நீ(தி) எங்கே?

Nithya Mariappan

✍️
Writer
நீ(தி) எங்கே?

தூக்கமின்மையால் எரிந்த கண்களை தண்ணீரை அடித்துக் கழுவினாள் அவள். ஏனோ இந்த நாள் வருகிறது என்றால் உறக்கம் அவளிடமிருந்து விலகிவிடுகிம். கடந்த மூன்றாண்டுகளாக இது வாடிக்கை தான்.

ஏனோ மூச்சு அடைப்பது போன்ற உணர்வு. மூளையின் சாம்பல்வண்ண செல்கள் வேலைநிறுத்தம் செய்து விட்டதோ? அவளுக்கு மட்டும் தான் அப்படி தோணுகிறதா?

இல்லை என்பதை உறுதிபடுத்தும் விதமாக அவளது அறைக்கு வெளியே விசும்பல் சத்தம் கேட்டது. கூடவே “அழாத கமலா... நம்ம அழுதா நீலுவும் உடைஞ்சிடுவா” என்ற ஆண் குரல் ஒன்று சோர்வாய் ஒலித்தது.

பாறாங்கற்களைக் கட்டிவைத்தது போல கனத்தது கால்கள். இதயத்தின் பாரம் தான் கால்களில் இறங்கிவிட்டது போல என்று விரக்தியுடன் யோசித்தபடி அறைக்கதவைத் திறந்து ஹாலுக்கு வந்தாள் அவள், நீலிமா.

அவளைக் கண்டதும் அங்கே இருந்த இருவரில் கமலா என்றவர் கண்களை புடவை முந்தானையில் துடைத்துக்கொண்டார்.

“எழுந்துட்டியாமா? காபி குடிக்கிறியா?” அவளுக்காக மலர்ந்த முகமும் சிரித்த இதழும் நீலிமாவை இன்னும் கலங்க வைத்தது.

“இல்ல அத்தை... எனக்கு மூச்சு முட்டுற மாதிரி இருந்துச்சு... அதான் இங்க வந்தேன்” பரிதாபமாக உரைத்தவளின் விழிகள் அவர்களுக்கு எதிர்பக்க சுவரை ஏறிட்டது.

அங்கே வசீகரப்புன்னகையுடன் புகைப்படச்சட்டத்தில் அடங்கியிருந்தான் திவாகர், அவளது கணவன். அவளது பார்வை சென்ற திக்கில் மற்ற இருவரின் பார்வையும் செல்ல மூவருமே வாய் விட்டுச் சொல்லாது மனதிற்குள்ளேயே அழுது அரற்றிக்கொண்டனர். ஏனெனில் அன்று அவன் அவர்களை விட்டுப் பிரிந்த நாள்!

அன்றோடு அவன் மறைந்து மூன்று வருடங்கள் ஆகியிருந்தது. இதே ஹாலில் தான் தோளில் பேக்குடன் “இந்தத் தடவை நாங்க போற ட்ரிப் வேற லெவல்ல இருக்கும் நீலு... நீ கன்சீவா இல்லனா உன்னையும் அழைச்சிட்டுப் போயிருப்பேன்” என்றவனும்

“அஹான்! எனக்கு இந்த ட்ரெக்கிங்லாம் சுட்டுப் போட்டாலும் வராது சாமி... நீங்க வழக்கம் போல என்ஜாய் பண்ணீட்டு வாங்க... நானும் உங்க பேபியும் உங்களுக்காக வெயிட் பண்ணுறோம்” என்று அவனை கேலி பேசி வழியனுப்பி வைத்த அவளும் நீலிமாவின் கண்முன்னே திரைப்பட பாத்திரங்கள் போல நடமாடினர்.

திடீரென யாரோ கால்களைக் கட்டிக்கொள்ளவும் திடுக்கிட்டவள் குனிந்து நோக்க “மம்மி” என்ற சிணுங்கலுடன் அவளை நிமிர்ந்து பார்த்தான் அவர்களது மகன் கரண்.

அவனைத் தூக்கிக் கொண்டவள் “இப்போ தான் எழுந்தியா செல்லம்?” என்று கேட்க ஆமென தலையாட்டியவன்

“நீ இல்லயா, பயந்துத்தேன் மம்மி” என்று மழலையில் மிழற்றினான் அவன்.

“மம்மி எங்கயும் போகல... இன்னைக்கு சண்டே தானே... நம்ம குளிச்சிட்டு சாப்பிட்டுட்டு விளையாடுவோம்... சரியா?” என்று கேட்க சரியென்று தலையாட்டினான் கரண்.

