• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே 03

Vathsala Raghavan

✍️
Writer
யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே 03
ஒரு வாரம் கடந்திருந்தது. வேதாவை தினமும் சந்திக்க ஆரம்பித்திருந்தான் சரவணன். சரியாக அவளது வேலை முடியும் நேரத்தில், காருடன் வந்து அவள் முன்னால் நிற்பது. அவளை பொறுப்பாக அழைத்து சென்று அவள் வீட்டு தெரு முனையில் விட்டு வருவதை அவனது வாடிக்கையாகி போனது.

அன்றும் அப்படித்தான் சரவணன் காரை செலுத்திக்கொண்டிருக்க அவனுருகில் அமர்ந்திருந்தாள் வேதா. நேரம் இரவு ஏழரை. இத்தனை நாட்கள் வரை எந்த ஆண் மகனுடன் இப்படி காரில் சென்றதில்லை அவள். அப்பா மனதிற்குள் வந்து வந்து போனார்.

“எதுக்கு இப்படி தினமும் வரீங்க? பெரிய பணக்காரர் நீங்க. உங்களுக்கு வேலையெல்லாம் நிறைய இருக்குமில்லையா?” மெது மெதுவாய் கேட்டாள் வேதா.

“ஆமாம் வேலை நிறையத்தான் இருக்கு. ஆனா தினமும் உன்னை பார்க்கணும்னு தோணுதே ஏன்? ஒரு வேளை நீ ரொம்ப அழகா இருக்கியே அதனாலே இருக்குமோ?” என்று அவன் ஓரக்கண்ணால் பார்த்தபடி கேட்க, அவனது முதல் அஸ்திரம் அவளை தாக்கியது.

“ம்? என்னது?” அவள் கண்களில் வெட்க கோடுகள்

அவளது முக பாவம் அவனுக்கு சின்னதான தைரியத்தை கொடுக்க “உண்மையைத்தான் சொல்றேன். உன் கண்ணையும் லிப்சையும் பார்க்கத்தான் தினமும் வரேன்னு வெச்சுக்கோயேன்.” கண் சிமிட்டியவன் அவள் கண்களுக்குள் பார்த்து சொன்னான் “நீ ரொம்ப அழகு வேதா. அதுவும் இந்த சாரீலே சான்சே இல்லை.”

தனக்கு சொந்தமில்லாத ஒரு ஆண் மகன் தன்னை வர்ணிக்கும் போது, 'என்னை பற்றி எனக்கு தெரியும். நீ யாரடா என்னை வர்ணிக்க?' என்று நேர்க்கொண்ட பார்வையுடன் கேட்டிருக்க வேண்டாமா அவள்? கேட்கவில்லை. அதற்கு பதிலாய் வெட்கத்தில் தாழ்ந்தன அவள் இமைகள். ‘ஒரு கோடீஸ்வரனுக்கு என்னை பிடிக்கிறதா?’ சின்னதான பெருமிதம் அவளுக்குள்ளே.

“நிஜமாத்தான் சொல்றேன் குட்டிமா. யு ஆர் பியூட்டிஃபுல்” கண்களை தாழ்த்தி சிரித்தாள் வேதா.

“அந்த வேதாவை மடக்குறது ரொம்ப ஈஸிடா. அவ கிட்டே போய், ஆம்பளைங்க ரொம்ப மோசம், பொண்ணுங்களை அடக்கியே வைக்குறாங்க, பெண்களுக்கு சுதந்திரமே இல்லை அப்படி, இப்படின்னு பேசு போதும். அப்படியே விழுந்திடுவா. உன்னை அப்படியே நம்பிடுவா” விக்கி சொன்ன வாரத்தைகள் சரவணனின் நினைவிலாடியது.

“சரி. நான் இப்போ ஃப்ரீதான் ஏதாவது ஹோட்டலுக்கு போலாம் எங்கே போலாம் சொல்லு?” மெதுவாக அடுத்த அம்பை கையிலெடுத்தான்.

