• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே 06

Vathsala Raghavan

✍️
Writer
யமுனை ஆற்றிலே... ஈர காற்றிலே….. 06

ன்று காலையில் ஏதோ ஒரு வேலையாக தங்களது கல்லூரிக்கு வந்திருந்த கோகுல், அவனது அம்மாவின் உடல் நிலை பற்றி விசாரிப்பதற்காக சரவணனை பார்க்கச் சென்றான்.

“அம்மாவுக்கு பரவாயில்லைடா. இங்கே வான்னு கூப்பிட்டா வர மாட்டேன்றாங்க. என்ன பண்றதுன்னு தெரியலை. ஆங்... மறந்தே போயிட்டேன் பாரு. உன் காரை சீக்கிரம் திருப்பி கொடுத்திடறேன்.”

“குடு. குடு. இப்போ என்ன அவசரம்? நிதானமா குடு.. ஆத்திலே இன்னும் மூணு கார் இருக்கு” புன்னகையுடன் சொன்னான் கோகுல்.

அவனுடன் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தவன் தனது நண்பனிடம் மிக இயல்பாக சொன்னான் “நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் சரவணா. இன்னைக்கு சாயங்காலம் நான் பொண்ணு பார்க்கப் போறேன். என் மனசுக்கு ரொம்ப பிடிச்ச பொண்ணுடா அவ. சீக்கிரமே நிச்சயதார்த்தம் இருக்கும்”

சரவணனின் மனதிற்குள் ஒரு மின்னல் “வீட்டிலே எல்லாரும் போறீங்களாடா?”

“ஆமாம். அப்பா, அம்மா, பெரியம்மா, பெரியப்பா எல்லாரும்தான் ஏன்?”

“இல்லைடா இன்னைக்கு காலேஜ் முடிஞ்சதும் நான் உங்க வீட்டுக்கு வரலாம்ன்னு நினைச்சேன். சும்மாதான்... உன் கூட கொஞ்ச நேரம் பேசணும் போலே இருக்கு.”

நண்பனின் வார்த்தைகளின் பின்னால் ஒளிந்திருக்கும் கள்ளம் புரியவில்லை கோகுலுக்கு. அவன் மீது சந்தேகம் துளியும் வரவில்லை. சந்தேகபடும்படியான சந்தர்ப்பம் எதுவும் இதுவரை வந்ததும் இல்லை.

“வாயேன்டா. ஏழு மணிக்குள்ளே வந்திடுவேன். அதுக்கப்புறம் வாயேன்.. அப்படியே நாங்க இல்லாதப்போ வந்தாலும், லக்ஷ்மி மாமி ஆத்திலே தான் இருப்பா. உன்னைத் தெரியுமே லக்ஷ்மி மாமிக்கு. கொஞ்சம் வெயிட் பண்ணு நான் வந்திடுவேன்” சாதரணமாக சொன்னான் கோகுல்.

அவ்வளவுதான் கோகுல் நகர்ந்த சில நிமிடங்களில் திட்டம்த் தயாராக இருந்தது சரவணனிடம். கோகுல் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் வேதாவை அங்கே அழைத்து சென்று வீட்டை காட்டிவிடும் திட்டம். இது அவள் நம்பிக்கையை அதிகமாக்கிவிடும் என்ற தைரியம்.

நேரம் மதியம் இரண்டை நெருங்கிக்கொண்டிருந்தது. அவர்கள் வருவதற்கான ஏற்பாடுகளுக்காக வீட்டையே மாற்றிப் போட்டுக்கொண்டிருந்தார் அப்பா. மகளின் திருமணம் கிட்டத்தட்ட முடிவாகி விட்ட மகிழ்ச்சி அவரிடத்தில்.

“கோதை, கேசரியும், பஜ்ஜியும் பண்ணிடுமா. காபி டிகாஷன் போட்டு வெச்சிடு” அப்பா சொன்ன வேலைகளையெல்லாம் பதில் பேசாமல் செய்துக்கொண்டிருந்தாள் கோதை. கோகுலைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தார் அப்பா.

“கோகுலும் தங்கமான பையன். அவன் அளவுக்கு இல்லைன்னாலும் உங்க அக்காவும் நன்னாதானே படிச்சிருக்கா. நீ தான் கோகுலை பார்த்திருக்கியே நீ சொல்லுமா கோகுலுக்கும் வேதாக்கும் ஜோடி பொருத்தம் பிரமாதமா இருக்கும் இல்லையாமா?”

