• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே 05

Vathsala Raghavan

✍️
Writer
யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே 05

இந்த 29 வருட வாழ்கையில் இப்படி எதற்காகவும் தவித்ததில்லை கோகுல். “என்னதான் சொல்லப்போகிறாள் கோதை?” அவளையே பார்த்திருந்தான் அவன்.

நடந்துக்கொண்டிருந்த மூவருமே நின்றுவிட, அம்மாவின் கேள்வியில் திகைத்துப் போய் முகம் நிமிர்த்தினாள் கோதை.

“நானா? நா..ன்.. எப்படி?” வேகமாக இடம் வலமாய் தலை அசைத்தாள் அவள். திசைக்கொன்றாய் ஆடின அவள் காதில் தொங்கிக்கொண்டிருந்த தொங்கட்டான்கள்.

“ஏன்? நோக்கென்ன? நன்னா, லட்சணமா இருக்கியேடி மா... எங்காத்துக்கு மாட்டுப்பொண்ணா வந்துடு”

“இல்..லை மாமி. இவர் நிறைய படிச்சிருக்கார் நா...ன் நா..ன் பிளஸ் டூ கூட முடிக்கலையே நான் எப்படி? . வே... வேண்டாம்” கெஞ்சலும், படபடப்பும் நிரம்பிய வார்த்தைகள் அவசரமாய் வெளியேற, திரும்பி அவன் முகம் பார்த்து

“வேண்டாம் நான் உங்களுக்கு வேண்டாம்' என்றாள் மெல்லிய குரலில். “வேறே யாரவது நல்ல பொண்ணா....”

அவளை முடிக்க விடவில்லை அவன். முகம் கொஞ்சமாய் வாடிப்போக , தோல்வியில் ஊறிப்போன பாவத்துடன் அவள் பேசியதை தாங்கிக்கொள்ளவே முடியவில்லை அவனால்.

“கல்யாணம்கிறது மனசு சம்மந்தப்பட்ட விஷயம் அதுக்கும் படிப்புக்கும் என்ன சம்மந்தம்னு நேக்கு புரியவேயில்லை. வெளிப்படையா சொல்றேன். உன்னை நேக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு. வேறே எதை பத்தியும் நேக்கு கவலையே இல்லை. புரியறதா?” கோவிலென்றும் பாரமால் பட் பட்டென வெடித்தான் அவன்.

“டேய்... டேய்... ஏன்டா? இரு” இடைப்புகுந்தார் அம்மா. “நான் பேசறேன் இரு என்றவர் கோதையின் முகத்தை தொட்டு நிமிர்த்தி சொன்னார்

“அவனுக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு. நோக்கும் அவனை பிடிச்சிருக்கோன்னோ?”

“ம்” அவனையே பார்த்தபடி சின்ன தலையசைப்பு அவளிடம்.

அவளது தலையசைப்பிலேயே தணிந்து போனவன் தனது கோபமான முக பாவத்தை மட்டும் மாற்றிக்கொள்ளவே இல்லை.

“கல்யாணம் பண்ணிண்டா நீ கோகுலா நன்னா பார்த்துப்பியோன்னோ?”

“ம்” புன்னைகையுடன் சொன்னாள் அவள்.

“இதுக்கு மேலே வேறே என்ன வேணும்.? சரின்னு சொல்லிடு அவன் கிட்டே. பாரு கோபமா இருக்கான் பாரு”

அவள் பதில் சொல்லாமல் அவனையே பார்த்திருக்க “நீ இந்த சினிமாவெல்லாம் பார்ப்பியா?” கேட்டார் அம்மா.

“ம்”

“அதிலெல்லாம் வர மாதிரி கல்யாணம் பண்ணிண்டா உன்னைத்தான் பண்ணிப்பேன். இல்லைனா காலம் பூரா இப்படியே இருப்பேன்னு சொல்லிண்டு இருக்கான். அவன் கல்யாணமே பண்ணிக்காம இருந்தா நோக்கு பரவாயில்லையா?”

