நீ கல்யாணம் பண்ணிப்பியா? தப்புக்கா... வந்திடுக்கா..”

“இல்லைடா... அது முடியாது. நேக்கு இவரை தான் பிடிச்சிருக்கு. விட்டுட்டு வர முடியாது. சும்மா உன்னோட பேசணும்னு தோணித்து அதுதான் கூப்பிட்டேன். அக்காவை நினைச்சு அழாதே. அக்காவை பத்தி யோசிக்காதே உன் வாழ்கையை பார்த்துக்கோ. வெச்சிடறேன்”

“அக்கா... அக்....கா....” கோதை அழைத்துக்கொண்டே இருக்க அழைப்பை துண்டித்துவிட்டிருந்தாள் வேதா.

“போனை வெச்சிட்டா” கண்களில் கண்ணீர் வழிய கோதை கோகுலை பார்த்து சொல்ல, அவன் தொலைப்பேசியை வாங்கி பார்த்த போது அதில் எந்த சத்தமும் இல்லை.

யாருடைய அதிர்ஷ்டமோ? யாருடைய துரதிஷ்டமோ அது திடீரென செயல் இழந்து போயிருந்தது.

“என்னாச்சு கோகுல்?”

“அவுட் ஆஃப் ஆர்டர்” ஒரு பெருமூச்சுடன் ரிஸீவரை கீழே வைத்தான்.

“உங்க அக்கா நம்பர் சொல்லு” என்றபடி தனது கைப்பேசியில் இருந்து அதை முயல அது அணைக்கப்பட்டிருந்தது.

இப்போது எந்த எண்ணிலிருந்து அழைத்திருப்பாள்?.

“போன்லே காலர் ஐ.டி இல்லையாடா? “

“ம்ஹூம்... இப்போ என்ன பண்றது?”

“இரும்மா டென்ஷன் ஆகாதே இப்படி உட்கார். ரெண்டு நிமிஷம் ரிலாக்ஸ்டா இரு” என்றவனுக்கு எத்தனை முறை யோசித்தாலும் விஷயத்தை அவளது தந்தையிடம் சொல்லிவிடுவதுதான் சரி என்று தோன்றியது.

“கோதைப் பொண்ணு உங்க அப்பாட்ட எல்லாத்தையும் சொல்லிடறது தான் நல்லதுன்னு நேக்கு படறது”

“என்னனு சொல்றது? அக்கா ஆத்தை விட்டு போயிட்டான்னா? ரொம்ப பயந்து போயிடுவார்”

“அதுக்காக சொல்லாம இருக்க முடியுமா? நான் நிதானமா சொல்றேன் சரியா?” என்றபடியே அவரது எண்ணை அழைத்தான் கோகுல். அந்த நொடியில் சுவாசம் அவளை விட்டு வெகு தூரம் போய்விட்ட உணர்வு அவளுக்கு.

அங்கே அப்பாவின் கைப்பேசி ஒலித்துக்கொண்டே இருக்க அழைப்பு ஏற்கப்படவில்லை. இரண்டு முறை, மூன்றாவது முறை அழைப்பு துண்டிக்கப்பட்டது.

“எடுக்க மாட்டேன்றார். ஒரு வேளை கோவில்லே இருப்பாரோ என்னவோ? சரி நம்பர் பார்த்துட்டு கூப்பிடுவார்” என்று அவன் சொல்ல,

பதில் பேசாமல் யோசனையுடனே அமர்ந்திருந்தாள் கோதை. மெதுவாக திரும்பி அவள் முகம் படித்தான் அவளவன்.

‘என்னமா யோசனை?”

“அப்பா தற்கொலை பண்ணிண்டுடுவாரா கோகுல் ?” ஒரு நொடி அதிர்ந்தான் கோகுல். அவள் விழி தாண்டி இருந்த நீரும், பயம் பரவிக்கிடந்த அவளது கண்களும் அவளது மனநிலையை தெளிவாக உணர்த்தின அவனுக்கு.

