தேனும் தமிழும் - 4

வண்டியில் குமரனின் பின்புறமிருந்து இறங்கினாள் தேனு.

அவன் கிளம்ப, "உள்ள வந்துட்டுப்போ மாமா"

"இல்ல தேனு வேல இருக்கு, நா கெளம்புறேன்"

வெளியே வந்த ரத்னம், "என்னா மாப்ள அதுக்குள்ள கெளம்புற? ஏ கமலா இங்கன வா"

கணவனின் குரலில் செங்கமலமும் வர, உடன் பிறந்தவனைக் கண்டு முகம் மலர்ந்தவர், "என்ன தம்பி எப்பவும் வாசலோடயே போற, உள்ளார வந்து ஒருவாய் காபி தண்ணி குடிச்சிட்டு போ"

அவன் சிரித்து, "ஏங்க்கா நா என்ன விருந்தாளியா, இல்ல வராதவனா? காலேலயும் சாயங்காலமும் உம்மவள காலேஜ் கூட்டிட்டு போய் வர தெனமும் வரத்தான செய்யிறேன்.?"

"தெனமும் வாசலோடவே திரும்பிருறேல, உள்ளார வா உங்கிட்ட பேசணும்!"

ரத்னமும், "வா மாப்ள" என வரவேற்க யோசனையுடனேயே வீட்டினுள் நுழைந்தான்.

"தேனு" அருகிலிருந்து அழைப்புவர, பக்கத்து வீட்டை நோக்கி நடந்தாள்.

ரத்னம் குமரனிடம், "ஏ மாப்ள உனக்கு இந்த ஏற்பாட்டுல இஷ்டந்தான?"

அவன் புன்னகைத்து, "இல்லேன்னு சொன்னா விட்டுடுவீங்களா மாமா?"

"அதெப்டி விடமுடியும் ஒனக்கும் வயசாவுதுல, அத்தைக்கு உனைய பத்திதே கவல. வருஷ கணக்குல பொண்ண பாத்து ஒன்னும் அமைய மாட்டிக்குதேன்னு. இந்த இடம் மட்டும் முடுஞ்சுட்டா, உங்கம்மா கொஞ்சம் நிம்மதியா இருப்பாக"

அவன் புன்னகை மாறாமலே, "பாக்கலாம் மாமா"

கமலம், "ஏ தம்பி குரலே சரியில்லயே, மனசுல வேற என்னவும் நெனச்சிருக்கியா?"

அவன் சிரித்து, "நீதானக்கா என்னய வளத்தது, என்னய பத்தி ஒனக்கு தெரியாதா?"

"தெரிஞ்சதுனால தான, உங்கிட்ட கூடச் சொல்லாம இந்த ஏற்பாட்ட செஞ்சோம்?"

"பொறவு என்னக்கா?"

"யெனக்கென்னமோ நீ மனசுல எதையோ வச்சுகிட்டு உள்ளுக்குள்ளையே மருகுறியோன்னு தோணுதுய்யா"

"அதெல்லாம் ஒண்ணுல்லக்கா, நீயா எதாது நெனச்சுக்காத" எனச் சமாதானம் சொன்னான்.

ரத்னம், "நீ இந்தக் குடும்பத்துக்கு ஒத்த ஆம்பளப்புள்ள, உனக்கு ஒண்ணுன்னா அத்த தாங்கமாட்டாங்க மாப்ள"

"அதேன்.. அம்மா பேச்ச மறுத்து எதுவும் சொல்றதில்ல, அவுங்க சந்தோஷத்துக்காகத்தே அத்தனையும்!"

"இந்த இடம் கண்டிப்பா அமையும். நீ வேணா பாரே, வீடு நெறய புள்ளகுட்டிகளோட சந்தோஷமா இருக்கப் போற!" எனத் தமக்கை ஆரூடம் சொல்ல, புன்னகைத்தான் குமரன்.

வெளிப்பக்கம் பேச்சுச் சத்தத்தில் இவர்களின் பேச்சு தடைபட உள்ளே நுழைந்தனர், தேனுவும் அவளும்.

