• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே 09

Vathsala Raghavan

✍️
Writer
யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே 09

கோகுல் வீட்டு கார் அவர்கள் வீட்டு வாசலில் வந்து நிற்க, டிரைவர் கோதையின் வீட்டு அழைப்பு மணியை அடிக்க, திடுக்கென தூக்கிப் போட்டது வேதாவுக்கு. இப்போதெல்லாம் எந்த சத்தம் கேட்டாலும் இப்படித்தான் திடுக்கிடுகிறது உள்ளம்.

கோதை கதவை திறக்க வாசல் பக்கம் செல்ல, ஒலித்தது வேதாவின் கைப்பேசி. அழைப்பு வந்தது சரவணனின் கைப்பேசியிலிருந்து.

“கிளம்பிட்டியா?” என்றது மறுமுனை.

“ம். கிளம்பிட்டேன்” என்றவளுக்குள்ளே சின்னதாக ஏதோ ஒரு நெருடல்.

“ஆமாம்... ஏன் உங்க குரல் ஒரு மாதிரியா இருக்கு?” யோசனையுடனே கேட்டாள் வேதா.

“அது ஒண்ணுமில்லை கொஞ்சம் தொண்டை கட்டி இருக்கு” பொய் பதிலாக வந்தது. “உன்னை நம்பி எல்லா ஏற்பாடும் பண்ணிட்டேன். என்னை ஏமாற்றிட மாட்டியே?”

“இல்.. இல்லை கோகுல்” தடுமாறினாள் வேதா.

“அப்படி நீ வரலைன்னா, நாளைக்கு நான் ரயில் முன்னாடி விழுந்திட்டதா நியூஸ் வரும். அதுக்கு அப்புறம் நீ காலத்துக்கும் அழுதாலும் எந்த பிரயோஜனமும் இல்லை.”

“கோகுல் ப்ளீஸ்... நான் கிளம்பிட்டேன். நீங்க ஏன் இப்படி எல்லாம்”

“சரி அப்போ நீ உங்க வீட்டிலேயே போன் ஸ்விட்ச் ஆஃப் பண்ணிட்டு கிளம்பு.”

“ஏன் அப்படி?”

“சொல்றபடி செய். நம்ம கல்யாணம் முடிஞ்சதும் போன் ஆன் பண்ணிக்கலாம்”

“ச.. சரி” என்றாள் அவள். ஆனால் அவள் உள்மனதில் நிறையவே உறுத்தல் பிறந்தது.

“கார் வந்தாச்சுக்கா” சொல்லிய படியே உள்ளே வந்தாள் கோதை. “ஏன் உன் முகமெல்லாம் இப்படி இருக்கு?”

“அது ஒண்ணுமில்லைடா” என்றபடியே கைப்பேசியை அணைத்தாள் வேதா.

அது அணைக்கப்படும் முன் அந்த எண் கண்ணில் பட்டது. அது முரளியின் எண். சற்றே வித்தியாசமான எண்ணாக இருக்க அது தன்னாலே மனதில் பதிந்து போனது வேதாவுக்கு.

அவள் கைப்பேசியை அணைத்த அதே நேரத்தில் வேதாவிடம் பேசிவிடும் அவசரத்துடன் அவளை அழைத்தாள் கவிதா. தொடர்பு கிடைக்கவில்லை.

‘ச்சே.. என்ன பெண்ணிவள்? எதற்கு அணைத்து வைத்திருக்கிறாள் கைப்பேசியை.?’

அதற்குள் இங்கே...

“ஏன்கா பயமா இருக்கா? என்ன பயம்.? நான் இருக்கேனோல்யோ. அவாத்திலே எல்லரயையும் நேக்கு நன்னா தெரியும். நீ பேசாம என் கூட வா. நான் சொல்றபடி கேளு எல்லாம் சரியா நடக்கும்.”

வேதா பதில் எதுவும் பேசாமல், உற்சாகமாக பேசும் தங்கையையே பார்த்தபடி நிற்க, அவர்கள் முன்னால் பூஜை அறையில் சிரித்துக்கொண்டிருந்தான் கண்ணன். அந்த கண்ணனை பார்த்து திடீரென கேட்டாள் கோதை

“என்ன கண்ணா நான் சொல்றபடி வேதா கேட்டாளானா எல்லாம் சரியா நடக்குமோன்னோ?”