“பைத்தியமா நோக்கு? தேவை இல்லாம என்னத்தையானும் கற்பனை பண்ணிக்காதே. அப்படி எல்லாம் எதுவும் நடக்காதுடா”

“கற்பனை பண்ணிக்கலை. நிஜமாவே நேக்கு ரொம்ப பயமா இருக்கு. நாளன்னிக்கு நிச்சியதார்த்தம். நாளைக்கு கார்த்தாலே எங்க அத்தை, அத்திம்பேர், பெரியம்மா பெரியப்பான்னு எங்காத்து மனுஷா எல்லாரும் வந்திடுவா. அக்கா இப்படி பண்ணிட்டு போயிட்டா தெரிஞ்சா அப்பாவோட மானம் போயிடும் கோகுல். எல்லாரும் வாய்க்கு வந்தபடி பேசுவா கோகுல். அப்பாவாலே தாங்கிக்க முடியாது.” உடைந்தது அவள் குரல். அவளை தோளில் சாய்த்துக்கொண்டு தலை வருடினான் கோகுல்.

காதல் என்பது ஒரு காட்டாறு. எதிரில் எத்தனை தடைகள் வந்தாலும் அதை உடைத்தெறியும் வல்லமை இந்த காதலுக்கு உண்டு என்றெல்லாம் படித்திருக்கிறான் அவன். ஆனால் அது அந்த காதலில் சம்மந்த பட்டவர்களை தாண்டி, சுற்றி இருப்பவர்களுக்கு இவ்வளவு வலி கொடுக்கும் என்பதை இப்போதுதான் கண் கூடாக பார்க்கிறான்.

“நீ தைரியமா இருடா. நான் பார்த்துக்கறேன் எல்லாத்தையும். நம்மாத்திலே தப்பா எதுவும் நடக்காது.’

“உங்க அப்பா அம்மா என்ன சொல்லுவா கோகுல்? உங்க பெரியப்பா ரொம்ப கோபப்படுவார். நம்ம கல்யாணம் கூட நின்னு போயிடும் இல்லையா கோகுல்?”

சின்ன புன்னகையுடன் அவள் முகத்தை கையில் ஏந்திக்கொண்டு மெல்ல சொன்னான் கோகுல்

“அப்படி விட்டுடுவேனாடா உன்னை? நான் ஒரு தடவை சொன்னா சொன்னது தான். நேக்கு எப்பவும் கோதைதான். நேக்கு கோதையைதான் பிடிக்கும். கோதையை மட்டும்தான் பிடிக்கும். சரியா?” .

நேரம் இரவு பத்தரையை தாண்டிக்கொண்டிருக்க இப்போது மறுபடியும் அவளது தந்தையின் எண்ணை முயல அதுவும் அணைக்கப்பட்டிருந்தது.

“பெருமாளே” என்றான் வாய்விட்டு. தனிச்சையாக திரும்பியவனின் கண்ணில் பட்டான் பூஜை அறையில் புன்னகையுடன் நின்றிருந்த மாயக்கண்ணன். அப்போது ஒலித்தது அவன் கைப்பேசி. அழைத்தது முரளி.

“அப்பாவா?” கோதை அவசரமாக கேட்க..

“இல்லைடா... முரளி “ என்றான் கோகுல்

“ஆத்துள்ளே சிக்னல் சரியா இருக்காது. வெளியிலே போய் பேசணும்” அவள் மெல்லச் சொல்ல கைப்பேசியுடன் வெளியே வந்தான் கோகுல். கோதை உள்ளேயே அமர்ந்திருந்தாள்.

“சாப்பிட்டியாடா?” ஆரம்பித்தான் முரளி

“சாப்பிட்டேன். எங்கேடா இருக்கே?”

“ஏர்போர்ட் வந்திட்டேன் இன்னும் கொஞ்ச நாழியிலே பிளைட்.”

“முரளி... இங்கே ஒரு பிரச்சனைடா” மெதுவாக துவங்கினான் கோகுல்.

அவன் பேசப்பேச முரளியினிடத்தில் அதிர்ச்சி, படபடப்பு, பரபரப்பு போன்ற எதுவுமே இல்லை. மிக நிதானமாக எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டான் அவன். இதில் கோகுலுக்கு பெரிய வியப்பெல்லாம் இல்லை. முரளி எப்போதுமே இப்படிதான்! சில நொடி மௌனம் ஏதோ யோசனை முரளியிடம்..

சில நொடிகள் கழித்து “சரி” என்றான் அவன். “ஆத்திலே சொல்லிட்டியா?”

“இல்லைடா. இனிமே தான் சொல்லணும். யார் இதை எப்படி எடுத்துப்பான்னு தெரியலை”

“நேக்கும் அதுதான் தெரியலை. அதனாலே ஒண்ணு பண்ணுவோம் யாருக்கும் இதை சொல்லவேண்டாம்.

