மயான அமைதி

Nithya Mariappan

✍️
Writer
மயான அமைதி

கோக்கர்ஸ் வாக் பகுதி, கொடைக்கானல்...

“சேஷா இந்த லுக்ல நான் எப்பிடி இருக்கேன்?” என்று கேட்டபடி தனது லாங் ஸ்கர்ட்டினை சுற்றிக் காட்டினாள் ஒரு ஒடிசலான தேகம் கொண்ட பெண்.

“உனக்கென்னடி? ஜப்பான் இளவரசி கிளியோபாட்ராவ விட நீ தான் அழகி... ப்ச்... பேரழகி நவி”

கேலியாய் பதிலளித்துவிட்டு சுற்றியிருந்த தோழிகள் கூட்டம் கலீரென்று நகைக்கவும் தானும் உடன் சேர்ந்து நகைக்க ஆரம்பித்தாள் சேஷா, முழுப்பெயர் சேஷமஞ்சரி. கல்லூரியிலிருந்து சுற்றுலா வந்திருந்தவர்கள் பேராசிரியைகளின் கண்காணிப்பில் கோக்கர்ஸ் வாக்கில் நடந்தபடி இயற்கையை ரசித்துக் கொண்டிருந்தனர்.

தோழிகள் அனைவரும் ஜீன்சும் ப்ளெய்ட் ஷர்ட்டும் அணிந்து சரிவில் இறங்க ஏதுவாய் ஸ்னிக்கர்ஸ் காலணியுடன் வந்திருக்க அந்த ஒடிசல் தேகம் நவி மட்டும் லாங் ஸ்கர்ட்டும் குதிகால் உயர்ந்த ஹீல்சுமாய் வந்து தவறி விழுந்து புதையல் எடுத்துக்கொண்டிருந்தாள்.

காரணம் கேட்டதற்கோ “ஐ அம் த ஃபேஷன் ஐகான் ஆப் மவுண்ட் காலேஜ்... சோ எப்போவும் பளிச்சுனு இருக்குறது அவசியம் தானே” என்று கூறிவிட அதைக் கேலி செய்ய தான் சேஷா இவ்வாறு பேசியதே!

சம்பந்தமின்றி எகிப்தையும் ஜப்பானையும் வைத்து தன்னை கேலி செய்ததில் கோபம் கொண்ட நவியோ அவளைப் பார்த்து உதட்டைச் சுழித்துவிட்டு கோக்கர்ஸ் வாக்கின் சிவப்பு செங்கற்கள் பதித்த பாதையில் விறுவிறுவென நடக்கத் துவங்க “ஏய் நவி நில்லுடி” என்று அவளைத் தொடர்ந்து ஓடினாள் சேஷா.

தோழி தன் பின்னே வரவும் மனமிரங்கியவள் நிற்க சேஷா அவளுடன் சேர்ந்து கொண்டாள். ஒரு பக்கம் தோள் வரை உயரம் கொண்ட ஸ்டீல் கம்பிகளால் அமைக்கப்பட்ட அரண், அதற்கப்பால் சரியும் பச்சை பசேலென்ற பள்ளத்தாக்கில் குவிந்து பரவிய புகைமூட்டமாய் மஞ்சுமேகங்கள், மறுபக்கம் சரிவாய் வளர்ந்திருந்த புல்வெளி என ரம்மியமாய் இருந்த இடத்தில் நின்று இருவரும் வேடிக்கை பார்க்கத் துவங்கினர்.

Screenshot 2021-05-31 at 17-58-00 58640909 cms (WEBP Image, 1000 × 667 pixels) — Scaled (92%).png


அப்போது தான் அந்நிகழ்வு நடந்தது. ஒரு பதின்வயது பெண், அவளுக்கு பதினாறு பதினேழு வயது தான் இருக்கும். கம்பி வேலியில் மறுபக்கம் கையில் வைத்திருந்த எதையோ தவறவிட்டுவிட்டாள் போல!

எனவே தரையில் முழங்காலிட்டு கம்பிகளின் இடைவெளியினூடெ கை விட்டு அதை எடுக்க முயன்று கொண்டிருந்தாள். அவள் அவ்வாறு எடுக்கும் போது அணிந்திருந்த ஜீன்சின் பட்டியைத் தொட்டிருந்த குட்டை டாப் மேலேற அவளது ஜீன்சிற்கும் அந்த டாப்பிற்கும் இடையே தெரிந்த தேகத்தின் நிறத்தை வெறித்தபடி நின்றிருந்தனர் சில இளைஞர்கள்.

