தேனும் தமிழும் - 3

வாசு புன்னகைத்து, "வேலுண்ணே எப்டி இருக்கீக, என்னா இந்தப் பக்கம்?"

"நா நல்லா இருக்கேன், நீ?"

"நல்லா இருக்கேண்ணே"

"சேரிடே, ஆமா இதுதான ஒனக்கு கடைசி வருஷம்.?"

"ஆமண்ணே"

"அடுத்து என்னா?"

"மதுரைக்குதே, படிப்புக்கு ஏத்த வேலய தேடணும்!"

"ஏன்டா, அய்யனோட நெலத்த பாக்கலாம்ல?"

"அதே அப்பா பாக்காருல, பெறவு யோசிக்கலாம்"

"சரித்தே, ஒ இஷ்டம் போலச் செய்யி"

"சேரிண்ணே, நேரமாச்சு" என விடைபெற்றவன், திரும்பி வேணியைப் பார்த்துவிட்டு, ‘யாரிது, இவருக்கூட வந்துருக்கு. ஒருவேள சொந்தமோ? வேலு அண்ணனு எதுவுஞ் சொல்லாம வுட்டுட்டாரே, கேப்பமா? ம்ம்ம்.. இல்ல வேணா ஏதானு நெனச்சுக்கப் போறாரு!’ எனச் சிந்தனையுடனே நண்பர்களுடன் வகுப்பறை நோக்கி நடந்தான்.

வேணியிடம் சில பேப்பர்களை நீட்டிய வேலு.. அருகே நின்றிருந்த கருவிழியாளிடம், "என்னா தேனு, பாத்து ரொம்ப நாளாச்சு?"

அவள் பொய்யாய் முறைத்து, "அப்டியே பாத்துட்டாலும், ஒங்களுக்குக் கண்ணு தெருஞ்சு போடும் பாருங்க? மொத அண்ணே தம்பி, பொறவுதான அக்கா தங்கச்சி.?"

"தங்கச்சிக்கு எம்மேல கோவமோ?"

"அதெல்லா ஒண்ணுல்ல. ஏண்ணே இவ்ளோ லேட்டு, கொஞ்ச முன்னமே வேணிய காலேஜ்ல சேத்திருக்கலாம்ல?"

"என்னா தேனு, நடந்தது ஒனக்கு தெரியாதா?"

''சேரிண்ணே விடுங்க சங்கடப்படாதிங்க, போகப் போகச் சரியாயிடும்!"

"தங்கச்சி சொன்னா சரித்தே.!" எனச் சிரித்தவன், வேணியிடம் திரும்பி எதிர்ப்புறம் இருந்த கட்டிடத்தைக் காட்டி, "ரெண்டாவது மாடில ஓ கிளாசு, பாத்து போ. சூதானமா இருந்துக்க, இந்நேரம் ஓரளவுக்குப் பாடத்த நடத்த ஆரம்பிச்சிருப்பாக. வாத்தியாரு கிட்டக்கச் சங்கடப்படாம கேட்டுக்க, நல்லா படிக்கோணும்"

கடந்த ஐந்து மாத காலத்தில் இன்றுதான் அவளிடம் அதிகமாகப் பேசியிருக்கிறான் வேலு.

அவனைப் பார்க்கத் தயங்கி குனிந்தபடி, "சரி" எனத் தலையசைக்க, "சேரிம்மா நா வாரேன்" என்று தேனுவிடம் விடைபெற்றுக் கிளம்பினான்.

வேலு சென்ற வழியையே கண்களில் வலியோடு பார்த்து நின்றாள் வேணி. தோளின் மேல் கைவிழ, திரும்பி தேனுவை பார்த்தவள் புன்னகைக்க, "ஏ என்னவோ போல இருக்க வேணி?"

"ஒண்ணுல்ல மதினி"

அவளைக் கூர்ந்து ஒருபார்வை பார்க்க, தேனுவை எதிர்கொள்ள முடியாமல் தலை கவிழ்ந்தாள்.

