• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே 07

Vathsala Raghavan

✍️
Writer
யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே 07

“அடுத்த ஒரே வாரத்தில் நிச்சியதார்த்தம். நிச்சியாதார்த்ததுக்கு எங்க சைடுலேர்ந்து நிறைய பேர் வருவா” சொன்னார் வாசுதேவன்.

“ரொம்ப சந்தோஷம். பெரிய மண்டபமா பாத்துடறேன்” சொன்னார் கோதையின் அப்பா.

“எதுக்கு அவசியமில்லாத செலவு பண்றேள்? எங்காத்திலேயே வெச்சுக்கலாமே? நிச்சியம் பொண்ணாத்திலேதான் நடக்கணும் அது இதுன்னு எந்த ஃபார்மாலிட்டியும் வேண்டாம். இனிமே நாம எல்லாரும் ஒரே குடும்பம் தானே”

வாசுதேவன் புன்னகையுடன் சொல்ல நிஜமாகவே நெகிழ்ந்து போனார் அப்பா.

“வேதா போட்டோ இருக்கா? ஆவலுடன் கேட்டார் கோகுலின் பெரியம்மா யசோதா. “உங்க பொண்ணை ஒரு தரம் பார்த்திருக்கேன். பார்க்க லட்சணமா இருப்பான்னு தேவகி சொன்னா. நேக்கும் பார்க்கணும்னு ஆசையா இருக்கு”

ஓடிச்சென்று அவளது ஒரு போட்டோவை எடுத்துக்கொண்டு வந்தார் ஸ்ரீதரன். அதை பார்த்தவுடனேயே எல்லார் முகத்திலும் ஒரு திருப்தி புன்னகை.

“முரளி சிங்கப்பூர் போயிருக்கான், திரும்பி வர்றதுக்கு ஒரு வாரம் ஆகும். கரெக்டா நிச்சியதார்த்ததுக்குதான் வருவான்னு நினைக்கிறேன் இதை அவனுக்கு அனுப்பி வைக்கிறேன். அவன் எப்படியும் ஒகே சொல்லிடுவான். வேணுமானா, அவா ரெண்டு பேரையும் இன்டர்நெட்லே பேசிக்க சொல்றேன். இந்த காலத்து குழந்தைகள். இப்பவே மனசிலே இருக்கறதை பேசிண்டுடுட்டா பின்னாலே பிரச்சனை வராது பாருங்கோ. உங்க பொண்ணு போன் நம்பரையும் குடுங்கோ”

யசோதா சொல்ல சந்தோஷமாக தலை அசைத்தார் அப்பா.

“டேய் இந்தாடா” கோகுலிடம் அந்த போட்டோவை நீட்டினார் பெரியம்மா. “இதை போன் லே முரளிக்கு அனுப்ப முடியுமா?”

“நன்னா அனுப்பலாம். நான் பார்த்துக்கறேன்” சொல்லியபடியே போட்டோவை ஒரு முறை பார்த்துவிட்டு தனது சட்டை பைக்குள் வைத்துக்கொண்டான் கோகுல்.

எல்லாரும் விடைப்பெற்று காரில் ஏறிக்கொள்ள, கோகுல் மட்டும் காரில் ஏறவில்லை.

"இங்கே ஒரு ஃப்ரெண்டை பார்க்கணும் பார்த்திட்டு நான் ஆத்துக்கு வந்திடறேன்"

கிட்டதட்ட கால் மணி நேரம் கடந்திருக்கும். வாசுதேவன் குடும்பத்தின் புகழ் பாடிக்கொண்டே இருந்தார் அப்பா. அவரின் மகிழ்ச்சிக்கு எல்லையே இருக்கவில்லை. எல்லாவற்றையும் புன்னகை மாறாமல் கேட்டுக்கொண்டிருந்தாள் கோதை.

அதே நேரத்தில் சரவணனுடன் காரில் தனது வீடு நோக்கி பயணித்துக்கொண்டிருந்தாள் வேதா.

“உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா.? இன்னைக்கு ஆத்திலே என்னை பொண்ணு பார்க்க வந்திருப்பா. அப்பா மத்தியானமே போன் பண்ணி என்னை சீக்கிரம் வரச்சொன்னார்”

“ஓ அப்படியா?” அவனுக்குள்ளே பல்வேறு கணக்குகள் ஓடிக்கொண்டிருந்தன.

