• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே 08

Vathsala Raghavan

✍️
Writer
யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே 08

மொட்டை மாடியில் நடந்துக்கொண்டே இருந்தார் அப்பா. இரவு உணவு கூட அவர் சாப்பிடவில்லை. அவரது மனநிலை இரண்டு பெண்களுக்கும் புரிந்துதான் இருந்தது.

என்ன செய்வது என்று புரியாமல் பலவித மன உளைச்சல்களுடன், உறுத்தல்களுடன் தனது அறைக்குள்ளேயே இருந்தாள் வேதா.

ஒரு கட்டத்தில் இந்த மௌனத்தை உடைத்தே ஆக வேண்டிய கட்டாயத்தை உணர்ந்து அறைக்குள் எட்டிப்பார்த்து வேதாவை அழைத்தாள் கோதை

“அக்கா.... மாடிக்கு வா”

“நான் அப்புறம் வரேன் நீ”

“நீ இப்போ வரப்போறியா இல்லையா?”

இடைமறித்து கோதை குரல் உயர்த்த விழி நிமிர்த்தி கோதையின் முகம் பார்த்த வேதா, என்ன தோன்றியதோ அவளை பின் தொடர்ந்தாள்.

மொட்டை மாடியில் சென்று அமர்ந்துக்கொண்டாள் கோதை. அவள் கையில் ஒரு பாத்திரம்.

“சாதம் கலந்துண்டு வந்திருக்கேன். அப்பா நீங்களும் வாங்கோ. சாப்பிடலாம்”

“நேக்கு பசிக்கலைமா” அப்பாவின் குரல் உடைந்து விடவா விடவா எனக் கேட்டது.

“இப்போ என்ன ஆயிடுத்துன்னு பசிக்கலைங்கறேள்? அதுக்கு மேலே உங்க பெரிய பொண்ணு. ஏனோ மூஞ்சிய தூக்கி வெச்சுண்டு உட்கார்ந்திண்டிருக்கா. இப்போ நீங்க ரெண்டு பேரும் சாப்பிடலைன்னா நான் ரெண்டு நாளைக்கு சாப்பிட மாட்டேன் சொல்லிட்டேன்”

அதற்கு மேல் வாதிட விரும்பாமல் இருவரும் அவள் எதிரில் வந்து அமர்ந்துக்கொண்டனர். பாத்திரத்தில் இருந்த சாதத்தை உருட்டி உருட்டி இருவர் கையிலும் கொடுக்க ஆரம்பித்தாள் கோதை.

முன்னால் எப்போதோ அவர் மனைவி உயிருடன் இருந்தபோது இப்படி சாப்பிட்ட ஞாபகம் அவருக்கு. நெகிழ்வுடன் சாப்பிட்டுக்கொண்டிருந்தார் அப்பா. ஏதேதோ எண்ண ஓட்டங்களில் அவர் கண்ணில் நீர்க் கட்டிகொண்டது.

அவர் முகத்தை பார்த்து “அப்பா” இதமான குரலில் அழைத்தாள் கோதை. “நீங்க தேவை இல்லாம மனசை குழப்பிக்கறேளோன்னு தோண்றதுபா”

“இல்லமா. நேக்கு... நேக்கு என்னமோ மனசுக்கு பயமா இருக்குமா” அவர் கொஞ்சம் தழுதழுத்த குரலில் சொல்ல ஒரு பாசமான தந்தையின் மகளாக வேதாவின் அடி மனம் பதறியது.

'அய்யோ. இதற்கே என் அப்பாவின் கண்களில் கண்ணீர் வழிகிறதே. நான் இதைவிட அதிகமான வலியை அவருக்கு கொடுக்கப்போகிறேனே'

“நீங்க சாப்பிடுங்கோ முதல்லே அப்புறம் நான் சொல்றேன்” கோதை சாதத்தை கொடுக்க, வேதாவும் அப்பாவும் சாப்பிட்டபடியே அவளையே பார்த்திருந்தனர்.

“அப்பா.... சாயங்காலம் ஏதோ விளையாட்டுக்கு பேசிண்டு இருந்ததை போய் நீங்க பெருசா எடுத்துக்கறேள்ன்னு தோண்றதுபா. அக்கா மேலே மட்டும் இல்லபா நேக்கு கோகுல் மேலேயும் நம்பிக்கை இருக்குபா. அவா அவ்வளவு பெரிய பணக்காரா. பிளஸ் டூ கூட பாஸ் பண்ணாத என்னை எதுக்குப்பா தேடி வரணும் சொல்லுங்கோ?” என்றாள் கோதை.

“நேக்கு அதுதான்மா பயமா இருக்கு. அவா பணக்காரா.... யோசிச்சு பார்த்தா நான் அவசர பட்டுட்டேனோன்னு தோண்றது மா.”