“அய்யோ! அதெல்லாம் வேண்டாம். அப்பாக்கு தெரிஞ்சா கொன்னுடுவார்”

“ஏன்? ஏன்? இவ்வளவு படிச்சிருக்கே, லட்சம், லட்சமா சம்பாதிக்கற நீ நினைச்ச இடத்துக்கு போறதுக்கு கூட உனக்கு சுதந்திரம் கிடையாதா? பொண்ணுங்க என்னதான் சம்பாதிச்சாலும் நேரத்துக்கு வீட்டுக்கு வந்து கிட்சனுக்குள்ளே புகுந்துக்கணுமா? அவங்களுக்கு ஒரு ரிலாக்சேஷன் வேண்டாமா?” அம்பு அவளை சரியாக குறி பார்த்தது.

“இல்லை. எனக்கு அதெல்லாம் பழக்கமில்லை. செலவுக்கு கூட அப்பா கிட்டே கேட்டுதான் பணம் வாங்கிப்பேன்”

“அப்போ நீ ஃபிரண்ட்ஸ் கூட எங்கேயும் போனதே இல்லையா?” என்றான் குரலில் பூசிக்கொண்ட ஆதங்கதுடன்.

“ம்ஹூம்”

“ரிடிகுலஸ். திஸ் இஸ் ரிடிகுலஸ். கடைசியிலே உங்க அப்பாவும் பொண்ணுங்களை அடக்கி வைக்கிற சராசரி ஆம்பிளை தானா?”

அவளது முகத்தில் கொஞ்சம் மாற்றம் பரவ, அதை படித்து புரிந்துக்கொண்டவனாக “சாரி” என்றான். “ஏதோ மனசிலே பட்டதை சட்டுன்னு சொல்லிட்டேன். மத்தபடி உங்க அப்பாவை குறை சொல்லணும்னு இல்லை. இது பொண்ணுங்களை பத்தின என்னோட பல நாள் ஆதங்கம்” அவள் கண்கள் மெல்ல விரிந்தன.

“நீ மட்டும் என் பொண்டாட்டியா எங்க வீட்டுக்கு வந்தேன்னு வெச்சுக்கோயேன். உன்னை ஒரு வேலை செய்ய விட மாட்டேன். எல்லாத்துக்கும் ஆள் இருக்கு” அந்த அம்பும் தனது வேலையை சரியாக செய்து முடித்திருந்தது.

அவனது வார்த்தை ஜாலத்தில் கட்டுண்டவளாக ஏதேதோ வண்ணக்கனவுகளுடன் கண்களை தாழ்த்திக்கொண்டாள் வேதா.

“சரி வா. இன்னைக்கு ஒரு நாள் ஹோட்டல் போயிட்டு போவோம். என்னதான் சொல்றார் உங்க அப்பான்னு பார்ப்போம். ஏதாவது பிரச்சனைன்னா என் கிட்டே சொல்லு நான் பேசிக்கறேன்.” கார் பறந்தது.

அந்த பெரிய ஹோடேலில் அமர்ந்திருந்தனர் இருவரும். அந்த அரை குறை இருட்டில் அவளை உரசியபடியே அமர்ந்திருந்தான் சரவணன். கண்களால் அவளை பருகியபடியே காதோரத்தில் கிசுகிசுத்தான்

“யு ஆர் பியூட்டிஃபுல் மை பட்டர்ஃப்ளை”

சிலிர்த்து சிணுங்கினாள் அவள் “கோகுல். எனக்கு ரொம்ப பயமா இருக்கு. சீக்கிரம் போகலாம்”

“இரு இரு போகலாம்” அவள் தொங்கட்டனை ஆட்டி விட்டான். “எனக்கு இன்னும் கொஞ்ச நேரம் உன்னை பார்க்கணும். எனக்கு ஒரு டவுட். தினமும் பாலிலேயே குளிப்பியோ?”

“அய்யோ... ப்ளீஸ்...” அவள் கன்னத்தில் செவ்வரிகள்.