“அதெல்லாம் இல்லை” பதில் கோகுலிடமிருந்து வந்தது. “இன்னொரு வாட்டி இவ நான் படிக்கலை கொள்ளலைன்னு ஏதானும் பேசட்டும், இன்னொரு பொண்ணை கூட்டிண்டு வந்து இவ முன்னாடியே கல்யாணம் பண்ணிக்கறேனா இல்லையா பாரு” அவன் முகத்தில் அவன் இதுவரை கஷ்டப்பட்டு இழுத்து பிடித்துக்கொண்டிருக்கும் கோபத்தின் சாயல்..

“அச்சச்சோ வேண்டாம் வேண்டாம் சீக்கிரம் சரின்னு சொல்லிடு” சிரித்துக்கொண்டே சொன்னார். அம்மா.

“நேக்கு அப்பா....கிட்டே... கேட்....கணும்...” தயங்கித் திணறி வெளி வந்தன கோதையின் வார்த்தைகள்.

“நானும், கோகுலோட அப்பாவும் உங்காத்துக்கு வந்து அப்பாகிட்டே பேசுவோம். அதுக்கு முன்னாடி நீ ஓ.கே சொல்லணும். அதுதான் முக்கியம் இப்போ சொல்லு. ஒகேவா?”

இமை குடைகள் தாழ, இதழ்களில் வெட்கம் கலந்த மென் சிரிப்பு ஓட, “ம்” என்றாள் கோதை. அம்மாவின் முகம் மலர்ந்தது. மகன் விருப்பம் நிறைவேற கொஞ்சமாக வழி வகுத்த சந்தோஷம். நேற்று கிடைத்த ஏமாற்றத்தில் வந்த மனமாற்றத்தில் ஏற்பட்ட நிறைவு.

இதழோரம் பூக்க காத்திருந்த புன்சிரிப்பை கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டான் கோகுல். அவனது கோப பாவம் மாறவே இல்லை. மூவரும் நடந்தனர். அம்மா ஏதேதோ பேசிக்கொண்டே வர, அவளது விழிகள் மட்டும் அவனை உரசி உரசி மீண்டுக்கொண்டே இருந்தன.

“உங்க ஆம் எங்கிருக்கு?” கோவிலின் வாசலுக்கு வந்து செருப்பை அணிந்த படியே கேட்டார் அம்மா.

“இங்கிருந்து நடந்து போற தூரம் தான். ஆத்துக்கு வாங்கோ”

அவள் கன்னம் வருடினார் அம்மா. “சீக்கிரமே ஒரு நல்ல நாள் பார்த்து மாமாவையும் அழைச்சிண்டு வரேன். நீ இப்போ காரிலே ஏறிக்கோ. உன்னை ஆத்து வாசலிலே விட்டுட்டு போறேன்.”

காரை செலுத்திக்கொண்டிருந்தான் கோகுல். காரின் பின் சீட்டில் அமர்ந்திருந்தாள் கோதை. அவனது சின்ன சிரிப்பையே எதிர்ப்பார்த்து காத்துக் கொண்டிருந்தவளின் தவிப்பை அவனுக்கு காட்டிக்கொண்டிருந்தது காரின் முன் பக்க கண்ணாடி.

அவள் வீட்டை அடைந்து அவள் கீழே இறங்கி, அம்மாவிடம் விடைப் பெற்றுக்கொண்டு அவன் பக்கம் வந்தாள் கோதை . ஸ்டியரிங்கின் மீது விரல்களால் தாளமிட்டபடியே அமர்ந்திருந்தவன், அவளை நோக்கி பார்வையைத் திருப்பினான்.

படபடக்கும் கண்களுடன் அவள் அவனையே பார்த்திருக்க, மெது மெதுவாய் இதழ்கள் விரிய, அவளைப்பார்த்து கண் சிமிட்டி சிரித்தான் கோகுல்.