குமரன், "என்னம்மா எப்டி இருக்க, உன்னய தோட்டத்து பக்கங்கூடப் பாக்கவே முடியிறதில்ல?"

"காலேஜ் போய்ட்டு வந்து, வீட்ல வேல பாக்கவே நேரம் சரியா இருக்குண்ணே. இதுல எங்குட்டு தோட்டத்துக்கு வாரது.?"

"சேரி சேரி, அம்மாக்கு இப்ப எப்டி இருக்கு?"

"ஏதோ இருக்கு, மாத்தர மருந்து இருக்கப் போயி எனக்குத் துணையா உசுர பிடிச்சு வச்சுருக்கு"

கமலம், "நீ ஏன்டி இப்டி பேசுறவ, அதெல்லாம் ஒண்ணும் ஆவாது. நாங்கெல்லாம் இருக்கமில்ல?"

அவள் மெலிதாய்ப் புன்னகைக்க, தேனு காபியை கலந்து கொண்டு வந்தாள். வாயிலில் கேட்ட வண்டி சத்தத்தில் அனைவரது கவனமும் திரும்பியது.

வாசு உள்ளே வந்து கொண்டிருந்தான்.

முதலில் கண்ணில் பட்டவளை முறைத்துவிட்டு, "ஏ தேனு, வூட்டுக்கு வர சொன்ன?"

ரத்னம், "நாந்தா வர சொன்னே வாசு"

"என்ன சின்னய்யா?"

குமரன், "மொத உக்காருப்பா, பின்ன பேசலாம். தேனு வாசுவுக்குக் காபித்தண்ணி கொண்டா"

குமரனின் அருகில் அமர்ந்தவன், "எதுக்கு வர சொன்னீய சின்னய்யா?"

கமலம், "பாத்து நாளாச்சேன்னு தான்"

ரத்னம், "எங்கப்பு அண்ணனையும் பாக்கவே முடியிறதில்ல.?"

"அய்யனுக்கு அலச்சல் ஒத்துகிட மாட்டீது, அதே வாரதில்ல சின்னய்யா"

"சரி நீயாது வந்துட்டு போலாம்ல?"

தேனு, "அய்யாவுக்கு எங்க அதுக்கெல்லாம் நேரம் இருக்குது? ரெண்டு பயகள சேத்துகிட்டு ஊர்சுத்தவே, நேரம் காண மாட்டிக்கிது!"

வாசு தேனுவை முறைக்க.. குமரன் சிரித்து, "இந்த வயசுல இதெல்லா இருக்கதுதான். என்ன வழிமாறாம கவனமா இருக்கணும் வாசு, புரியுதா?"

அவனும் புன்னகைத்து, "சரிங்க மச்சான்"

அவள் வந்து வாசுவிடம் காபியைக் கொடுக்க.. வாங்க ஓரமாய் வைத்துவிட்டு, வீட்டினருடன் பேச்சில் கலந்து கொண்டான். சிறிது நேரத்தில் குமரன் கிளம்பிவிட, அவனைத் தொடர்ந்து வாசுவும் கிளம்பினான்.

அவன் வண்டியை கிளப்ப.. சின்னவள் வந்து, "என்ன ஒட்டடகுச்சி, நா குடுத்த காபிய குடிக்காமயே வச்சிட்டு வந்துட்டீய போல?"

கண்களில் கனல் பறக்க, அவளை ஒரு ஆழ்ந்த பார்வைப் பார்த்தவன் அங்கிருந்து கிளம்பினான்.

பின்னிருந்து கவனித்த தேனு, "ஏ சில்வண்டு.. என்னடி பிரச்சன, ஒங்க ரெண்டு பேருக்கும்?"

சிறியவள் கருவிழிகளை உருட்டி, "என்ன பிரச்சன, ஒண்ணுல்லயே? சில்வண்டுன்னு கூப்டாதன்னு எத்தன தடவ சொல்றது தேனு.?"