“கூடிய சீக்கிரமே வேதா யூ. எஸ். போகபோறாடா. விசா ப்ராசெசிங் நடந்திட்டு இருக்கு.” விக்கி சொன்ன வார்த்தைகள் அவன் காதில் ஒலித்தன. எப்படியாவது அவளுடன் நானும் கிளம்பி விடவேண்டும். கணக்கு போட்டது அவன் மனம்,

“இரு இரு ஒரே நிமிஷம். இந்த அழகு தேவதைக்கு ஏதாவது பரிசு கொடுக்கணுமே என்ன கொடுக்கலாம்? ம்?” என்று தேடியவனின் கண்ணில் பட்டது தனது கையில் இருந்த அந்த பிரேஸ்லெட். கண்ணன் அவன் கையில் அணிவித்த அந்த பிரேஸ்லெட்.

அவனது கையிலிருந்து அவள் கைக்கு இடம் மாறியது அது.

“போட்டுக்கோ. இதை பார்க்கும் போதெல்லாம் உனக்கு என் ஞாபகம் வரணும்.”

“ஜி.கே” என்ற எழுத்துகளுடன் அவள் கையில் பளபளத்தது அந்த பிரேஸ்லெட்.

“ரொம்ப காஸ்ட்லியா இருக்கும் போலிருக்கே?" கண்கள் மின்ன கேட்டாள் வேதா.

“எஸ். காஸ்ட்லி தான். சோ வாட்? இனிமே என்கிட்டே இருக்கறது எல்லாம் உனக்கு தான்” உலகமே தனது காலடியில் கிடக்கும் ஒரு உணர்வில் மிதந்து திளைத்துக்கொண்டிருந்தாள் வேதா.

அவளை அவளது தெரு முனையில் இறக்கி விட்டு காரை கிளப்பிக்கொண்டு நகர்ந்தான் சரவணன். அவன் மனம் குற்ற உணர்வில் கனத்தது. இப்படி ஒரு அப்பாவி பெண்ணை ஏமாற்றுகிறேனே!.

''என்னை மன்னிச்சிடு வேதா.” என்றான் வாய்விட்டு “சீக்கிரமே நம்ம கல்யாணம் நடக்கணும். அதுக்குதான் இதெல்லாம்.”

கையிலிருந்த பிரேஸ்லெட்டை கழட்டி தனது கைப்பையில் போட்டுக்கொண்டு தனது வீட்டுக்குள் நுழைந்தாள் வேதா. நமது கோதையின் அக்கா வேதா. அவள் வருகைக்காகவே சாப்பிடாமல் காத்திருந்தனர் கோதையும், அப்பாவும்.

“நான் சாப்பிட்டாச்சு. நீங்க ரெண்டு பெரும் சாப்பிடுங்க.” படுக்கை அறைக்குள் நுழைய போனவளை நிறுத்தியது அப்பாவின் கேள்வி

“இது என்னமா புது பழக்கம்.? யாராத்திலே சாப்பிட்டே?”

“நான் ஹோட்டல்லே சாப்பிட்டேன். போறுமா? எல்லாத்தையும் உங்களண்டை கேட்டுண்ட்டு தான் பண்ணனுமா? நான் நினைச்சதை சாப்பிடறதுக்கு கூட சுதந்திரம் கிடையாது இந்த ஆத்திலே. வேலை முடிஞ்சதும் ஆத்துக்குள்ளே ஓடி வந்து புகுந்துண்டு உங்களுக்கு ஊழியம் பண்ணனும்.”

தன்னை பெற்றவர்களுக்கும், உயிரான சொந்தங்களுக்கும் உண்மையாக இருப்பதுவும், தனது வீட்டு வேலைகளை தான் செய்வதும் அடிமைத்தனமா? யோசிக்க தெரியவில்லை வேதாவுக்கு. அவளது வார்த்தை வீச்சில் அப்பாவினுள்ளே அதிர்வலைகள்

“சம்பாதிக்கிறது அத்தனையும் உங்க கிட்டே தானே கொண்டு வந்து கொட்டறேன். அதுக்கப்புறமும் என்னை நிம்மதியா விட மாட்டேங்கறேளே. அடிமையாவே வெச்சிருக்கேளே ஏன் பா?” அவன் கொஞ்சமாக பற்ற வைத்ததில், வெடித்து சிதறிய வார்த்தைகளில், பேச்சிழந்து போனார் அப்பா. தனது மகள் இப்படி பேசி கேட்டதே இல்லை. அவர் கண்ணின் ஓரத்தில் கண்ணீர் துளி..