அப்பாவின் மனதின் ஓரத்தில் கொஞ்சமான அவ .நம்பிக்கை விதைகள் விழுந்திருந்தன. அவர்கள் பணக்காரர்கள் என்பதாலேயே இன்னமும் ஆழமாக.....

கோதையால் அப்பாவின் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ள முடியவில்லைதான். என்னதான் மிக சாமர்த்தியமான, உலகம் அறிந்த பெண்ணாக கோதை இல்லாவிட்டாலும் கோகுலிடம் எந்த தப்பும் இருக்க முடியாது என்று பெண்ணான அவளின் உள்மனம் அவளுக்கு சொல்லிக்கொண்டேதான் இருந்தது. ஆனால் இதை அப்பாவுக்கு எப்படி புரிய வைப்பது.?

“இந்த அப்பாக்கு பெரிய வசதி எல்லாம் இல்லைமா. ஆனா என் பொண்கள் எப்பவும் சந்தோஷமா இருக்கணுன்னு ஆசை மட்டும் இருக்குமா. அதுகள் வாழ்க்கை தப்பா போயிடுத்துன்னா அதை சரி பண்ற சக்தி கூட நேக்கு இருக்கான்னு” அப்பா பேசிக்கொண்டே இருக்க வாயில் இருந்த சாதத்தை கூட விழுங்க முடியாமல் கண்களில் கண்ணீர் கட்டிக்கிடக்க அப்படியே அமர்ந்திருந்தாள் வேதா.

“அப்பா... ஏம்பா? சரி மத்த எல்லாத்தையும் விடுங்கோ. நீங்க மந்திரம் சொல்லி மனசார அவா நன்னா இருக்கணும்னு நினைச்சிண்டு எத்தனை பொண்களுக்கு கல்யாணம் பண்ணி வெச்சிருக்கேள்? அப்படி இருக்கறச்சே உங்க பொண்களுக்கு தப்பா எதுவும் நடக்காதுபா” கோதை சொல்ல, கண்களில் நீர் பளபளக்க அவளை பார்த்தார் அப்பா.

“தினமும் கண்ணனை சேவிக்கறேளோன்னோ அவன் எங்க கூடவே நிற்பான் பா”

கோதை உறுதியாக சொல்ல மனதில் புதிதாக ஒரு நம்பிக்கை பிறந்தது போலே இருந்தது அப்பாவுக்கு. மறைந்து போன தனது மனைவி நேரில் வந்து சொல்வதை போல் ஒரு உணர்வு அவருக்கு. அதே நேரத்தில் பொங்கி வழிந்த கண்ணீரை கட்டுபடுத்த முடியாமல் அப்படியே உடைந்தாள் வேதா.

“அட ராமா.. நோக்கு என்னாச்சு?” கோதை கேட்க, அவளது மன பாரத்தை வெளியில் சொல்ல முடியாமல் ஒன்றுமில்லை என அவள் இடம் வலமாக தலை அசைக்க, அவள் பயந்து விட்டாள் என்ற எண்ணத்தில்......

“எல்லாம் சரியா நடக்கும்மா. நீ கவலைப் படாதே... இப்போ கோதை பேசினது நேக்கு உங்க அம்மாவே வந்து பேசினா மாதிரி இருந்ததும்மா. கண்ணன் பார்த்துப்பான். எல்ல்லதையும் கண்ணன் பார்த்துப்பான்”

அவள் தலை வருடியபடி அப்பா சொல்ல அப்படியே அவர் மடியில் சாய்ந்து கண் மூடிக்கொண்டாள் வேதா.

“நான் பேசாமல் அப்பா சொல்வதையே ஏற்றுக்கொள்ளவா?” அவள் மனம் அலைபாய துவங்கியது.

அங்கே கோகுலின் வீட்டில்.

தனது கைப்பேசியில் முரளியை அழைத்தான் கோகுல். எப்படியும் அவன் இப்போது தூங்கி இருக்க மாட்டான் என்று தெரியும் கோகுலுக்கு.

முரளி!

“சொல்லுடா... சாப்பிட்டாச்சா?”

எப்போது அழைத்தாலும் எல்லாரையும் இப்படித்தான் கேட்பான் முரளி.

“இந்த உலகத்திலே மரணத்தையும், அடுத்த வேளை சாப்பாட்டுக்கு என்ன பண்றதுன்னு தெரியாதவனோட பசியையும் தவிர வேறெதுவுமே சீரியஸ் இல்லைடா” என்பான் அவன்.

பசி என்று யார் சொன்னாலும், அவனை யார் சந்திக்க வந்தாலும் அவர்களை வயிறு நிறைய சாப்பிட வைத்து விட்டு அதன் பிறகு அவர்களிடம் பேசுவதே அவனது வழக்கம்.