"ஆமா, இதுதான் ரொம்ப முக்கியம். வாசுண்ணே என்னத்துக்கு உனைய மொறச்சுட்டு போகுது.?"

கண்களைச் சிமிட்டி உதட்டைப் பிதுக்கி, "அது அது.. ம்ஹுகுக்கும் ஒண்ணுல்லயே"

சிறியவளின் தோளில் தட்டிய தேனு, "யெனக்கு உன்ன பத்தியும் தெரியும், எங்கண்ணன பத்தியும் தெரியும். என்னடி செஞ்ச?"

"ஆமாமா, உங்க நொண்ணன.. நீதே மெச்சுக்கணும்!"

"ஏய் வாயாடி ஒழுங்கா சொல்லுறியா, இல்லியா.?"

இனிமேலும் சமாளித்து நழுவ முடியாது என்றுணர்ந்தவள், பேருந்து நிலையத்தில் நடந்ததைச் சொன்னாள்.

தேனு முறைத்து, "இது என்னடி பேச்சு?"

"பின்ன அவுக மட்டும், பொது இடத்துல.. ஏ தலைல கொட்டலாமா.?"

"அது எப்பவும் நடக்குறது தான, நீயும் பெருசா நெனக்க மாட்டியே? இன்னிக்கு என்ன புதுசா இப்டி பேசீருக்க..?"

"ம்கும்ம், எப்பவும் வாய மூடிட்டே இருக்கமுடியுமா?"

"அதுக்காக எம்புட்டு பெரிய வார்த்தைய சொல்லீருக்க, என்னடி விவகாரம்..?" எனத் தேனு ஆராய்ச்சி பார்வைப் பார்க்க.. தலைக்குனிந்தவள், "யெனக்கு நேரமாச்சு, நா வாரேன்" என்று பக்கத்து வீட்டை நோக்கி நடந்தாள்.

மனதின் ஓரத்தில் வலி எடுக்க, கண்கள் கலங்கியது. படுக்கையில் இருந்த தாய் அறியாதபடி, முகத்தை மறைத்து சமையலறைக்குச் சென்றாள். தேனு கேட்டதற்கு என்னவென்று பதிலளிப்பாள், அவளுக்கே ஒன்றும் புரியாத நிலையில்.!

பேசும் போது எளிதாய் தோன்றிய வார்த்தையின் அர்த்தம், வேணியும் தேனுவும் கேட்டதும்தான் அதன் வீரியத்தை உணர முடிந்தது. அத்தோடு வாசுவின் பாராமுகம், ஏற்கனவே குற்றஉணர்வில் இருந்தவளை மேலும் கூனிக்குறுக வைத்தது.

என்றைக்கும் போலவே இன்றும் தனிமையைத் தனக்குத் துணைவைத்துக் கொண்டு, வாசு மற்றும் தேனு உடனான சிறுவயது கால நினைவுகளில் மூழ்கினாள். அவளின் நினைவை கலைத்துவிடாமல், நாமும் அவர்களைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.

மருது, ஊரின் முக்கியஸ்தர்களில் ஒருவர். அவரின் மனைவி விஜயா. அன்னியோன்யமான தம்பதிகள்.

வரிசையாக மூன்று பெண்மக்களை ஈன்று, ஒன்றுகூட நிலைக்காமல் பிறக்கும் போதே உயிரை தொலைத்து வெற்றுடலாய், அன்னையின் கருப்பையிலிருந்து வெளிவந்த சின்னஞ்சிறு தேவதைகளின் தாய் தந்தையர்.

நான்காவதாய்க் கருத்தரித்த விஜயா, இந்தக் குழந்தையையாவது உயிருடன் பூமிக்குக் கொண்டு வந்துவிட வேண்டும் என்ற வைராக்கியத்தோடு தன்னுயிர் தந்து தன்னவனின் உயிரணுவை, கணவனான மருதுவிடம் ஒப்படைத்த மாதரசி. அப்படிபட்ட பெண்மணியின் மனவலிமையில் பிறந்தவன்தான் வாசு.