அவனைக் குளிப்பாட்டி உடைமாற்றி கமலாவிடம் ஒப்படைத்துவிட்டு மாமனார் பரசுராமனிடம் வந்தாள் நீலிமா. சர்க்கரை நோயாளியான அவர் இன்னும் மாத்திரை போடவில்லை.

அதட்டி உருட்டி அவரை மாத்திரையை விழுங்க வைத்தவள் “நம்ம அழுறதால திவா திரும்பி வந்துடப்போறதில்ல மாமா... எனக்கும் கரணுக்கும் உங்களையும் அத்தையையும் விட்டா யார் இருக்கா? ப்ளீஸ் உங்க ஹெல்த் விசயத்துல அசட்டையா இருக்காதீங்க” என்றாள் வலியுடன்.

அவளது நினைவுகள் சிறகடித்துப் பறந்து சில ஆண்டுகளுக்கு முன்னே காலப்பயணத்தை நடத்தியது.

தாய் தந்தையற்று தொண்டு நிறுவனம் நடத்திய ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்தவள் படித்து மென்பொருள் நிறுவனத்தில் காலடி எடுத்து வைத்த தினத்தில் தான் திவாகரைச் சந்தித்தாள். அவளது டீம் மேட் என்ற வகையில் எவ்வித கல்மிசமும் இல்லாமல் பழகியவன் அவளுக்கு நண்பனானான். பின்னர் அவர்கள் காதலிக்கவும் செய்ய பெற்றோரின் சம்மதத்துடன் அவளைக் கரம் பிடித்தான் திவாகர்.

அவர்களின் இனிய இல்லறத்தின் அடையாளமாக கரண் அவள் வயிற்றில் உதித்து ஆறு மாதங்கள் கடந்த நிலையில் தான் திவாகர் ஒரு ட்ரெக்கிங் கிளப் மூலம் தேனி மாவட்டத்திலுள்ள குரங்கணி மலைப்பகுதிக்கு ட்ரெக்கிங் செல்வதாகக் கூறினான்.

இம்மாதிரி குறிப்பிட்ட கால இடைவெளியில் ட்ரெக்கிங் செல்வது அந்தக் கிளப் மெம்பர்களுக்கு வழக்கம் தான். வழக்கம் போல எண்ணி அவனது பெற்றோரும் மனைவியும் திவாகரை வழியனுப்பி வைத்தனர்.

ஆனால் ஒரு நாள் செய்தி தொலைக்காட்சிகள் அனைத்திலும் வந்த செய்தி நீலிமாவின் வாழ்க்கையைப் புரட்டிப்போட்டுவிட்டது.

“தேனி மாவட்டம் போடி நாயக்கனூர் அருகே உள்ள குரங்கணி வனப் பகுதியில் மலையேற்றப் பயிற்சியில் ஈடுபடச் சென்ற 36 பேர் அங்கே ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கித் தவிப்பு! உயிரிழப்பு பதினைந்தாக இருக்கலாம், வனத்துறை வட்டாரம் தகவல்”

அதை கேட்டதும் இடிந்து போய் அமர்ந்துவிட்டனர் நீலிமாவும் திவாகரனுடைய பெற்றோரும். யாருக்கு என்னவாயிற்றோ என்று தெரியாது பதறியவர்கள் ட்ரெக்கிங் கிளப்பிற்கு அழைத்து விசாரிக்க அதன் ஊழியர்களோ தேனி அரசு மருத்துவமனையில் தான் சடலங்கள் உள்ளது என்று மட்டும் தெரிவித்தனர்.

கமலாவும் பரசுராமனும் எவ்வளவோ தடுத்தும் அவர்களுடன் தானும் தேனிக்குச் சென்றவளுக்குத் திவாகரன் கிடைத்தான், கருகிய நிலையில்.

அன்று அவள் அழுத அழுகையைப் பார்த்து சுற்றி இருந்தவர்களின் இதயமே உறைந்து போனது எனலாம்.

மலையேற்றத்திற்கு அழைத்து வந்த க்ளப்பின் மீதும், வனத்துறை மீதும் குற்றச்சாட்டுகள் அடுக்கப்பட்டது.