“என்ன சாதரணமா அப்படியாங்கிறேள்? பெரிய இடம் அப்படின்னு அப்பா சொன்னார். கல்யாணம் நிச்சியம் ஆனாலும் ஆயிடும்.” சொல்லியபடியே தனது கைப்பேசியை மறுபடியும் அவள் உயிர்ப்பித்த அடுத்த நிமிடம் வீட்டிலிருந்தது அழைப்பு.

யோசித்தபடியே அழைப்பை ஏற்றாள் வேதா “அப்பா... சொல்லுங்கோ”

“என்னமா இப்படி பண்ணிட்டே? உனக்காக எவ்வளவு நேரம் காத்துண்டு இருந்தோம் தெரியுமா?”

“இல்லப்பா... ஒரு மீட்டிங்.. கொஞ்சம் பிசியா இருக்கேன் பா....”

“சரி விடு. நோக்கு கல்யாணம் நிச்சியம் ஆயிடுத்து மா. அடுத்த வாரம் நிச்சயதார்த்தம். நான் இப்போ கோவிலுக்கு போறேன். வர ராத்திரி எட்டு மணி ஆகும். நீயும் அதுக்குள்ளே ஆத்துக்கு வந்திடு. மீதிய ஆத்துக்கு வந்ததும் பேசிக்கலாம். வெச்சிடறேன்” தனது மகளை முழுமையாக நம்பும் ஒரு தந்தை மகிழ்ச்சியுடன் பேசி முடித்தார் அங்கே.

அதிர்ச்சியின் எல்லைக்கு போனாள் வேதா

“இப்போ என்ன பண்றது கோகுல். அப்பா கல்யாணம் நிச்சியம் பண்ணிட்டார். உங்காத்திலே நம்ம கல்யாணத்துக்கு ஒத்துப்பாளா? “அவனை கவலையுடன் பார்த்தபடியே கேட்டாள் வேதா.

“ம்? கொஞ்சம் கஷ்டம்தான்... பேசிப்பார்க்கலாம்” அவள் தவிப்பும் அவள் நிலைமையையும் புரிந்துக்கொண்டவனாக குரலில் சேர்த்துக்கொண்ட கொஞ்சமான அலட்சியத்துடன் சொன்னான் சரவணன்.

“என்ன கோகுல் இப்படி சந்தேகமா ... நேக்கு பயம்மா இருக்கு.” அவளது பதற்றம் அவனது தைரியத்தை அதிகப்படுத்தியது.

“இப்போ உடனே பேசறது கஷ்டம்டா செல்லம். ஒண்ணு பண்ணலாமா? நாம முதல்லே கல்யாணம் பண்ணிக்கலாமா? அதுக்கப்புறம் ஆத்திலே போய் நின்னா அவா ஏத்துண்டு தானே ஆகணும்?”

“இல்லை அது வந்து எங்கப்பா... எங்கப்பாவை விட்டு நான் எப்படி?” தயக்கமும், பயமுமாக சொன்னாள் வேதா.

“சரி விடு உன்னை உங்காத்திலே விட்டுடறேன். உங்கப்பா சொல்ற பையனையே நீ கல்யாணம் பண்ணிக்கோ. நான் இப்படியே உன்னை நினைச்சிண்டே”

“ஏன் கோகுல் இப்படியெல்லாம்... ப்ளீஸ் கோகுல்... லவ் யூ கோகுல்... நேக்கு நீங்க வேணும்.... ப்ளீஸ் கோகுல்”

“அப்போ நான் என்ன சொன்னாலும் கேட்பியா? சொன்ன இடத்துக்கு வருவியா?” அவள் கண்களை ஊடுருவிய படியே நிதானமாக கேட்டான் சரவணன்.

.........................

“சொல்லு ப்யூட்டி... இப்போ நீ சொல்றதுதான் பதில். இல்லைன்னா உன்னை உங்க ஆத்திலே விட்டுட்டு நான் போயிண்டே இருப்பேன். அப்புறம் உன்னை பார்க்க வரமாட்டேன்” வார்த்தைகளை நிதானமாக கோர்த்தான் சரவணன்.

சில நிமிட சிந்தனை பின் தட்டு தடுமாறி வந்தது அவள் குரல்

“ம்.... சரி.”