"சேரி வா உன்னோட வகுப்புக்கு கூட்டிட்டு போறேன். எனக்குத் தெருஞ்சவ ஒருத்தி ஓங்கிளாசுதேன், நல்லப்புள்ளடி, பழகிக்க" என்றவள் முன்னே நடக்க, அதுவரை மனதில் இருந்த எண்ணங்களையும் குழப்பங்களையும் கைவிட்டு, தேனுவை பின்தொடர்ந்தாள் வேணி.

வேலு உரக்கடைக்குள் நுழைய.. கர்ணா, "என்னப்பா இம்புட்டு நேரம்?"

"வேணி புள்ளய விட்டுட்டு வாரே!" எனப் பெருமூச்சுடன் பதில்வந்தது அவனிடமிருந்து.

கர்ணாவிற்கு அவனின் நிலைமை புரிந்தது. அவனும் ஒருத்தியிடம் மனதை தெரிவித்துவிட்டு, பதிலுக்காகக் காத்திருப்பவன் தானே.

கர்ணாவின் எதிர்காலத்திற்கு, ஜெயந்தியின் சம்மதம் அல்லது மறுப்பின் மூலம் விடைக் கிடைத்துவிடும். ஆனால் வேலுவின் நிலையோ, அவனும் மனதை தெரிவிக்கவில்லை. அவளையும் கேட்கவில்லை.

இருவருக்கும் இடையே மௌன போராட்டம் நடக்க, சூழ்நிலையோ இவர்களின் வாழ்வை முடிச்சிட்டுவிட்டது. வருங்காலம் என்ன வைத்திருக்கிறது என்பதைக் காத்திருந்துதான் அறிய வேண்டும்.

இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போதே குமரனும் வந்துவிட, மூவருமாக விவசாயிகளின் கூட்டத்திற்குச் சென்றனர், வேலுவின் ஜீப்பில்.

கர்ணா, "என்னா பங்காளி மொகம் கலையில்லாம இருக்கு?"

குமரன், "எப்பயும் இருக்க மூஞ்சிதான, இதுல புதுசா என்னத்த கலை வந்துர போவுது?"

வேலு, "ஏ மச்சான் இப்டி சலிச்சுக்குறீக?"

அவனோ வருத்த முறுவலொன்றை உதிர்த்து, "ரெண்டு நாள்ல பொண்ணு பாக்க போறோமாம், ரெண்டு பக்கமும் ஒத்து போச்சுன்னா ஒடனே தட்டுமாத்தி முடிவு பண்றதாம்!"

வேலு, "நல்லசேதி தான மச்சான், அத ஏ இப்டி சொல்றீக?"

குமரன் சின்னதாய் சிரித்து, "பொண்ணு யாருன்னு தெரியுமா?"

"யாரு?"

"நம்ம கர்ணாவோட சின்ன மாமனார் பொண்ணு ராதா!"

வேலு புரியாமல் பார்க்க.. கர்ணா குரலில் கலவரத்துடன், "பங்காளி வேண்டான்னு சொல்லலாம்ல?"

"சொல்லாமயா இருப்பேன், அம்மா கேக்க மாட்டிக்கிது. என்னாலயும் அது மனச சங்கடபடுத்த முடியல"

"அப்ப நெசத்த சொல்லீடுங்க"

"வேணாம்பா, நமக்கும் முழுசா எந்த விவரமும் தெரியாது. நாளபின்ன ஏதாது ஒண்ணுன்னா, அந்தப் புள்ளயோட வாழ்க்க போயிடும். பாக்கலாம், என்ன நடக்கணுமோ அதுதான நடக்கும்?" எனப் பேச்சை அத்தோடு முடித்தான் குமரன்.

கர்ணா தன் உறவினனை நினைத்து கவலை கொள்ள, வேலுவோ நல்லதே நடக்க வேண்டுமென்று மனதில் பிரார்தித்துக் கொண்டான்.