“நாங்க பெர்மிசனோட தான் ட்ரெக்கிங் போனோம்... எங்க கிட்ட ஃபீஸ் வாங்கிட்டு தான் ஆபிசர்ஸ் உள்ள அலோ பண்ணுனாங்க” என்றார் மலையேற்றக் குழுவினருடன் வந்திருந்த பொறுப்பாளர் ஒருவர்.

வனத்துறையினரோ “நாங்க சொன்ன ரூட்ல போகாம கொழுக்குமலை எஸ்டேட்டுக்கு ட்ரெக்கிங் க்ரூப் போயிருக்காங்க... அந்த வழில ட்ரெக்கிங் போறதுக்கு பெர்மிசனே கிடையாது... இது முழுக்க முழுக்க ட்ரெக்கிங் க்ளப்போட தப்பு” என்றனர்.

இன்னொரு பக்கமோ “இதுக்கு காரணம் அங்க இருந்த விவசாயிங்க தான்... அவங்க தான் தீ கொளுத்தியிருக்காங்க... அந்த தீ தான் மளமளனு பரவிடுச்சு” என்றனர் க்ளப் நிர்வாகத்தினர்.

குரங்கணி மலையடிவார கிராம மக்களோ “அவங்க இறங்குன இடம் மஞ்சப்புல் நிறைஞ்ச இடம்... அந்தப் புல்லு வெயில் காலத்துல காய்ஞ்சு போய் இருக்குங்க... அது ஒன்னோட ஒன்னு ஒரசுனா கூட தீப்பத்திக்கும்... எங்களுக்கும் புள்ளக்குட்டிங்க இருக்கு சாமி... நாங்க இப்பிடி ஒரு காரியத்த பண்ணுவோமா?” என்று பரிதாபமாக பதிலளித்தனர்.

இத்தனைக்கும் அந்த மக்களும் வனத்துறையினரும் சேர்ந்து தான் சிலரைக் காப்பாற்றியும் இருந்தனர்.

காட்டுத்தீயில் சிக்கி தப்பியவர்களோ “இந்த க்ளப்ல லாஸ்ட் டைம் ட்ரக்கிங் போனப்போவே ஒரு இடத்துல வைல்ட் ஃபயரை பாத்தோம்... அது ஒன்னும் அவ்ளோ பெரிய விசயமில்லனு நினைச்சிட்டேன்... இப்போ தான் அதோட தீவிரம் புரியுது” என்றனர்.

கொழுக்குமலை எஸ்டேட் மீதும் குற்றம் சாட்டப்பட்டது. இம்மாதிரி ட்ரக்கிங் க்ளப்களுடன் இணைந்து பணத்திற்காக ஆபத்தான இடங்கள் பற்றி அக்குழுவினருக்குத் தெரியாமல் மறைக்கின்றனர் என்பதே அது.

அதே நேரம் வனத்துறையினரின் மீதும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இந்திய வனவியல் ஆய்வு மையம் அனுப்பிய தகவல்களை அவர்கள் கண்டுகொள்ளவே இல்லை. தேனி மாவட்டம் போடிக்கு அருகில் வெப்ப ஒழுங்கின்மை நிலவுவதாக இந்திய வனவியல் மையம் அனுப்பிய தகவல்களை வனத்துறையினர் மெத்தனதுடன் கண்டுகொள்ளாததால் தான் உயிரிழப்பு அதிகரித்துவிட்டது என்றும் கூறப்பட்டது.

எது எப்படியோ யாரோ ஒரு சிலரின் அலட்சியமும் மெத்தனமும் பணத்தாசையும் அன்றைய தினம் பதினைந்து பேரை காவு வாங்கி இறந்த பதினைந்து பேரின் குடும்பங்கள் அன்று அல்லாடி அழக் கூட திராணியற்று போனது உண்மை.

அதில் சிலர் புதுமணத் தம்பதியினர்! ஒரு பெண்மணி தனது மகள் மற்றவர்களைக் காப்பாற்றிவிட்டு தீயில் சிக்கி இறந்துவிட்டதாகச் சொல்லி அழுதது இப்போதும் நீலிமாவுக்கு நினைவிருக்கிறது.

அந்நிகழ்வுக்குப் பின்னர் சில நாட்கள் பரபரப்பாக இச்செய்தி தொலைகாட்சிகளில் ஒளிபரப்பானது. முதலமைச்சரே நேரடியாக அங்கே வந்தார் என்றனர். அலட்சியத்துடன் இருந்தவர்கள் வனத்துறையாக இருந்தாலும் சரி, ட்ரெக்கிங் கிளப்பாக இருந்தாலும் சரி, அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றனர்.