“டேய்” திடுக்கிட்டே போனான் கோகுல் “இது மறைக்கற விஷயமாடா ?”

“இதுதான் மறைக்கிற விஷயம்” என்றான் படு நிதானமாக “இப்போதைக்கு, அட்லீஸ்ட் ரெண்டு நாளைக்கு அவ அப்பா உட்பட யாருக்கும் இது தெரிய வேண்டாம்”

“முரளி விளையாடாதே”

“இல்லை. விளையாடலை. நன்னா யோசனை பண்ணிதான் சொல்றேன்”

கோகுலால் இதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. “நாளைக்கு நம்மாதிலேயும் சரி அவாத்திலேயும் சரி எல்லாரும் வந்திடுவாடா. அவா கிட்டே எல்லாம் என்னடா பதில் சொல்றது?”

“டேய்... எல்லாத்தையும்... நானே யோசிக்க முடியுமா? நீயும் கொஞ்சம் யோசனை பண்ணுடா.. என்னமானும் சொல்லி சாமாளிடா” .

“இப்போ என்னத்துக்குடா இதை மறைக்கணும்?” கொஞ்சம் குழப்பத்துடனே கேட்டான் கோகுல்.

“அதெல்லாம் நான் இன்னும் முடிவு பண்ணலை. மறைக்கணும்ன்னு முடிவு பண்ணியாச்சு மறைச்சிடலாம். மத்ததை அப்புறம் யோசிப்போம்”

“முரளி...” அவன் குரல் கொஞ்சம் அழுத்தமாக வெளிவந்தது. “இங்கே இருக்கிற சிச்சுவேஷன் புரியாம பேசறே”

“எல்லாம் புரிஞ்சுண்டுதாண்டா பேசறேன். நீயும் கோதையும் என்னடா தப்பு பண்ணேள்? உங்க கல்யாணம் என்னத்துக்கு நிக்கணும்?” அவன் சொல்ல வருவது சட்டென புரிய... சில நொடிகள் மௌனத்தில் கடக்க...

“அ... அது சரிடா அதுக்காக இதை மறைச்சா பெரிய பிரச்சனை ஆகும் முரளி...”

“சரி....... எல்லாத்தையும் சொல்லிட்டா பிரச்சனையே வராதா?”

.........................................

“என்னடா பதிலே வரலை. யோசிடா குழந்தை யோசி. நான் வரவரைக்கும் யோசனை பண்ணிண்டே இரு. ஆனா வாயை திறந்து யார்ட்டேயும் எதுவும் சொல்லப்படாது. சமத்தோன்னோ..”

“டேய்.... “

“இதோ வந்துட்டேன். வந்துண்டே இருக்கேன். நேர்லே வந்து நோக்கு புரியற மாதிரி சொல்றேன். இப்போ வெச்சிடட்டுமா?”

முரளி அழைப்பை துண்டித்த நொடியில் அவனது வீட்டில் இருந்து அழைப்பு. எதிர்முனையில் அம்மா.

“கண்ணா... எங்கேடா இருக்கே?” நாழியாச்சேன்னு கூப்பிட்டேன்..'

“அதும்மா... இங்கே ஒரு ஃப்ரெண்டாத்திலே இருக்கேன் கார்த்தாலே வந்துடறேன்”

“என்னடா இது புதுசா இருக்கு. நீ எப்பவும் யாரத்திலேயும் தங்க மாட்டியே?” அம்மாவுக்கு கொஞ்சம் யோசனையும், வியப்பும். இதுவரை கோகுலும் இப்படி யார் வீட்டிலும் தங்கியது இல்லை தான். ஆனால் இன்று கோதையை தனியே விட கண்டிப்பாக மனமில்லை அவனுக்கு.

“ஒரு முக்கியமான வேலைம்மா.. கார்த்தாலே வந்துடறேன்”

“அதுக்கில்லை டா”

“மா... நான் என்ன குழந்தையா மா? என்னத்துக்கு தேவை இல்லாம கவலை படறே? பேசாம படுத்துண்டு தூங்கு”

“சரிடா... ஜாக்கிரதை” மனமில்லாமல் தான் அழைப்பை துண்டித்தார் அம்மா.

முரளி சொன்னவைகளே அவன் தலைக்குள் அலையடித்துக்கொண்டிருக்க...