கோதை கேட்ட கேள்விக்கு “ஆம்'”என்ற பதிலுடன் புன்னகை மாறாமல் நின்றிருந்தான் கண்ணன். கோதை மூலமாக மறுபடியும் அவளுக்கு வழிக்காட்டியிருந்தான் கண்ணன். அந்த வழியை கண் திறந்து பார்க்கும் சக்திதான் இல்லை வேதாவிடம்.

“பாரு கண்ணன் எப்படி சிரிக்கிறான் பாரு. ஆமாம்னு சொல்றான் நீ பேசாம என் கையை பிடிச்சிண்டு என் கூட வா” கண் சிமிட்டி சிரித்தபடியே சொன்னாள் கோதை.

“அவனுக்கு சிரிக்கறதை தவிர என்ன வேலை!” அலுத்துக்கொண்டாள் வேதா. “என்னாலே இன்னைக்கு அவாத்துக்கு வர முடியாதுமா. ஆபீஸ்லேர்ந்து போன் வந்தது”

“ஃபோனா?”

“ஆமாம்பா. நான் இன்னைக்கு ஆபீஸ் போயே ஆகணும். நீ அவாத்திலே ஏதாவது சொல்லி சமாளிச்சுக்கோ. ப்ளீஸ்.”

“என்னக்கா நீ இப்படி கடைசி நிமிஷத்திலே?”

“வேறே வழி இல்லைடா. சமாளிச்சுக்கோ ப்ளீஸ். நான் போயிட்டு சீக்கிரம் வர பார்க்கிறேன்.”

சில நொடி மௌனம் கோதையிடம் “அப்போ நான் சொல்றதையும் கேட்க மாட்டே. அந்த கண்ணன் சொல்றதையும் கேட்க மாட்டே. போ..... என்னமோ பண்ணு.” முகத்தை திருப்பிக்கொண்டு அவள் சொல்ல, கண்ணனை பார்த்தாள் வேதா.

'ஆழம் தெரியாமல் கால் வைத்துவிட்டேன் என்று தெரிகிறது கண்ணா. ஒரு வேளை நான் தடுமாறி விழுந்துவிட்டால் கரை சேர்ந்துவிட ஒரு படகையாவது கொடு’ கண்ணனை பார்த்து கன்னத்தில் போட்டுக்கொண்டவள் கோதையைப் பார்த்தாள்

“கோவிச்சுக்காதே நான் சீக்கிரம் வந்திடுவேன். நான் கிளம்பும் போது நீ இப்படி பண்ணேனா அக்காவுக்கு கஷ்டமா இருக்கு.” அவள் கண்களில் நீர் கட்டிக்கொள்ள,

“ஹேய்.. எதுக்கு அழறே இப்போ? பதறினாள் தங்கை. “நான் சமாளிச்சுக்கறேன் விடு. சரி எனக்காக இந்த ஹெல்ப்பையானும் பண்ணு”

“என்ன பண்ணனும் சொல்லுடா?"

“அது.......... “ என்று கோதை ஒரு வேலையை செய்ய சொல்ல, சட்டென அதை செய்தாள் வேதா.

இரண்டு நிமிடங்கள் விட்டு மறுபடியும் முயன்றாள் கவிதா. இணைப்பு கிடைக்கவில்லை.

“சரி வா ... கிளம்பலாம்...” இருவரும் வீட்டை பூட்டிக்கொண்டு நகர.....

'நீ கேட்ட படகு தேவையான நேரத்தில் உன் கண்ணில் படும்' என்பதாக பூஜை அறையில் முதலில் இருந்த புன்னகையில் கொஞ்சமும் மாற்றம் இல்லாமல் நின்றிருந்தான் அந்த மாயக்கண்ணன்

காரில் ஏறி அமர்ந்தவுடன்தான் அக்காவின் கையில் இருந்த அந்த பெரிய பேக்கை பார்த்தாள் கோதை.

“இது எதுக்குகா?”

“அது ... ஆபீஸ் பேக்மா.... லேப்டாப் இருக்கு.”

கார் நகர்ந்தது. தனது கண்ணில் இருந்து மறையும் வரை தனது வீட்டை பார்த்தபடியே சென்றாள் வேதா.