அந்தக் கடைசி வார்த்தைகளை தாங்கிக்கொள்ளவே முடியவில்லை அவளால். அதுவரை பேசாமல், பொறுத்துக்கொண்டு இருந்தவளுக்கு சுளீரென வலித்தது. இதயத்தை யாரோ பிடுங்கி தூரமாய் எறிந்துவிட்ட வலி.

“அவன் எனக்கானவன். கோகுல் எனக்கானவன்”

உள்ளுக்குள்ளே ஏதோ ஒன்று கூவியது. அவனிடம் ஓடி சென்று அவன் தோள் சாய்ந்துக்கொண்டு அவன் அணைப்பில் கண்களை இறுக மூடிக்கொள்ள வேண்டும் போல் இருந்தது அவளுக்கு. இது போன்ற உணர்வுகள் இதுவரை அவளுக்கு தோன்றியதே இல்லை.

“அவன் வந்தால் எல்லாம் சரியாகிவிடும்” மறுபடி ஒருமுறை தனக்குள்ளே சொல்லிக்கொண்டு முகம் கழுவிக்கொண்டு, பீரோவிலிருந்து பட்டு புடவையை கையில் எடுத்தாள் அவள்.

“நோக்கு எதுக்குமா பட்டுப்புடவை?” கேட்டார் அப்பா. “நீ சாதாரண புடவை கட்டிக்கோ போறும். உன்னை பொண்ணு பார்க்க வரும்போது நீ நன்னா அலங்காரம் பண்ணிக்கலாம். இப்போ அக்காவுக்கு மேலே நீ அலங்காரம் பண்ணிண்டு நின்னேனா நன்னா இருக்காதுமா”

அப்பா சாதரணமாகத்தான் சொன்னார். ஆனால் ஏனோ சட்டென கண்களில் நீர் கட்டிக்கொண்டது அவளுக்கு. அப்பாவுக்கு இதெல்லாம் புரியவேயில்லை.

“நான் போய் பூ பழமெல்லாம் வாங்கிண்டு வந்திடறேன். நீ அக்காவுக்கு ஃபோன் பண்ணி அவ கிளம்பிட்டாளான்னு கேளு” சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார் அப்பா.

எதுவுமே பிடிக்கவில்லை அவளுக்கு. கோகுலை உடனே பார்த்து விட வேண்டுமென்று மட்டுமே தோன்றிக்கொண்டிருந்தது. “கோகுல்” வாய் விட்டு உச்சரித்தாள் அவன் பெயரை.

சரியாக அந்த நொடியில் ஒலித்தது அவள் வீட்டுத்தொலைப்பேசி. அக்காவாக இருக்குமோ? என்ன சொல்வது அவளிடம்?

யோசித்தபடியே எடுத்து “ஹலோ” என்றாள் கோதை.

அவள் குரலை அடையாளம் கண்டு கொண்டிருக்க வேண்டுமவன்.

“நான் கோகுல் பேசறேன்” மென்மையிலும் மென்மையாகி அவன் குரல் மறுமுனையிலிருந்து அவள் செவி தொட்டது.

சரேலென்றொரு ஆனந்தப் பிரவாகம் அவளுக்குள்ளே. வேறெதுவுமே பேசத் தோன்றவில்லை அவளுக்கு

“நீங்க எப்போ வருவேள்?" கேட்டே விட்டிருந்தாள் அவள்.

நிச்சியமாக அப்படி ஒரு கேள்வியை அவளிடமிருந்து எதிர்பார்க்கவில்லை அவன். சிரித்து விட்டிருந்தான் கோகுல்

“கோதைப்பொண்ணு நோக்கு என்னடா அவ்வளவு அவசரம்?"

“இல்லை நேக்கு” அவள் குரல் கரைந்தது

“என்னாச்சுடா?”'

“அப்பா, நீங்க அக்காவைதான் பொண்ணுப் பார்க்க வரேள்ன்னு நினைச்சிண்டு இருக்கார். நேக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. நீங்க சீக்கிரம் வருவேளா ப்ளீஸ்”

அவள் சொன்னவுடனேயே அங்கே என்ன நடந்து கொண்டிருந்திருக்கிறது என்று புரிந்து விட்டது அவனுக்கு.

“கோதைப்பொண்ணு” என்றான் இதமாக நான் சீக்கிரம் வந்து என்ன பண்ணட்டும்? உன்னை அப்படியே தூக்கிண்டு வந்திடட்டுமா?'