மனைவி தந்துவிட்டு போன ஜீவனையே உயிர்மூச்சாகக் கொண்டு வாழ்ந்து வருகிறார் மருது. வாசு.. அவரது மகனென்றாலும், வளர்ந்ததென்னவோ ரத்னத்தின் வீட்டில்தான்.

மருதுவிற்கு ஒரு தமக்கை, ஒரு தம்பி. தமக்கை ரஞ்சிதம் மத்திய அரசு பணியில் இருக்கும் சங்கரனை மணந்து மும்பையில் இருக்கிறார். ரஞ்சிதம் சங்கரன் தம்பதியருக்கு இரண்டு ஆண்மக்கள். இருவரும் திருமணம் முடிந்து, தங்களின் எதிர்காலத்தைக் கணக்கிட்டு வெளிநாட்டில் குடியேறிவிட்டனர்.

மருதுவின் தம்பி ரத்னம், அவரின் மனைவி செங்கமலம். வாசு பிறந்தபோது கமலம் ஆறுமாத கர்பிணியாக இருந்தார். இவர்களின் ஒரே புதல்வி தேனு. வாசுவின் சிற்றப்பா மகள், அவனுக்கு நான்கு மாதம் இளையவள்.

தேனு, தேனிசை. தாய் மற்றும் தந்தை வீட்டில் பிறந்திருக்கும் குடும்பத்தின் ஒரே பெண்மகவு. அனுதினமும் அதிகப்படியான அன்பிலும், மகிழ்ச்சியிலும் திளைப்பவள். இதுநாள் வரை எவரிடமிருந்தும்.. மறுப்பு என்ற ஒன்றையோ, வலியின் சாயலையோ அறியாதவள்.

தாய், தந்தையர் மட்டுமின்றி, பெரியப்பா, அத்தை, மாமா, தாய்வழி சொந்தங்கள் என அனைவருக்கும் செல்ல இளவரசி. தேனுவின் முகம் சிறிது கசங்கினாலும் குடும்பமே பதறிவிடும்.

சில்வண்டின் பெயர் மங்கை. பொறுப்பற்ற தகப்பனுக்கும் நோயாளியான தாய்க்கும் பிறந்து.. தன் மனவலியை மறைக்கக் கேலி, கிண்டல், குறும்பு என எண்ணற்ற முகமூடிகளைப் போட்டுக்கொண்டு வலம்வரும் பதினெட்டு வயது பூவை.

சிறுவயதிலேயே தந்தையை இழந்த மங்கையின் தகப்பன் மாணிக்கம், தாயின் அதிகபடியான பாசத்தில் பொறுப்பற்று ஊதாரித்தனமாகவே வளர்ந்தார்.

தன் வயலில் வேலைசெய்யும் ஒருவரின் இரண்டாவது மகளான கார்த்திகாவின் மேல் அவரின் பார்வைப்பட, தாயிடம் சொல்லிக் கரம்பிடித்தும் கொண்டார்.

கார்த்திகாவின் வீட்டில் வறுமையின் காரணமாக, அவளைப் பெண்கேட்டு வந்ததும் எதைப் பற்றியும் யோசிக்காமல் சம்மதித்துவிட்டனர்.

மாணிக்கத்திற்கும் கார்த்திகாவிற்கும் இடையேயான பதினைந்து வயது வித்தியாசயமும், அவரின் செல்வ செழிப்பின் காரணமாகப் பெண்வீட்டினருக்குப் பெரிதாகத் தெரியவில்லை.

ஆரம்பத்தில் மனைவியை நன்றாகப் பார்த்துக் கொண்ட மாணிக்கத்திற்கு, நாட்கள் செல்ல செல்ல அவரிடமிருந்த ஈடுபாடு குறைய, அதுவே அவர்களின் பிரிவிற்கும் வழிவகுத்தது.