அவள் பேசிய விதத்தில் சுவாசம் கூட எழ மறுத்தது கோதைக்கு. அப்பாவின் கண்ணீர் வேதாவை சட்டென தரை இறக்கியது. அவள் ஏதோ பேச முயல்வதற்குள், கண்களை துடைத்துக்கொண்டு, துண்டை எடுத்து தோளில் போட்டுக்கொண்டு அருகில் இருந்த கோவிலை நோக்கி நடந்தார் அப்பா.

மறுநாள் காலை பொழுது.

குளித்து முடித்து தனது தினசரி அனுஷ்டானங்களையும், காயத்ரி மந்திர பாராயணத்தையும் முடித்து விட்டு, ஹாலுக்கு வந்தான் கோகுல். சோபாவில் அமர்ந்து அன்றைய தினசரியை அவன் கையில் எடுத்து அவன் புரட்டிகொண்டிருந்த நேரத்தில் வெளியில் கிளம்பி விட்டிருந்த அப்பாவை வழி அனுப்பி விட்டு உள்ளே வந்தார் அம்மா.

அவரது முகத்தில் பலநூறு தயக்க ரேகைகள். மெது மெதுவாக ஆரம்பித்தார்

“கண்ணா இன்னைக்கு சாயங்காலம்.....”

“என்ன? பொண்ணு பார்க்க போகணுமா?” தினசரியின் பக்கங்களில் கண்களை ஓட்டிக்கொண்டே பளிச்சென கேட்டான் கோகுல்.

“ஏற்கனவே தெரியுமாடா நோக்கு?”

“கார்த்தாலே நீயும் அப்பாவும் பேசிண்டு இருந்ததை கேட்டுண்டுதான் இருந்தேன். ஏம்மா என் மனசிலே இருக்கறது நோக்கு தெரியுமா தெரியாதா?” பேப்பரை மடித்துக்கொண்டே அம்மாவின் முகத்தை நேராக பார்த்து கேட்டான் கோகுல்.

“அதுக்கில்லைடா....”

“தெரியுமா? தெரியாதா?” இடை புகுந்தான் கோகுல்

“தெரியும்டா.... கோதைதானே? கிருஷ்ண ஜெயந்தி அன்னைக்கு ரெண்டு பேரும் பேசிண்டிருந்தேளே, பார்த்தேன் நான்” தயக்கமான குரலிலேயே சொன்னாள் அம்மா. கோதை தனது மகனுக்கு ஏற்றவள் என்ற நம்பிக்கை அம்மாவுக்கு இன்னமும் வரவில்லை.

“தெரியறதோன்னோ? அப்பா கிட்டே பேசு.”

“கண்ணா நான் சொல்றதை ஒரு நிமிஷம் கேளேன். வேண்டாம் டா. நம்ம அந்தஸ்துக்கும், உன் படிப்புக்கும் அவளெல்லாம்..... .நேக்கு பிடிக்கலைடா அவளை. “

“அம்.....மா” அம்மாவின் முக சுளிப்பிலும், வார்த்தைகளிலும் சுள்ளென எகிறிய கோபத்தில் உயர்ந்தது அவன் குரல். “நேக்கு அவளை ரொம்ப பிடிச்சிருக்கு அவ்வளவுதான். நோக்கு பிடிச்சிருக்கா, பிடிக்கலையாங்கிறதை பத்தி நேக்கு கவலையே இல்லை. புரியறதா?” இறுக்கமான முகத்துடனும், அழுத்தத்துடனும் வெளி வந்தது அவன் குரல்.

மெல்ல தலை குனிந்தார் அம்மா.

சில நொடிகள் கழித்து குரலை தாழ்த்திக்கொண்டு

“நீ பேசு. இல்லையானா சாயங்காலம் நானே அப்பா கிட்டே பேசறேன். நான் மனசுக்குள்ளே நேக்கு கோதைதான்னு முடிவு பண்ணிட்டேன். அதுக்கப்புறம் இன்னொரு பொண்ணை பார்த்து, அவளை வேண்டாம்னு சொல்லி அவ மனசை கஷ்டப்படுத்த நேக்கு இஷ்டமில்லை.”

