• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

நான் யார்?

Nithya Mariappan

✍️
Writer
நான் யார்?

“கவினம்மா! என்ன பண்ணுறிங்க? கதவைத் திறங்க... உங்க பையன் என்ன காரியம் பண்ணி வச்சிருக்கான் பாருங்க”

காலையில் பள்ளிக்குப் புறப்படும் அவசரத்தில் காலையுணவோடு மதியவுணவையும் சேர்த்து சமைத்தபடி என் மகன் கவினைப் பள்ளிக்குக் கிளப்பும் மாபெரும் பணியைச் செய்து கொண்டிருக்கும் அம்மாவுக்குக் காபியைப் போட்டு நான் நீட்டிய நேரத்தில் தான் பக்கத்து வீட்டுப்பெண்மணியின் குரல் வாயிலில் கேட்டது.

இரண்டு படுக்கையறை, ஒரு ஹால், சமையலறை கொசுறாக வராண்டாவும் வீட்டின் முன்னே பூச்செடிகள் வைக்க சில அடிகள் இடமும் விட்டு, நான்கு பக்கமும் காம்பவுண்ட் சுவர் அரணாய் நிற்கும் வீடு எங்களுடையது.

கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்த என்னை அசூயையாகப் பார்த்தபடி கிரில் கேட்டுக்கு மறுபுறம் தனது மகன் அஸ்வந்துடன் நின்று கொண்டிருந்தார் பக்கத்து வீட்டுப்பெண்மணி கலா.

நைட்டியில் கைகளைத் துடைத்தபடி “என்னாச்சு அஸ்வந்தம்மா?” என்று நான் வினவியது தான் தாமதம் படபடவென கடுகு போல பொரிய துவங்கினார்.

“இன்னும் என்னாகணும்? என் மகன் முட்டிய பாருங்க... உங்க பையன் கவின் நேத்து ஸ்கூல்ல இவனை அடிச்சுத் தள்ளி விட்டதுல நல்ல சிராய்ச்சு புண்ணாகிருக்கு... த்ரீ ஃபோர்த் ஷார்ட்ஸ் போட்டதால நேத்து தெரியலை... காத்தால குளிச்சிட்டு டவலோட வந்தப்ப முட்டிய பாத்தா இப்பிடி காயமா இருக்கு... என்ன நினைச்சிட்டிருக்கான் உங்க மகன் கவின்? நீங்க அவனை படிக்கிறதுக்கு ஸ்கூலுக்கு அனுப்புறீங்களா இல்ல கூட படிக்கிற பசங்களை அடிச்சு முட்டிய உடைக்குறதுக்கு அனுப்புறீங்களா?”

எனக்கு அவரது பேச்சிலிருந்த கோபத்தின் நியாயம் புரிந்தது. பிள்ளையின் உடலில் காயத்தைக் கண்ட அன்னைக்கு வந்திருக்க கூடிய நியாயமான கோபம் தான். ஆனால் என் மகன் கவின் இப்படி முரட்டுத்தனமாக நடந்து கொள்பவன் இல்லை.

அவனுண்டு அவனது படிப்புண்டு என்று மட்டுமே இருப்பவனா இப்படி சக மாணவனைக் காயப்படுத்தியிருக்கிறான்? என்னால் நம்ப முடியவில்லை.

இருப்பினும் அஸ்வந்தின் அம்மா ஏன் பொய் சொல்ல வேண்டும்?

அவனையே அழைத்துக் கேட்டேன் நான்.

கவினோ கேட்டிற்கு அப்பால் அன்னையுடன் நிற்கும் அஸ்வந்தை முறைத்துப் பார்த்தபடி என் நைட்டியைப் பற்றிக்கொண்டான்.

“ஏன் கவின் அஸ்வந்தை அடிச்சு தள்ளி விட்டிருக்க? பாரு, அவன் முட்டியில காயம் பட்டிருக்கு”

“அவன் தான்மா என்னை வம்பு இழுத்தான்... அதான் நான் அடிச்சேன்”

கோபத்தை அடக்க முயன்று தோற்று உறுமலாய் வெளிக்காட்டியது அவனது குரல். இந்த ஏழு வருடத்தில் அவனிடம் நான் கேட்டறியாத குரலும் பார்த்தறியாத கோபமுமாய் நின்ற என் மகன் எனக்கே புதியவனாகத் தோற்றமளித்தான் அக்கணம்.

“செய்யுறதையும் செஞ்சுட்டு எவ்ளோ அகம்பாவமா பதில் சொல்லுறான் பார்த்திங்களா? இது தான் நீங்க பிள்ளை வளர்க்குற லெச்சணமா? அது சரி, தகப்பன் இல்லாத பிள்ளை தறுதலைனு சும்மாவா சொன்னாங்க... இது தான் கடைசி தடவை, இனிமே உங்க மகன் என் பையனை அடிக்குற வேலை வச்சுக்கிட்டா டேரக்டா ஸ்கூல் ஹெச்.எம்மை பார்த்து கம்ப்ளைண்ட் பண்ணிடுவேன்”

அஸ்வந்தின் அம்மாவின் எச்சரிக்கையயும் தாண்டி என்னைச் சுட்டது ‘தகப்பன் இல்லாத பிள்ளை தறுதலை’ என்ற வார்த்தை. இது என் தவறோ என் மகனின் தவறோ இல்லையே! இப்படியே விட்டுவிட்டால் இந்தப் பழி கவினின் மீது நிரந்தரமாக பதிந்துவிடும்.

நைட்டியைப் பிடித்தபடி நின்றிருந்தவனிடம் “அஸ்வந்த் என்ன சொல்லி உன்னை வம்பிழுத்தான் கவின்?” என்று நிதானமாக நான் கேட்க

“அவன் சிண்டுவை என் தங்கச்சினு சொல்லுறான்மா... அப்பிடி சொல்லாதனு சொன்னாலும் கேக்கலை... அதான் அடிச்சுட்டேன்” என்றான் கவின்.