''கோதைப்பொண்ணு” என்றபடியே உள்ளே வந்தான் கோகுல். தவிப்புடன் அவன் முகம் பார்த்தாள் அவள்.

“அவர் என்ன சொன்னார். ரொம்ப கோவமா?”

சிரித்தான் கோகுல் “நேக்கானும் கொஞ்சம் கோபம் வரும். அவனுக்கு கோபமே வராது”

“ஒண்ணுமே சொல்லலையா அவர்?”

“ம்ஹூம்” என்றபடியே அவள் முகத்தை ஆழ்ந்து ஊடுறுவினான் கோகுல்.

;நம்ம கல்யாணம் கூட நின்னு போயிடும் இல்லையா கோகுல்??? அவள் சற்று முன் கேட்டது நினைவுக்கு வர, முரளி சொல்வது ஒரு வகையில் சரிதானோ என்று தோன்றியது அவனுக்கு.

“நீங்க... இப்போ ஆத்துக்கு போகணுமா?” மெதுவாக கேட்டாள் அவள்.

“இல்லமா. கார்த்தாலே வரைக்கும் இருக்கேன். உன்னை தனியா விட்டுட்டு போக மனசு வரலை” அவன் சொல்ல நிறையவே நிம்மதி பிரவாகம் அவள் முகத்தில்.

“அக்கா பத்திரமா இருப்பாளா கோகுல்?” அடுத்தக் கேள்வி.

அதுதான் அவனுக்கும் குழப்பமாக இருந்தது. அவள் தேர்ந்தெடுத்தவன் சரியானவனா? அப்படி இல்லை என்றால் வேதா ஏதாவது பிரச்சனையில் மாட்டிக்கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறதே?

“உன்கிட்டே உங்க அக்கா ஃபிரண்ட்ஸ் நம்பர் ஏதானும் இருந்தா குடு. உங்க அக்கா எங்கே போயிருக்கா. என்ன ஏதுன்னு ஏதாவது டீடெயில்ஸ் கிடைக்கறதான்னு பார்க்கறேன்” என்றான் கோகுல்.

“அக்காக்கு நிறைய ஃபிரண்ட்ஸ் எல்லாம் இல்லை. கவிதா மட்டும் தான்”

“சரி அந்த கவிதா நம்பர் குடு.” என்று கேட்டவன் ஏதோ யோசனையுடனே தனது காவல்துறை நண்பனை அழைத்தான்.

“ஹலோ... மாயக்கண்ணன் ஹியர்”

“நான் கோகுல் பேசறேன்டா ஒரு ஹெல்ப் வேணுமே”

“சொல்லுடா செய்யறேன்”

“தெரிஞ்ச பொண்ணுடா... ரொம்ப நல்ல பொண்ணு... இப்போ..” கோகுல் கொஞ்சம் தயக்கத்துடன் வார்த்தைகளை கோர்க்க

“புரிஞ்சது. நீ போட்டோ மட்டும் அனுப்பு. கொஞ்சம் டைம் குடு நான் ட்ரேஸ் பண்ணிட்டு சொல்றேன்” அப்படியே அவ மொபைல் நம்பர் அனுப்பு அதை வெச்சு எதாவது ட்ரேஸ் பண்ண முடியுமான்னு பாக்கறேன்.

“இப்போ இங்கே லேன்ட் லைன்க்கு வேறே எங்கே இருந்தோ அவ கால் பண்ணாடா. நம்பர் என்னனு தெரியலை.”

“அப்போ உங்க லேன்ட் லைன் நம்பரும் அனுப்பு”

“அப்புறம், இன்னொரு விஷயம்... இந்த விஷயம்...வெளியிலே தெரிய வேண்டாம்.... இது சம்மந்தமா எது தெரிய வந்தாலும் எனக்கு சொல்லு அது போறும்...''

“வெளியிலே வராது... நான் பெர்சனலா டீல் பண்ணிட்டு சொல்றேன். ஒகே வா? உன்னோட கல்யாண வேலையெல்லாம் எப்படி போயிட்டிருக்கு?”

“ஆங்... போயிண்டிருக்குடா... கோயிங் ஆன்..” என்றான் கோகுல். “இப்போதிருக்கும் நிலைமைக்கு வேறே எப்படி சொல்வதாம்?”

“ஒகே டா. சீக்கிரம் கூப்பிடறேன்” துண்டித்தான் அழைப்பை.