சேஷாவின் பார்வையில் அது விழுந்துவிடவே அவளுக்குள் ஒரு எரிச்சல் பரவியது. அவள் பல்லைக் கடிக்கவும் நவி அவளது கோபத்தைக் கண்டுகொண்டாள்.

“ஆத்தா இப்போ என்ன பண்ண போறானு தெரியலயே” என்று அவள் தவிக்கும் போதே சேஷா அந்தப் பெண்ணிடம் சென்றவள் தனக்கு முதுகு காட்டியபடி இன்னும் எதையோ தேடிக்கொண்டிருந்தவளின் மேலேறிய டாப்பை கீழே இழுத்துவிட்டாள்.

அந்தப் பெண் தலை நிமிர்ந்து சேஷாவை கேள்வியாய் நோக்கினாள். குழந்தைதனம் மாறாத முகம்! மனதின் தூய்மையை பிரதிபலிக்கும் நிர்மலமான விழிகள்! பள்ளிமாணவியாய் இருப்பாள் போல என்று நினைத்தாள் சேஷா.

அப்படியே அந்தப் பெண்ணிடம் அங்கே ஏமாற்றம் கப்பிய விழிகளுடன் நின்ற இளைஞர்களைச் சுட்டிக்காட்டிவிட்டு

“டோண்ட் டேக் மீ ராங்... உங்க ட்ரஸ் மேலே ஏறுனதை வெறிச்சு பாத்துட்டு நின்னாங்க... அதான் இழுத்துவிட்டேன்... சாரி டு பாதர் யூ” என்று வருவித்த பொறுமையான குரலில் மன்னிப்பு வேண்ட அந்தப் பெண்ணோ பூவாய் சிரித்தாள். அவள் கண்களில் சேஷாவின் மீதான நன்றியுணர்ச்சி மின்னியது.

கூடவே அந்த இளைஞர்களை முறைத்தும் வைத்தாள்.

“தேங்க்ஸ் அக்கா... என்னோட பைனாகுலார் விழுந்துடுச்சு... அதை எடுக்க எக்குனப்ப தான் டாப் மேல ஏறிடுச்சு போல... ஜஸ்ட் ரெண்டு இன்ச் டாப் மேல ஏறுனத பாக்குறதுல அப்பிடி என்ன சந்தோசம்?” புரியாமல் கேட்டாள் அப்பெண்.

சேஷாவோ சலித்தக் குரலில் “சோஷியல் மீடியால பாக்கலயா நீங்க? ஸ்கூல் யூனிஃபார்மா பொண்ணுங்க ஸ்கர்ட் போடுறதால அவங்களோட கால்களை பாத்து ஆண்களுக்கு உணர்ச்சி தூண்டப்படுதாம்... சோ இனிமே ஸ்கர்ட்டை யூனிஃபார்மா வைக்கக்கூடாதுனு ஒரு க்ரூப் சொல்லுது... இங்க பொண்ணுங்க ட்ரஸ்சோட லெங்த் குறைஞ்சா கலாச்சாரம் கெட்டுப்போச்சுனு கூப்பாடு போடுற க்ரூப் தான் ஒரு இன்ச் டாப் மேல ஏறுனதை வெறிக்க வெறிக்க பாக்கவும் செய்யுது... வாட் கேன் வீ டூ?” என்று தோளைக் குலுக்கிக் கொள்ள

“சபர்ணா வேர் ஆர் யூடா?” என்று யாரோ அழைக்க “கம் ஹியர் மம்மி” என்று பதிலளித்தாள் அவள்.

இந்தப் பெண்ணின் பெயர் சபர்ணாவா என்று சேஷா யோசிக்கும் போது நவியும் வந்து சேர்ந்தாள். அந்தப் பெண் சபர்ணாவின் அன்னையும் வந்து சேர்ந்தார்.

“டாடி உன்னை தேடுறார்டி... நீ இங்க என்ன பண்ணுற?”

“பைனாகுலரை தவற விட்டுட்டேன் மம்மி” உதட்டைப் பிதுக்கினாள் சபர்ணா.

“இட்ஸ் ஓகே... வேற வாங்கிக்கலாம்” என்றவர் நவியையும் சேஷாவையும் கேள்வியாய் நோக்க அவரது மகளே நடந்ததை விளக்கினாள்.