அவனது பதிலில் எனக்கு ஆற்றாமை தான் பீறிட்டது. எதை கவின் அவமானமாகக் கருதுவானோ அதை சொல்லி அவனைக் கிண்டல் செய்ததால் வந்த வினை தான் அஸ்வந்தின் காயம்.

அஸ்வந்துக்கும் ஏழு வயது தான். உறவுச்சிக்கல்களை புரிந்து கொள்ளும் வயதில்லை அவனுக்கு. அப்படிப்பட்டவன் திடீரென சிண்டுவைக் காட்டி கவினை கிண்டல் செய்கிறான் என்றால் அதற்கு விதை அவன் வீட்டிலிருக்கும் பெரியவர்களால் தானே போடப்பட்டிருக்க வேண்டும்.

அதிலும் அஸ்வந்தின் அம்மாவிற்கு என்னைப் பற்றி புறணி பேசுவதில் அலாதி இன்பமென என் அன்னை அங்கலாய்ப்பதை அடிக்கடி செவியுற்றிருக்கிறேனே. அந்தப் புறணியை அஸ்வந்த் வரை கொண்டு செல்லவேண்டுமா என்ன! கொதிப்பில் என் வாயிலும் உஷ்ணமான வார்த்தைகள் உதித்தன.

“அஸ்வந்துக்கு இதெல்லாம் எப்பிடிங்க தெரியும்? சிண்டுவோட குடும்பத்துக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லனு நாங்க என்னைக்கோ தனியா வந்துட்டோம்... என் மகனுக்கு அம்மா அப்பா எல்லாம் நான் தான்... இந்தத் தெருவுல இருக்குறவங்க என் முதுகுக்குப் பின்னாடி பேசுறதை நான் கண்டுக்கிட்டது இல்ல... ஆனா அவங்க பேச்சுல உள்ள விஷத்தை அவங்கவங்க பிள்ளைங்க மனசுலயும் தூவுறாங்க போல... குழந்தைங்க களங்கமில்லாதவங்க... அவங்க மனசுல இன்னொரு குழந்தைய பத்தி தப்பான எண்ணத்தை விதைக்காதிங்க”

நேரடியாகவே சொல்லிவிட்டேன் நான்.

அஸ்வந்தின் அன்னையோ அதை கண்டுகொண்டால் தானே!

“தங்கச்சினு தானே சொன்னான்... வேற எதுவும் சொல்லலையே... என்ன தான் முறிச்சிட்டுக்கிட்டு வந்தாலும் உறவுமுறை அது தானே... என் மகன் என்ன தப்பா சொல்லிட்டான்? இது ஒரு காரணம்னு உங்க மகன் இவன் முட்டிய உடைச்சிருக்கான்... முதல்ல பிள்ளைக்கு நல்லது கெட்டது சொல்லி வளர்க்கப் பாருங்க... இல்லைனா பொம்பளை வளர்த்தவன் பொறுப்பத்து போவான்ங்கிற வார்த்தைய நிரூபிச்சிடப் போறான்”

கடுகடுத்துவிட்டு இடத்தைக் காலி செய்தார் அப்பெண்மணி. போகும் போதே “கட்டிக் குடுத்த இடத்துல வாழ வக்கில்லாத வாழாவெட்டிலாம் எனக்கு அட்வைஸ் பண்ணுது... அப்பனை இழந்த அரை டிக்கெட்டுலாம் என் பிள்ளை முட்டிய உடைக்குது” என்று சற்று உரத்தக் குரலில் கறுவிக்கொண்டே சென்றார்.

கவினின் கரங்கள் என்னை அணைத்துக்கொண்டது.

“அந்த ஆன்ட்டி ரொம்ப பேட் ஆன்ட்டிமா... நானும் பாட்டியும் கோயிலுக்குப் போனப்ப அவங்களும் மீனா ஆன்ட்டியும் என்னை அப்பா கூட போக மாட்டியா, சிண்டுவோட விளையாட மாட்டியானுலாம் கேட்டாங்கம்மா... சிண்டுவோட அம்மா எனக்குச் சித்தியாம்... நான் அங்க தான் இருக்கணுமாம்”

இத்தனை நாட்கள் முதுகுக்குப் பின்னே கேட்ட வம்பு பேச்சுகள் இன்று முகத்திற்கு நேரே வந்து என்னைப் பார்த்து கை கொட்டி சிரிக்கிறது.

கவினின் சிகையை வருடிக்கொடுத்தபடியே அவனை உள்ளே அழைத்துச் சென்றேன். செல்லும் போதே சிண்டுவைப் பற்றி இனி யார் அவனிடம் பேசினாலும் என்னிடம் கூறுமாறு சொல்லிவிட்டேன்.

எங்கள் இருவரையும் எதிர்கொண்ட அம்மாவோ வழக்கமான பாட்டை ஆரம்பித்தார்.

“சீரும் சிறப்புமா கல்யாணம் பண்ணி வச்சு என்ன பிரயோஜனம்? நீ இப்பிடி இங்க வந்து உக்காந்துட்டியே... இதெல்லாம் பத்தி கவலைப்படாம அந்த மனுசன் நிம்மதியா போய் சேர்ந்துட்டார்... நீ கொஞ்சம் அனுசரிச்சுப் போயிருக்கலாம்... பிடிவாதக்காரியா இருந்துட்டியே”

நான் அம்மாவிடம் பேசவில்லை. கவினிடம் பள்ளிக்குக் கிளம்புமாறு கூறிவிட்டு நானும் தயாரானேன். நானும் ஒரு பள்ளியில் தான் பணியாற்றுகிறேன், வணிகவியல் ஆசிரியையாக.

எங்கள் பள்ளியிலேயே கவினைச் சேர்த்திருக்கலாம் தான். ஆனால் என் தெருவாசிகளுக்குச் சற்றும் குறையாமல் வம்பு பேசுபவர்கள் எனது சக ஆசிரியச் சகோதர சகோதரிகள்.

