• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே 02

Vathsala Raghavan

✍️
Writer
யமுனை ஆற்றிலே... ஈர காற்றிலே.... 02

கோலத்தை முடித்துவிட்டு திருப்தியான புன்னகையுடன் நிமிர்ந்தாள் கோதை.

“கோதைம்மா” உள்ளிருந்து அவளது அப்பாவின் குரல்.

“இதோ வரேன்பா” உள்ளே நுழைந்தாள் அவள்.

உள்ளே வந்த மகளை பார்த்து வாஞ்சையுடன் புன்னகைத்தார் அப்பா. தனது இரண்டு மகள்களின் மீதும் உயிரையே வைத்திருக்கும் அப்பா அவர். எந்த சூழ்நிலையிலும் தாயில்லாத மகள்களின் முகம் வாடுவதை விரும்பாத தந்தை.

“மணி அஞ்சரை ஆயிடுத்து. பெருமாளுக்கு விளக்கேத்திடு மா. நம்மாத்து பெருமாளை சேவிச்சிட்டு நான் அவாத்துக்கு கிளம்பறேன்.” என்றார் அப்பா.

“யாராத்துக்குப்பா?” என்றபடியே பூஜை அறையை அடைந்தாள் கோதை.

“வாசுதேவன் மாமாவாத்துக்கு மா. பெருமாளுக்கு திருவாராதனை பண்ண வரச்சொல்லி இருக்கா”

“எந்த வாசுதேவன் மாமா?” கேள்விக்கு ஏற்றார் போல் அழகாய் வளைந்தன அவள் புருவங்கள்.

“அதான்மா. மாம்பலத்திலே இருக்காரே. ஒரு வாட்டி உன்னை அவாத்து கிராஹப்பிரவேசத்துக்கு கூட்டிண்டு போனேனே, நியாபகம் இல்லையா நோக்கு?”

பூஜையறையில் மண்டியிட்டு விளக்கேற்றிக்கொண்டிருந்தவளின் மனதில் தென்றல் காற்றாய் வருடிப்போயிற்று கோகுல கண்ணனின் ஞாபகம். அந்த நாளில் நிகழ்ந்த அந்த விளையாட்டின் நினைவில் அவள் இதழோரத்தில் சின்ன புன்னகை மிளிர்ந்தது.

“விளக்கேதிட்டியாமா?.' அப்பா கேட்க,

“ம்.” அவள் சட்டென கலைந்து நகர, பூஜையை துவக்கினார் அப்பா

'பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு......'

பூஜையறை வாசலில் நின்று உள்ளே புகைப்படத்தில் பூமாலைக்கு நடுவில் சிரித்துக்கொண்டிருந்த கண்ணனையே பார்த்துக்கொண்டிருந்தாள் கோதை.

அரை மணி நேரம் கழித்து பூஜையை முடித்துவிட்டு எழுந்தார் அப்பா. இடுப்பில் கட்டியிருந்த துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டவருக்கு என்ன தோன்றியதோ?

“ஏம்மா, நீயும் என் கூட அவாத்துக்கு வரியா?” என்றார்.அழகாக விரிந்தன அவள் கண்கள்

“நானா? எதுக்குப்பா?"

“இங்கே ஆத்திலே தனியா உட்கார்ந்துண்டு என்ன பண்ணப் போறே? எப்படியும் அக்கா ஆபீஸ்லேர்ந்து வர்றதுக்கு ஒம்போது மணி ஆகும். அவாத்திலே கிருஷ்ண ஜெயந்தி ரொம்ப நன்னா பண்ணுவா. அக்கம் பக்கத்து குழந்தைகளெல்லாம் கிருஷ்ணர் வேஷம் போட்டுண்டு அவாத்துக்கு வரும். எல்லாம் பாட்டு பாடிண்டு, டான்ஸ் ஆடிண்டு பார்க்க நன்னா இருக்கும். நோக்கும் பொழுது போகும். வா போயிட்டு வரலாம்”

அவள் முகத்தில் கொஞ்சமாக தயக்க ரேகைகள்.

“அதுவும் இந்த வாட்டி ரொம்ப தடபுடலா இருக்கும் அவா பையன் கோகுல் வெளிநாட்டிலேர்ந்து வந்திட்டான்னோல்யோ. அமர்களப்படுத்திடுவா பாரு.”