“சாப்பிட்டேன்டா. நீ என்ன பண்றே?”

“ஸ்வீட் சாப்பிடறேன்”

“அடப்பாவி. நடு ராத்திரிலே ஸ்வீட்டா? சரி அதை விடு மன்னி போட்டோ அனுப்பி இருந்தேனே பார்த்தியா? பிடிச்சிருக்காடா?”

“பிடிச்சிருக்காவா? டேய்... நீயே உன் மனசை தொட்டு சொல்லு இதுவரைக்கும் நான் ஏதானும் ஒரு பொண்ணை பிடிக்கலைன்னு சொல்லி இருக்கேனா? நீங்களா ஒரு பொண்ணு போட்டோ காட்டறேள். நீங்க எல்லாருமா சேர்ந்து ஜாதகங்கறேள், பொருத்தங்கறேள், அப்புறம் இந்த பொண்ணு வேண்டாம்னு சொல்லிடறேள். நானும் பல வருஷமா ஏதானும் ஒரு பொண்ணு என்னை பிடிச்சிருக்குன்னு சொல்லி நேக்கு எப்படியாவது மாங்கல்ய பாக்கியம் வந்துடாதான்னு ஜன்னல் கம்பியிலே கன்னத்தை வெச்சுண்டு காத்துண்டிருக்கேன்”

அவன் தனது குரலில் வருத்தத்தை பொருத்திக்கொண்டு சொல்ல கலகலவென சிரித்தான் கோகுல்.

இப்போது என்று இல்லை எப்போது அவனுடன் யார் பேசினாலும் அடுத்த இரண்டாவது நிமிடத்தில் சிரிக்க வைத்து விடுவான் முரளி.

“சிரிடா சிரி. என் கவலை நேக்கு “ என்று கையில் இருந்த குலாப்ஜாமுனை இன்னொரு விள்ளல் வாயில் போட்டுக்கொண்டான் முரளி.

“அதெல்லாம் இருக்கட்டும் நீ நேரடியா சொல்லு மன்னி போட்டோ பார்த்தியா இல்லையா?. வாட்ஸ் ஆப் லே ப்ளூ டிக் வரலையே” அவன் பார்த்திருக்க மாட்டான் என்று கோகுலுக்குத் தெரியும்.

“பார்த்துக்கலாம்டா. நிச்சயதார்த்ததிலே பார்த்துக்கலாம். அவதான் நேக்குன்னு ஆனப்புறம் உரிமையோட பார்த்துக்கலாம்” என்றான் முரளி. அவன் எப்போதும் அப்படிதான் என்று தெரியும் ஆனால் விளையட்டாக புலம்ப மட்டும் செய்வான்.

“நேக்கு 31 வயசு தாண்டா ஆச்சு. ஆனா எங்கே போனாலும் என்கிட்டே பேசறது எல்லாம் வயசான டிக்கெடாவே இருக்குடா. மனசு ஆறுதலா யாராவது ஒரு சின்ன பொண்ணு ஃபோனாவது பண்ணுமானு பார்த்தா. கார்த்தாலே எழுந்ததும் எங்கப்பா... மறுபடியும் எங்கப்பா... திருப்பியும் எங்கப்பா... சாயங்காலம் வேறே ஏதோ ஒரு நம்பர்லேர்ந்து ஃபோன் அவசரம் அவசரமா எடுத்தேன்”

“எடுத்தா?”

“அது உங்க அப்பா... வெறுத்து போய் ஃபோன் ஆஃப் பண்ணிட்டேன்”

தன்னை மறந்து சிரித்தான் கோகுல் .

“ஓ... அதனாலே தான் மன்னி ஃபோன் பண்ணும் போது உன் நம்பர் கிடைக்கலையா? தன் பங்குக்கு கொஞ்சம் தூவினான் கோகுல்

“என்னது வேதா போன் பண்ணாளா?”

“அப்படிதான் போலிருக்கு. சரியாத் தெரியலை”

“டேய் ..... விளையாடதே நிஜமா ஃபோன் பண்ணாளா?”

“நேக்கு தெரியாது பா. நம்பர் இருக்கு இல்ல ஃபோன் பண்ணி கேட்டுக்கோ.” அழைப்பை துண்டித்தான் கோகுல்.

தனது அறையில் தலையணையில் முகம் புதைத்து கிடந்தாள் வேதா. ஒலித்தது அவள் கைப்பேசி. புதிய எண்ணாக இருக்கிறதே என்றார் யோசித்தபடியே ஏற்றாள் அழைப்பை.

“வேதா?”

“எஸ்.”

“நான் முரளி பேசறேன்.”