யாராவது கொள்ளிக்கட்டையை வைத்து தன் தலையைத் தானே சொரிந்து கொள்வார்களா? எனவே தான் அவனை நான் வேலை செய்யும் பள்ளியில் சேர்க்காமல் வேறு பள்ளியில் படிக்க வைத்தேன். ஆனால் அங்கே எனது கடந்தகாலத்தின் துரோகியின் புத்திரியும் படிக்கிறாள் என்பது சமீபத்தில் பெற்றோர் ஆசிரியர் கூட்டத்திற்கு சென்ற போது தான் தெரிந்தது.

பார்த்தும் பார்க்காதது போல இருந்தாலும் மனம் எரிமலையாய் தகித்தது. பிரிவே இல்லாத உறவுகள் என்று இன்றைய காலகட்டத்தில் எதுவுமில்லை. ஆனால் அந்தப் பிரிவு துரோகத்தின் விளைவால் ஏற்பட்டதென்றால் எப்படி அதை மறக்க முடியும்? என்னாலும் என் பிள்ளையின் தகப்பனாகிய கலைசெல்வனையும் அவனது நிகழ்கால மனைவியையும் மறக்க முடியவில்லை.

சிண்டு என்ற சித்தாரா அவர்களின் எல்லை கடந்த காதலின் சின்னம். அவளைப் பார்க்கும் போது கவினின் கண்களில் துவேசம் வழிவதை கண்டுகொண்ட போதே எனக்குள் அபாயச்சங்கு ஒலித்தது.

இருப்பினும் அவர்களைக் கண்டுகொள்ளாதே என்று மட்டும் அறிவுறுத்தினேன் நான். ஆனால் கலைசெல்வனையும் அவனது இப்போதைய குடும்பத்தையும் என்னோடு சேர்த்து அஸ்வந்தின் அம்மா கலாவும் அந்தப் பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தில் பார்த்து விட்டார். அன்று ஆரம்பித்தது இந்தக் கலகத்தின் பிள்ளையார் சுழி.

அந்தத் தெருவே என்னை வாழத் தெரியாதவள், குடும்ப வாழ்க்கைக்குத் தகுதியில்லாதவள் என்ற ரீதியில் அதன் பின்னர் பேச ஆரம்பித்தது.

பெரியவர்களில் ஆரம்பித்து இன்று குழந்தை அஸ்வந்தில் வந்து நிற்கிறது.

இப்போதெல்லாம் அம்மாவிற்கு கூட நான் கலைசெல்வனை பிரிந்து வந்தது தவறு என்றே தோன்றுகிறது. காரணம் எங்கள் பிரிவுக்குப் பிறகு அவன் இன்னொரு குடும்பத்தை அமைத்துக் கொண்டானே. ஆனால் நானோ எனது மைந்தனுடன் இந்தப் பொல்லாத உலகில் மக்கள் என்ற பெயரில் உலாவும் மாக்களுடன் போராடி சீரழிகிறேன் என்ற எண்ணம் அவருக்கு.

காலையிலேயே மனம் குமைய பள்ளிக்கு வந்தவள் நேரே ஆசிரியர்களின் அறைக்குச் சென்று தண்ணீர் பாட்டிலைக் காலி செய்தேன். பின்னர் அன்றைய பாட கால அட்டவணையை நோட்டமிட்டேன். பதினோரு மணி இடைவேளைக்குப் பிறகு தான் எனக்கு வகுப்பு இருக்கிறது.

ஆனாலும் ஓய்வாக அமர்ந்துவிட முடியாது. நான் பணியாற்றும் மெட்ரிகுலேசன் பள்ளியின் வளாகத்திற்குள் ஒவ்வொரு ஆசிரியரும் தனது வினாடி பொழுதைக் கூட ஓய்வென்ற பொழுதில் வீணாக்கக் கூடாது என்பது எங்கள் முதல்வரின் கட்டளை.

எனவே மாதத்தேர்வு விடைத்தாள்களைத் திருத்த துவங்கினேன். வரிசையாகத் திருத்திக்கொண்டே வந்தவள் சரண்யா என்ற மாணவியின் விடைத்தாள் வந்ததும் நிறுத்திவிட்டேன்.

சரண்யா நன்றாக படிப்பவள். விளையாட்டிலும் படு சுட்டி. பள்ளியின் ஓட்டப்பந்தய வீராங்கனையும் கூட. எப்போதும் நல்ல மதிப்பெண் வாங்குபவள் இப்போது ஏன் தடுமாறிவிட்டாள்?

அவளை இடைவேளையில் அழைத்து விசாரித்தேன். தடுமாற்றத்துடன் பதில் வந்தது அவளிடமிருந்து.

“இப்பிடியே போச்சுனா பப்ளிக் எக்சாமை எப்பிடி ஃபேஸ் பண்ணுவ சரண்யா? இது சரியில்ல... டுமாரோ உன் பேரண்ட்சோட வந்து என்னைப் பாரு”

அங்கே இருந்த எனது சக ஆசிரியைகள் ரஜனியும், ராகினியும்.

“மேம்..” தயங்கினாள் சரண்யா.

“என்ன மேம்? ஆவரேஜ் ஸ்டூடண்ட் இந்த மாதிரி தடுமாறுனா அது சாதாரணம்னு தோணும்... நீ ப்ரைட் ஸ்டூடண்ட்... உன்னோட தடுமாற்றம் எனக்குச் சரியாப்படலை... எப்பவுமே நல்ல மார்க் ஸ்கோர் பண்ணுற நீ எங்க மிஸ் பண்ணுறேனு உனக்கும் தெரியணும்ல... கொஞ்சம் கவனமா இருடா”

அறிவுரை கூறி அவளை அனுப்பிவைத்தேன். பேப்பர் கட்டு முழுவதையும் திருத்தி முடித்து விட்டு முகம் கழுவ சென்றேன்.

திரும்பி வந்த போது அங்கே இருந்த இருவரும் கிசுகிசுப்பான குரலில் பேசிக்கொண்டிருந்தனர்.