கார்த்திகாவிடம் காதல் என்ற ஒன்று இல்லாமல், அவரின் அழகிற்காகவும் தனது தேவைக்காகவும் மட்டுமே மணந்து கொண்ட மாணிக்கத்திற்கு, பின்நாட்களில் தனது அந்தஸ்திற்குப் பொருத்தமில்லாத ஒருத்தியை மணந்து கொண்டதாக மனதில் தோன்ற, அதையே காரணம் காட்டி கார்த்திகாவை வார்த்தைகளால் வதைக்கத் துவங்கினார்.

நாட்கள் நகர.. அடி, உதை, குடித்துவிட்டு மனைவியோடு தகராறு செய்வது, வயது வித்தியாசத்தின் காரணமாகக் கார்த்திகாவின் நடத்தையில் சந்தேகம் என மாணிக்கத்திற்குள் இருக்கும் இன்னொரு முகம் வெளிப்பட்டது.

திருமணமான ஏழே மாதத்தில் பதினான்கு வயதான கார்த்திகாவிற்கு.. அவரின் நடவடிக்கை கணவனிடம் ஒருவித பயத்தைக் கொடுத்தது.

ஒருகட்டத்தில் மாணிக்கத்தின் கொடுமைகளைத் தாங்கமுடியாமல் பிறந்த வீட்டை தேடிச்செல்ல.. அவர்களோ மற்ற மூன்று பெண்களின் வாழ்வை முன்னிறுத்தி, தன் மகளுக்குச் சிலபல அறிவுரைகளைக் கூறி, மீண்டும் புகுந்தவீடு எனும் நரகத்தில் தள்ளிவிட்டனர்.

மங்கை பிறக்கும் வரை, என்றாவது ஒருநாள் கணவன் மாறிவிடுவான் என்ற நம்பிக்கையில் அனைத்தையும் பொறுத்துக் கொண்டார் கார்த்திகா.

மாணிக்கத்தின் சந்தேகப்புத்தியால் 'மங்கையைத் தன்மகள் இல்லை!' எனக்கூறி பஞ்சாயத்தைக் கூட்ட, மனதளவில் மிகவும் நொறுங்கி போனார்.

உயிர்ப்பில்லாத உறவை பிடித்துவைக்க விரும்பாது, ஊரார் மத்தியில் 'இனிமேல் மாணிக்கத்துடன் வாழமுடியாது!' எனக் கூறிட, பஞ்சாயத்தில் இருவரையும் பிரித்துவிட்டனர். மங்கையின் எதிர்கால வாழ்வை முன்னிட்டு, மாணிக்கத்திடம் இருந்து ஜீவனாம்சமாக ஐந்து ஏக்கர் நிலத்தையும் பெற்றுத் தந்தனர்.

மாணிக்கம் வேறொரு பெண்ணை மணந்து கொள்ள, கார்த்திகாவோ சுமத்தப்பட்ட பழியின் காரணமாகத் தன்னைத்தானே உள்ளுக்குள் சிதைத்துக் கொண்டார்.

இளம்வயதில் திருமணம், கணவன் என்ற பெயரில் இருந்த மிருகத்தினால் பெண்ணின் மேல் திணிக்கப்பட்ட வன்முறை, அவனது இச்சையின் காரணமாக உடல் மற்றும் மனதில் ஏற்பட்ட காயங்கள், பிறந்த வீட்டினரே கைவிட்ட வலி, எவரிடமும் எதையுமே பகிர்ந்து கொள்ள முடியாத தனிமை என அன்ன ஆகாரமின்றிக் கழிவிரக்கத்தில் உடலைப் பாழ்படுத்திக் கொண்டார் கார்த்திகா.

அதிகப்படியான உழைப்பு மற்றும் மன அழுத்தத்தின் காரணமாக மங்கையின் பதிமூன்று வயதில் அவர் படுக்கையில் விழுந்துவிட, அன்று முதல் அவள்தான் தாய்க்குத் தாயாக மாறி அவரைப் பார்த்து கொள்கிறாள்.