“இனிமே இப்படி பேசக்கூடாது சரியா?”

இமை ஓரத்தில் சட்டென பூத்த ஒற்றை நீர்த்துளியுடன், தலை குனிந்து அழகாய் சிரித்தபடி தலையசைத்தாள் அவள். அவளிடம் கையசைத்து விடைப்பெற்று கிளம்பினர் அம்மாவும் மகனும். இதுவரை அனுபவித்திராத ஏதோ ஒரு சிலிர்ப்பு உடலெங்கும் பரவ வீட்டுக்குள் ஓடினாள் கோதை.

தே நேரத்தில் அலுவலகத்தில் தனது தோழி கவிதாவுடன் கான்டீனில் இருந்தாள் வேதா. கடந்த மூன்று நாட்களில் ஐந்தாவது முறையாக அவளை எச்சரித்து கொண்டிருந்தாள் கவிதா.

“எனக்கென்னமோ அந்த கோகுலை பார்த்தா சந்தேகமா இருக்கு வேத்ஸ். நீ கண்ணை மூடிட்டு அவனை நம்பறியோன்னு தோணுது.”

“இல்லைப்பா... அவர்”

“ரொம்ப நல்லவரா தான் தெரியறார் இதைத்தானே சொல்லப்போறே? ஸீ நான் ஜி.கே ஃபேமிலி பத்தி கேள்விப்பட்டிருக்கேன். இவன் அந்தக் குடும்பத்தை சேர்ந்தவன் மாதிரித் தெரியலை”

ஒரு சின்ன திடுக்கிடல் வேதாவிடம்.

“இந்த கோகுல், அவனோட பேசுற ஸ்டைல், இது எல்லாத்தையும் பார்க்கும் போது எனக்கு என்னமோ சந்தேகமா இருக்கு வேதா. இன்னொண்ணு அவங்க பரம்பரை பணக்காரங்க. திஸ் ஃபெலோ டஸ்ஸின்ட் சீம்ஸ் டு பி ஸோ. பார்த்து நடந்துக்கோ. அவ்வளவுதான்” சொல்லிவிட்டு எழுந்து விட்டாள் கவிதா.

அவள் சென்ற பின்பும் உழன்றன வேதாவின் எண்ணங்கள். ஆனால் அவர்கள் இருவரும் ஒரு விஷயத்தை கவனிக்கத் தவறி இருந்தனர். இவர்கள் பேசியதை அவர்கள் பின்னால் அமர்ந்திருந்த விக்கி கேட்டுக்கொண்டிருந்தான் என்பதை உணரத் தவறி இருந்தனர் இருவரும்.

அடுத்த சில நிமிடங்களில் அவர்கள் இருவரும் பேசிய வார்த்தைகள் அட்சரம் பிசகாமல் சரவணனிடம் ஒலிபரப்பு ஆகியிருந்தன.

கோகுலும் அம்மாவும் வீட்டை அடைந்த போது வீட்டுக்குள் அமர்ந்திருந்தனர் அவனது பெரியப்பா நந்தகோபாலனும் பெரியம்மா யசோதாவும். அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தார் அப்பா.

பெரியப்பா பிரபலமான வக்கீல். தமிழ் நாட்டில் அவருக்கு நிறையவே செல்வாக்கும் மரியாதையும் உண்டு. அப்பாவுக்கு தனது அண்ணன் மீது மரியாதையும் பாசமும் அதிகம். பெரிய முடிவுகள் எடுக்கும் சந்தர்ப்பங்களில் பெரியப்பாவை கலந்துக்கொள்ளாமல் இருந்ததில்லை அப்பா.

அம்மாவுக்கு வீட்டு வேலைகளில் உதவி செய்யும் வரலக்ஷ்மி மாமி அவர்களுக்கு காபி கொடுத்துவிட்டு அகன்றார். வழக்கமான நலம் விசாரிப்புகளுக்கு பிறகு உள்ளே சென்று விட்டிருந்தான் கோகுல்.