“அட்வைஸ்லாம் ஸ்டூடண்டுக்குத் தான் போல... இவங்க வாழ்க்கையே இங்க அந்தரத்துல தொங்குது”

கிண்டலாய் கூறிய ரஜனி இருபத்தாறே வயதானவள். பள்ளியில் ஆசிரியையாகச் சேர்ந்து ஆறு மாதங்கள் தான் ஆகியிருக்கும். இவளுக்கு எப்படி என்னைப் பற்றி தெரியும்?

“ஆமா ரஜனி... ஆனா இனிமேலும் அந்தரத்துல தொங்காதுனு நினைக்கேன்”

இது ராகினி. என்னை விட இரு வயது மூத்தவர். என்னுடன் பணிக்குச் சேர்ந்தாலும் ஊதியம் என்னை விட கம்மி தான். அதனாலேயே என்னைக் கண்டால் ஒருவித ஒதுக்கம்.

“ஏன் மேம் அப்பிடி சொல்லுறிங்க?”

“புதுசா வந்திருக்குற விஜய் சார் கூட இப்ப ரொம்ப நெருக்கமா பேசுறாங்களே... நீங்க அதை கவனிக்கலையா?”

“கவனிச்சேன் மேம்... அவர் கூட தானே லஞ்ச் டைம்ல சாப்பிடுறாங்க... நம்ம மட்டுமில்ல முழு ஸ்கூலுக்கும் இவங்க விவகாரம் தெரியும்”

“சீச்சீ! ஏழு வயசு பையனுக்கு அம்மாவா இருந்துட்டு இந்த மாதிரி பழக்கம் வச்சுக்க இவங்களுக்கு எப்பிடி மனசு வருது? பொதுவா முதல் கல்யாணம் தோல்வியில முடிஞ்ச பொண்ணுங்க தனியா நின்னு வைராக்கியமா பிள்ளைங்களை வளர்ப்பாங்க... புருசன் சரியில்லாத பொம்பளைங்க எவ்ளோ கவனமா நடந்துக்கணும் தெரியுமா? ஆனா இந்த மதுரவிக்கு கொஞ்சம் கூட கூச்சம் நாச்சமே இல்ல... பையனை பத்தி யோசிக்காம ஆம்பளை சினேகிதம் தேடுது பாரேன்”

அனைத்தையும் நான் கேட்டுவிட்டேன். உள்ளுக்குள் கோபம் பீறிட்டது. எனக்கும் விஜய்குமான நட்பை இப்படி அசிங்கப்படுத்துகிறார்களே என்ற ஆதங்கம்.

இத்தனைக்கும் விஜய் என்னை விட ஒரு வயது இளையவர். இன்னும் சில மாதங்களில் திருமணம் வேறு முடியவிருக்கிறது. பெண் எங்கள் தூரத்து உறவு. அந்த வகையில் தான் நாங்கள் பேசிப் பழகிக்கொள்வது.

இத்தனைக்கும் அவர் என்னை சகோதரியாகத் தான் பாவித்து வருகிறார்.

அப்படி இருப்பினும் ரஜனிக்கும் ராகினிக்கும் மட்டும் எங்கள் உறவு மோசமான உறவாக தோற்றமளிக்க காரணம் நான் கணவனை பிரிந்து என் மகனுடன் தனியாக வாழ்பவள். அதனால் நட்பாகவோ சகோதரப்பாசத்துடனோ நான் எந்த ஆணுடனும் பழகக்கூடாது. அப்படி பழகினால் நான் வெட்கம் கெட்டவள்.

கோபப்பட்டு கத்தலாம் தான். ஆனால் அவ்வாறு கத்திவிட்டால் இவர்கள் வாய் மூடிவிடுமா என்ன?

அமைதியாக காட்டிக்கொண்டு வகுப்பறைக்குச் சென்றேன். பாடம் எடுத்தேன். தேர்வுத்தாள்களை வழங்கி அடுத்த முறை தேர்வில் இன்னும் நன்றாக மதிப்பெண் பெற வேண்டுமென அறிவுரை வழங்கினேன்.

இதோ மதியவுணவுக்கான நேரம் வரை என்னை அமைதியாக காட்டிக்கொண்டபடியே நேரத்தை நெட்டித் தள்ளினேன்.

ஆனாலும் மனபாரத்தின் காரணமாக தலை வலித்தது. சாப்பிட தோன்றவில்லை. தலையைப் பிடித்தபடி ஆசிரியர்களுக்கான அறையில் அமர்ந்துவிட்டேன்.

சில நிமிடங்கள் கடக்க என் முன்னே ஏதோ நிழலாடியதும் தலையை உயர்த்திப் பார்த்தேன்.

அங்கே நின்று கொண்டிருந்தது யோகா ஆசிரியர் நவீன். ஒருவித அசட்டுத்தனமான பல்லிளிப்புடன் நின்றவனை வழக்கம் போல வேண்டாவெறுப்பாக நோக்கினேன் நான்.

“என்ன மது மேடம் சாப்பிடாம உக்காந்திருக்கிங்க? இன்னைக்குக் கம்பெனி குடுக்க விஜய் சார் வரலையா? அவருக்குப் பதிலா நான் வேணும்னா ‘கம்பெனி’ குடுக்கவா?”

‘கம்பெனி’ என்ற வார்த்தையில் ஒலித்த அழுத்தமும், வேட்டைநாயின் பார்வையுமாக நின்ற அந்த மனிதனை என்ன சொல்லி திட்டலாம் என்று எனது மூளை திட்டமிட்டது.

இவன் இப்படி பல்லை காட்டிகொண்டு நிற்பதை ரஜனியோ ராகினியோ பார்த்துவிட்டால் இன்னும் அசிங்கமாக போய்விடும். எனவே விரட்டுவதில் குறியானேன் நான்.

“தலை வலி சார்... அதான் இங்க உக்காந்திருக்கேன்.. உங்களுக்கு ஏன் சிரமம்? நீங்க போய் சாப்பிடுங்க”

ஆனால் அந்த வழிஞ்சானுக்குப் போக மனமில்லை.