அதற்குள் கவிதாவின் எண்ணுடன் வந்தாள் கோதை. நேரம் இரவு பதினொன்றை நெருங்கிக்கொண்டிருக்க இந்த நேரத்தில் ஒரு பெண்ணை அழைத்து பேசுவது அநாகரீகம் என்று தோன்ற, தனது கைப்பேசியில் அந்த எண்ணை மட்டும் பதித்துக்கொண்டான் கோகுல்.

“நீ தூங்குடா கொஞ்ச நாழி “

“தூக்கம் இப்போ வாராதே.. அப்பா ஏன் போன் ஆஃப் பண்ணி வெச்சிருக்கார்?” கவலை மட்டுமே இருந்தது அவள் குரலில்.

“சார்ஜ் இல்லாம இருக்கும்மா... மார்னிங் பேசுவார். கொஞ்ச நாழி படுத்துக்கோ” அவளைக் கட்டாய படுத்தி கொஞ்ச நேரம் உறங்க வைத்தான் கோகுல்.

கொஞ்ச நேரம் சென்றதும் மாயக்கண்ணனிடமிருந்து அழைப்பு.

“அவங்க போன் சென்னை வேளச்சேரிலே சுவிட்ச் ஆஃப் ஆகி இருக்குடா. அண்ட் அவங்க இப்போ ஃபோன் பண்ணது சென்னை பெங்களூர் ஹை வேலே இருக்கிற ஒரு பப்ளிக் போன்லேர்ந்து” என்றான் அவன். “வேறே ஏதாவது இன்ஃபார்மேஷன் தெரிஞ்சா சொல்றேன்”

'நான் இப்போ மதுரையிலே இருக்கேன் என்றாளே வேதா?' பல நூறு அதிர்வுகள் கோகுலினுள்ளே. எதற்காம் இந்த பொய்?

நேரம் காலை ஐந்தை நெருங்கிக்கொண்டிருக்க... கோதையின் வீட்டில் அவர்கள் இருவரின் எதிரிலும் அமர்ந்திருந்தான் முரளி. சென்னை ஏர்போர்டில் வந்து இறங்கியவன் நேராக இங்கே வந்திவிட்டிருந்தான். கோதை கொடுத்த சூடான காபியை குடித்தபடியே நிமிர்ந்தான் அவன்.

கோதையும் கோகுலும் அருகருகே அமர்ந்திருக்க தன்னாலே புன்னகை பூத்தது அவன் இதழ்களில்.

“மேட் ஃபார் ஈச் அதர்” என்றான் அவன் வாய்விட்டு. சின்ன மென்னகை இருவர் இதழ்களிலும். கோதைக்கு ஏதோ ஒன்று உறுத்தி இருக்க வேண்டுமோ?

“சாரிண்ணா” சற்றே தழைந்து ஒலித்தது கோதையின் குரல்.

“எதுக்கும்மா?”

“அக்கா பண்ணதுக்கு” அவள் விழிகள் தாழ்ந்தன.

“கோதை... அதை விடு .... இப்போ நான் ஒண்ணு சொன்னா கேப்பியா?” அவளை பார்த்தப்டியே கேட்டான் முரளி.

“சொல்லுங்கோ” நிமிர்ந்தாள்

“உங்க அக்கா பத்தி ரெண்டு நாளைக்கு யாருக்கும் தெரிய வேண்டாம். உங்க அப்பா உட்பட...'” அவன் உறுதியாக சொல்ல மொத்தமாக பயந்து போனாள் கோதை.

“அது எப்படி... முடியும்... அப்பாவுக்குத் தெரியாம எப்படி? நேக்கு பயமா இருக்கு.. ரொம்ப பிரச்சனை வரும்”

“இப்போ நாம எல்லாத்தையும் எல்லார் கிட்டேயும் சொல்றோம்ன்னு வெச்சுப்போம்... அப்போ என்ன ஆகும்னு நினைச்சு பார்த்தியா? முதல்லே உங்க அப்பா ரொம்ப துவண்டு போயிடுவார். எங்க அப்பா தாம் தூம்னு குதிப்பார். இவன் அப்பா அண்ணா சொல்றது தான் வேத வாக்குன்னு சொல்லிண்டிருப்பார். வரவா எல்லாரும் அவாளுக்கு தெரிஞ்சதை பேசுவா. எங்க அம்மாவும் ,இவன் அம்மாவும் அழுவா அதோட எல்லாம் முடிஞ்சிடும். எப்போனாலும் இதுதான் நடக்க போறது. நடக்கட்டும். ஆனா உங்க கல்யாணம் முடிஞ்சதும் நடக்கட்டுமே”

இருவரும் இமைக்க மறந்து முரளியையே பார்த்திருந்தனர்.