அவன் பெயர் கேட்டவுடன் மனதோரத்தில் ஏனென்றே தெரியாத ஒரு பரவசம்.

“போய்விட்டு வந்தால் தான் என்ன?"

சில நிமிடங்களில் இளம் மஞ்சள் நிற புடவையும், கூந்தலில் மல்லிகை சரமுமாய் கிளம்பி விட்டிருந்தாள் கோதை.

கோகுலின் வீட்டு வாசலில் சென்று நின்றது இவர்கள் ஆட்டோ. ஆட்டோவை விட்டு இறங்கியவளுக்குள் இனம் புரியாத தவிப்பு.

“அவனுக்கு என்னை நினைவிருக்குமா?”

‘ஆமாம். உன்னை நினைவில் வைத்துக்கொள்ள நீ என்ன பெரிய தேவதையா? மேதையா?' உள்ளத்தின் மறு புறத்திலிருந்து சட்டென பிறந்தது ஒரு கேள்வி.

அந்த வீட்டின் கேட்டை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தார்கள் அப்பாவும் மகளும். அவள் கண்கள் மெல்ல சுற்றி வந்தது. முன்பு கிரஹபிரவேசத்தில் பார்த்திருந்தாலும் இப்போது புதிதாக பார்ப்பதைப் போலவே இருந்தது.

அவர்கள் வீட்டு தோட்டத்திலேயே இவளுடைய வீட்டை போல் மூன்று வீடுகள் கட்டலாம் போலிருந்தது.

அப்பா சொன்னது போலவே கிருஷ்ணர் வேஷம் போட்டுக்கொண்டு சில குழந்தைகள் தென் பட்டார்கள். விருந்தினர்கள், அவர்கள் வீட்டில் வேலை செய்பவர்கள் இன்னும் நிறைய பேர் இங்கும் மங்கும் நடமாடிக்கொண்டிருந்தார்கள்.

மெல்ல அந்த வீட்டினுள் அடி எடுத்து வைத்தாள் கோதை.

'மாமா வாங்கோ' அவனுடைய அப்பா வாசுதேவனின் குரல் அவர்களை வரவேற்றது. வேஷ்டியும் இடுப்பில் கட்டப்பட்ட துண்டுமாய் கம்பீரமாக நின்றிருந்தார் அவர். இவளைப் பார்த்தவர்

“வாம்மா கோதை எப்படி இருக்கே ?” என்றார்.

சின்ன புன்னகையுடன் தலை அசைத்தவளுக்கு அந்த வீட்டைப் பார்த்து எழுந்த பிரமிப்பில் சுவாசம் அடைப்பட்டுக்கொண்டதை போன்றதொரு உணர்வு. மெல்ல நிமிர்ந்த அவள் கண்கள் மட்டும் இங்குமங்கும் கொஞ்சம் அலைப்பாயந்தன.

“எல்லாம் ரெடியா ஆரம்பிச்சுடலாமா?” கேட்டபடியே அவளுடைய அப்பா பூஜையறையை நெருங்கினார்.

பூஜை அறையில் பளபளக்கும் வெள்ளி விக்கிரகமாய், மலர் மாலைகளுடன் சிரித்துக்கொண்டிருந்தான் அந்த கண்ணன். இன்னொமொரு மலர் மாலையால் அந்த கண்ணனை அலங்கரித்து விட்டு திரும்பினார் அவர். தேவகி மாமி. கோகுலின் அம்மா.

கோதையை பார்த்த நொடியில் ஒரு கணம் இதயம் நின்று துடித்தது அவருக்கு.

'இவள் எப்படி சொல்லிவைத்தார் போல் இங்கே வந்து நிற்கிறாள்?’ பூஜையறையில் நின்றிருந்த கண்ணனை தொட்டுத் திரும்பியது அவர் பார்வை

'விளையாட்டை துவங்கி விட்டானா இந்தக் கண்ணன்?'

பூஜை அறையை விட்டு வெளியே வந்தவர் சின்ன விழி அசைவில் அவளை வரவேற்று விட்டு ஓரமாக சென்று நின்றுக்கொண்டார்.