'முரளி' என்ற பெயர் அறிவை எட்டி அவன் யாரென்று தெரிந்து கொள்ள அவளுக்கு சில நொடிகள் தேவைப்பட்டன.

“ஆங்... நா... நான்.. வேதாதான் பேசறேன். சொல்லுங்கோ”

“சாப்பிட்டியாடா?” என்றான் முதல் கேள்வியாக.

அவனின் குரலில் இருந்த இதம் அவளை ஈர்க்க தவறவில்லை. கொஞ்சம் தடுமாறி

“ம்? ம்? சாப்பிட்டேன்” என்றாள் வேதா

“அதுக்கு ஏன் இவ்வளவு யோசனை? என்ன சாப்பிட்டே.?"

“அது வந்து தெரியலையே. என் தங்கை ஏதோ கலந்துண்டு வந்து உருண்டை பிடிச்சு குடுத்தா. நான் அப்படியே சாப்பிட்டிடுட்டேன்”

அவள் குழந்தை போல் சொல்ல புன்னகை பிறந்தது முரளியின் உதடுகளில்.

“அப்படியா” வெரி குட்” இதமாக சொன்னான் முரளி. அவனது மனதின் ஓரத்தில் கொஞ்சமாக இடம் பிடித்துக்கொண்டாள் அவள்.

“வேதா”

“ம்?”

“உங்காத்திலே இப்படி எல்லாம் சாப்பிடுவேளா? நம்ம கல்யாணம் ஆனப்புறம் நீ நேக்கும் இப்படி உருண்டை பிடிச்சுத் தருவியா?”

“ம்” அவன் கேட்ட விதத்தில் வேகமாக சொல்லியும் விட்டிருந்தாள் வேதா. பின்னர் சுருக்கென தைத்தது மனம். மௌனம் குடி கொண்டது அவளிடம்.

“ஹலோ என்னாச்சு மேடம் திடீர்னு சைலென்ட் ஆயிட்டேள்”

“ம்? அதெல்லாம் ஒண்ணுமில்லை. நான்... நாம அப்புறம் பேசலாமா. நான் வெச்சிடவா?”

“இரு இரு என்னோட ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லிட்டு வெச்சிடலாம் . உனக்கென்ன வயசுமா?”

“27”

“நிஜமாதானே?”

'”நிஜமாதான்... ஏன் கேட்கறேள்?’

“அப்பாடா” என்றான் முரளி “ஒண்ணுமில்லை... நேக்கு எப்பவுமே பொண்கள் ராசி கிடையாது. எப்பவும் நான் ஃப்ளைட்லே ஏறி உட்கார்ந்து இருப்பேன். எல்லா ஏர் ஹோஸ்டசும் அழகு அழகா இருப்பா. ஆனா நேக்கு கூல் ட்ரிங் கொண்டு வந்து கொடுக்கிறது மட்டும் 45 வயசு சீனியர் மாமியா தான் இருக்கும். எங்கம்மா நோக்கு பொண்ணு பார்த்தாச்சுடா முரளின்னு சொன்னா. என்ன வயசுன்னு சொல்லலை. ஒரு வேளை நிச்சியதார்த்ததிலேயும் என் பக்கத்திலே 45 வயசு மாமி வந்து நின்னுடப்போறாளே ஒரே பயம் அதான் கேட்டேன்.” அவன் குரலை பாவமாக வைத்துக்கொண்டு சொல்ல தன்னை மறந்து கலகலவென சிரித்தாள் வேதா.

“குட் கேர்ள்.” என்றான் மெதுவாக. “நீ எப்படி இருப்பேன்னு நேக்கு தெரியாது. நீ எப்படி இருந்தாலும் நீ இப்படித்தான் எப்பவும் சிரிச்சிண்டே இருக்கணும். கல்யாணத்துக்கு அப்புறமும். அதுதான் நேக்கு பிடிக்கும் சரியா?”

அவன் வார்த்தைகள் அவளை இன்னமும் நெகிழ்த்தியது நிஜம். சில நொடி மௌனத்திற்கு பிறகு

“நீங்க என் போட்டோ பார்க்கலையா?” கொஞ்சம் வியப்பு கலந்த குரலில் கேட்டாள் வேதா. “அப்படியே சரின்னு சொல்லிட்டேளா?”

“பார்த்துக்கலாம். நிச்சயதார்த்ததிலே பார்த்துக்கலாம். நீதான் நேக்குன்னு ஆனப்புறம் உரிமையோட பார்த்துக்கலாம் சரியா? இதுதான் என் நம்பர். எப்போ வேணும்னாலும், என்ன வேணும்னாலும் ஒரு மிஸ்ட்கால் கொடு போதும். இப்போ நீ நிம்மதியா தூங்கி ரெஸ்ட் எடு. குட் நைட்” சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தான் முரளி.