“டேய்... டேய்.... கண்ணா” அம்மாவின் குரல் கெஞ்சலான ஸ்ருதிக்கு இறங்கியது. “அப்பா அவாகிட்டே வரேன்னு சொல்லிட்டார்டா. இப்போ மாத்த முடியாது. சும்மா ஃப்ரெண்ட்லி விசிட் அப்படின்னு தான் சொல்லி இருக்கார். போய் சும்மா பேசிட்டு வருவோம். மதத்தை அப்புறம் முடிவு பண்ணுவோம்.”

“முடியாது. என்னாலே வர முடியாது”

“கண்ணா... ப்ளீஸ்டா..... அப்பாவுக்காக. அவாத்துக்கு போயிட்டு மட்டும் வந்திடுவோம் அந்த பொண்ணைதான் நீ கல்யாணம் பண்ணிக்கணும்னு நான் காட்டாயப் படுத்த மாட்டேன் உன் இஷ்டத்தை மீறி அம்மா எதுவும் செய்ய மாட்டேன்”

ஏதேதோ பேசி அவனை வருவதற்கு சம்மதிக்க வைத்திருந்தார் அம்மா. அவனுக்குத் தெரியவில்லை. இந்த சம்மந்தத்தை பற்றி அப்பாவிடம் சொன்னதே கோதையின் தந்தை தான் என்பது தெரியவில்லை.

வேதா காலையிலேயே கிளம்பி சென்று விட்டிருந்தாள். அப்பா அவளிடம் எதுவுமே பேசவில்லை. காலை பூஜைகள் முடிந்த பிறகே அப்பாவின் மனம் ஒரு நிலைக்கு வந்திருந்தது. கோதை, வேதாவை பற்றி பேசுவதை தவிர்க்கவே விரும்பினாள்.

மௌனமாகவே இருந்த அப்பாவை திசை திருப்ப கேட்டாள் “இன்னைக்கு சாயங்காலம் ஏதாவது வேலை இருக்கப்பா? எங்கேயாவது போகப்போறேளா?”

அப்போதுதான் நினைவு வந்தவராக சொன்னார் “ஆமாம்மா. மறந்தே போயிட்டேன் பாரு. நம்ம மதுசூதனன் மாமாவாத்துக்கு போகணும். அவாத்து பொண்ணு ஸ்ருதிக்கு, நம்ம கோகுலை பார்க்கலாம்னு பேசிண்டிருக்கோம். ரெண்டு பேருக்கும் ஜாதக பொருத்தம் பிரமாதமா இருக்கு. சாயங்கலாம் அவாளை பொண்ணு பார்க்க வர சொல்லி இருக்கோம்.”

மலர்ந்து, மகிழ்ந்து போனாள் கோதை “நிஜமாவாபா? கோகுலுக்கு கல்யாணமா?”

அவனுக்கு ஒரு நன்மை நடக்க போகிறதென்றால் எனக்கேன் இத்தனை ஆனந்தம்? என் மனதில் அவனுக்கு நான் கொடுத்திருக்கும் இடமென்ன? இதையெல்லாம் யோசித்து பார்க்கத் தெரியவில்லை கோதைக்கு.

அவளது குரலில் இருந்த சந்தோஷம் அப்பாவுக்கே வியப்பை கொடுத்தது. கோதை இப்படி மகிழ்ந்து போவதை பார்த்து நீண்ட நாட்கள் ஆனது போலே தோன்றியது அப்பாவுக்கு. “பொண்ணு அழகா இருப்பாளாபா? கோகுலுக்கு பிடிச்சிருக்கா? நானும் பொண்ணு பார்க்க வரேன்பா” கண்களில் ஆர்வம் மின்ன சொன்னாள் கோதை.

“நீயா? நீ எதுக்குமா அங்கே எல்லாம். யாரவது ஏதாவது நினைச்சிக்க போறா”

“அப்பா... அப்பா... ப்ளீஸ்பா... நான் ஒரு ஓரமா உட்கார்ந்துக்கறேன். யாரண்டையும் ஒரு வார்த்தை பேச மாட்டேன். நேக்கு அந்த பொண்ணை பார்க்கணும் .கோகுலுக்கு ஏத்தா மாதிரி இருக்காளான்னு பார்க்கணும். ப்ளீஸ்பா.” குரலில் கெஞ்சலை தவிர வேறதுவும் இல்லை. அப்பாவால் மறுக்கவும் முடியவில்லை.