'சுக்லாம் பரதரம் விஷ்ணும்.' துவக்கினார் அவள் தந்தை. எல்லோரும் மௌனமாகிவிட அவர் குரல் மட்டுமே வீட்டில் எதிரொலித்துக் கொண்டிருந்தது.

எல்லார் பார்வையும் பூஜையறையிலேயே இருக்க, இவள் பார்வை மட்டும் இங்குமங்கும் இங்குமங்குமாய்.

'எங்கே அவன்?'

பல நிமிட தவிப்புக்கு பிறகு அவள் செவிகளை தொட்டது அவனது அப்பாவின் குரல்

“கோகுல் எங்கே?”

சடக்கென நிமிர்ந்தாள் கோதை.

“மாடியிலே இருக்கான். கம்ப்யூட்டர்லே ஏதோ பண்ணிண்டிருக்கான்” என்றார் அவன் அம்மா.

“பெருமாள் சேவிக்க வரச்சொல்லு அவனை”

“ம்” பார்வை கோதையை உரசிச்செல்ல, மெல்ல நடந்து போய் இண்டர்காமில் அழைத்தார் அவனை. “கீழே வாடா”

‘வரப்போகிறானா அவன்?’ அவள் மனம் சிறுபிள்ளையாய் துள்ளியது.

'வேறெதுவும் வேண்டாம் எனக்கு. என்னை அவன் நினைவில் வைத்திருந்தால் போதும். நட்பாய், சின்னதாய் ஒரு புன்னகை போதும். செய்வானா?’ மனதின் ஓரத்தில் குழந்தைத்தனமாய் ஒரு தவிப்பு.

தன்னை கட்டுப் படுத்திக்கொண்டு தலையை குனிந்துக்கொண்டாள் கோதை. சில நொடிகளில் அவன் கீழிறங்கி வருவதை அவள் உள்ளுணர்வு உணர்த்தி விட்டிருந்தது.

பூஜை அறையின் வாசலில் வந்து நின்றான் அவன். அவள் எதிரே. அவளுக்கு நேர் எதிரே.

'நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய கோவில் காப்போனே...' அப்பாவின் குரல் ஒலித்துக்கொண்டே இருந்தது.

சில நொடிகள் கழித்து மெல்ல விழி நிமிர்த்தினாள் கோதை. அவளுக்கு எதிரே நின்றிருந்தான் அவன். வேஷ்டியும், சட்டையும், நெற்றியில் ஸ்ரீசூரணமுமாய், பூஜையறையில் இருந்த கண்ணனை பார்த்தபடியே நின்றிருந்தான் கோகுல கண்ணன்.

அவள் பார்வை அவனை தொட்டுத் தொட்டு விலகியது. சில நிமிடங்கள் கழிந்த பின்பும் இவள் பக்கம் திரும்பக்கூட இல்லை அவன். இவளை கவனித்ததாக கூட தெரியவில்லை. ஒரு வேளை என்னை அடையாளம் தெரியவில்லையோ?

அவனது அம்மாவின் கண்கள் இருவரையும் மாற்றி மாற்றி பார்த்துக்கொண்டே இருந்தன. சில நிமிடங்கள் இப்படியே நகர கோதையின் மனதிலும் முகத்திலும் ஏமாற்றத்தின் அறிகுறிகள் பரவின.

'ஒரே ஒரு முறை பார்த்த அவன் உன்னை அவன் நினைவில் வைத்திருப்பான் என்று எப்படி எதிர்ப்பார்க்கிறாய்? அவன் தகுதி என்ன? அந்தஸ்து என்ன?' அவள் தலையில் நறுக்கென குட்டியது அவளது மனக்குரல். சின்ன பெருமூச்சுடன் திரும்பிக்கொண்டாள் கோதை.

பூஜை முடிந்திருந்தது. நேரம் ஏழு மணியை தொட்டிருந்தது. அதற்குள் அந்த வீட்டில் நிறைந்துவிட்டிருந்த குழந்தை கண்ணன்களின் விளையாட்டுக்கள் துவங்கி இருந்தன. தோட்டத்தில் எல்லா குழந்தைகளும் விளையாடிக் கொண்டிருக்க அந்தக் குழந்தைகளுடன் கலந்து விட்டிருந்தான் கோகுல்.