சில நிமிடங்கள் கழித்து மெல்ல கோதையைப் பற்றிய பேச்சை துவக்கினார் தேவகி.

ந்தேக விதைகள் மனதிற்குள் வீழ்ந்திருக்க அன்று மாலை சரவணின் காரில் ஏறவில்லை வேதா. வேலை இருப்பதாக கூறி அவனை திருப்பி அனுப்பி விட்டிருந்தாள் அவள். அவளை தனது வழியில் மறுபடியும் இழுப்பதற்கான யோசைனையிலேயே இருந்தான் சரவணன்.

றுநாள் மதியம் மணி பன்னிரெண்டரையை தாண்டிக்கொண்டிருந்தது. ஒலித்தது கோதை வீட்டு அழைப்பு மணி.

அவள் வந்து கதவைத் திறக்க, அவளை பார்த்து தலை சாய்த்து சிரித்தான் வாசலில் நின்றிருந்த கோகுல்

“ஹாய் “

“அச்சச்சோ” அவனை எதிர்ப்பார்க்காத அதிர்ச்சியில் வாய்விட்டுச் சொன்னாள் கோதை.

“அடியேய்... ஆத்து மாப்பிள்ளை முதல் முதலா ஆத்து வாசலிலே வந்து நிக்கறேன். ஆரத்தி எடுக்காம அச்சச்சோங்கறே?” என்றபடியே செருப்பை கழற்றிவிட்டு உள்ளே நுழைந்தான் கோகுல்.

“அப்பா ஆத்திலே இல்லை” என்றபடியே அவன் பின்னால் நடந்தாள் அவள்.

“தெரியுமே. இப்போதான் நான் வரச்சே வடபழனி பஸ்லே ஏறி எங்கேயோ போனார். பார்த்துட்டுதான் வந்தேன். வர எப்படியும் ரெண்டு மணி நேரமாவது ஆகும்” ஹாலில் இருந்த சோபாவில் சென்று வசதியாக அமர்ந்துக்கொண்டான் கோகுல்.

'இப்போ உங்களுக்கு என்ன வேணும்?'

“ம்? வாசல் கதவைத் தாழ்ப்பாள் போட்டுட்டு வா நேக்கு என்ன வேணும்னு சொல்றேன்”

“ம்?”

“கதவை சாத்திட்டு வா” ஆணையிட்டான் அவன்.

அவள் பேசாமல் சென்று கதவை சாத்திவிட்டு உள்ளே வர.

“ஆத்திலே இன்னைக்கு என்ன தளிகை (சமையல்)?” என்றபடி சமையலறைக்குள் நுழைந்தவன், வெகு இயல்பாக பாத்திரங்களை திறந்துப் பார்த்தான்.

“ஆஹா.... உருளைக்கிழங்கு பொடிமாஸ், சாத்துமது (ரசம்), இதை விட வேறே என்ன வேணும் மனுஷனுக்கு.? கை கால் அலம்பிண்டு வரேன் இலை போடு”

கை கழுவிக்கொண்டு அவன் உள்ளே வர கையில் இலையுடன் நின்றிருந்தாள் கோதை .

“இன்னும் இலை போடலையா நீ?”

'தரையிலேயா? தரையிலே உட்கார்ந்து சாப்பிடுவேளா?'

“ஏன்? சாப்பிட்டா என்ன? அங்கே நம்மாத்திலே டேபிள் உட்கார்ந்து சாப்பிட்டு சாப்பிட்டு போர் அடிச்சு போச்சு”. என்றபடி தரையில் அமர்ந்தான் கோகுல்.

இலை போட்டு அவள் பரிமாற, இலையை சுற்றி நீர் சுற்றி மந்திரம் ஜபித்துவிட்டு சாப்பிடத் துவங்கினான் கோகுல்.