அப்பெண்மணியின் முகத்தில் சினச்சிவப்பேற “அந்த ராஸ்கல்சை சும்மாவா விட்டீங்க?” என்று பற்களை கடித்தார்.

“நாங்க என்ன ஆன்ட்டி பண்ணுறது? நானோ உங்க பொண்ணோ ஒண்டர் வுமன் இல்லையே! என்னால முடிஞ்சது அவங்களோட டாப்பை இழுத்துவிட்டது மட்டும் தான்....டூரிஸ்ட் ப்ளேஸ்ல இந்த மாதிரி அலைஞ்சான் கேஸ்கள் அதிகம்... உங்க பொண்ணை பத்திரமா பாத்துக்கோங்க” என்றாள் சேஷா.

நவியும் ஆமென்று தலையை உருட்ட அப்பெண்மணி சேஷாவுக்கு நன்றி கூறிவிட்டு அந்தச் சபர்ணாவை அழைத்துச் சென்றார்.

செல்லும் முன்னர் சேஷாவைத் திரும்பி பார்த்த அந்தச் சபர்ணா குழந்தையாய் கையாட்டி “டாட்டா” என்று கூற சேஷாவும் நவியும் பதிலுக்கு டாட்டா காட்டினர்.

அவர்களின் கார் தூரத்தில் நின்றிருக்க அந்தப் பெண்ணும் அவளது தாயாரும் காரிலேற அவளது தந்தை காரைக் கிளப்புவதைப் பார்த்துவிட்டு இருவரும் தங்களின் தோழியர் கூட்டத்தில் ஐக்கியமாயினர்.

மாலையில் ரிசார்ட்டுக்கு வந்தவர்கள் அதன் வேலையாட்கள் எதையோ முணுமுணுத்தபடி நடமாடவும் என்னவாக இருக்கும் என்று பேராசிரியைகளிடம் கேட்க அவர்களோ தேவையற்ற விசயத்தில் தலையிடாதீர்கள் என்று அதட்டிவிட அனைவரும் அவரவர் அறையில் சென்று முடங்கினர்.

மறுநாளும் ரிசார்ட்டின் சிப்பந்திகள் பரபரப்புடன் இயங்கி கொண்டிருக்க காவல்துறையினரின் நடமாட்டம் வேறு!

ஆனால் கல்லூரி மாணவிகள் வழக்கம் போல ஊரைச் சுற்ற கிளம்பிவிட்டனர். சேஷா மட்டும் நவியிடம் அது குறித்து கேள்வி எழுப்ப

“ஆத்தா நானும் உன்னோட தானே சுத்துறேன்.. எனக்கு எப்பிடி காரணம் தெரியும்?” என்று அங்கலாய்த்தாள் அவள்.

ஆனால் சேஷாவின் மனதில் மட்டும் ஏதோ பிசைந்தது.

அன்று மாலை ரிசார்ட்டுக்குத் திரும்பியவர்கள் பேராசிரியைகளின் கண்ணை மறைத்துவிட்டு அறையிலிருந்து வெளியேறினர்.

அங்கே வேலையாட்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நின்றிருக்க மற்றபடி நிசப்தத்தின் நிழல் தான்!

நவி குளிரில் நடுங்கிய கரத்தை உரசி கன்னத்தில் வைத்துக்கொண்டவள் “அடியே உன் ரசனைல தீய வைக்க... இப்பிடி ராத்திரி நேரத்துல வெளிய வர்றதுல என்னடி சந்தோசம் உனக்கு? இதுல எமர்ஜென்சி திங்ஸ் வாங்கணும்னு பொய் வேற” என்று புலம்பியபடியே வர

சேஷாவோ “இன்னைக்கு ஃபுல் மூன் நவி... எனக்கு அந்த நேரத்துல வெளிய வேடிக்கை பாத்துட்டே ஹாஸ்டல்ல நடந்து பழகிடுச்சு... இன்னைக்கும் அப்பிடி போயேன்னு என் மனசு இம்சை பண்ணுதுடி... ப்ளீஸ் என் ரசிகமனதை திட்டாதே” என்று நாடக வசனம் போல பேசிவிட்டு உற்சாகத்துடன் ரிசார்ட்டின் வெளியே இருந்த புல்வெளியில் நடக்க ஆரம்பித்தாள்.