எப்போதாவது தேவையாக இருக்கும் என தோன்றியதோ என்னவோ அவன் எண்ணை கைப்பேசியில் பதித்துக்கொண்டு அப்படியே கண்களை மூடிக்கொண்டாள் வேதா. எத்தனை தவிர்க்க பார்த்தும் முடியாமல் மனம் ஏனோ முரளியையும், அவளது கோகுலையும் (சரவணனையும்) ஒப்பிட்டு பார்த்தது.

“உன் கண்ணையும் லிப்சையும் பார்க்கத்தான் தினமும் வரேன்னு வெச்சுக்கோயேன்” அன்றொரு நாள் அவன் சொன்னது நினைவுக்கு வந்தது.

“நீதான் நேக்குன்னு ஆனப்புறம் உரிமையோட பார்த்துக்கலாம்” முரளியின் வார்த்தைகளும் அருகே நின்றது.

“எப்படா இதெல்லாம் எனக்கு சொந்தமாகும்னு இருக்கு எனக்கு. உன்னை அப்படியே. கட்டிப்பிடிச்சு..” அடிக்கடி சொல்வான் அவன் .

திருமண வாழக்கையில் அதுவும் ஒரு அங்கம் தான். ஆனால் அவன் துவங்குவதே அங்கிருந்து தானோ? இது சரியா?

“அய்யோ... என்னவாகிப்போனது எனக்கு? நானும் என் கோகுல் பேசியதை ரசிக்கத்தானே செய்தேன். என் மனம் இன்று ஏன் இப்படி அலைபாய்கிறது” தலையணையில் மறுபடி முகம் புதைத்தாள் வேதா.

மூன்று நாட்கள் கடந்து இருந்தன. சரவணனிடமிருந்து அழைப்பும் வரவில்லை. அவனும் வரவில்லை. அவனை அழைக்கும் தைரியமும் வரவில்லை வேதாவுக்கு, ஒரு வேளை தான் அழைத்து உடனே கிளம்பி வா வென்றால், தங்கையின் வாழ்க்கை?

அன்று காலை அப்பா எங்கோ கிளம்ப ஆயத்தமாகி கொண்டிருந்தார். மகள்கள் இருவரையும் அழைத்து சொன்னார் அவர்.

“கும்பகோணம் கோவில்லே ஹோமம் பண்றாமா. வரவேண்டிய ரெண்டு பேர் வரலையாம். என்னை கூப்பிடறாமா. நான் போயிட்டு ரெண்டு நாள்லே வந்திடறேன்மா” என்றார் அவர்.

“அப்பா இன்னும் மூணு நாள்லே நிச்சியதார்த்தம். இப்போ நீங்க கிளம்பி போயிட்டேள்ன்னா எப்படிப்பா?” பதறினாள் கோதை.

“இல்லமா. ரெண்டு நாள்லே வந்திடுவேன். இங்கே வேலை ஒண்ணும் இல்லையே. வாங்க வேண்டியது எல்லாம் அனேகமா வாங்கியாச்சு. பெரிய ஹோமம்மா. ரெண்டு நாள் முழுக்க ஹோமம். அம்பதாயிரம் ரூபா குடுப்பாமா. கல்யாண செலவுக்கு உபயோகமா இருக்கும். பெருமாளா பாத்து வழி காமிக்கிறார் போயிட்டு வந்திடறேன்மா” என்றார் அந்த தந்தை.

அந்த நேரத்தில் ஒலித்தது அவரது கைப்பேசி.

“சௌக்கியமா சம்மந்தி?” மறுமுனையில் வாசுதேவன்.

'நமஸ்காரம். நன்னா இருக்கேன். நீங்க சௌக்கியமா இருக்கேளா?'

“நன்னா இருக்கேன். ஒரு முக்கியமான விஷயத்துக்காக போன் பண்ணேன். நிச்சியதார்த்ததிலேயே ரெண்டு கல்யாணத்தையும் ரெஜிஸ்டர் பண்ணிடலாம்னு பசங்க சொல்றா நீங்க என்ன சொல்றேள்?”

அப்பாவுக்கு முதல் கட்டத்திலேயே இந்த யோசனை பிடிக்கவில்லை. எதற்காம் அவசரம் என்று தோன்றியது.

“எல்லாம் சம்பிரதாய படியே நடக்கட்டுமே. எதுக்கு அவசரம்?” அவர் மெதுவாக சொல்ல

“எங்கேயோ வெளிநாட்டுக்கு ஹனிமூன் போலாம்னு பசங்க ரெண்டு பேரும் பிளான் பண்றா. அதுக்கு விசா ஃபார்மாலிடீஸ் இருக்காமே. அதுக்காகத்தான். மத்தபடி கல்யாணம் ரெண்டு மூணு மாசத்திலே ஜாம் ஜாம்னு நடத்திடலாம்” என்றார் வாசுதேவன்.