“ம்? ம்ஹூம்......”

“என்ன ம்ஹூம்? அப்போ வேறே என்ன பண்ணணும்? நேக்கு கோதையைதான் பிடிக்கும் கோதையை மட்டும்தான் பிடிக்கும்ன்னு சொல்லணுமா?'' இதமாய் அவள் காது மடல் வருடியது அவன் குரல்.

“ம்” கொஞ்சம் சிலிர்ப்புடன் வந்தது பதில்.

“கோதைப்பொண்ணு.... நீ என்ன பண்றே ஜம்முனு ஒரு பச்சை கலர் புடவை எடுத்து கட்டிண்டு, காதிலே ஜிமிக்கியெல்லாம் போட்டுண்டு ரெடியா இருப்பியாம். நான் இதோ ஓடி வந்திடுவேனாம். அங்கே வந்து நீ சொன்ன மாதிரியே சொல்வேனாம் சரியா?”

“ம்” என்றாள் குளிர் சிரிப்புடன்.

'சில நாட்களுக்கு முன் தனக்காக பெண் பார்க்க வந்தவளால் இன்று அவள் அப்பா சொன்ன வார்த்தையை கூட தாங்கிக்கொள்ள முடியவில்லை! அவள் என்னவளாகிக் கொண்டிருக்கிறாள் என்பதற்கான அடையாளமல்லவா இது! அழைப்பை துண்டித்து விட்டு நிமிர்ந்தவனுக்குள் சந்தோஷ சாரல்’

உற்சாகம் மறுபடியும் தொற்றிக்கொள்ள அப்பா வருவதற்குள் அவன் சொன்னபடியே தயாராகி இருந்தாள் கோதை. வீட்டுக்குள் வந்தவர் அவள் தயாராக நிற்பதை ஏற இறங்க பார்த்தார். என்னத் தோன்றியதோ அவளை எதுவும் சொல்லவில்லை.

“அக்காவுக்கு ஃபோன் பண்ணியா?” கேட்டார் அப்பா.

“ஐயோ... இல்லைப்பா மறந்துட்டேன்” அப்பாவின் முகத்தில் கோபம் பரவியது.

கைப்பேசியை எடுத்து அவளை அழைக்க முயன்றார் அப்பா. கைப்பேசி அணைக்கப்பட்டிருந்தது. கொஞ்சம் பதறியவராக மறுபடி மறுபடி முயன்று கொண்டிருந்தார் அவர். எந்த பயனும் இல்லை. நேரம் கடந்துக்கொண்டிருந்தது.

ங்களது வீட்டை விட்டு கிளம்பினர் கோகுல் குடும்பத்தினர். அங்கே சரவணனின் காரில் கோகுலின் வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தாள் வேதா.

சில நிமடங்கள் கரைந்திருக்க கம்பவுண்ட் சுவற்றில் பளபள எழுத்துக்களில் 'கோகுலம்' என்ற பெயர் மின்னிய அந்த வீட்டு வாசலில் வந்து நின்றது சரவணனின் கார். அவர்கள் வீட்டு கார் எண்ணை பார்த்தவுடனேயே வெகு இயல்பாக கதவை திறந்து விட்டான் வாசலில் அமர்ந்திருந்த செக்யூரிட்டி.

கோகுலின் நண்பனாக அவன் அவ்வபோது வந்து போவதால் செக்யூரிட்டிக்குமே அவன் மீது எந்த சந்தேகமும் வரவில்லை. சுவாதீனமாக சொந்த வீட்டுக்குள் நுழைவதை போல் நுழைந்தான் சரவணன்.

காரை விட்டு இறங்கி அவள் பக்கம் வந்து

“இறங்குங்க மேடம்.” என்றான் இதழ்களில் ஒட்டிக்கொண்ட சிரிப்புடன்.

கண்கள் மின்ன, சுற்றிச் சுற்றி பார்த்தபடியே இறங்கினாள் அந்த அப்பாவி பெண் வேதா. வீட்டுக்குள் லக்ஷ்மி மாமி மட்டுமே இருப்பார் அவரை எப்படியும் சமாளித்து விடலாம் என்ற நம்பிக்கை அவனுக்கு.