சுவற்றில் சாய்ந்து நின்றுக்கொண்டு இமைக்க மறந்து அவனையே ரசித்திருந்தாள் அவள். கோடீஸ்வரன் அவன். கொஞ்சம் கூட அகங்காரம், திமிர் எதுவுமே இல்லாமல் வெகு இயல்பாய் அவன் பழகும் விதத்தில் அவள் மனம் வழுக்கிக்கொண்டு அவனிடத்தில் சென்று தஞ்சமடைந்துக் கொண்டிருந்தது.

ரசித்திருந்தாள், அவனையே ரசித்திருந்தாள் அவள். ஒரு கட்டத்தில் கண்களை நிமிர்த்தி அவளை பார்த்தவன் என்ன தோன்றியதோ?

“கோதைப் பொண்ணு” என்றான் மென் குரலில்.

“ம்? “ கலைந்தாள்.

“இப்படி என் பக்கத்திலே வந்து உட்காரு'

“எதுக்கு?”

“நீ வந்து உட்கார்ந்தாதான் நான் சாப்பிடுவேன்.”

மெல்ல நடந்து அவனுருகில் வந்து அமர்ந்தாள் சில நொடிகள் யோசித்தவன் தனது இலையிலிருந்து கொஞ்சம் சாதத்தை கையிலெடுத்து அவளை நோக்கி நீட்டினான்.

இமை தட்டவில்லை அவள். “நான் குடுத்தா சாப்பிட மாட்டியா?”

அடுத்த நொடி வாய் திறந்து வாங்கிகொண்டாள் அதை. பல வருடங்களுக்கு முன் அம்மாவின் கையால் சாப்பிட்ட ருசியை நினைவு படுத்தியது அந்த ஒரு வாய் சாதம். நிறைவும், நெகிழ்வுமாக அவனை அவள் பார்க்க

“லவ் யூ ஸ்வீட் ஹார்ட்” என்றான் உயிர் வருடும் தொனியில்.

பதில் சொல்லவில்லை அவள்.

''ஏதாவது பதில் சொல்லு கோதைப் பொண்ணு.” என்றான் அவள் கண்களை பார்த்தபடியே.

ஒன்றுமே பேசாமல் மறுபடி வாய் திறந்தாள் அவள். இன்னொரு வாய் ஊட்டி விட்டான் அவன். ரசித்து ருசித்து உண்டாள் அதை. அங்கே ஒரு நிறைவான மௌனம் பரவ, உணவோடு சேர்ந்து அவன் நேசமும் அவளுக்குள் இறங்கிக்கொண்டிருந்தது.

சாப்பிட்டு முடித்து, அவளிடம் தலை அசைத்துவிட்டு அவன் கிளம்பும் கிளம்பும் வரை எதுவும் பேசிக்கொள்ளவில்லை இருவரும். அவனது பைக் கிளம்பி பறந்து செல்ல, நடந்த நிகழ்வுகளில் கரைந்து போய் சில நிமிடங்கள் அப்படியே நின்றிருந்தாள் கோதை.

ரண்டு மூன்று நாட்கள் கடந்திருந்த நிலையில் அன்று காலை பதினோரு மணிக்கு ஸ்ரீதரன் வாத்தியாரின் கைப்பேசி ஒலித்தது..

இரண்டு நாட்களாகவே அப்பாவின் கைப்பேசி ஒலிக்கும் போதெல்லாம் 'அழைப்பது அவர்களாக இருக்குமோ?' என படபடக்கும் கோதைக்கு. அப்பாவிடம் எதுவும் சொல்லிக்கொள்ளவும் முடியவில்லை அவளால்.