வேண்டா வெறுப்பாகத்தான் கிளம்பினான் கோகுல். அப்பாவை எதிர்த்துப் பேசி பழக்கம் இல்லை அவனுக்கு. தந்தை எனும் ஸ்தானத்துக்கு மரியாதை கொடுத்தே பழகி இருந்தான் அவன். அதனாலேயே அவர் சொல்லுக்கு கட்டுப்பட்டு கிளம்பிவிட்டிருந்தான்.

அப்பாவுமே யாருடனுமே அதிகமாக பேசமாட்டார். மிக சில நேரங்களில் யோசித்து, செதுக்கி அவர் பேசும் வார்த்தைகளின் ஆழம் கேட்பவர்களை புரட்டிப்போடும்.

கிளம்பும் முன். “சும்மா போய் சாதாரணமா பேசிட்டு, கிளம்பி வந்துண்டே இருக்கோம். அதுக்கப்புறம் அவாகிட்டே நீ ஏதாவது சொல்லி சமாளிச்சுக்கோ. அதுக்கும் மேலே கல்யாணத்துக்கு சம்மதம் அப்படி இப்படின்னு ஏதாவது பேசினேள்ன்னா, நான் எல்லார் முன்னாடியும் என் மனசிலே இருக்கறதை பேசிடுவேன், அப்புறம் மானம் போச்சு மரியாதை போச்சுன்னு குதிக்கப்படாது புரியறதா?” அம்மாவின் காதை கடித்து விட்டே கிளம்பினான் கோகுல்.

அவர்கள் வீட்டு வாசலை சென்று அடைந்தது கோகுலின் கார். வரவேற்பு மிக பலமாகவே இருந்தது. அவர்கள் வீட்டு கூடத்தில் போய் அமர்ந்தனர் கோகுல் குடும்பத்தினர். தர்மசங்கடத்தின் மடியிலேயே அமர்ந்திருந்தான் கோகுல். அங்கிருந்து கிளம்பி ஓடி விட வேண்டுமென்றே தோன்றிக்கொண்டிருந்தது அவனுக்கு.

வழக்கமான அறிமுகங்கள், நலம் விசாரிப்புகளுக்கு பிறகு அப்பா கேட்ட அந்த கேள்வி அவனை கொஞ்சம் நிமிர்த்தியது.

“ஸ்ரீதரன் வாத்தியார் வரேன்னு சொன்னாரே இன்னும் வரலையா?”

“இதோ வந்துண்டே இருக்கார். இப்போதான் போன் பண்ணார். அவர் பொண்ணும் வரேன்னு சொன்னாளாம். அவளையும் அழைச்சிண்டு வந்துண்டு இருக்கார்” சொன்னார் மதுசூதனன்.

கண்கள் விரிய நிமிர்ந்தான் கோகுல். வருவது கோதையா? இங்கே எதற்கு வருகிறாள் அவள்? யோசித்தவனின் பார்வை தன்னாலே வாசல் பக்கம் சென்றது.

தொடரும்
 
Last edited:

Rajam

Well-known member
Member
கண்ணன் எங்கேயோ
அங்கே கோதை .
இது தெய்வ சங்கல்பம்.
வேதா உண்மைய எப்போது அறிவாள்.
காதல் அறிவை மழுங்க வைத்து விட்டதே.
தகப்பனாரையே எதிர்க்க வைத்து விட்டதே.பாடம படிப்பாள்.
 

kothaisuresh

Well-known member
Member
காதல்னாலே அப்பாவையே எதுத்து பேச வைச்சிடுத்தே.நீ போகுமிடமெல்லாம் நானும் வருவேன்....
 

பிரிய நிலா

Well-known member
Member
சரவணன் ஏமாத்தறது கூட தெரியாமல் வேதா இருக்காளே..

வருவது கோதை தான் கோகுல். ஆனால் வருவது உந்தன் வருங்கால மனைவியை பார்ப்பதற்கு...
 

Latest profile posts

மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு

New Episodes Thread

Top Bottom