தே நேரத்தில் கோதையின் வீட்டை அடைந்தனர் கோகுல் குடும்பத்தினர். வேதா இன்னமும் வந்திருக்கவில்லையே! குழப்பமும், பதற்றமும் ஆட்டிப் படைத்துக்கொண்டிருக்க வீட்டுக்குள் இங்குமங்கும் நடந்து கொண்டிருந்தார் அப்பா.

நேரம் நகர நகர அவளோடு ஒத்துழைக்காமல் போட்டி போட்டுக்கொண்டிருந்த சுவாசத்தை தேடிப் பிடித்து சுவாசித்துக்கொண்டு சின்ன புன்னகையுடன் தனது அறைக்குள் அமர்ந்திருந்தாள் கோதை.

தோளில் கிடந்த துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டு வந்தவர்களை எல்லாம் கரம் கூப்பி வரவேற்றார் அந்தப் பெண்களின் தந்தை.

சிறிது நேரம் வழக்கமான பேச்சுக்கள் தொடர்ந்தன. அப்பாவின் பார்வை மகளின் வரவை எதிர்ப்பார்த்து வாசல் கதவிலேயே கிடந்தது.

கோதையை எதிர்ப்பார்த்து, கண்களால் தேடித் தேடி அவர்கள் பேச்சில் பொறுமை இழந்து அவளை வாய்விட்டு அழைத்துவிடும் நிலைக்கு கோகுல் வந்த போது காப்பாற்றினார் தேவகி.

“எங்கே வேதாவும், கோதையும். உள்ளே உட்கார்ந்துண்டு என்ன பண்றா? வரச்சொல்லுங்கோ ரெண்டு பேரையும். அவாளையும் வெச்சுண்டே பேசுவோம்.”

“மன்னிக்கணும்” தயக்கத்துடன் சொன்னார் அப்பா. “வேதா இன்னும் ஆஃபிஸ்லேர்ந்து வரலை”

மெல்ல மாற்றம் கொண்டது பெரியப்பா நந்தகோபாலின் முகம். “நாங்க வரப்போறதா சொன்னேளா இல்லையா?”

“சொல்லிட்டேன். சொல்லிட்டேன். வந்துண்டே இருப்போன்னு நினைக்கிறேன். ஏதாவது மீட்டிங்க்லே இருந்திருப்போன்னு நினைக்கிறேன். ஃபோன் ஆஃப் பண்ணி வெச்சிருக்கா”

“சரி விடுங்கோ. வந்திடுவா. நீங்க கோதையை கூப்பிடுங்கோ” என்ற தேவகி, “கோதை” என்று அவரே உள்நோக்கி குரல் கொடுத்தார்.

ங்கே கோகுலின் வீட்டு ஹாலுக்குள் வந்து சோபாவில் அமர்ந்தான் சரவணன். அத்தனை பெரிய வீட்டை பார்த்து வியப்பில் விழுந்தவளாக, நின்றிருந்தவளை பார்த்து

“என்ன அசந்து போயிட்டே. இப்படி உட்காரு” என்றபடி அவள் கையை பிடித்து இழுத்து சோபாவில் தன்னருகே அமர்த்திக்கொண்டான் சரவணன். மாமி உள்ளே சமயலறையில் இருந்ததால் இவர்கள் வந்ததை கவனிக்கவில்லை.

“எப்படி இருக்கு வீடு. நோக்கு பிடிச்சிருக்கா?” மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்தவளின் காதுக்குள்ளே கிசுகிசுத்தான் சரவணன்.

“சூப்பரா இருக்கு. ஆமாம் உங்க அம்மா அப்பா எங்கே? ஆத்திலே யாருமே இல்லையா?”

“இல்லை. அவாளெல்லாம் வெளியிலே போயிருக்கா. நான் இன்னும் உன்னை பத்தி அவாகிட்டே சொல்லலை. சீக்கிரமே சொல்லிடுவோம் கவலைப் படாதே” என்றபடி அவளை தன்னோடு சேர்த்துக்கொண்டான் சரவணன்..

ஆஃபிஸை விட்டு கிளம்பும் போது அப்பாவை ஏமாற்றுகிறோமே என்ற குற்ற உணர்ச்சி கொஞ்சம் உறுத்திக்கொண்டிருந்தது அவளை. இப்போது அவன் மீது மொத்த நம்பிக்கையையும் வைத்து, அவனை கணவனாகவும், இதை அவள் வாழப்போகும் வீடாகவும் நினைத்துக்கொண்டு அவனோடு அப்படியே ஒட்டிக்கொண்டு சோபாவில் புதைந்து அமர்ந்தாள் வேதா.