“இப்பிடிப்பட்ட நிலமைல உங்களைத் தனியா விட்டுட்டுப் போக மனசில்ல மேடம்... பாவம் நீங்க, இந்தச் சின்ன வயசுல தனியா ஒரு பையனை வளர்க்குறதுக்கு எவ்ளோ சிரமப்படுறீங்க? நீங்க இருக்குறப்பவே உங்க ஹஸ்பெண்ட் இன்னொரு பொண்ணோட அஃபேர் வச்சு அந்தப் பொண்ணு கன்சீவ் ஆனதால தான் நீங்க அவரை டிவோர்ஸ் பண்ணுனிங்கனு ஸ்கூல்ல பேசிக்கிட்டாங்க... இந்த இளம்வயசுல தனிமை ரொம்ப கொடுமையானது... அதுவும் எல்லாத்தையும் அனுபவிச்சுட்டு இப்ப எதுவுமே இல்லாம இருக்குற தனிமை இருக்கே, அது ரொம்ப ரொம்ப கொடுமையானது... அதுக்குத் தான் நான் கம்பெனி குடுக்கவானு கேக்குறேன்”

அவன் பேசிய இரட்டை அர்த்த வசனங்களுக்கு அர்த்தம் புரியாத அளவுக்கு மட்டியில்லை நான். நவீனைப் பற்றி ஏற்கெனவே பள்ளி முதல்வரிடம் புகாரளித்திருந்தேன். ஆனால் அவனால் மாணவ மாணவிகள் நிறைய யோகா போட்டிகளில் பெற்ற பரிசுகள் எனது புகாரின் தீவிரத்தை நீர்த்துப் போக செய்துவிட்டது.

அன்றே வேலையை விட்டிருக்க வேண்டும். ஆனால் கவினின் கல்விச்செலவுக்கு அம்மாவின் ஓய்வூதியம் மட்டும் போதாதே. அம்மாவிற்குப் பின்னர் இந்த ஓய்வூதியமும் நின்றுவிடும். அதற்காக பல்லைக் கடித்துக்கொண்டு பள்ளிக்கு வந்து செல்கிறேன்.

ஆனால் இவன் என்னை கொலைகாரியாக்காமல் விடமாட்டான் போல. என்னைப் பார்த்தால் உடற்தேவைக்காக திருமணமானவனுடன் கள்ளவுறவு வைத்துக்கொள்பவளைப் போலவா தோன்றுகிறது?

பொறுமையை இழுத்துப் பிடித்துக்கொண்டு “தனிமை எனக்குப் பழகிப்போனது தான் நவீன் சார்... அதுலயும் வீட்டுல பொண்டாட்டி இருக்கப்பவே இன்னொருத்திக்கு நூல் விடுற ஆம்பளை ஒருத்தனோட குடும்பம் நடத்துனதால எந்த ஆம்பளையையும் நம்புறதுக்கு என் மனசு ஒத்துக்கல... உங்களுக்குக் கல்யாணம் ஆகி ஏழு மாசம் ஆகுதுல்ல... உங்க ஒய்ப் இப்ப கன்சீவ் ஆகிருக்காங்கனு கேள்விப்பட்டேன்... பக்கத்து ஊர்ல அவங்கம்மா வீட்டுல தானே இருக்காங்க... எங்க சித்திக்கு அந்த ஊர் தான்... சப்போஸ் போனேன்னா அவங்க கிட்ட பேசணும்” என்றதும் நவீனுக்குத் திக்கென்று ஆனது.

“என்ன சொல்லுறிங்க மேடம்? நீங்க என் ஒய்ப் கிட்ட என்ன பேசணும்?” என்று வியர்த்து வழிய ஆரம்பித்தான்.

“நான் செஞ்ச தப்பை உங்க ஒய்ப் செஞ்சுடக்கூடாதுல்ல” கூர்மையாய் நான் பார்த்த விதத்தில் அவனுக்கு இன்னும் வியர்வை ஊற்றெடுத்தது.

“என்ன தப்பு மேடம்?” பயந்த குரலில் கேட்டான். பயம் வரத் தானே செய்யும். முப்பத்திரண்டில் திருமணம் என்ற ஒன்று தனக்கு நடக்கவே வாய்ப்பில்லை என்று வாழ்க்கையின் விளிம்புக்குச் சென்றவனுக்கு ஒரு புண்ணியவதி வாழ்க்கையளித்து உய்வித்திருக்கிறாள்.

அவளிடம் இவனது சபலத்தைப் பற்றி நான் கூறிவிட்டால் உள்ளது போச்சு நொள்ளைக்கண்ணா நிலமை ஆகிவிடாதா! அந்த பயம் தான்!

அவனது பயம் கொடுத்த திருப்தியோடு “ப்ரெக்னென்சி டைம்ல நான் கொஞ்சம் அசால்ட்டா இருந்துட்டேன்... அதே தப்பை உங்க ஒய்பும் செஞ்சுடக்கூடாதுல்ல... என்ன அவங்க கிட்ட பேசட்டுமா?” என்று நான் கேட்ட விதத்தில் கைக்குட்டையால் வியர்வையைத் துடைத்துக் கொண்டான்.

“அதுல்லாம் வேண்டாம் மேடம்... என் ஒய்பை நான் பாத்துப்பேன்... நீங்க தலை வலிக்குதுனு சொன்னிங்கல்ல, ரெஸ்ட் எடுங்க” என்று பின்னங்கால் பிடறியில் பட ஓட்டமெடுத்தான்.

இவனை நம்பி மணமுடித்தவள் இவனது உயிரைச் சுமந்துகொண்டு பைத்தியக்காரி போல அன்னை வீட்டில் ஓய்வெடுக்க இவனோ அற்ப உடற்சுகத்திற்காக என்னிடம் நூல் விடுகிறான். அசிங்கம் பிடித்தவன்!