“சம்மந்தி... நேக்கு என்னவோ”

“இதிலே இவ்வளவு யோசிக்க ஒண்ணுமே இல்லை.. எல்லாம் நல்ல படியா நடக்கும். நான் தேவையான ஏற்பாடு எல்லாம் பண்ணிடறேன். நீங்க கவலைப் படாம இருங்கோ” சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தார் வாசுதேவன்.

விஷயத்தை அப்பா சொல்ல வேதாவினுள்ளே பேரதிர்ச்சி. கோதையினுள்ளே கொஞ்சம் படபடப்பும், பரவசமும்.அப்பா ஊருக்கு கிளம்பி இருந்தார். அன்று இரவு ஒலித்தது கோதையின் கைப்பேசி.

“கோதைப் பொண்ணு” காதலில் குழைந்து ஒலித்த குரல் யாருடையது என்று யோசிக்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை.

“கோதைப் பொண்ணு, நமக்கு இன்னும் மூணு நாளிலேயே கல்யாணம்டா. போச்சு... போச்சு... என்னடா பண்றது இப்போ?” கோகுல் ரகசிய குரலில் சொல்ல வெட்கத்தில் படபடத்தது கோதையின் இதயம்.

“என்னடா பதிலே காணோம்? இவ்வளவு சீக்கிரம் நடக்கும்னு நீ எதிர்பார்த்தியா?” குரலில் இன்னமும் அதே ரகசிய பாவம்.

“ம்? ம்ஹூம்.” மெல்லச் சிரித்தாள் கோதை

“ஹேய்.... வெட்கப் படறியா? நேக்கு அதை பார்க்கணுமே. போட்டோ எடுக்கணுமே” பரபரத்தான் கோகுல். அவள் பதில் சொல்லாத போதிலும் படபடப்பிலும் பரவசத்திலும் தடுமாறும் அவளது சுவாசத்தின் சத்தம் அவனை ரசிப்பின் உச்சியில் நிறுத்தியது.

“கோதைப் பொண்ணு, நோக்கு ஒரு விஷயம் தெரியுமோ?' மென் குரலில் தொடர்ந்தான் கோகுல். “நம்மாத்திலே கோகுல் கோகுல்ன்னு ஒரு பையன் இருக்கானோல்யோ அவனுக்கு நாளைக்கு பிறந்த நாளாம்..”

“உங்களுக்கா? நாளைக்கா? ஹாப்பி.. ஹாப்பி பர்த்டே” என்றாள் கோதை.

?அட... நோக்கு இதெல்லாம் சொல்லத் தெரியுமா? இப்போ இல்லை. நாளைக்கு கார்த்தாலே போன் பண்ணி சொல்லு” என்றவன் “நாளைக்கு கார்த்தாலே நீயும், உங்க அக்காவும் கிளம்பி நம்மாத்துக்கு வரேள். சாயங்காலம் பார்ட்டி இருக்கும். சாப்பிட்டுட்டு ராத்திரி ஆத்துக்கு போகலாம்”

“இல்லை அது... அப்பா ஊரிலே இல்லை”

'அப்பா ஊரிலே இல்லைதானே? தனியா ரெண்டு பேரும் என்ன பண்றேள் ஆத்திலே? கிளம்பி இங்கே வாங்கோ. உங்க அப்பா கிட்டே எங்க அப்பாவை பேச சொல்றேன் ஒகேயா? நாளைக்கு கார்த்தாலே பத்து மணிக்கு கார் வரும் ரெடியா இருங்கோ ரெண்டு பேரும்.” உறுதியாக சொல்லி விட்டிருந்தான் கோகுல்.

அதே நேரத்தில் வேதாவின் இதயத்தில் இடியை இறக்குவது போல் ஒலித்தது அவள் கைப்பேசி. முதல் முறை ஒலித்து ஓய அழைப்பை ஏற்க்கவில்லை. அடுத்த சில நிமிடங்களில் இரண்டு முறை , மூன்று முறை என ஒலிக்க அழைப்பை ஏற்றாள் அவள். மறுமுனையில் சரவணன்.

“தனியா இருக்கியா? பக்கத்திலே யாரவது இருக்காளா?” இப்படித்தான் ஆரம்பித்தான் அவன்.

“இல்லை யாரும் இல்லை. அப்பா ஊரிலே இல்லை” தன்னையும் மீறி உளறிவிட்டிருந்தாள் வேதா.