மூவரும் கூட்டத்தில் கலந்து கொண்டு, மாலை மூன்றுமணி அளவில் திரும்பினர். தன் வண்டியை எடுத்துக் கொண்டு குமரன் கிளம்பிவிட, மற்ற இருவரும் காசியின் ஜவுளிகடைக்குச் சென்றனர்.

கடையில் பெரிதும் கூட்டம் இல்லாமல் இருந்தது. காசி வெளியே சென்றிருக்க, ஜெயந்திதான் கல்லாவில் இருந்தாள்.

வேலுவை பார்த்து முகம் மலர்ந்தவள், கர்ணாவை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு, "வாங்கண்ணே"

வேலு, "காசி எங்கன மா?"

"துணி வாங்க மதுர வரைக்கும் போயிக்குண்ணே"

"எங்கிட்ட ஒருவார்த்த சொல்லல? ஏம்பா கர்ணா.. எப்பவும் நீ கூடப் போவீல இன்னிக்கு என்ன?"

"இங்க கூட்டம் முடிச்சதும் போலாம்ன்னு சொல்லீருந்தே, நேரம் ஆகவும் காசியே போய்ட்டான் போல!"

"சேரி விடு, வந்த வேலய பாப்போம்"

ஜெயந்தி, "என்னண்ணே?"

"ஏம்பா கர்ணா எத்தனி வேணும்?"

"ஏழு ப்பா"

"ஜெயந்திமா ஏழு செட்டு வேட்டியும் துண்டும் வேணும், எடுத்துக்காட்டு. நீ பாத்துட்டு இரு கர்ணா, நா கடைகுள்ளார போய்ட்டு வாரேன்" என வேலு நகர, ஜெயந்தி ரக வாரியாக விலையைக் குறிப்பிட்டு துணியைக் காட்டினாள்.

விற்பனையாளருக்கும், வாங்குபவருக்குமான பேச்சு வார்த்தை மட்டுமே அவர்களுக்கிடையே நடக்க, கர்ணா தனக்குத் தேவையானவற்றைப் பணம் செலுத்தி வாங்கிக்கொண்டான்.

வேலு கடையைப் பார்வையிட்டுக் கொண்டே வர, கலகலவென்று கேட்ட சிரிப்புச் சத்தத்தில் அனிச்சையாய் நின்றான். அவன் பார்வை சென்ற திசையில் பச்சைநிற தாவணியில் பெண்பாவை ஒருவள்.. அளவில்லா புன்னகையைச் சிந்தி, உடன் பணிபுரிவோரிடம் பேசி கொண்டிருந்தாள்.

அவளின் சிரிப்பு இவனையும் தொற்றிக்கொள்ள, எதிரே சென்றான் வேலு. அவன் பார்வையில் பட்டதும் வேலையாட்கள் அனைவரும், சட்டென்று பேச்சை நிறுத்தி எழுந்து நின்றனர்.

வேலு, "என்ன மல்லி, சிரிப்பெல்லாம் பலமா இருக்கு?"

அவனது கேள்வியில் திரும்பியவள், "வாங்க மச்சான், என்ன கடை பக்கமெல்லாம் வந்துருக்கீக?"

"ஏங்கடை மல்லி, நா வரக்கூடாதா என்ன?"

"ஹேன், பொய் புழுவி மச்சான். கட உங்க தம்பியோடதுல, உங்கதுன்றீக?"

அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தவன், "ஏ தம்பியோடதுன்னா, என்னதும் தான மல்லி?"

"ஆத்தி உடம்பு நோவ அலஞ்சு திருஞ்சு ஓட்டமா ஓடி எங்க மொதலாளி கடைய பாத்துகிட்டா, நீங்க நோவாம நுங்கு திங்க பாக்குறீக?"

"அதுசரி, ஆனா மொதலு போட்டவே நானுல்ல..?"

"வேணுன்னா கொடுத்த காச வட்டியோட திருப்பி வாங்கிக்கிடுங்க, அதவுட்டு போட்டு கடையவே எழுதி கேப்பீக போல?"