“என்னடா அப்படி பார்க்கறேள் ரெண்டு பேரும்? நீங்க ரெண்டு பேரும் பிரியறதிலே நேக்கு கொஞ்சம் கூட உடன் பாடு இல்லை. நீங்க என்னடா தப்பு பண்ணேள்.? ஏற்கனவே பிளான் பண்ணா மாதிரி நாளைக்கு கார்த்தாலே பத்து மணிக்கு ரிஜிஸ்டர் ஆஃபிஸ்லே ஒரு கையெழுத்து. அதோட கதையே மாறிடும். அதுக்கு அப்புறம் கோதை உரிமையோட நம்மாத்துக்கு வரலாம்.. யாரும் எதுவும் கேட்க முடியாது. அதுக்கு முன்னாடி இந்த விஷயம் வெளிலே வர வேண்டாமே!”

..........................................

“பிரச்சனை வரும்! அதுக்கு அப்புறம் நிறைய பிரச்சனை வரும். அதை நாம எல்லாரும் சேர்ந்து ஃபேஸ் பண்ணலாம்”

“அது சரிடா... உன் கல்யாணம்? ரெண்டு பேருக்கும் ஒண்ணா கல்யாணம் நடக்கணும்ன்னு தானே பிளான் பண்ணோம். நேக்கு ரொம்ப கஷ்டமா இருக்குடா” சொல்லிவிட்டு ஒரு முறை கோதையை திரும்பி பார்த்துவிட்டு தொடர்ந்தான் கோகுல்

“வேதா .. இல்லேனா வேறே யாரானும் நல்ல பொண்ணா பார்த்துட்டு...”

“கண்ணா...” இடைமறித்தான் முரளி. “கொஞ்சம் யோசனை பண்ணி பாருடா உன் கல்யாணத்துக்கு முன்னாடி எல்லாருக்கும் விஷயம் தெரிஞ்சிடுத்துன்னா நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கறது ரொம்ப கஷ்டம் பா. திரும்பவும் எல்லாரையும் சம்மதிக்க வெக்க போராடணும்.... இந்த மாதிரி தேவை இல்லாத செண்டிமெண்ட் எல்லாம் வெச்சுக்காதே. என் கல்யாணம் வேளை வந்தா தன்னாலே நடக்கும். நீ பேசாம கல்யாணம் பண்ணிக்கோ” கோகுலை பார்த்து சொன்னவன் கோதையின் பக்கம் திரும்பினான்.

“கோதை நான் உன்னண்ட ஒரே ஒரு கேள்வி கேட்பேன். மனசிலே இருக்கறதை அப்படியே சொல்லணும். நோக்கு கோகுல் நல்லவன், உன்னை கல்யாணம் பண்ணிண்டா சந்தோஷமா பார்த்துப்பான்ன்னு நம்பிக்கை இருக்கா?”

சட்டென ஆமோதித்து தலை அசைத்தாள் கோதை.

“எப்படி சொல்றே அவன் நல்லவன்னு?”

“அதெல்லாம் சொல்லத் தெரியலை நேக்கு. ஆனா என் மனசுக்கு நல்லவர்ன்னு தெரியும்” இதழ்களில் சின்ன புன்னகையுடன் சொன்னாள் கோதை.

“குட். வெரி குட். இது போறும்.” என்றான் முரளி. “நாளைக்கு சந்தோஷமா கையெழுத்து போடுவியோன்னோ?”

“ம்’ மெல்லத் தலை அசைத்தாள் கோதை. இன்னும் புன்னகை மாறவில்லைதான்.

சரி அப்போ நாங்க கிளம்பறோம். உங்க ஆத்திலே கெஸ்ட் எல்லாரும் எப்போ வரா?”

“ஏழு மணிக்கு வந்திடுவா” என்றவள் சட்டென ஏதோ தோன்ற கேட்டாள் “இப்போ அப்பா கேட்டா நான் அக்கா பத்தி என்ன சொல்றது?”