மூன்றாவது முறையாக முயன்ற கவிதாவுக்கு இணைப்பு கிடைக்கவில்லை. வீட்டு எண்ணுக்கு அழைத்து பார்க்கும் எண்ணத்துடன் அந்த எண்ணை தேடிப் பிடித்து அழைக்க, எந்த பலனும் இல்லை. ஒலித்துக்கொண்டே இருந்தது அது. தோற்றுப்போனவளாக கைப்பேசியை மேஜை மீது வைத்து விட்டு சில நொடிகள் கண்களை மூடிக்கொண்டு அமர்ந்தாள் கவிதா.'

'வீட்டிலும் யாரும் இல்லையா? எங்கே போனார்கள் எல்லாரும்? ஒரு வேளை குடும்பத்துடன் எங்காவது சென்றிருக்கிறார்களா? அதனால் தான் விடுப்பு எடுத்து இருக்கிறாளா அவள்?’

தே நேரத்தில் அங்கே கும்பகோணத்தில் கோவிலில் இருந்தார் தந்தை. பெண்கள் திருமணத்திற்கு முன்னால் அவர்கள் வீட்டுக்கு செல்வதில் கொஞ்சமும் உடன்பாடு இல்லை அவருக்கு.

நேற்று இரவு தன்னிடம் பேசிய வாசுதேவனிடம் அதைத்தான் சொன்னார் அவர்.

“கல்யாணத்துக்கு முன்னாடி எதுக்கு அவா உங்காத்துக்கு வந்திண்டு? கல்யாணதுக்கு அப்புறம் எல்லாம் பேஷா நடக்கட்டும். யார் கேட்க போறா?”

“என்ன பேசறேள்? இதுவரைக்கும் கோதை நம்மாத்துக்கு வந்ததே இல்லையான்ன? அவா நம்மாத்து குழந்தைகள். எப்போ வேணும்னாலும் ஆத்துக்கு வரலாம். போலாம். அதுவும் இல்லாம வேதாவை யாரும் பார்க்கலையோன்னோ? அதனாலே எல்லாரும் பார்க்கணும்ன்னு ஆசைபடறா. இதிலே என்ன இருக்கு? நீங்க கவலைப் படாமே ஹோமத்தை முடிச்சிட்டு வாங்கோ” விஷயத்தை முடித்திருந்தார் அவர். அதற்கு மேல் அவரை எதிர்த்துப் பேசுவதற்கு இயலவில்லை இவரால்.

அவர் பேசி சில நிமிடங்கள் கழித்து, கோதை வீட்டுத் தொலைப்பேசியிலிருந்து அழைப்பு வந்தது. அழைத்தது கோதை.

“அப்பா”

“சொல்லுமா”

“அது... அது வந்து பா அவாத்திலே... அவருக்கு பிறந்தநாளாம்பா நாளைக்கு. அதனாலே எங்களை...”

“பேசினார்மா வாசுதேவன்”

“நாங்க போயிட்டு வரவாபா.? பத்திரமாப் போயிட்டு வந்திடுவோம்” மகள் தயங்கித் தயங்கி கேட்ட விதத்தில் மறுக்க வேண்டும் என்று நினைக்க கூட முடியவில்லை அவரால்.

ஆனால் இப்போது ஏதோ ஒரு மன உளைச்சல் அவரை வருத்திக்கொண்டிருந்தது. கைப்பேசியை எடுத்து வேதாவின் எண்ணை அழைத்தார். அது அணைக்க பட்டு இருந்தது.

கோதையிடம் ஒரு கைப்பேசி இருக்கிறதே? யோசித்தவருக்கு அந்த எண் தெரியவில்லை. அதை வாங்கிக்கொண்டிருக்கவில்லை அவர். பல முறை யோசித்த பிறகு வாசுதேவன் எண்ணை அழைத்தார் அப்பா.

“சொல்லுங்கோ. நான் கோகுல் பேசறேன்” அப்பாவின் கைப்பேசி அவனிடம் இருக்க அழைப்பை ஏற்றான் கோகுல்.

“மாப்பிள்ளை, ரெண்டு பேரும் ஆத்துக்கு வந்துட்டாளா?” கொஞ்சம் தயங்கியபடியே கேட்டார் அப்பா.