சில நிமிடங்கள் பேசவே இல்லை சரவணன். அவள் வீடிருக்கும் தெருவை நெருங்கியவுடன் காரை ஓரமாக நிறுத்தினான் அவன். சீட்டின் பின்னால் சாய்ந்துக்கொண்டு கண்களை மூடிக்கொண்டான் கண்ணில் எங்கிருந்தோ முளைத்ததோ கன்னங்கள் தாண்டி வழிந்தது கண்ணீர்.

“அய்யோ.... இப்போ எதுக்கு அழறீங்க?”

“எனக்கு பயமா இருக்குடா. ஆத்துக்கு போனதும் மனசு மாறிட மாட்டியே? என்னை மறந்திட மாட்டியே?'” ஒரு கைதேர்ந்த நடிகனாக குரல் நடுங்க கேட்டான் சரவணன்.

“நான் எப்பவும் மாறமாட்டேன் கோகுல். ப்ளீஸ் அழாதீங்க.” அவனை முழுதாக நம்பிவிட்டவளின் குரல் பதற்றத்துடன் ஒலித்தது.

“நிஜமாவா..? மறுபடி 'நிஜமாத்தானே சொல்றே?” மறுபடி கேட்டவன் கடைசியில் தன்னை தேற்றிக்கொண்டவனாக சொன்னான்.

“ரெடியா இரு. நான் எல்லா ஏற்பாடையும் பண்ணிட்டு எப்போ வேணும்னாலும் போன் பண்ணுவேன். நீ உடனே கிளம்பத் தயாரா இருக்கணும்”

“சரி.”அவன் முகம் பார்த்துக்கொண்டே தலை அசைத்தாள் வேதா.

அவளை அங்கிருந்த கோவிலின் வாசலில் இறக்கி விட்டு, கை அசைத்து விட்டு காரை கிளப்பிக்கொண்டு நகர்ந்தான் சரவணன்.. மனம் பாரமாக அழுத்திக்கொண்டிருக்க வீட்டுக்கு செல்லும் எண்ணமே வராமல் அந்த கோவிலுக்குள் சென்று அமர்ந்தாள் வேதா.

சில நிமிடங்கள் கழிந்திருந்த நிலையில் கோதைக்காக ஒரு கைப்பேசியை வாங்கிக்கொண்டு அந்த மொபைல் ஷோ ரூமிலிருந்து வெளியே வந்தான் கோகுல்.

‘இதை அவள் கையில் சேர்க்க வேண்டுமே? என்ன செய்யலாம்? மறுபடியும் அவள் வீட்டுக்கு போவது சரியாக இருக்குமா?’ யோசித்தபடியே ஒரு ஆட்டோவில் ஏறினான் கோகுல்.

அதே நேரத்தில் தனது கைப்பேசியில் பேசிக்கொண்டிருந்தான் சரவணன். மறுமுனையில் விக்கி.

“சூப்பர்டா ... கிட்டத்தட்ட ஜெயிச்சிட்டே போலிருக்கே?”

“இல்லடா எனக்கு பயமா இருக்கு. இது சரியா வருமா? எனக்கென்னமோ....”

“டேய்... என்னடா நீ. எல்லாம் நமக்கு சாதகமா வர நேரத்திலே போய்... ஒரு விஷயம் நீ யோசிச்சு பார். நீ பணக்காரன்னு நினைச்சிட்டு தானேடா அவ உன் கூட வர சம்மதிக்கறா? இதே வசதி இல்லாதவன் தெரிஞ்சா உன்னை தூக்கிப் போட்டுட மாட்டாளா? அப்போ அவளுக்கும் பணம் தானே குறி.? அவளை நீ ஏமாத்துறதிலே தப்பே இல்ல சரவணா.” அவன் மனதில் இன்னும் கொஞ்சமாக விஷ விதையை தூவிக்கொண்டிருந்தான் விக்கி.

கோதையின் வீடிருக்கும் தெருவில் இறங்கிக்கொண்டான் கோகுல். அந்த கோவில் கண்ணில் பட, ஒரு வேளை கோதை கோவிலுக்கு வந்திருப்பாளோ என்ற எண்ணத்துடன் கோவிலுக்குள் நுழைந்தான் கோகுல். அங்கே சிரித்துக்கொண்டு நின்றிருந்தான் மாயக்கண்ணன்.