அப்பா உள்ளே இருக்க, மேஜையின் மீது ஒலித்துக்கொண்டிருன்தது அது. ஓடி வந்தாள் கோதை. 'வாசுதேவன்' என்று ஒளிர்ந்தது திரை. இனம் புரியாத சந்தோஷமும், உற்சாகமும் அவளுக்குள்ளே பொங்க, முகத்தில் ஓடிய கொஞ்சமான வெட்க ரேகைகளுடன் , கைப்பேசியை எடுத்துக்கொண்டு அப்பாவை நோக்கி ஓடினாள் கோதை.

“அப்பா ஃபோன் “

“ஃபோன்தானே மா. அதுக்கு ஏன் இப்படி ஓடி வரே?”

“இல்லைப்பா நின்னு போயிடுமோன்னு. எடுத்து பேசுங்கோ” படபடத்தன அவள் கண்கள்.

“சொல்லுங்கோ. சௌக்கியமா இருக்கேளா?” ஆரம்பித்தார் ஸ்ரீதரன் எதிர்முனையில் கோகுலின் தந்தை.

“பெருமாள் புண்ணியத்திலே நன்னா இருக்கோம். இன்னைக்கு நாங்க உங்காத்துக்கு வரலாம்னு இருக்கோம். உங்களுக்கு சௌகரியப் படுமா?”

“வாங்கோ வாங்கோ. பெரியவா நீங்களெல்லாம் எங்காத்துக்கு வர்றதுக்கு நான் புண்ணியம் பண்ணி இருக்கணும் வாங்கோ”

“நாங்களும், என் அண்ணா மன்னியும் வருவோம்”

“வாங்கோ ரொம்ப சந்தோஷம். ஏதானும் முக்கியமான சமாசாரமா?”

“எல்லாம் நல்ல விஷயம் தான். கல்யாண விஷயம் பேசலாம்னு வரோம். இன்னைக்கு சாயங்காலம் நாலு மணிக்கு உங்காத்திலே இருப்போம். உங்க பெரிய பொண்ணு வேதாவையும் ஆத்திலே இருக்க சொல்லுங்கோ” என்றார் வாசுதேவன்.

பேசி முடித்த அப்பாவுக்கு தலை கால் புரியவில்லை. உள்ளமெங்கும் ஆனந்த அதிர்வலைகள் பரவ அப்பாவையே பார்த்திருந்தாள் கோதை.

தனக்குள்ளே ஏதேதோ யோசித்தபடியே அப்பா அவளிடம் எதுவுமே சொல்லாமல் இருக்க பொறுத்துக்கொள்ள முடியாமல்

“என்னப்பா?” என்றாள் மென் குரலில்.

“அது மா வாசுதேவன் மாமாவாத்திலேர்ந்து கோகுலுக்கு உங்க அக்காவை பொண்ணு பார்க்க வரான்னு நினைக்கிறேன்”

உடல் மொத்தமும் ஒரு முறை குலுங்கி ஓய்ந்தது கோதைக்கு. “என்ன சொல்லிக்கொண்டிருக்கிறார் அப்பா?”

“அப்... அப்பா. அவா என்னப்பா சொன்னா?” ஏக்கமும் தயக்கமும் மட்டுமே இருந்தது அவள் குரலில்.

“நாங்க கல்யாண விஷயம் பேச வரோம். உங்க பெரிய பொண்ணையும் ஆத்திலே இருக்க சொல்லுங்கோன்னு சொன்னா. அப்படின்னா அவளை பொண்ணுப் பார்க்க வரான்னு தானேமா அர்த்தம்?”

கோதைக்கு என்ன பேசுவதென்றே புரியவில்லை. அதற்குள் வேதாவை கைப்பேசியில் அழைத்திருந்தார் அப்பா. அன்று வேதா கோபமாக பேசிய பிறகு அவளிடம் அதிகம் பேசாமல் இருந்தவர், இன்று சந்தோஷம் பொங்க அழைத்தார் அவளை.

அப்பாவின் எண்ணைப் பார்த்ததும் சட்டென அழைப்பை ஏற்றாள் வேதா. “அப்பா சொல்லுங்கோ”

“வேதா, நோக்கு வாசுதேவன் மாமாவைத் தெரியுமா மா?