அன்று பௌர்ணமி. மலை பிரதேசங்களில் சீக்கிரமே இருட்டத் துவங்கிவிடும். அன்றும் அப்படி தான். அதனால் தானோ என்னவோ ரிசார்ட்டின் வெளியே ஆள்நடமாட்டமே இல்லை.

நடந்தபடி இருவரும் ரிசார்ட்டின் வாயிலுக்கு வந்துவிட்டனர். அப்போது தான் அந்த ரிசார்ட்டின் ஒரு பக்கத்தில் இன்னும் சில அறைகள் இருப்பதை கவனித்தனர்.

அந்த அறைப்பக்கம் செல்ல கால்கள் எத்தனிக்கையில் “ஹாய் நீங்களா?” என்று ஒரு குரல் கேட்க இருவரும் திரும்பிப் பார்த்தனர்.

அங்கே அந்த சபர்ணா நின்று கொண்டிருந்தாள்.

அந்த முழுநிலவில் அவள் முகம் தெளிவாக தெரிந்தது. ஆனால் அதில் முன்னர் இருந்த குழந்தைத்தனம் இல்லை. கண்களில் நிர்மலம் இல்லை! குண்டூசி விழுந்தால் கூட கேட்குமளவுக்கு மயான அமைதி!

அந்த அமைதி கொடுத்த திகிலை ஒதுக்கிவிட்டு ஒருவேளை உடல்நிலை சரியில்லையோ என்று சேஷா யோசித்தாள்.

“நீங்களும் இங்க தான் தங்கியிருக்கீங்களா அக்கா?” என்று கேட்டாள் சபர்ணா.

“ஆமா... நீங்க தனியா இங்க என்ன பண்ணுறீங்கம்மா? உங்க பேரண்ட்ஸ் எங்க?” என்று நவி கேட்க

“அவங்க திங்சை பேக் பண்ண போயிருக்காங்க... நாங்க ரிசார்ட் ரூமை வெகேட் பண்ணிட்டுக் கிளம்புறோம்கா... நீங்க இங்க என்ன பண்ணுறீங்க? உங்க ரூம்கு போங்க” என்று அதட்டலுடன் ஒலித்தது அவளது குரல்.

அமைதியான சூழலில் அதட்டலும் சீற்றமுமாக ஒலித்த அந்தக் குரல் வித்தியாசமான முறையில் சேஷாவிற்கும் நவிக்கும் மயிர்க்கூச்செரிய செய்தது. இரவு நேரத்தில் தனியாக இந்தப் பெண் இங்கே என்ன செய்கிறாள்? அத்துடன் அவளது பார்வை, பேச்சு எதுவும் சரியில்லை.

சேஷாவிற்கு அந்தப் பெண்ணின் குரலில் இருந்த மாற்றம் நன்கு புலப்பட “ஆர் யூ ஓகே? உன் கைல என்ன ரெட்டா தெரியுது” என்று கவலையுடன் வினவியபடி சபர்ணாவைத் தொட வந்தாள் அவள்.

“எனக்கு ஒன்னுமில்ல.. நீங்க உள்ள போங்க” இம்முறை உறுமலாய் வந்தது அவளது குரல். அந்தக் குரலில் நாக்கு மேலன்னத்தில் ஒட்டிக்கொண்டது இருவருக்கும்.

நவியும் சேஷாவும் கதிகலங்கி போக மீண்டும் சினேகபாவம் குடிகொண்டது அந்தச் சபர்ணாவின் முகத்தில்.

“ப்ளீஸ் ரூமுக்கு போங்க” என்று கூற அவர்கள் விறுவிறுவென நடந்து தங்கள் பகுதியை நோக்கி நடந்தனர். அப்போது நவி மீது இடித்தான் ஒருவன்.

“ஏய் பாத்து போகமாட்டியா?” என்று அவள் வெடிக்க சேஷாவோ அவனை அடையாளம் கண்டுகொண்டாள்.

“நவி அன்னைக்கு சபர்ணாவை வெறிச்சு வெறிச்சு பாத்த ரெண்டு பேர்ல இவனும் ஒருத்தன்”

அந்த இளைஞனின் விழிகள் இப்போது இருவரையும் வெறிக்க புஸ்புஸ்சென்று யாரோ காதுக்குள் மூச்சு விடுவது போன்ற பிரமை அவர்களுக்கு.