ஒவ்வொரு குட்டி கண்ணனையும் தூக்கிக்கொஞ்சிக்கொண்டு அவர்களுடன் ஆடிப்பாடிக்கொண்டு, ஒரு குழந்தையாய் மாறிவிட்டவன் போகுமிடமெல்லாம் பயணித்துக்கொண்டிருந்தது அந்த தோட்டத்தில் நின்றிருந்தவளின் பார்வை. இவளாக சென்று அவனிடம் பேச்சை துவங்கும் தைரியம் ஏனோ இல்லை அவளிடம்.

'இன்னும் சிறிது நேரத்தில் கிளம்ப வேண்டும். அப்பா யாருடனோ பேசிக்கொண்டிருந்தார். இதோ கிளம்பி விடுவார். மறுபடியும் இவனை எப்போது பார்ப்பேனோ?’

‘ஒரு வேளை அவன் திருமணத்தை நடத்தி வைக்க அப்பாவை அழைப்பர்களோ என்னவோ? அப்போது வருவேனோ? இப்போதே கவனிக்காதவன் அப்போதா கவனிக்கப் போகிறான்?’

‘ஒரே ஒரு முறை என்னைபார்த்து சின்னதாய் புன்னகைத்திருக்கலாம் அவன்.’ பொங்கிய மனதை கட்டுப்படுத்திக்கொண்டே, தோட்டத்தின் ஒரு ஓரத்தில் சென்று நின்றுக்கொண்டாள் கோதை.

சில நிமிடங்கள் கரைய கைகளை கட்டிக்கொண்டு எங்கோ பார்த்தபடி நின்றிருந்தாள் கோதை.

திடீரென “எங்கேடா அந்த நாய் சீசர்? இங்கே கொண்டு வாங்கடா. அதை விட்டு இந்த பொண்ணை கடிக்க விடுவோம்” அவள் பின்னாலிருந்து மென் குரல்

உடலெங்கும் பரவிய சில்லென்ற சிலிர்ப்புடன் சுழன்று திரும்பினாள் கோதை. பளீர் புன்னகையுடன் கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு நின்றிருந்தான் கோகுல கண்ணன்.

வானமே வசப்பட்டுவிட்டதைப் போன்றதொரு மகிழ்ச்சியிலும், அவன் வந்துவிட்டான் என்பதை நம்பவும் முடியாமலும் படபடத்தன அவள் கண்கள். அங்கேயே தடுக்கி மொத்தமாய் அவளுக்குள் விழுந்தான் கோகுல்.

அவன் இமைதட்டாமல் கடந்த சில நொடிகளுக்கு பிறகு அவள் பெயருக்கு வலித்துவிடுமோ என்பது போலவே மெதுவாக அழைத்தான் “கோதைப்பொண்ணு . எப்படிடா இருக்கே?”

வேகமாக தலை அசைத்தாள் கோதை. ஏனோ எதுவுமே பேசத்தோன்றவில்லை அவளுக்கு.

“ஆமாம் ரொம்ப நாழியா யார்கிட்டயோ பேசணும் பேசணும்னு தவிச்சிண்டிருந்தே போலிருக்கே யார்கிட்டே? என்கிட்டேயா?” குறு குறு பார்வையுடன் கேட்டான் கோகுல்

கண்களை மெல்ல தாழ்த்திக்கொண்டு அழகாய் சிரித்தாள் “அது எப்படி உங்களுக்குத் தெரியும்?”

அழகாக மலர்ந்து சிரித்தான் கோகுல். “ஆல் டீடைல்ஸ் ஐ நோ. சரி, இந்த பொண்ணை கொஞ்ச நாழி சீண்டி பார்க்கலாம்னு நினைச்சேன். ஆனா இதுக்கு மேலே விட்டா நீ அழுதிடுவேன்னு தோணித்து அதான் ஓடி வந்திட்டேன். ஆமாம் நோக்கு என்கிட்டே ஏதாவது சொல்லணுமா?’ குனிந்து அவள் கண்களை பார்த்துக் கேட்டான் கோகுல்.

“இல்லை... அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை. சும்மா உங்களை பார்க்கணும் தோணித்து அவ்வளவுதான். ஆமாம் அந்த நாய் சீசர் என்னாச்சு?”