“வந்துண்டே இருக்கா. கார் அனுப்பி இருக்கேன். பத்திரமா வந்திடுவா. நீங்க கவலைப் படாம இருங்கோ” இதமான குரலில் சொன்னான் கோகுல்.

“அவா வந்ததும் என்கிட்டே பேச சொல்றேளா. நேக்கு வேதா நம்பர் கிடைக்கலை.”

“கண்டிப்பா பேச சொல்றேன். நீங்க ஏன் இவ்வளவு யோசிக்கறேள்? அவா ரெண்டு பேருக்கும் நான் பொறுப்பு” ஏதோ ஒரு வேகத்தில் சொல்லி விட்டிருந்தான் கோகுல்.

“சரி வெச்சிடறேன்” வைத்துவிட்டார் அவர்.

பின்னர் தான் சொல்லிய வார்த்தை உறைத்தது அவனுக்கு.

“ரெண்டு பேருக்கும் நான் பொறுப்பா? பெருமாளே! உளறிட்டேனா? டேய்... கோகுல்.... பேச்சைக் குறைடா...டேய்....” தனக்குள்ளே புலம்பியபடியே நகர்ந்தான் கோகுல்.

றுபடியும் வேதாவின் எண்ணை முயன்று தோற்று ஒரு முடிவுக்கு வந்தவளாக தான் இணையத்தில் பார்த்த கோகுல் குடும்பத்தின் புகைப்படத்தையும் அவள் தெரிந்துக்கொண்ட உண்மைகளையும் சேர்த்து வேதாவுக்கு ஒரு குறுஞ்செய்தி, வாட்ஸ் ஆப்பில் ஒரு செய்தி, ஒரு ஈ மெயில் என அத்தனையும் தொகுத்து அனுப்பினாள் கவிதா.

'வேதா தனது கைப்பேசியை உயிர்பித்த மாத்திரத்தில் அவளை உண்மைகள் சென்று அடைந்தாக வேண்டும்'

கார் மாம்பலத்தை நெருங்கிக்கொண்டிருக்க....

“கண்டிப்பா நீ ஆபீஸ் போய்த்தான் ஆகணுமா? என் கூட வந்திடேன்.” கெஞ்சலாக சொன்னாள் கோதை.

வேதாவின் மனம் நிலைக்கொள்ளாமல் ஊசலாடியது. கோதை சொல்வதை கேட்டு விடு என்று ஒரு மனம் சொல்லிக்கொண்டே இருந்தது.

அதே நேரத்தில் 'அப்படி நீ வரலைன்னா, நாளைக்கு நான் ரயில் முன்னாடி விழுந்திட்டதா நியூஸ் வரும். அதுக்கு அப்புறம் நீ காலத்துக்கும் அழுதாலும் எந்த பிரயோஜனமும் இல்லை.' அவன் வார்த்தைகள் அவளை இன்னொரு பக்கம் இழுத்தது.

“ஒரு வேளை அவன் நிஜமாகவே ஏதாவது செய்துக்கொண்டால், என்னால் ஒரு உயிர் போய்விட்டால்?” நினைக்கவே முடியவில்லை அவளால்.

ஒரு பெருமூச்சை இழுத்துவிட்டு தங்கையை அணைத்து அவள் நெற்றியில் ஒரு முத்தமிட்டுவிட்டு “நான் போயிட்டு வந்திடறேன்டா” சொல்லிவிட்டு காரை நிறுத்த சொல்லி இறங்கிக்கொண்டாள் வேதா. அரை மனதுடனே அவளுக்கு கோதை கை அசைக்க நகர்ந்தது கார்.

தெருவில் தனியே நின்றாள் வேதா. ஒரு ஆட்டோவை நிறுத்தி ஏறிக்கொண்டாள் அவள். அவளது உள்ளுணர்வு அவளை எச்சரித்துக்கொண்டே இருந்தது. ஆனால் காரில் வந்த போது இருந்த கலக்கம் இப்போது இல்லை.

எங்கிருந்தோ வந்தது ஒரு தைரியம். என்னை மீறி எனக்கு எதுவும் தப்பாக நடந்து விடாது என்ற ஒரு உறுதி. இனி நான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் கவனத்துடன் எடுத்து வைக்க வேண்டும் என்ற முடிவு. இவற்றுடன் மாம்பலம் ரயில் நிலையத்தை நோக்கி பயணிக்க ஆரம்பித்தாள் வேதா.