அதற்கு மேல் நிற்க தைரியமின்றி இருவரும் கிளம்பிவிட்டனர். ஆனால் அந்தக் கயவன் இருக்குமிடத்தில் சபர்ணாவைத் தனியே விட்டுவிட்டோமே என்ற கவலை அவர்களைப் பீடிக்க உறக்கமே வரவில்லை இருவருக்கும். காலையில் எழுந்ததும் பேராசிரியை அவர்களை ஊருக்குத் திரும்ப பெட்டி அடுக்குமாறு கட்டளையிட சேஷாவும் நவியும் குழம்பினர்.

சுற்றுலாவில் இன்னும் மூன்று நாட்கள் மிச்சமிருக்கிறதே! பேராசிரியையிடம் அவர்கள் கேட்கவும்

“ரிசார்ட்ல ரெட்டை கொலை நடந்திருக்கு கேர்ள்ஸ்... இனிமே இங்க இருக்குறது சேஃப் இல்ல”

“கொலையா? எங்க மேம்?”

“லக்சரி ரூம்ஸ் இருக்குற ஏரியால யாரோ மர்மமா இறந்திருக்காங்க... பேசி டைம் வேஸ்ட் பண்ணாம கிளம்புங்க” என்று அவர்களை அவசரப்படுத்திவிட்டு பேராசிரியை அகல கல்லூரி மாணவர்கள் தங்களது உடமைகளை அடுக்கத் துவங்கினர்.

“சேஷா நேத்து நைட் நம்ம சபர்ணாவ பாத்த இடம் தானே லக்சரி ரூம்ஸ் இருக்குற ஏரியா?”

“ஆமா நவி... அங்க யார் இருந்தாங்கனு ஒன்னுமே தெரியலயே? ஒருவேளை சபர்ணாக்கு...” சொல்லும் போதே சேஷாவின் குரல் நடுங்கியது.

நவி அவள் கரத்தைத் தட்டிக்கொடுத்தவள் “அவளுக்கு ஒன்னும் ஆகிருக்காதுடி... நீ வருத்தப்படாத” என்று அவளுக்கும் சேர்த்து உடமைகளை அடுக்கினாள்.

அனைவரும் கிளம்பும் போது காவலர்கள் கூட்டம் அந்தப் பகுதியில் நிரம்பியிருக்க நடந்து செல்லும்போது சேஷாவின் பார்வை அங்கே கிடந்த சடலங்களின் பக்கம் சென்றது அப்போது முகத்தை மூடியிருந்த துணி விலக இறந்தவனின் முகத்தைப் பார்த்துவிட்டாள் அவள்.

அது நேற்றைய இரவில் நவியை இடித்தவன்! மற்றொருவன் அன்றொரு நாள் முந்தையவனுடன் சேர்ந்து சபர்ணாவை வெறித்தவன்.

இவர்கள் எப்படி இறந்தார்கள் என்ற கேள்வியுடன் கல்லூரி மாணவிகளுடன் சேஷாவும் நவியும் நகர்ந்தனர்.

“சபர்ணா இந்நேரம் அவளோட ஊருக்குப் போயிருப்பா” பெருமூச்சுடன் கூறினாள் சேஷா.

அப்போது ரிசார்ட் சிப்பந்திகளில் ஒருவர் பேசியது காதில் விழுந்தது.

“அந்தச் சின்னப்பொண்ணும் அவங்க பேரண்ட்சும் இறந்து போய் கொஞ்சநாள் கூட ஆகல.... அதுக்குள்ள இன்னொரு ரெட்டைக்கொலை... ரிசார்ட்ல என்ன தான் நடக்குது?”

“அந்தப் பொண்ணும் அவங்கப்பா அம்மாவும் ஆக்சிடென்ட்ல இறந்தாங்க... இந்தப் பசங்க ரிசார்ட்ல கொலை செய்யப்பட்டிருக்காங்க... ரெண்டுக்கும் சம்பந்தமில்ல”

“ஆமா சேகர்... அந்தப் பொண்ணு வந்த காரை இவனுங்க தான் ஃபாலோ பண்ணிருக்கானுங்கனு போலீஸ் சொல்லிச்சே, நீ கேக்கலயா?”

“இந்தப் படுபாவிங்களா அதுக்குக் காரணம்?”