அப்போது அவள் கண்ணில் பட்டது எதிரே சுவற்றில் இருந்த அந்தப் புகைப்படம்.

கோதையின் வெட்கத்தை ரசித்தே விட வேண்டுமென்ற தவிப்பிலும் ஆர்வத்திலும் கோகுல் அமர்ந்திருக்க, மெல்ல மெல்ல நடந்து வந்தாள் கோதை. அவன் சொன்ன பச்சை நிற புடவையும், காதில் ஊஞ்சலாடும் ஜிமிக்கிகளும் தலையில் முல்லைச்சரமுமாய் வந்து அவள் நின்ற நொடியிலேயே மொத்தமாக அவளுக்குள் விழுந்துவிட்டிருந்தான் கோகுல்.

“இப்படி உட்காருமா” தேவகி சொல்ல “இ....ல்..ல பரவா....யில்லை இரு....க்கட்டும்.”

விழி நிமிர்த்தாமல் மெல்ல சொன்னாள் கோதை. அவன் பார்வை அவளையே உரசிக்கொண்டிருப்பதை நன்றாக உணர முடிந்தது அவளால்.

வெட்கமும், சந்தோஷமும் உள்ளுக்குள் போட்டிப்போட எல்லாவற்றையும் தாண்டி இயல்பாக சுவாசித்து விட போராடிக்கொண்டிருந்த, அவளின் அந்த தருணத்தை, அப்படியே கைப்பேசியில் புகைப்படமாக பதித்துக்கொள்ள விழைந்தது அவனது உள்ளம். தனது கைப்பேசியை மெல்ல வெளியில் எடுத்தான் அவன்.

அவளின் அப்பாவுக்கு அங்கே என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. அதைப் புரிந்துக்கொண்டவாரக

“என் அண்ணாக்கு ஒரே பையன் முரளி. அவனும் எங்க அண்ணா மாதிரியே லாயர். அவனுக்கும் கல்யாணத்துக்கு பார்த்திண்டு இருக்கா. ஏனோ எந்த பொண்ணு ஜாதகமும் அவனுக்கு சரியா பொருந்தி வரலை. தெரிஞ்சவா மூலமா உங்க பெரிய பொண்ணு ஜாதகம் கிடைச்சிருக்கு. ரெண்டு ஜாதகமும் ரொம்ப நன்னா பொருந்தி வருதாம். அதனாலே அவளை முரளிக்கு பார்க்கலாம்னு ஒரு எண்ணம் அவன் ஊரிலே இல்லை. இல்லேன்னா கூட்டிண்டு வந்திருப்போம்” சொன்னார் வாசுதேவன்.

ங்கே கோகுலின் வீட்டில் அந்தப் புகைப்படத்தை பார்த்து புருவம் உயர்த்தினாள் வேதா. தேவகியும் வாசுதேவனும் இணைந்து இருக்கும் புகைப்படம் அது.

எழுந்து அதன் அருகில் சென்று பார்த்து விட்டு “இவா ரெண்டு பேரும் யாரு?” சரவணனைப் பார்த்துக்கேட்டாள் அவள்.

“இவா ரெண்டு பேரும்தான் உன் மாமானார் மாமியார் நன்னா பார்த்துக்கோ” கண் சிமிட்டி சொன்னான் சரவணன். அடுத்த நொடி அவன் பார்வை கூடத்தை துழாவியது.. எங்கேயாவது கோகுலின் புகைப்படம் தென்பட்டு விடப்போகிறதே என்ற தவிப்புடன். எதுவும் தென்படவில்லை அங்கே.

அப்போது வெளியே வந்தார் லக்ஷ்மி மாமி. “வாப்பா.. வா.. வா... நீ வருவேன்னு கண்ணன் சொன்னான்” என்றார் அவர்.

ப்படி என்றால் கோகுலுக்கு? முகத்தில் வியப்பின் ரேகைகள் படர கோதையை ஒரு புகைப்படம் எடுத்துவிட மும்முரமாக முயன்று கொண்டிருந்தவனின் பக்கம் திரும்பினார் ஸ்ரீதரன்.