வேலு சட்டென்று சிரித்து, "ம்ம்.. நானு காசி கடைல வேலப்பாக்க ஆள போட்டுருக்கதா நெனச்சேன், ஆனா அடியாள இல்ல வச்சிருக்கான்?"

அவள் உதட்டை சுளித்து நாக்கை துருத்தி அழகுக்காட்டி, "வாங்குற சம்பளத்துக்கு விசுவாசமா வேல பாக்க வேணாம்?"

புன்னகை மாறாமலே, "ம்ம்.. நல்லா பாரு ஆத்தா, நா ஒண்ணுஞ் சொல்லல. கெளம்புறேன்!" என வேலு கேலியாகக் கண்ணடித்துக் கூற.. அவள் பொய்யாய் முறைத்து, "இருங்க இருங்க எங்க மொதலாளிட்ட சொல்லுறேன்!"

"சொல்லு சொல்லு, நானும் அவங்கிட்ட நீ பண்ற திருட்டுத்தனத்த சொல்லுறேன்!"

அவள் திடுக்கிட்டு, "நா என்னத்த திருடுனேன்?"

அவன் பதிலேதும் சொல்லாமல் மர்மப் புன்னகை ஒன்றை உதிர்த்துவிட்டு செல்ல, மல்லியோ கண்களில் கலவரத்துடன் நகத்தைக் கடித்தபடி.. வேலுவைப் பார்வையால் தொடர்ந்தாள்.

கர்ணா தன்வேலையை முடித்திருக்க.. அருகே வந்த வேலு, "கெளம்புவமா?"

"ம்ம் போலாம் மச்சான்"

"காசிட்ட சொல்லீடு ஜெயந்தி, நேரம் இருந்தா ராத்திரி வூட்டுக்கு வர சொல்லு!" என்றிட.. "சேரிண்ணே" என்று தலையசைத்தாள்.

கர்ணாவிடம் எதற்கிந்த உடைகள் என்று கேட்க நினைத்து.. பின் 'எப்படிக் கேட்பது, கேட்பதற்கு என்ன உரிமை உள்ளது?' என்று அவள் தயக்கத்துடன் பார்க்க.. வேலு,"வேற எதுவு வாங்கணுமா கர்ணா?"

"இல்லப்பா, அண்ணேங்கள பாத்து தாத்தனுக்குச் சாமி கும்புடுறத சொல்லோணும் அம்புட்டுதே"

"ஏ அவுகளுக்கே தெரியாதா, வூட்டுக்கு போயிதேன் அழைக்கணுமா?"

அவன் சிரித்து, "அண்ணனுங்கக்கிட்ட இல்ல, மதினிங்ககிட்ட. சொன்னாத்தா வருவாக"

"என்னவோ போ, கல்யாணம் ஆனா நம்ம பாட்டங்கூட அந்நியம் ஆயிருவாகளா?"

"தாயும் பிள்ளையும் ஒண்ணுன்னாலும், வாயும் வயிறும் வேறவேற தான?"

"ம்ம், நீயாது அப்பனாத்தாள தனியா வுட்டுடாம கூடஇருந்து பாத்துக்க"

கர்ணா சிரித்துச் 'சரி' என்பதுபோல் தலையசைக்க, அவனையே பார்த்திருந்தாள் ஜெயந்தி.

பகல் முழுவதும் கதிர்களால் சுட்டெரித்த கதிரவன், ஒளிமங்கி மேற்கு புறமாக மலைகளின் நடுவே தன்னை மறைக்க முயன்று கொண்டிருந்தான்.

நண்பர்களுடனான அரட்டையை முடித்துவிட்டு, பைக்கில் கிளம்பிய வாசுவின் பார்வையில் பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த வேணிபட.. இதழ்கள் தானாக மலர, அருகே சென்று வண்டியை நிறுத்தினான்.

ஏதோ யோசனையில் இருந்தவள், அரவம் உணர்ந்து நிமிர்ந்து பார்க்க.. அவன் புருவம் உயர்த்திப் புன்னகையுடன், "ஒ பேரு நீலவேணி தான?"