இன்னும் மனம் ஆறவில்லைதான் கவிதாவுக்கு. அதே நேரத்தில் வேதா இப்போது இருக்கும் சூழ்நிலை என்னவென சரியாக தெரியாமல் இந்த விஷயத்தை தேவை இல்லாமல் ஊதி பெரிதாக்கவும் தோன்றவில்லை அவளுக்கு.

தனக்கும் வேதாவுக்கும் தெரிந்த ஒன்றிரண்டு பொதுவான நண்பர்களுக்கு மட்டும் இந்த விஷயத்தை சொல்லி வேதா அவர்களை தொடர்பு கொண்டால் இந்த விஷயத்தை சொல்லிவிடுமாறு சொல்லிவிட்டு தன்னை கொஞ்சம் நிதானப்படுத்திக்கொண்டாள்.

'பார்க்கலாம். நாளை காலை வரை பார்க்கலாம். எப்படியும் நாளை அலுவலகம் வந்து விடுவாள். தனது குடும்பத்துடன் எங்காவது வெளியில் சென்றிருக்க கூடும்' சின்னதொரு நம்பிக்கையில் தனக்கு தானே சொல்லிக்கொண்டாள் கவிதா.

கோகுல் வீட்டை அடைந்தாள் கோதை. வாசல் வரை வந்துவிட்டவளுக்கு உள்ளே செல்ல ஒரு சின்னத் தயக்கம்.. அவள் எப்போது வருவாள் என வாசல் கதவை பார்த்துக்கொண்டே அல்லவா இருந்தான் அவன்? ஓடி வந்தான் அவளவன்

“வாங்கோ. வாங்கோ. வெல்கம்” அடி மனதில் இருந்த சொல்லத்தெரியாத ஏதோ ஒரு கலக்கம் அவன் புன்னகையில் மறைந்து போனதை போல் தோன்றியது கோதைக்கு. கோகுலின் அப்பாவும் அம்மாவும் புன்னகையுடன் எதிர்க்கொண்டனர் அவளை.

“வாம்மா... எங்கே உன் அக்கா?”

“அவ என்கூட தான் கிளம்பினா, திடீர்னு ஏதோ போன் வந்ததுன்னு ஆபீஸ் போயிட்டா” என்றவள் “பெரியவா ரெண்டு பேரும் நில்லுங்கோ. சேவிச்சுக்கறேன்” என்று அவனுடைய அம்மா அப்பா இருவரையும் நமஸ்கரித்தாள். கொஞ்சம் நெகிழ்ந்து தான் போனார்கள்.

கோகுலை பார்த்து சொன்னார் அம்மா “சார்...... இதெல்லாம் கொஞ்சம் கத்துக்கோங்கோ. ஒரு நாளைக்காவது அம்மாவை சேவிச்சு இருக்கியாடா நீ?”

“என்ன பண்றது. அவாத்து பெரியவா இதெல்லாம் கத்துக் கொடுத்திருக்கா. நம்மாத்திலே யாருமே நேக்கு கத்துக்கொடுக்கலையே.” அவன் சோகமாக முகத்தை வைத்துக்கொண்டு சொல்ல அம்மா அவனை அடிக்க ஓட அங்கே சந்தோஷம் துளிர் விட ஆரம்பித்தது.

சிறிது நேரம் கழித்து அவனது பெரியப்பாவும், பெரியம்மாவும் வந்தனர். வேதா இன்றும் வாராதது அவர்களிடம் கொஞ்சம் ஏமாற்றத்தை விதைத்தது.

எல்லாரும் கோவிலுக்கு சென்று வந்து விட்டு, ஒன்றாய் அமர்ந்து சாப்பிட ஆரம்பிக்க, அருகருகே அமர்ந்திருந்த கோதை - கோகுல் ஜோடி பொருத்தத்தை யாராலும் ரசிக்காமல் இருக்க முடியவில்லை.

சாப்பிட்டு முடித்தவுடன் கோகுல் அவளை மாடிக்கு அழைக்க, அவள் தவிப்புடன் அவனது அம்மாவை பார்க்க

“போ ... போய் கொஞ்ச நாழி பேசிண்டு இருந்திட்டு வா போ.” சட்டென உதவிக்கு வந்தார் அவர்.