அந்த கண்ணனை தரிசித்துவிட்டு பிரகாரத்துக்கு வந்தான் அவன். அங்கே ஏதேதோ சிந்தனையுடன் சிலையாக அமர்ந்திருந்தாள் வேதா. அந்த கண்ணனிடம் மன்றாடிக்கொண்டிருந்து அவள் உள்ளம்.

“நான் செய்துக்கொண்டிருப்பது சரியா? தவறா? எனக்கொரு சரியான வழிக்காட்டு. நீ காட்டும் பாதையில் நடக்கிறேன் நான்”

கோதையை தேடி சுற்றிக்கொண்டிருந்த கோகுலின் பார்வை அங்கே இருந்த வேதாவின் மீது விழுந்தது. ஒரு முறை அவன் புருவங்கள் உயர்ந்து இறங்கின.

“யார் இந்த பெண்? எங்கேயோ பார்த்திருக்கிறேனே?” கண்களை மூடி நெற்றியை தேய்த்துகொண்டவனின் தலைக்குள்ளே ஒரு மின்னல் வெட்ட பாக்கெட்டில் இருந்த அவள் போட்டோவை எடுத்து பார்த்தான். மலர்ந்தது அவன் முகம்.

அடுத்த நொடி அவள் எதிரில் வந்து உட்கார்ந்தான் கோகுல்

“ஹாய் மன்னி”

“மன்னியா?”' திடுக்கென நிமிர்ந்து அவன் யாரென புரியாதவளாக அவனை ஏற இறங்க பார்த்தாள் வேதா

“என்ன? கண்ணன் கிட்டே அப்ளிகேஷனா? கவலையே படாதீங்கோ. எங்க முரளிய நீங்க கண்ணை மூடிண்டு கல்யாணம் பண்ணிக்கலாம். அவன் உங்களை நன்னா பார்த்துப்பான்”

சொல்லிவிட்டிருந்தான் அந்த மாயக்கண்ணன். கோகுலின் வாயிலாக அவளுக்கு வழிக் காட்டி இருந்தான் அவன் . அதை புரிந்துக்கொள்ளும் சக்தி தான் அவளுக்கு இல்லை.

“நீங்க யாருன்னு....”

“என்னை விடுங்கோ. நீங்க வேதா தானே?”

“ஆமாம்...”

“அப்போ நீங்க எனக்கு மன்னிதான்” கண்களில் குறும்பும், இதழ்களில் புன்னகையுமாக சொன்னான் கோகுல்.

“நேக்கு... ஒண்ணுமே புரியலை”

'உங்களுக்கு முரளி தெரியுமா?'

“ம்ஹூம்” என்றாள் அவள்.

அவளுக்கு எந்த விவரமும் சொல்லப்படவில்லையா என்ன? அவன் முகத்தில் கொஞ்சம் குழப்ப ரேகைகள்.

“சரி அட்லீஸ்ட் கோதையாவது. தெரியுமா?”

“ம்”

“அப்பாடா” என்றான் கோகுல் “உங்க தங்கை கோதையை கல்யாணம் பண்ணிக்க போற ஸ்மார்ட் கய் நான்தான். இப்போ ஏதாவது புரியறதா?” தலை சாய்த்து கேட்டான் அவன்.

“கோதைக்கும் கல்யாணம் பிக்ஸ் ஆயிடுத்தா?' நிஜமாவா?” விழிகள் விரிய கேட்டாள் வேதா. அவள் பார்வை அவனை அளக்க, அவள் முகத்தில் அளவிட முடியாத சந்தோஷம், மகிழ்ச்சி ஆனந்தம் இன்னும் என்னெனவோ.

”நான் எதிரே பார்க்கலை. ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு. 'நீங்க தான் மாப்பிள்ளையா?'”

“ம்” மென்சிரிப்புடன் கூடிய தலை அசைப்பு அவனிடம்.

“அது கல்யாணதுக்கு ஓகே சொல்லிடுத்தா? நம்பவே முடியலை. அவ சின்ன குழந்தை மாதிரி. உலகமே தெரியாது. நீங்க... நீங்கதான் அவளை பத்திரமா பார்த்துக்கணும். ப்ளீஸ்.” கண்கள் மின்ன மின்ன சொன்னாள் வேதா.