“ஆமாடா சேகர்... இவனுங்க கார்ல துரத்துனதை பாத்துட்டு அந்தப் பொண்ணோட அப்பா காரை வேகமா ஓட்டுனதுல தான் அவங்களுக்கு ஆக்சிடெண்ட் ஆயிடுச்சு... அதுல தான் அவங்க ஸ்பாட் அவுட்”

நவியும் சேஷாவும் இதைக் கேட்டபடி தங்களது பேரூந்தில் ஏறினர். இந்த மிருகங்கள் அன்று சபர்ணாவை வெறித்தனர். பின்னர் யாரோ ஒரு குடும்பத்தின் விபத்துக்குக் காரணமாகி விட்டனர். இவர்களுக்கு இந்தத் தண்டனை தேவை தான் என்று இருவரும் எண்ணிக்கொண்டனர்.

ரிசார்ட்டுக்கு வெளியே போலீசாரின் வாகனமும் கல்லூரிப்பேருந்தும் நின்று கொண்டிருக்க போலீசார் பேசியது அவர்களின் செவியில் விழுந்தது.

“அந்தக் குட்டிப்பொண்ணு சபர்ணா குடும்பத்துக்கு நடந்த ஆக்சிடெண்டுக்கு இவனுங்க தான் காரணம்... அந்த ஆக்சிடெண்ட் நடந்து சூடு ஆறுறதுக்கு முன்னாடி இவனுங்க செத்துட்டானுங்க... கடவுள் இருக்கார்”

சபர்ணா இறந்துவிட்டாளா? ஆனால் நேற்றைய இரவில் தங்களிடம் பேசினாளே என்று சேஷாவும் நவியும் அதிர்ந்தனர். அப்போது அவர்களிடமிருந்து சில அடிகளில் கண்ணுக்கெட்டும் தொலைவில் இருந்த குன்றில் ஒரு பதின்வயது பெண் அமர்ந்திருந்தாள்.

காற்று வேகமாய் வீசியதில் சேஷாவின் பார்வை அங்கே திரும்ப அந்தப் பெண்ணும் திரும்பினாள். அவள் சபர்ணா!

பார்க்கும் தொலைவில் இருந்ததால் அவள் முகத்தில் தெரிந்த சீற்றத்தை சேஷாவால் காணமுடிந்தது.

“நவி... நவி சபர்ணா” என்று அத்திசை நோக்கி கை காட்டினாள் அவள்.

நவியைப் பார்த்த சபர்ணா புன்னகைத்தாள்! அந்தப் புன்னகையில் இரத்தம் உறைந்து போக இருவரும் பேரூந்தில் ஏறினர்.

ஏறுபவர்களைப் பார்த்தபடி குன்றின் மீதிருந்து காற்றில் கரைந்து காணாமல் போனாள் சபர்ணா.

பேருந்து சென்று கொண்டிருக்க பயத்தில் கண்களை மூடியிருந்தனர் சேஷாவும் நவியும்.

அப்போது இருவருக்கும் காதில் யாரோ முணுமுணுக்கும் சத்தம் கேட்க ஒருவர் கரத்தை மற்றொருவர் இறுக்கமாகப் பற்றிக்கொண்டனர்.

“பயந்துட்டீங்களா அக்கா? அவங்க எங்களை சாகடிச்ச மாதிரி உங்களையும் சீரழிக்க நினைச்சாங்க... அதுக்காக தான் ரிசார்ட்ல ரூம் போட்டாங்க... ஆனா அவங்க உங்களைத் தொடுறதுக்கு முன்னாடி நான் கொன்னுட்டேன்... நான் ஒண்டர் வுமன் இல்ல... ஆனா என்னால முடிஞ்சது அவங்களை கொன்னு உங்களை காப்பாத்திட்டேன் அக்கா”

கடைசி வார்த்தை முடித்த போது ஏதோ வேகமாய் முகத்தில் மோதிய உணர்வு நவிக்கும் சேஷாவுக்கும். அங்கே மயான அமைதி! பேருந்தில் இருந்த அனைவரும் ஒரே நேரத்தில் கண் மூடியிருந்தனர். இருவரும் ஒரே நேரத்தில் கண் விழித்து பார்க்க ஜன்னலுக்கு வெளியே தெரிந்த கொண்டை ஊசி வளைவின் அருகே சபர்ணாவின் உருவம் தெரிந்தது.