“வெரி குட்.” என்றான் அவன். “நாளைக்கு மார்னிங் நீ ஆபீஸ் போறா மாதிரி கிளம்பி மாம்பலம் ரயில்வே ஸ்டேஷன் வந்திடு” என்றான் அவன்.

“இல்லை கோகுல். தங்கைக்கு நிச்சியதார்த்தம் மூணு நாளிலே. இப்போ நான் எப்படி?”

“உனக்கு கல்யாணம்ன்னு சொன்னே?” அவன் குரல் கொஞ்சம் மாற்றத்துடன் ஒலித்தது.

“ரெண்டு பேருக்கும் தான்.” அவள் குரலில் கொஞ்சம் நடுக்கம்.

“அதானே பார்த்தேன். நாலு நாளா உன் கிட்டே இருந்து போன் இல்லைனதுமே நினைச்சேன். நீ வேறொருத்தன் பக்கம் சாஞ்சிட்டேன்னு. என்னை லவ் பண்ணிட்டு அவனை கல்யாணம் பண்ணிக்கப் போறயா? ரொம்ப சந்தோஷம். எனக்கும் துரோகம் பண்ணு. அவனுக்கும் துரோகம் பண்ணு”

“அய்யோ... நான் அப்படி நினைக்கலை கோகுல்”

“வேறே எப்படி நினைக்கறே.? மனசிலே ஒருத்தனை நினைச்சிட்டு அடுத்தவன் கூட குடும்பம் நடத்தறது அசிங்கம் இல்லையா? அதை விட கேவலம் இந்த உலகத்திலே வேறே ஏதாவது இருக்கா? அவன் கூட குடும்பம் நடத்தினாலும் உனக்கு என் ஞாபகம் தானே வரும்” மிகப்பெரிய ஆயுதத்தை அவன் எடுத்து வீச அப்படியே விழுந்தாள் வேதா.

‘அவன் சொல்வதும் உண்மைதானே. இவனுடன் பழகி விட்டு நான் முரளியுடன் எப்படி குடும்பம் நடத்துவேன்?’

“கோகுல்” உடைந்தாள் வேதா “இப்போ நான் என்ன பண்ணட்டும்?”

“அழாதேடா. ப்ளீஸ் அழாதே. நீ அழுதா என்னாலே தாங்கிக்க முடியாது. நாளைக்கு மார்னிங் பதினோரு மணிக்கு மாம்பலம் ரயில்வே ஸ்டேஷன் வந்திடு. நாம எங்கே போறோம்னு அப்புறம் சொல்றேன். நம்ம கல்யாணத்துக்கு எல்லா ஏற்பாடும் பண்ணி இருக்கேன். கல்யாணம் முடிஞ்ச அப்புறம் நாம நம்மாத்துக்கு போகலாம் சரியா?”

“ச.. சரி கோகுல்.” என்றாள் வேதா கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டபடியே.

மறுநாள் காலை மிக அழகாக விடிந்திருந்தது கோதைக்கு. குளித்து விட்டு வந்தவள் முதல் வேலையாக கைப்பேசியை எடுத்து கோகுலை வாழ்த்துவதற்கு அவன் எண்ணை அழைத்தாள்.

'கோதை பொண்ணு..' என்று ஒளிர்ந்தது அவன்கோகுலின் கைப்பேசித் திரை.

அழைப்பை சட்டென ஏற்று அவன் “கோதை பொண்ணு “ என்று சொல்ல

“ஹாப்பி பர்த்டே கோகுல்” குரலில் மகிழ்ச்சியும், வெட்கமும் வழிய அவள் சொல்லி முடித்த அதே நேரத்தில் அந்த வீட்டில் இருந்த சுவர் தொடங்கி எல்லாவற்றையும் தொட்டுத் தொட்டு பார்த்துக்கொண்டிருந்தாள் வேதா.

‘மறுபடியும் இந்த வீட்டுக்குள் வருவேனா? இவற்றையெல்லாம் என்னால் மறுபடியும் பார்க்க முடியுமா?’

அப்போது அவள் கண்ணில் பட்டது அவளும் அவளது தங்கையும் அப்பாவுமாக எடுத்துக்கொண்ட புகைப்படம். அந்தப் புகைப்படத்தை எடுத்து தனது பைக்குள் சொருகிக்கொண்டாள் அவசரமாக.

“அப்பா ஸாரிப்பா” அவள் உதடுகள் உச்சரித்தன.

தான் செய்வது தவறு என்று அவள் உள்ளுணர்வு ஏனோ உறுத்திக்கொண்டே இருந்தது. ஆனால் சரவணன் சொன்ன வார்த்தைகளின் தாக்கம் அவளை செலுத்திக்கொண்டிருந்தது.