“கண்டிப்பா” தமக்கையின் பாசத்தை ரசித்தபடியே சொன்னான் அவன்.

“ஆமாம் உங்க பேரென்ன?”

“ஐ ம் கோகுல்” அவன் சொல்ல அவள் கொஞ்சம் வியப்புடன் நிமிர்ந்தாள் அவள்.

“கோகுலா?”

“ஆமாம். ஏன் ஷாக் ஆகறேள்? என் பேர் பிடிக்கலையா?” சிரித்தான் அவன்.

சொல்லி இருக்க வேண்டும் அவன்! தான் ஜி.கே க்ரூப்ஸ்ஸின் ஒரே வாரிசு என்று அறிமுகப்படுத்திக்கொண்டிருக்க வேண்டும். செய்யவில்லை அவன். ஏனோ எப்போதுமே அப்படி சொல்லி பெருமை அடித்துக்கொள்ள தோன்றுவதில்லை அவனுக்கு.

சட்டென ஏதோ நினைவு வந்தவனாக தனது கைப்பேசியில் இருந்த முரளியின் புகைப்படத்தை அவளிடம் காட்டினான் கோகுல்.

“நீங்க முரளியை பார்த்ததில்லையே? பார்த்திட்டு சொல்லுங்கோ மன்னி அவனுக்கு எத்தனை மார்க் போடலாம்னு?”

அவன் முகத்தை பார்த்துக்கொண்டே தயக்கத்துடன் அதை வாங்கிக்கொண்டாள் வேதா. கண்கள் புகைப்படத்தை பார்த்துக்கொண்டிருக்க அவளுக்குள் அலையடித்துக்கொண்டிருந்தது. அதற்குள் கோகுல் முரளியை பற்றி எல்லா விவரங்களும் சொல்லிவிட்டிருந்தான்.

எல்லாம் சொல்லி முடித்துவிட்டு கேட்டான்

“என்ன மன்னி. ஒகேவா?”

“ஆங்?” நிமிர்ந்தாள் பேதை. என்ன சொல்வதாம் இவனிடம்? இதில் தங்கையின் வாழ்க்கையும் பின்னிக்கிடக்கிறதே? உள்ளுக்குள் படபடத்தது.

“மன்னி.... என்ன யோசனை.?”

“எனக்... எனக்கு எங்க... எங்கப்பா என்ன சொன்னாலும் ச.... சரிதான்.' அவன் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டுமென கஷ்டப்பட்டு வார்த்தைகளை தேடி கோர்த்து சொல்லி முடித்தவள்

“எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுவேளா கோகுல்?” சட்டென கேட்டாள்.

“கண்டிப்பா... சொல்லுங்கோ”

“என்னை நீங்க மன்னின்னு கூப்பிடாதீங்களேன்... ஜஸ்ட் வேதா போதும். ப்ளீஸ்.” சொன்னவள் அவனை நோக்கி கை நீட்டினாள் “நாம எப்பவுமே ஃபிரண்ட்ஸ் ஓகேவா?”

“சரி ஒகே.” கைகுலுக்கினான் கோகுல். “இப்போ நீங்க ஒரு ஹெல்ப் பண்ணனும். உங்க தங்கைக்கு ஒரு மொபைல் வாங்கினேன். அதை அவ கிட்டேகொடுக்கணும்”

“ஏன்? நீங்களே வந்து அவ கிட்டே கொடுங்களேன். அப்பா இப்போ ஆத்திலே இருக்கமாட்டார். அவர் வர லேட் ஆகும். டோன்ட் வொர்ரி” உற”சாகம் பொங்க கண் சிமிட்டி சொன்னாள் வேதா.

“நேக்கு கோதையோட கொஞ்சம் வம்பு பண்ணனும். சீண்டிப் பார்க்கணும். அவளுக்கு உங்களை எவ்வளவு பிடிச்சிருக்குன்னு பார்க்கணும். நீங்களும் வாங்க கோகுல் ப்ளீஸ்..” சொன்னவளின் முகம் ஏனோ மாற்றம் கொள்ள

'மறுபடியும் எனக்கு சான்ஸ் கிடைக்குமான்னு தெரியலை” முதலில் துள்ளலாக ஆரம்பித்த அவள் தொனி சற்று தேய்ந்து முடிந்தது.