“அக்கா டெல்லி போயிருக்கான்னு சொல்லு. ஏதோ மீட்டிங் வர நாலு நாள் ஆகும்னு சொல்லு’ என்றான் முரளி.

தயங்கி தயங்கித்தான் தலையசைத்தாள் கோதை. அப்பாவிடம் பொய் சொல்லி பழக்கம் இல்லை அவளுக்கு.

“வரேண்டா. எதையும் ரொம்ப யோசிக்காதே. நாளைக்கு பார்ப்போம். சரியா? அவளிடம் கோகுல் சொல்ல, இருவரும் வீட்டுக்கு கிளம்ப உள்ளுக்குள் கொஞ்சம் பயம் பரவ ஆரம்பித்தது அவளுக்கு.

காலை ஒன்பது மணி.

கோதையின் அத்தை அத்திம்பேர் என எல்லாரும் வீட்டுக்கு வந்திருக்க அத்தையின் கைப்பேசிக்கு அழைத்தார் அப்பா,

“ஆத்திலே தான் இருக்கேளா எல்லாரும்?”

“இங்கேதான் இருக்கோம். நீ ஊருக்கு போய் என்னடா பண்ணிண்டிருக்கே?” என்றார் அத்தை. அப்பாவின் அக்கா அவர்.

“நாளைக்கு நிச்சியதார்த்தம். நீ ஒரு பக்கம் ஊருக்கு போய் உட்கார்ந்திண்டு இருக்கே. உன் பெரிய பொண்ணு டெல்லில போய் உட்கார்ந்துண்டு இருக்கா”

“டெல்லிக்கா?” அப்பாவின் குரலில் அதிர்ச்சி மட்டுமே இருந்தது. “கோதை கிட்டே குடு”'

“அப்பா... சொல்லுங்கோ “

“என்னமா... நேத்துலேர்ந்து போனே எடுக்கலை. நான் என் போன் தொலைச்சிட்டேன். நேக்கு ஆத்து நம்பர் தான் பார்க்காம தெரியும். வேறே போன்லேர்ந்து அதுக்கு ட்ரை பண்ணிண்டே இருக்கேன். ரிங் போயிண்டே இருந்தது. யாருமே எடுக்கலையே? அத்தை நம்பர் தெரியும் அதுதான் இப்போ அதுக்கு கூப்பிட்டேன் “

“அ... அது அவுட் ஆஃப் ஆர்டர் பா. இங்கே ரிங்கே வரலை”

“அது சரி விடு... அக்கா எங்கே?”

“டெ...ல்...லி போ... யி..ரு..க்கா....பா” ஒவ்வொரு எழுத்தாக அவள் உச்சரித்து முடிப்பதற்குள் பல முறை செத்து பிழைத்திருந்தாள் கோதை.

அங்கே கோகுலின் வீட்டிலும் உறவினர்கள் வர ஆரம்பித்திருந்தனர். காலை உணவை முடித்துவிட்டு கோகுலும், முரளியும் தனியே அமர்ந்திருக்க ஏனோ வேதாவின் ஞாபகம் வந்தது முரளிக்கு.

“நான் அவகிட்டே பேசும்போதானும் ஒரு வார்த்தை ஹின்ட்டாவது கொடுத்திருக்கலாம் வேதா. நான் கண்டிப்பா ஏதானும் பண்ணி இருப்பேன். இப்படி சொல்லாம ஓடிப்போயிருக்க வேண்டாம்” அவன் குரலில் கொஞ்சம் ஆதங்கம் கலந்திருந்தது.'

“என் மனசுக்கு ஏதோ ஒண்ணு தப்பா பட்டுண்டே இருக்கு முரளி. வேதா எங்கேயாவது மாட்டிண்டு இருப்பாளோன்னு தோண்றது”

“ஏன்டா? அவளா விரும்பி தானே போயிருக்கா?”

“இல்லடா நேத்து ராத்திரி ஒரு போன் வந்தது. வேதாதான் பேசினா. ஆனா... என்னமோ ஒண்ணு சரியில்லைடா” என்று சொன்னவனுக்கு கோதை கொடுத்த கவிதாவின் எண் நினைவுக்கு வந்தது..

“என்கிட்டே வேதாவோட ஃப்ரெண்ட் நம்பர் இருக்குடா. பேசிப்பார்ப்போமா?”