அவன் சென்றதும் அந்த ஆசிரியர்கள் அறை எனக்குக் கழிவறையாக தோற்றமளித்தது.

ஐந்தடி பத்து அங்குலத்தில் இரண்டு கால் மிருகம் ஒன்று தனது மனதில் நிறைந்திருந்த சபலக்கழிவுகளை கழித்துவிட்டு சென்றிருக்கிறது அல்லவா!

ஏனோ குமட்டலாக வரவும் அங்கிருந்து வெளியேறிவிட்டேன். மாலை வரை இந்த மனநிலை நீடிக்க நொந்து போய் வீட்டுக்குச் சென்றேன்.

அங்கே அம்மா யாருடனோ மொபைலில் பேசிக்கொண்டிருப்பது கேட்டது.

“ஆமா! இருபத்தொன்பது வயசு தான்... என் பேரனுக்கு ஏழு வயசு ஆகுது... டி.என்.டி.எல் மெட்ரிகுலேசன்ல காமர்ஸ் டீச்சரா வேலை பாக்குறா... சமையல்ல கெட்டி... ரொம்ப அமைதியான குணம்... திருஷ்டி கழிச்ச மாதிரி முதல் கல்யாணம் டிவோர்ஸ்ல முடிஞ்சிடுச்சு... அதுல கூட என் மகளோட தப்பு எதுவுமில்ல... நீங்க இவ்ளோ தூரம் எங்களுக்காக யோசிச்சதே பெரிய விசயம்... கவின் விசயத்தை நானே மதுரவி கிட்ட பேசிடுறேன்... என் கண்ணை மூடுறதுக்கு முன்னாடி அவளுக்கு ஒரு துணை வந்துட்டா நான் நிம்மதியா போய் சேர்ந்துடுவேன்... இல்ல இல்ல... கவினால எப்பவுமே பிரச்சனை வராது... நான் இருக்குற வரைக்கும் அவன் என் பொறுப்பு... அதுக்கு அப்புறம் உங்க இஷ்டப்படி நீங்க ஹாஸ்டல்ல சேர்த்துக்கோங்க... ஆம்பளை பையன் தானே... சரி சரி... உங்க பேத்திகளுக்கு என்ன வயசு ஆகுது?.... அச்சோ... தாயில்லா புள்ளைங்களை என் மது நல்லபடியா பார்த்துப்பா... நீங்க கவலையே படாதிங்க... வர்ற வெள்ளிகிழமை குடும்பத்தோட வாங்க... பேசி முடிச்சிடலாம்”

அழைப்பை முடித்துவிட்டு திரும்பியவருடைய பேச்சின் சாராம்சம் எனக்குப் புரியாதா என்ன?

ஆனால் அம்மா தடுமாறிப்போனார்.

“எப்ப வந்த மது?”

அலைக்கழிப்புடன் கேட்டபடி நின்றவரை விரக்தி மேலிட நோக்கினேன் நான்.

“நீங்க மறுபடியும் எனக்கு வரன் பாக்குறிங்களா?”

“ஏன் பாக்கக்கூடாதா? அந்தச் சனியன் புடிச்சவன் குடும்பத்தோட சுத்துறதை பாக்குறப்ப என் வயிறு பத்தி எரியுது மது... நீ வாயும் வயிறுமா இருந்த நேரத்துல இன்னொருத்தி கூட குடும்பம் நடத்துன கேவலமான ஜென்மம் அவன்... இன்னொருத்தி புருசனை வளைச்சு போட்டுக்கிட்டு கல்யாணம் பண்ணிக்காமலே வயித்தை தள்ளிட்டு உன் கிட்ட வந்து நியாயம் கேட்டவளுக்காக நீ உன் வாழ்க்கைய உதறிட்டு வந்த... அப்ப கவினுக்கு ரெண்டு வயசு... உங்கப்பாவும் இருந்ததால நான் தைரியமா உனக்குத் துணையா நின்னேன்... நீயும் டைவர்ஸ் வாங்கிட்ட... உங்கப்பா தவறுனதுல இருந்து ஆம்பளைத்துணை இல்லாம உன்னையும் கவினையும் இங்க எப்பிடி வச்சிருக்குறதுனு நான் அல்லல்படுறேன்டி... உனக்குனு ஒரு துணை வேண்டாமா? என் மகள் மறுபடியும் குடும்பத்தோட வாழுறதை பாக்குற குடுப்பினையை குடு மது”

வரன் விவரத்தை அம்மா எடுத்துரைக்க பொறுமையாக அனைத்தையும் கேட்டேன் நான். எல்லாம் சரி தான். மறுமணம் செய்யவிருப்பவர் மனைவியை இழந்து இரு பெண் குழந்தைகளுடன் தவிக்கிறாராம்.

அவரையும் அவரது பிள்ளைகளையும் அன்பாய் அரவணைக்கும் ஒருத்தியாய் நான் இருப்பேன் என அவரைப் பெற்ற அன்னை நம்புகிறாராம். என்ன ஒன்று, எங்களின் திருமணத்திற்கு பிறகு கவின் என் அம்மாவுடன் இங்கேயே இருந்துவிட வேண்டுமாம். ஏனென்றால் அவன் அவர்களின் இரத்தம் இல்லை அல்லவா!

நான் மட்டும் அந்தக் குடும்பத்தையும் அதன் பெண் பிள்ளைகளையும் அன்னையுள்ளத்துடன் வளர்த்தெடுக்க வேண்டுமாம். அதாவது நான் வலிக்க வலிக்க பெற்றெடுத்த என் மகனை தியாகம் செய்துவிட்டு மறுமணம் செய்து கொள்ள வேண்டுமாம். கேட்கவே விசித்திரமாக இல்லை! இதை விட வினோதம் அந்த மணமகன் வீட்டாரின் கேவலமான இக்கோரிக்கையை என் அன்னை ஏற்றுக்கொண்டது தான்.