“நான் வரேன் பட்... ஏன் அப்புறம் சான்ஸ் கிடைக்காம என்ன?” மனதிற்குள் ஏதோ ஒன்று உறுத்த கேட்டான் கோகுல்.

“அது .... ஒண்ணுமில்லை வேறெதோ யோசனை... நாம போலாம்” ஒரு பெருமூச்சை வெளியிட்டபடியே நடந்தாள் வேதா.

வீட்டை அடைந்தனர் இருவரும். சற்று முன்னால் கட்டி இருந்த புடவையை கூட மாற்றிக்கொள்ளாமல் அதே அலங்காரத்துடனே இருந்தாள் கோதை. காதில் அணிந்திருந்த ஜிமிக்கிகள் அவளது ஒவ்வொரு அசைவிலும் அவள் கன்னத்தில் முத்தமிட்டு விளையாடிக்கொண்டிருக்க, கூடத்தில் அமர்ந்து முல்லை பூக்களை தொடுத்துக்கொண்டிருந்தாள் கோதை.

திறந்திருந்த கதவை தாண்டி கோகுலுடன் உள்ளே வந்து நின்றாள் வேதா. அவனை பார்த்த மாத்திரத்தில் விருட்டென எழுந்தவளின் முகத்தில் ஓடி வந்து ஒட்டிக்கொண்ட சந்தோஷத்தையும், பரவிக்கிடந்த வெட்க பூச்சையும் அதிகமாக ரசித்தவள் வேதாவாகதான் இருந்தாள்.

அது ஏனோ அவளை சீண்டிப்பார்க்க சின்னதாக ஒரு ஆசை வேதாவுக்கு.

“ஹேய் சோம்பேறி..... பூவெல்லாம் அப்புறமா தொடுத்துக்கலாம் போய் என் ஆளுக்கு காபி போட்டுண்டு வா” முகத்தை தீவிரமாக வைத்துக்கொண்டு சொன்னாள் வேதா.

கோகுலும் இதை எதிர்பார்த்திருக்கவில்லைதான். அவன் திடுக்கிட்டு வேதாவின் பக்கம் திரும்ப.....

“என்னடி அப்படி பார்க்கறே? கோகுல் எப்பவுமே என் ஆளு தெரியுமா? நாங்க ரெண்டு பேரும் எவ்வளவு க்ளோஸ்ன்னு இந்த ஊருக்கே தெரியும். என்ன கோகுல்?” என்றபடியே விளையாட்டாக அவன் தோளில் கைப்போட்டுக்கொண்டாள் வேதா.

அவர்கள் இருவரையும் மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தாள் கோதை. என்ன ஒடுகிறது அவளுக்குள்ளே? புரியவில்லை கோகுலுக்கு. சூழ்நிலை உணர்ந்து கோகுல் அவளை விட்டு விலகி ஏதோ சொல்ல வாயெடுத்த நொடியில்...

“ஹேய்... வேதா...” பின்னாலிருந்து கோப பூச்சுடன் கேட்டது அவளது அப்பாவின் குரல்.

திடுக்கிட்டு மூவரும் அவர் பக்கம் திரும்ப அவர் முக பாவம் அவர் மனதை நன்றாக காட்டிக்கொடுத்தது. இப்படி ஒரு காட்சியை அவரால் ஜீரணித்துக்கொள்ளவே முடியவில்லை என்பதை பிரதிபலித்தது அவரது கோபப் பார்வை. சில மணி நேரங்கள் முன்னால் அவரிடம் குடிக்கொண்டிருந்த மகிழ்ச்சி காணமல் போனது போலே இருந்தது.

அடுத்த வினாடி வேதா அறைக்குள் சென்று விட, சமையலறைக்குள் புகுந்து கொண்டாள் கோதை.

“நீங்க உட்காருங்கோ மாப்பிள்ளை” கோகுலிடம் சொன்னார் அவர். அவரும் அவனருகே அமர்ந்துக்கொண்டார்..