சட்டென கலைந்தவன் ஒரு நொடி அவரை பார்த்துவிட்டு சுதாரித்து “என்ன அப்படிப் பார்க்கறேள்? நேக்கு யாருன்னு பார்க்கறேளா?” என்றான் அவர் மனம் படித்தவனாக நேக்கு எப்பவும் கோதைதான்” என்று அவள் பக்கம் திரும்பியவன் சொல்லியே விட்டிருந்தான் “நேக்கு கோதையைதான் பிடிக்கும். கோதையை மட்டும்தான் பிடிக்கும். என்னடா கோதைப்பொண்ணு?”

அவளே எதிர்ப்பார்க்கவில்லை இதை. உடல் மொத்தமும் சிலிர்த்துபோக நிமிர்ந்தாள் அவள். அவன் சட்டென அவளைப்பார்த்து கண் சிமிட்ட அவள் முகமெங்கும் ஒரே நொடியில் பூத்த பலநூறு வெட்க பூக்களை அப்படியே பதித்துக்கொண்டது அவனது கைப்பேசி.

“டேய்... டேய். .போறும்டா” சிரித்தபடியே சொன்னார் அவன் பெரியம்மா யசோதை. “கல்யாணத்துக்கு அப்புறமும் கொஞ்சம் வேணும். மிச்சம் வெச்சுக்கோ”

அந்த வீடு முழுக்க சிரிப்பலையும் சந்தோஷமும் பரவ, பேச்சை தொடர்ந்தார் வாசுதேவன்.

“எங்களுக்கு பணம், அந்தஸ்து இதெல்லாம் பெரிய விஷயம் இல்லை. பெருமாள் எங்களுக்கு நிறையவே கொடுத்திருக்கார். எங்காத்துக்கு வர மாட்டுப்பொண்கள் ,நல்ல ஒழுக்கமா, எங்களோட பாசமா இருக்கிற பெண்களா இருந்தா போறும். நீங்க என்ன சொல்றேள்.?”

மாமியின் திடீர் அழைப்பில் கொஞ்சம் திடுக்கிட்டவன் சுதாரித்துக்கொண்டான். 'வேதாவை ஏற இறங்க பார்த்தார் மாமி. “யாருப்பா இந்த பொண்ணு?”

“ஃப்ரெண்ட் மாமி. ஃப்ரெண்ட்” என்றான் சரவணன்.

“ஓ! உட்காரும்மா நோக்கும் காபி கொண்டு வரேன்” உள்ளே போய்விட்டார் மாமி.

“யாரிந்த மாமி?”. மெல்லக் கேட்டாள் வேதா.

“நம்மாத்து சமையல்கார மாமி”

“யாரோ கண்ணன் அப்படின்னு சொன்னாளே. அது யாரு?”

“அவனா? அவன் என் ஃப்ரெண்ட். அவனை விட்டுதான் நான் வருவேன்னு ஃபோன் பண்ண சொன்னேன்” கூசாமல் பொய் வெளியே வந்தது.

“அப்படியா?” என்றபடி கூடத்தை ஒட்டி இருந்த அந்த பூஜை அறையை நோக்கி சென்றாள் வேதா. அங்கே உள்ளே புல்லாங்குழலுடன் சிரித்துக்கொண்டிருந்தான் அந்த மாயக்கண்ணன். அவனையே ரசித்தபடி சில நொடிகள் நின்று விட்டாள் வேதா. அவளருகில் வந்து நின்றான் சரவணன். சில நொடிகளுக்கு மேல் அவனால் அங்கே நிற்க முடியவில்லைதான். மனதிற்குள் ஏதோ ஒன்று உறுத்தித் தீர்க்க அங்கிருந்து மெல்ல நகர்ந்தான் சரவணன்.

ங்கே கோதையின் வீட்டில் இரண்டு நிச்சியதார்த்ததுக்குமான தேதி குறிக்கப்பட்டுக்கொண்டிருந்தது. தனது பெரிய மகளின் மீதும் அந்த தந்தைக்கு அளவு கடந்த நம்பிக்கை. தனது வார்த்தையை தட்ட மாட்டாள் என்ற நம்பிக்கை. அதே நம்பிக்கையை வந்தவர்களுக்கும் கொடுத்து விட்டிருந்தார் தந்தை.

ங்கே மாமி கொடுத்த காபியை ருசித்துவிட்டு கிளம்பத் தயாரானார்கள் இருவரும்.

“என்னப்பா இப்போதான் வந்தே அதுக்குள்ளே கிளம்பறியே?” கேட்டார் மாமி.