“இதைக் கேட்கத்தான் இத்தனை நாழி என்னை பார்த்துண்டே இருந்தியா? அதை நான் ஊருக்கு போறச்சே என் ஃப்ரெண்ட் கிட்டே கொடுத்து வளர்க்க சொல்லிட்டேன் நீ தைரியமா இரு” என்று சிரித்தவனின் சிரிப்பில் இணைந்துக்கொண்ட படியே திரும்பியவளின் கண்களில் பட்டார் அவள் அப்பா. எல்லாரிடமும் விடைபெற்று கிளம்பிக்கொண்டிருந்தார் அவர்.

“அப்பா கிளம்பறார் போலிருக்கு நான் வரேன்” நகர்ப்போனாள் கோதை.

“ஹேய். அதுக்குள்ளே ஓடினா என்ன அர்த்தம்.? திரும்ப எப்போ பார்க்கலாம்.?” நிறுத்தியது அவன் குரல்.

“உங்க கல்யாணத்திலே” அடுத்த நொடி பளீர் பதில்

“என் கல்யாணத்திலேயா?” அவன் குரலில் வியப்பு

“ஆமாம் உங்க கல்யாணத்தை நடத்தி வைக்க அப்பா வருவாரோன்னோ அப்போ நானும் வருவேன். அப்போ பார்க்கலாம். இப்போ போயிட்டு வரேன்” சொல்லிவிட்டு தனது அப்பாவை நோக்கி வேகமாய் நடந்தாள் கோதை.

மெல்ல உயர்ந்தன அவன் புருவங்கள். ‘அடிப்பெண்ணே. என் கல்யாணத்தில் மணப்பெண்ணே நீதான் என நான் நினைத்துக்கொண்டிருகிறேன். இதை எப்படி உனக்கு புரிய வைப்பது?’

சில அடிகள் நடந்தவள் சட்டென திரும்பி வந்தாள் அவன் கண்களை பார்த்து சொன்னாள் “ரொம்ப தேங்க்ஸ்.”

“எதுக்குடா ?”

“இல்லை. இங்கே உங்காத்துக்கு வரச்சே, நேக்கு உங்ககிட்டே பேசணும்னு ரொம்ப ஆசையா இருந்தது ஆனா நீங்க பெ.....ரிய பணக்கா......றரா இருக்கேள். ரொ....ம்ப படிச்சிருக்கேள். அதனாலே என்கிட்டே பேசவே மாட்டேள். என்னை மறந்தே போயிருப்பேள்ன்னு நினைச்சேன். இப்போ மனசு ரொம்ப சந்தோஷமா இருக்கு. ரொம்ப தேங்க்ஸ்.” நிறைவான குரலில் அவள் சொல்ல, அவளே அறியாமல் அவள் கண்களுக்குள் கொஞ்சமாய் நீர் துளிர்த்தது.

அவன் மனம் மொத்தமாய் கனிந்து போனது. அந்த நொடியே அவளை அப்படியே அள்ளி தோள் சாய்த்துக்கொள்ள வேண்டும்மென்றே தோன்றியது அவனுக்கு.

‘நீ என் உயிரடிப்பெண்ணே உன்னோடு பேசாமல் வேறு யாருடன் பேசப்போகிறேன் நான் ’ என்று சொல்லி அவள் கன்னங்களில் மாறி மாறி முத்தமிட அவன் உள்ளம் .விழைந்தது

“நான் வரேன்’’ அவன் சுதாரித்து அடுத்த வார்த்தை பேசுவதற்குள் அங்கிருந்து ஓடியே விட்டிருந்தாள் கோதை.

அவள் சென்ற திசையிலிருந்து விழி அகற்ற முடியாமல் அப்படியே நின்றிருந்தான் கோகுல்.

அதே நேரத்தில் தனது இன்னொரு நண்பன் விக்கியுடன் ஹோடேலில் அமர்ந்திருந்தான் சரவணன்.

“நீ ஏன்டா இப்படி இருக்கே?” என்றான் விக்கி. பெரிய வேலை கிடைக்கலைன்னா என்ன இப்போ? பெரிய வேலையிலே இருக்கிற பொண்ணை கரெக்ட் பண்ணி வாழ்க்கையிலே செட்டில் ஆக வேண்டியதுதானே. அதை விட்டுட்டு என்னமோ புலம்பிட்டு இருக்கே?”