'இவன் எதற்கு இப்போது இங்கே வந்தான்?’ என்ற கேள்வி அவர் மனதில் ஓடிக்கொண்டிருக்க, அதை நன்றாக உணர முடிந்தது கோகுலால். அங்கே மௌனம் பரவிக்கிடக்க, அப்படி ஒரு இறுக்கமான சூழ்நிலையில் இதுவரை கோகுல் இருந்ததில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆனால் இது எல்லாவற்றுக்கும் மேலாக அவன் மனதை குடைந்துக்கொண்டிருந்த கேள்வி

‘உள்ளே கோதை என்ன செய்துக்கொண்டிருகிறாள்? ரொம்பவும் காயப்பட்டு போயிருக்கிறாளோ? ‘

யோசித்து யோசித்து அதற்கு மேல் பொறுத்துக்கொள்ள முடியாமல் ஒரு முடிவுக்கு வந்தவனாக எழுந்தான் கோகுல்.

'நேக்கு டைம் ஆச்சு கிளம்பட்டுமா?’

“ம்... சரி மாப்பிள்ளை” எழுந்தார் ஸ்ரீதரன்.

“நீங்க இருங்கோ. நான் உள்ளே கோதைக்கிட்டே சொல்லிட்டு கிளம்பறேன்” அவர் என்ன நினைத்துக்கொள்வார் என்பதை பற்றி கொஞ்சம் கூட கவலைப் படாமல் சமையலறைக்குள் நுழைந்தான் கோகுல். கையிலிருந்த புது கைப்பேசியை மேடையின் மீது வைத்துவிட்டு அவளை ஏறிட்டான் அவன்.

திடுக்கென உள்ளே நுழைந்தவனை திரும்பி பார்த்தவள், சட்டென பார்வையை திருப்பிக்கொண்டாள் கோதை. ஒரு வேளை அழுதுக்கொண்டிருக்கிறாளோ?

“ஒரே ஒரு நிமிஷம். இதோ காபி போட்டுட்டேன்” சொல்லியபடியே அவசரத்தில் அவளே அறியாமல் பொங்கும் பால் பாத்திரத்தை வெறும் கைகளாலேயே இறக்கி கீழே வைத்து விட்டிருந்தாள் கோதை.

ஒரு நொடி அவள் கையை உதறிக்கொள்ள

“ஸ்ஸ்ஸ்ஸ்... பார்த்துடா... என்ன பண்ணிண்டிருக்கே நீ?” அவள் கைகளை விருட்டென கைகளை பிடித்துக்கொண்டவன், அவற்றை குழாய் நீரின் அடியில் காட்டினான்

“இல்லை.... ஒண்ணுமில்லை....விடுங்கோ” கையை விலக்கிகொண்டாள் அவள். மறுபடியும் காபி போடுவதில் கவனம் செலுத்துவதாக ஒரு பாவம் அவளிடத்தில்

“கோதைப்பொண்ணு.”அவன் அழைக்க, திரும்பவில்லை கோதை.

‘உச்சகட்ட கோபத்தில் இருக்கிறாளோ? எந்த பெண்ணும் இந்த மாதிரி ஒரு சூழ்நிலையில் கொதித்துப்போவது இயல்புதானே.?” யோசித்தபடியே

“கோதைப்பொண்ணு என்னை பாரு” குரலில் நிரம்பிக்கிடந்த தவிப்புடன் அழைத்தான் அவன்

.........................

“ப்ளீஸ் டா” நிமிரவில்லை அவள். .

“ரொம்ப கோபமாடா?”

“ம்ஹூம்” முகம் காட்டவில்லை அவனுக்கு. ஜீனி டப்பாவை எடுக்கும் சாக்கு.

“உங்க அக்கா சும்மா விளையாட்டுக்கு “

“ம்.....”

“கோதைப்பொண்ணு...” அதற்கு மேல் பொறுத்துக்கொள்ள முடியாதவனாக அவளை திருப்பி அவள் முகத்தை கையில் ஏந்திக்கொண்டான் அவன். எந்த உணர்வையும் வெளிக்காட்டாத ஒரு பாவம் அவள் முகத்தில். அவனிடமிருந்து விலக முயன்று தோற்றுக்கொண்டிருந்தாள் அவள். ஒரு முறை அவள் பார்வை சமையலறையின் வாசலுக்கு சென்று வர,

“ப்ளீஸ் டா... என்னை நன்னா திட்டணும் தோணினா கூட திட்டித் தீர்த்திடு. இப்படியெல்லாம் தவிக்க விடாதே. என் மேலே கோபமா வருதா? “

மெது மெதுவாக புன்னகை படர்ந்தது. “கோபமா? எதுக்கு? அதெல்லாம் இல்லையே” என்றாள் குறும்பு சிரிப்புடன்

“அடிப்பாவி....' என்றான் கோகுல் அப்புறம் ஏண்டி என்னை இப்படி கெஞ்ச வெச்சே?”