என் வாழ்க்கையின் அர்த்தமே கவின் தான். அவனது எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு மறுமணம் செய்யுமாறு வற்புறுத்திய போதே நான் ஒப்புக்கொள்ளவில்லை. காரணம் என் மனம் ஆண்களை நம்ப மறுப்பதே!

அப்படி இருக்கையில் முழுக்க முழுக்க ஏதோ ஒரு ஆண்மகனுக்கு மனைவி வேண்டுமென்பதற்காகவும் அவனது பிள்ளைகளுக்கு அன்னை வேண்டுமென்பதற்காகவும் என் பிள்ளையை நான் ஏன் துறக்க வேண்டும்?

நான் அவ்வாறு செய்ய ஒப்புக்கொள்வேன் என எனது அன்னை எப்படி எண்ணலாம்? சுரீரென கோபம் உச்சந்தலைக்கு ஏற என்னையறியாது கத்த துவங்கினேன் நான்.

“உனக்கு மனசாட்சினு ஒன்னு இருந்தா நீ இப்பிடி பேச மாட்டம்மா... என் பிள்ளைய விட்டுட்டு நான் மட்டும் எப்பிடி சந்தோசமா இருப்பேன்? அவனை ஹாஸ்டல்ல விட்டுட்டு யாரோ பெத்த பிள்ளைங்களை நான் வளர்க்கணுமா? இது நியாயம்னு உனக்குத் தோணுதா?”

“நியாயம் தர்மத்தை விட எனக்கு உன் வாழ்க்கை முக்கியம்டி”

“மண்ணாங்கட்டி வாழ்க்கை... என் மகன் இல்லாம நான் வாழுற வாழ்க்கைக்கு என்ன அர்த்தம் இருக்கும்னு நினைக்குற? அப்பிடி ஒரு வாழ்க்கையே எனக்குத் தேவையில்ல... அவங்களுக்குக் கால் பண்ணி எனக்கு இந்தச் சம்பந்தத்துல இஷ்டமில்லனு சொல்லிடு... இன்னொன்னும் சொல்லுறேன், இனிமே என் வாழ்க்கைல கல்யாணம் குடும்பம்ங்கிற அத்தியாயம் வரவே வராது... தேவையில்லாம என் விசயத்துல தலையிடாம இரும்மா”

எனது கறார் பேச்சில் அம்மாவுக்கும் கோபம் வந்துவிட்டது.

“ஏன்டி சொல்ல மாட்ட? உனக்கு புத்தி கெட்டுப் போய் அஞ்சு வருசத்துக்கு மேலாகுது... நீ மட்டும் புத்தியோட இருந்திருந்தா உன் புருசன் ஏன்டி இன்னொருத்திய தேடி போயிருக்கப் போறான்? சரி, ஆம்பளைனா சபலப்படுறது சகஜம்னு விடாம எவளோ ஒருத்தி வயித்தை தள்ளிட்டு வந்தானு அவனை விட்டுட்டு வந்தல்ல... ஒரு குடும்ப பொண்ணு என்ன செஞ்சிருக்கணும்? அஞ்சோ பத்தோ குடுத்து அவ வயித்துல இருக்குறத கலைச்சிட்டு புருசனை அதட்டி மிரட்டி உன் வழிக்குக் கொண்டு வந்திருக்கணும்... ஆனா நீ மொத்தமா வெட்டிக்கிட்டு வந்த... இதுல உனக்கு உங்கப்பா சப்போர்ட் வேற... நீ செஞ்ச காரியத்தால இப்ப அவனுக்கு என்ன நஷ்டம்? அவன் பொண்டாட்டி குழந்தைனு கௌரவமா வாழுறான்... நீ தான் ஊரார் வாயில விழுந்து தினந்தினம் அசிங்கப்படுற... நீ ஒரு முட்டாள்டி... உன் முட்டாள்தனமும் அவசரபுத்தியும் தான் உன் வாழ்க்கைக்கு உலை வச்சிடுச்சு... எக்கேடோ கெட்டு போ... என் தலை சாயுற வரைக்கும் உனக்கு நான் துணையா நிப்பேன்... அதுக்கப்புறம் இந்த உலகம் உன்னை தனியா வாழவிடாது... சீரழிச்சிடும்... இது உனக்கு இப்ப புரியாதுடி”

கோபத்தைக் கொட்டித் தீர்த்துவிட்டு தனது அறையை நோக்கி சென்றுவிட்டார்.

ஹாலில் நான் தனித்துவிடப்பட்டேன்.

இன்று மட்டும் எனக்கு எத்தனை பெயர்கள் புதிதாக கிடைத்துள்ளன.

கலாவைப் பொறுத்தவரை நான் வாழாவெட்டி.

ரஜனி ராகினிக்கோ மகனைப் பற்றிய கவலையின்றி ஆண் சினேகிதம் தேடும் வெட்கம் கெட்டவள்.

யோகா ஆசிரியர் நவீனோ கணவனை இழந்து உடற்சுகத்திற்காக அலைபவள் என சொல்லாமல் சொல்லிவிட்டான்.

என்னைப் பெற்றெடுத்த அன்னைக்கு நான் ஒரு முட்டாள், அதாவது மனைவிக்கு உண்மையாக இல்லாமல் அவளது பிரசவத்தை சாக்காக வைத்துக்கொண்டு இன்னொரு பெண்ணுடன் முறையற்ற வாழ்வு வாழ்ந்த கணவனை திருத்தாமல் அந்தப் பெண்ணை அடித்துத் துரத்தாமல் எனது வாழ்க்கையைத் தூக்கி எறிந்த முட்டாள்.

என் அன்னையைத் தவிர்த்து இவர்கள் அனைவருக்கும் கணவனின்றி நான் தனித்து வாழும் வாழ்க்கை தானே பேசுபொருள். அதே ஒழுக்கம் கெட்டவனுடன் நான் ஒரே வீட்டில் மனக்குமைச்சலுடன் வாழ்ந்திருந்தால் உத்தம பத்தினி ஆகியிருப்பேன் அல்லவா!