“பொண்ணா? என்னை எவளும் திரும்பிக் கூட பார்க்க மாட்டேங்கறாளுங்க. இதிலே எங்கே கரெக்ட் பண்றது?” அலுத்துக்கொண்டான் சரவணன்.

“திரும்பி பார்க்க வைக்கணும்டா. நீ இப்படியே இருந்தேனா வேலைக்கு ஆகாது. முடியை கொஞ்சம் ஸ்டைலா வெட்டிக்கோ. எவனாவது ஒரு பணக்கார பிரெண்டா பிடிச்சு அவன்கிட்டே இருந்து ஒரு காரை வாங்கி வெச்சுக்கோ. கையிலே ஒரு ஸ்மார்ட் போன் வெச்சுக்கோ. எங்கப்பா கோடீஸ்வரன் அப்படின்னு பிலிம் காட்டுடா. எல்லா பொண்ணும் திரும்பி பார்க்கும். அப்படி ஏதாவது ஒரு பொண்ணை கரெக்ட் பண்ணி கல்யாணம் வரைக்கும் கொண்டு போயிடு. அதுக்கப்புறம் மிச்சத்தை பார்த்துக்கலாம்.”

“சும்மா இருடா டேய். மாட்டினோம்னா அவ்வளவுதான்.”

“நான் சொல்றேன்லே மாட்ட மாட்டோம் தைரியமா இறங்கு. அதுக்கு ஏத்த பொண்ணை, நம்மை மாட்டிவிட சாமர்த்தியம் இல்லாத பொண்ணை நான் காட்டுறேன்” என்ற விக்கியின் மனதில் வந்து போனாள் அவனது அலுவலகத்தில் பணி புரியும் வேதா.

பணியில் சேர்ந்த சில வருடங்களிலேயே தனது திறமையினால் வேகமாக வளர்ந்து கொண்டிருப்பவள் வேதா.

ஏதேதோ நினைவுகளில் சில நொடிகள் நீந்திய விக்கியின் கண்களில் தீவிரம்.

“என்னை நிராகரித்தவளுக்கு இவன் தான் சரி”.

இரவு நேரம் ஒன்பதை தாண்டிக்கொண்டிருக்க, தனது அறையில் படுத்துக்கிடந்தான் சரவணன். அன்று அவனுடனே தங்கி விட்ட விக்கியின் வார்த்தைகள் அவனை கொஞ்சம் கொஞ்சமாக கரைத்துக்கொண்டிருந்தன.

“எங்க ஆபீஸ்லே வேதான்னு ஒரு பொண்ணுடா. செமையா இருப்பா.. நாளைக்கு அவளை உனக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறேன். அவளை பார்த்துட்டு அதுக்கப்புறம் முடிவு பண்ணு.”

சில நிமிடங்களில் கழித்து ஒரு முடிவுக்கு வந்தவனாக தனது கைப்பேசியை எடுத்து கோகுலை அழைத்தான் சரவணன்.

கோதையின் நினைவிலேயே மூழ்கி இருந்தவன் தன்னிலை பெற்றவனாக அழைப்பை ஏற்றான்.

“சொல்லுடா”

“ஒரு ஹெல்ப் டா. உன்கிட்டே எப்படி கேக்குறதுன்னு தெரியலை”

“சொல்லுடா. என்ன வேணும்?”

“அது, உங்க வீட்டிலே இருக்கிற கார்லே ஒண்ணு எனக்கு தருவியாடா கொஞ்ச நாளைக்கு. அம்மாவுக்கு உடம்பு சரியில்லை. கார் எடுத்துட்டு ஊருக்கு போயிட்டு அவங்களை இங்கே கூட்டிட்டு வந்திடலாம்ன்னு அதுதான். ப்ளீஸ்டா” தயக்கமே இல்லாமல் பொய் வெளியே வந்தது. சரவணனுக்கேகூட இது கொஞ்சம் வியப்பாகத்தான் இருந்தது.