அவள் அமைதியாக இருக்க, "காலேல வேலுண்ணே கூடதான வந்த?"

'ஆம்' எனத் தலையசைக்க, "நீ அவருக்குச் சொந்தமா, என்ன வழியில?"

"ம்ம்.. அப்பன பெத்த ஆத்தா, அப்பத்தா" என்று பின்புறமிருந்து கீச்சுக்குரல் கேட்டது.

வேணி திரும்பிப் பார்த்துப் புன்னகைக்க.. ஐந்தடி உயரத்தில் மெல்லிய தேகத்துடன் மாநிறத்தில் கண்களில் குறும்பு மின்ன, சிவந்திருந்த சின்ன அதரங்கள் சுளித்திருக்க முன்னே வந்தாள் அவள்.

வாசு முறைத்து, "ஏ சில்வண்டு, ஒனக்கு இங்கன என்ன வேல?"

"ஹஹ்கும், நாத்து நட்டு கலை புடுங்க வந்தேன். கேக்கத பாரு, பஸ்டாண்டுல என்னத்துக்கு நிப்பாக? பஸ்ஸுக்காகத்தான்!"

"அதுசரி, இந்நேரம் வரிக்கும் வூட்டுக்கு போவாம என்ன செஞ்ச? காலேஜ் முடிஞ்சு ஒருமணி நேரம் ஆவுது"

"நா என்னவோ செஞ்சேன், தொர என்ன இப்ப வரீரு?"

"அது ஒனக்கு தேவை இல்லாதது!"

"சரித்தேன், அப்ப எதுக்கு எங்கிட்டக்க மட்டும் கேக்கீக?"

"சின்னப் பொண்ணாச்சே தனியா ஊருக்குள்ள போகுதேன்னு ஒருஅக்கறைல கேட்டா, என்னா பேச்சு பேசுற? தப்புத்தான்டி குள்ளச்சி, இனிமே கேக்க மாட்டேன்!"

"ஆமா ரொம்பத்தே அக்கற!" என அவன் அறியாமல் தனக்குள்ளே முணுமுணுத்தவள்.. வெளியே, "ம்ம்.. ம்ம்.. கேக்காதீக கேக்காதீக!"

"ஆலாக்கு சைசுல இருந்துகிட்டு வாயப் பாரு?"

சின்ன நாசி விடைக்கச் சுழலும் கருவிழிகளை உருட்டியவள், "யாரு ஆளாக்கு சைசுல இருக்கது? நானா நானா.. நீங்கதே பனைமரத்துல பாதி உசரத்துல இருக்கீக. ஒட்டடக்குச்சி, ஒட்டடகுச்சி இவுக வரமுற இல்லாம வளந்துபுட்டு, என்னய குள்ளச்சின்னு கேலி பேசுறது?"

வாசுவும் வண்டியிலிருந்து இறங்கி, "ஏய் யாருடி ஒட்டடக்குச்சி? இன்னொரு தடவ இப்டிச்சொன்ன, பின்னுக்க நீட்டிட்டு தொங்குற சவுரிமுடியப் புடுச்சு இழுத்து வெட்டி வுட்டுடுவே பாத்துக்க!"

அவள் கண்கள் சிவக்க தன் முழங்கால் வரை நீண்டிருக்கும் பின்னலை அவனது முகத்தருகே ஆட்டி, "ஏ ஒட்டடகுச்சி, என்ன சொன்ன? பாத்து பாத்து பக்குவமா வளத்து வச்சா, அத சவுரிமுடின்னு சொல்லுவியா? உனக்கெல்லாம் மொட்டைத்தல பொண்ணுதான் கிடைக்கும்டா, இது ஏ சாபம். பளிக்குதா இல்லியான்னு மட்டும் பாரு?"