”இல்லை மாமி இவளை டிராப் பண்ணிட்டு வரேன். நீங்க சாப்பாடு ரெடி பண்ணி வைங்கோ” இயல்பாக சொல்லிவிட்டு அவளை அழைத்துக்கொண்டு காரை நோக்கி நடந்தான்.

எந்த சந்தேகமும் எட்டிக் கூட பார்க்கவில்லை வேதாவுக்கு.

மறுபடியும் அந்த காரை கிளப்பிக்கொண்டு நகர்ந்தான் சரவணன். அவனுக்குள்ளே பரவிக்கொண்டிருந்தது ஒரு திருப்தி. தான் நினைத்ததை சாதித்து விட்ட ஆனந்தம். அவளுக்கு இனிமேல் தன் மேல் சந்தேகம் வராது என்ற தைரியம். ஒரு சந்தோஷ புன்னகையுடன் காரை செலுத்திக்கொண்டிருந்தான் சரவணன்.

அறியவில்லை அவன். அவன் செய்யும் தப்புகளுக்கெல்லாம் சாட்சி கூறத் தாயராக, கையில் குழலுடன் கோகுல் வீட்டு பூஜையறையில் காத்திருக்கும் அந்த மாயக்கண்ணனை பற்றி அறியவில்லை அவன்.

தொடரும்
 

Rajam

Well-known member
Member
சரவணன் பண்ற தப்புக்கு
எல்லாம் சாட்சி கூற தயாராக இருக்கும் கண்ணன்,
சீக்கிரமே அதை நிறைவேத்தனும்.
வேதா தப்பிக்கனும்.
 

kothaisuresh

Well-known member
Member
பெருமாள சாட்சி வைச்சுண்டு தப்பு பண்றான் பகவான் தான் வேதாவ காப்பாத்தணும்
 

பிரிய நிலா

Well-known member
Member
முரளியை பத்தி நீங்க சொல்லி இருந்தீங்க. இப்போ தான் இன்ட்ரோ கொடுத்து இருக்கீங்க..

வேதாக்கு சரவணனின் பொய்முகம் தெரியுமா..

சரவணனின் பொய் கோகுலின் வாழ்க்கையில் புயலை உண்டாக்குமா..

பார்க்கலாம்..
வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபி..
 

Vathsala Raghavan

✍️
Writer
சரவணன் பண்ற தப்புக்கு
எல்லாம் சாட்சி கூற தயாராக இருக்கும் கண்ணன்,
சீக்கிரமே அதை நிறைவேத்தனும்.
வேதா தப்பிக்கனும்.
Rajam ma. நீங்க படிச்சு தொடர்ந்து காமெண்ட் போடுவது எனக்கு ரொம்ப பெரிய சந்தோஷம். Thanks a.lot
 

Vathsala Raghavan

✍️
Writer
பெருமாள சாட்சி வைச்சுண்டு தப்பு பண்றான் பகவான் தான் வேதாவ காப்பாத்தணும்
Kothai maa.உங்க கமெண்ட் எனக்கு எப்பவுமே ரொம்ப சந்தோஷம் குடுக்கும். ஒவ்வொரு எபிக்கும் கருத்து சொல்வதற்கு ரொம்ப நன்றி மா
 

Vathsala Raghavan

✍️
Writer
முரளியை பத்தி நீங்க சொல்லி இருந்தீங்க. இப்போ தான் இன்ட்ரோ கொடுத்து இருக்கீங்க..

வேதாக்கு சரவணனின் பொய்முகம் தெரியுமா..

சரவணனின் பொய் கோகுலின் வாழ்க்கையில் புயலை உண்டாக்குமா..

பார்க்கலாம்..
வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபி..
Thank u so.much பிரிய நிலா. உங்க பெயர் அழகா இருக்கு. அடுத்த எபி முரளி வந்திருவார் ன்னு நினைக்கிறேன். தொடர்ந்து படிச்சு கருத்து சொல்வதற்கு மனம் நிறைந்த நன்றிகள் மா
 

Latest profile posts

மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு
முள்ளில்லா முல்லைப்பூ இன்னும் இரண்டு எபியில் முடிந்துவிடும். கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணிவரை மட்டுமே இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீட்டிக்கப்படமாட்டாது. படிக்க நினைப்பவர்கள் விரைவில் படித்துவிடுங்கள். லைக்கோ கமெண்டோ சொல்லிட்டும் போங்க.

New Episodes Thread

Top Bottom