“கார் தானேடா எடுத்துக்கோ. அதுக்கு ஏண்டா இப்படி தயங்கறே? நாளைக்கு வந்து எடுத்துக்கோ சரியா? அம்மாவுக்கு என்னடா ?"

“எப்பவும் வர ஆஸ்துமாதாண்டா. இப்போ ரொம்ப ஜாஸ்தியா போச்சு. டேய்... இன்னொரு விஷயம் நான் உங்க வீட்டுக்கு வந்தா உங்க அப்பா ஏதாவது கேட்பாரு. நீயே உங்க அப்பாகிட்டே சொல்லிட்டு காரை கொண்டு வந்து தரியா டா? என்றான் சரவணன்.

“ஏன்டா தேவை இல்லாம பயப்படறே? சரி விடு நானே கொண்டு வந்து தரேன்” கோகுலை பொறுத்தவரை நட்பு எனும் வார்த்தைக்கு மறு பெயர் நம்பிக்கை.

மறுநாள் காலையில், தனது காருடன் சரவணன் வீட்டை அடைந்தான் கோகுல். கார் சாவியை அவனிடம் கொடுத்தவன், தனது பர்சிலிருந்து ரூபாய் நோட்டுக்களை அள்ளி சரவணனின் கையில் திணித்தான்.

“டேய்... இதெல்லாம் வேண்டாம்டா”

“வெச்சுக்கோடா. தேவைப்படும்.”

ஒரு நொடி சரவணின் மனசாட்சி அவனை லேசாக கீறியது

'கொஞ்சம் கூட யோசிக்காமல் இப்படி அள்ளிக்கொடுக்கிறானே இவனிடமா பொய் சொல்கிறேன்?' அடுத்த நொடி விக்கி வேதாவை பற்றி சொன்ன வார்த்தைகள் அவனது மனசாட்சியை மொத்தமாய் அடக்கி விட்டிருந்தன.

மாலை ஐந்து மணி. 'கோகுலின் காரை சரவணன் செலுத்திக்கொண்டிருக்க அருகில் அமர்ந்திருந்தான் விக்கி.

“கார் யாரோடதுடா?' நேத்து போன்லே பேசினியே அந்த ஜி.கேவோடது தானே?” கேட்டுக்கொண்டான் விக்கி. முன்னால் ஒரு முறை கோகுலை இவனுக்கு அறிமுகப்படுத்தியிருந்தான் சரவணன்.

“எனக்கு கொஞ்சம் பயமா இருக்குடா” கலவரம் கலந்த குரலில் சொன்னான் சரவணன்.

'போடா அறிவு கெட்டவனே. அவனவன் என்னென்னமோ பண்றான் ஒரு பொண்ணை கரெக்ட் பண்ண இப்படி பயப்படறே. அந்த வேதாவை மடக்குறது ரொம்ப ஈஸிடா. அவ கிட்டே போய், ஆம்பளைங்க ரொம்ப மோசம், பொண்ணுங்களை அடக்கியே வைக்குறாங்க, பெண்களுக்கு சுதந்திரமே இல்லை அப்படி, இப்படின்னு பேசு போதும். அப்படியே விழுந்திடுவா. உன்னை அப்படியே நம்பிடுவா “

சில நிமிடங்களில், தனது அலுவலகத்தில் கணினிக்குள் முகம் புதைத்துக்கொண்டு அமர்ந்திருந்த வேதாவின் முன்னால் நின்றிருந்தனர் விக்கியும், சரவணனும்.

“ஹாய் வேதஸ்” இதழ்களில் புன்னகையை பொருத்திக்கொண்டு அழைத்தான் விக்கி.

நீண்ட நாட்களுக்கு பிறகு தன்னிடம் வந்து பேசும் விக்கியை யோசனையுடன் பார்த்தபடியே எழுந்தாள் வேதா. அவள் முகத்திலேயே சிக்கிக்கொண்டன சரவணனின் விழிகள்.

அவள் அணிந்திருந்த ஜீன்சும், டி-ஷர்ட்டும் அவளை வெகு நாகரீகமாக காட்ட முற்பட்டாலும், அவள் முகத்தில் நிறையவே அப்பாவித்தனம் குடிக்கொண்டிருப்பதை போன்றதொரு எண்ணம் பிறந்தது சரவணனுக்கு.