இப்போது மெய்யாகவே நான் யார்? வாழாவெட்டியா, வெட்கம் கெட்டவளா? உடற்சுகத்திற்கு அலைபவளா? முட்டாளா? புரியாது குழம்பி நிற்கையில் அக்குரல் என் செவியில் விழுந்தது.

“அம்மா”

சில நொடிகளில் ஓடி வந்து கட்டிக்கொண்டான் கவின். தோளில் புத்தக்கப்பையும் கையில் லஞ்ச் பேகுமாக என்னைக் கட்டிக்கொண்டவன் “உங்களுக்கு ஒன்னு குடுக்கணும்மா” என்றபடி என் கரத்தைப் பற்றி இழுத்து அமரவைத்தான்.

என்னவென நான் விழிக்கையிலேயே அவனது சட்டையில் ஒட்டப்பட்டிருந்த பொன்னிற நட்சத்திர பேட்ஜை எடுத்தான்.

எனது இடது பக்க புடவை மடிப்பில் அதை குத்தியவன் “நான் தான் எங்க கிளாசோட ஸ்டார் ஆப் த வீக்” என்று குதூகலித்தான்.

தொடர்ந்து “இன்னைக்கு மிஸ் எங்க கிட்ட அவங்கவங்க அம்மா பத்தி பேச சொன்னாங்க... அப்ப நான் உங்களை பத்தி பேசுனேன்மா... நீங்களும் டீச்சர்னு சொன்னேனா? அப்புறம் எவ்ளோ ப்ரேவ் ஆனவங்க, எவ்ளோ கைண்ட் ஹார்ட்டட் விமன்னு எல்லாமே எக்ஸ்ப்ளெய்ன் பண்ணுனேன்... நீங்க தான் எனக்கு அம்மாவும் அப்பாவும்னு சொன்னேன்... ஐ அம் அ சன் ஆஃப் அ சிங்கிள் மதர்னு சொன்னதும் மிஸ் கிளாப் பண்ணுனாங்க... கிளாஸ் ஸ்டூடண்ட்ஸ் எல்லாரையும் கிளாப் பண்ண சொன்னாங்க... இன்னைக்கு உங்களால தான் எனக்குக் க்ளாப்ஸும் பேட்ஜும் கிடைச்சிருக்கும்மா... யூ ஆர் த பெஸ்ட் மாம் இன் த வேர்ல்ட்” என்று சொன்னதோடு என் கன்னத்தில் முத்தமிட்டான்.

இவ்வளவு நேரம் இருந்த ஆதங்கம், ஆற்றாமை எல்லாம் என் மைந்தனின் முத்தத்தில் கரைந்து போனது போன்ற பிரமை.

இப்போது எனக்குப் புரிந்துவிட்டது, நான் யார் என்று. இந்த ஊராரை, சகப்பணியாளர்களை, என்னைப் பெற்ற அன்னையைப் பொறுத்தவரை நான் யாராக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகிறேன். என் மகனுக்கு நான் தான் இந்த உலகத்திலேயே சிறந்த அன்னை. இதை விட வேறென்ன வேண்டும் எனக்கு?

ஆம்! மதுரவியாகிய நான் கவினுடைய அன்னை! இனி என் வாழ்க்கை முழுவதும் அவ்வாறு தான் நான் வாழப்போகிறேன் என்ற தீர்மானத்துடன் நான் நிமிர்ந்த போது கண்ணில் கண்ணீருடன் நின்றிருந்தார் என் அன்னை.

இப்போது நான் யாரென அவருக்கும் புரிந்திருக்குமல்லவா?

*******​
 

GayuR

Member
Member
Kavin super:love:. Madhuravi character paavam... Kanavano manaiviyo avanga thunaikku unmaiya illaina, appuram antha uravule eppidi thodarnthu irukka mudiyum? Amma ve avangala purinjikalaina appuram eppidi? Nalla story sis
 

Thani

Well-known member
Member
அம்மாக்கு புரிந்தமாதிரி அனைவருக்கும் புரிந்தால் பெண்கள் வீர நடை போட்டு வாழலாம் நாட்டில் ....
கவின் சிறந்த மகன் மாணவன் .
மதுரவி நல்ல ,அம்மா ஆசிரியை
ஓநாய்கள் கூட்டத்துக்கு மத்தியில் சிங்கிள் மதர் படுற கஸ்டம் இருக்கே.....
மதுரவி பாரதியார் கண்ட புதுமை பெண் 😀👍❤️❤️
 

Nithya Mariappan

✍️
Writer
அம்மாக்கு புரிந்தமாதிரி அனைவருக்கும் புரிந்தால் பெண்கள் வீர நடை போட்டு வாழலாம் நாட்டில் ....
கவின் சிறந்த மகன் மாணவன் .
மதுரவி நல்ல ,அம்மா ஆசிரியை
ஓநாய்கள் கூட்டத்துக்கு மத்தியில் சிங்கிள் மதர் படுற கஸ்டம் இருக்கே.....
மதுரவி பாரதியார் கண்ட புதுமை பெண் 😀👍❤️❤️
தேங்க்யூ😍😍😍
 

selvipandiyan

Active member
Member
பெண்களுக்கே புரியாத போது ஆண்களையோ சமூகத்தையோ என்ன சொல்ல?
 

kothaisuresh

Well-known member
Member
கவின் சூப்பர். அவன் இருப்பான் அம்மாவுக்கு துணையா. மதுரவியோட அம்மாவே மகளுக்கு சப்போர்ட்டா பேசாதப்போ அடுத்த பெண்களைப் பற்றி சொல்லவே தேவை இல்லை
 

Latest profile posts

மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு
முள்ளில்லா முல்லைப்பூ இன்னும் இரண்டு எபியில் முடிந்துவிடும். கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணிவரை மட்டுமே இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீட்டிக்கப்படமாட்டாது. படிக்க நினைப்பவர்கள் விரைவில் படித்துவிடுங்கள். லைக்கோ கமெண்டோ சொல்லிட்டும் போங்க.

New Episodes Thread

Top Bottom