அவள் கையசைத்து டாட்டா காட்ட நவியும் சேஷாவும் கண்ணீர் வடித்தபடி பதிலுக்குக் கையசைத்தனர். பேருந்தின் நகர்வால் அவள் கடந்து தூரமாய் போய்விட்டாள். பின்னர் மசமசவென தெரிந்த அவள் உருவம் சுத்தமாய் மறைந்து போனது. தான் செய்த சிறு உதவிக்கு இறந்த பின்னரும் தன்னைப் பாதுகாத்த சபர்ணாவை எண்ணி சேஷாவின் கண்கள் ஊமையாய் கண்ணீர் சிந்தியது. அவளுக்குள்ளும் ஒரு மயான அமைதி பீடித்தது.

***********

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்

பயங்கரமா எழுதிருக்கேனானு தெரியல... ஆனா ரீசண்டா நான் பாத்த நியூசை இதுல ஆட் பண்ணிட்டேன்... அந்தக் கொடைக்கானல் சம்பவம் ரியலா நாங்க ஹையர் செகண்டரில டூர் போனப்ப நடந்தது. நியூஸ்ல ஸ்கூல்கள்ல மாணவிகளுக்கு டிரஸ் கோட் மாத்தணும்னு சொல்லிருந்தாங்க... அப்போ மூஞ்சிபுக்ல சில பதிவுகள்ல “மாணவிகளோட கால்கள் வெளிய தெரியுறது தவறான எண்ணத்தை தூண்டுது’னு ஒரு அறிவுஜீவி சொல்லிருந்தாப்ல... அந்த போஸ்டை ஆதரிச்சு ஒன்றல்ல ரெண்டல்ல கிட்டத்தட்ட இருநூற்று ஐம்பத்து நான்கு கமெண்ட்கள்! அப்போ எனக்கு என்ன தெரிஞ்சுதுனா கிட்டத்தட்ட 254 Pedophile இருக்காங்க என்பது தான்... அந்த நியூஸை நுழைச்சு எழுதியாச்சு.. கொஞ்சம் நிம்மதியா இருக்கு இப்போ.


 

selvipandiyan

Member
Member
என்ன சொல்லன்னே தெரியலை மா.இந்த உலகம் எதை நோக்கி போய்கிட்டு இருக்கு?
 

Nithya Mariappan

✍️
Writer
என்ன சொல்லன்னே தெரியலை மா.இந்த உலகம் எதை நோக்கி போய்கிட்டு இருக்கு?
உலகம் தப்பு செய்யுறவங்களை காப்பாத்துறதுக்கு பாதிக்கப்பட்டவங்க மேல தான் கட்டுப்பாடுகளை திணிக்குதும்மா😕😕😕
 

Nithya Mariappan

✍️
Writer

Nithya Mariappan

✍️
Writer

Nithya Mariappan

✍️
Writer
நச்சுன்னு தலையில் அடிக்கிற மாதிரியான கதை.
தேங்க்யூ சிஸ்😍😍😍
 

Latest profile posts

மக்களே!!!
"உன் இதயச்சிறையில் ஆயுள் கைதியாய் மாறிடவே..."
பன்னிரண்டாவது அத்தியாயம் பதிவிட்டிருக்கேன்... படிச்சிட்டு உங்க கருத்த சொல்லுங்க..☺️☺️☺️

மக்களே!!!
"நான் தொலைத்த நாட்களெல்லாம் மறுபடியும் மலருமா..!!!"
இருபத்திரண்டாவது அத்தியாயம் பதிவிட்டிருக்கேன்... படிச்சிட்டு உங்க கருத்த சொல்லுங்க..☺️☺️☺️

மக்களே!!!
"நான் தொலைத்த நாட்களெல்லாம் மறுபடியும் மலருமா..!!!"
இருபத்தொன்றாவது அத்தியாயம் பதிவிட்டிருக்கேன்... படிச்சிட்டு உங்க கருத்த சொல்லுங்க..☺️☺️☺️

ஓம் சாயிராம்.
Sorry for posting it late.
படித்து மகிழுங்கள்;பிடித்திருந்தால் தொடர்ந்து படியுங்கள்; பிரியமுடன் உங்கள் கருத்துக்களை என்னிடம் பகிருங்கள்.
மக்களே!!!
"உன் இதயச்சிறையில் ஆயுள் கைதியாய் மாறிடவே..."
பதினொன்றாவது அத்தியாயம் பதிவிட்டிருக்கேன்... படிச்சிட்டு உங்க கருத்த சொல்லுங்க... ☺️☺️☺️

New Episodes Thread

Top Bottom