'இவளை ஏமாற்ற வேண்டுமா?'

“இப்படி இருக்கே வேதஸ்? உன்கிட்டே பேசியே ரொம்ப நாளாச்சு. இவன் என்னோட க்ளோஸ் பிரென்ட். இவனை உனக்கு அறிமுகப்படுத்தி வைக்கலாம்ன்னு கூட்டிட்டு வந்தேன்” சரவணனை பார்த்தபடியே சொன்னான் விக்கி

அவளையே விழி மூடாமல் பார்த்துக்கொண்டிருந்த சரவணனை, பார்த்து மெலிதாக புன்னகைத்தாள் வேதா.

“சார் பெரிய ஆளு தெரியுமா உனக்கு? ஜி. கே குரூப் ஆப் இன்ஸ்டிடுஷன்ஸ் கேள்விப் பட்டிருக்கியா அதோட ஏகபோக வாரிசு சாட்சாத் இவனேதான்”

அதிர்ந்து போய் திரும்பியவனை, கண்களால் அடக்கியபடியே சொன்னான் விக்கி

“இவங்க தான் 'வேதா தி கிரேட். வரும்போது நான் பேசிட்டே வந்தது இவங்களை பத்திதான். மேடம்க்கு ஹாய் சொல்லி வெச்சுக்கோ. பின்னாலே உனக்கு வசதியா இருக்கும்.”

பேச்சே எழவில்லை சரவணனுக்கு.

“டேய்.... ஹாய் சொல்லுடா” பல்லைக்கடித்துக்கொண்டு விக்கி சொல்ல, சுதாரித்து, நிமிர்ந்து தன்னை நிதானப்படுத்திக்கொண்டு வேதாவின் பக்கம் திரும்பி அவளை நோக்கி கை நீட்டினான் சரவணன்

“ஐ யாம் கோகுல் கண்ணன்”

“ஓ! க்ளாட் டு மீட் யு மிஸ்டர் கோகுல்” மலர்ந்த புன்னகையுடன் சரவணனை நோக்கி கை நீட்டினாள் வேதா.

அவன் கை குலுக்க, அவன் கையில் 'ஜி.கே' என்ற எழுத்துகளுடன் மின்னிக்கொண்டிருந்தது அந்த பிரேஸ்லெட். கோகுல் அவனிடம் கொடுத்த
அந்த பிரேஸ்லெட்!
 

Baby

Active member
Member
கோகுல் கோதை♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

அடேய் நாதாரிப் பயலுகளா.... அவன் கார் அவன் ப்ரேஸ்லேட் அவனோட காசு அவனோடபேர்.. உருப்படுவீங்களா நீங்க....
 

Rajam

Well-known member
Member
உண்மை ஒளிந்திருக்கும்.
பொய்யான பிழைப்பு எத்தனை நாள்
நீடிக்கும்.
நண்பனின் வஞ்சத்தில் வீழ்ந்தானே.
 

EswariSasikumar

Well-known member
Member
Eppdi oru nanban thevaiyaa kanna......manam varudum yezhuththu. Yeththanai thadavai parichchaalum salikkaathu :love: :love: :love: :love: :love:
 

பிரிய நிலா

Well-known member
Member
கோகுலிற்கு இப்படி ஒரு நண்பனா..
சரவணன் விக்கியின் இப்படிப்பட்ட கேவலமான விசயத்தில் வேதா மாட்டிக் கொள்வாளா..
வேதா யார்.. கோதையின் அக்காவா...?
சரவணன் வேதாவிடம் தன்னை கோகுல் என சொல்வது பின்னாளில் கோகுல் கோதைக்கு இடையில் பிரச்சனையாகுமா..
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் கதை 50வது எபி வரை போட்டாச்சு.

இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 20 போஸ்டட் டியர்ஸ்
காரிருள் சூழா காதலே... கதை லிங்க் பிப்ரவரி 23 அன்று இரவு 10 மணி வரை மட்டுமே தளத்தில் இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீடிக்கப்பட மாட்டாது‌‌ நண்பர்களே... அதனால் விரைவில் படித்துவிடுங்கள்.

WhatsApp Channel

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-காரிருள்-சூழா-காதலே.376/

New Episodes Thread

Top Bottom