“தெரியாது பா யாரு?”

“அவா அவா... மாம்பலத்திலே இருக்கா மா. பெரிய பணக்காரா. அவா பையனுக்கு உன்னை கேட்கலாம்னு முடிவு பண்ணி இருக்கா போலிருக்கு. இன்னைக்கு சாயங்காலம் நாலு மணிக்கு உன்னை பார்க்க வரேன்னு சொல்லி இருக்கா. நீ சீக்கிரம் ஆத்துக்கு வந்திடுமா” பேசிக்கொண்டே போனார் அவர்.

“ம்?... ஆங்... சரிப்பா...'”அழைப்பை துண்டித்தாள் வேதா.

பேசி முடித்து விட்டு மலர்ந்த முகத்துடன் கோதையை பார்த்தார் அப்பா.

“இது நல்ல படியா முடிஞ்சிடுத்துன்னா அப்பா ரொம்ப சந்தோஷமா இருப்பேம்மா. ரொம்ப நல்ல இடம். நம்ம தகுதிக்கு மீறின இடம்னாலும் அவாத்திலே எல்லாருமே ரொம்ப நல்ல மனுஷா. எப்படியாவது கஷ்டப்பட்டு இந்த கல்யாணத்தை முடிச்சிடணும்”

பட பட படவென பேசினார் அப்பா. அவரையே பார்த்துக்கொண்டு மௌனமாக நின்றிருந்தாள் கோதை.

“என்ன சொல்வதாம் அப்பாவிடம்.? கோகுலுக்கு என்னைதான் பிடித்திருக்கிறது என்று எப்படி சொல்வதாம் அவரிடம்? இன்னொன்றும் புரியவில்லை அவளுக்கு. அவர்கள் ஏன் அக்காவையும் வீட்டில் இருக்க சொன்னார்கள்? அங்கே ஏதாவது குழப்பம் நடந்திருக்குமா என்ன?”

“சரியாகிவிடும். கோகுல் வந்துவிட்டால் எல்லாம் சரியாகி விடும்.” தனக்குள்ளே சொல்லிக்கொண்டு தன்னை சமாதானப் படுத்திக்கொண்டாள் கோதை.

தே நேரத்தில் தனது அலுவலகத்தில் இருந்த வேதாவை கைப்பேசியில் அழைத்தான் சரவணன். இரண்டு மூன்று நாட்களாக அவனை தவிர்த்துக்கொண்டே இருக்கிறாள் அவள். அவளை சரியாக்குவது எப்படி? அவளை நம்ப வைப்பது எப்படி? என்று யோசித்துக்கொண்ட இருந்தவனுக்கு, இன்று காலையில் கல்லூரியில் இருந்த போது சட்டென ஒரு திட்டம் உதயமானது. விடுப்பு எடுத்துக்கொண்டு கிளம்பி விட்டிருந்தான் அவன்.

அழைப்பை ஏற்று “ஹலோ.” என்றாள் வேதா பல நூறு யோசனைகளுடன்.

“கீழே உனக்காக காரிலே வெயிட் பண்றேன் வா. உன்கிட்டே கொஞ்சம் பேசணும்”

“இல்லை... கொஞ்சம் வேலை.”

“ஹேய்.... நான் உன்னை பைத்தியமா லவ் பண்றேன்டி” உயர்ந்து ஒலித்தது அவன் குரல். “புரிஞ்சுக்க மாட்டியா. ஏன் என்னை விட்டு விலகி விலகிப் போறே தயவு செய்து கீழே வா”

அதற்கு மேல் மறுக்க முடியவில்லை அவளால். கீழே வந்து அவன் காரில் ஏறி அமர்ந்தாள் வேதா.