இறந்தவர்களின் குடும்பத்தினர் தங்களவர்களின் இறப்பிற்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் அக்கொடிய நிகழ்வு கொடுத்த வலியுடன் காத்திருந்தனர்.

ஆனால் வழக்கம் போல குற்றம் சாட்டப்பட்ட ட்ரெக்கிங் க்ளப், வனத்துறை என்று யாருமே சட்டத்தின் முன்னே நிறுத்தப்படவில்லை. காலம் கடக்க கடக்க விபத்தின் தீவிரம் நீர்த்துப் போய்விட இறந்த நபர்களின் குடும்பத்தினரைத் தவிர மற்றவர்கள் அதை மறந்தே விட்டனர்.

செய்தி தொலைகாட்சிகளுக்கு அடுத்தடுத்த பரபரப்பான செய்திகள் கிடைக்க குரங்கணி காட்டுத்தீ விபத்து மெல்ல மெல்ல அவர்களின் கவனத்திலிருந்து கலைந்தது.

இதோ மூன்றாண்டுகள் கழித்தும் நீலிமா அந்த விபத்து உண்டாக்கிய ரணத்துடன் வாழ்கிறாள்! பரசுராமனும் கமலாவும் பேரனையும் மருமகளையும் பார்த்து மகன் நினைவை ஆற்றிக்கொள்கின்றனர்.

ஆனால் அவர்களுக்கு நீதி தான் கிடைக்கவில்லை! நீலிமா மகனுக்குச் சாதம் ஊட்டும் மாமியாரையும், நெஞ்சை நீவியபடி சாய்வுநாற்காலியில் கண் மூடி இருக்கும் மாமனாரையும் பார்த்துவிட்டுக் கண் கலங்கினாள்.

அவள் கண்கள் திவாகரனின் புகைப்படத்தை ஏறிட்டது. நீயும் இல்லை, நீதியும் இல்லை என்று முணுமுணுத்தது அவளது உதடுகள்!

***********

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்🙂

இன்னைக்கு பிரதிலிபி டெய்லி டாபிக்ல குடுத்த தலைப்பு "trekking"... 2018ல நடந்த குரங்கணி காட்டுத்தீ விபத்துல ட்ரெக்கிங் டீம்ல 15 பேர் சம்பவ இடத்துல இறந்தது ரொம்ப பரபரப்பா பேசப்பட்டுச்சு.. அதை வச்சு தான் எழுதிருக்கேன்... இப்போ அந்தக் கேஸ் என்னாச்சு, யாராச்சும் தண்டிக்கப்பட்டாங்களா இந்த விவரம் எதுவும் இண்டர்நெட்டில் இல்லை. விவரம் தெரிஞ்சவங்க கொஞ்சம் ஷேர் பண்ணுங்க🙂...​
 

Latest profile posts

மக்களே!!!
"உன் இதயச்சிறையில் ஆயுள் கைதியாய் மாறிடவே..."
பன்னிரண்டாவது அத்தியாயம் பதிவிட்டிருக்கேன்... படிச்சிட்டு உங்க கருத்த சொல்லுங்க..☺️☺️☺️

மக்களே!!!
"நான் தொலைத்த நாட்களெல்லாம் மறுபடியும் மலருமா..!!!"
இருபத்திரண்டாவது அத்தியாயம் பதிவிட்டிருக்கேன்... படிச்சிட்டு உங்க கருத்த சொல்லுங்க..☺️☺️☺️

மக்களே!!!
"நான் தொலைத்த நாட்களெல்லாம் மறுபடியும் மலருமா..!!!"
இருபத்தொன்றாவது அத்தியாயம் பதிவிட்டிருக்கேன்... படிச்சிட்டு உங்க கருத்த சொல்லுங்க..☺️☺️☺️

ஓம் சாயிராம்.
Sorry for posting it late.
படித்து மகிழுங்கள்;பிடித்திருந்தால் தொடர்ந்து படியுங்கள்; பிரியமுடன் உங்கள் கருத்துக்களை என்னிடம் பகிருங்கள்.
மக்களே!!!
"உன் இதயச்சிறையில் ஆயுள் கைதியாய் மாறிடவே..."
பதினொன்றாவது அத்தியாயம் பதிவிட்டிருக்கேன்... படிச்சிட்டு உங்க கருத்த சொல்லுங்க... ☺️☺️☺️

New Episodes Thread

Top Bottom