‘இப்போது அவள் போகவில்லை என்றால் நடக்கபோவது அவள் திருமணமும் தானே! அதன் பிறகு இவனையும் மறக்க முடியாமல், அவனையும் நினைக்க முடியாமல், நரகம் இல்லையா அது?’

ஒரு பெருமூச்சுடன் இரண்டு காகிதங்களை எடுத்தாள் அவள். விறுவிறுவென அப்பாவுக்கு ஒன்று தங்கைக்கு ஒன்று என இரண்டு கடிதங்களை எழுதினாள் அவள். அப்பாவின் கடிதத்தை அங்கே தொங்கிக்கொண்டிருந்த அவரது சட்டை பையில் வைத்துவிட்டு தங்கைக்கான கடிதத்தை எடுத்துக்கொண்டு அவளது அறைக்குள் நுழைந்தாள் வேதா.

அங்கே அழகு சொட்ட சொட்ட தயாராகிக்கொண்டிருந்தாள் தங்கை. கோதை அறியாமல் கடிதத்தை அங்கே இருந்த மேஜையின் மீது வைத்தாள் வேதா.

“நான் அழகா இருக்கேனாக்கா?” தலை சாய்த்து கோதை கேட்க அவளை இழுத்து நெற்றியில் முத்தமிட்டு “ரொம்ப அழகா இருக்கேடா” குரல் தழுதழுக்க சொன்னவள் தன்னோடு அவளை அணைத்துக்கொண்டாள். '

“கண்ணா ... என் தங்கையின் திருமணத்தில் எந்த பிரச்னையும் வந்து விடக்கூடாது” வேதாவின் கண்களில் கண்ணீர் வழிய மனம் கண்ணனிடம் மன்றாடியது.

அப்போது அவர்கள் வீட்டு வாசலில் வந்து நின்றது கோகுல் வீட்டு கார்.

அதே நேரத்தில் வேதாவின் அலுவலகத்தில் தனது கணினி முன்னால் அமர்ந்திருந்தாள் அவளது தோழி கவிதா.

‘ஏன் இந்த வேதா இன்று வரவில்லை. விடுப்பு எடுப்பதாகக் கூட சொல்லவில்லையே?' என்ன பிரச்சனை? அந்த கோகுலின் வேலையாக இருக்குமோ?’ யோசித்தபடியே இருந்தாள் அவள்.

அவளுக்குள்ளேயே இன்னமும் உறுத்தல்.' இவன் நிஜமாகவே ஜி.கே க்ரூப்ஸ் கோகுல் தானா?

சட்டென எங்கிருந்தோ ஒரு மின்னல். இணையத்தை புரட்டினால் ஜி.கே க்ரூப்ஸ் பற்றிய தகவல்கள் புகைப்படங்கள் ஏதாவது கிடைக்குமா?

விரல்கள் கணினியில் விளையாட சில நொடிகளில் அவள் திரையில் விரிந்தது அந்தப் புகைப்படம். வாசுதேவன்- தேவகி- கோகுல் என மூவரும் சேர்ந்திருக்கும் அந்தப் புகைப்படம்.

‘அப்படி என்றால் ? அப்படி என்றால்? வேதாவுடன் பழகுபவன் நிஜ கோகுல் இல்லையா?’அதிர்ச்சியில் விழுந்தாள் கவிதா.

தொடரும்
 

Masha

New member
Member
இது கதை தான் தெரியும், இருந்தாலும் மனசு அடிச்சுகுது கதை படிக்க
 

பிரிய நிலா

Well-known member
Member
செம டிவிஸ்ட் சிஸ்.. கவிதா இந்த உண்மையை வேதாவிடம் தெரியப்படுத்துவாளா.. பெரும் இக்கட்டில் இருந்து வேதா மீண்டு வருவாளா...
செம செம சிஸ்.. வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபி..
 

kothaisuresh

Well-known member
Member
அச்சோ கவிதா லேட் பண்ணாம இந்த விஷயத்தை வேதாகிட்ட சொல்லுவாளா?
 

Vathsala Raghavan

✍️
Writer
செம டிவிஸ்ட் சிஸ்.. கவிதா இந்த உண்மையை வேதாவிடம் தெரியப்படுத்துவாளா.. பெரும் இக்கட்டில் இருந்து வேதா மீண்டு வருவாளா...
செம செம சிஸ்.. வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபி..
Thanks for your cmnts ma
 

Latest profile posts

மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு
முள்ளில்லா முல்லைப்பூ இன்னும் இரண்டு எபியில் முடிந்துவிடும். கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணிவரை மட்டுமே இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீட்டிக்கப்படமாட்டாது. படிக்க நினைப்பவர்கள் விரைவில் படித்துவிடுங்கள். லைக்கோ கமெண்டோ சொல்லிட்டும் போங்க.

New Episodes Thread

Top Bottom