தயங்கித் தயங்கி அவனது அறைக்குள் நுழைந்தாள் அவள். நேர்த்தியாக இருந்த அந்த அழகான அறையை அவள் விழி விரித்து பார்க்க

“எப்படி இருக்கு நம்ம ரூம்?” அவள் முகத்தருகே குனிந்து புன்னகையுடன் கேட்டான் கோகுல்.

அழகான மென் சிரிப்புடன் தலை அசைத்தவள் ஒரு நிமிஷம் என்று தனது சின்ன பையிலிருந்து எதையோ எடுத்தாள். அது ஒரு சின்ன டிபன் பாக்ஸ்.

தயக்கத்துடன் அவன் முகம் பார்த்தபடியே

“இன்னைக்கு உங்களுக்கு பர்த்டே. கிஃப்ட் வாங்க அப்பாகிட்டே பணம் வாங்கி வெச்சுக்கலை. அதனாலே ஆத்திலே இருந்ததை வெச்சு ஸ்வீட் பண்ணிண்டு வந்தேன். கீழே எல்லார் முன்னாடியும் கொடுக்க என்னமோ மாதிரி இருந்தது. அதான் தனியா... நீங்க சாப்பிடுவேளா?”

அவள் அதை அவன் முன்னே நீட்ட, ஸ்வீட்டை விடுத்து அவளையே அள்ளிக்கொள்ள வேண்டும் போலே இருந்தது அவனுக்கு. இன்றைக்கு கிடைத்த எல்லா பரிசுகளையும் விட இதுவே விலை உயர்ந்தது என்றுத் தோன்றியது.

சந்தோஷ மழையில் நனைந்தவனாக ஒரு ஸ்வீட்டை எடுத்து அவளுக்கு பாதி ஊட்டி விட்டு இன்னொரு பாதியை அவன் வாயில் போட்டுக்கொண்டான்.

“தேங்க்ஸ்டா கோதைப்பொண்ணு” என்றான் அவள் கன்னம் கிள்ளி. “ ரொம்ப சந்தோஷமா இருக்கு”

அவள் தோள்களை பிடித்து அவளை கட்டிலில் அமர்ந்திவிட்டு தானும் அவள் அருகில் அமர்ந்து பேச ஆரம்பித்தான் கோகுல். அடுத்த ஒரு மணி நேரத்தில் அவனுடைய சிறு வயது விளையாட்டுகளில் ஆரம்பித்து அவனது ஏ.டி.ம் கார்ட் பின் வரை அத்தனையும் அத்தனையும் அவளிடம் கொட்டித் கொட்டி தீர்த்திருந்தான்.

விழி விரிய அவனையே பார்த்தபடி அமர்ந்திருந்தாள் கோதை. அவளது இமைக்காத பார்வை அவனை கொஞ்சம் தன்னிலை படுத்த சின்ன புன்னகையுடன்.....

“ரொம்ப மொக்கை போட்டுட்டேனோ?” என்றான் அவள் முகம் பார்த்தபடியே.

“ம்? ம்ஹூம்..' அவள் இடம் வலமாக தலை அசைக்க சிரிப்புடன் அவள் முகத்தை கையில் ஏந்திக்கொண்டான் கோகுல்

“நேக்கே ஏன்னு தெரியலைடா. ஆனா நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். நான் பிறந்ததிலிருந்தே நான் எது கேட்டாலும், ஒண்ணு கேட்டா அது நாலா கிடைக்கும். ஸோ.. எதுக்காகவும் நான் இதுவரைக்கும் நான் ஏங்கினது இல்லை. எது மேலேயும் பெருசா ஆசையும் இல்லை”

“ஆனா நீ... நீ எனக்கு பொக்கிஷம்டா கோதைப்பொண்ணு. அது ஏன் அப்படின்னு கேட்டாத் தெரியலை. பட் உன்னோடவே இருக்கணும் போலே இருக்கு. உன் கூட பேசிண்டே இருக்கணும் போலே இருக்கு. எத்தனை வருஷம் ஆனாலும் சரி, நமக்கு குழந்தை பிறந்தாலும் சரிடா, உன்னை இதே மாதிரி என் பொக்கிஷமா வெச்சுப்பேன்.” கண்களில் காதல் பொங்கப் பொங்க சொன்னவனின் முகத்தையே பார்த்திருந்தாள் கோதை.