இருகை விரல்களையும் கோர்த்து அவன் முன்னே சொடுக்கிட.. அவள் கையைப் பிடித்தவன், "யாரடி கைநீட்டி பேசுற, ஒனக்கு அவ்வளவு கொழுப்பா?" என அவளின் இடக்கையை முதுகின்புறம் கொண்டு சென்று, வலிக்காதவாறு முறுக்கி தலையில் இரண்டு கொட்டுகளை வைத்தான் வாசு.

அவளோ தரையில் பாதம் படாமல், நீரில் அழுக்கிவிட்ட பந்துபோல எகிரி குதித்து, "விடுடா விடுடா பொறுக்கி"

"டா போட்டா பேசுற, நா பொறுக்கியா?"

மீண்டும் நான்கு கொட்டுகளைத் தலையில் வைக்க, "இப்ப நீ விடுறியா இல்லியா..?"

"முடியாதுடி" மீண்டும் இரண்டு கொட்டுகள் வழங்கப்பட, "ஐய்யோ காப்பாத்துங்க காப்பாத்துங்க, இந்தப் பொறுக்கி பய ஏ தாவணிய புடுச்சு இழுக்குறான்!"

அந்த வார்த்தையில் அதிர்ந்து, சட்டென்று அவளின் கையை விடுத்து விலகி நின்றான் வாசு.

அவனின் கசங்கிய முகத்தைப் பார்த்து அவள் புருவம் உயர்த்திக் கண்சிமிட்டி சிரிக்க.. அவளைக் கண்கள் இடுங்க ஒருபார்வை பார்த்துவிட்டு, வேணியை இயல்பாக எதிர்கொள்ள இயலாது அங்கிருந்து நகர்ந்தான் வாசு.

வேணி, "ஏன்டி இப்டி செஞ்ச, பாவம்!"

"அவுக செஞ்சது மட்டும் சரியா?"

"விளையாட்டுக்குத்தான பேசுனாக, அதுக்காக இப்டியா? முகமே தொங்கிப்போச்சுப் பாரு.?"

அவள் கண்கள் சிரிக்க, "வுடு பாத்துக்கலாம்!"

அவளையே பார்த்திருந்த வேணி, "ஆமா.. அது என்ன சில்வண்டு, வீட்ல அப்டிதான் கூப்டுவாகளா?"

அவள் அமைதியாய் புன்னகைத்து, வாசு சென்ற வழியில் கண்களைத் திருப்பினாள்.

 

Apsareezbeena loganathan

Well-known member
Member
Oh my god!!! In this epi so many confusion ,name ,நிறைய character pots pigs thaan பதியும் போல!!!! வாசு, மல்லி , தேனு,குமரன்,ராதா, சில்வண்டு பேரு என்ன?? இதுல கர்ணா வேலு ஜெயந்தி !!! கொஞ்சம் கொஞ்சமாக புரியும் போல
 
Oh my god!!! In this epi so many confusion ,name ,நிறைய character pots pigs thaan பதியும் போல!!!! வாசு, மல்லி , தேனு,குமரன்,ராதா, சில்வண்டு பேரு என்ன?? இதுல கர்ணா வேலு ஜெயந்தி !!! கொஞ்சம் கொஞ்சமாக புரியும் போல
😂😂 ஆமா நிறைய கேரக்டர்ஸ் கதையில. அதான் முன்னாடியே அறிமுகம் கொடுத்தேன். சில்வண்டு பேரு அடுத்த எபில தெரியும். இன்னும் சில கேரக்டர்ஸ் வருவாங்க. குழப்பிக்காதீங்க மா. எல்லாரையும் சீக்கிரமே உங்க மைண்ட்ல பதிய வச்சிடுவேன். Thank you so much..❤️❤️
 

Latest profile posts

இன்று ஒன்பது மணிக்கு மேல் எபி வரும்
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்😍

வெய்யோனின் தண்மதி அவள் Final 😎👇

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்😍

வெய்யோனின் தண்மதி அவள் Pre-final😎👇

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்😍

வெய்யோனின் தண்மதி அவள் 62😎👇

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்😍

வெய்யோனின் தண்மதி அவள் 61😎👇

New Episodes Thread

Top Bottom