“சரி... நீயா எதுவும் சொல்லாம ஏதாவது டீடைல்ஸ் தெரிய வருதான்னு பாரு” முரளி சொல்ல கோகுல் கவிதாவின் எண்ணை அழைத்தான்.

“ஹலோ”

“ஹலோ... திஸ் இஸ் கோகுல் ஹியர்” அவன் சொல்லி முடிக்கவில்லை மறுமுனையில் குரல் படாரென வெடித்தது.

“டேய்... என்ன தைரியம் இருந்தா எனக்கு போன் பண்ணுவே நீ.? உன்னை பத்தின உண்மை எல்லாம் எனக்கு தெரிஞ்சு போச்சுடா. உன் உண்மையான பேர் என்னடா? ஜி.கே க்ரூப்ஸ் ஓனர்ன்னு யாரை ஏமாத்தறே. இனிமே நீ வேதாவை ஏமாத்த முடியாது. நான் விட மாட்டேன். உன்னை சும்மா விட மாட்டேன்.”

“எக்ஸ்க்யூஸ் மீ கவிதா. நீங்க ஏதோ தப்பா புரிஞ்சுண்டு பேசறீங்க. ஒரு நிமஷம் நான் சொல்றதை...”

“தப்பா இல்லை. சரியா புரிஞ்சுகிட்டேன் உன்னை. வைடா போனை” துண்டித்து விட்டாள் அழைப்பை. அவளெங்கே அறிந்தாள் இவன் தான் உண்மையான கோகுல் என.

“என்னாச்சுடா?” என்றான் முரளி.

சில நொடிகள் நெற்றியை தேய்த்தபடியே அமர்ந்திருந்தவன் சட்டென சொன்னான். “என் பேரை வெச்சு வேதாவை எவனோ ஏமாத்திண்டு இருக்கான்டா”.

“வாட்?”

“எஸ்.! வேதா நிஜமாவே யார்கிட்டயோ மாட்டிண்டு இருக்கான்னு தான் தோண்றது” என்றபடி மறுபடியும் கவிதாவுக்கு முயன்றான் கோகுல். அதே எண் என்பதால் சட்டென அழைப்பை துண்டித்தாள் அவள். மறுபடி முயன்றான். மறுபடி கட்.

“இரு நான் கூப்பிடறேன். என் மொபைல்லேர்ந்து” என்றபடி முயன்றான் முரளி. தலை வரை ஏறி இருந்த கோபம் கவிதாவை யோசிக்க விடவில்லை.

“இந்தப் பொறுக்கி இன்னொரு நம்பரிலிருந்து அழைக்கிறானா என்ன?' மறுபடி கட். மறுபடியும் முரளி அழைக்க, அழைப்பை துண்டித்து விட்டு தனது கைப்பேசியை அணைத்திருந்தாள் கவிதா.

தொடரும்
 

Rajam

Well-known member
Member
சஸ்பென்ஸாவே முடிக்கிறேளே.
வேதாவுக்கு என்ன ஆச்சு.சரவணன்
பிடிபடுவானா.
இந்த கவிதா வேற விஷயம் புரியாம
போனை அணைச்சிட்டா.
 

kothaisuresh

Well-known member
Member
ஐயோ வேதாக்கு ஒண்ணும் ஆகாதோன்னோ? இந்த கவிதா வேறு நேரம் காலம் புரியாமல் பண்ணின்டு இருக்கா
 

Vathsala Raghavan

✍️
Writer
சஸ்பென்ஸாவே முடிக்கிறேளே.
வேதாவுக்கு என்ன ஆச்சு.சரவணன்
பிடிபடுவானா.
இந்த கவிதா வேற விஷயம் புரியாம
போனை அணைச்சிட்டா.
Thanks for your comments ma
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு
முள்ளில்லா முல்லைப்பூ இன்னும் இரண்டு எபியில் முடிந்துவிடும். கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணிவரை மட்டுமே இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீட்டிக்கப்படமாட்டாது. படிக்க நினைப்பவர்கள் விரைவில் படித்துவிடுங்கள். லைக்கோ கமெண்டோ சொல்லிட்டும் போங்க.

ezhil mam yennachu ud kanom r u ok?
தீம்பாவையில் தீவிரமானேன் இன்னும் யாராவது படிக்காம இருக்கீங்களா? ஏப்ரல் 14 வரை தான் லிங்க் இருக்கும்,

New Episodes Thread

Top Bottom