ரத்னத்தின் குடும்பத்திற்கு மாணிக்கத்தின் குணநலன்களைப் பற்றி நன்றாகவே தெரியும் என்பதால், முடிந்த மட்டும் தனிமையில் இருந்த கார்த்திகாவிற்கு உதவிக்கரம் நீட்டி பார்த்துக்கொண்டனர்.

கார்த்திகா நிலத்தைக் கவனிக்கச் சென்றதால், மங்கை பிறந்ததில் இருந்தே பெரும்பாலும் தேனுவின் வீட்டில்தான் இருப்பாள். தேனுவைவிட இரண்டு வயது இளையவள்.

வாசு, தேனு, மங்கை மூவரும் ஒன்றாகவே வளர்ந்தனர். மங்கை, தேனுவிடம் எப்படிப் பழகுவாளோ அதேபோல் தான் வாசுவிடமும் பழகுவாள். அவனும் அப்படித்தான். இருபெண்களிடம் எந்த வேறுபாடும் காட்டமாட்டான்.

சிறுவயதில் இருந்தே ஒன்றாக இருந்ததாலோ என்னவோ இன்னுமே சிறு பிள்ளைகளைப் போலவே அர்த்தமில்லாமல் சண்டையிட்டுக் கொள்வர் இருவரும்.

இன்றும் விளையாட்டு தனமாகவே அவனைச் சீண்டுவதற்காக மங்கைப் பேச, அவளின் வார்த்தையில் வாசு கொதித்துப் போனான். அதை அவனின் மௌனமே சொல்லிவிட, அவளும் என்னவென்று புரியாத ஒருவித வலியை உணர்ந்தாள்.

பிறந்த போதே தந்தையின் நிராகரிப்பு, தனிஒருவளாகத் தாய் படும்பாடு என நேரில் கண்டு அடிபட்ட மனதுடனே வளர்ந்தவள், அதை வெளியே யாரும் அறிந்துவிடா வண்ணம் தன் விளையாட்டு தனத்தால் திரையிட்டு மறைத்து கொள்வாள்.

தன் எண்ணங்களிலேயே மூழ்கியிருந்தவளை தாயின் அழைப்பு நிகழ்வுக்குக் கொண்டு வந்தது.

"என்னாம்மா.?"

குரலில் தெளிவின்றி, "வெளிக்கு போவணும் த்தா"

தாய்க்கு தேவையான உதவிசெய்து படுக்க வைத்தாள் மங்கை.

கண்கள் கலங்க பார்த்தவர், "யென்னால ஒனக்கு நெம்ப்ப கஷ்டமில்ல ஆத்தா.?"

வருத்த முறுவலை உதிர்த்தவள், "இல்லம்மா, நீனு இப்டியாவது எங்கூட இருக்கியேன்னு சந்தோஷந்தே!"

கண்களில் நீர் நிறைய, அதற்கு மாறாகப் புன்னகையைச் சிந்தி, "இல்லாக்காட்டி நானு அநாத ஆகிருவேன் பாரு!" என உதிர்த்தன மங்கையின் இதழ்கள்.

படுக்கையில் இருந்த கார்த்திகா தன்கையைத் தூக்க முயல, அது அவரின் எண்ணத்தை நிறைவேற்ற முடியாமல் அசைவற்றுக் கிடந்தது.

அன்னையின் மனதை அறிந்தவள், அவரின் கையை எடுத்துத் தன்கன்னத்தில் வைத்து கொண்டாள். மகளின் கண்ணீரை உணர்ந்து அவரது மனம் துடிக்க, ஆனால் கைக்கால்களோ எதையும் செய்ய இயலாது வெற்று ஜடமாய் இருந்தது.

 

Latest profile posts

இன்று ஒன்பது மணிக்கு மேல் எபி வரும்
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்😍

வெய்யோனின் தண்மதி அவள் Final 😎👇

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்😍

வெய்யோனின் தண்மதி அவள் Pre-final😎👇

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்😍

வெய்யோனின் தண்மதி அவள் 62😎👇

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்😍

வெய்யோனின் தண்மதி அவள் 61😎👇

New Episodes Thread

Top Bottom