மாலையில் பார்ட்டி. அவனுக்கு தானே பிறந்தநாள்? ஆனால் அவளுக்கும் சேர்த்து அலங்காரம் நடந்தது. விருந்தினர் கூட்டம் சற்று அதிகம். வந்திருந்த ஒருவர் விடாமல் அனைவரிடமும் அவளை அறிமுகம் செய்து வைத்தான் கோகுல்

“இது கோதை. என்னோட வொய்ஃப்”

இன்னும் நிச்சியம் கூட ஆகவில்லையே அதற்குள்ளாகவே மனைவி என்கிறானே? அவளுக்கே கொஞ்சம் வியப்புதான். சொல்லப்போனால் குடும்பத்தில் இருந்த அனைவருமே அவளிடம் ஒட்டிக்கொண்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

இதனிடையே.....

“அவள் எப்படி வருவாள்? அவளுக்கு தான் இந்த வீடு தெரியாதே? ஒரு வேளை போன் செய்து யாரையாவது கேட்டுக்கொண்டு வருவாளோ?”

மனம் இப்படி எல்லாம் யோசிக்க... ஏனோ அக்காவின் ஞாபகம் வந்து வந்து போக அவ்வப்போது அவளை எதிர்பார்த்து கோதையின் கண்கள் வாசலுக்கு சென்று, சென்று ஏமாற்றத்துடன் திரும்பாமல் இல்லை

கோதையையும் - கோகுலையும் பார்த்து “ஜோடிப் பொருத்தம் பிரமாதம்” என்று சொல்லாதவர்கள் இல்லை. அவர்கள் இருவரையும் சேர்த்து புகைப்படங்கள் கூட எடுத்தாகி விட்டிருந்தது. பார்ட்டி முடிந்திருக்க தேவகிக்கே மனம் கேட்கவில்லை.

“ரெண்டு பேரும் சேர்ந்து நில்லுங்கோடா ஆரத்தி எடுத்திடறேன். நியாயமா கல்யாணத்துக்கு அப்புறம் தான் ஆரத்தி எடுக்கணும். ஆனா இன்னைக்கு உங்க ரெண்டு பேர் மேலையும் தான் எல்லார் கண்ணும். சொல்லப்போனா என் கண்ணேப் பட்டிருக்கும்” இருவரையும் நிற்க வைத்து ஆரத்தி சுற்றி இருந்தார் அவர்.

சில நிமிடங்கள் கழித்து மெல்ல அவனருகில் வந்தாள் கோதை “அக்கா இன்னும் வரவே இல்லை” என்றாள் மெல்ல.

“அதானே?” என்றபடி கைத் திருப்பி நேரம் பார்க்க நேரம் இரவு ஒன்பதை தொட்டிருந்தது. இந்தா போன் பண்ணிப்பாரு கைப்பேசியை அவளிடம் நீட்டினான்.

“ஸ்விட்ச்ட் ஆஃப்” என்றபடியே அவள் அவனை குழப்பத்துடன் பார்க்க அப்போதுதான் நினைவு வந்தவனாக தலையில் கை வைத்துக்கொண்டான் கோகுல்.

“கார்த்தாலயே உங்க அப்பா போன் பண்ணார்டா. வந்ததும் உன்னை அவர்கிட்டே பேச சொன்னார். நான் மறந்தே போயிட்டேன். முதலிலே அவர்கிட்டே பேசு”

“இல்லை இப்போ வேண்டாம். இன்னும் அக்கா வரலையான்னு டென்ஷன் ஆவார். நேக்கு ஆத்துக்கு போகணுமே ப்ளீஸ்” என்றாள் கோதை.

“இரு இரு. இதுக்கு எதுக்கு ப்ளீஸ்? நானும் உன் கூட வரேன் இரு. .தனியா போக வேண்டாம்” அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் அவளுடன் புறப்பட்டான் கோகுல்.

வீடு வந்து சேர்ந்திருந்தனர் இருவரும். இன்னும் அக்கா வந்திருக்கவில்லை. அவள் கைப்பேசியை தொடர்பு கொள்ள செய்த முயற்சி தோல்வியுற கேட்டான் கோகுல்.