அவனை நிமிர்ந்து பார்க்காமல் தலை குனிந்தே அவள் அமர்ந்திருக்க அவள் முகத்தை நிமிர்த்தினான் அவன். “என் மேலே திடீர்னு என்ன கோபம் உனக்கு?அவன் ஆள் காட்டி விரல் அவள் நெற்றி தொடங்கி இதழ்கள் வரை கோடிட்டது. 'அழகா இருக்கிறவங்க கோபமேப் படக்கூடாது தெரியுமா?”

அவன் கையை தட்டி விட்டு திரும்பிக்கொண்டாள் வேதா.

“வேதா.... நீ நிஜமா எவ்வளவு அழகு தெரியுமா? சும்மா சினிமா ஹீரோயின் மாதிரி இருக்கே. கோடம்பாக்கம் போனா உன்னை அப்படியே அள்ளிப்பாங்க. நீ எனக்கு கிடைச்சேனா நான் ரொம்ப லக்கி “

அவளிடம் வெட்க சிரிப்பு. மறுபடியும் ஜெயிக்க ஆரம்பித்தான் அவன்.

“என்ன வேணும் நோக்கு?” என்றான் மெலிதான குரலில். அவன் பேசும் விதம் மாற மெல்ல விழி நிமிர்த்தினாள் வேதா. எல்லாம் விக்கி கற்றுக்கொடுத்த வித்தை.

“உன்னை இன்னைக்கு சாயங்காலம் எங்காத்துக்கு கூட்டிண்டு போகட்டுமா. அப்போ சந்தோஷமா இருக்குமா நோக்கு?” கேட்டான் சரவணன்.

வியப்புடன் பார்த்தாள் வேதா “ஆத்துக்கா? 'இல்லை...இன்னைக்கு சாயங்காலம்.”

“ஏன் வரமாட்டியா?' ஆராயும் பார்வை பார்த்தான் அவன் “இன்னைக்கு நாள் நன்னா இருக்காமே? கேள்விப்பட்டேன். அதான் நீ வாழப்போற ஆத்துக்கு உன்னை கூட்டிண்டு போலாம்னு நினைச்சேன். நீதான்டி நேக்கு எல்லாம். என்னை விட்டு விலகிப் போகாதே வேதா. என்னாலே தாங்கிக்க முடியாது. நீ இல்லைனா நான் செத்து போயிடுவேன். ப்ளீஸ்” வலை வீசுவதை நிறுத்தவில்லை அவன்.

“அய்யோ... ஏன் இப்படி எல்லாம் பேசறேள்?” விழுந்தாள் அவள்.

“அப்போ நீ வரேன்னு சொல்லு”

“சரி வரேன்.” என்றாள் வேதா. வீட்டுக்கு கூட்டி செல்கிறேன் என்கிறானே? அதில் பொய் இருக்குமா என்ன?” நம்பிக்கை பிறந்தது அவளுக்கு.

தொடரும்
 

Rajam

Well-known member
Member
அவன் வலையில் விழாம இருக்கனுமே வேதா.
சரவணன் எந்த ஆத்துக்கு கூட்டிப் போவான்.
அவளுக்கு தவறா ஏதும் நடந்திடக்கூடாது.
 

பிரிய நிலா

Well-known member
Member
என்ன நடக்குது.. ஐயோ கொஞ்சம் பயமா இருக்கு. கோதையோட நல்ல மனசுக்கு எதுவும் தப்பா நடக்கக் கூடாது
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் கதை 50வது எபி வரை போட்டாச்சு.

இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 20 போஸ்டட் டியர்ஸ்
காரிருள் சூழா காதலே... கதை லிங்க் பிப்ரவரி 23 அன்று இரவு 10 மணி வரை மட்டுமே தளத்தில் இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீடிக்கப்பட மாட்டாது‌‌ நண்பர்களே... அதனால் விரைவில் படித்துவிடுங்கள்.

WhatsApp Channel

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-காரிருள்-சூழா-காதலே.376/

New Episodes Thread

Top Bottom