“நீங்க மட்டும் தான் என்னை சீண்டி பார்க்கணுமா? நான் சீண்டி பார்க்கப்படாதா?” என்றாள் அவனை குறுகுறுவென பார்த்தபடியே

அதற்குள் “கோதை.” கூடத்திலிருந்து அப்பாவின் அழைப்பு வர அவளை விட்டு அவசரமாக விலகினான் கோகுல்.

“தோ.... வரேன்பா” அப்பாவுக்கு பதில் சொல்லிவிட்டு காபியை அவன் கையில் திணித்தாள் “நேக்கு கோபம் எல்லாம் இல்லை. கவலைப் படாம காபியை சாப்பிட்டு கிளம்புங்கோ” அவள் நகர எத்தனிக்க அவள் கையை பிடித்துக்கொண்டான்

“நிஜமா கோபம் இல்லையாடா ?”

“ம்ஹூம் அதான் கொஞ்ச நாழி முன்னாடி, எல்லார் முன்னாலேயும் சொன்னேளே 'நேக்கு கோதையைதான் பிடிக்கும். கோதையை மட்டும்தான் பிடிக்கும்ன்னு” கண்கள் முழுக்க நேசம் நிறைந்திருக்க அவனை பார்த்தாள் கோதை “அது உண்மைன்னு நேக்கு தெரியும். நேக்கு கோகுல் மேலே ரொம்ப நம்பிக்கை” இமை குடை விழ அவள் உதடுகளில் அழகான வெட்க புன்னகை.

இதை விட வேறென்ன வேண்டுமாம்? அவள் சொன்ன விதத்தில் உலகத்தையே ஜெயித்து விட்டதை போன்ற மகிழ்ச்சி பொங்கி எழ அவளை அப்படியே அள்ளிக்கொள்ள மனம் தவிக்க..

“கோதை” மறுபடியும் அப்பாவின் குரல். இந்த முறை அதில் கொஞ்சம் சூடு விரவி இருந்தது.

தன்னைப் பற்றிய அவரது எண்ண ஓட்டங்கள் என்னவாக இருக்குமென கோகுலால் யூகிக்க முடிந்தது. இரண்டு பெண்களின் தந்தையாக அவரது தவிப்பில் எந்த தவறும் இல்லை என்றும் தோன்றியது அவனுக்கு.

அவள் நகரப்போக,

“கோதைப்பொண்ணு.... உனக்காக ஒரு மொபைல் வாங்கினேன்டா. அதை குடுக்கதான் வந்தேன். சிம் கார்டும் இருக்கு. சார்ஜ் போட்டுக்கோ. அப்புறம் பேசறேன். நான் வரேண்டா” சொல்லிவிட்டு, காபியை முடித்துவிட்டு சமையலைறயை விட்டு வெளியே வந்து, அவரிடம் விடைப்பெற்றுக்கொண்டு விரைந்தான் கோகுல். ஏதேதோ குழப்பங்களுடனே அவன் சென்ற திசையை பார்த்தபடியே நின்றிருந்தார் ஸ்ரீதரன்.
தொடரும்
 

Rajam

Well-known member
Member
வேதா எப்போது உண்மைய
தெரிஞ்சிப்பா.
ஏமாந்திரகூடாது அவ.
கோகுலுக்கும் தெரியலையே.
மிஸஸ்.வேதாமுரளி ஆகனும் .
 

பிரிய நிலா

Well-known member
Member
பொய் ரொம்ப நாளைக்கு நிலைக்காது.. வேதா வாழ்க்கை நல்ல படியா அமையனும்...
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் கதை 50வது எபி வரை போட்டாச்சு.

இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 20 போஸ்டட் டியர்ஸ்
காரிருள் சூழா காதலே... கதை லிங்க் பிப்ரவரி 23 அன்று இரவு 10 மணி வரை மட்டுமே தளத்தில் இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீடிக்கப்பட மாட்டாது‌‌ நண்பர்களே... அதனால் விரைவில் படித்துவிடுங்கள்.

WhatsApp Channel

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-காரிருள்-சூழா-காதலே.376/

New Episodes Thread

Top Bottom