“போன் ரொம்ப நாழியா ஸ்விட்ச் ஆஃப்லே இருக்கில்ல?” என்றான் யோசனையுடன். “உங்க அக்காவோட ஆபீஸ் நம்பர் இல்லை, ஃபிரண்ட்ஸ் நம்பர் ஏதாவது இருக்கா?”

“அது... அது எங்கேயோ எழுதி வெச்சேன். இருங்கோ வரேன்” என்று அவள் தனது அறை மேஜையை நோக்கி செல்ல, சில நொடிகளில் அங்கிருந்து ஒலித்தது கோதையின் குரல்

“ஒரு நிமிஷம் இங்கே வாங்கோளேன்”

அவன் அறைக்குள் செல்ல, அங்கே அவள் கையில் படபடத்துக்கொண்டிருந்தது வேதாவின் கையெழுத்தில் அந்த கடிதம்.

“கோதை.... ரொம்ப சாரிடா... ரொம்ப ரொம்ப சாரி... என் மனசுக்கு பிடிச்சவரை நான் கல்யாணம் பண்ணிக்க போறேன்.... இது ஒரு வகையிலே உன் வாழ்க்கைக்கு, உன் கல்யாணத்துக்கு நான் பண்ற துரோகமா கூட இருக்கலாம். ஆனா நேக்கு வேறே வழி இல்லை..... ரொம்ப சாரி”

“கோ... கோகுல்... இது... இது தப்பு... தப்புதானே? அக்கா இப்படி எல்லாம்... எப்பவும் அவ இப்படி எல்லாம் இல்லை கோகுல்... அப்பாக்குத் தெரிஞ்சா... தெரிஞ்சா ரொம்ப அழுவார்” அழுகையும், பயமும் தவிப்புமாக வெளியே வந்தது கோதையின் குரல்.

ஒரு முறைக்கு இரண்டு முறை அதை படித்தான் கோகுல். யாருடன் போகிறேன், எங்கே போகிறேன்., என்பதை போல எந்த ஒரு விவரமும் இல்லாமல் ஒரு கடிதம். ஒன்றுமே புரியவில்லை தான் அவனுக்கு. ஆனால் அங்கே அப்பாவின் சட்டை பையில் அவள் விவரமாக எழுதி வைத்திருக்கும் அந்த கடிதம் பல குழப்பங்களை தரப்போகிறது என்றும் அவன் அறிந்திருக்கவில்லை.

“இது உங்க அக்கா கையெழுத்து தானா? நோக்குத் தெரியுமா?” அவனது முதல் கேள்வி அதுவாகத்தான் இருந்தது.

அதை மறுபடி வாங்கி பார்த்துவிட்டு ஆமோதிப்பாக தலை அசைத்தாள் கோதை “ஆ..ஆமாம்” அவள் குரல் உடைய தயாராக இருக்க.. சரியாக அந்த நொடியில் ஒலித்தது அவர்கள் வீட்டுத் தொலைப்பேசி.

“நேக்கு ரொம்ப பயமா இருக்கு... அப்பாவாத்தான் இருக்கும். என்ன சொல்றது இப்போ.? பயமா இருக்கு கோகுல்..”

படபடப்புடன் அவள் அவன் கைப்பிடித்துக்கொள்ள.....

“இரு... இரு... ரெண்டு நிமிஷம் டைம் குடு. ஏதாவது யோசிப்போம்... எல்லாம் சரியாயிடும்டா... முதல்லே போன் எடுத்து யாருன்னு பார்போம்” என்றபடியே போனை அடைந்து ரிசீவரை கையில் எடுத்தான் கோகுல்

“ஹலோ”

தொடரும்
 

Rajam

Well-known member
Member
ஐயோ!!
வேதா கல்யாணம் நடக்கலையே.
என்ன நடந்தது.
இப்போ போனில் யார் பேசறது.
 

Latest profile posts

மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு
முள்ளில்லா முல்லைப்பூ இன்னும் இரண்டு எபியில் முடிந்துவிடும். கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணிவரை மட்டுமே இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீட்டிக்கப்படமாட்டாது. படிக்க நினைப்பவர்கள் விரைவில் படித்துவிடுங்கள். லைக்கோ கமெண்டோ சொல்லிட்டும் போங்க.

New Episodes Thread

Top Bottom